கட்டுரைகள்

“வலிசுமந்த” சகமனிதரை ஏமாற்ற வருகின்றனரா?…. நியூசிலாந்து சிற்சபேசன்.

சிங்கள-பெளத்த பேரினவாத மேலாண்மையும், அதனுடைய விளைவாக எழுந்த தமிழரின் சுதந்திர வேட்கையும், இலங்கைத்தீவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கல்வியில் தரப்படுத்தல், இனகலவரம் என ஒவ்வொரு நகர்வும் தமிழரின் சுதந்திர வேட்கையைத் தணியாத தாகமாக்கின. இனக்கலவரங்களின் நேரடி விளைவுகளிலே, புலம்பெயர்வு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகியது. 1983 இனக்கலவரம் புலம்பெயர்வின் முக்கியமான மைல்கல் சம்பவமாகியது. பெருமெடுப்பில் புலம்பெயர்வு ஆரம்பமாகியது.

இவ்வாறாகப் புலம்பெயர்ந்தோர் பயணஞ்செய்த பாதையெங்கும் ரோசாப்பூ இதழ்கள் சொரிந்து இருக்கவில்லை. கரடுமுரடாகவே இருந்தது. முதலைகள் நிறைந்த குளங்கள் இருந்தன. ஏற்ற இறக்கங்களுக்குப் பஞ்சம் இருக்கவில்லை.

ஆனாலும்கூட, சமத்துவமான மேற்கத்தியச் சூழலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாய்ப்புக்களை பயன்படுத்தி வளம்பெற்றனர். கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது.  அதனால், கடந்த நான்கு சகாப்தங்களிலே, புலத்திலே நிலைப்பட்டுள்ளனர் என, பெருவெட்டிலேயேனும், சொல்லலாம்.

அவ்வாறாக, புலத்திலே நிலைப்பட்ட தமிழர்களை மூன்று வகையாக பார்க்கலாம்.

முதலாவது வகையினர், தமிழ் அடையாளங்களில் இருந்து விலகத் தொடங்கிவிட்டனர். தாயகத்துடனான தொடர்புகளை இழக்க ஆரம்பித்துவிட்டனர் என்று சொல்லலாம்.

இரண்டாவது வகையினர், தமிழ் அடையாளங்களைத் தக்க வைத்திருக்கின்றனர். புலத்தின் சூழலோடு இயைந்து, அடுத்த தலைமுறைக்கு, அடையாளங்களைக் கடத்துகின்றனர். தாயகத்துடன் இயல்பான தொடர்புகளைக் கொண்டிருக்கின்றனர். தாயகத்தில், பிறிதொருவரைக் கைதூக்கி விடுகின்ற பணிகளை காதும்காதும் வைத்தாற்போல் செய்கின்றனர். “வலதுகை கொடுப்பது, இடதுகைக்குக் கூடத் தெரியக்கூடாது” என்னும் பேச்சுவழக்குச் சொல்லாடலை தாரக மந்திரமாக கொண்டு செயல்படுகின்றனர்.

இந்த இரண்டுவகையினரையும், தாயகத்தின் பொதுவெளியில் அதிகம் அறியப்படாத புலம்பெயர்ந்தோர் என்று சொல்லலாம்.

மூன்றாவது வகையினரை, “அர்த்தராத்திரியில் குடைபிடிக்கும்” வகையறா என்று தயக்கமின்றி வகைப்படுத்தலாம். இவர்கள் தமிழ் அடையாளங்களைக் கொண்டிருகின்றனரா?, புலத்தில் ஆழமாக காலூன்றி உள்ளனரா?,

தாயகத்தில் ஆழமான பற்றுக் கொண்டவர்களா? என்பவையெல்லாம் விடைதெரியாத கேள்விகளாகவே காணப்படுகின்றன. இவர்களிடம் ஒற்றைப்படையான அணுகுமுறையைக் காணமுடிவதில்லை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்பவராகவே காணப்படுகின்றனர்.

ஒவ்வொரு சூழலுக்கும் பொருந்துகின்ற வகையில் “திடீர்” அவதாரங்களை எடுக்கக்கூடியவர்களாகத் தெரிகின்றனர். அதனால், தெளிவான சுயஅடையாளத்தைக் கொண்டிருப்பதில்லை.

இந்த மூன்றாவது வகையினரிடமே, அதிக அலப்பாறைகளைக் காணலாம். பொதுவெளியில் கவனத்தைப் பெறுவதில் அக்கறை கொண்டவர்கள்.

