கதைகள்

“அருள்மிகு பட்டவன்” …. சிறுகதை ….. மா . சங்கீதா புதுக்கோட்டை.

அந்த மார்கழிக்குளிரில், ரம்மியமான விடியற்காலை வேளையில், எங்கள் குலதெய்வ கோயிலுக்கு தைமகளை வரவேற்று பொங்கல் வைக்க பக்தி கலந்த மகிழ்ச்சியுடன் உற்சாகமாக கிளம்பினோம். தைப்பொங்கலுக்கு எல்லாரும் அவரவர் வீட்டில் பொங்கல் வைப்பார்கள். எங்கள் வீட்டில் மட்டும் எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று தான் பொங்கல் வைப்போம். எங்கள் தாத்தா சாமியாடி என்பது கூடுதல் பெருமையும் பெருமிதமும் எங்களுக்கு!

பச்சரிசிமாவு கோலம் போட்ட மண்பானைகளும்,எங்கள் வயலின் புதுநெல்வாசம் கலந்த பச்சரிசியும், அச்சு வெல்லம், தேங்காய்,வாழைப்பழம்,கரும்பு கலந்த மூங்கில் கூடையுடன் தைப்பொங்கலை வரவேற்க கிளம்பினோம்.

கோவில் பொங்கல் விழா களை கட்டியிருந்தது. கருவறைக்குள் உள்ள தெய்வங்களைப் பற்றி கேட்ட நான், “அப்பா முன்னோடியான் சாமிய மட்டும் ஏம்பா வெளியில வச்சிருக்காங்க” என்றேன். பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல அப்பாக்கள் என்றுமே தயங்குவதில்லை. அப்பா சொன்னார், கருவறைக்குள் இருப்பது ஸ்ரீ பட்டவன், ஸ்ரீ கடம்பாயி அம்மன், சன்னாசி,கருப்பர் தெய்வம் என்றும் வெளியே உள்ள தெய்வம் முன்னோடியான் என்றும் கூறினார். மூன்று தெய்வங்களின் பாசமும் இவ்வுலகை விட பெரியது. இன்றைய சாதீய பாகுபாட்டால் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று கடவுளைகூட இப்படி பிரித்து வைத்திருக்கிறார்கள். கருவறை உள்ளே உள்ள பட்டவன் சாமி கூட முன்னோடியான் சாமியை கருவறைக்குள் தன்கூட தன்பக்கத்தில் இருக்கத்தான் விரும்புவார். ஆனால் மனிதர்களோ கடவுளை பாகுபாடு பார்த்து, பிரித்து வைத்து வழிபடும் மனநிலையில் தான் உள்ளார்கள். இத்தெய்வங்கள் கொண்டிருந்த உயிருக்கு மேலான பாச உணர்வு சாதீயம் கடந்த சாதனை வரலாறு ஆகும்.”என்று கூற, நானோ வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வரலாற்றை அப்பாவைக் சொல்ல சொல்ல, அப்பாவும் அந்த சிலிர்ப்பூட்டும் எங்கள் குலதெய்வ வரலாற்றைக் கூற ஆரம்பித்தார். பொங்கல் விழாவிற்கு வந்த அனைவரும் அப்பாவை சுற்றி உட்கார்ந்து குலதெய்வ வரலாற்றை கேட்க ஆர்வத்துடன் அமர்ந்தனர். .

