“ஜதார்த்தம்” …. சிறு கதை …. எஸ்.ஜெகதீசன்…. கனடா.
மண்டப வாசல் ஆராவாரமின்றி அமைதியாக காணப்பட்டது.
நூலாசிரியர் மட்டும் அங்குமிங்குமாக உலவினார். முகத்தில் ஒரு பதட்டம் தெரிந்தது.
வெளியீட்டு விழா ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நேரத்திற்கும் அரை மணி நேரம் முன்பதாகவே சென்றிருந்த என்னை கரம் கூப்பி வரவேற்றார்.
மேலும் ஒன்று தேறியது என்று மனதுக்குள் நினைத்திருக்கக்கூடும்.
பல்கலை கழக மாணவர்களுக்கு இது ஒரு பாட நூல் போலாகும். இதனை பாடமாகக் கருதும் ஏனையோருக்கோ இதுவே ஒரு பல்கலைக் கழகம் போலாகும் என்றேன்.
சிரித்தவாறே எப்படி என்றவர்… சுதாகரித்துக் கொண்டு எப்படித் தெரியும் என்றார்.
ஏற்கனவே பத்திரிகையில் தொடராக வந்த போதே தொடர்ந்து வாசித்திருந்ததால் தெரியும் என்றேன்.
விழா மண்டபத்துள் நாலைந்து பேர் எட்ட எட்ட இருந்தார்கள். அருகிலிருந்த சிற்றுண்டி அறைக்குள் பத்துப்பதினைந்து பேர் சிற்றுண்டிகளுடன் மிக நெருக்கமாக இருந்தார்கள்.
வெளியிடப்படவுள்ள புத்தகம் மேசை ஒன்றில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு காவலிருந்த பையனை நோண்டிக்கொண்டிருந்தது திறன்பேசி.
அம்மாடி! எவ்வளவு பென்னம் பெரிய புத்தகம் என்று கூறியவாறே கதிரையில் அமர்ந்தவரது கண்கள் அந்தப் புத்தகத்தை விடவும் பெரிதாக விரிந்தன.
இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேலானது என்றால் பாருங்களேன் என்றவாறே ஏற்கனவே அங்கிருந்த அடுத்தவர் அதற்கு மேல் ஒரு வார்த்தையும் வெளிவராமல் அதிர்ச்சியில் உறைந்தார்
ஆராலை தூக்க முடியும்? அதுவும் வயது போனவர்களால் கிஞ்சித்தும் இயலாது என்றார் வாலிபத்தில் பளு தூக்கும் பயில்வான் எனப் பெயர் பெற்ற இன்னுமொருவர்.
வருடத்துக்கு ஐம்பது புத்தக வெளியீடுகள் என்றால் எங்கு செல்வது என்ற கேள்வியிலும் பார்க்க , அவற்றை வாங்கி என்ன செய்வது என்ற கேள்வியிலும் பார்க்க , அவற்றை வீட்டில் எங்கு வைப்பது என்ற கேள்வியே இப்பொழுதெல்லாம் மனதில் மேலோங்குகின்றது எனக் கவலைப்பட்டார் ஒருவர்.
எங்களுக்கும் வாழ்க்கைச் செலவு இருக்கு , எங்களுக்கும் வசதியீனம் இருக்கு எண்டதை உவர்கள் உணர்வதில்லையா? ஆர்வமுள்ள வாசகர்கள் கோடீஸ்வரர்களாகவே இருப்பார்கள் என கருதுவது எந்த வகையில் ஞாயம்? என்றவரின் கோபம் வெறும் காழ்ப்புணர்ச்சியிலிருந்து வரவில்லை.
உங்களுக்கு புத்தகத்தால் ஒரு எழுத்துக் கூட பிரயோசனம் இராது. ஆனாலுமென்ன? உங்களின் ஜென்டில்மன் ஷிப்பை – அது தாங்க கண்ணியத்தை – காட்டவென நீங்கள் புத்தகத்தை உங்களுக்கு கட்டுப்படியாகாத விலை எனத் தெரிந்தும் வாங்குவீர்கள். பிறகு ஏன் குய்யோ முறையோ எனக் குத்தி முறிவீர்கள் என்றார் ஜதார்த்தவாதி என மக்கள் மத்தியில் பெயரெடுத்த ஒருவர்.
