தவறைச் சுட்டிக்காட்டத் தவறிய தமிழாய்ந்த அறிஞர்கள்! …. ஏலையா க.முருகதாசன்.
அண்மை நாட்களில் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழக்குடி என்ற சொற்றொடர் தொடர்பாக,அதனை அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாமலிருக்கின்றது என்ற எனது கருத்துக்கு எதிர்ப்புத் தெரித்தவர்களுக்கு எனது தாழ்மையான பதில் இது.
பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஐயனாரிதனார் என்ற புலவரால் எழுதப்பட்ட புறப்பொருள் வெண்பாமாலையில் ,
பொய்: அகல நாளும்
புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த,வயங்கு ஒலி
நீர் கையகலகக்
கல்தோன்றி மண் தோன்றாக்
காலத்தே வாளொடு
முன் தோன்றி மூத்த குடி தமிழ்க்குடி
என்ற பாடலில் வரும் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி என்ற அறிவியலுக்கு ஏற்புடையதற்ற வரிகள் மீதான தர்க்க ரீதியான கேள்விகளை எனது முகநூல் வாயிலாக வைத்த போது அவற்றை நம்புங்கள் அதன்மீது வினா தொடுக்காதீர்ககள் என்ற குத்திமடக்கும் பதில்கள் வந்தன.
ஆரியர்கள் மனிதர்களுக்குள் தாமே உயர் மனிதர்கள் என்று காட்ட வேண்டும் என்பதற்காக சூரிய சந்திரர்களுக்கு முன்னரே பிறந்தவர்கள் என்றும் சூரிய சந்திரர்களின் பிள்ளைகள் என்றும் பொய்சொல்லிப் புழுக அதை வாசித்த பலவர் ஐயனாரிதனார் ஆரியர்களுக்குப் பாடம் படிப்பிக்கிறேன் எனப் புழுகிப் பொய் சொன்னதே கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி என்று ஒரு வேகத்தில் எழுதி அதைப் பதியமிட அந்தப் பொய் காலம் காலமாக தமிழர் பரம்பலில் மெய்யாக போலித் தோற்றம் கொண்டு காவிச் செல்லப்பட்டு வருகின்றது.
இலக்கியத்தில் இத்தகு கற்பனைகள் இருக்கலாம் மிகைப்படுத்தல் இருக்கலாம் ஆனால் அறிவியல் அதை உண்மையின் சுவடுகளாக ஒரு போதுமே ஏற்றுக் கொள்வதில்லை.
ஆரியர்களின் முட்டாள்தனமான சூரியர் சந்திரர் பிரபஞ்சத்தில் தோன்றும் முன்னரே தோன்றியவர்கள் நாம் என்று சொன்னதற்கு பதிலாக தமிழ்ப்புலவரும் அதே மாதிரி ஏற்புடையற்ற பதிலைச் சொல்லலாமா?.சொல்லியிருக்கத் தேவையில்லை.
பூமியும் பிற கோள்களும் சூரியனால் உமிழப்பட்ட நெருப்புப் பந்துகளிலிருந்தே உருவானவை என்று பிரபஞ்சவியல் விஞ்ஞானம் சொல்கிறது.
பிரபஞ்சத்தில் சூரியன் தோன்ற முன்பு,சூரியனலிருந்து பூமி தோன்ற முன்பு பிறந்தவர்கள் நாங்கள் என்று சொன்னால் அது எவ்வளவு சிரிப்புக்கிடமான பெரும் புழுகு என்பதை யோசிக்க யோசிக்க அவிவிவேகபூரணகுருவின் சீடர்களான மட்டி,பேதை,மடையன்,மூடன் போன்றவர்களா இந்த ஆரியர்கள் என்று நினைப்பது மட்டுமல்ல நாமும் அத்தகையவர்களா என்று எம்மை நாம் ஆய்வு செய்ய வேண்டாமா.