எப்பொழுதும் பசுமைப் போர்வை போர்த்தி இருக்கும் அந்த ஊர். பசுமையான நெல் வயல்களும், தோகையை உயர்த்தி காற்றிலாடும் கரும்புகளும், தலையாலே தண்ணீரை தாரைவார்க்கும் நெடிதுயர்ந்த தென்னை மரங்களும் நிறைந்து பசுமையை பறைசாற்றிக் கொண்டிருந்தன. நெல் வயல்களை தொடர்ந்து கடலை கொல்லைகளும், ஊடுபயிராக உளுந்து, வெண்டை, தக்காளி ,கத்தரி, கீரை என காய்கறி தாவரங்களும் இடம்பெற்றன. ஆங்காங்கே தோன்றிய சின்னஞ்சிறிய பாறைகளும்,அந்த ஊரை சிறிய சுற்றுலா தலமாக மாற்றி விட்டிருந்தன . ஊரின் செழிப்பை பார்த்தே சொல்லிவிடலாம், மனிதர்களும் செழிப்பாக வாழ்ந்தார்கள் என்று! ஒவ்வொரு வீட்டிலும் ஆடு மாடுகளும்,விவசாய நிலங்களும் அதிகமாக இருந்தன.பல்வேறு சாதியினர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தாலும்,சாதிய எண்ணமில்லாமல் இளைஞர்களும்,முதியோர்களும் சகோதரத்துவத்துடன் இணைந்தும் ஊர்த் திருவிழாக்களை மகிழ்ந்து கொண்டாடியும், ஊர்க் கடவுளரை மகிழ்வித்தும் கொண்டிருந்த காலம் அது!

அந்த ஊரின் கடம்பாச்சி வகையறாவைச் சேர்ந்த கருப்பையா ஊரின் அம்பலக்காரர். ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் அதிகமுள்ள பெரிய விவசாய குடும்பம் அவரது. அவரது வயல் நிலங்களில் தினந்தோறும் குறைந்தது ஐம்பது பேராவது வேலை பார்ப்பார்கள். அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களின் மனமும் வயிறும் குளிரும்படி பணமும், பொருட்களும் கொடுத்து அனுப்பும் நல்லவர் கருப்பையா.

வயல் வேலைகளை தினமும் மேற்பார்வையிடுவதும், நேரம் கிடைக்கும்போதெல்லாம், பொழுதுபோக்கிற்காக கால்நடைகளை, தனது ஆருயிர் நண்பன் ரெங்கையாவுடன் ஓட்டிச் சென்று வருவதும் அவரது வழக்கமாக இருந்தது.

ரெங்கையா அந்த ஊரின் ஒடுக்கப்பட்ட சமூகமாக கருதப்படும் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவன்..சிறுவயது முதலே கருப்பையாவின் நிலங்களில் வேலை செய்து வருபவன். கருப்பையாவை தன் அண்ணன் ஆகவே நினைத்து அதிக பாசம் வைத்திருப்பவன். கருப்பையா இருக்கும் இடங்களிலெல்லாம் ரெங்கையாவும் இருப்பான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இணைபிரியாமல் இருப்பது சாதியத்தை தாண்டிய அவர்களது அன்பை புலப்படுத்தும் .

அவர்கள் இருவரும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதை ஊரே வேடிக்கை பார்க்கும்.இருவரும் தலையில் தலைப்பாகையுடனும், கையில் பெரிய தடிக்கோலுடனும் செல்வார்கள். கருப்பையா தலைமை தளபதி போன்று கால்நடைகளுக்கு முன்னே சென்று அவை பாதை மாறி போய் விடாமல் வழிநடத்தி சென்று கொண்டிருப்பார். ரெங்கையாவோ படைவீரனைப் போன்று எல்லா திசைகளிலும் ஓடிச்சென்று கால்நடைகளை விரட்டிக் கவனமாக திருப்பி செல்வார்.கால்நடைகளும் அவர்களைப் போன்றே துள்ளிக் குதித்துக் கொண்டு மகிழ்ச்சியோடு சென்றுகொண்டிருக்கும்.

ஊரின் விவசாய நிலங்களைத் தாண்டிய தரிசு நிலங்களில் அவர்களது மேய்ச்சல் இடம்பெறும்.மேய்ச்சலுக்கு நடுவே கருப்பையாவை மர நிழலில் இளைப்பாறச் செய்து விட்டு தானே கால்நடைகள் மொத்தத்தையும் கவனமாகவும் திறமையாகவும் பார்த்துக்கொள்வான் ரெங்கையா.கருப்பையாவும் பலசமயங்களில் ரெங்கையாவை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு ஆடு மாடு அனைத்தையும் குளத்தில் தண்ணீர் காட்டி வயல்களில் மேய விடுவார்.அவ்விருவரின் பாசத்தை காட்டின் மரங்களும், மரங்களின் பழங்களும், பழங்களின் பறவைகளும், பறவைகளின் வானமும்,வானத்தின் ஆகாயமும் நன்கு அறியும்.

