கட்டுரைகள்
தென்னாசிய அரசியலில் கிரிக்கெட் ஆளுமைகள்… வெற்றியில் பங்களாதேஷ்…பாகிஸ்தான் கப்டன்கள்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(பாகிஸ்தான், இந்தியா தற்போது பங்களாதேஷில் உருவாகியுள்ள கிரிக்கெட் வீர்ர்களின் அரசியல் பிரவேசம் பலத்த சலசலப்பை
உருவாக்கியுள்ளதுடன் ஆட்சி மாற்றங்களுக்கும் வழிகோலியுள்ளது)
கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என தென்னாசியாவில் உள்ள கிரிக்கெட் விளையாடும் நாடுகள் காலங்காலமாக தெரிவித்து வந்துள்ளன.
அரசியலும் கிரிக்கெட்டும்:
ஆயினும் கிரிக்கெட்டில் பிரகாசித்த வீர்ர்களின் அரசியல் பிரவேசம் தென்னாசியாவில் நீண்டகாலமாக நிகழ்ந்து வருகிறது. கிரிக்கெட் வீர்ர்கள் அரசியலில் பாரிய
வெற்றிகளை, மாற்றங்களை உருவாக்கியுள்ளார்கள்.
முன்பு பாகிஸ்தான், இந்தியா தற்போது பங்களாதேஷில் உருவாகியுள்ள கிரிக்கெட் வீர்ர்களின் அரசியல் பிரவேசம் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதுடன் ஆட்சி மாற்றங்களுக்கும் வழிகோலியுள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் ஜனவரியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் பெரும் வெற்றி பெற்றார்.
பங்களாதேஷ் கப்டனின் வெற்றி:
வங்கநாட்டு தேசிய கிரிக்கட் அணியை வழிநடத்தும் பல்துறை வீரர் ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் மேற்கு நகரத்தில் உள்ள மகுரா தொகுதியில் தனது போட்டியாளரை 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கிரிக்கெட் கப்டனாக தனது வேலையை வெற்றிகரமாக செய்ய முடிந்த அதே நேரம், அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்த விளையாட்டிலிருந்து சிறிது இடைவெளி எடுத்தாலும், அவர் ஓய்வு இன்னமும் பெறவில்லை.
பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக இவர் போட்டியிட்டார். கப்டன் ஷகிப்பின் சாதனைகளில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூற்றுப்படி, ஒரே நேரத்தில் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களில் ஒவ்வொன்றிலும் சகலதுறை வீர்ருக்கான (All Rounder) முதல் இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட்டும் இந்திய அரசியலும்:
இந்தியாவில் கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த வீரர்கள் இன்னமும் பல பதவிகளில் உள்ளனர். முன்னாள் கப்டன் முகமது அசாருதீன்
2009 ஆம் ஆண்டில், காங்கிரஸில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 பொதுத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் அசார் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் மன்சூர் அலி கான் பட்டோடி அரசியலில் நுழைந்து பதவிக்கு வந்த முதல் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் கப்டன்களில் ஒருவரான இவர், இரண்டு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால் இரண்டு முறையும் தோல்வியடைந்தார். இதனால் அரசியலில் இருந்து பின்னர் வெளியேறினார்
நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாபில்:
2004ல் பாஜக சார்பில் மக்களவைக்கு போட்டியிட்டு பஞ்சாப் அரசில் அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து, தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இந்தியாவுக்காக 51 டெஸ்ட் மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சித்து, பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், பஞ்சாபி மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். மார்ச் 2022-ல், அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டு டெஸ்ட் சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களும் அடித்திருக்கிறார்.
1000 டெஸ்ட் ரன்களை அதிவேகமாக எடுத்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. அவரது துணிச்சலான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். 1993-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் 227 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார். அவர் லோக் பாரதி கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2009 விதானசபா தேர்தலில் விக்ரோலி (மும்பை) தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.
2023 உலக கோப்பை போட்டியில் கட்சித் தலையீடு:
நடந்து முடிந்த 2023 உலக கிரிக்கெட் போட்டியை மிக முக்கியமான அரசியல் ஆயுதமாகவே பா.ஜ.க. அரசு பார்த்தது. ஐந்து மாநிலத் தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது நடந்த இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டி இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தேர்தலில் வாக்குகளாக மாறி அது பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவும் என அவர்கள் கணக்குப் போட்டார்கள்.
உலக கிரிக்கெட் போட்டியை கிரிக்கெட் போட்டியைக் காண ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையே மைதானத்தில் வந்து அமர்ந்திருந்தது. பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் அகமதாபாத்தில் குவிந்தார்கள். உண்மையில் பா.ஜ.க.வின் கட்சி மாநாடு போலவே கிரிக்கெட் மைதானம் மாறியிருந்தது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் அனைத்து மைதானங்களிலும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிற கோஷம் ஓங்கி ஒலித்தது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுடன் இந்திய வீரர்களுக்கு வரவேற்பு என்ற பேரில் இந்தியா முழுவதும் வெற்றிக் கோப்பையுடன் அவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆடம்பர வெற்றி ஊர்வலத் திட்டங்களை பா.ஜ.க. திட்டமிட்டிருந்தது. ஆயினும் இந்திய அணியின் தோல்வி அனைத்து திட்டங்களையும் தவிடுபொடியாக்கியது.
அத்துடன் வெற்றிக் கோப்பையை பிரதமர் நரேந்திர மோடி விஸ்வரூபம் எடுத்த அயோத்தி ராமன் கைகளில் தரையில் மண்டியிட்டு சமர்ப்பணம் செய்வது போன்ற படங்கள் வெளியிடப்பட்டதும் அறிந்ததே.
பாகிஸ்தான் அரசியலில் இம்ரான் கான்:
ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக வலம் வந்து பல நாட்டு வீரர்களை தனது ஆட்டத்தால் கதிகலங்க வைத்த பாகிஸ்தானின் இம்ரான் கான் , இன்று தனது சொந்த நாட்டில் அரசியல் முக்கியமானவராக உள்ளார்.
கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், பிரைன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் போல் அந்த காலத்திலேயே கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்கியவர். சுமார் இருபது ஆண்டுகாலம் அதாவது 1971 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடிய இம்ரான் கான் அந்த கால கட்டத்தில் ஒரு தலை சிறந்த வீரராவார்.
1992ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், பாகிஸ்தானின் தனிப்பெரும் நட்சத்திரமாக உயர்ந்த இம்ரான் கான்,1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹரீக் இன்சாஃப் என்ற கட்சியை தொடங்கினார். பாகிஸ்தான் அரசியல் களத்தில் இம்ரான் கான் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த போது முதல் தேர்தலில் அவரும், அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் தான் இம்ரான் கான் எம்பியாக தேர்வானார். அதன்பின்னர் அவர் பிரதமராகி இன்று தனது சொந்த நாட்டு சிறையில் அடைக்கப்படுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டில் புதிய சட்டம்:
கிரிக்கெட் தொடர்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் படு தோல்வி அடைந்து வரும் இலங்கையின் கிரிக்கெட் அணியின் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் எனவும் அதிபர் கூறுயுள்ளார்.
2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கெட் இருப்பிடம் தொடர்பில் தமக்கு தொலைநோக்குப் பார்வை உள்ளதெனவும், இதனாலேயே பட்ஜட்டில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்காக
எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 2 பில்லியன் ரூபாய் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து, எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.