கதைகள்

“கனகர் கிராமம்” … தொடர் நாவல் …. அரங்கம் – 19 …. செங்கதிரோன்.

“பெரியவரே! நேத்துராவு நீங்க கதைக்கக்குள்ள உங்கட அண்ணன் முறையான ஒருவர் பைத்தியம் பிடிச்ச முஸ்லீம் பொம்புளைக்குக் காலால உதச்சோண்ண அவக்குப் பைத்தியம் தெளிஞ்சு போய்த்தெண்டும், உங்கட அண்ணனுக்கு இடுப்புக்குக் கீழ ரெண்டு காலும் நடக்க ஏலாதமாதிரி வழக்கமில்லாமப் போய்த்தெண்டும் புறகு ஏறாவூரில இருக்கிற கபுறடிக்குக் கொண்டுபோய் அங்கிருந்த கட்டயில காலவைச்சுப் புடிச்சு அவருக்குக் கால் சரிவந்த தெண்டும் ஒரு கத சொன்னனீங்க எலுவா?” என்றான் கோகுலன்.

“ஓம்! தம்பி நான் சொன்ன கதய நல்லா ஞாபகம் வச்சி சரியாச் சொல்றீங்க. அதுக்கென்ன தம்பி” என்றார் சாமித்தம்பி.

“இல்ல ஏன் அப்படியெல்லாம் நடந்த எண்டுதான் ஒண்டும் விளங்கல்ல” என்றான் கோகுலன். அவனோடு சேர்ந்து கதிரவேலும் “எனக்கும் விளங்கல்லதான்” என்றான்.

“தம்பிமாரே! அந்த முஸ்லிம் பொம்புளய்க்குள்ள துர்ஆத்மாகெட்டஆவியொண்டு பூந்துதான் அவளுக்குப் பைத்தியம் வந்த. என்ர அண்ணன் அவவுக்கு காலால உதச்சொன்ன அவளப் புடிச்சிருந்த ஆவி அவள உட்டுப் போட்டு அண்ணனுக்குள்ள தாவித்து. அதுதான் அவருக்குக் கால் வழக்கமில்லாமப் போன. புறகு என்னவோ அவண்ட மனதில ஒரு எண்ணம் தானாக வந்துதான் ஏறாவூர் ‘கபுறடி’க்குக் கொண்டுபோகச்சொன்னவன். துர்ஆத்மாவும் உடம்புக்குள்ள பூந்திருக்கிற ஒரு விஷம்தானே. அதுதான் விஷமிறக்கிற ‘அவுலியா’ட ‘கபுறடி’க் கட்டயில கால வச்சொன்ன அவனப் புடிச்சிருந்த அந்த கெட்டஆவி அவன உட்டுட்டு. இதுதான் அதிர விளக்கம்” என்றார் சாமித்தம்பி.

பெரியவர் சாமித்தம்பி கொடுத்த விளக்கம் அரைகுறையாகத்தான் கோகுலனுக்கும் கதிரவேலுக்கும் இருந்தது.

‘இத நம்பலாமா பெரியவர்’ என்று பவ்வியமாகக் கேட்டான் கோகுலன்.

“நம்பத்தானே வேணும் தம்பிமாரே! அந்தப் பைத்தியம் வந்து தெளிஞ்ச முஸ்லிம் பொம்புளயும் என்ர அண்ணணும் விஷமிறக்கிற ‘கபுறடி’யும் இப்பயும் இரிக்கத்தானே! அப்ப நாம எப்படிப் பொய் என்ர. கட்டுக்கதயெண்டா ஊராக்களுக்குத் தெரியும்தானே. ஊராக்களெல்லாம் அப்படி நடந்தெண்டுதானே சொல்றாங்க” என்று சாமித்தம்பி சொல்ல அதை மறுத்து ஒன்றும் சொல்லமுடியாத கோகுலனும் கதிரவேலும் அதற்கு மேல் அதைப்பற்றியொன்றும் கேட்கவில்லை.

