ஆரியக்கூத்தில் தமிழ்நாடு மயங்குமா?…. நியூசிலாந்து சிற்சபேசன்.
“தமிழ்நாட்டுக்கு வரும்போது புதியசக்தி பிறக்கிறது” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அண்மைய திருச்சிராப்பள்ளி வருகையின்போது, பெருமிதம் கொண்டிருக்கின்றார்.
இத்தகைய “பெருமிதத்தின்” பின்னணியில் அரசியல்நோக்கம் இருப்பது வெள்ளிடைமலையாகும்.
இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு மேலாக, தமிழ்நாடு தொடர்பான புகழ்ச்சியிலும், தமிழ் மீதான வெளிப்படையான ஈர்ப்பின் பின்னாலும் கனதியான காரணமொன்று உண்டு.
அஃது, விந்தியமலையைக் கடந்து தென்னிந்தியாவில் தேர்தல் வெற்றிகளைப் பெறவேண்டுமென்னும் கனவாகும்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் வெற்றிகளை, பாரதிய ஜனதாக் கட்சியினால் பெறமுடிகின்றது. தொடர்ச்சியாக 2014 மற்றும் 2019 பொதுத்தேர்தல்களிலே வெற்றி பெறமுடிந்தது. 2024ல் மூன்றாவது பொதுத்தேர்தல் வெற்றியும் வசப்படக் கூடியதாகவே தெரிகிறது.
ஆனால், தென்னிந்தியா எட்டாத திராட்சைப் பழமாகவே இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தைத் தாண்டி மற்றைய தென்னிந்திய மாநிலங்களில் தேர்தல் வெற்றி கண்ணுக்கெட்டிய தூரத்திலே தெரியவில்லை.
இருந்தாலும்கூட, “கிட்டாதாயின் வெட்டென மற” எனக் கடந்து செல்லவும் முடியாமல், “ஆப்பிழுத்த குரங்குபோன்று” திணறுகின்ற நிலையாகும்.
அதனாலேயே, பாரதிய ஜனதாக் கட்சியினது கூர்மையான கவனம் தென்னிந்தியாவை நோக்கித் திரும்பியிருக்கின்றது.
விந்தியமலைக்குத் தெற்காகவுள்ள தக்க்ஷிணபீடபூமியே தென்னிந்தியா எனப் பெருவெட்டில் சொல்லப்படுகின்றது.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பிலும், சனத்தொகையிலும் தலா இருபது விழுக்காடு அளவைத் தென்னிந்தியா கொண்டிருக்கின்றது. இருபத்தியைந்து விழுக்காடு பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தின் மக்களவையில் கொண்டிருக்கின்றது.
அதேவேளையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) முப்பது விழுக்காடு தென்னிந்தியாவின் பங்களிப்பாகும். அதிலேயும் கூட, ஒட்டுமொத்த தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தைத் தமிழ்நாடு கொண்டிருக்கின்றது.
இந்திய சுதந்திரக் காலகட்டத்திலே, காங்கிரஸ் பேரியக்கமும், அதற்கு எதிர்ப்புறத்தில் பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னோடியான ஜன சங்கமுமே வடஇந்தியாவில் கோலேச்சின. ஆனால், அக்கட்சிகளுக்கு தென்னிந்தியாவில் செல்வாக்கு இருக்கவில்லை. மாறாக, மண்ணில் முகிழ்த்த நீதிக்கட்சி, சென்னை மாகாண சுவராஜ் கட்சி என்பவையே செல்வாக்கை கொண்டிருந்தன. அதன்பின்னரான காலகட்டத்திலே, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் வளர்ச்சியடைந்தது. அதுவே திராவிடர் கழகம் ஆகியது.
சுதந்திரத்துக்குப் பின்னரேயே, தென்னிந்தியாவில் காங்கிரசினால் வலுவாகக் காலூன்ற முடிந்தது. 1948ல் உருவாகிய திராவிட முன்னேற்றக் கழகம், 1967ல் தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின்னரான கடந்த அரைநூற்றாண்டாக, திராவிடர் கழகத்தின் வாரிசுகளான, திராவிட முன்னேற்றக் கழகமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமுமே தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்றன. தேசியக் கட்சிகளினால் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியவில்லை.
கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான அணியும், இந்திய மார்க்கசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அணியுமே மாறிமாறி ஆட்சி செய்கின்றன. உலகிலேயே, சனநாயக முறையிலே தெரிவுசெய்யப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் அரசு 1957ல் கேரளாவிலேயே அமைந்தது.
1982ல் என்.டி.ராமராவின் அரசியல் எழுச்சியுடன் தெலுங்குமொழி பேசுகின்ற ஆந்திராவில் தேசியக் கட்சிகளின் செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.
கர்நாடக மாநிலத்தில் மட்டுமே தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதிய ஜனதாக் கட்சியும் மாறிமாறி ஆட்சி செய்கின்றன.
தேசியக் கட்சிகளினால், செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவே முடியாத தென்னிந்திய மாநிலமாகவே, தமிழ்நாடு காணப்படுகின்றது. அன்றோருகாலத்தில், வடஇந்தியப் படையெடுப்புக்களை விஜயநகரப் பேரரசு தடுத்துநிறுத்தியது. தென்னிந்தியாவின் தடுப்பரணாகியது. அதேபோன்று, தென்னிந்தியாவில் தேசியக்கட்சிகள் முழுமையான எழுச்சியைப் பெறுவதற்கு, நவீனகாலத்தில் தமிழ்நாடு தடுப்பரணாகக் காணப்படுகின்றது.
அதனாலேயே, தமிழக மக்களின் உள்ளங்களை கவர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி அடிமேல் அடியெடுத்து வைக்கின்றது.
தமிழர்களின் மொழிப்பற்று ஊரறிந்த ரகசியமாகும். 1937லேயே இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. மா.பொ.சி, திரு.விக போன்ற இந்தியத் தேசியவாதிகளேகூட இந்தி திணிப்பைக் கடுமையாக எதிர்த்தனர். கல்லக்குடி போராட்டம், 1965 போராட்டம், நவீன சோஷியல்மீடியா யுகத்தில் எழுச்சியடைந்த “இந்தி தெரியாது போடா“ போன்றவற்றை இந்தி எதிர்ப்பின் முக்கிய மைல்கல் நிகழ்வுகள் எனலாம்.
இத்தகைய பின்புலத்திலேயே, தமிழ்மொழியின் அருமை பெருமைகளைப் பாரதிய ஜனதாக் கட்சி பேச ஆரம்பித்தது.
இது இன்று நேற்று ஆரம்பித்த விடயமல்ல. பலவருடங்களாகத் திட்டமிட்ட வகையிலே மேற்கொள்ளப்படுகின்றது.
“அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்னும் தோரணை தெரிகிறது.
அயோத்தியில் இராமர் கோவிலுக்கான ஆரம்ப நிகழ்வில் “காலமும் கணக்கும் நீத்த காரணன்” என்ற கம்பராமாயண வரியை மோடி சிலாகித்தார்.
இந்தியப் பாராளுமன்றத்தில் வரி விதிப்பு தொடர்பாக பேசியபோது “காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே” என்ற பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினார்.
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்னும் கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஐ.நா சபையிலே மோடி சுட்டிக்காட்டினார்.
காசி தமிழ் சங்கமம், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் என எத்தனையோ விடயங்களை இவ்வாறாகப் பட்டியலிடலாம்.
அந்தவரிசையிலேயே, 2024ம் ஆண்டுக்கான தன்னுடைய முதலாவது பொதுநிகழ்ச்சி திருச்சிராப்பள்ளியிலேயே ஆரம்பித்திருக்கின்றது என மோடி புளகாங்கிதம் அடைந்திருக்கின்றார்.
இவ்வாறாக, தமிழர் மீது அளவில்லாத காதல் கொண்டதான ஆரியக்கூத்தில், தமிழ்நாடு மயங்குமா என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.