“சிண்டி தந்த அர்த்தங்கள்”! … நடேசன்.
நமது வாழ்க்கையில் நமது பெற்றோர், பிள்ளைகள், உறவினர் எனப் பல உறவுகள் நம்மைத் தொடரும். ஆனால், அவை எங்களை நம்பியிருக்கின்றன என்ற எண்ணத்தில் நமது அசைவியக்கம் இருந்தாலும், உண்மை வேறானது.
ஐந்து வயதின் பின்னர், பிள்ளைகள், பெற்றோரை நம்புவதில்லை. அவர்கள் கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு தன்னியல்பாக தங்கள் சூழ்நிலையை அறிந்து கொள்ளும் அறிவு வளர்ந்துவிடும். மனைவி, உறவினர் எவரும் நம்மை முழுவதும் நம்புவதில்லை. உறவு, தேவைகள், பாதுகாப்பு, என்பனவற்றால் நாம் பரஸ்பரமாக கட்டுண்டு குடும்பமாக வாழ்கிறோம். ஆனால், நாம் வளர்க்கும் நாய்கள் மட்டும் எம்மை முற்றாக நம்புகின்றன. ஆனால், பூனைகள் கூட அப்படியல்ல.
நாய் வளர்க்கும்போது, நம் மீது அவை வைக்கும் நிபந்தனையற்ற நம்பிக்கை – உலகத்தில் எதற்கும் நிகரற்றது.
நம்புபவர்களுக்கு மட்டும் வேதாகமம். மற்றவர்களுக்கு புனைவு என்பதுபோல் நான் சொல்வது சிலருக்கு மட்டும் உண்மையாக இருக்கும். அதாவது நாய் வளர்த்தவர்களுக்கு மட்டும் புரியக்கூடிய விடயம், மற்றவர்களுக்கு இது புரியாது. நம்ப முடியாதது.
வெள்ளிக்கிழமை காலையில் எனது காரின் முன் இருக்கைக்கு முன்பான பகுதியில் சந்தோசமாக வந்தமர்ந்து, எனது இடது கைவிரல்களை நக்கியபடி வந்த சிண்டியை, கருணைக்கொலை செய்யும்போது இந்த நம்பிக்கை என்ற உணர்வே எனது மனத்தைக் கரைத்தது. பன்னிரண்டு வருடங்கள் எமது வீட்டில் அது வளர்ந்தபோது நான் பெற்ற அனுபவங்கள் எல்லாவற்றையும் விட இந்த நம்பிக்கையொன்றே எனக்கு இதயத்தில் உரசிய சரளைக் கல்லாகி கண்ணீரை உதிர்க்க வைத்தது.
ஆங்கில நாடக ஆசிரியரான வில்லியம் ஷேக்ஸ்பியர் சொன்ன வசனம் : Hamlet Act 3 Scene 4: I must be Cruel, only to be kind.
கடந்த நான்கு தசாப்தங்களாக, என்னிடம் கொண்டுவரப்படும் ஆயிரக்கணக்கான நாய், பூனை மற்றும் பல மிருகங்களை நான் கருணைக் கொலை செய்யும்போது, மற்றவர்களுக்கு ஆறுதலளிக்கும் என்ற நினைப்பில் பாவிக்கும் கிளிசே (Cliché) ஆன வார்த்தைதான் மேலே உள்ளது.
நான் இந்த கிளிசேயான வார்த்தையை ஓசை வெளியே வராது முணுமுணுத்தேன்.
சிண்டியை மயக்கமாக வைத்து அதனது நாளங்களில் பச்சை திரவத்தை தைரியமாக என்னால் ஏற்ற முடியவில்லை. எனது நண்பனான மிருக வைத்தியனே ஏற்றினான். பதினைந்து கணங்களில், 12 வருடங்களாக இயங்கிய சிண்டியின் இதயத்துடிப்பு நின்றது.
உரிமையாளராகவும், மிருக வைத்தியராகவும் இருப்பது கடினமான விடயம். மூளையைப் பாவிக்க வேண்டிய நேரத்தில் மனதில் தோன்றும் நினைவுகள் முரணானவை. முன் மூளையும் நடு மூளையும் ஒன்றோடு ஒன்று யுத்தம் புரிவது எவருக்கும் தெரியும்.
