“எனினும்” …. சிறுகதை – 56 …. அண்டனூர் சுரா.
சுப்ரமணி அவன் சோட்டுப் பிள்ளைகளின் மத்தியில் எப்படியோ ஹீரோவாகிவிட்டான். அவன் ட்ரைவரைப் போல வண்டி ஓட்டினால் அத்தனை பேரும் அவனைப் போலவே ‘ட்டர்ர்ர்….’ என்று ஓட்டுகிறார்கள். டீச்சரைப் போல கைநீட்டி பேசுகிறான். அவனது உத்தரவுக்குப் பணிந்து அத்தனை பேரும் நடந்துகொள்கிறார்கள். அவன் ‘உஷ்…’ என்று சொன்னால் அத்தனை பேரின் விரலும் வாய்க்குச் சென்றுவிடுகிறது. ஒரு மாசமாகவே அவனது நடையென்ன, உடையென்ன, அதிகாரமென்ன. அவன் சோட்டுப் பையன்களுக்கு மத்தியில் அவன் ஹீரோதான்.
அந்த ஊர் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் அவனிடம் மட்டும்தான் ஆண்ட்ராய்டு போன் இருக்கிறது. அவனுக்கென அவனது அப்பா வெளிநாட்டில் வாங்கி அனுப்பிய போன் அது. காலை மாலையானால் அதைத் தூக்கிக்கொண்டு தெருவுக்கு வந்துவிடுகிறான். அவன் வருகையில் அவனது நடையைப் பார்க்க வேண்டுமே. அவனுக்குள் அப்படியொரு குதியாட்டம். துள்ளல், கன்றுக்குட்டிப் பாய்ச்சல்.
பள்ளிக்கூட நாட்களில் ஒரு மூலையில் சப்பாணியாக உட்கார்ந்திருக்கிற பயல்தான் இந்தச் சுப்ரமணி. நான்காம் வகுப்பு தாண்டி ஐந்தாம் வகுப்பு போகிறவன். பத்தாம் வாய்ப்பாடு ஒன்றைத் தவிர அவனுக்கு வேறு வாய்ப்பாடு தெரியாது. சுப்பிரமணி என்கிற அவனது பெயரைக் கூட சுப்ரமணி என்றுதான் சொல்வான். அதையும் சொல்லத் தெரியும் எழுதத் தெரியாது. அப்பேர்ப்பட்ட சுப்ரமணிக்கு வந்திருக்கும் கிராக்கியைப் பாருங்களேன். புழுவுக்கு இறக்கை முளைத்து குளவியாவதைப் போல அவன் ஆகிவிட்டிருந்தான். ஒரு மாசமாக அவனைச் சுற்றிதான் பள்ளிக்கூடத்துச் சக்கரம் சுற்றவும் ஓடவுமாக இருக்கிறது.
பள்ளி திறந்துவிட்டால் குயிலிதான் லீடர். பள்ளியைத் திறக்கிறதும் போர்டுகளைச் சுத்தம் செய்றதும் தேதி எழுதுறதும் மணி அடிக்கிறதும் பிரேயருக்குப் பிள்ளைகளை வரிசையாக நிற்க வைத்து ஸ்கூல் அட்டேன்சன், ஸ்டான் அட் ஈசி,…சொல்றதும் அவள்தான். டீச்சர் பள்ளிக்குத் தாமதமாக வரும் நாட்களில் முக்கால் டீச்சராகிவிடுகிறவள். கையில் ஸ்கேல் வைத்துக்கொண்டு, அவ்வளவு பிள்ளைகளையும் ஒன்றாக உட்கார வைத்து ஓரெண்டு ஒரெண்டு, ரெண்டு ரெண்டு நாலு,…எனத் தொடங்குவாள். மொத்தப் பள்ளிக்கூடமும் அவளது கைஅசைவுக்கு வந்து நிற்கும். அப்பேர்ப்பட்ட குயிலி கூட சுப்ரமணியின் பின்னால் ஓடவே செய்தாள்.
கீதா டீச்சர் வீடியோவில் பாடம் நடத்தி சுப்ரமணியின் ஆண்ட்ராய்டு போனுக்கு அனுப்பிவிடுவார். தினமும் ஏழு மணிக்கெல்லாம் அவனது செல்போனுக்கு வீடியோ வந்துவிடும். டீச்சர் என்ன நடத்துகிறார் என்பது அவனுக்கு அவ்வளவாகத் தெரியாது, ஆனால் அவனது வாட்ச்அப்புக்கு வரும் வீடியோவை அத்தனை நேர்த்தியாகப் பதிவிறக்கம் செய்து, மற்றவர்களுக்குக் காட்டிவிடும் திறமையால் அவன் பள்ளி வயது குழந்தைகளுக்கு கதாநாயகனாகியிருந்தான்.