மெத்த மெத்தச்சரி! இன்றைய நூலாசிரியரை பின்னர் ஒரு சமயம் காண நேரிடின் ஏற்கனவே நீங்கள் வெளியீடு செய்திருந்த உங்களின் புத்தக மொன்றை அன்பின் அடையாளமாக அவருக்குக் கொடுத்துப் பாருங்கள். வாங்கவே மாட்டார். கைமாறு செய்ய
வேண்டிய கடமையாவது மண்ணாவது. உங்களுககு காசு தருவதற்கு அவர் என்ன முட்டாளா? ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி தனது ஜென்டில்மன் ஷிப்பை அவர் காட்டுவார் என்றவருக்கு வெகுஜன விரோதி என்ற பட்டம் மக்களிடம் உண்டு.
இந்த நூலை வாங்க எனக்கு விருப்பமில்லை. மிக அதிக பணத்திற்கு ஒரு நூலை வாங்கும் வசதியீனம் , ஒரு வரலாற்றுப் பொக்கிசமான அந் நூல் வீணே எமது மேசையில் திகழ்வதை விட அதனை நன்கு பயன் படுத்தக் கூடிய ஒருவரின் கையில் தவழ்வது பெருமிதத்துக்குரியது என்ற ஆழ் மன எண்ணம் , ஏற்கனவே பத்திரிகையில் வந்த வேளையிலே தவறாமல் வாசித்த மனப் பதிவு , வாங்காது விடின் உங்களுக்கோ எனக்கோ பாதிப்பு வராது என்ற தளராத அபிப்பிராயம். இது போன்ற எத்தனையோ காரணங்களில் ஒன்றைத்தன்னும் அவருக்கு நேரடியாக சொல்லும் தைரியம் உங்களில் எவருக்கேனும் வராமல் போனதேன்? என்றார் அவருக்கு நெருக்கமானவர்.
நீங்கள் வேறு! ஒன்றுக்கு இரண்டாய் வசூலிக்கும் ‘வசூல் மேளா’ ஆக மாறி விட்ட மொய் எழுதும் பழக்கம் விரைவில் புத்தக வெளியீடு என்ற வடிவிலும் ஊடுருவி விடுமா? உப்படியான வெளியீடுகளுக்கு போகாமலிருந்தால் வீடுகளுக்கே நேரில் வருவதுடன் அவர்களின் விலை போகாத முன்னைய வெளியீடுகளையும் சேர்த்து இரட்டை விலையில் கட்டி அடித்து விடுவார்களோ? என்ற நடுக்கம்தானே பலரிடம் நிலைகொள்கின்றது என்றார் பழைய படைப்பாளி.
ஆனால் வாங்கிய பின் ஏண்டா இதை வாங்கினோம் என மனதுக்குள் புழுங்காதவர்கள் எவருமிருப்பின் அவர்களைப் பற்றி ஒரு வரியாவது புத்தகத்தில் இருக்கும் என்பது சர்வ நிச்சயம்.அதனால் எப்படி அல்லது எங்கு வெளியிடுகின்றோம் என்பதைப் பொறுத்தே எதுவும் மதிக்கப்படுகின்றது என்றார் ஓர் அனுபவஸ்தர்
பல்கலைகழக மாணவருக்கான புத்தகத்தை பாலர் வகுப்பில் பயில்வோருக்கோ அல்லது பாலர் வகுப்பிற்குரிய புத்தகத்தை பல்கலைகழக மாணவருக்கோ பொருத்தமற்ற முறையில் தடுமாறி , தடம் மாறி விற்பனை செய்வதுதானே பிரச்சனையே! என ஏவறை விட்டவரின் கவனம் முமுவதும் அடுத்த ரவுண்ட் சிற்றுண்டி மீதிருந்தது.
சும்மா கழுவிக்கழுவி ஊத்தாதீர்கள். “கழுவப்பட்ட பொருட்கள் சுத்தமாகி விடுகின்றன. ஆனால் அவற்றை கழுவிய தண்ணீர்தான் அழுக்காகி விடுகின்றது. புறம் கூறுவோர் நிலையும் இதுதான்” என்று இப் புத்தகத்தில் ஒரு வசனம் வருகின்றது. அது உங்களுக்கானதாக ஆகிவிடப் போகிறது என்றார் வரும்போதே புத்தகத்தை தட்டிப் பார்த்த ஆர்வலர்.