ஆனால், அவை எனக்குக் கடினமானவை. தொழில்ரீதியாக முன் மூளையைக் கொண்டு பகுத்தறிவைப் பாவிக்கப் பழக்கப்பட்ட எனக்கு, நான் வளர்த்த செல்லப்பிராணியை கருணைக்கொலை செய்வது, வாகனத்தில் அக்சிலேட்டரையும் பிரேக்கையும் ஒன்றாக அழுத்துவது போன்ற நிலைமையை உருவாக்கும்.
“ இன்னமும் ஒரு மாதம் சீவிக்கும்தானே ! நாயின் ஒரு மாத வயது மனிதர்களுக்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு நிகரானது என்பது உனக்குத் தெரியும். கான்சர் இன்னமும் முற்றவில்லை. நீ வைத்தியராக இருப்பதால் இப்பொழுது கண்டுபிடித்தாய். சாதாரணமானவர்கள் இதைத் தெரிந்து கொள்ள சில வாரங்கள் ஆகும். “ என்றது இதயம். “
“ ஒரு வைத்தியனாக விடயத்தை அறிந்தபின் சிண்டி துன்பப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது. “ என்றது மூளை .
“ மண்ணாங்கட்டி – சுயநலம். உனக்கோ உன்னைச் சார்ந்தவர்களுக்கோ இப்படி ஒரு நிலைமை வந்தால் என்ன செய்வாய்? “ என்றது இதயம்.
இதயத்திற்கும் மூளைக்கும் நடந்த விவாதமாக இங்கு எழுதினாலும் ஆரம்பத்தில் கருணைக்கொலை செய்ய ஒத்துக்கொண்ட எனது மனைவி சியாமளா, மாலையில் “ நீங்கள் ஒரு கொலைகாரன். காலையில் நான் சிண்டியின் முகத்தில்தான் விழிக்கிறது. நீங்கள் காலையில் எட்டு மணிக்கு எழும்பும்வரையும் அதுதான் என் பின்னாலே திரியும். நான் வேலையால் வந்தால் அதுவே வாசலுக்கு வருகிறது. எனக்கு நோய் வந்தபோது தானாக ஒதுங்கியிருந்த அறிவான மிருகம். அது சாப்பிடாமல் போகும்வரையும் அதைப் பராமரிக்க நான் தயார். இப்பொழுது பெரிய வெற்றிடம் வீட்டில் மட்டுமல்ல , என் நெஞ்சிலும் கூட “ என்று சொல்லும்போது நான் என்ன பதில் சொல்லமுடியும்?
சிண்டிக்கு கடந்த இரண்டு மாதங்களாக அதன் தொண்டைக்குள் மீண்டும் உணவை வெளிக்கொண்டு வருவது (Regurgitation) போன்ற சத்தம் வரும் . எங்களது படுக்கையறையில் , கட்டிலின் அருகாமையில் சிண்டி படுக்கும்போது, அந்த சத்தத்தைக் கேட்டு எழுந்து, வாந்தி எடுக்குமென நினைத்து, பின் கதவைத் திறந்து வெளியே விடுவோம். ஆனால், எதுவும் வருவதில்லை. சிறிது நேரத்தில் எதுவும் நடக்காததுபோல் வீட்டின் உள்ளே வரும். ஒரே இரவில் சில தடவைகள் இது நடக்கும். இதை எண்பது வீதம் நித்திரையிலிருந்து எழும்பிச் செய்வது சியாமளாவே. அந்தப் பக்கத்திலே சிண்டி படுப்பது வழக்கம் .
இரண்டு கிழமையாக இது நடப்பதால், எனது பழைய வைத்தியசாலையில் அதன் நெஞ்சுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, நுரையீரல், இதயம் எங்கும் எதுவித பாதிப்புமில்லை . அதன்பின்பு அன்ரிபயோட்டிக்கில் போட்டேன். ஆனால், எதுவித மாற்றமும் இல்லை . அதற்கப்பால் இரண்டு தடவை இரத்தத் தடம் நிலத்தில் இருந்ததாக சியாமளா காட்டியபோது எனக்குப் புரிந்தது.
“ ஏதோ தொண்டையில் இருக்கிறது போலும் “ என்றேன்.
“ கான்சரா? “ சியாமளா கேட்டபோது, நேரடியாக நான் பதில் சொல்லவில்லை
“ இரத்தம் தொண்டையிலிருந்து வருவதென்றால் அதுவும் புதிய இரத்தமென்றால் ஏதோ ஒரு காயம் இருக்கவேண்டும் . குட்டி நாய்கள் எதையாவது கடித்துக் காயப்படலாம். பன்னிரண்டு வயதான சிண்டிக்கு அது நடக்கச் சாத்தியமில்லை . மேலும் நாய், பூனைகளில் தொண்டையில் கான்சர் வருவது குறைவு. ஆனால், வந்தால் பரவும் கான்சரே (Malignancy) அதிகம் . வெட்டி எடுப்பது கடினம். “ என விளக்கினேன்.