“நம்ம டீச்சர் பாடம் அனுப்பியிருக்காங்கடோய்…” தெருவின் மையத்தில் நின்று உரக்கக் குரல் கொடுப்பான். அவ்வூர் பள்ளியில் இருபது பேர் படித்தார்கள். அத்தனை பேரும் அவனை நோக்கி ஓடி வந்தார்கள். அவன் அழைத்து வராதவர்களை வாய்ஸ் ரெக்கார்டில் பதிவுசெய்து வாட்ச்அப்பில் அனுப்பி வைத்தான். அவன் சுட்டிக்காட்டும் குழந்தைகளிடம் டீச்சர் தனியே பேசி கண்டித்தார். டீச்சருக்குப் பயப்படுவதைக் காட்டிலும் சுப்ரமணியைக் கண்டு பலரும் பயந்தார்கள்.
டீச்சர் அனுப்பியிருக்கும் வீடியோவை அவன் சட்டென திறந்துவிட மாட்டான். பாம்பாட்டி வித்தைக்காரனைப் போல செல்போனை வைத்துக்கொண்டு அப்படி இப்படியென பாசாங்கு காட்டுவான். தெருவைச் சுற்றிவருவான். அப்படி நில், இப்படி நில், தள்ளி நில்லென உத்தரவு பிறப்பிப்பான்.
ஜெர்மன் கதையில் ஒரு மாயவித்தைக்காரனின் மகுடிக்குப் பின்னே ஓடும் எலிகளைப் போல அவன் பின்னே பிள்ளைகள் ஓடினார்கள். அவன் அங்கே, இங்கேயென சுற்றி கடைசியில் அவனது வீட்டிற்கு
அழைத்து வருவான். அவன் இரு கைகளையும் வீசிக்கொண்டு பாம்பைப் போல வளைந்து, நெளிந்து, குதித்துத் தாவி,..நடக்கையில் அவனைப் போலவே மற்றவர்களும் நடப்பதைப் பார்க்கையில் அவனது முகமெல்லாம் பூரிக்கும்.
‘‘டீச்சர் இன்னைக்கு என்னடா சொல்லிருக்காங்க?”, ‘‘எலே சுப்பு, என்ன பாடம்டா நடத்தியிருக்காங்க, ‘‘டீச்சர், என்னை விசாரிச்சாங்களடா?’, ‘‘சுப்ரமணி, டீச்சர் ஹோம் ஒர்க் எதுவும் கொடுக்கலையே?” இப்படியாக பலரும் முண்டியடித்து கேட்கும் கேள்வி அவனைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. தலையைச் சிலுப்பிக்கொண்டு, முடியை விரல்களால் கோதிவிட்டவனாய் கொடும்புக்குள் சிரித்துக்கொள்வான். கண்களை மெல்ல மூடி, தலையை மேலும் கீழுமாக அசைப்பான்.
‘‘இங்கே டவர் கிடைக்குதாடா?”
‘‘இம், கிடைக்குது.”
‘‘வீடியோவை ஓட விடுடா. டீச்சர் என்ன நடத்துறாங்கனு பார்ப்போம்.”
‘‘யாரும் சத்தம் போடக் கூடாது. அமைதியா இருக்கணும்.”
‘‘இம், இம் இருக்கோம்டா.”
சுப்ரமணி சொன்னதைக் கேட்டு அத்தனை பேரும் அமைதிக்கு வந்தார்கள். பள்ளி நாட்களில் லீடராக இருக்கும் குயிலியால் சுப்ரமணிக்குத் திடீரென முளைத்துப்போன இறக்கையை நினைத்து அவளால் வியக்காமல், சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
சுப்ரமணி வீடியோவை ஓடவிட்டான்.
‘‘அய் டீச்சர் வந்திட்டாங்க. குட்மானிங் டீச்சர், குட்மானிங் டீச்சர்.”
‘‘ஹாய் குட்டீஸ், எல்லாம் நல்லா இருக்கீங்களா?”
‘‘நல்லா இருக்கோ…ம் டீச்சர்.”
