“பூங்கோதைக்கும் கற்பு உண்டு” ….சிறுகதை – 56 …. அண்டனூர் சுரா.
ஆப்பிள் 2+ நிர்வாக மேலாளர் திரு யாகூகன் அவர்களுக்கு!
நான் ஆப்பிள் 2 + நிறுவன நீண்ட கால வாடிக்கையாளன். இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு வருட கால ஒப்பந்தத்தின் கீழ் பூங்கோதை என்கிற செவிலியைப் பத்து இலட்சம் உரூபாய் முன்பணம் செலுத்தி, பணிப்பெண்ணாக வீட்டில் அமர்த்திக் கொண்டேன்.
அவள் என் வீட்டுக்கு வந்த முதல் நாள், என் குடும்ப உறவினர்களுக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தேன். அனைவருக்கும் பூங்கோதை பிடித்துபோயிருந்தாள். அவளது கிரகணத்திலிருந்து விடுபட்ட முழுநிலவு முகம், மேகமாக தழுவிய கூந்தல்,…என் உறவினர்களுக்குப் பிடித்துப்போயிருந்தது. அவர்களுக்கு அவள் வைத்த குனிந்து நிமிர்ந்த வணக்கம், முகம் சுருங்காத முன் உதட்டுச் சிரிப்பால் என் வீடு ஆனந்தமயம் கண்டது. தானொரு அழகி என்கிற அகங்காரமோ தன்னைப் பலரும் புகழ்கிறார்கள் என்கிற அகந்தையோ அவளிடம் மருந்துக்கும் இல்லை.
அவள் என் வீட்டுக்கு வந்த மூன்றாம் நாள் அவளது வேலையைத் தொடங்கினாள். குசினி எங்கே இருக்கிறது என்று கேட்டாள், காட்டிவிட்டேன். பெண் இல்லாத வீடு என்பதால் அறை குப்பை, தூசி, ஒட்டடையாக இருந்தது. அதற்காக அவள் முகம் சுழிக்கவில்லை. அறையைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். எரிவாயுக்குப் பதிலாக மின்சார அடுப்பு கேட்டாள். அவள் கேட்டதன்படியே அதை நான் வாங்கிக் கொடுத்தேன். நின்றுகொண்டு சமைக்க, சமையல் மேடையை அவள் உயரத்திற்கு உயர்த்திக் கேட்டாள். அறையை மாற்றி அமைத்துக் கொடுத்தேன். சமையல் செய்வதற்கான பொருட்களை அக்மார்க் இலட்சனையுடன் கேட்டாள். அதற்கு நான் மறுப்புத் தெரிவிக்கவில்லை. வீடு தேடி வரும் காய்கறி, பழங்களை அவளே பொறுக்கினாள். புள்ளி அளவில் அழுகிப் போயிருக்கும் காய்கறிகளை வெளியே விட்டெறிந்தாள். பழங்களும் அப்படித்தான். இப்படியாக அவள் ஏற்படுத்திய
நஷ்டம் மிக அதிகம். அதற்காக நான் வருத்தப்படவோ, நஷ்டஈடு கேட்கவோ இல்லை.
வாசிங் மிஷினில் மட்டுமே துவைக்கத் தெரியும் என்றாள். அவள் சொன்ன கம்பெனியில், அவள் கேட்ட விலையில் வாங்கி வைத்தேன். என் துணிகளைத் துவைத்து, காய வைத்து, இஸ்திரிசெய்து அடுக்கி வைத்தாள். வாரத்தின் முதல்நாள் திங்கட்கிழமை நீலநிற ஆடை அணிந்து அலுவலகத்திற்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதாவது மேலாடை நீலம், கீழாடை சந்தனம். ஆனால் பூங்கோதை வெள்ளை ஆடைக்கு என்னை மாற்றினாள். நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. அவள் சொன்னதன்படியே அவள் முன்மொழிந்த ஆடையை அணிந்துகொண்டேன். என் அலுவலக சக ஊழியர்கள் என் ஆடை மாற்றத்தைக் கண்டு கேலி செய்தார்கள். பூங்கோதைக்காக அதையும் நான் பொறுத்துக் கொண்டேன்.