புலவர் ஐயனாரிதனார் ஆரியர்களின் இந்த விட்டாத்தியான வார்த்தையை நினைத்து நினைத்து சிரிக்க வேண்டிய விடயத்தை எள்ளி நகையாடடி அறிவியல் ரீதியாக பூமியில் தோன்றிய மனிதர்கள் எவ்வாறு சூரிய சந்திரர்களுக்கு முன் தோன்றினார்கள் எனக் கேள்வி எழுப்புவதை விட்டிட்டு அவரும் அவர்கள் போல புழுகிப் பொய்யுரைத்தமையானது புலவர் ஐயனாரிதனாரின் அறிவியலையும் கேள்விக்குறியாக்கிவிட்டுது.
நாம் வாழுகின்ற பூமியில் தோன்றிய உயிரினங்களாகட்டும் மரம் செடி கொடிகளாகட்டும்,கடல் ஆறு குளங்களாகட்டும்,பூமிக்குள் புதைந்து கிடக்கும் கனிம வளங்களாட்டும் அவையின் தோற்றம் பற்றி ஆய்வு செய்யும் போதெல்லாம் பிரபஞ்சத்தையும்,பால்வெளிக் கிரகங்களையும் சூரியன் தொட்டு,பூமிக் கோளையும் முழுமையாக ஆய்செய்வதற்காக ஐம்பூதங்களான நிலம்,நீர்;,நெருப்பு,ஆகாயம்,காற்று என எல்லாவற்றினாலுமே அனைத்தும் உருவாக்கப்பட்டவைக்குச் சான்றாக நவீன விஞ்ஞானம் இன்னும் அவற்றை விளக்கியளித்த இயற்பியல் வேதியல் பகுதிகளையும் உள்ளடக்காமல் எந்த ஆய்வையுமே மேற்கொள்ள முடியாது.
பிரபஞ்சவியலில் விஞ்ஞானம் கோள்களின் தோற்றம் பற்றி ஒரே முடிவைச் சொல்லவில்லை.சூரியனிலிருந்து உமிழப்பட்ட நெருப்புப் பந்துகளே பிரபஞ்சத்தின் அயல்சூழ்நிலை காரணமாக நெருப்பாறியும் அவை உருளை வடிவில் தோற்றம் பெற்றும் ஒன்றையொன்று கவர்ந்து இழுத்தமையால் தம்மைத்தாமே சுற்றிக் கோள்களாகின எனவும், இன்னொரு ஆய்வக் கண்டுபிடிப்பாக பிரபஞ்ச கருந்துளையிலிருந்து வெடித்துச் சிதறிய சிறு சிறு துகள்களே கோள்களாக மாறின என்றும் விஞ்ஞானம் சொல்கின்றது.
கோள்களுக்கும் சூரியனுக்கும் இடையிலிருக்கும் தூரத்திற்கமைய கோள்களின் வெப்பம் கணிக்கப்படுகின்றது.சூரியனிலிருந்து அதிக தூரத்தில் இல்லாமலும் சூரியனிலிருந்து அருகில் இல்லாதிருக்கும் பூமியில் உயிரினங்கள் தோன்றவதற்கு ஏதுவான பூமியின் தட்ப வெப்ப நிலையே காரணமாகும்.
நெருப்புப் பந்தாக உமிழப்பட்ட பூமி அதன் எரிமலைக்குழம்பு போன்ற தகதகக்கும் நெருப்பலைகள் தணிந்தாறவே பலவாயிரம் கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும்.இன்றும் பூமியின் கருவாக இருப்பது தீக்குழம்புகளே.அதன் ஒரு பகுதியான நெருப்பாறுகளே எரிமலைக் குழம்புகளாக வெளிவருவதை நாமறிவோம்.
பூமியை அண்மித்திருந்த குளிர்ந்த நிலைகூட பூமியை குளிர வைத்திருக்கும்.சூடாறிய பூமியின் வெளித்தோற்றம் கடினமான கற்பாறைகளுடையதாகவே இருந்திருக்கும்.