முதல் நாளிரவைப்போல அன்றிரவு கதைகள் பெரிதாக நீளவில்லை. கதையை நிறுத்திவிட்டு உறக்கத்தை நாடினார்கள்.

நாவலடி ஒரு அடர்ந்த காட்டுப்பகுதி. அவர்கள் இராத்தங்கல் போட்ட இடத்திலிருந்தது சிறிய வைரவர் கோவிலொன்றுதான். அருகிலே மனித குடியாட்டங்கள் எதுவுமில்லை. சற்றுத் தூரத்திலென்றாலும்கூடத் தமிழ்க்குடியாட்டங்கள் எதுவுமில்லை. அப்படியிருந்தாலும் சிங்களக் குடியாட்டங்களாகத்தான் இருக்கும். அப்படியிருக்கும்போது அவ்விடத்தில் வைரவர் கோயிலொன்று எப்படி வந்ததென்று படுத்துக்கிடந்தபடியே கோகுலன் யோசிக்கலானான்.

சைவ சமயத்தவர்கள் வைரவரைக் ‘காவல் தெய்வம்’ ஆகவே வழிபடுகின்றனர். சகல சைவக் கோயில்களிலும் கோயிலின் நுழைவாயிலின் வலப்புறத்தில் உள்பக்கமாக வைரவர் சிலை வடிவில் வீற்றிருப்பார். கோயிலுக்குச் சென்று தரிசிப்பவர்கள் அனைவரும் ஏனைய தெய்வங்களையெல்லாம் வழிபட்டு நிறைவாகச் சூரிய, சந்திரர்களை வழிபட்ட பின்னர காவல் தெய்வமான வைரவரையும் வழிபட்டுத்தான் இறுதியாகச் சண்டேஸ்வரரை வழிபட்டுத் தங்கள் தரிசனத்தை முடித்துக் கோயிலிலிருந்து வெளியேறுவர்.

மட்டக்களப்பு மாநிலத்தில் நிலவும் சிறுதெய்வ வழிபாடுகளில் வைரவர் வழிபாடும் வழக்கிலுண்டு. சைவ சமயத்தவர்களின் ஒவ்வொருவருடைய வீட்டு முற்றத்திலும் ஓரமாகச் சிறுபந்தல் அமைத்து அப்பந்தலில் தரைமட்டத்திலிருந்து சுமார் ஐந்து அடி உயரத்தில் கிடையாக ஒரு தட்டியும் அமைத்து அதில் சூலமொன்றும் கருங்காலி மரப்பொல்லொன்றும் வைக்கப்பட்டிருக்கும். சூலமும் கருங்காலிப் பொல்லும் வைரவரின் ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன. இப்பந்தல் தென்னங்குருத்தோலையினால் சோடனை செய்யப்பட்டிருக்கும்.

வருடத்தில் ஒரு முறை ஒவ்வொருத்தர் வீட்டிலும் அனேகமாக மாரிப்போக (மகாபோகம்) வேளாண்மைச் செய்கையின் அறுவடை முடிந்த பின்னர் மாரியம்மனுக்குப் பொங்கல் பொங்கிப் படைத்து வழிபாடியற்றப்பெறும். இந்நிகழ்வை ‘சர்க்கரை அமுது கொடுத்தல்’ என்பார்கள். இச் சர்க்கரை அமுது நிகழ்வு பகல் வேளைகளில்தான் நடைபெறும். பகலில் சர்க்கரையமுது

நிகழ்வு முடிந்தபின் மாலை ஆறு மணிக்குப் பிறகு வைரவருக்குப் பூசை செய்து வழிபாடியற்றப்பெறும்.

‘கஞ்சா’ வை நன்கு மை போல அரைத்து அரிசி மாவுடன் சேர்த்துக் குழைத்து ‘ரொட்டி’ செய்து பச்சை நிறமான அந்த ரொட்டியுடன் ‘மொந்தன்’ வாழைப்பழமும் (மொந்தன் என்பது வாழைப்பழத்தின் ஒரு வகை) வைத்துப் படையல் செய்து இரவு வேளைகளில் வைரவர் பூசை நிகழ்த்தப்படும். வைரவர் சிலை இருக்காது. சூலமும் கருங்காலிப் பொல்லும்தான் பந்தலில்- பூசையில் வைக்கப்பட்டிருக்கும்.