உங்கள் எவரையேனும் விருப்புடன் வாசிக்கலாம் என வலிந்து அவர் அழைத்தாரா? விருப்புடன் சிக்கலாம் வா என அதனை உங்கள் இஷ்டப்படி மாற்றுவீர்கள். வசதியெனின் வாருங்கள் என்றுதானே வரவழைத்தார். அதனையும் பணமிருந்தால் வாருங்கள் என மாற்றுவதும் நீங்கள். புத்தகத்தின் சிறப்பை பற்றியோ அல்லது அதன் மேம்பாட்டை பற்றியோ ஏதேனும் அறியாமல் சும்மா வெறும் வாயை மெல்லாதீர்கள். அவர்களுக்கும் அச்சு செலவு போன்ற இதர செலவுகளும் இருக்காதா? எனத் தொடர்ந்தது உறவினர் ஒருவரின் கரிசனை.
கூட்டத்தில் பேச முடியாதவர்கள் , கூட்டமாகச் சிற்றுண்டிச் சாலை உரையாடலில் அல்லது சமாவில் அல்லது கச்சேரியில் ஐக்கியமாகியிருந்ததை முடிவுக்கு கொண்டு வந்தது கூட்டம் ஆரம்பமாகவுள்ள அறிவிப்பு.
மேடையில் அமர்ந்திருந்தவர்களை மறைத்தன மேசையில் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்கள்.
நன்நாங்கு புத்தகங்களை தூக்கி கதிரைக் கால்களின் கீழ் அடுக்கி விட உத்தேசிப்பது போல கமிராக்காரர் சுழண்டு சுழண்டு அவற்றை விதம் விதமான கோணங்களில் படம் பிடித்தார்.
சிறப்புரை , சிரிப்புரை , வியப்புரை , விதப்புரை , நயப்புரை , பயப்புரை , பரப்புரை வழங்கவுள்ள சான்றோர் எவ்வித பதற்றமுமின்றி அமர்ந்திருக்க நூலாசிரியரை நச்சரித்தோ
அல்லது இம்சைப்படுத்தியோ மேடையில் தமக்கென ஏதாவது ஒரு பணியை பெற்றுக்கொண்ட ஓரிருவர் மட்டும் இலவசமாக புத்தகம் பெற்ற தென்பில் அவர்களின் நோக்கம் நிறைவேறிய திருப்தியில் வாயெல்லாம் பல்லாக காணப்பட்டதை கரிசனையுடன் ஒளிப்படுத்தினார் வீடியோ நிபுணர்.
அதிலும் ஆய்வுரைக்காக அமர்தப்பட்டிருப்பவர் மூன்று மாதங்களுக்கு முன்பே தனக்குப் புத்தகம் கிடைத்திருந்தும் நேற்று இரவுதான் புத்தகத்தின் முதலிரு பக்கங்களையும், நடுவில நாலையும், கடைசி ஆறையும் கடாச முடிந்தது என எவ்வித சங்கோஷமுமின்றி அருகிலிருந்தவரிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்ததை ஏதேச்சையாக ஒன்று விடாது பெரிது படுத்தியது நேரடி ஒலிபரப்பாளரின் ஒலிவாங்கி.
சம்பிரதாய சங்கடங்களுடன் – தவறு – சடங்குகளுடன் கூட்டத்தை ஆரம்பித்து சபையை எழுத்தி இருத்தினார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.
அரிவரியில் தன்னுடன் படித்த நூலாசிரியருக்கு சிலேட் பென்சில் இரவலாக கொடுத்திருந்தது எழுபது ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னமும் நினைவில் நிற்பதாக அறிமுக உரையை ஆரம்பித்தவர் அந்த அரிவரியை தாண்டவே அரை மணித்தியாலம் எடுத்தார்.
வாழ்வின் ஜதார்த்தங்களையும் வெற்றிக்கான சூத்திரங்களையும் உணர்த்தும் இந்நூல் தனித்துவம் பெறுகின்றது. நாம் அறிந்ததாக பலது இருந்தாலும் அதன் வழியாக கடத்தப்படும் நீதி விழிகளை உயர வைக்கின்றது. புத்தகத்தின் கனமான கட்டமைப்பு கவனத்தை ஈர்க்கின்றது என்றார் நயப்பு.
தமிழில் தன்னம்பிக்கை நூல்கள் பல வந்துகொண்டிருக்கும் காலம் இது. ஆனால் ஒரு வெற்றியாளரே தனது அனுபவங்கள் வாயிலாக வெற்றியை நோக்கி வழி நடத்திச் செல்வது உளப்பூர்வமானது. ஏதோ டயறிக் கிறுக்கல்கள் போல் அன்றி தரமும் வரையறைகளும் மிகுந்து காணப்படுவது அவரது ஆளுமையை வெளிப்படுத்தி புதிய தென்பைத் தருகின்றது என்றார் வியப்பு.
