“முடிச்சு” ….. சிறுகதை ….. சோலச்சி.
“ஒலகப் பணக்காரனுகள்ல செந்திலும் ஒருத்தன். செந்தில ரொம்ப நாள ஆசுப்பத்திரில ஒடம்பு சரியில்லனு வச்சுருந்தானுக. இவனும் இன்னும் ஒன்னு ரெண்டு பேரத் தவிர வேற யாரும் அந்த ஆள ஆசுபத்திரில உசுரோட பாத்ததே இல்லயாமே”
“செந்திலும்தான் என்ன… பெரிய யோக்கியனா… கொறச்ச வெலக்கி கொடுத்தா போண்டியா போக மாட்டானா. துணிக்கடைக்காரன் தள்ளுபடினு சொல்லி ஏமாத்துறான்ல.. அதுமாறிதான். எவனுக்குய்யா மக்களுக்கு நல்லது செய்யனும்னு ஆச இருக்கு”
“ஏன்…காமராசரு…. கக்கன்லாம் இங்கதானே வாழ்ந்தாங்க. எங்க சித்தூர் வெள்ளாத்துல கக்கன் கட்டுன பாலம் இப்பவும் கம்பீரமா இருக்கே”
”இது மட்டும் நல்லா பேச கத்துக்கிட்ட”
“செத்துப்போன செந்திலுக்கு புள்ள ஒன்னு இருக்குனு பேசிக்கிறாங்க. உண்மையா இருக்குமோ.. எங்க.. பெரிய ஆளுங்க செய்யுற தப்பெல்லாம் சபைக்கு பெரிசா ஒன்னும் வரப்போறதில்ல. ஒங்களுக்கு சேவை பண்ணுறதுக்காகத்தான் கல்யாணம் கூட பண்ணிக்கலனு… அவுங்க ஆளுக மூலமா செந்திலே பரப்புனதா சொல்லிக்கிறாக… அப்பதானே கட்சிகிட்சி தொடங்குனா செல்வாக்கு கெடைக்கிம்”
கைதிகளான பாண்டியனும் முத்துவும் துரைக்கண்ணுவின் காதில் விழுமாறு பேசிக் கொண்டனர்.
“யாருடா அங்க முணுமுணுக்குறவனுக” சிறைக்காவலர் ஒருவர் சத்தமிட எல்லோரும் கப்சிப்……”
சிறைச்சாலைக்குள் அடைபட்டதிலிருந்து துரைக்கண்ணு யாருடனும் பேசுவதே இல்லை. அப்படியே பேசினாலும்
அத்திப்பூத்தார்போல் சிறைக்காப்பாளரிடம் ஒன்றிரண்டு சொற்களோடு நிறுத்திக்கொண்டார்.
வழக்கறிஞர் சரவணன் மட்டும் துரைக்கண்ணுவை அவ்வப்போது சந்தித்தார். சிறைச்சாலைக்கு வழக்கறிஞர் சரவணன் சென்று வருவது கூட தொலைக்காட்சிகளில் முக்கிய செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.
துரைக்கண்ணுவை சந்தித்துவிட்டு வரும்போதெல்லாம் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். எவ்வளவு கேள்விகள் எப்படி மடக்கிமடக்கி கேட்டாலும் சிரித்துக்கொண்டே நழுவிவிடுவது வழக்கறிஞர் சரவணனுக்கு கைவந்த கலை.
”அவர் குற்றமற்றவர் என்பதை கூடிய விரைவில் நிரூபிப்பார்” என்பதே பெரும்பாலும் வழக்கறிஞர் சரவணனின் பதிலாக இருக்கும்.
“வழக்கறிஞர் முகம் வாடி இருந்தது. பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பொய்யாக சிரித்தார். பிரபல தொழிலதிபர் செந்தில் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது…” இவ்வாறு பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்திகளை வெளியிட்டன.
துரைக்கண்ணுவும் செந்திலும் முன்னர் ஒருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது நெட்டிசன்களோ..
”போவோமா…. ஊர்வோலம்….”
”எங்கே செல்லும் இந்த பாதை….