அன்பிலும் பாசத்திலும் குறைவில்லாத கருப்பையாவின் வீடு கடம்பாயி என்ற அழகிய தேவதையை குலமகளாக கொண்டிருந்தது.ஆம்! கருப்பையாவின் தங்கைதான் கடம்பாயி என்னும் அந்த பாசப் பறவை.கடம்பாயி எதார்த்தமான நல்ல பண்புள்ள பெண். கருப்பையாவையும், ரெங்கையாவையும் தனது இரண்டு அண்ணன்கள் என ஊர் முழுவதும் சொல்லி பெருமைப்படுபவள். பேச்சில் மட்டும் இல்லாமல் மனதிலும் இருவரிடமும் அதிக பாசமும் பற்றும் வைத்திருப்பவள்.

ரெங்கையாவுக்கும் கடம்பாயி மேல் அதிக பாசம் உண்டு. கருப்பையாவை தன் சொந்த அண்ணனாகவும் கடம்பாயியை தன் சொந்த தங்கையாகவும் மனதில் பாவித்து பாசத்துடன் வாழ்ந்து வருபவன்.இவ்வாறு மூவரும் ஒரு சொந்தமாக, ஒரு

ரத்தமாக, ஒரு குடும்பமாக, இரு அண்ணன் ஒரு தங்கை என வாழ்வதை பார்த்து அந்த ஊர் பொறாமையும் படும், பெருமையும் படும்.

மேய்ச்சலுக்கு செல்லும் நாட்களில் கடம்பாயி கொடுக்கும் ஒரு சொம்பு கம்பங்கூழை குடித்து விட்டு, தாங்கள் எத்திசையில் மேய்ச்சலுக்கு செல்கிறோம் என்பதையும் இருவரும் தங்கைக்கு தெரிவித்து விட்டு செல்வது வழக்கம்.அதன் பிறகு மதிய வேளையில் கடம்பாயி அண்ணன்கள் இருவருக்கும் சாப்பாடு எடுத்துக்கொண்டு சென்று சாப்பாடு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு வருவாள்.

கம்பஞ்சோறு,கேழ்வரகு கூழ், அரிசி சோறு என ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவுகளுடன் அண்ணன்களுக்கு சாப்பாடு கொண்டு செல்வாள் கடம்பாயி.கடம்பாயி வைத்த சாப்பாட்டை சாப்பிடும் பொழுது எல்லாம் கருப்பையா ஒரு பகுதியை ரெங்கையாவுக்கு கொடுப்பார்.கடம்பாயி தன் அண்ணனிடம் செல்லமாக கண்டித்தாலும் “ரெங்கையா இல்லன்னா இத்தன ஆடு மாடுகளையும் இவ்வளவு நாளா நான் ஒரு ஆளா எப்படிமா கட்டி காப்பாத்த முடியும்? அவன் ஒருத்தனா தானம்மா காடு மேடுகள்ல, கல்லு முள்ளு பார்க்காம ஓடியாடி ஆடு மாடுகளை வளச்சு மேய்ச்சுகிட்டு எனக்கு பெருந்துணையா இருந்துட்டு வர்றான்” என்று சிரித்துக்கொண்டே கூறுவார் கருப்பையா.இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையாக காத்திருப்பாள் கடம்பாயி.இரு அண்ணன்களும் எவ்வளவு கெஞ்சினாலும் சாப்பிட மாட்டாள்.அவர்களுக்கு தெரியும், தாம் இருவரும் சாப்பிட்டு முடித்தால் மட்டுமே தம் தங்கை சாப்பிடுவாள் என்பது!அதற்காகவே இருவரும் வேகமாக சாப்பிட்டு முடிப்பார்கள். இருவரும் சாப்பிட்டு மர நிழலில் இளைப்பாற மீதமுள்ள சாப்பாட்டை கடம்பாயி அண்ணன்கள் இருவரிடமும் பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் சாப்பிட்டுவிட்டு இருவரிடம் சொல்லிவிட்டு பிரியா விடை பெறுவாள்.