இது மறக்க முடியாத ஓர் அன்பளிப்புக்குரிய நூல் ஆகும். வாங்கிய புத்தகத்தை வாசியாது வீணே வைத்திருப்பது துரோகம் என்பார்கள் அறிஞர்கள். வாசகர் மீது கிஞ்சித்தும் இரக்கமின்றி திணிக்கப்படுகின்றது என பார்த்தவர்கள் சொல்லலாம். படித்தவர்கள் சொல்ல மாட்டார்கள் என்றார் பயப்பு.
இந்த நூல் தோற்றத்தில் மட்டுமல்ல தேற்றத்திலும் பிரமாண்டமானது. அனுபவ அறிவை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதில் முத்திரை பதிப்பது இதன் சிறப்பு இந்தத் துறையில் பரிணமிக்க விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒர திரையாக இருக்க மாட்டாது. நிச்சயம் ஒரு திசையாகவே இருக்கும் என்றார் பரப்பு.
ஒரு துறை பற்றி அறிய விளைவோருக்கும் ஆராய முனைவோருக்கும் நல்லதொரு துணை நூலாக ஆவணமாகியுள்ளது என்றார் சிறப்பு.
உங்களுக்கு நன்றி கூற என்னிடம் வார்த்தைகளே இல்லை என்றவாறே மைக்கைப் பிடித்தார் ஏற்பு. என்னை நானே நிருபித்து கொள்வற்காகவே எழுதத் தொடங்கினேன் என்று எண்ணத் தோன்றகின்றது. தெரியப்படாத பல விடயங்களை தெரியப்படுத்தியுள்ளேன் என்ற நிறைவு நெஞ்சில் நிறைகின்றது. அவர் பேசியது மிச்சம் ஒன்றும் காதில் விழவில்லை.
சனம் வரிந்து கட்ட – மன்னிக்கவும் வரிசை கட்ட – முண்டியக்கத் தொடங்கிவிட்டது.
முன்னொரு காலத்தில் மதமாற்றிகளை கண்டு மருண்ட சனம் இப்பொழுது புத்தகம் வெளியிடுபவர்களை கண்டு வெருளுது அல்லது எரிச்சலடைகின்றது என்ற பொது வெளி அபிப்பிராயம் பொய் போலிருந்தது அவர்களின் முண்டியடிப்பு.
புத்தகம் வாங்குபவர்கள் ஒன்றில் கேடியாக இருக்க வேண்டும் அல்லது கோடிகளில் புரள வேண்டும் என்றார் அந்த வரிசையில் ஆகக் கடைசியாக நின்றவர் தனக்கு முன் நின்றவரின் முதுகை சுரண்டி.
புத்தகம் வாங்குபவர்கள் ஒன்றில் கேடியாக இருக்க வேண்டுமோ? உது என்னப்பா புதுக்கதையாக் கிடக்கு என்றவாறே 360 பாகையில் முதுகைத் திருப்பினார் அவருக்கும் முன்பாக நின்றவர்.
கேடி தெரியாதோ? கேடி என்ன செய்வான் ஏமாற்றுவான். மோசடி செய்வான். வில்லங்கமாக விற்பனை செய்து அந்தரங்கமாக ஒரு சிலரையாவது ஏமாளிகள் ஆக்குவதால்தான் அடுத்த நிகழ்ச்சிக்கு செல்லாத காசையோ அல்லது வெற்று என்வலப்பையோ கொடுத்து அவர்களும் கோமாளிகள் ஆகின்றார்கள்.
ஆனாலுமென்ன? பெறுமதி அற்ற சிலர் சொற்பமான காசை அற்பத்தனமாகக் கொடுத்து நூலை பெற்றுக்கொண்டனர் என்ற கதைதானே அரசல்புரசலாக வெளியே உலவிடப் போகின்றது. பெரு மூச்சுடன் தொடர்ந்தார் அடுத்தவர்.
மெத்தச்சரி. திறந்த வெளியில் அவர்களது பெயர்கள் அம்பலப்படுத்தும் வரை அவர்கள் திருந்தப் போவதில்லை என்று மேடையில் கூச்சலிடத் தெரிந்தவர்களுக்குக் கூட அவர்களில் ஒருவரது பெயரைத் தன்னும் உரத்துக் கூறத் தென்பில்லை என்றார் இன்னுமொருவர் அப்பாவித்தனமாக.
