“சட்டம் ஒரு இருட்டறை” … சிறுகதை …. நடேசன்.
கொரானா காலத்தில் புதிய நம்பரிலிருந்து எனது தொலைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. அதில் “நான் சமந்தா… நினைவிருக்கிறதா?” என்றிருந்தது.
“உன்னை மறக்க முடியுமா?“ எனத் தகவல் அனுப்பினேன்.
அப்போது இரவு நேரம் சமைத்துக்கொண்டிருந்த என் மனைவி சியாமளாவிடம் ‘சமந்தாவிடமிருந்து தகவல் வந்துள்ளது’ என்றேன் .
‘யார் அது ?’
‘எனது கிளினிக்கில் வேலை செய்தபோது அவள் கர்ப்பிணியாகி பின்னர் நான் நீதிமன்றம் போனேனே…. நினைவிருக்கிறதா?‘
‘ ஓ! அவளா? ஏன் உங்களுக்குத் தகவல் அனுப்புகிறாள்?. பதில் அனுப்பவேண்டாம்!” என்றார்.
“நான் பதில் அனுப்பிவிட்டேன்.”
“உங்களுக்கு வெட்கம் – மானம் – ரோசம் இல்லைதானே!”
மனைவி திட்டும்போது சிரிப்பது மட்டுமே எனது ஆயுதம். ஐம்பது வருடத்தில் நான் அறிந்துகொண்ட ராஜதந்திரம்! பேசி செய்த திருமணமானால் வார்த்தைகளிலாவது மரியாதை இருக்கும். இது காதல் திருமணம்! மரியாதைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. நான் சிரித்தவுடன் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் விலகிவிடுவார். அதையே இன்றும் எனது அஸ்திரமாகப் பாவித்தேன்.
மீண்டும் தொலைப்பேசியில் “மன்னிக்கவேண்டும். நான் அன்று தேவையில்லாது பிரச்சனையை ஏற்படுத்திவிட்டேன். எனக்கு இப்போ மூன்று பிள்ளைகள். இப்பொழுது நான் பற்றிக்குடன் ஒன்றாக இல்லை.”
“நான் இப்பொழுது கிளினிக்கை விற்றுவிட்டேன்” எனப் பதில் மட்டும் அனுப்பினேன்.
மீண்டும் எந்த பதிலும் வரவில்லை. நானும் எந்த வகையிலும் சமந்தாவைத் தொடர்பு கொள்ளவிரும்பவில்லை.
சமந்தாவால் நான் பல பாடங்களை அறிந்துகொண்டேன். வாழ்வின் அனுபவங்களே எமது ஆசிரியர்கள் என்பதை மறுக்கமுடியாது.
சமந்தா அழகான உயரமான பெண். எப்பொழுதும் சிரித்த முகம் அத்துடன் எப்பொழுதும் திறந்த மனத்துடன் என்னுடன் பேசுவாள். மிருகங்களில் அதுவும் பூனைகளில் மிகவும் விருப்பம் கொண்டவள். பூனைகளை அவள் பிடிக்கும்போது அவை அவள் கையில் அமைதியாகிவிடும். அவளுக்கு அனுபவம் இல்லாதபோதிலும் அவள் இலகுவாகக் கற்றுக்கொண்டாள். ஏற்கனவே பற்றிக் என்பவனை பாய் பிரண்டாக வைத்திருந்தாள்.
அவனது குறை நிறைகளைக்கூட எனக்குச் சொல்வாள். சத்திர சிகிச்சை செய்யும் நேரத்தில் எனக்கு அவள் சொல்வதை எப்படியும் கேட்டாக வேண்டும். அவளும் நானும் மட்டும் வேலை செய்யும்போது வேறு வழி இல்லை. அவளிடம் ஒரு முக்கிய விடயம் எனக்குப் பிடித்திருந்து. நான் வெளியே போன நேரத்தில் யாராவது என்னைத் தேடி வந்தால் அவர்களுடன் பேசியபடி நான் வரும்வரை தக்கவைத்திருப்பாள். அதாவது அவளது வார்த்தைகள் மற்றவர்களை கொழுவி இழுத்துவைக்கும். ஆண் மட்டுமல்ல பெண்ணாக இருந்தாலும் அப்படியே.