இரவு வேளைகளில்தானே காவல் தேவை. அதனால் போலும், காவல்த் தெய்வமான வைரவருக்கான இப் பூசை வழிபாடு இரவு வேளைகளில் நிகழ்த்தப்படுகின்றன.

சிவபெருமானின் வாகனம் ‘காளை மாடு’ (இடபம்) போல-பிள்ளையாரின் வாகனம் ‘எலி’ (மூசிகம்)-முருகப்பெருமானின் வாகனம் ‘மயில்’ போல வைரவரின் வாகனம் ‘நாய்’ ஆகும். நாயும் வீட்டுக்குக் காவல்தானே.

பகலில் மாரியம்மன் பூசை இல்லாமல் அதாவது சர்க்கரை அமுது கொடுத்தல் நிகழ்வு நடைபெறாமல் இரவில் தனியே வைரவருக்குக் கஞ்சா ரொட்டியும் மொந்தன் வாழைப்பழமும் வைத்து பூசை செய்கின்ற வழக்கமும் உண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கிராமங்களில் சில வீடுகளில் வேளாண்மை வயல் அறுவடை முடிந்து புதிர் நெல் எடுத்து அரிசி தீட்டி முதலில் வைரவருக்குப் பொங்கிப் படைக்கும் பாரம்பரியமும் உண்டு. பயிர்களைக் காவல் காத்துத் தந்த காவல் தெய்வம் வைரவருக்கான நன்றி உவக்கும் படையல் அது போலும். சில வீடுகளில் வைரவருக்கான தெய்வம் ஆட்டிச் சடங்குகள் செய்து வழிபாடு செய்வதுமுண்டு. இதனை ‘ஆட்டுச் சடங்கு’ என்று அழைப்பர். இதன்போது தெய்வமாடுவரிடம் அண்டை அயல் வீடுகளிலுள்ள மக்கள் வந்து ‘கட்டு’க்கேட்பர். அதாவது தங்கள் வீடுகளில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் ஏதாவது பிரச்சனை அல்லது செய்வினை போன்றவற்றினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்துச் சாஸ்திரம் கேட்பர். இதைக் ‘கட்டுக் கேட்டல்’ என்பர். இதற்கான தீர்வை அந்தத் தெய்வமாடுபவர் கூறி அவர்களின் பிரச்சனையைத் தீர்த்து அல்லது வினையை விலக்கி வைப்பார் என்ற நம்பிக்கையுண்டு.

சைவசமயத்தவர்களிடம் நிலவும் பிள்ளையார் வழிபாடு பௌத்த சமயத்தவரிடையே ‘கணபதி தெய்யோ’ என்ற பெயரில் உண்டு. முருக வழிபாடு ‘ஸ்கந்த தெய்யோ’ ஆகப் பௌத்தவர்களிடையே பேணப்படுகிறது. திருமாலை ‘விஸ்ணு தெய்யோ’ என்று அழைத்து பௌத்தர்கள் வழிபடுகிறார்கள். அதேபோல் கண்ணகி வழிபாடு ‘பத்தினி தெய்யோ’ ஆகப் பௌத்த சமயத்தவர்களிடம் வழக்கிலுண்டு ஆனால் வைரவர் வழிபாடு பௌத்த சமயத்தவர்களிடம் பயிலப்படுவதில்லை. இந்தப்பின்புலத்தில் நாவலடியில் அமைந்துள்ள வைரவர் ஆலயம் கதிர்காம யாத்திரை செல்லும் சைவசமய யாத்திரீகர்களால்தான் தோற்றம் பெற்றிருக்கவேண்டுமென்று கோகுலன் ஊகித்தான்.