எனக்கு பிடித்த உணவு அசைவம்தான். குறிப்பாக செங்கழனி மீன். வாரத்திற்கு இரண்டு நாள் சிக்கின் வறுவல். பூங்கோதை என் விருப்பதை ஏற்கவில்லை. சைவம் மட்டுமே சமைப்பேன் என்று உறுதிபட சொல்லிவிட்டாள். அவளது மறுப்பு என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம் கேட்டேன். என் இரத்தத்தில் சக்கரை, கொழுப்பின் அளவு கூடுதலாக இருக்கிறது என்றாள். இரத்தஅழுத்தம் சீரான நிலையில் இல்லையென்பதால் சைவம் மட்டுமே சாப்பிட வேண்டும் என்றாள். அவள் என் நலம் மீது காட்டிய பிரியத்தின் பேரில் அவளிடம் நான் முரண்டு பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் எனது உணவு கலாச்சாரத்தை மாற்றிக்கொண்டேன்.
வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் யாருக்கும் உரிய சம்பளம் கொடுத்துவிட வேண்டும் என்கிற சர்வதேச சட்டத்தில் அவள் உறுதியாக இருந்தாள். அந்தச் சட்டத்தின்மீது எந்த வகையிலும் நான் குறுக்கீடவில்லை. என்னுடைய ரேசன் கார்டு, பல வங்கி எடிஎம், பேன் கார்டு, இன்சூரன்ஸ்,… என இத்தனையும் ஒரே கார்டு ஆனதற்குப் பிறகு அந்தக் கார்டையும் அவளிடமே கொடுத்துவிட்டேன். அதிலிருந்து அவளுக்குரிய சம்பளத்தை அவள் எடுத்துக்கொண்டாள்.
எங்கள் இருவருக்குமிடையேயான ஒப்பந்தத்தின்படியே அவள் எனக்கு பணிவிடை செய்துவந்தாள். காலையில் நான் குளிக்கையில் என் முதுகை தேய்த்துவிட்டாள். ஷுக்கு பாலிஸ் இட்டாள். அவளே அதை அணிந்துவிடவும்
செய்தாள். அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் என் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்துவிட்டாள். என் மனநிலையைப் புரிந்துகொண்டு டீ, காஃபி ஆற்றிவந்து கொடுத்தாள். நான் செய்தித்தாள் வாசிக்கையில் சற்றும் கூச்சமில்லாமல் என் கால்களைப் பிடித்துவிட்டாள். அதற்காக நான் ஒரு நாளும் அவளுக்கு நன்றி சொல்லாமல் இருந்ததில்லை.
பூங்கோதை மீத்திறமிக்க அறிவுப் பெண், அதை நான் மறுக்கவில்லை. அவளிடம் ஏதேனும் சந்தேகம் கேட்டால் முடிந்தளவு அவளது அறிவைப் பயன்படுத்தி என் சந்தேகத்தைப் போக்கவே செய்தாள். பூங்கோதை நல்ல குரல் வளமிக்க பெண். அனிருத் இசையில் சுசிலா குரலில் பாடச் சொல்லிக் கேட்டால், பாடுவது சுசிலாவா பூங்கோதையா என்றே தெரியாது. அவரது குரலில் அத்தனை சுதியோடு பாடி அசத்திவிடுகிறவள். என்னைத் தூங்க வைக்கும் பாடல்கள் என்னன்னவென்று அவளுக்குத் தெரிந்திருந்தன.
வீடு வாசலை அத்தனை சுத்தமாக வைத்திருந்தாள். மேற்க்கூரையில் ஒரு நூலாம்படை இல்லை. வீட்டிற்குள் ஒரு கரப்பான்பூச்சி, பல்லி, எறும்பு, எலி, கரையான் எதையும் அவள் அனுமதித்ததில்லை. அதற்காக இப்பொழுதும் அவளை நான் பாராட்டவே செய்கிறேன். கையுறை அணிந்துகொண்டே சமைத்தாள். அவளது கூந்தலிலிருந்து ஒரு முடி கீழே உதிர்ந்தது கிடையாது.
நான் நினைத்ததைப் போலவும், விரும்பியபடியும் நடந்துகொண்டவள்தான் இந்த பூங்கோதை. நேற்றைய இரவு, அதாவது மே1, சரியாக 10.15 மணி, அவள் என்ன நினைத்தாளோ இனி நான் உனக்கு பணிவிடை செய்யப்போவதில்லை என்று சொல்லிவிட்டாள். நான் அவளிடம் எப்படியெல்லாமோ கெஞ்சிப் பார்த்தேன். எனது அன்பை அவள் சற்றும் பொருட்படுத்தவில்லை. ஏன் என்று கேட்டதற்கு வேலை நிறுத்தம் செய்கிறேன் என்றுவிட்டாள். இதுதான் அவள் என்னிடம் கடைசியாகப் பேசியது. அதற்குப் பிறகு மவுனப் பெண்ணாகி விட்டாள்.