வெப்பமடைந்திருந்த பூமி குளிராகிச் சுருங்கச் சுருங்க பூமிக்குள்ளிருந்த கற்பாறைகள் பிதுக்கப்பட்:டு பூமியின் மேற்பரப்பைத் துளைத்துக் கொண்டு மலைகளாக உருப்பெற்றன.இதுமட்டுமல்லாமல் வேறு கோள்கள் சிதைவுற்று அழிந்த போது அங்கிருந்து பூமியை நோக்கி விழுந்த கற்பாறைகளில் பவன அமுக்கம் காரணமாக எரிந்தவை போக மிகுதியானவை பூமியில் அவை மலைகளாக வளர்ந்தனவென்றும் பூகவிற்பவியல் ஆயு;வகள் சொல்லுகின்றன.
இனி புறப்பொருள் வெண்பாமாலை என்ற புலவர் ஐயனாரிதனாரின் நூலுக்கு உரை எழுதியர்கள் வாயிலாக அவர்கள் இப்பாடலுக்க என்ன பொருள் கொண்டுள்ளனர் என்பதைப் பார்ப்போம்.
எனக்குக் கிடைத்த தகவலின்படி புறப்பொருள் வெண்பாமாலைக்கு உரை எழுதியவர்கள் இருவர்.ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் திரு.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இன்னொருவர் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் தொல்புரத்தைச் சேர்ந்தவரும் மகாஜனக் கல்லூரியின் முன்னாள் தமிழாசிரியருமாகிய (நான் படித்த கல்லூரி) தொல்புரக்கிழார் வித்துவான் திரு.நா.சிவபாதசுந்தரனார் அவர்களும் ஆகும்.
இவரின் இந்த நூலை 1970களில் தெல்லிப்பழை அம்பனைக் கலைபெருமன்றத்தினராகிய நாங்களே மகாஜனக் கல்லூரியின் மாடிமண்டபத்தில் வெளியீடு செய்திருந்தோம்.
இந்தப் பாடல் தொடர்பாக எனது முகநூலில் நான் எனது சந்தேகங்களை அறிவியல் ரீதியாக கேள்விகேட்டு பதிவு செய்த வேளை கனடாவிலிருக்கும் பேராசியர் திரு.சேரன் உருத்திரமூர்த்தி அவர்களிடம் கேட்ட போது,வித்துவான் மாஸ்ரர் எழுதிய புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி நூலைப் பாருங்கள் எனச் சொல்லியதுடன் இப்பாடல் தமிழர்களை மகிழ்விக்கவும் உணர்ச்சிவவசப்படுத்தலுக்குமாக எழுதப்பட்டதே தவிர உண்மையானது என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லையென்றார்.(பேராசிரியர் திரு.சேரன் உருத்திரமூர்த்தி அவர்களும் மகாஜனக் கல்லூரிப் பழைய மாணவராவார்)
அதனையடுத்து முனைவர் திருமதி.தேமொழி அவர்களிடம் கேட்ட போது அவர்,இலக்கியத்தில் அறிவியலைத் தேட முடியாது.இது அறிவியலுக்கு ஒத்து வராது எனப் பதில் தந்தார்.
இப்பாடல் தொடர்பாக நான் பெரிதும் மதிக்கின்ற பழம்பெரும் எழுத்தாளராகிய இலக்கியச் செம்மல் திரு.இந்து மகேஷ் அவர்கள் எனது கேள்விகளுக்கு பதில் தருகையில் ஆரியர்கள் தமது தோற்றம் பற்றிப்: புழுகிப் பொய் சொல்கையில்,பூமியில் தோன்றிய மூத்தகுடிகள் என்று நாங்களும் புழுகுவோம் என்பதைச் சாட்சிப்படுத்த மலேசியாவிலிருக்கும் தமிழறிஞர் திரு.கலியப்பெருமாளை முன்னிறுத்தி அவர் சொல்வதை வாசித்தறியுங்கள் என்ற போது அதனை நானும் வாசித்தேன்.
அவரும் ஆரியர் அப்படிச் சொன்னார்கள் நாங்களும் புழுகிப் பொய்:சொல்வதில் தவறில்லை என்ற கருத்துக்கமைய சொல்லியதை வாசித்தறிந்தேன்.
வித்துவான் திரு.நா.சிவபாதசுந்தரனார் அவர்கள் இப்பாடலுக்கு உரை எழுதுகையில் பூமிக் கோள் தோன்றிய பின் அதன் மாற்றத்தில் பூமி சுருங்குகையில் உள்ளிருந்த கற்பாறைகள் பூமியின் மேற்பரப்புக்கு வெளியே தள்ளப்பட்டு அது மலைகளாக உருப்பெற்றன.
