கட்டுரைகள்

“நாட்டில் அமைதி நிலவவேண்டும்” …. நடேசன்.

 யாழ்ப்பாணம் சென்றால் நான் ஒரு ஓட்டோ சாரதியை எனது தேவைகளுக்கு அழைப்பேன். இம்முறை அந்த ஓட்டோ சாரதியைத் தேடியபோது, அவர் தனது இரு பிள்ளைகளையும் மனைவியையும் விட்டு மரணமடைந்து விட்டார் எனச் சொன்னார்கள்.

“ அடப்பாவி…. இளவயதுக்காரனே! என்ன வயது ? “ எனக்கேட்டேன்.

“ நாற்பத்து மூன்று “

“ என்ன நோய் ? “

“ இதய நோய். ஓட்டோவிலேயே இறந்து விட்டார். “

ஓடி ஓடி உழைத்தவன் என மனம் நொந்தேன்.

ஓட்டோ சாரதி சித்தனுடன் ( புனைபெயர்) வங்கிக்குப் போகும்போது “ உங்கள் வெயிட்டிங்கிற்கு பணம் தருவேன். நில்லுங்கள் “ என்று சொன்னாலும் கேட்காது, “ ஐயா பக்கத்தில் ஒரு சவாரி இருக்கிறது. போய் வந்துவிடுகிறேன் என்பார். “

அதே போல் மீன் கடை, காய்கறி சந்தைக்குப் போகும்போதும் அவர் இடையில் ஓடிவிடுவார். விடுமுறையில் சென்றதால் நான் அவற்றைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அத்துடன் பிள்ளை குட்டிக்காரன், உழைக்கட்டும் என்ற எனது மனநிலை.

போர் முடித்தபின் இந்த 15 வருடங்களில் 25 தடவைகளாவது யாழ்ப்பாணம் சென்றிருப்பேன். ஆளுநர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், வைத்தியர்கள், சாமானியர்கள் எனப் பலரைச் சந்தித்தேன். யாழ்ப்பாணத்தில் நண்பர் குகநாதனின் டான் தொலைக்காட்சியும் ஈழநாடுமே போரின் பின்பாக ஏற்பட்ட நல்ல மாற்றங்கள். மற்றும்படி எதுவும் மாறவில்லை என்று நினைப்பேன் . எனது ஆற்றாமையைப் பலரிடம் சொல்லியிருக்கிறேன்.

போர் கடந்த பூமியில் மனிதர்கள் தப்பி ஓடுவது, பணம் திருடுவது ஏமாற்றுவது, கொலை, தற்கொலை என்பன சகஜம். அது வடபகுதியிலும் நடந்தது.

சிறிய விடயங்களையும் நமது ஊடகங்கள், சமூக வலைத்தலங்களில் பெரிதாக்கி வீதியில் சிந்திய மலமாக, கிழறினார்கள். காகங்களாக.

இதற்குக் காரணங்கள் பல. போரின் பின்னர் , போர் நடந்த மற்றைய நாடுகள்போன்று இலங்கையில் ஏன் சிறந்த அரசியல் , சமூக, மதத் தலைமைகள் உருவாகவில்லை ?

இந்த நிலையில் கைப்பிடி அரிசி மணலில் விழுந்ததுபோல் மக்கள் நிராதரவாக விடப்பட்டார்கள். அவர்கள் தனித்தனியாக ஏதாவது தங்களது விடயங்களைச் செய்யத் தள்ளப்பட்டார்கள். இக்காலத்தில் அரசும் தூரநோக்கான எந்த திட்டமும் வைக்கவில்லை. அதைப் பற்றிய சிந்தனை இல்லை. வெளிநாட்டு அரசுகளிடமிருந்து கிடைத்த பணத்தில், பாதைகள் கட்டிடங்கள் செய்வதன் மூலம் அவர்களும் பணத்தைச் சுருட்டினார்கள். கட்டிடங்கள், பாதைகள் வந்தாலும் பொருளாதார மாற்றம் ஏற்படவில்லை. நாட்டில் ஆட்சி மாற்றம், கொரோனா, ஈஸ்டர் குண்டுவெடிப்பு என பல நிகழ்ந்தது.

கொரோனாக் காலத்திற்கு முன்னர் போனபோது, யாழ். மக்களிடம் எங்காவது ஓடவேண்டும் என்ற நிலையற்ற சிந்தனைதான் இருந்தது. நான் முன்னர் படித்த இந்துக் கல்லூரி அருகே “ இங்கு போதைவஸ்து அதிகம் விற்கப்படுகிறது “ என எழுதப்பட்ட எச்சரிக்கை போஸ்டர் பொலிஸாரால் ஒட்டப்பட்டிருந்தது. கடைகளில், அரச நிறுவனங்களில் சிரித்தபடி பேசுபவர்களை அரிதாகத்தான் காணமுடிந்தது.