அன்று காலையிலேயே வானம் மழை கொட்ட போகிறேன் என்பதுபோல மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கருப்பையாவும், ரெங்கையாவும் கால்நடைகளை விரட்டிக்கொண்டே கடம்பாயியிடம் “இன்று பெரிய வயலுக்கு வடக்கே ஓணான் குளம் பக்கம் மேய்ச்சலுக்கு செல்கிறோம், மதியம்சாப்பாடு எடுத்துட்டு வாம்மா” என்று கூறிவிட்டு சென்றனர்.

மதிய நேரம் இருக்கும். ரெங்கையாவும், கருப்பையாவும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அமர்த்திவிட்டு ஓணான் குளத்தில் மாமரங்களும், புன்னை மரங்களும், கூந்தல் பனையும் நிறைந்த இடத்தில் பழங்கதைகள் பேசி சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று ஆடு மாடுகளின் கதறல்சத்தம் கேட்டது. அச்சமூட்டும் வகையில் இருந்த அந்த சத்தத்தில் பதறியடித்துக் கொண்டு இருவரும் ஓடினர். அங்கே அவர்கள் பார்த்த காட்சி அதிர்ச்சியில் உறைய வைத்தது. அங்கே கருப்புத் துணியால் முகத்தை மூடிய கொலைவெறியுடனும், ஆக்ரோஷத்துடனும் நின்ற ஐந்தாறு கொள்ளைக்காரர்கள் ஆடு மாடுகளைப் பிடித்துக் கொண்டு நின்றனர். அதிர்ச்சியிலிருந்து மீண்ட இருவரும் போர் வீரர்கள் போன்று மின்னலென பாய்ந்து தாக்க தொடங்கினர்.கருப்பையா தனது கையில் இருந்த பெரிய தடியால் அந்த கும்பலை கலங்கடித்து கொண்டிருந்தார்.

கருப்பையா நல்ல உயரமான வாட்டசாட்டமான ஆள். பெரிய மீசையுடனும், இருட்டில் முனி தெய்வத்தையும் நினைவூட்டுபவர். கம்பீரமான திடகார்த்தமான அந்த மனிதன் அந்த கொள்ளைக் கும்பலை சிதறடித்து கொண்டிருந்தது சாதாரண விஷயமே அவருக்கு!

ரெங்கையாவும் கருப்பையாவவைப் போன்றே கம்பீரமான வன். வீரமும் விவேகமும் கருப்பையாவை போலவே இருப்பவன். எதிரிகளின் கத்தி, அரிவாள் அனைத்தையும் சுழலும் சூறாவளி போன்று எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் இருவரின் தாக்குதலையும் எதிர்கொள்ள முடியாமல் ஒன்றிரண்டு கால்நடைகளை மட்டும் பிடித்துக்கொண்டு அந்த கயவர்கள் ஓட ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர்களை இருவரும் விரட்டி சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக அக்கூட்டத்தில் இருந்த கயவன் ஒருவன் எறிந்த ஈட்டி ஒன்று கருப்பையாவின் நெஞ்சில்

இறங்கியது. “ ரெங்கையா..!” என்ற கதறலுடன் ஆலமரம் ஒன்று வேருடன் சாய்ந்தது போன்று தரையில் விழுந்தார் கருப்பையா.

கால்நடைகளை மீட்பதிலேயே கவனமாக இருந்த ரெங்கையாவிற்கு கருப்பையாவின் சத்தம் கேட்கவே இல்லை. திருடர்களைத் துரத்திச் சென்று விரட்டி அடித்துவிட்டு கால்நடைகளை பிடித்துக் கொண்டு வந்து கருப்பையாவை தேடும்பொழுதுதான் அவர் ஈட்டிக் குத்துடன் மயங்கி கிடப்பது அவனுக்கு தெரிந்தது. அந்த காட்சியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரெங்கையாவிற்கு தனது உடம்பிலிருந்து உயிரை யாரோ உருவி எடுத்தது போன்று துடிதுடித்துப் போனான். அவன் தனது கண்களில் பெருகும் கண்ணீரை நிறுத்தவும் முடியாமல் என்ன செய்வதென்றும் தெரியாமல் திகைத்துப் போய் தன் தோளில் தன் அண்ணனை தூக்கி சுமந்து கொண்டும், ஆடு மாடுகளை மீட்டுக்கொண்டும் ஓணான் குளம் வந்து சேர்ந்தான் ரெங்கையா.