யாரோ யாரோ அறிவாரோ…” என்று கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்டிருந்தனர்.
மயில் அன்கோ நிறுவன தலைவர் செந்திலும் அவரது நண்பர் துரைக்கண்ணுவும் வருமானவரி ஏய்ப்பு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக பல கோடி சொத்து சேர்த்திருந்ததை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்ததது.
”இத்தனை ஆண்டுகாலம் வழக்கினை இழுத்தடித்து நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததற்காக கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். மேலும் ஒவ்வொருவருக்கும் இரண்டு கோடி ரூபாய் அபராதமும்
அறுபது மாதங்கள் சிறைத்தண்டனையும் விதித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது…” தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து முடித்தார்.
”அவரும் நீங்களும் என்ன புருசன் பொண்டாட்டியா. அந்த ஆளுக்குதான் சொல்லிக்கிற மாறி சொந்தபந்தம் இல்ல. அந்த ஆளயே கட்டி அழுதுருக்கலாம்ல. அப்பறம் என்னத்துக்கு என்னையக்கட்டி தொலச்சிக… ஒரு நாளப் பொழுது வீட்ல ஒழுங்கா புள்ளைக கூட இருந்துருக்கீகளா… நானும் பொம்பளதானே… எனக்கென்ன வயசா போச்சு…. ” நடனமணி கேட்டேவிட்டாள்.
”தெருவுல கூவிக்கூவி பிளாஸ்டிக் பொருள வித்துக்கிட்டு இருந்த எனக்கு இவ்ளோ பெரிய வாழ்க்கையக் கொடுத்ததே அந்த மனுசன்தான்டி…. அவரு எவ்ளோ பெரிய கோடீஸ்வரன். எவன்டி இந்தக் காலத்துல எறங்கி வந்து பழகுவான்” துரைக்கண்ணுவின் கண்கள் நெருப்பில் பழுக்க காய்ச்சிய இரும்பைப்போல மினுமினுத்தன.
நிறுவனத்தைக் கவனித்துக் கொள்ள நம்பிக்கையான கண்ணையா என்ற பணியாளரை பொறுப்பாளராக செந்தில் நியமனம் செய்திருந்தார். அழுதுகொண்டே பொறுப்பை பெற்றுக்கொண்டபோது அவரின் கண்ணீர் மேல்சட்டையை நனைத்து வேட்டியை நனைக்கத் தொடங்கியிருந்தது. கண்ணையா அழுததைப் பார்த்து எல்லோருமே மிரண்டுவிட்டனர். மிகச் சிறந்த பணியாளரைத் தாம் தேர்வு செய்திருப்பதாக செந்தில் தனக்குள் எண்ணியவாறே சிறைக்குச் சென்றார் .
மயில் அன்கோ நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள், தங்க நகை விற்பனை, வீட்டுமனைகள் விற்பனை மற்றும் அனைத்து சில்லரை விற்பனைகளையும் செய்து வந்தது.
கதிர் அன்கோ நிறுவனமும் அதே தொழிலில் ஈடுபட்டு வந்தது. இரண்டு நிறுவனங்களும் தனக்கான கிளைகளை பட்டி தொட்டியெல்லாம் நிறுவி பொருட்களை விற்பனை செய்வதில் போட்டி போட்டுக் கொண்டன.
சிறு நிறுவனங்கள் இவர்களிடம் போட்டி போட முடியாமல் திணறின. அதனால் இந்த நிறுவனங்களோடு விற்பனை ஒப்பந்தம் செய்துகொண்டு குறைந்த விலையில் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தன. அட.. போங்கப்பா. அங்கிட்டு வாங்கி இங்கிட்டு விக்கிறது
ஒரு பொழப்பா. அதுக்கு பேசாம அவுங்களோட கம்பெனியிலயே வேலைக்கு சேந்தர்றாம்… என சிலர் அலுத்துக்கொண்டனர்.