அவள் வேலை செய்த இரண்டு வருடங்களின் பின்பு நடந்த விடயம் மறக்கமுடியாது. அதற்காகவே என்னிடம் இப்பொழுது 20 வருடங்கள் பின்பாக மன்னிப்புக் கேட்கிறாள். 200 வருடங்கள் பின்பாக ஆவுஸ்திரேலிய ஆதிவாசிகளிடம் வெள்ளை அவுஸ்திரேலியரகள் மன்னிப்பு கேட்கும்போது நான் அவளில் தவறு காணமுடியாது. ஆனால் எனது மனைவி அப்படி நினைக்கவில்லை. அவுஸ்திரேலியாவில் கணவனை முதலாவதாகக் கோட்டுக்கு இழுத்தவள் என்ற கோபம் ஆனாலும் என் மனதில் அந்த வடு ஆறிவிட்டது.
நீங்கள் எத்தனை தமிழ்ப் படங்கள் பார்த்திருப்பீர்கள்? எத்தனை பாத்திரங்களது பெயர் உங்கள் மனத்தில் நிற்கிறது ? இது ஒரு முக்கியமான விடயமல்ல.. ஆனாலும் “காதலுக்கு மரியாதை” என்ற தமிழ்த்திரைப் படத்தைப் பார்த்த பின்பு அந்த படத்தின் கதாநாயகி ஷாலினியின் பெயர் மனத்தில் சில காலம் தங்கி விட்டது.
இந்த காலகட்டத்தில் ஒரு உரிமையாளரால் கைவிடப்பட்ட அழகான சாம்பல் நிற பூனைக்குட்டி எனது கிளினிக்கு ஒருவரால் கொண்டு வரப்பட்டது. பாரதி பாடலை நினைவுக்குக் கொண்டு வரும் இந்த குட்டிப் பூனைக்கு வயது நான்கு கிழமைதான். மிகவும் சிறியது. தாயுடன் இருக்கவேண்டிய காலத்தில் பிரிந்துவிட்டதால் புட்டிபால் கொடுத்து வளர்க்கவேண்டும். அதன் தோற்றத்தைப் பார்த்து “மினி” என்ற ஷாலினியின் பெயரை வைத்தேன். ஆனால் என்ன? பாலஸ்தீனியர்கள் மேல் கடும் பகை பாராட்டிவரும் இஸ்ரவேல் பிரதமர் நெத்தனியாகுபோல் எனது லபரடோர் நாய் சாண்டி, பூனை இனத்தின் மேல் வெறுப்பு கொண்டது. இந்த பூனைக்குட்டியை, அதன் நிமித்தம் எனது வீட்டுக்குக் கொண்டு
செல்லவில்லை. பத்துமணி நேரம் கிளினிக்கில் நான் இருப்பதால் அதற்கு வசதியாகி விட்டது. பகலில் எங்கும் திரியும். இரவில் கூட்டில் அடைத்தோம். எந்த குறையுமற்று எனது கிளினிக்கில் வளர்ந்து வந்தது.
ஆனால் மினியால் சில சங்கடங்கள் ஏற்பட்டது. நாய்கள் வைத்தியத்துக்கு வரும் போது எனது அறையில் மினியை அடைத்துப் பூட்டவேண்டும்.இதைவிடத் துள்ளிப்பாய்ந்து பல பொருட்களைத் தட்டி கொட்டிவிடும். பல முறை கம்பியுட்டர் வயர்களைக் கழட்டிவிடும். வேலை செய்யும் நேரத்தில் மடியில் இருக்க அடம் பிடிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாகத் திருடர்களுக்கு அலார்ம் போடுவதற்காக இரவுகளில் கூட்டில் அடைக்கவேண்டும்.