காடுகளுக்குள்ளால் நடந்தும் காடுகளுக்குள்ளேயே இரவில் தங்கியும் செல்லும் கதிர்காம யாத்திரீகர்கள் காவல் தெய்வமாகக் கருதப்படும் வைரவருக்குச்சிறு கோவிலொன்றை நாவலடியில் நிறுவியிருக்க வேண்டுமென்ற அனுமானத்திற்குக் கோகுலன் வந்தான். இவ்வாறான யோசனைகளில் ஆழ்ந்திருந்த கோகுலன் எப்போது அவனை உறக்கம் தழுவியது என்று தெரியாமலே கண்ணயர்ந்து போனான்.

மறுநாள் காலை வழமைபோல் அனைவரும் காலைக் கடன்களை முடித்து யாத்திரையைத் தொடர்ந்தார்கள்.

நாவலடியிலிருந்து பதினொரு கட்டைத் தூரத்திலுள்ள வியாழையாற்றை அடைவது என்ற தீர்மானத்துடன் யாத்திரை அணி நகரத் தொடங்கிற்று.

நாவலடியிலிருந்து வியாழயாற்றை நோக்கிப் பயணித்த யாத்திரை அணி இடையிலே பெரியவெட்டை (வெளி) யொன்றை எதிர்கொண்டது. அதுதான் ‘பாலையடிவெட்டை’ என்றார் சாமித்தம்பி.

பாலையடிவெட்டையில் கதிர்காம யாத்திரீகர்கள் பலர் கூடியிருந்தார்கள். யாத்திரீகர்கள் குழுக்களாக அங்கே வந்து சேர்ந்திருந்தார்கள். பல ஊர்களிலிருந்தும் வந்த அவர்கள் பரந்த அந்த வெளியில் ஆங்காங்கே குழுமியிருந்து சமையல் செய்பவர்களாகவும் தேனீர் தயாரிப்பில் ஈடுபடுபவர்களாகவும் காலைச்சாப்பாடு உண்பவர்களாகவும் தென்பட்டனர். சிலர் பாலையடிவெட்டையிலேயே இராத்தங்கல் போட்டு மறுநாள்தான் வியாழையாற்றுக்குச் செல்வது என்ற தீர்மானத்துடன் அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். இதைப் பார்க்கும்போது பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தில் இல்லங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி நடைபெறும் காட்சிதான் கோகுலனின் கட்புலனுக்குத் தெரிந்தது.

பாலையடிவெட்டையில் சற்று இளைப்பாறிச் செல்வது என்று தீர்மானித்துக் கோகுலனின் தாயாரும் கதிரவேலின் தாயாரும் இரு அடுப்புக்களை மூட்டி ஒன்றில் காலைச்சாப்பாட்டுக்குக்கென்று பொத்துவிலிலிருந்தே வாங்கி வந்திருந்த மரவெள்ளிக் கிழங்குகளைத் தோலுரித்துத் துண்டுகளாக வெட்டிப் பாத்திரமொன்றில் அவியப்போட்டார்கள். மற்ற அடுப்பில் தேனீர் தயாரிப்பதற்கென்று வெந்நீர் கொதிக்க வைத்தார்கள். அவித்த மரவெள்ளிக்கிழங்கைத் தேங்காய்ப் பூவோடு தொட்டுச் சாப்பிட்டால் ருசியாயிருக்கும் என்று கோகுலனின் தாயார் கூறக்கேட்ட சாமித்தம்பி திருவிலையையும் தேங்காயையும் அகன்ற வட்டவடிவான தட்டமொன்றையும் கேட்டு வாங்கிக் கொண்டு மரநிழலொன்றை நோக்கிச் சென்றார்.

அவித்த மரவெள்ளிக்கிழங்கைத் தேங்காய்ப்பூவுடன் தொட்டுச் சாப்பிட்டுத் தேனீரும் அருந்திக் காலைச்சாப்பாட்டை முடித்துக்கொண்டுக் கோகுலனின் தாயாரின் யாத்திரைஅணி பாலையடிவெட்டையை நீங்கிப் பயணத்தைத் தொடர்ந்தது.

