இலக்கியச்சோலை

மானிடர் ஆத்மாவை வாய்மொழிப் பாடல்களாக வழங்கிய கவிஞி அனார்! … முருகபூபதி.

கிழக்கிலங்கை சாய்ந்தமருதைச்சேர்ந்த இஸ்ஸத் ரீஹானா எம். அஸீம் அவர்கள், ஈழத்து இலக்கிய உலகில் மட்டுமன்றி தமிழகத்திலும் நன்கு அறியப்பட்ட கவிஞி. ஆனால் , இவரை “அனார்” என அழைத்தால்தான் இலக்கிய உலகில் தெரியவரும்.

சிறுவயதிலேயே சாய்ந்தமருது கிராமத்தின் நாட்டார் பாடல்களை உள்வாங்கியவாறு, தனது மழலை மொழியில் பாடிய சிட்டுக்குருவி.

ஏன் அவருடைய பால்யகாலத்தை சிட்டுக்குருவியுடன் ஒப்பிடுகின்றேன் என்றால், அந்தப்பருவம் சுதந்திரமானது. சிட்டுக்குருவியும் சுதந்திரமான பறவை.

அனார், தமது குழந்தைப்பருவத்தை வளர்ந்து விட்ட பின்னரும், மறைக்காமல் மறக்காமல் குடும்பத்தலைவியாகிவிட்ட பிறகும் வெள்ளை உள்ளத்தோடு சொல்கிறார்.

” என்னுடைய குழந்தைப்பருவத்தை, மென்மையான கனவு போன்ற உலகம் சூழ்ந்து வியாபித்திருந்தது. அந்தக்கனவுக்குள்ளே தும்பிகளைப்போல அலைந்து திரியும் சிறுவர் படைக்கு நானே தலைவியாக இருந்தேன்.

அணில் மிச்சம் வைத்த பாதிப்பழங்களை தின்பதற்காகவோ, அணிலுக்கென எந்தவொரு பழத்தையும் விட்டுவைத்துவிடக்கூடாது என்ற பொறாமையினாலோ என்னுடைய மாலைப்பொழுதுகள் அனைத்தும் மரங்களிலேயே கழிந்தன.”

இந்த வரிகள் அனாருடைய ” பொடு பொடுத்த மழைத்தூத்தல் – கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள் ” என்ற நூலில் பதிவாகியிருக்கிறது.

கவிஞர்களின் இளமைக்காலம் குறிப்பாக பால்ய பருவம் இயற்கையுடன் இணைந்திருக்கிறது. பாரதியும் தாகூரும் எமக்கு இதுவிடயத்தில் சிறந்த தகவல்.

எப்பொழுதும் வெற்றிலை குதப்பிக்கொண்டு பன்பாயில் அமர்ந்து நாட்டார் பாடல்களைப் பாடும் அந்த மூதாட்டி பெத்தாதான் அனாரின் மானசீகக்குரு. அவரிடம் கற்றதையும் பெற்றதையும் வீட்டிலும் வெளியிலும் பாடித்திரிந்த இந்த இளம் சிட்டுக்கு ” அப்படிப்பாட வேண்டாம்” என்று வீட்டில் தண்டனையும் கிடைத்திருக்கிறது.

எப்படி…? அடித்தார்களா…? இல்லை. தோப்புக்கரணம் போடச்சொன்னார்களா… இல்லை. முழங்காலில் நிற்கச்சொன்னார்களா….? இல்லை. எந்த வாயிலிருந்து மழலை மொழியில் அந்த பெத்தா என்ற மூதாட்டியிடம் கேட்டிருந்த நாட்டார் பாடல் பிரசவமானதோ, அந்த வாயில் இரண்டாக பிளந்த பழுத்த மிளகாயை வைத்து தேய்த்திருக்கிறார்கள். மனதில் உள்வாங்கிய அந்த நாட்டார் பாடல்களை அந்த மிளகாய் எரிவுக்குப்பயந்து பாடாவிட்டாலும் – அவை அனாரை விட்டு மறையவே இல்லை. அனாருக்குள் அந்த பெத்தா போன்று வாழ்ந்திருக்கிறது.

அந்தப்பாடல்களை அனார் வளர்ந்து கவிஞி ஆனதும் நூலாக்கியிருக்கிறார். ஆனால், அதனைக்காண்பதற்கு அந்த மிளகாய் வைத்து பயமுறுத்திய மூத்த சந்ததி இன்று இல்லை. அந்தப்பெத்தாவும் இல்லை. ஆனால் – அந்த சாகாவரம் பெற்ற கவிதைகள் உயிர்வாழ்கின்றன. தொடர்ந்தும் வாழும்.

இயற்கையுடன் இணைந்து மானிடர் ஆத்மாவை வாய்மொழிப்பாடல்களாக வழங்கிய அந்த நாட்டார் கவிதைகளை இன்றைய தலைமுறைக்குச்சொன்னவர் அனார்.

அனார் பற்றி எழுதும்பொழுது எனக்கு கரிசல் இலக்கிய வேந்தர் கி.ரா. ( கி.ராஜ நாரயணன் ) நினைவுக்கு வருகிறார். அவரும் நாட்டுப்புறக்கதைகளை தொகுத்தவர். நாட்டாரின் சொலவடைகளை தமது படைப்பிலக்கியத்தில் எழுதியவர். நாட்டார் இலக்கியத்திற்காக தமது அறுபது வயதுக்குப்பின்னர் புதுவை பல்கலைக்கழகத்தில் விருந்தினர் அடிப்படையில் விரிவுரையாற்றச் சென்றவர்.