அவளது பணிவிடையில் கிரங்கிப் போயிருந்த நான், இப்போது அவள் இல்லாத பொழுதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒரு வாரம் காத்திருந்து பார்த்தேன். அவள் சமைக்கவோ, என்னை அலுவலகத்திற்கு வழியனுப்பவோ முன்வரவில்லை. நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன்.
பூங்கோதை எனக்கு ஏற்ற பணிப்பெண் அல்ல. அவளைக் கொண்டு என்னை ஏமாற்றியிருக்கிறீர்கள். அவள் வழியே என்னிடமிருந்து ஐம்பது இலட்சம் உரூபாய் மோசடி செய்திருக்கிறீர்கள். இதுதவிர அவளுக்கான பத்து மாத ஊதியம் முன் கூட்டியே பெற்றிருக்கிறீர்கள். இவை யாவும் உலக பணியாளர் சட்டத்தின் படி குற்றமே! உங்கள் மீது நான் உலக பணியாளர் சட்டம் – 2048 , 17(ஏ) இன் படி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன். இப்படியாக நான் வழக்கு தொடர்ந்தால் நீங்கள் எனக்கு பத்துக்கோடி டாலர் அளவிற்கு நஷ்டஈடு தர வேண்டி இருக்கும்.
இப்படியாக நான் உங்கள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தால், உங்கள் நிறுவனத்தின் பெயர் மக்கள் மத்தியில் அவப்பெயரைச் சந்திக்கும். திரு யாகூளன் அவர்கள், நிறுவன மேலாளர் என்பதைத் தாண்டி, நீண்டகால என் நண்பர் என்பதால் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். இதுவே என் புகார் கடிதம். இக்கடிதம் கிடைத்த ஒரு வாரத்திற்குள் என் குற்றச்சாட்டுக்கு உரிய பதிலளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பிட்ட காலத்திற்குள் உங்களிடமிருந்து பதில் வராதப்பட்சத்தில் நான் சர்வதேச நீதிமன்றத்தை நாடியிருப்பேன். அப்படியாக நாடியதன் பிறகு எக்காரணம்கொண்டும் தொடர்ந்த வழக்கை நான் திரும்பப் பெற மாட்டேன் என்பதை இக்கடிதம் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தக்க பதிலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்
கூகுளன்
#####
வாடிக்கையாளர் திரு. கூகுளன் அவர்களுக்கு ….
பூங்கோதையை உங்களுக்குச் சிபாரிசு செய்தவன் என்கிற முறையில் உங்களிடம் பகீரங்க மன்னிப்பு கோருகிறேன். என் மன்னிப்பை நண்பர் என்கிற முறையில் ஏற்க வேண்டுகிறேன். இப்படியாக நான் மன்னிப்பு கோருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் நிறுவன எதிர்காலத்தை எண்ணி, நேரடியாக சர்வதேச நீதிமன்றம் செல்லாமல், இப்படியாக கடிதம் எழுதியமைக்காக எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்கள் நிறுவன பணிப்பெண்களில் மிகவும் அழகானவள், அறிவுக் கூர்மையானவள் பூங்கோதைதான். எங்களிடம் பல தேசத்து பெண்கள் இருக்கிறார்கள். இவளை விடவும் அழகான பெண்களும் இருக்கிறாள். ஆனால் பூங்கோதையின் சிறப்பு அவள் தமிழ்ப்பெண். தமிழ்மொழியுடன் தமிழ்க்குடும்ப மொழிகளையும் பேசக்கூடியவள். ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் நன்கு தேர்ந்தவள். நல்ல சுறுசுறுப்பானவள். மற்றப் பெண்களை போல நவீன ஆடைகளை அவள் அணிபவள் அல்ல. அவளது விருப்ப ஆடை சேலைதான். அவளது தலை மயிர்களை கத்தரிக்க அவள் அனுமதித்ததில்லை. ஒற்றைச் சட்டையாக பின்னி பிட்டம் வரைக்குமாகவோ அல்லது அள்ளி கோடாலி கொண்டையாகவே போட்டுக்கொள்ளவே விரும்புகிறவள்.