செந்தில் சிறையில் இருந்தபோது அதன் வேதனையை தாங்க முடியாமல் பணியாளர் ஒருவர் தனது நாக்கை அறுத்து பெருமாள் கோயில் உண்டியலில் போட்டபோது காவலர்களால் கைது செய்யப்பட்டதும் பணியாளர்கள் பலர் மொட்டை அடித்து அலகு குத்தி காவடி எடுத்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்தக் கம்பெனில இவ்ளோ விசுவாசிகளா என்று மெச்சும் வண்ணம் ஊழியர்களின் செயல்கள் அமைந்தன.
இந்தச் சூழ்நிலையில்தான் வடமாநிலங்களில் தனது செல்வாக்கை ஓரளவு தக்கவைத்திருந்த செம்பருத்தி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் காலூன்ற தவியாய் தவித்து வந்தது. தமிழ்நாட்டில் ஆழமாய் காலூன்றி நிற்கும் இரண்டு நிறுவனங்களில் ஏதாவது ஒன்றை ஒழித்துக்கட்டுவதில் அந்த நிறுவனம் உறுதியாகவே இருந்தது.
வட மாநிலத்தில் ஜமாலூதீன் என்பவர் செம்பருத்தி பிரைவேட் லிமிடெட் நிறுவனப் பொருட்கள் ஒன்றைக் கூட வாங்காமல் மற்ற நிறுவனத்தின் பொருட்களை வாங்கிக்கொண்டு சாலையில் சென்றபோது ஆத்திரம் அடைந்த செம்பருத்தி நிறுவனத்தின் அடியாட்கள் அவரை அடித்தே கொன்றனர். அதனால் பயந்துகொண்டே பலரும் அந்நிறுவன பொருட்களை வாங்கத் தொடங்கினர். வலுக்கட்டாயமாக பொருட்களை வாங்க வைப்பது இல்லையென்றால் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைத்து மிரட்டுவது, கொலை செய்வது என அத்துமீறல்களை நடத்திக்காட்டியது. மக்களும் உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். ஜமாலூதீனை அடித்துக் கொன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவினாலும் பணக்கட்டுகளின் பக்கமே நீதிதராசுகள் சாய்ந்து இருந்தன.
செம்பருத்தி நிறுவனத்தின் நேரடி வணிக தொடர்பாளர் தேத்ரா மிஸ்ரா தங்களைப் பார்க்க வந்திருப்பதாக சிறைக்காவலர் ஒருவர் சொன்னபோது எதையும் காதில் வாங்காதவராய் வெறிச்சோடிக் கிடந்த வானத்தை கண்களுக்கு எட்டிய தூரம்வரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் செந்தில்.
“நமது சோம்பேறித்தனமே சுரண்டுவோருக்கு முலதனம்னு எத்தனையோ கூட்டங்கள்ல பேசிருக்கேன். அரசியல் ஆடம்பரத்துக்குள்ள நுழைய ஆசைப்பட்டு எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேனோ…. என்ன பண்றது” என்ற சிந்தனை செந்திலை வாட்டி வதைத்தது. தேத்ரா மிஸ்ரா துரைக்கண்ணுவை மட்டும் சந்தித்து பேசிவிட்டுச் சென்றார்.
“அவனுக நம்மளவிட மோசமானவனுக. உள்ள நுழஞ்சானுக நாம காலி..” சிரித்துக்கொண்டே செந்தில் சொன்னபோது துரைக்கண்ணுவோ தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார்.
தேத்ரா மிஸ்ரா வந்து சென்ற ஒருசில தினங்களிலேயே செந்திலின் மறுசீராய்வு மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றத்தின் புதிய அமர்வு இருவரையும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்தது. கொண்டாட்டத்தின் உச்சிக்கே செந்தில் சென்றாலும் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை. விடுதலையான சில நாட்களிலேயே தொழில்முறைப் போட்டி நிறுவனமான கதிர் அன்கோ நிறுவனம் இருவரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எப்போது வேண்டுமானாலும் விசாரணை எடுத்துக்கொள்ளப்படலாம்.. இந்த முறை போதிய ஆதாரங்கள் இருப்பதால் தப்பிக்க முடியாது என்ற செய்தி பரவலாக வந்தது.