சுப்ரமணி வீடியோவை நிறுத்தினான். ‘‘இது வீடியோடா. டீச்சர் பேசுறத மட்டும் கேளுங்க. நாம பேசுறது டீச்சருக்குக் கேட்காது.”
‘‘சரிடா சரிடா. ஓட விடு”
‘‘எல்லாரும் சாப்பிட்டீங்களா?”
‘‘சாப்பிட்டோ…ம் டீச்சர்”
டீச்சரின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அப்படியாக எதிர்பாட்டு பாடுபவர்களைப் பார்த்து சுப்ரமணி முறைத்தான்.
‘‘நான் வீடியோவில பாடம் நடத்துறத எல்லாரும் கவனமாக் கேட்கணும். கவனிக்காதவர்கள் யார், யாரென சுப்ரமணி என்னிடம் போட்டுக்கொடுத்துவிடுவான்..”
‘‘கவனமாக் கேட்கிறோ…ம் டீச்சர்”
டீச்சர் சுப்ரமணியின் பெயரைச் சொன்னதும் அத்தனை பேரும் அவனை அதிசயமாகப் பார்த்தார்கள். அப்படியாக பார்ப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது. சுப்ரமணி தலையை ஒரு தாளத்திற்கு ஆட்டுவதைப் போல ஆட்டிக்கொண்டான். குயிலியை ஒரு கணம் திரும்பிப் பார்த்தவன் இனி நான்தான் லீடர் என்பதைப் போல பெருமிதம் பூத்தான்.
‘‘என்ன குழந்தைகளே கேட்பீங்கதானே?”
‘‘கேட்போம் டீச்சர்.”
‘‘குணா இருக்கானா?”
‘‘அய், டீச்சர் என்னைக் கேட்டுறாங்க. இருக்கேன் டீச்சர்.”
‘‘வினோத், முருகன், கனகா ”
‘‘வினோத், முருகன் இருக்கான்க டீச்சர். கனகா அம்மாச்சி ஊருக்குப் போயிட்டு இன்னும் வரல டீச்சர்”
‘‘குயிலி எப்படி இருக்கா?”
குயிலியைக் கேட்டதும் அவளைப் பார்த்தார்கள். ‘‘ஏய் குயிலி, டீச்சர் உன்னத்தான் கேட்குறாங்க. சொல்லடி, நல்லா இருக்கேனு.”
குயிலி பதில் பேசவில்லை. அவள் திண்ணையின் தூணை இறுகப் பிடித்துக்கொண்டு, செல்போனின் திரையைப் பார்த்தவளாய் நின்ற இடத்தில் ஆடாது அசையாது நின்றாள்.
‘‘குயிலி ஒன்னும் பேச மாட்டேங்கிறாள் டீச்சர்.” கண்ணகி சொன்னதும் குயிலிக்குத் துணி கிழிவதைப் போல சிரிப்பு வந்தது. அவள் ஒரு கையை வாய்க்குக் கொடுத்து உடல் குலுங்கிச் சிரித்தாள்.
‘‘ஏனடி சிரிக்கே?”
‘‘பின்னே, சிரிக்காம என்ன செய்வாங்களாம். நீ சொல்றது டீச்சருக்குக் கேட்குமாக்கும்?”
‘‘ஆமாம்ல,..” அவளுடன் சேர்ந்து மற்றவர்கள் வாய்ப்பொத்தி சிரித்தார்கள்.
சுப்ரமணி வீடியோவை ஓடவிடவும், நிறுத்தவுமாக இருந்தான். ‘‘இப்படியெல்லாம் சிரிச்சிங்கேனா நான் வீடியோவை ஓட விடமாட்டேன்…”
‘‘ஏய் ஏய் ஓட விடுடா. நாங்க இனி சிரிக்கலடா.”
அத்தனை பேரும் ஒன்றுபோல சிரிப்பை நிறுத்தி, ஒரு புள்ளியில் அமைதிக்கு வந்தார்கள். குயிலி மட்டும் தொடர்ந்து சிரித்தவளாக இருந்தாள்.
‘‘குயிலியைச் சிரிக்க வேண்டானு சொல்லுங்க.”
‘‘ஏய் நிறுத்தடி. டீச்சர் பாடம் நடத்துறாங்கல்ல.”
குயிலி வாயிலிருந்து கையை எடுத்து பார்வையைத் தெரு பக்கமாகத் திருப்பி சிரிப்பை நிறுத்திக்கொண்டாள்.