வழியிலே பாதையின் இருமருங்கிலும் ஒருவகை முட்செடிகள் மலிந்து காணப்பட்டன. மூன்று நான்கு அடிக்குள்தான் அவற்றின் உயரமிருக்கும். செடியின் தண்டுகளிலே மிகவும் அரிதாகப் புளியம் இலையைப்போல சிறிய இலைகள் ஆங்காங்கே தென்பட்டன. ஆங்கில ‘V’ எழுத்துப்போல சுமார் ஒரு அங்குல நீளமான இருகூரான முட்கள் தண்டுகளில் முளைத்திருந்தன. ஈயத்தைக் காய்ச்சி முலாம்பூசியதைப்போல அம்முட்களின் நிறமிருந்தது. பழுப்பு நிறத்தண்டுகளில் ஈயநிறத்தில் முட்கள் முளைத்திருந்தமை கண்களுக்கு அழகாகக் காட்சியளித்தன.

இதைப்பார்த்த கோகுலனுக்கு உயிரியல் பாடம் படிக்கும்போது வரண்ட நிலத் தாவரங்களைப் பற்றிப் படித்தது நினைவில் எழுந்தது. இலைகள் அரிதாகவும் சிறிதாகவும் முட்கள் செறிந்தும் செடிகள் காணப்படுவது வரட்சியைத் தாங்கிக் கொள்ளும் வகையிலான ஒருவகை ‘இசைவாக்கம்’ என்று தான் படித்ததை நினைவு கூர்ந்து அதனைக் கதிரவேலுடன் பகிர்ந்தும் கொண்டான். அந்த முட்செடியை ‘வெள்ளிமுள்’ என அழைப்பார்களென்று கதிரவேல் கோகுலனுக்குக்கூற ‘ஓம்! தம்பி’ என்று பெரியவர் சாமித்தம்பியும் அதனை வழிமொழிந்தார்.

பயணத்தைத் தொடர்ந்த யாத்திரை அணி ‘கள்ளவியாழை’ என்ற இடத்தை அடைந்தது. அங்கு வழிமறிக்கும் சிற்றாறொன்றின் பெயரே கள்ளவியாழை என்பது. அந்தச் சிற்றாற்றின் பெயர் கொண்டே அந்த இடமும் அழைக்கப்படுகிறது. கள்ளவியாழை என்று அழைக்கப்படும் இச் சிற்றாறு ‘உப்பாறு’ என்றும் அழைக்கப்படுகிறது. கடலோடு தொடர்புடையதாய் இச்சிற்றாறு விளங்குவதால் இந்த ஆற்றுநீர் உப்புக்கரிக்கும் சுவையுடையதாய் இருக்கிறது. கிழக்குத் திசையில் சற்றுத்தூரத்தில் கடல் உள்ளது என்பதற்கு அடையாளமாகக் கடற்கரையோர மணல்மேடு கண்ணுக்குத் தென்பட்டது. மணல் மேட்டுக்கு அப்பால் கடல் இரையும் சத்தம் இலேசாகக் காதில் விழுந்தது. கதிர்காமத்தலமும் குமுக்கன் ஆற்றைக் கடந்தபின் கதிர்காமம் நோக்கிய பாதையும் இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்திருந்தாலும் இவ் உப்பாறு அமைந்துள்ள சிறு நிலப்பரப்பில் இலங்கையின் தென்மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை மாவட்டம் இடைவெட்டுகிறது.

உப்பாறு என அழைக்கப்படும் கள்ளவியாழை ஆற்றங்கரையோரம் பச்சைப்பசேலென்று கிண்ணமரங்கள் நெருக்கமாக ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வண்ணம் கிளைபரப்பி வளர்ந்து நின்றன. கைக்குள்ளே அடங்கும் குங்குமச் சிமிழ்போல காய்கள் நிறைந்ததாய்க் கிண்ணமரங்கள் மனதைக் கவர்ந்தன.