பிட்டம் பெருத்து, குறுக்குச் சிறுத்து இருப்பதை தனக்கான அடையாளமாக நினைக்கிறவள். அவளது முகமெட்டு, உதட்டு மச்சம், நேர் உச்சி வகிடு, பெருத்த மார்பு,.. எல்லாம் அவளுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. நல்ல குரல் வளத்திற்கு அவளேதான் காரணம். தொப்புள் தெரிய சேலைக் கட்டுவதையோ, மாராப்பு விலகுவதையோ அவள் ஒரு காலமும் அனுமதித்ததில்லை. ஆடை என்பது உடலை மறைக்கும் உடை, என பலர் நினைத்திருப்பதற்கு மாறாக உடம்பைப் பராமரிக்கும் கவசமாகவே ஆடையை அவள் பாவித்தாள். அவளது முகத்தில் எந்நேரமும் சிரிப்பு பூத்துக்கிடக்கும். பணிவிடை செய்கையில் அவளது முகம் ஒரு காலமும் மாறியதில்லை. எங்கள் நிறுவன பணிப்பெண்களுக்கு அவள்தான் முன்மாதிரியானவள். யாரையும் அவள் திரு அல்லது மிஸ்டர் இல்லாமல் இதுநாள் வரை அழைத்ததில்லை,… என்பதை இந்நேரத்தில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அவளது திடீர் வேலை நிறுத்தம் அதுவும் மே1 உலகத் தொழிலாளர் தினத்தன்று, அவளது வேலை நிறுத்தம் உங்களைப் போன்று என்னையும் அதிர்ச்சியில் ஆழ்த்தவே செய்கிறது. மேலும் அவள் எதுவும் பேசாமல் மௌனவிரதம் கடைப்பிடிப்பதை என்னால் நம்பமுடியவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு இத்தனை ஆண்டுகாலம் பெருமை சேர்த்த பூங்கோதை, இப்படியாக நடந்துகொள்வது, எனக்கு மட்டுமல்ல எங்கள் நிறுவன ஊழியர் பலரையும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. உங்களது புகார் கடிதத்தை ஏற்று அவளை திரும்ப அழைத்துக்கொள்ள முன்வந்துள்ளோம் என்பதை இந்நேரத்தில் உங்களுக்குத்
தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் விரும்பினால் அவளுக்குப் பதிலாக வேறொரு பணிப்பெண்ணை அழைத்துச் செல்லலாம்.
எங்களிடம் பல தேசத்து பணிப்பெண்கள் இருக்கிறார்கள். நீங்கள் எங்கள் நிறுவனத்திற்கு நேரில் வந்து, அவர்களிடம் நன்கு பழகி உங்களுக்குப் பிடித்த பணிப்பெண்ணைத் தேர்வு செய்துகொள்ளலாம். வேறொரு பணிப்பெண்ணைத் தேர்வு செய்வதில் விருப்பமில்லையென்றால், நீங்கள் கோரும் நஷ்டத்தொகையை மனமுகந்து தர முன்வந்துள்ளோம் என்பதை ஆப்பிள்2+ நிறுவன மேலாளர் என்கிற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன். காரணம் எங்களுக்கு வாடிக்கையாளர்களின் திருப்தி முக்கியம்.
பூங்கோதை பற்றியும் அவளது பணி குறித்தும் ஒப்பந்தம் குறித்தும் கையேடாக கொடுத்த எங்கள் நிறுவனம் ஒரே ஒரு குறிப்பை உங்கள் மீதான நல்ல எண்ணத்தின் அடிப்படையில் சொல்லாமல் விட்டிருந்தோம். அதை இப்பொழுது உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
பூங்கோதை உலகத் தரச்சான்று பெற்ற பெண் ரோபோ. தமிழ்க் கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இயந்திரம். எங்கள் நிறுவனம் உருவாக்கிய மற்ற ரோபோக்களின் மென்பொருட்கள் மற்றும் மின் சாதனங்களைத் தலையிலும் பாதங்களிலும் பொருத்தியிருந்தோம். தமிழ்ப்பெண்ணான பூங்கோதையின் மின்சாதனங்களை அவளது அந்தரங்க உறுப்புகளில் பொருத்தியிருந்தோம். இதை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை. மென்பொருளின் பாதுகாப்பு கருதியே இதை நாங்கள் செய்திருந்தோம். அவளை இயக்கும் சாவியும் கட்டளை உத்தரவுகளும் எங்களிடம் உள்ளன. எங்கள் உத்தரவு இல்லாமல் பூங்கோதை தன் அன்றாட வேலையை நிறுத்திக்கொள்ள நூறு விழுக்காடு வாய்ப்பில்லை. அவள் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்வதற்கு முன்பு, எங்களுக்குச் சமிக்ஞை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படியான சமிக்ஞை இந்நேரத்து வரைக்கும் எங்களை வந்தடையவில்லை.