இன்றும் என்னால் எனது பாட்டி சொல்லித்தந்த கதைகளை மறக்க முடியவில்லை. அதுபோன்று அனாருக்கும் அந்தப்பெத்தாவே இலக்கிய ஞானாசிரியராக வாழ்ந்திருக்கின்றார்.

அனார் பற்றி தமிழச்சி சுமதி தங்கபாண்டியனும் என்னிடம் சொல்லியிருக்கிறார். அவ்வப்பொழுது அனாரின் கவிதைகளை படித்திருக்கின்றேன். ஆனால் – நேரில் சந்தித்திருக்கவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழச்சியை சந்தித்தபொழுது அவர் தனது சில நூல்களைத்தந்தார். அதில் ஒன்றில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில், ஈழக்கவி அனார் எனக்குறிப்பிட்டு அனாரின் கவிதையையும் சிலாகித்து குறிப்பிட்டிருந்தார். தமிழச்சி பற்றிய எனது கட்டுரையில் இந்தத்தகவலையும் பதிவு செய்திருக்கின்றேன்.

ஆனால் – இந்தத் தகவல் அனாருக்குத் தெரியாது. பெயரளவில் பரஸ்பரம் தெரிந்து கொண்ட நாம் முதல் முதலில் சாய்ந்தமருதில் சந்தித்துகொண்ட தருணம் சற்று வித்தியாசமானது.

அவுஸ்திரேலியாவிலிருந்து எமது புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் நீண்டகாலம் இயக்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் ( இலங்கை மாணவர் கல்வி நிதியம் ) உதவியில் கல்வியைத் தொடரும் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்ட மாணவர்களை சந்திப்பதற்காக சில வருடங்களுக்கு முன்னர் சென்றிருந்தேன்.

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் திருமதி சிவமணி நற்குணசிங்கம் அவர்களின் வீட்டில்தான் தங்கியிருந்தேன்.

மாணவர் சந்திப்பு முடிந்து, அவரது வீடு திரும்பியதும், “ கவிஞி அனாரை பார்க்கவேண்டும் . “ என்று திரு. நற்குணசிங்கம் அவர்களிடம் சொன்னேன். அவர் வங்கி ஒன்றில் முகாமையாளராக பணியாற்றியவர்.

அனார் என்ற கவிஞி பற்றி அறிந்திருந்த அவருக்கும், அனார் எங்கிருக்கிறார்? என்பது தெரியாது.

அவரது வீட்டு அறைக்குச்சென்று, எனது கணினியை திறந்து, அவுஸ்திரேலியாவிலிருக்கும் இலக்கிய நண்பர் நடேசனுக்கும், கிளிநொச்சியில் வதியும் மற்றும் ஒரு இலக்கிய நண்பர் கருணாகரனுக்கும் மின்னஞ்சலில், “ நான் தற்போது நீலாவணையில் நிற்பதாகவும், கவிஞி அனாரின் தொடர்பிலக்கம் தேவைப்படுகிறது. “ என்று ஒரு குறுஞ்செய்தியை மின்னஞ்சலில் அனுப்பினேன்.

அதன்பிறகு கணினியை மூடிவைத்துவிட்டு, வெளியே வருகின்றேன். அடுத்த கணம், எனது கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.

“ அண்ணா, இது அனார். எங்கே நிற்கிறீர்கள்..? இருப்பிடத்தை சொல்லுங்கள். என் கணவரை அனுப்பிவைக்கின்றேன். அவர் உங்களை அழைத்து வருவார். “ என்ற குரல் வந்தது.

எனக்கு அவ்வாறு இன்ப அதிர்ச்சியூட்டிய அனாரைப்பார்ப்பதற்கு நண்பர் நற்குணசிங்கமே அழைத்துச்சென்றார்.

அன்றுதான் முதல் முதலில் இருவரும் சந்தித்தோம்.

அனார் பற்றி மேலும் சில தகவல்களை இங்கு சொல்வது பொருத்தமானது. 2008 இல் ஒரிசா மாநில அரசு நடத்திய சார்க் நாடுகளைச்சேர்ந்த இளம் கவிஞர்களின் மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே ஒரு ஈழத்து தமிழ் கவிஞர். இலங்கையில் சாகித்திய விருது, ஜனாதிபதி விருது, கனடா இலக்கியத் தோட்டத்தின் விருது, தமிழ்நாட்டின் விஜய் தொலைக்காட்சியின் இலக்கியத்துறைக்கான ( சிகரம் தொட்ட சாதனைப்பெண்) விருது என்பவற்றை பெற்றவர்.

ஓவியம் வரையாத தூரிகை, எனக்கு கவிதை முகம், உடல் பச்சை வானம், பொடு பொடுத்த மழைத்தூத்தல், பெருங்கடல் போடுகிறேன் என்பவற்றை இலக்கிய உலகிற்கு வரவாக்கியவர்.

ஊஞ்சல் என்ற கவிதையில் அன்றைய எமது உலகத்தையும் இன்றைய எமது வாழ்வையும் உயிர்த்துடிப்புடன் மீள முடியாத ஏக்கத்துடன் – எங்கள் ஊஞ்சலைத் தவறவிட்டோம் என்று முடிக்கிறார். ஆம், நாம் இழந்துவிட்டது அநேகம்தான்.

கவிஞி அனாரின் படைப்புகள் பற்றி பேராசிரியர் எம். ஏ. நுஃமான், படைப்பிலக்கியவாதி எஸ். ராமகிருஷ்ணன், தமிழச்சி சுமதி தங்கபாண்டியன் உட்பட பலரும் விதந்து குறிப்பிட்டு ஏற்கனவே எழுதியுள்ளனர்.

புதிய தலைமுறை கவிஞர்கள் படிக்கவேண்டிய தொகுப்புகள் அனாருடையவை.

—0—

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.