சாமித்தம்பி கிண்ண மரக்காட்டுக்குள் நுழைந்து இரண்டு கைகளிலும் கிண்ணம்பழங்கள் நிறைய வெளியே வந்தார். கொண்டு வந்த கிண்ணம்பழங்களை உள்ளங்கைகளுக்கிடையில் வைத்து நசித்து உள்ளிருந்த சதைப்பகுதிகளை விளாம்பழத்திலிருந்து அதன் உள்ளீட்டை வழித்து எடுப்பதுபோலக் கரண்டியால் வழித்துப் பாத்திரமொன்றில் இட்டுக் கொஞ்சம் சீனியும் விட்டுக் கரண்டியால் குழைத்தெடுத்து எல்லோருக்கும் பரிமாறினார். கிண்ணம்பழத்தின் தோல் மெல்லியதாகவும் பச்சை நிறத்திலும் இருந்தது. பழமானது கிண்ணம் போலிருப்பதனால் போலும் கிண்ணம்பழம் எனப் பெயர் வந்தது என்றும் கோகுலன் எண்ணிக் கொண்டான்.

புளிப்பும் இனிப்பும் கலந்து வெண்ணிறமாகவும் உள்ளே நெருநெரென்ற சிறு விதைகளோடும் இருந்த கிண்ணம்பழத்தின் சதைப்பகுதி விளாம்பழம்போலேதான் சுவைத்தது.

கிண்ணம்பழத்தைச் சுவைத்துக்கொண்டே பெரியவர் சாமித்தம்பி “மூல வியாதிக்காரர்களுக்குக் கிண்ணம்பழம் நல்ல சாமான் தம்பி” என்று கோகுலனையும் கதிரவேலையும் பார்த்துக் கூறினார்.

பெரியவர் சாமித்தம்பி கூறியதைக் கேட்ட கோகுலன் ‘பசி தீர்க்கும் உணவே நோய் தீர்க்கும் மருந்து’ என்ற கூற்றினை எண்ணிப் பார்த்தான்.

இயற்கையின் படைப்புகள் யாவுமே ஓர் இலக்குடன்தான் – நோக்கத்துடன்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. முழுவதும் கண்களுக்குப் புலப்படாவிட்டாலும்கூட அறிவால் உணரக்கூடிய பிரபஞ்சத்தையும் எண்ணிப் பார்த்தான். இந்தப் பிரபஞ்சம் எத்தனை வியப்பானது. இயற்கையும் அந்த இயற்கையைப் படைத்த இறைவனின் படைப்பு மர்மத்தையும் எண்ணிக் கோகுலன் வியந்தான். அந்தப் படைப்பு மர்மம்தான் கண்களால் காணமுடியாத ஆனால் உணரக்கூடிய இறை சக்தியை நம்ப வைக்கின்றது.

பாடசாலையில் முதலாம் ஆண்டு பயிலும்போது ‘பாலபோதினி’ப் பாடப் புத்தகத்தில் படித்த

கத்தரிச் செடியே! ஏன் வளர்ந்தாய்?

காயும் கறியும் தர வளர்ந்தேன்!

பூசணிச் செடியே! ஏன் வளர்ந்தாய்?

பூவும் பிஞ்சும் தர வளர்ந்தேன்!

மனிதா! மனிதா! ஏன் வளர்ந்தாய்?

வளர்ந்ததைத் தின்ன நான் வளர்ந்தேன்!”

என்ற சிறுவர் பாடல் வரிகளும் கோகுலனின் சிந்தனைப் பொறியில்பட்டுத் தெறித்தன.

கிண்ணம்பழத்தைச் சுவைத்த கையோடு எல்லோரும் பயணத்தைத் தொடர ஆயத்தமானார்கள்.

யாத்திரை அணி அன்று பின்னேரம் ‘பெரியவியாழை’ என்று அழைக்கப்பெறும் வியாழை ஆற்றை அடைந்தது. இந்த இடமும் ஆற்றின் பெயர் கொண்டே ‘வியாழை’ என்று அழைக்கப்படுகிறது.