“ ஒரு பரிசோதனையும் தேவையில்லை. சாப்பிடும் வரையில் அது வீட்டில் இருக்கட்டும். “ எனச் சொன்ன சியாமளா, கோழி இறைச்சி சமன் மீன் போன்றவற்றைச் சமைத்துக் கொடுக்கும்போது நான் எதுவும் பேசவில்லை.
சிண்டி சாப்பிடுவதில் எந்தப் பிரச்சினையுமில்லாதபோதும் தொண்டைக்குள் இருமுவதும் விழுங்குவதும் நடந்தது. குணமாகாத நோய் எனத் தீர்மானித்தேன். ஆனால், தொண்டைக்கு உள்ளே பார்ப்பது கடினம். மாத்திரை கொடுப்பதே பெரும் யுத்தமாக இருக்கும்போது வாயைத் திறந்து அதற்கு வலி உருவாக்குவதும் எனது விருப்பமாக இருக்கவில்லை
இரண்டு கிழமையின் பின்பாக மிருக வைத்தியனாக இருந்து கொண்டு வியாதிக்கு என்ன காரணம் ? எனக் கண்டறியாது இருப்பது எனது மனசாட்சிக்கு விரோதமானது எனச் சொல்லிவிட்டு, ஒரு வெள்ளிக்கிழமை மயக்கமருந்து கொடுத்து தொண்டையைப் பரிசோதனை செய்வதற்கு கொண்டு செல்ல முடிவு செய்தேன்.
வியாழக்கிழமை இரவு கொடுக்கவேண்டிய எல்லா உணவையும் கொடுக்கும்படியும் வெள்ளிக்கிழமை காலையில் எந்த உணவும் கொடுக்கமுடியாதென சியாமளாவிடம் கூறினேன். அத்துடன் வியாழக்கிழமை மாலை தனியே நடந்துபோகும் நான் அன்று மாலை பால் வாங்குவதற்கு சிண்டியுடன் போனேன்.
என் மனதில் பல எண்ணங்கள். 12 வயதான சிண்டி, எங்கள் பிள்ளைகள் கூட்டை விட்டு வெளியேறிய பின்பாக இரண்டு மாதக் குட்டியாக வந்தது. சியாமளாவுக்கு கான்சர் நோய் தாக்கும் வரையும் காலையில் ஒரு மணி நேரம் சின்டியோடு நடை, மாலையில் நான் கூட்டிச் செல்வேன். உணவு, உடல் பருமன் ஏற்படாத விசேட உணவு . கொரோனா காலத்தில், நாடு முழுவதும் வீட்டில் அடைக்கப்பட்ட காலத்தில் அதற்காகவே குளிர்காலத்திலும் வெளியே நடப்போம். அது சிண்டிக்காக மட்டுமல்ல எங்களுக்காகவும் இருந்தது
சமீபத்தில் ஒரு சம்பவம். எனது மகன், மகள், மருமகளுடன் ஆரவாரமாக விளையாடும் சிண்டி, ஆரம்பத்தில் எங்களது பேரன்களைப் புறக்கணிக்கும். தனியே வீட்டில் வளர்ந்ததால் இவர்களை தனது போட்டியாக நினைத்துக்கொள்ளும். எங்கள் மருமகள் இது சிண்டியின் வீடு என்பாள்.
பின்பு பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்துவிட்டது. ஆனால் , அதனது முதிய வயதில் அவர்களுடன் அதிகம் விளையாடமுடியாது. எங்களது மூத்த பேரன் சிண்டியோடு கொஞ்சம் முரட்டுத்தனமாக விளையாடுவான்.
ஆனால், இளையவன் சிண்டியை ஆராதிப்பான். இளையவனில் சிண்டிக்கு அன்பு அதிகம். மூத்தவனை கொஞ்சம் புறக்கணிக்கும் . ஒருநாள் மூத்தவன் அடித்து, இளையவன் அழுது கொண்டிருந்தான். நாங்கள், இருவரும், அவர்களுகளுக்குள் சமாதானமாகுவார்கள் என பேசாதிருந்தோம்.