தீவிர தமிழ் அடையாளத்தைக் காட்டுவார்கள். தீவிர மதப்பற்றுள்ளவராக அல்லது, மதக் காவலராக நடமாடுவார்கள். தீடிரென, மேற்கத்தைய கனவான் வேஷத்துடன் வெளிப்படுவார்கள். ஆக, சுழலுக்கு ஏற்ப அடையாளத்தை மாற்றிக்கொள்வார்கள்.

ஏதோவொருவகையில், மீட்பர்களாக அடையாளப்பட பகீரதப்பிராயதனங்களை மேற்கொள்வார்கள். எந்தவகையிலேனும் தம்மை நிலைநிறுத்த, வெளிப்படையாகவே அவசரப்படுவார்கள். அதனால், சிலவேளைகளில் கோமாளித்தனமாகவும் தெரிவார்கள்.

இவர்களே, தாயகத்தின் அரசியல், சமயம், சமூகம் எனப் பல்வேறு தளங்களில் தடாலடியான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். உள்ளூர் அபிலாசைகள் தொடர்பில் இவர்களுக்கு கரிசனை இருப்பதாகக் கருதமுடியவில்லை. மாறாக, சுயநலனை மட்டுமே கவனிப்பவர்களாகத் தெரிகின்றனர். தம்முடைய எண்ணங்களை ஈடேற்றுவதற்கு தாயகத்தை களமாக பயன்படுத்த முனைகின்றனர். அவர்களுடைய பொருளாதாரவலிமை உள்ளூர் அபிலாசைகளைத் தூசாக்கிவிடுகின்றன.

அந்தவகையிலேயே, இலங்கையிலே உலாவிய புலம்பெயர்தமிழ் அமைப்பு என்று சொல்பவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகளையும் கவனிக்க முடிகின்றது.

உள்ளூர் தரப்புக்களுடன் வெளிப்படையான உரையாடல்களை ஏற்படுத்தவில்லை. தமிழ் அரசியல், சமூகப் பொதுவெளியில் உள்ளவர்களை வெளிப்படையாகத் தொடர்புகொள்ளவில்லை. மாறாக, சிங்களப் பெளத்த தரப்புகளுடன் இரகசியமாக, வெளிநாடொன்றில், பேசியுள்ளனர். அதன்பின்னர் பெளத்த தேரர்கள் சகிதம் உலாத்தலுக்குப் புறப்பட்டனர். அதற்குமுன்னர், பௌத்த பீடங்களைச் சந்தித்து ஆசிபெற்றனர். அன்னியநாடொன்றின் தூதுக்குழு போன்று யாழ்ப்பாணம் போயிருந்தார்கள். அதிலேகூட, கிழக்கு மற்றும் வன்னிப் பகுதிகளைப் புறக்கணித்து விட்டனர்.

இவர்கள் யார்? யாருடைய பின்புலத்தில் இயங்குகின்றனர்? எங்கிருந்து வருகின்றனர்? என அனைத்துமே தமிழர்பரப்பில் உள்ளவர்களுக்குத் தெரியாத செய்தியாகவே இருக்கின்றது.

கவனத்தைச் சுண்டியிழுக்கும் கனதியான பெயரை அமைப்புக்குச் சூட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வேர்களைக் கொண்டிருக்கின்ற, உயிரோட்டமுள்ள புலம்பெயர்ந்தோரின் அமைப்பாகக் கருத முடியவில்லை. தன்னார்வ தனிநபர் குழுவாகவே கருத முடிகின்றது.

ஆக, யாரோ சிலர் எங்கிருந்தோ வருகின்றனர். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாகச் சொல்கின்றனர். தமிழ் மக்களுக்குத் தெரியாமல் ஒரு பிரகடனத்தைத் தயாரித்துக்கொண்டுவருகின்றனர். யாருடைய பிரச்சினைக்குத் தீர்வு தேடுகிறார்களோ – அவர்களை ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை.

தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு ஏமாற்றுவதாக ஒரு புலம்பல் தமிழரிடையே உண்டு.

இப்போதெல்லாம், “இந்தமண்ணில் பிறந்தோம்” என்று சொல்கின்றவர்களே, “வலிசுமந்த” சகமனிதரை ஏமாற்ற வரிசைகட்டி வருகின்றனர். “யாரோடு நோகேன் யார்க்கெடுத்துரைப்பேன்” என்று அரற்றமால் இருக்க முடியவில்லையே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.