இரவு முழுவதும் அடைபட்டு இருப்பதைப் பொறுக்காமல் அக்காலத்தில் எனக்கு நேர்சாக வேலை பார்த்த சமந்தா, இரவில் மினியை வீட்டுக்குக் கொண்டு சென்று காலையில் திரும்பவும் கொண்டு வருவதாக உறுதியளித்ததைவிட்டு அவளிடம் இரவில் அதை கொண்டு செல்லும் பொறுப்பை ஒப்படைத்தேன். ஆறு மாதத்துக்கு மேல் மினி பகலில் கிளினிக்கிலும் இரவில் சமந்தா வீட்டிலும் வளர்ந்தது. இக்காலத்தில் மினிக்கு குட்டி போடாமல் இருக்க சத்திர சிகிச்சையும் செய்தேன்.
இந்தக் காலத்தில், ஒரு மதியத்தில் சமந்தா ஒருநாள் வந்து ‘கர்ப்பிணி ஆகிவிட்டதாகவும் அத்துடன் இரண்டாவது மாதம் என நினைக்கிறேன். ‘ என்றாள். அவள் சொல்லும் போது ஏதோ ஒரு விடயமாக அவளைக் காண வந்திருந்த பாய் பிரண்ட் பற்றிக்கும் நின்றிருந்தான்.
இருவரும் அதைத் திட்டமிட்டுச் செய்திருக்கலாம்.
கலியாணம் முடிந்த பின் தான் பெண்கள் கர்ப்பமாகும் கலாச்சாரம் சந்திரமண்டலத்தில் இறங்கிப் பல யுகங்களாகி விட்டதால் இந்த செய்தி எனக்கு எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. மேலும் மனித நாகரிகத்தில் இடைக்காலத்தில் வந்த திருமணம் என்ற இந்த பழக்கம் பணச்செலவையும் பல அசௌரியங்களையும் உண்டாக்கி கொள்கிறது என இளம் சமுதாயம் மேற்கு நாடுகளில் நினைக்கிறது. இந்த நினைப்பு வெகு விரைவாகக் கீழைத்தேய நாடுகளுக்கும் பரவி வருகிறது. அதை சரி அல்லது தவறு எனப் பார்க்க முடியாது, மாற்றமொன்றே மாறாதது என்பதுபோல்
எனது பிரச்சனை வேறு – அது முக்கியமானது.
“சமந்தா உனக்குத் தெரியும்தானே? நாங்கள் ஹலத்தேனை( Halothane Gas) இங்கு சத்திர சிகிச்சைக்கு மயக்கும் மருந்தாகப் பாவிக்கிறது. இந்த ஹலத்தேன் சில வேளையில் கருச்சிதைவை கொண்டு வரும். ஆரம்பக் கால கர்ப்பமாக இருப்பதால் நீர் இங்கு வேலை செய்வது நல்லது அல்ல. உமது கர்ப்பத்தில் சிதைவு ஏற்படலாம்.”
“பணம் இல்லை. நான் கடைசி வரையும் வேலை செய்ய விருப்பம்“.
“வேலை செய்ய விரும்புவது நியாயம்தான் ஆனால் உமக்கு ஹலத்தேன் என்ற இந்த மயக்க வாயுவால் கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாகி விடுவேனே! . இந்தக் கிளினிக்கில் நாங்கள் இருவர் மட்டுமே வேலை செய்கிறோம். நீர் இல்லாமல் நான் தனியே சத்திர சிகிச்சையில் ஈடுபட முடியாது. உம்மை வைத்துக்கொண்டு வேறு ஓருவரை வைத்து வேலை செய்ய என் பொருளாதாரம் இடம் தராது. அதே வேளையில் ஹலத்தேன் வாயுவாகியபடியால் இந்த கிளினிக் எங்கும் பரவும். அதற்கு நீர் ஒழித்திருக்க முடியாது”.
ஓரளவு என்னை புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையில் இதை அவளிடம் விளக்கினேன். இவ்வளவு நேரமும் எங்கள் உரையாடலைக் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த பற்றிக் “அப்படி கர்ப்ப சிதைவு ஏற்பட்டால் உமது பேரில் வழக்கு தொடுப்போம்” என்றான்.