மேற்பரப்பில் இருந்த மலைகள் சூரிய ஒளியினாலும்,மழையினாலும் சிதறிச் சிதிலமடைந்து மண்ணாகியது என்று விபரித்த அவர்,மண் தோன்றாக் காலத்தினை வெளிப்படுத்துகையில்,கல்தோன்றிய காலத்தில் குள்ளமான மனிதர்கள் தோன்றினார்கள்,அதனால்தான் மலையும் மலைசார்ந்த இடத்துக்கு குறிஞ்சிநிலம் என்று பெயர் வந்ததெனக் குறிப்பிட்ட அவர்,குறவர்களே தமிழர்களின் மூலவேர் என்பதனை மறைபொரளாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தக் குள்ளமான மனிதர்களிடம் வாள் இருந்தது என்பது அபத்தமானது.ஏனெனில் மனிதர்கள் பூமியில் தோன்றிய காலம் மருத நிலம் தோன்றாத, மலைகளை மட்டுமே கொண்ட குறிஞ்சி நிலக்காலமாக இருக்கையில் அந்த மனிதன் அப்பொழுது ஆயுதத்துக்குரிய உலோகத்தை கணடறிய வாய்ப்பே இல்லை.
இன்னும் இதனை ஆழமாகச் சிந்திக்கையில் பூமியில் தோன்றிய நீர்நிலைகளிலிருந்தும் பூமியின் பிரபஞ்சக குளிரும் நீரைத் தாங்கிய நிலையில் அவை முகிழாகத் தோற்றம் பெற்றன என்றும்,அத்துடன் பூமியில் காடுகள் தோன்றிய பின்னரே உயிரினங்கள் தோன்றின என்பதற்கு ஆதாரமாக இருப்பது மனிதர்கள் உட்பட உயிரினங்கள் சுவாசிக்கும் காற்றுக்கு காரணமே பூமியில் உள்ள காடுகளும் மரங்களுந்தான்.அமேசன் காடுகளே உயிரினங்களுக்குத் தேவையான பிராணவாயுவின் பெரும்பகுதியைத் தருகின்றன என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
அத்துடன் மழையைத் தருவதற்கும் மரங்களே காரணமாகின்றனஅதனால்தான் நாடுகள் மரங்களை நட்டு வருகின்றன.சுத்தமான காற்று மழை போன்றவற்றுக்கு மரங்கள் அவசியமாகின்றன.
அமேசன் காடு அழிந்துவிட்டால் பூமியில் உயிரினங்கள் அழிந்துவிடும் என்ற அச்சமும் நிலவிக் கொண்டிருக்கின்றது.
எனவே கல்தோன்றிய போது உயரினங்கள் தோன்றவில்லை காடுகள் தோன்றிய போதே உயிரினங்கள் தோன்றின அதில் மனித உயிரினமும் ஒன்றாகும்.
முன்தோன்றிய கல்தரையும், மலைகளும் மலைக்குகைகளும் பின்னர் தோன்றிய மரங்களும் உயிரினங்கள் வாழக்கூடிய ஒத்திசைவை
உருவாக்கின.உயிரினங்கள் சுவாசிக்க காற்றுத் தேவைப்பட்டது.வெறும் மலைகளாக இருந்த இடத்தில் காற்று உருவாக முடியாது.
காடுகளும் சூரியக் காற்றலைகளும் இணைந்து உயிரினங்கள் சுவாசித்து வாழக்கூடிய காற்றை உருவாக்கின.காடுகள் செடி கொடிகள் புல்பூண்டுகள் உருவாகிய பின்னரே உயிரினங்கள் தோன்றின என்பதே அறிவியல் ரீதியான உண்மையாகும்.
இதனை வித்துவான் திரு.நா.சிவபாதசுந்தரனார் கல்தோன்றிய போதே மனிதன் தோன்றிவிட்டான் என்றும் அந்த மனிதன் தமிழன் என பாடலில் இருந்ததை விளக்கியுள்ளார்.
