இலக்கியச்சோலை
சிரிப்பே சீவியமாகி செய் தொழிலே தெய்வமாகிட !… சிரிப்பும் சிந்தனையும் தெறிக்கும் சிரித்திரன்!! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(தாயக மண்ணில் இலக்கியப் பணி
ஆற்றிய சிரித்திரன் சுந்தர் மார்ச் 3 , 1996இல் மறைந்த நாள் நினைவாக பிரசுரமாகிறது.
தாயக மண்ணில் இலக்கியப் பணிக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காக தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் சிரித்திரன் சுந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
நாற்பது வருடங்களுக்கு மேலாக கேலிச் சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்திய சிரித்திரன் சுந்தர் பதினைந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட கேலிச்சித்திரங்களைத் தீட்டியுள்ளார். ‘செய்தொழில் தெய்வம், சிரிப்பே சீவியம்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கலை இலக்கிய வானில் பறந்து திரிந்தவர் சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் மாமனிதர் சிவஞானசுந்தரம். மார்ச் 3 ,1924 இல் பிறந்த அவர் மார்ச் 3 , 1996இல் மறைந்தார்.
கேலிச் சித்திரங்கள், பகடிக் கட்டுரைகள் மற்றும் நடைச் சித்திரங்கள் என சிரித்திரனில் சுவைபட இடம்பெற்றன. சிரித்திரன் சுந்தரின் கேலிச்சித்திர நாயகர்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, மைனர் மச்சான், மயில்வாகனத்தார் போன்றவர்கள் வரலாற்றுப் புகழ்பெற்றவர்கள். ‘மகுடி பதில்கள்’ என்னும் தலைப்பில் சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் என்றும் புகழ்பெற்றது.
சிரித்திரனும் – சிரிப்பும் சிந்தனையும்:
சிரித்திரன் 1963ஆம் ஆண்டில் சி. சிவஞானசுந்தரம் அவர்களால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட நகைச்சுவை இதழ். அவரின் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிரித்திரன் சஞ்சிகை மூலம் பல எழுத்தாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைப் பிரசுரித்தவர் சுந்தர்.
சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனியிடத்தைப் பெற்றது. அவரது படைப்புகள் மண்வாசனை உள்ளவையாகவும், பாத்திரங்கள் யாழ்ப்பாணப் பேச்சுவழக்குத் தமிழைச் சுவையாகப் பேசுபவையாகவும் விளங்கின.
தமிழ் மக்களிடையேயுள்ள சாதி வேறுபாடுகள் போன்ற பிற்போக்குத் தனங்கள், மூடக்கொள்கைகளை நகைச்சுவையாக – ஆனால், உறைப்பாகக் குத்திக்காட்டி நையாண்டிசெய்தார் சிரித்திரன் சுந்தர்.
சிரித்திரனில் ‘சவாரித்தம்பர்’:
சிரித்திரன் சுந்தர் கொழும்பில் இருந்து வெளிவந்த தினகரனில் முதலில் கேலிச்சித்திரக்காரராக (Cartoonist) பணிபுரிந்தார். அக்காலத்தில் ‘தினகரன்’ பத்திரிகையில் ஆசிரியராக இருந்த க. கைலாசபதியின் அழைப்பை ஏற்று அப்பத்திரிகையில், சுந்தர் ‘சவாரித்தம்பர்’ என்ற தொடரை வரையத் தொடங்கினார். சவாரித்தம்பர் வாசகரிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. சவாரித்தம்பருக்காகத் தினகரனை வாங்கியோரும் பலர்.
சவாரித்தம்பர் என்பவர், அக்காலத்தில் கரவெட்டியில் வாழ்ந்துகொண்டிருந்த – முற்போக்கு எண்ணங்கொண்ட ஒரு பெரியார். வண்டில் சவாரி செய்வதில் வல்லவர். சுந்தர் அவரோடு நன்கு பழகியவராக இருந்தார்.
அந்தக் கேலிச் சித்திரங்களை அவர் படித்து, “சிவஞானத்தின்ரை வேலை நல்லாயிருக்கு” என்று சொல்லிச் சிரித்து மகிழ்ந்தவராம். சவாரித்தம்பர் பாத்திரத்தைக் கண்ணியமான பாத்திரமாகவே சுந்தர் படைத்துவந்தார்.
அதில் வந்த சின்னக்குட்டி, பாறி மாமி பாத்திரங்களும் கரவெட்டியில் வாழ்ந்தவர்களே.தினகரன் வார மஞ்சரியில் ‘மைனர் மச்சான்’, ‘சித்திர கானம்’ ஆகிய கேலிச் சித்திரத் தொடர்களையும் சுந்தர் வரைந்தார்.