திடீரென்று “ரெங்கையா, தண்ணி தாகமா இருக்குப்பா, தண்ணி வேணும்” என்று கருப்பையா முனகுவதை கேட்டு,’அண்ணன் எப்படியும் பிழைத்து விடுவார்’ என்ற சந்தோஷத்தில் அவரை அப்படியே ஆலமரத்தினடியில் சாய்த்து உட்கார வைத்துவிட்டு குளம் நோக்கி ஓடினான் ரெங்கையா. குளத்துத் தண்ணீரை கொண்டு வந்து அவர் வாயில் ஊற்றியதும் கண் கலங்கியபடியே, மனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சோகம் மறைத்து,முகத்தில் புன்னகையுடன் அவனைப் பார்த்தபடியே தனது உயிரை விட்டார் கருப்பையா.

கருப்பையா உயிரிழந்ததை ஏற்கமுடியாதவனாய் “நான் உன்கூட இருந்தும் உன்னைய காப்பாத்த முடியலையே அண்ணா! உன்னை விட்டு நான் இந்த பூமியில் எப்படி இருப்பேன் “என்று பலவாறு தங்களது சிறுவயது முதலான பாசத்தை நினைத்து நினைத்து அழுது அரற்றி முடித்தான். அவனது அழுகை அந்தக் காட்டையே மிரட்டியது. இறுதியில் ஏதோ உறுதியான முடிவு எடுத்தவனாய் கருப்பையாவின் நெஞ்சில் இருந்த ஈட்டியை எடுத்து தனது இதயத்தில் குத்திக் கொண்டு கலந்தான் அண்ணனோடு!

அந்த உயர்ந்த சாதியும், ஒடுக்கப்பட்ட சாதியும் ஒன்று சேர்ந்து சாதி என்பது பொய்,சாதியை அன்பு வென்றது என்பதை நிரூபித்து காற்றில் கலந்தன அந்த உன்னத உயிர்கள் இரண்டும்! தங்களது அருமை தங்கையின் முகமும், மூவர் உண்ட உணவும், வாழ்ந்த வாழ்க்கையும் அவர்கள் நினைவுகளிலிருந்து நீங்க நீங்க இறந்து கிடந்தனர் இருவரும்.

ஒரு சில நேரங்களில் இறைவனும் இரக்கமின்றிதான் இருந்து விடுகின்றான், இதுபோன்ற விலைமதிப்பற்ற இழப்புகளில்!

நீண்டநேரம் இறந்து கிடந்த அந்த அண்ணன்களைப் பார்க்க மதிய உணவுடன் அதோ வந்து கொண்டிருக்கிறாள் பாசமலர்த் தங்கை கடம்பாயி. கூந்தல் பனை சோலையை நெருங்க நெருங்க மாமரத்திற்கு அடியில் ஏதோ மனிதர்கள் விழுந்து கிடப்பது அறிந்து பதற்றத்துடன் ஓடி வந்தாள்! அங்கே அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது. அண்ணன்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவராக இறந்து கிடக்க கால்நடைகள் அனைத்தும் கண்ணீர் ததும்ப நின்றுகொண்டிருந்தன. பித்துப் பிடித்தவளாய் ஓடிச்சென்று அண்ணன்களின் தலைகளைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அழுது புலம்பினாள்.