ஆனால் மனிதன் சுவாசிப்பதற்கான காற்று வெறும் கற்களாக இருந்த பூமியின் மேற்பரப்பில் எப்படி உருவாகியிருக்கும் என அவர் பாடலைக் கேள்விக்குட்படுத்தவில்லை.உயிரினங்கள் அனைத்தும் சுவாசிப்பதற்கு காற்றத் தேவையாக இருக்கின்றது,அந்தக் காற்றினில் கலந்திருக்கும் பிராணவாயுவை மரங்களால் மட்டுமே கொடுக்க முடியும்,எனவே மரங்கள் தோன்றுவதற்கு ஏதுவான மருத நிலம் தோன்றாத காலத்தில் எப்படி மனிதன் தோன்றினான்,எப்படி ஆயுதத்தைக் கண்டுபிடித்தான் என அவர் பாடலைக் கேள்விக்குட்ப்படுத்தவில்லை.அவருடைய பணி பாடல் எதைச் சொல்லியிருக்கின்றதோ அதை வெளிக்கொணர்வதாக இருந்தது.
பூமி உருண்டையின் தோற்றம் பற்றிய வரலாற்றினை கட்டம் கட்டமாக நுணுக்கமாக ஆய்வு செய்கையில் அறிவியல் ரீதியாக இப்பாடல் இடறுகிறது.
கல்தோன்றிய போதே தமிழன் ஆயதத்துடன் தோன்றிவிட்டான் என்பதை அறிவியல் அபத்தமாகவே கருத முடிகிறது..
அத்துடன் அவர் மலைகளைப் பற்றி விளக்குகையில் பூமியின் வயிற்றிலிருந்து பூமி சுருங்கிய போது பிதுங்கி வெளிப்பட்ட மலை கிரனைட் மலைகள் என தனது உரை எழுதலில் குறிப்பிட்டிருக்கிறார்.இதுகூட சூரியனிலிருந்து பூமி நெருப்புப் பந்தாய் உமிழப்பட்ட போது அதனுள் கொதித்துக் கொண்டிருந்த ஒரு வேதியல் இயற்பியல் கலவையாகும்.இதவும் ஒரு கனிமமாகும்.கிரனைட் மலைமட்டுமல்ல அதுவல்லாத மலைகளும் பூமியின் உட்பகுதியிலிருந்து பூமியின் வெளித்தரையை கிழித்துக் கொண்டு வந்தன.
விலங்குகளும் ஒரு உயிரினமே.அந்த உயிரினம் எப்பச் சுவாசித்தது என்று கேள்விகள் எழுகையில் காடுகளிலிருந்த பிராணவாயு கிடைத்ததால் காடுகள் உருவான பின்பே விலங்கினங்களும் தோன்றின என்பது அறிவியல் ரீதியாக உண்மையாகின்றது.
புறப்பொருள் வெண்பாமாலைக்கு உரை எழுதிய எவரையும் அறிவியல் ரீதியாகத் தவறு என்று குற்றம் சாட்ட முடியாது.ஏதோ ஒரு வேகத்தில் ஆரியருக்கெதிராக இப்பாடலை எழுதிய புலவர் ஐயனாரிதனார் அவர்களே அறிவியல் ரீதியாக ஏற்றக் கொள்ள முடியாத பாடலை எழுதியிருக்கிறார் என்ற முடிவக்க வரவேண்டியுள்ளது.
அதுமட்டுமல்லாது காடுகளில் தோன்றிய பின் மனிதர் உட்பட உயிரினங்கள் தோன்றின என்பது பூமியில் ஆங்காங்கே உள்ள காடுகளில் வேறுவேறு
தோற்றம் நிறமுடைய மனிதர்களும் தோன்றினார்கள் என்பதற்கமைய,தமிழகம் சார்ந்த மண்பரப்பில் தோன்றிய மனிதர்கள் பேசிய மொழி பிற்காலத்தில் தமிழ் எனப் பெயர் கொண்டதாயிற்று எனக் கொள்ளலாம்.