‘‘ஆம், அவள் நிறுத்திட்டா. நீ பாடத்த ஓடவிடு.”
‘‘குட்டீஸ், இன்னைக்கு நான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய தமிழின் இனிமை பாடலை நடத்தப்போகிறேன்.”
‘‘நடத்துங்க டீச்சர்.”
‘‘அந்தப் பாடலைப் பாடிக்கொண்டு நான் ஆடுவேனாம். நீங்க எல்லாரும் என்னோட சேர்ந்து பாடி ஆடுவீங்களாம்..”
‘‘அய்,.. ஆடுறோம் டீச்சர்”
திண்ணையில் கூடி குழுமி உட்கார்ந்திருந்தவர்கள் துள்ளிக்குதித்து எழுந்தார்கள். அங்கே, இங்கேயென விரவி ஆடுவதற்குத் தகுந்தாற் போல நின்றார்கள்.
குயிலி, தூணைப் பிடித்திருந்த பிடியிலிருந்து அசையவில்லை. பின்னிக் கிடந்த அவளது இரட்டைச் சடைகள் கூட அசையவில்லை.
‘‘குயிலி நீயும் வாயேன்டி’
அவள் நின்ற இடத்தைவிட்டு நகர்வதாக இல்லை. வீடியோ மீது வைத்திருந்த கண்ணை வேறு பக்கமாகத் திருப்பாமல் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல நின்றாள்.
‘‘கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்’‘
கீதா டீச்சர் ராகமாகப் பாடி, அழகாகக் கைகளை அசைத்து ஆடினார். அவரைப் போல ஒன்றிரண்டு குழந்தைகள் ஆட, அவர்களைப் பார்த்து மற்றக் குழந்தைகள் சிரித்தார்கள். அவர்கள் சிரித்தச் சிரிப்பில் அந்த இடம் வண்டுகளின் ரீங்காரமாக இருந்தது.
‘‘ஏன் இப்படி சிரிக்கிறீங்க. இப்படியெல்லாம் சிரிச்சா நான் வீடியோவ ஓட விடமாட்டேன்” என்றவன் வீடியோவை நிறுத்தினான்.
‘‘டேய், டேய் ப்ளீஸ்டா. ஓட விடுடா…”
‘‘உங்களுக்குத்தான் அமைதியா கேட்கத் தெரியலையே…” என்றவன் செல்போனை எடுத்து சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு திண்ணையிலிருந்து நடைக் கட்டினான். அவனைக் கெஞ்சியபடி அவன் பின்னே பிள்ளைகள் ஓடினார்கள். அப்படியான கெஞ்சலைக் கேட்கையில் அவனுக்குள் கொம்பு முளைத்து, சிரிப்பு பூவாக சொரிந்தன. அவன் ஓரிடத்தில் நிற்கவில்லை. ஒவ்வொரு வீடாக, மரமாக சுற்றி வந்தான்.
குயிலி, அவன் பின்னே ஓடவில்லை. அவளது வீட்டில் நின்றபடி சுப்ரமணியை வெறிக்கப் பார்த்தாள். இத்தனை நாட்கள் தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தவர்கள் சுப்ரமணியின் பின்னே ஓடுவதையும் அவனையே சுற்றுவதையும் பார்க்க அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
அத்தனை பேரையும் தனக்குப் பின்னால் கொண்டுவர நினைத்தாள் குயிலி. அதற்கு என்ன செய்யலாமென்று தலையைக் குலுக்கி யோசித்தாள். அவளுக்குள் ஒரு யோசனை துளிர்விட்டது.
‘‘நான் டீச்சர் விளையாட்டு விளையாடப் போறேன். என் கூட விளையாட வாரவங்க வரலாம்…” உரக்கக் கத்தினாள். சுப்ரமணிக்கும் பின்னே ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் அவளை நோக்கித் திரும்பினார்கள்.
‘‘நான் வாரேன்’‘, ‘‘ நானும் வாரேன்”, ‘‘ என்னையும் சேர்த்துக்கோடி”
அவளைச் சுற்றிலும் பெருவட்டம்.
‘‘யாராம் டீச்சர்?”
‘‘சாட், பூட், திரிஸ் போடுவோம். யாரு ஜெயிக்கிறாங்களோ, அவங்கதான் டீச்சர்.”
‘‘அய்,.. விளையாடலாமே.”