அப்பொழுது எனக்கு தலையில் ஜிவ் என ஏறியது. ‘முட்டாளே, ஒரு பெண்ணை கர்ப்பிணியாக்குவது மிகவும் இலகுவான விடயம். ஆனால் அவளைப் பராமரிப்பது கடினம். இதைச் செய்வதற்கு முன்பாக மூளையைப் பாவித்திருக்கவேண்டும். உனது முட்டாள்தனத்திற்கு என்னிடம் வெகுமதி தர கேட்கிறாயே’ எனக் கேட்ட விரும்பினாலும் கோபத்தை மறைத்துக்கொண்டு சமந்தாவிடம் “சமந்தா இன்றையில் இருந்து வேலைக்கு வரவேண்டாம்( you are dismissed )” என்றேன்.,
சமந்தாவோ அவளது பாய் பிரண்டோ என்னிடமிருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. இருவருக்கும் முகமும் சிவந்து விட்டது. பாய் பிரண்ட் பற்றிக் எனது கிளினிக்கை விட்டு ஆத்திரத்தில் வெளியேறிவிட்டான்.
இது போல் திடீரென முடிவுகளை வழக்கமாக எடுப்பது எனது சுபாவமுமில்லை. பற்றிக்கின் வார்த்தை அப்படிச் சொல்ல என்னைத் தூண்டியது. உடனே என்னைச் சுதாரித்துக் கொண்டு மீண்டும் சொன்னேன்.
“சமந்தா நீர் வேலை செய்த இந்த இரண்டு வருடங்களும் சுமுகமானவை. எமக்கிடையே எந்த பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால் இந்த நிலையில் உம்மைக்கொண்டு வேலை செய்விப்பதின் மூலம் நான் உமக்குத் தீங்கு செய்கிறேன். நீர் உமது கர்ப்ப காலத்தில் எனது மனைவி வேலை செய்யும் வைத்திய சாலையில் வரவேற்பாளராக வேலை செய்வதற்கு உதவி செய்கிறேன். உமது குழந்தை பிறந்த பின்பு மீண்டும் இங்கு வந்து வேலை செய்யலாம் .இதைவிட எதுவும் செய்ய முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.” என அமைதியாகச் சொன்னேன்.
சமந்தாவில் எனக்கு நல்ல மதிப்பு இருந்தது என்பதால் ஏதாவது சுமுகமான உடன்படிக்கைக்கு வரலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அன்றில் இருந்து சமந்தா வேலைக்கு வரவில்லை. வேறு ஒரு நர்ஸ் வேலைக்குச் சேர்க்கப்பட்டாள். தொலைப்பேசியில் மினியை கொண்டு வந்துதரச்சொன்னேன். மினி என்னுடையது. நான் தரமாட்டேன் என்றாள்.
‘மினியைத் தரவிட்டால் உன்மீது வழக்குப் போடுவேன்’ என கூறிவிட்டு தொலைப்பேசியை வைத்தேன். மினியை இழந்தது உண்மையில் துக்கமாக இருந்தது. சில வாரங்களின் பின்பு சகலரையும் சமமாக நடத்தப்படுவதைக் கவனிக்கும் அரச நிறுவனமான ‘சம வாய்ப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம்’ (Equal Opportunity and Human Right Commission) இருந்து அழைப்பு வந்தது. அங்கே நான் சென்றபோது சமந்தா, சமந்தாவின் பாய் பிரண்ட் பற்றிக் உடன் அவர்களது வக்கீலும் சமூகமளித்திருந்தனர்.
அங்கு இருந்த ஆணையாளர் முன்பாக சமந்தாவின் வக்கீல் கர்ப்பிணிப் பெண் என்ற காரணத்தால் சமந்தாவை வேலையில் இருந்து தூக்கியதாக என் மீது குற்றம் சாட்டினார். நான் எனது கிளினிக்கில் தொடர்ச்சியாக வேலை செய்தால் ஹலத்தேன் மயக்க மருந்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை விஞ்ஞான ஆதாரங்களையும், ஆராய்ச்சி முடிவுகளையும் விளக்கினேன் . ஏற்கனவே அமெரிக்காவில் ஹலத்தேன் வாயுவால் நேர்ந்த கருச்சிதைவுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகளையும், ஆதாரங்களைத் திரட்டியிருந்தேன். அவைகளை ஆணையாளர் முன்பு சமர்ப்பித்தேன். இதைவிட சமந்தாவுக்கு வேறு தொழில் வசதி ஏற்படுத்திக் கொடுத்ததையும் கூறினேன்.