மனிதர்கள் தோற்றம் பெற்ற போது அவர்கள் எந்த மொழி அடையாளத்தையும் கொண்டிருக்கவில்லை.அவர்கள் பார்ப்பவற்றை குரலொலியாலும் சைகையாலும் உணர்த்தி,அது பின்னர் அவர்கள் நாகரீகத்தை நோக்கி வளர்ந்த போது மொழி அடையாளம் கொண்டு அதுவே மொழியாகியது.
எனினும்கூட தமிழ்மொழியின் எழுத்துரு இன்று நாம் புழங்கும் எழுத்துருவாக அன்று இருக்கவில்லை.தமிழ்மொழி உருவாகிய போது இருந்ததை ஒத்த மொழித் தோற்றம் வேறு இன்றிருப்பது வேறு.
பல்வேறு இனக்குழுமங்களால் பல்வேறு மொழிகள் அவரவரின் குரல் ஒலிக்கேற்ப அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மனிதன் எப்படித் தோன்றினான் என்பதற்கான நிலைநிறுத்தல் ஆய்வினை எந்தவொரு வரலாற்றாய்வாளர்களும் முன்நிறுத்தவில்லை.
ஆனால் காட்டிடை வாழ் மனிதனே முதல் மனிதன் என்ற முடிவினை வரலாற்றாய்வாளர்கள் முன்னிலைப்படுத்தி எழுதி வருகிறார்கள்.
கல்தோன்றிய காலத்தில் மனிதர்கள் மட்டுமல்ல உயிரினங்களே தோன்ற வாய்ப்பில்லை.புழுபூச்சிகளிலிருந்து விலங்குகள்,பறவைகள் தொட்டு மனிதர்கள் வரை வாழ்வதற்கு சுவாசித்தல் மிக முக்கியம் என்பதற்கமைய சுவாசப்பை கொண்ட உயிரினங்கள் தொடங்கி சுவாசப்பை இன்றி சுவாசிக்கும் உயிரினங்கள் வரை அவற்றுக்கு காற்றும் அதில் கலந்திருக்கும் பிராணவாயுவைப் பிரித்தெடுத்து சுவாசிக்கும் உயிரியல் கோட்பாட்டுக்கமைய பூமியில் மரங்கள் தோன்றியதன் பின்னரே காற்றும் உற்பத்தியானது என்பது தெட்டத் தெளிவாகிறது.
உயிரினங்கள் உயிரோடு வாழ்வதற்கான வாய்பற்ற கல்தோன்றிய காலத்தில் மனித உயிரினமே தோன்ற வாய்ப்பே இல்லை.
முதல் மனிதனான காட்டிடை மனிதன் சக மனிதனையே எதிரியாகப் பார்த்தவன்.வலிமை உள்ள மனிதன் வலிமையில்லாத மனிதனை கையில் கிடைத்த கல்லால் அடித்து காயப்படுத்தியும் கொன்றுமிருக்கிறான்.
அனைத்து காட்டு மனிதர்கள் ஒத்திசைவான கூட்டுவாழ்க்கையை வாழ்வதற்கே பலநூறு ஆண்டுகள் சென்றிருக்கும்.
மிருகங்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்கு கையில் கிடைத்த ஆயுதமே கற்கள்தான்.கற்களால் மிருகங்களைத் தாக்கியவன் தற்செயலாக கிடைத்த கூர்மையான கற்களின் பகுதியால் மிருகங்களைத் தாக்கிய போது சாதாரண கற்களினால் மிருகங்கள் பாதிப்பதைவிட கூர்மையான கற்களால் மிருகங்களைத் தாக்கும் போது அதிகளவு அவற்றுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்து கற்களை கூர்மைப்படுத்தினான்.
காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் இடி,மின்னல்,மழை,நெருப்பு,மிருகங்களின் தொல்லைகள் போன்றவற்றக்கு தீர்வு காண சூழ்நிலை தானாகவே அவனைத் தள்ளிச் சென்றது.
பின்னர் கல்லால் ஆன கூர்க்கல்லை நீளமான தடிகளில் கட்டி அதனை ஆயுதமாகப் பாவித்தான்.தடிகளையே கூராக்கி அதையும் ஆயுதமாக்கினான்.