அறுபத்தைந்து வயதை நெருங்கிக் கொண்டு இருந்த செந்தில் ஐம்பத்தேழு நாள் சிறைவாசத்தில் இருந்ததை எண்ணி வீட்டிற்கு வரும் யாரையும் சந்திக்காமல் தனியாக இருந்து வந்தார். சமூக மதிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு இந்தச் சறுக்கல் பெரும் மன உளைச்சலை தந்தது.
கதிர் அன்கோ நிறுவனத்தை அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கவனித்து வந்த நிலையில் மயில் அன் கோ நிறுவனத்தை தனக்குப் பின் யார் கவனிக்கப் போகிறார்களோ…? அரும்பாடுபட்டு கட்டியெழுப்பிய இந்தக் கோட்டையை ஆளுவதற்கு தனக்குனு ஒரு குடும்பம் இல்லையே என்ற கவலை செந்திலை மனமுடையச் செய்தது.
துரைக்கண்ணுவும் செந்திலும் வீட்டைவிட்டு வெளியில் வருவதை முழுமையாக தவிர்த்து வந்தனர். யாரேனும் நம்மைப் பார்த்து இழி சொல் சொல்லிவிடுவார்களோ என அஞ்சினர்.
எவ்வளவோ காசு பணம் சொத்து சுகம்னு இருந்து என்ன பண்ண… சேர்த்து வச்ச மொத்த கௌரவமும் காத்தோடு கரைஞ்சு போச்சே.. நினைக்க நினைக்க செந்திலுக்கு கவலை கண்களை சுருக்கியது.
இரண்டு முறை வீட்டுக்கு வந்த தேத்ரா மிஸ்ரா செந்திலை மரியாதை நிமித்தமாக ஒருசில நிமிடங்கள் சந்தித்துவிட்டு துரைக்கண்ணுவோடு கூடுதல் நேரம் ஒதுக்கி பேசிவிட்டுச் சென்றார். வீட்டுக்கு வந்த விருந்தினரை புறந்தள்ளாமல் உபசரிப்பது நமது கடமை என்ற எண்ணத்தில் தேத்ரா மிஸ்ராவை உபசரித்து அனுப்பினார் துரைக்கண்ணு. எப்போதாவது கண்ணையாவும் மற்ற நெருக்கமான பணியாளர்களும் செந்தில் வீட்டுக்கு வந்து சென்றனர்.
”காலத்தே பயிர் செய்யாமல் கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செஞ்சு என்ன பண்ண. கூடா நட்பு கேடால் முடியும்ங்கிறதுக்கு நான்தான் உதாரணம். துரைக்கண்ணுவின் வார்த்தை விளையாட்டிலும் காட்டிய வினோதமான வித்தைகளிலும் மயங்கி இளமையில் ஆசைப்பட்ட பெண்களோடு பழகி என்னய நானே சீரழிச்சுக்கிட்டேனே. இனி மிச்சம் இருக்க காலத்தயாவது நிம்மதியா கழிக்கனும்னா இன்னயோட தொரக்கண்ணோட ஒறவ அத்து எறியனும்” என்ற தீர்க்கமான சிந்தனையோடு….
”தொறக்கண்ணு……
தொறக்கண்ணு……
செந்திலின் வழக்கத்துக்கு மாறான சத்தம் கேட்டு என்னம்மோ ஏதோ என்று ராத்திரி வேளையில் தூங்கிக்கொண்டு இருந்த துரைக்கண்ணு ஒருவித படபடப்போடு ஓடிவந்தார்.
மறுநாள் காலையில் ”பெருந்தொழிலதிபர் செந்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி” அனைத்து தொலைக்காட்சிகளிலும் முதன்மைச் செய்தியாக ஓடிக் கொண்டிருந்தது.
நிறுவனத்தை கண்ணையா தொடர்ந்து கவனித்து வந்தார். வரவு செலவுகள் துரைக்கண்ணு மேற்பார்வையில் நடந்தது. செந்தில் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. அவர் ஓய்வில் இருக்கிறார். விரைவில் குணமான பிறகு நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவார்.