ஒவ்வொரு அண்ணனின் பாசத்தையும் கதை கதையாய் கூறிய வனதேவதை போன்ற அவளது அழுகையை கண்டு பறவைகளும், வனவிலங்குகளும், மரங்களும் கூட கண்ணீர் வடித்தன. ”என் பாச அண்ணன்களே! நீங்க இல்லாத இந்த உலகத்தில நான் எப்படி இருப்பேன்? என் உயிர் போன்ற உங்களை நான் எப்படி பிரிவேன்? என்றும் இன்னும் பலவாறு கூறி அவள் கதறி அழுத கண்ணீருக்கு கல்லும் கரையும். இறுதியில் தானும் ரெங்கையா அண்ணன் வயிற்றில் இருந்த ஈட்டியை எடுத்து தனது வயிற்றில் குத்திக் கொண்டு அண்ணன்களோடு கலந்தாள் அந்த வரலாற்று சிறப்புமிக்க தங்கை.

இவ்வாறு மூவரும் இறந்து கிடப்பதை பார்த்த வானம் இடியோடு மின்னலை சேர்த்து அழத் தொடங்கியது யாருமற்ற அந்த காட்டில் வன தெய்வங்களும் கண்ணீர் சிந்தினர் அந்த மூவர் இறப்பிற்கு.! சூரியன் மேற்கில் மறைந்தும் வீட்டிற்கு வராத அண்ணன் தங்கை மூவரையும் ஊரே சேர்ந்து தேடிக் கண்டுபிடித்து கடைசியில் மூவரின் பாசத்தைக் கண்டும் மழையோடு மழையாக ஊர்மக்கள் அழுது தீர்த்தனர்.

மனிதர்களாய்ப் பிறந்து வாழ்ந்து வந்த அந்த மாண்டுபோன மனிதன் அம்பலக்காரர் கருப்பையா ‘பட்டவன்’ என்றும், அவருக்கு தம்பியாகவே வாழ்ந்துவந்த ஒடுக்கப்பட்ட சாதி ரெங்கையா ‘முன்னோடியான்’ என்றும் அந்த இரு அண்ணன்களின் பாசத் தங்கை கடம்பாயி, ‘கடம்பாயி அம்மனாகவும்’ கருப்பர் மற்றும் சன்னாசி தெய்வங்களுடன் இன்றும் புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, வத்தனாக்குறிச்சி கிராமம், ஓணான் குளத்தில் கூந்தல் பனை மாஞ்சோலையில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்!

வருடந்தோறும் தைப்பொங்கல் அன்று பச்சரிசி பொங்கல் படையல் போடப்பட்டு பட்டவனிடமிருந்து முன்னோடியானுக்கு பங்கு கொடுக்கப்படுகிறது. வத்தனாக்குறிச்சி கிராமத்தின் சத்தியத்தை காத்துவரும் தெய்வமான ஸ்ரீசுக்கில பிடாரி அம்மன் தன் பிள்ளைகளாக இத் தெய்வங்களை சேர்த்துக்கொண்டு அருள் வழங்கி வருகிறார்.

பட்டவன் உள்ளிட்ட ஐந்து தெய்வங்களும் தனது வம்சாவளியினருக்கு குல தெய்வங்களாகவும்,ஊர் மக்களுக்கு காவல் தெய்வங்களாகவும் இருந்து இன்றும் அருள் புரிந்து வருகிறார்கள்.

அப்பா கதையை கூறி முடித்ததும் எனது கண்ணில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. கூடியிருந்த அத்துனைபேர் முகங்களிலும் கவலை படந்திருந்தது.

தெய்வங்களின் பாச கதையில் மனிதர்கள் ஏதோ உண்மை உணர்ந்து கொண்டவர்களாய் சாதிய எண்ணம் சற்று குறைந்து, ஒற்றுமையோடு பொங்கல் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்ததை பார்த்த தெய்வங்கள் அனைவரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். சூரியனும் மழையின் மேகத்திலிருந்து வெளிப்பட்டு எங்கள் வாழ்க்கைக்கு வெளிச்சம் தருவதைப் போல் தெய்வங்களின் புன்னகையில் தானும் பூத்தான். தெய்வங்களின் புன்சிரிப்பை கண்ட நான் மட்டும் பெருமையோடும், பெருமிதத்தோடும், பக்திப் பெருக்கோடும் கண்ணீர் வழிய எங்கள் ஊரைக் காக்கும் எங்கள் குல தெய்வங்களை கையெடுத்து கும்பிட்டு நிற்கிறேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.