கிளிநொச்சி , முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் மக்கள் போரால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் மீண்டெழுந்துவிட்டாரகள் . உதாரணமாகப் போரின் பின்பாக 12 விதவைப் பெண்களுக்கு மூன்று வருடங்கள் சிறிய உதவிகளைச் செய்தபடியிருந்தேன். மூன்றாவது வருடமுடிவில், அவர்கள் தங்களைத் தாங்களே பார்க்கும் நிலையடைந்து, உதவிகள் வேண்டாம் என்றார்கள்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் மக்களிடம் வெளிநாட்டுப் பணம் புழக்கத்திலிருந்தபோதிலும், அவர்களிடம் விரக்தியைக் காணக்கூடியதாக இருந்தது. அந்த விரக்தியை ஊக்குவிப்பதுபோன்று வெளிநாட்டவர்களும் பெருந்தொகைப் பணத்தை கோயில்களில் கொட்டுதலும் நடந்தது. மக்களை அதிகமாக பக்தி மயமாக மாற்றினார்கள் – மக்களும் மாறினார்கள் .

அக்கால சோவித் ரஷ்யாவிலிருந்து கனடா , அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா முதலான நாடுளுக்குப் போனவர்கள் மிகவும் தீவிரமாக ரஷ்யாவை வெறுப்பார்கள். அவர்களே தற்காலத்தில் நடக்கும் உக்ரேனிய – ரஷ்யப் போருக்கும் காரணம். அவர்களது பழிவாங்கும் தன்மை, வெறுப்பு என்பன தலைமுறை கடந்தவை. அவை அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட்டது.

அதுபோன்றுதான் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றவர்களும் அவர்களது அடுத்த சந்ததியினரும் எப்பொழுதும் வெறுப்பைக் காவியபடியே காலத்தைக் கடத்தினார்கள். போரின் தோல்வி நாட்டு

மக்களை விட இந்த புலம்பெயர்ந்த மக்களிடம் ஆழமான மனப்பாதிப்பை உருவாக்கியுள்ளது.

நான் இம்முறை இலங்கை சென்ற போது அங்கு சில மாற்றங்கள் தெரிந்தன.

ஒரு எலக்ரிக் ஓட்டோ இளைஞன் வந்தான். அமைதியானவன். முகத்தில் நல்ல பொலிவு. அத்துடன் சீருடை அணிந்திருந்தான். அவனது பெயர் யாழன்பன். அந்தப்பெயர் என்னை ஈர்த்தது.

விரலால் நொங்கெடுத்த சிறுவயதுப் பழக்கத்தில் அவனைத் தோண்டினேன்

“ அது என்ன யாழன்பன்? “

“ இயக்கம் வைத்தது. “

“அப்பா அம்மா வைக்கவில்லையா? “

“ அவர்கள் நினைத்திருந்தார்கள், ஆனால், இயக்கம் வைத்த பெயரே நிரந்தரமானது. “

“ எந்த ஊர் ? “

“ வட்டக்கச்சி “

“ எப்படி யாழ்பாணம் ? “

“ போர் முடிந்தவுடன், சென். ஜோன்ஸ் கல்லூரி பிரின்சிபல், எங்களைப்போன்று வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட 200 பேருக்கு யாழ்ப்பாணத்தில் கல்லூரி விடுதியில் தங்க வைத்துப் படிப்பித்தார். அப்படி படித்தவர்களில் நானும் ஒருவனாக 12 ஆம் தரம் வரை படித்தேன். ஆனால், பாஸ் பண்ணவில்லை. எங்களோடு படித்தவர்கள் பலர் பின்னர் பல்கலைக்கழகத்தில் படித்தார்கள். “

“ எப்படி சென் ஜோன்ஸ் படிப்பு? “

“ நல்லது, அங்கு நாங்கள் படித்தபோது படிப்பைவிட ஒழுக்கம்தான் முக்கியம் என்பார்கள். ஒவ்வொரு நாளும் எங்களால் முடிந்தவரை சரியோ பிழையோ, அரைமணி நேரம் ஆங்கிலம் பேசவேண்டும். “

“ அதன்பிறகு அந்த பிரின்சிபலுக்கு என்ன நடந்தது? ஏன் அந்தத் திட்டம் தொடரவில்லை. “

“ அவரைப் பதவியிலிருந்து மாற்றிவிட்டார்கள். “

இந்தச் சந்தர்ப்பத்தில் எனது கதை ஒன்றும் நினைவுக்கு வருகிறது. அதை இப்போது சொல்வதும் பொருத்தமாகும்.

போர் முடிந்த காலத்தில் மெல்பனில் எனது கிளினிக்கிற்கு சிங்களத் தம்பதிகள் இருவர் பேச வந்தார்கள். என்னவென்று விசாரித்தபோது, “ தங்களது மகன் மொனாஷ் பல்கலைக் கழகத்தில் கணிதம் படித்தவன். யாழ்ப்பாணம் சென் . ஜோன்ஸ் கல்லூரியில் படிப்பிக்க யாழ்ப்பாணம் செல்கிறான். எங்களுக்குப் பயமாக இருக்கிறது . “ என்றார்கள்

அப்பொழுது நான், “ பயப்படவேண்டாம் என்று சொல்லி விட்டு, யாழ்ப்பாணத்திலிருந்த எனது நண்பர் சூரிய குமாரனிடமும் மற்றும் ஆளுனரிடமும் அவனைப் பற்றிப் பேசினேன் . அதன்பின்னர் நான் படித்த இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஒருவரிடம், “ நீங்களும் இப்படி ஒரு வேலை செய்யுங்கள். “ என்றேன் . அவர்கள் தொடர்ந்தும் அக்காலத்தில் கானமழை என்ற பெயரில் திரைப் பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்கள். நானும் அதன் பிறகு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க நிகழ்ச்சிகளுக்கு செல்வது குறைந்தது.