அரசியல் கட்சியையும் உடனடியாக தொடங்குவார் என்று துரைக்கண்ணு தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின. கட்சி தொடங்கினால் நாளப்பின்ன எந்த வகையிலாவது தேவைப்படலாம் எனக் கருதி தொழிலதிபர்களும் அரசியல் பிரமுகர்களும் துரைக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.
முப்பத்தைந்தாம் நாள் இரவு பத்து மணிக்கு செந்தில் இறந்ததாக மருத்துவமனை அறிவித்தது.
“தமது கட்சியில் சேருவதாக விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று நடந்ததோ வேறு. உழைப்பால் உயர்ந்த உத்தமர் உறங்கிக் கொண்டிருப்பதாக மூத்த அரசியல் தலைவர் ஒருவர் பேட்டியளித்தார்.
எண்ணற்ற வாடிக்கையாளர்களையும் கிளைகளையும் கொண்ட நிறுவனம். ஆகையால், அஞ்சலி செலுத்த வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக்கருதி பொதுமக்களின் அஞ்சலிக்காக செந்திலின் உடல் கல்யாண மண்டபத்தில் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. பெட்டியைச் சுற்றி பத்தடி இடைவெளியில் மட்டுமே அஞ்சலி செலுத்த பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். சோகத்தின் மொத்த உருவமாய் தலை குனிந்தபடி நின்றுகொண்டு இருந்த துரைக்கண்ணுவின் தலையில் கைவைத்து “நட்பின் அடையாளம் செந்தில்” என ஆறுதல் சொன்னார் தேத்ரா மிஸ்ரா. பிறகு, பார்வையாளர்களைப் பார்த்து வணக்கம் வைத்துவிட்டு பந்தலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
துரைக்கண்ணுவுக்கும் செந்திலுக்கும் இருபத்தைந்து ஆண்டுகால நெருக்கம். மனம் உடைந்து போயிருந்த துரைக்கண்ணுவின் கைகளைப் இறுகப் பற்றிக்கொண்டு “நட்புதான் பெருசுனு வீடுவாசல மறந்து அந்த புண்ணியவானோட இருந்தியே. இப்ப எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போயிட்டாரே… என்ன நோக்காடு வந்துச்சுனு தெரியலயே. கடவுளுக்கே கண்ணு அவிஞ்சு போச்சா…” நடனமணி கதறினாள்.
காவேரிக்கரையில் அடக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. சந்தனப் பேழையில் வைத்து செந்திலின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இரும்புச்சங்கிலியால் கல்லறையைச் சுற்றி தடுப்பும் வைக்கப்பட்டது. ஒருசில நாட்களிலேயே மயில் அன்கோவின் அடுத்த வாரிசாக
துரைக்கண்ணு தன்னை அறிவித்துக் கொண்ட நேரத்தில்தான் கதிர் அன்கோ நிறுவனம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
“செந்தில் மரணமடைந்ததால் அவருக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றாலும் முக்கிய குற்றவாளி அவர்தான். அவருடைய நிறுவனத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் நண்பனாக மட்டுமே வலம்வந்த துரைக்கண்ணுவுக்கு பல நூறுகோடி சொத்துகள் சேர்ந்தது எப்படி…? எனவே கீழ்நீதிமன்றம் அளித்த தீர்பினை நிராகரித்து…. துரைக்கண்ணுவுக்கு இருபத்திரண்டு கோடி ரூபாய் அபராதமும் அறுபதுமாத சிறைத்தண்டனையும் விதித்து இம்மன்றம் உத்தரவிடுகிறது…” நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து முடித்தனர்.
தீர்ப்பினைக் கேட்டதும் துரைக்கண்ணுவுக்கு தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு நாள் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப் போச்சே. எப்படியெப்படியோ நினச்சிருந்தேன். எல்லாம் மண்ணோடு மண்ணா போயிரும் போலவே. எது எப்படியோ அறுபது மாசத்த பல்லக் கடிச்சுக்கிட்டு ஓட்டிருவோம். போலிசுக்காரங்ககிட்ட காசுபணத்த நீட்டுனா கொஞ்சம் பதமா பாத்துக்குவாங்க. ஆனா நாம வர்ற வரைக்கும் இவ்வளவு சொத்துபத்தையும் தக்காத்து வச்சுக்கனுமே…. துரைக்கண்ணுவின் மனசு அலைபாய்ந்தது.