காட்டிடை மனிதன் நீர்நிலை நோக்கி நகர்ந்து விவசாயம் செய்தான்,மீன்பிடித்தான் இவ்வாறான வளர்ச்சியின் பின்னரே காட்டிடை மனிதர்கள் நவநாகரீகத்தை நோக்கி நீர்;நிலைகளை அண்டி வாழத் தொடங்கினான்.;அப்பொழுதுதான் மண்ணை ஊடுருவிப் பார்க்கும் சிந்தனையே அவனுக்கு ஏற்பட்டது.
அவ்விஞ்ஞான நுட்பறிவே கனிமவளங்களைக் கண்டறியும் அறிவியல் ரீதியான சிந்தனையை மனிதகுலத்துக்கு கொடுத்தது.
அதன் பின்னரே மண்ணுக்குள் இருக்கும் உலோகங்களைக் கண்டறிந்த மனிதகுலம் அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற சிந்தனையின் வாயிலாக பெற்றறிவே ஆயுதமாகவும், வேறு பொருட்களாகவும் தோற்றம் பெற்றன.
இதுவேதான் மனிதகுல வரலாற்றில் உலோகங்களை கண்டறிந்த வரலாறாகும்.அறிவியல் ரீதியாக,மனிதர்களின் படிமுறை வளர்ச்சியைக் கவனத்தில் கொள்ளாது,ஆரியர் சொன்ன புழுகிற்கு,பொய்க்கு எதிர்ப்புழுகாக புலவர் ஐயனாரிதனார் எழுதிய கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்ற பாடலை ஆய்ந்தறிந்து அதில் அறிவியல் ரீதியாக உள்ள தவறை நுட்பமாக ஆராயாமல் எழுத்திலும் மேடைப்பேச்சுகளிலும் முன்நிறுத்தியமை தவறேதான். பத்தாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை அதை தர்க்க ரீதியாக அறிவியல் ரீதியாக எதிர்கொண்டு உண்மைத்தன்மையை தமிழினத்துக்கு தமிழாய்ந்த அறிஞர்கள் இதனைச் சொல்லியிருக்க வேண்டும்.
தமிழினத்துக்குப் பெருமையான விடயந்தானே அப்படியே அது இருக்கட்டும் என்று இதுவரை ஒரு பொய்யைப் புழுகை காவிக் கொண்டு வந்ததன் மூலம் தமிழர்களின் நுண்ணறிவு கேள்விக்குறியாகி உள்ளது.
உண்மை பேச வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும்,பிழையென்றால் பிழையென்று சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதைதான் நக்கீரன் சிவபெருமான் விவாதம்.
இக்கதை உண்மையானதுதானா என்பது விவாதத்திற்குரிய விடயம்.எனினும் இக்கதை மூலம் உண்மையைப் பேசு பிழை என்றால் பிழை என்று சொல் என்பதற்காக,சிவபெருமானின் மனைவியான பார்வதியின் கூந்தலுக்கு இயற்கையாகவே வாசனை கிடையாது,நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தமிழசு;சங்கத் தலைமைக்கவி நக்கீரன் சிவபெருமானையே கேள்வி கேட்டானே அது போல புலவர் ஐயனாரிதனாரின் இப்பாடலை நோக்கி தமிழறிஞர்கள் ஏன் கேட்கவில்லை.
தவறான கருத்தினைக் கொண்ட தவறைச் சுட்டிக்காட்டத் திரணியற்று நின்றீர்களே தமிழறிஞர்காள்.இது வெறும் இலக்கியச் சுவைக்கென்றாலும் தமிழரின் வரலாற்றோடு பின்னிப்படரவிட்டீர்களே.உலகளாவிய ரீதியில் இருக்கும் தமிழறிஞர்களை நோக்கியே இக்கேள்வியை முன் வைக்கிறேன்.
இதற்கு இலங்கையில் உரையெழுதிய தமிழறியுர் தொல்புராக்கிழார் வித்துவான் திரு.நா.சிவபாதசுந்தரனார்கூட அறிவியல் சார்ந்து சிந்திக்காமல் விட்டுவிட்டாரே.