நான் யாழ். பல்கலைக் கழகத்தில் சந்தித்த சென் ஜோன்ஸ் பழைய மாணவர்கள், அங்கு வந்துதான் தூசண வார்த்தைகள் பேசினார்கள். அதற்கப்பால் அவர்கள் தமிழ் மீடியத்தில் படித்து வந்தாலும், ஆங்கிலத்தில் எங்களிடம் உரையாட முயல்வாரகள். அது மட்டும் என் போன்ற இந்துக்கல்லுரி மாணவரகளிடம் சரி வராது.

யாழின்பன் அமைதியாக எங்களைத் தேவாலயம், வங்கி என எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். சென் ஜோன்ஸ் பாடசாலையின் பழைய மாணவனாக மட்டுமல்ல கனவானாகவும் தெரிந்தார்.

இம்முறை யாழ்ப்பாணம் வங்கிக்குச் சென்றபோது எனது கடவு எண் மறந்துவிட்டது . வங்கியில் ஒரு இளைஞர், பொறுமையாகச் சிரித்தபடியே புதிய எண்ணை உருவாக்கித் தந்தார்.

யாழ்ப்பாணத்தில் நான் நின்றபோது, தஞ்சாவூர் பல்கலைக் கழகத்திலிருந்து எனக்கும் இலக்கிய விருது என அறிவிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் விமானப் பயணச்சீட்டு வாங்க ஒரு பயண முகவரிடம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் சீட்டை பதிவு செய்தபின்னர், கடனட்டையை எடுக்கும் வசதியில்லை, என்று சொல்லி, பணத்தை வங்கியில் எடுத்து வரும்படி அனுப்பினார்கள்.

இப்படி யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை எங்கும் மக்களிடம் புத்துணர்வும் மன அமைதியும் தெரிந்தது. போரின் பாதிப்பு வங்கக்கடலை கடந்து விட்டதோ என என்னால் நினைக்க முடிந்தது.

மக்களின் மனங்களில் அவர்களுக்கு எதிர்காலத்தில் எதுவுமில்லை என்ற வெறுமையை உருவாக்குவதன் மூலம் அவர்களைத் தவிப்பு நிலைக்குத் தள்ள முடியும். உதாரணமாகக் கோழிகளின் உணவில் உப்பைக்

குறைத்தால், அவை ஒன்றை ஒன்று கொத்தும். அதேபோல் பணம், கடவுச் சீட்டை புதிய இடத்தில் தொலைத்தால் எனக்கும் அந்த நிலை வரும்

பரபரப்படைந்தவர்கள் தர்க்கமாகச் சிந்திப்பதில்லை. அவர்கள் நடத்தைகளை நாம் எதிர்வுகூற முடியாது. இலங்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1977 இல் இப்படியான ஒரு நிலையை உருவாக்கி இளைஞர்களைத் தகிப்பு நிலைக்குத் தள்ளினார்கள். உணவில் உப்பற்ற கோழிகளாக ஒருவரை ஒருவர் கொத்தி அதன்பின் அவர்கள் மட்டுமல்ல முழுத் தமிழரும் அழிந்தார்கள்.

இதுவரை சம்பந்தன் எதுவும் செய்யாதவர், அதாவது நல்லதும் கெட்டதும் செய்யாதவர். சுமந்திரன் விக்னேஸ்வரன் போன்றவர்கள் ஆசனத்துக்காக கூச்சல் போடுகிறார்கள் என்பது அரசிற்கும் தமிழருக்கும் தெரியும். ஆனால், தற்போது தமிழரசுக்கட்சிக்கு தலைவராக தெரிவாகியிருக்கும் சிறிதரன், விடுதலைப்புலிகளில் ஒரு கூறாக இருந்தவர். தனது இருப்புக்காக நான்கு இலட்சம் பேரை முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் சென்ற பிரபாகரனைப் போன்று தகிப்பு நிலைக்கு மக்களைத் கொண்டு செல்லக்கூடியவர்.

அப்பொழுது தற்போதுள்ள நிலை மிகவும் எளிதில் மாறலாம். சிறிதரனுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமான ஆதரவு உண்டு என்பதால், அமைதியை வேண்டுபவர்கள் இவரை அவதானித்து நடக்கவேண்டும். ஏற்கனவே ஒரு முட்டாள் கிணற்றில் போட்ட பாறாங்கல்லை நாம் எடுக்கமுடியாது இன்றளவும் தத்தளிக்கிறோம் என்பதை மனதில் வைத்திருப்போம். எதிர்காலத்தில் அமைதியை வேண்டுகிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.