கண்ணையாவிடமிருந்து பொறுப்பினை வாங்கி தனக்கு நெருக்கமானவர் எனக்கருதிய பிரம்மையாவிடம் நிறுவனத்தின் பொறுப்புகளை ஒப்படைத்தார் துரைக்கண்ணு. உன்னைய நம்பிதான் இவ்ளோ பொறுப்ப ஒப்படைக்கிறேன்…. பிரம்மையாவின் கைகளைப் பிசைந்த துரைக்கண்ணு சோர்ந்து போன முகத்தோடு சிறை சென்றார்.
நாட்கள் கடந்து மாதங்களாகின…
“அய்யா… நம்ம நிறுவனத்தோட பொருட்களுக்குப் பதில செம்பருத்தி கம்பெனிகாரங்களோட பொருட்களத்தான் கண்ணையாவும் பிரம்மையாவும் விக்கிறாங்க. நம்ம பொருளோட உற்பத்தி முடங்கிக் கிடக்குது. ரெண்டுபேருக்கிட்டயும் கோடிக்கணக்குல பணம் கைமாறிருக்கு…” வழக்கறிஞர் சரவணன் சொன்னபோது
“பெரிய அய்யாவுக்கு அடுத்து எங்களுக்கு எல்லாமே சின்ன அய்யாதான்….” என்று சொல்லிக்கொண்டே ஊழியர்கள் முன்னிலையில் தனது கால்களில் பிரம்மையா விழுந்து வணங்கியது நினைவுக்கு வர கலகலவென சிரிக்க ஆரம்பித்தார் துரைக்கண்ணு.
சிரிப்பை அடக்குவதற்குள், “அய்யா…. இன்னொரு சமாச்சாரம்…..” துரைக்கண்ணுவின் கண்களைப் பார்த்தபோது “ம்.. சொல்லு..”’ என்பது போல மூடித் திறந்தன..
“அது செந்தில் அய்யாவே இல்ல… வெறும் அரிசி கோதுமைல வேறொரு மனித எலும்புக் கூடுல செஞ்சது.. அத தோண்டி ஆய்வு பண்ணனும்னு ஒரு பொண்ணு உச்ச நீதிமன்றத்துல வழக்கு போட்டுருக்கு. யாரும் உடம்ப, கிட்ட நின்னு கூட பாக்காததால இந்த வழக்கு விசாரணைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லனு பரவலா.. பேசிக்கிறாங்க. நம்ம டாக்டரோட செல்போன் நம்பரும் ரெண்டு நாளா சுவிட்ச் ஆப்னு வருது. எங்க இருக்கார்னு தெரியல…” வழக்கறிஞர் சரவணன் சொன்னபோது துரைக்கண்ணுவின் முகத்தில் நமட்டுச் சிரிப்பு.
“கழுதை வாயப் பாத்து நெல்லக் கோட்ட விட்டுட்டமே….” எண்ணியவாறு கண்களை மூடி அன்று இரவில் நடந்ததை நினைத்துப் பார்த்தார்.
“தொரக்கண்ணு…..” என்று செந்தில் கத்தியபோது அறைக்கு வந்த பிரம்மையா, செந்தில் தலையில் நாற்காலியைக் கொண்டு ஓங்கி அடித்தார். அம்மா…… என்று அலறல் சத்தம் கேட்டு, வீட்டுப் பணியாளர்கள் ஓடி வருவதற்குள் கீழே விழுந்த செந்திலை துரைக்கண்ணு தரதரவென பக்கத்து அறைக்குள் இழுத்துச் சென்றார். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வீட்டிலிருந்து முகப்பு வாசல் வழியாக மருத்துவமனை நோக்கிச் சென்றது. அதே வேளையில் வடக்கு வாசல் வழியாக சத்தமில்லாமல் அம்பாசிட்டர் கார் ஒன்றும் சென்றுகொண்டிருந்தது……
——-&——