வியாழை ஆற்றில் ஆங்காங்கே மணல் வார்த்தும் அந்த மணல் வார்த்துக் கிடந்த மணல் திட்டுகளுக்கு இடையே மலைப்பாம்புகள் நெளிவதுபோல நீரோடைகளும் நிலம் கிழித்து ஓடிக்கொண்டிருந்தன.

எறும்பு ஊர்வதுபோல வரிசையாகவும் குழுக்களாகவும் அங்கு வந்து சேரத்தொடங்கிய யாத்திரீகர் அணிகளும் கோகுலனின் தாயாரின் யாத்திரைஅணியுடன் வியாழை ஆற்றில் இராத்தங்கல் போடுவதற்குரிய பூர்வாங்க வேலைகளைத் தொடங்கினார்கள்.

விறகுகள் பொறுக்கிவந்து சமையலுக்கான அடுப்புகள் மூட்டுவதிலும் இரவில் எரிவதற்கான ‘தீனா’ ப் போடுவதிலும் ஆண்கள் பலர் ஓடியாடித் திரிந்தார்கள். பெண்கள் சமையல் வேலைகளை ஆரம்பிப்பதற்கான அடுக்குகளைப் பண்ணினார்கள்.

மரங்கள் அடர்ந்ததாய் வியாழை குளுகுளுவென்று இராத்தங்கலுக்கு ஏற்றதாய் இயற்கையோடொட்டி அமைந்திருந்தது. ஆற்றில் மணல் வார்த்திருந்த இடங்கள் படுத்துக்கிடப்பதற்கு மென்மையாக மெத்தை போலிருந்தன.

இராப்பொழுதை வியாழை ஆற்றில் கழித்த யாத்திரை அணி மறுநாள் காலை வள்ளியம்மை ஆறு நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தது.

வியாழையிலிருந்து வள்ளியம்மைஆறு நோக்கிப் புறப்படுமுன் வியாழையில் காட்டுக் கொத்துகளால் பந்தலிடப்பட்டு அதன் கீழ் நடப்பட்டிந்த ‘வேல்’ இற்குப் பூசை செய்துவிட்டே யாத்திரைஅணி புறப்பட்டது.

வியாழையிலிருந்து வள்ளியம்மை ஆறு எட்டுக்கட்டைத் தூரமாகும். வழிநெடுகிலும் அடர்ந்த காடாகும். போகும் வழியில் பலவிதமான காட்டுப்பறவைகளும் யானை, சிறுத்தை, கரடி, மான், மரை போன்ற காட்டு மிருகங்களும் அவ்வப்போது பாதையில் குறுக்கிட்டன அல்லது சற்றுத்தூரத்தில் காடுகளுக்குள்ளே தென்பட்டன.

வரிசையாக ஒருவர் பின் ஒருவராகச் செல்லும் கதிர்காம யாத்தீரிகர்களைக் கண்டு உற்றுப்பார்த்த அம்மிருகங்கள் யாவும் யாத்திரீகர்களுக்கு எந்த இடர்களும் விளைவிக்காது தானுண்டு தன்வேலையுண்டு என்றவாறு அமைதியாக விலகிச் சென்றன. உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் ஒருத்தருக்கு ஒருத்தர் எந்த இடரும் விளைவிக்காது இந்தக் காட்டு மிருகங்களைப் போல் தானுண்டு தன் வேலையுண்டென்று இருந்தால் உலகில் சாந்தியும் சமாதானமும் அமைதியும் தானாகவே உண்டாகும் எனக் கோகுலன் தனக்குள்ளே எண்ணினான்.

அடர்ந்த காட்டுப்பாதை வெயில்படாது குளுமையாக இருந்ததால் கால்நடைப்பயணம் களைப்பில்லாமல் இருந்தது. இடையிலே கண்ணில்பட்ட வியாழை ஆற்றின் ஆழமான பகுதிகளில் முதலைகள் நீந்திச் செல்வதையும் காணக்கூடியதாயிருந்தது.

(தொடரும் …… அங்கம் – 20)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.