அவர்களால் என்மீது வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை.
அப்போது அந்த அதிகாரி எனது ஆய்வுகள் தேவைக்கு அதிகமாக உள்ளன எனப் பாராட்டினார்.
ஒன்பதாவது தரத்தில் வக்கீலுக்கு சட்டம் படிப்பதற்காக கலைப்பகுதி சென்ற என்னை, எனது தந்தையின் நண்பரான பொன்னம்பலம் ஆசிரியர் “ நீ தீவான். எஞ்ஜினியரிங் செய்யவேண்டும் அதற்காகவே உங்கப்பன் இந்து கல்லூரியில் உன்னை விட்டுப் படிப்பாகிறார். அவரை ஏமாற்றாதே“ எனக் கூறி கணித பகுதியில் சேர்த்தார்.
நான் சட்டம் படித்திருந்தால் என்ன செய்திருப்பேன் ? அரசியலில் சேர்ந்து தற்போதைய தமிழ்த் தலைவர்கள் மாதிரி நாளுக்கொரு கதை பேசியிருப்பேனோ ? இல்லை நமக்குப் பொய் சொல்ல வராது எனக் கொழும்பில் ஏதாவது நிறுவனத்துக்கு வேலை செய்திப்பேனோ அல்லது கனடா அவுஸ்திரேலியா என சென்று அகதி விண்ணப்பங்கள் செய்திருப்பேனோ? யார் கண்டது? ஒவ்வொரு அரிசியிலும் உனது பெயர்
எழுதியிருக்கும் எனக் குரானில் எழுதியதுபோல் ஆஸ்திரேலியாவிலுள்ள நாய் – பூனைகளில் எனது பெயர் எழுதியிருந்திருக்கிறது .
பொங்கலுக்குத் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று அக்காலத்தில் நம்பியிருந்த என்னை ‘அவுஸ்திரேலியாவில் மிருக வைத்தியம் பார்ப்பாய்’ என யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருக்கமாட்டேன். இந்த பிறப்பில் வாழாது அடுத்த பிறப்பில் நன்றாக வாழமுடியும் என எண்ணும் எமது மனித மனமே விசித்திரமானது.
சமந்தா விடயம் இத்துடன் முடியவில்லை. மீண்டும் ஒரு அரசாங்க நிறுவனத்தில் என் மீதான குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டது .
இந்த தடவை வழக்கறிஞர் ஒருவரை என் சார்பாக நியமிப்பதற்காக மெல்பேனில் உள்ள பெரிய சட்ட நிறுவனத்தை அணுகியபோது ஒரு அழகிய இளம் பெண் வக்கீலை எனக்காக நியமித்தார்கள். நடந்த விசாரணையின் போது சமந்தாவின் வழக்கறிஞர், தனது திறமையைக் காட்டுவதற்கு, வெளிநாட்டிலிருந்து வந்ததால் எனக்கு அவுஸ்திரேலிய சட்டம் தெரியாமல் இருக்கலாம் எனக் கூறியபோது எனது அழகிய வழக்குரைஞர் மௌனத்தை உதிர்த்தபடி புன்னகைத்தார்.
அங்கும் நானே எனக்காக வாதாட வேண்டி இருந்தது. இங்கும் அவர்களின் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது. மனம் தளராத விக்கிரமாதித்தனாக சமந்தாவின் வழக்கு இறுதியில் நீதிமன்றத்திற்கு வந்தது. இதில் ஒரு சூட்சுமம். சமந்தாவின் வழக்குரைஞர் வழக்கை வென்றால் மட்டுமே பணம்பெறுவார். இதே வேளையில் எனது வழக்குரைஞர் வென்றாலும் தோற்றாலும் பணம் பெறுவார்.
வழக்கு நாள் வந்தது. இரண்டு பகுதியினரும் நீதிமன்றத்தில் முன்னறையில் இருக்கும் போது நீதிபதியின் உதவியாளர் வந்து சொன்னார்.
“இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்தால் நான்கு நாட்கள் செல்லும். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் டாலர்கள் செலவு ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்படும். இதைப்பற்றிக் கலந்து ஆலோசிக்க அரை மணித்தியாலம் தருகிறோம்” எனக் கூறிவிட்டுச் சென்றார்.
இதை அடுத்து எனது வழக்குரைஞர் என்னிடம் “இது கோட்டுக்கு வெளியில் பணத்தைக் கொடுத்து நீதிபதியின் உதவியாளர் முன்னிலையில் சட்டப்பூர்வமாக முடித்துக்கொள்ளப்படும் ஒரு முறை“ என கூறினார்.
எனக்கும் யார் சரி யார் பிழை என்பதற்கு பதிலாக வேலையை விட்டு விட்டு இப்படி அலைவதும் அலுத்து விட்டது. இதேவேளையில் சமந்தா நிறைமாத கர்ப்பிணியாகி விட்டாள். ஊதிய வயிற்றை தள்ளி, அரக்கியபடி நடப்பதைப் பார்க்க என் மனத்தில் இப்பொழுது அவளுக்கு எதிரான உணர்வு இல்லை. மினியைக் கூட விட்டுக் கொடுத்து விடலாம் என்ற நிலைக்கு வந்து விட்டேன்.
நான் சம்மதித்ததும் நீதிபதியின் உதவியாளர் முன்னிலையில் சமந்தாவின் வழக்குரைஞர் பதினோராயிரத்தில் ஆரம்பித்தார். நாங்கள் இரண்டாயிரம் மட்டும் தருவோம் எனக் கூறி ஒரு மீன்கடை ஏலமாக நடத்தப்பட்டது.
கடைசியில் ஐயாயாயிரம் டாலர்கள் சமந்தாவுக்குக் கொடுத்தால் வழக்கை வாபஸ் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. சமந்தாவுக்கு மினியை என்னிடம் தந்தால் மேலும் ஆயிரம் டாலர் தருவதாக நான் சொல்லியபோதும் அவள் மறுத்து விட்டாள். நீதிபதியின் உதவியாளரை அணுகி மினியை இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கும்படி கேட்டபோது அவர் மறுத்துவிட்டார்.
அதற்கு இன்னெரு வழக்கு தேவைப்படும் என்றார்.
மினிக்காக இன்னுமொரு வழக்குப் போட அது மீண்டும் ஒப்பந்தத்தில் முடியலாம் கடைசியில் இரு பகுதியினரும் ஒப்பந்தமிட்டு சம்மதித்தோம்.
இதன் பின் ஐயாயிரம் டாலர் பணத்தில் அரசாங்க வரியாக தொழாயிரம் டாலர்களைக் கழித்துக் கொண்டு எனது வழக்குரைஞர் மூலம், சமந்தாவின் வழக்குரைஞரிடம் நாலாயிரத்து நூறு டாலர்கள் கொடுத்தேன்;.இதேவேளையில் அதிகம் பேசாத எனது அழகிய வழக்குரைஞருக்கு கூலியாக ஐய்யாயிரம் கொடுத்தேன். இந்த விடயத்தில் எனக்கு பத்தாயிரம் நட்டமானது. மினியும் கிடைக்கவில்லை. ஆனால் நான் களைத்துவிட்டேன். எனக்கெதிராக வழக்குத் தொடுத்த சமந்தாவும் தனது வழக்குரைஞருக்குப் பணம் கொடுத்தபின்எவ்வளவு மிச்சம் கிடைத்திருக்கும்?
சமந்தாவின் வழக்குரைஞர் எனது வழக்குரைஞரை விட பலமடங்கு திறமையானவர்.அத்துடன் சீனியர். சட்டத்தின் நோக்கம் நியாயமல்ல, இரு பகுதியினரையும் களைப்படையவைத்து இது போன்ற விடயத்தில் மீண்டும் ஈடுபடாது படிப்பினையைக் கொடுப்பதே. மிருக வைத்தியரான நான்அப்பொழுதுதான் “சட்டம் ஒரு இருட்டறை “ என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன்!
000