‘‘நாங்க டீச்சர் விளையாட்டு விளையாடப் போறோமே. எங்கக் கூட விளையாட வாரவங்க வரலாம்…” கவிதா தன் பங்குக்குக் குரல் கொடுத்தாள். அக்குரலைக் கேட்டதும் சுப்ரமணியின் பின்னே ஓடிக்கொண்டிருந்தவர்கள் நின்று திரும்பிப் பார்த்து அவனிடமிருந்து விலகி, குயிலியை நோக்கி வந்தார்கள்.
நான்கைந்து பேர் என்றளவிலிருந்து வட்டம் இருபது பேராக விரிந்தது.
‘‘சாட், பூட், திரிஸ்…”
‘‘போடு சாட், பூட், திரிஸ்..”
அந்த இடத்தில் ஒரே குதூகலச் சத்தம். யார் டீச்சர் என்பதைக் காணப் போகிற உற்சாக உற்சவம். ஒவ்வொரு ஆளாக விலக கடைசியில் பூமாதேவியும் குயிலியும் எஞ்சி நின்றார்கள். இவர்களில் யாராம்
டீச்சர்..? முதலில் அவுட்டான சித்ராவைச் சேர்த்துக்கொண்டு சாட், பூட், திரிஸ் போட்டார்கள். குயிலி டீச்சருக்குத் தேர்வாகியிருந்தாள்.
‘‘அய், குயிலி டீச்சர்…” அத்தனை பேரும் குதியாட்டம் போட்டார்கள். அவரவர் வீட்டுக்கு ஓடி புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள். டீச்சர் விளையாட்டு பள்ளி மைதான வேப்பமரத்தடியில் தொடங்கியது.
பள்ளிக்கூடத்து மைதானம் மூன்று மாத குப்பைச் சருகுகளாக இருந்தது. அருகிலிருந்த குஞ்சுப் பழம் செடியின் தழைகளை ஒடித்து தூர்வையாக்கி, மைதானத்தைக் கூட்டிப் பெருக்கினார்கள்.
‘‘ஸ்கூல் அட்டேன்சன், ஸ்டான் அட் ஈசி…”
‘‘குட்மானிங்க் டீச்சர் ”
‘‘குட்மானிங்க் குட்மானிங்க் ” என்றாள் குயிலி.
குயிலி கையில் ஒரு ஸ்கேல் இருந்தது. பிள்ளைகளின் தலையில் மெல்ல வைத்தபடி எண்ணினாள். ‘‘ இன்னைக்கு யாரெல்லாம் ஸ்கூலுக்கு வரலை?”
‘‘சுப்ரமணி வரலை டீச்சர்.”
‘‘ஏன் வரலை?”
‘‘அவன் செல்போனை வச்சிக்கிட்டு ரொம்ப சீன் காட்டுறான் டீச்சர்”
பூமாதேவி அப்படியாகச் சொன்னதும் அத்தனை பேருக்கும் சிரிப்பு வந்தது. குயிலியும் கூட தான் டீச்சர் என்பதை மறந்து சிரித்தாள்.
‘‘சரி, சரி. சிரிப்பை நிறுத்துங்க…” என்றதும் அத்தனை பேரும் வாய்க்கு விரலைக் கொடுத்து சிரிப்பைக் கொடும்புக்குள் அதக்கினார்கள்.
‘‘இன்றைக்கு நான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய தமிழின் இனிமை பாடல் நடத்தப் போகிறேன்”
‘‘நடத்துங்க டீச்சர்.”
“நான் பாடிக்கொண்டே ஆடுவேனாம். நீங்க என்னைப் போல பாடி ஆடுவீங்களாம்…”
‘‘செய்றோம் டீச்சர் ”
‘‘கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும் ”
‘‘இம், இம்..அப்படித்தான். இன்னும் சத்தமாப் பாடுங்க.
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்
பாகிடை ஏறிய சுளையும்”
குழந்தைகள் பாடுவதை நிறுத்தி, தெருவை வேடிக்கைப் பார்த்தார்கள். ‘‘அங்கே என்ன வேடிக்கப் பார்க்குறீங்க?” குயிலி கேட்டாள்.
‘‘டீச்சர், சுப்ரமணி வர்றான் டீச்சர்.”
குயிலி, கையில் வைத்திருந்த ஸ்கேலை உள்ளங்கையில் தட்டியவளாக எட்டிப் பார்த்தாள். தூரத்தில் சுப்ரமணி புத்தகப் பையுடன் மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தான்.