சிரித்திரனை 1963-ல் ஆரம்பித்த சுந்தர் 1970 வரை கொழும்பு பண்டாரநாயக வீதி சுதந்திரன் அச்சகத்திலும், 1970 முதல் 1971 வரை டாம் வீதியில் குமரன் அச்சகத்திலும் அச்சிடப்பட்டது. 1971 முதல் யாழ்ப்பாணம் பிரவுண் வீதியில் ஸ்ரீலங்கா அச்சகத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியது.
1971 நவம்பர் முதல் சிரித்திரனின் சொந்த அச்சகத்தில் இருந்து வெளியாகியது. போர்க்கால சூழலில் 1995-ல் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தபோது சிரித்திரன் இதழ் நிறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டே ஆசிரியர் சிவஞானசுந்தரம் மறைந்தார்.
மொத்தம் 32 ஆண்டு காலம் தொடர்ந்து சிரித்திரன் வெளிவந்தது.
எரிக்கப்பட்ட சிரித்திரன் :
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை சிந்தனைச் சிறப்பால் தனக்கென தனியிடத்தை பெற்று இருந்தது. ஆயினும் துயரமிகு நிகழ்வாக சிரித்திரன் அச்சகமும் அலுவலகமும், ஆசிரியரின் நூலகச்சேமிப்பும் 1987-ல் இந்திய அமைதிப்படையால் தீவைத்து எரிக்கப்பட்டன.
சிரித்திரன் இதழாசிரியரின் மகள் வாணி சுந்தர் பதிவுகளின படி, சிரித்திரன் அலுவலகம் இந்திய அமைதிப்படையினர் தங்குமிடமாக ஆக்ரமிக்கப்பட்டது என்ற தகவல்களையும்
வெளிக்கொணர்ந்தார்.
1995 யாழ்ப்பாண இடப்பெயர்வு:
யாழ்ப்பாணத்தில் 1995-ன் போர்க்கால மாபெரும் இடப்பெயர்வு வரையில் வெளிவந்த சிரித்திரனின் முழு ஆயுள் காலத்தை 32 ஆண்டுகளாக
மொத்தம் 318 இதழ்கள் வெளிவந்தன.
சிரித்திரன் சுந்தரின் ‘கார்ட்டுன் ஓவிய உலகில் நான்’ என்ற சுயசரிதை நூலின் முன்னுரையில் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1963ஆம் அண்டில் ஆரம்பிக்கப்பட்ட “சிரித்திரன்” சஞ்சிகை திரு சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு வரை 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது.
சிரித்திரன் ஆசிரியர் நினைவு மலரில் சிரித்திரன் வரலாற்றை எழுதும் செங்கை ஆழியான் தமிழில் முழுக்கமுழுக்க கேலிச்சித்திரத்துக்காக வெளிவந்த ஒரே இதழ் சிரித்திரன் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
பல எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்த சிரித்திரன் புதுக் கவிதைகளையும் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் வெளியிட்டது. சிரித்திரன் சஞ்சிகை மூலம் புகழ் பெற்ற பல எழுத்தாளர்கள் இன்று உலகில் பலர் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள். திக்குவல்லை கமால், திக்கவயல் தர்மகுலசிங்கம் (சுவைத்திரள் ஆசிரியர்), காசி ஆனந்தன், யாழ் நங்கை ஆகியோர் சிரித்திரனில் எழுதிய ஆரம்பகால எழுத்தாளர்கள். எஸ். அகஸ்தியர், டானியல் அன்ரனி, சுதாராஜ், அமிர்தகழியான், நவாலியூர் சச்சிதானந்தன், தெளிவத்தை ஜோசப் என பலருக்கு களம் அமைத்துக் கொடுத்தது சிரித்திரன்.
மலையகப் படைப்பாளி ராகுலனின் “ஒய்யப்பங் கங்காணி”, செங்கை ஆழியானின் “ஆச்சி பயணம் போகிறாள்”, “கொத்தியின் காதல்” ஆகிய புகழ்பெற்ற படைப்புகள் சிரித்திரனால் வெளியிடப்பட்டன.
அத்துடன் காசி ஆனந்தனின் இலட்சியத் தாகம் மிகுந்த “மாத்திரைக் கதைகள்” பிரசித்தமானவை. குடாரப்பூர் சிவா “நடுநிசி” என்ற மர்மக்கதையை எழுதினார். மாஸ்டர் சிவலிங்கத்தின் விண்ணுலகத்திலே எனும் சிறுவர் கதை, அ. ந. கந்தசாமியின் கதைகள் போன்றவை இவற்றுள் சில படைப்புகள் சிரித்திரனால் வெளியிடப்பட்டன.