எவரும் கவனிக்காததால் இளையவனது அழுகை கூடியது. சிண்டி மட்டும் எழுந்து சென்று அவனது முகத்தில் நக்கியது. அந்த விடயத்தால் இளையவன் சிரித்து, தனது அழுகையை நிறுத்திவிட்டு சிண்டியோடு விளையாடினான் .
எங்களது பழைய நாய்கள் எங்களுடன் தானாக வளர்ந்தது. ஆனால், சிண்டி விசேடமான கவனிப்புடன் வளர்ந்தது. அதைப் பொறுத்தவரையில் எங்கள் இருவரை சுற்றியே அதனது உலகமிருந்தது. நாம் விடுமுறையில் செல்லும்போது, எனது கிளினிக்கில் வந்துபோகும் ஒரு பெண் தனது வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வார். சிண்டிக்கு எங்களது உடல் மொழி தெளிவாகப்புரியும். காலையில் நான் காலணி போட்டால் வெளியே போகும். மாலையில் போட்டால் தன்னுடன் நடப்பதற்காக எனக் கணித்துவிடும்.
சியாமளாவிடமே பாசமதிகம். ஆனால், எனது குரலுக்கு மதிப்பு அதிகம். தனக்குத் தேவையான விடயங்களான உணவு, நடை என்பவற்றைக் கேட்டுப் பெறத்தயங்குவதில்லை. அதுபோல் இருபத்தி நான்கு மணிநேரம் உள்ளிருந்தாலும், ஓரிரு விபத்துக்கு மேல் நடந்ததில்லை. காலச் சக்கரத்தில் நசிபட்டு இரண்டு பெரிய சத்திர சிகிச்சைகளுக்கு ஆளானது, ஆனால், இம்முறை எதுவும் செய்யமுடியாது போய்விட்டது.
சிண்டியை மயக்க மருந்து கொடுத்தது எனது மற்றைய வைத்தியர். அதன் பின்பாக தொண்டையில் திறத்து நான் பார்த்தபோது , அங்கே (Larynx) ஒரு பகுதி சிவப்பாக வீங்கியிருந்தது. அடுத்த பகுதி சுமாராக இருந்தது. தொண்டை கான்சரின் ஆரம்பமெனத் தெரிந்தது .
மற்றவர்களது நாயென்றால் சிறிய ஊசியால் ஒரு பகுதியைப் பரிசோதனைக்கு எடுத்திருப்பேன். அல்லது விசேட கான்சர் வைத்தியரிடம் அனுப்பியிருப்பேன். ஆனால், மீண்டும் தொண்டைப் புண்ணாகி இரத்தம் வருவதற்கு அதிக காலம் செல்லாது.
நல்லவேளை சியாமளா கருணைக்கொலை செய்யும்போது அருகில் இல்லை. விடயத்தை தொலைப்பேசியில் சொல்லிவிட்டு , “ சிண்டி ஓரிரு மாதங்கள் உயிரோடு இருக்கலாம். ஆனால், அது துன்பப்படும். தற்போது மயக்க நிலையில் இருக்கும்போது கருணைக்கொலை செய்வது நல்லது என நினைக்கிறேன். “ என்றதும், “ நீங்களே முடிவெடுங்கள். “ எனப் பதில் வந்தது.
எனது நண்பரிடம் கருணைக்கொலை செய்யச்சொல்லி விட்டு, சாம்பலைக் கொண்டுவர ஆவன செய்யுங்கள் என்று சொன்னேன். சியாமளாவும் வந்து பார்க்கும்போது நீண்ட நெடும் தூக்கத்தில் சிண்டியிருந்தது.
செல்லப்பிராணிகள் ஒவ்வொன்றும் எங்களை விட்டு விலகும்போது நிரந்தரமான நினைவுகளை தந்துவிட்டே சென்றன. இக்காலத்தில் மனதில் மடடுமல்ல, புகைப்படங்களாகவும் உள்ளன. இதுவரையில் அவுஸ்திரேலியாவில் நான் வாழ்ந்த காலத்தில் சாண்டி, பொன்னி, சிண்டி என மூன்று நாய்களும் ராணி என்ற பூனை ஒன்றும் எங்களது வாழ்வில் வந்து மறைந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் எங்களது வாழ்வில் புதிய அர்த்தங்களைத் தந்தன. சிண்டி குட்டியாக வந்து, வளர்ந்ததால் அதனது காலம் மற்றையவற்றின் நினைவுகளுக்கு சிகரம் வைத்ததுபோல் செழிப்பானது.
—0—