ம்…ஊருக்குப் புதுசா? அவர்கள் எந்த அடையாளத்தை விட்டுச் செல்கின்றார்கள் அவர்களை அடையாளப்படுத்துவதற்கு? என்றவர் பழைய பொலிஸ்காரர்.
இன்னுஞ் சிலர் மகா கெட்டிகள். வெளியிடப்படும் புத்தகத்தின் விலை முன் கூட்டியே தெரிந்திருந்தால் அதனிலும் அரைவாசிக் காசை மட்டுமே தம்முடன் எடுத்துச் செல்வார்கள். அதற்கு வெளியீடாளர்கள் பரிதாபம் காட்டினால் இவருக்கு லாபம். உடன்படாவிடினும் இவருக்கு நட்டமில்லை. இலவசமாக கிடைத்த தேநீரும் சிற்றுண்டியும் – ஏதோ உலக வங்கியில் பெற்ற மீளளிக்கத் தேவையற்ற கடன் – தந்த திருப்தியுடன் வீடு திரும்புவார்கள்.
இவர்கள் எவ்வளவோ மேல் என நினைக்க வைக்கும் இன்னொரு சாரார் இருக்கின்றார்களே? அவர்களைப் பற்றித் தெரியுமா?
யாரப்பா அந்தக் கில்லாடிகள்? சிலர் திட்டமிட்டே தமது பர்ஸை வீட்டில் விட்டு விட்டு வருவார்கள். கேட்டால் ‘தீர அயத்துப் போனன்’ என்பார்கள் சற்றே வயிற்றெரிச்சலுடன். எவருமே கேட்காவிடின் வெறும் என்வலப்பைக் கூட ஓஸியில் தேடி கொடுப்புக்குள் சிரிப்புடன் மண்டபம் முழுதும் அலைவார்கள்.
தேவையற்ற பொருட்களை மீளளிக்கும் நல்ல நடைமுறை பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.அது புத்தக விற்பனையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ஏதோ ஒரு காரணமாக வாங்கிய புத்தகம் பிடிக்காமலிருந்தால் அதனை திருப்பிக்கொடுத்து செலுத்திய பணத்தை மீளப்பெற்றுக் கொள்ளும் நன்நிலை வரவேண்டும்.
சுயநலமற்ற பரந்த மனப்பான்மை நூலாசிரியருக்கு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
வங்கி கடன் அட்டை மூலமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ அல்லது மின் பரிமாற்றம் மூலமாகவோ நூல்கள் கையளிக்கப்படுமெனின் தகுந்த ஆதாரம் வெளியீட்டாளருக்கும் கிடைக்கும். ஏமாற்றுபவர்களுக்கும் இடமிராது. மீளளிக்கும் வசதியில் சிரமம் இல்லாதிருக்கும் போன்ற பல நன்மைகள் உண்டு.
அட்லீஸ்ட் நல்ல மனங்களையாவது சம்பாதிக்கலாம்.
அவர்களை எப்படி நம்புவது? வாசித்து விட்டும் திருப்பி தருவார்கள் என்று நேர்மையில் வெளியீட்டாளர்கள் சந்தேகப்படுவாரெனின் ‘ வெற்று என்வலப் வெற்றுவேட்டுகளின்’ கயமை அதிகரிப்பதையும் தடுக்கவும் முடியாது. தவிர்க்கவும் முடியாது!
புத்திசாலிகள் மட்டுமே தவறுகளிலிருந்து பாடம் கற்கிறார்கள்.
விரும்பியவர்கள் கைகளில் புத்தகம் தெரிவது விழாவின் சுவை. விரும்பியவர்கள் கைகளில் பலகாரப் பாசல் தெரிவது விழாவின் சுமை.
தெரிஞ்ச கதை! என்ற தலைப்பு இக் கதைக்குப் பொருத்தமாயிருக்குமோ என்ற யோசனை உள்ளத்துள் அல்லாடியது.
ஒரு புத்தகமும் கொஞ்சப்பேரும் என்று கூட வைத்திருக்கலாமோ என்ற எண்ணமும் வருவதும் போவதுமாக இருந்தது.
இதயம் துடித்ததற்கும் மேலாக குதித்தது என்னும் ஒரு நிலை விழா நிறைவில் வந்தால் மட்டுமே அது விழாவின் வெற்றி!