மலையகப் படைப்பாளி ராகுலனின் “ஒய்யப்பங் கங்காணி” அன்றைய அரசியல்வாதிகளை உலுக்கியது. செங்கை ஆழியானின் “ஆச்சி பயணம் போகிறாள்”, “கொத்தியின் காதல்” ஆகியன புகழ் பெற்றவை.
‘பிளித்ஸ்’ ஆங்கிலச் சஞ்சிகையில் :
சிவஞானசுந்தரம் அவர்களது கேலிச் சித்திரம் முதன்முதலாக, இந்தியாவில் ஏராளமான வாசகர்களைக் கொண்ட – ‘பிளித்ஸ்’ (Blitz) என்னும் ஆங்கிலச் சஞ்சிகையில் வெளியானது. தொடர்ந்து கரஞ்சியா ஆசிரியராக இருந்த ‘கொஞ்ச்’ சஞ்சிகையிலும், அவரது கேலிச் சித்திரங்கள் பல வெளிவந்தன. அதன்மூலம் பிரபல கேலிச் சித்திரக் கலைஞர்களான போல் தாக்கரே, ஆர். கே. லக்ஷ்மணன் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவர்களுடன் கேலிச் சித்திரம் பற்றி உரையாடி வந்தார்.
இதன்பின் அவர் இலங்கை வந்து, அரசாங்க கட்டடத் திணைக்களத்தில் படவரைஞராகப் பணிபுரிந்து வந்தார்.
சிரித்திரன் சுந்தர் என்றவுடனே முகத்தில் புன்னகை அரும்பும் நெற்றியில் சிந்தனைக் கோடுகள் வரைபடமாகும்.’மகுடி பதில்கள்’ என்று மகுடமிட்டு சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது.
புதுப்புதுத் தலைப்புகளில் சிந்தனைத் துளிகளைத் தீட்டி, சிரித்திரனை அவர் அழகுசெய்தார். ‘பல்லி சொன்னதும் செய்தி சொன்னதும்’, ‘சிரித்திரன் டயறி’, ‘ஜோக்கிறட்டீஸ்’ முதலியவற்றை உதாரணங்களாகக் கூறலாம். ‘மிஸ்டர் அன் மிஸ்ஸிஸ் டாமோடிறன்’, ‘மகுடி பதில்கள்’ என்பன சிரித்திரனுக்குரிய சிறப்பு முத்திரைகள் ஆகும். அவர் சுகயீனமுற்று – ஒரு கையும் ஒரு காலும் வழங்க முடியாத நிலையிலும் தொடர்ந்து எழுதினார். கேலிச் சித்திரங்கள் தொடர்ந்து வரைந்தார்.
சிரித்திரன் நகைச்சுவைகளை மாத்திரம் தாங்கி வரவில்லை. தரமான சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கியக் கட்டுரைகள், கலைஞர்களுடனான நேர்காணல்கள் முதலிய ஆக்கங்களும் அதனை அழகுசெய்தன. சிரித்திரன் நேர்காணல்கள் அடங்கிய நூலினை, ‘தேன்பொழுது’ என்ற பெயரில் சுந்தர் வெளியிட்டார். வேறு ஆக்கங்களும் பல நூலாக வெளியிடப்பட்டுள்ளன.
‘சிரித்திரன் சித்திரக் கொத்து’ என்ற கேலிச் சித்திரத் தொகுதியை, 1989 ஆம் ஆண்டு சுந்தர் வெளியிட்டார். ‘மகுடி பதில்கள்’, ‘கார்ட்டூன் உலகில் நான்’ ஆகிய நூல்களும் வெளிவந்துள்ளன.
தாயக மண்ணில் இலக்கியப் பணிக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காக தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் சிரித்திரன் சுந்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிரித்திரன் மீள்பதிப்பு:
சிரித்திரன் இதழ் Centre for Creativity and Innovation நிறுவனத்தால் மீளவும் புதுப் பொழிவுடன் அச்சிலும், இணையத்திலும் பதிப்பிக்கப்பட்டு 2021 ஜனவரி முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து உலகெங்கும் கிடைக்க கூடிய வகையில் வெளியிடப்பட்டு வருகின்றது. siriththiran. com எனும் இணைய விலாசத்திலிருந்து தற்போது வெளிவருகிறது.