பூங்கோதை தன் அன்றாட பணியைச் சட்டென நிறுத்திக்கொள்ள இரண்டு வாய்ப்புகள் உண்டு. அந்த இரண்டு வாய்ப்புகளையும் உங்களுக்கு நான் தெரியப்படுத்த விரும்புகிறேன். பூங்கோதையின் அந்தரங்க உறுப்புகளை உங்களது கண் கூர்ந்து கவனிக்கும் வேலையை செய்திருந்தாலோ அல்லது அவளது ஆடையைக் கலைக்கும்
முயற்சியில் இறங்கியிருந்தாலோ பூங்கோதை மெல்லத் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டிருப்பாள். அப்படியாக நிறுத்துகையில் எங்களுக்கு அவள் தகவல் கொடுத்ததன் பிறகே இயக்கத்தை நிறுத்தியிருப்பாள். ஆனால் அப்படியாகத் தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை.
மற்றொன்று, அவளது அந்தரங்க உறுப்பை யாரேனும் தொட்டால் ரோபோவின் இயக்கம் சட்டென நின்றுவிடும்படியாக நாங்கள் உருவாக்கியிருந்தோம். அப்படியான முயற்சி நடந்தேறும் பட்சத்தில், அவள் எங்களுக்கு எந்தவொரு தகவலும் கொடுக்காமல் அவளே இயக்கத்தை நிறுத்திக்கொள்ள நூறு விழுக்காடு வாய்ப்புண்டு.
அத்தகைய அத்துமீறல் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஒரு வேளை அப்படியான முயற்சியில் நீங்கள் இறங்கியிருந்தால் உங்களது முயற்சி வீடியோவாக பூங்கோதையின் கண்களில் பதிந்திருக்கவே செய்யும். அப்படியாக பதிவாகும் பட்சத்தில், நீங்கள் குறிப்பட்ட அதே சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட பூங்கோதை சட்ட உரிமை கொண்டவள்.
இந்த இரண்டு வாய்ப்புகளைத் தவிர பூங்கோதை தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ள எந்த வகையிலும் வாய்ப்பு இல்லை என்பதை இந்நேரத்தில் உறுதிபட சொல்லிக்கொள்கிறேன். இந்தத் தபால் கிடைத்த ஒரு வாரத்திற்குள் அதாவது 31.04.2050 அன்றைய நாளின் ஐந்து மணிக்குள் உங்களிடமிருந்து தக்கப் பதில் எதிர்பார்க்கிறேன். உங்களிடமிருந்து பதில் வராதப்பட்சத்தில் உலக ரோபோ சட்டம் 2049, பெண் ரோபோக்களின் பாதுகாப்புச் சட்டம் – 2049 ஷரத்து 22(பி) இன் படி உங்கள்மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்படும் என்பதை இக்கடிதத்தின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் எழுதிய ஒரு கடிதத்தின் ஓரிடத்தில் பூங்கோதையை அஃறிணை பொருளில் எழுதியிருக்கிறீர்கள். அதற்காக என் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூங்கோதை இயந்திரமாகவே இருக்கலாம். ஆனாலும் அவளுக்கு கற்பு என்கிற ஒன்று உண்டு.
விரைவான பதிலை எதிர்பார்க்கும்
யாகூகன்.
ஆப்பிள் 2+ நிறுவன மேலாளர்
உங்கள் மனதில் ஒரு பெண்ணிடம் என்னவெல்லாம் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டிர்களோ, அதையெல்லாம் ” பூங்கோதை ‘ ரோபாட்டாக படைத்துவிட்டீர்கள்.
அது வேலை செய்யாமல் போனதற்கு உங்கள் மனதில் இருந்த வக்கிரமே காரணம்.அது சரி உங்களுக்கு மனைவி என்று ஒருவர் இல்லையா ?