“எழுத்தும் வாழ்க்கையும்” …. ( இரண்டாம் பாகம் ) …. அங்கம் – 95 …. முருகபூபதி.
கனடா , ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்திய இணையவழி கலந்துரையாடல் !
கற்றதும் பெற்றதும் ! !
முருகபூபதி.
எந்தவொரு தொழில் துறையும் பயிற்சியில்தான் தங்கியிருக்கிறது. பயிற்சியின் மூலம்தான் தேர்ச்சி பெறவும் முடியும்.
“ தனக்குத் தொழில் கவிதை “ எனச்சொன்ன பாரதியும், தான் நேசித்த இலக்கியத்துறையில் தொடர்ந்தும் பயின்றமையால்தான் மகாகவியாக மிளிர்ந்தார்.
கவிதை எழுதத்தொடங்கிய பாரதி, பின்னர் கட்டுரைகளும், கதைகளும் எழுதினார். மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டார். சில பத்திரிகைகளிலும் ஊடகவியலாளராக பணியாற்றினார். சில இதழ்களை நடத்தினார்.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலினால், புதுச்சேரிக்கும் இடம்பெயர்ந்தார். திரும்பி வரும்போது கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டார்.
எனினும் அவர் அற்பாயுளில் மறைவதற்கு முன்னர், இலக்கிய உலகிற்கு தன்னால் முடிந்ததை வரவாக்கிவிட்டே சென்றிருக்கிறார். அவர் மறைந்து நூறாண்டுகள் கடந்த பின்னரும் தொடரந்தும் பேசப்படுகிறார்.
அதற்கு அவரிடமிருந்த படைப்பாளுமையும், படைப்பூக்கமும்தான் பிரதானம்.
தனிமை இரக்கம் என்ற முதல் கவிதையுடன் இலக்கியப்பிரவேசம் மேற்கொண்ட பாரதி, கவிதையுடன் நிற்கவில்லை. அவரும் திசைமாறிய பறவையாக இலக்கியத்தில் மேலும் சில துறைகளில் ஈடுபட்டார்.
எனக்கு எப்போதும் ஆதர்சமாக விளங்கும் பாரதியைதான் எனது எழுத்துலக வாழ்விலும் முன்மாதிரியாகக்கொண்டிருக்கின்றேன்.
கடந்த மாதம் இறுதியில், கனடாவிலிருந்து ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் செயலூக்கமுள்ள உறுப்பினர்கள் பேராசிரியர் நா. சுப்பிரமணிய ஐயர் அவர்களும், எழுத்தாளர் அகில் சாம்பசிவம் அவர்களும் என்னைத் தொடர்புகொண்டு, அவுஸ்திரேலியா தமிழ்
இலக்கியம் என்ற தலைப்பில் மெய்நிகர் ஊடாக ஒரு மணிநேரம் உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டனர்.
கடந்த ஜனவரி மாதமும், இந்த பெப்ரவரி மாதமும் நான் உள்ளுர் பயணங்களிலும் ஈடுபட்டவாறே குறிப்பிட்ட தலைப்பில் பேசுவதற்கான குறிப்புகளை எழுதினேன்.
ஏற்கனவே மதுரை தமிழ்ச்சங்கம், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியன மெய்நிகர் ஊடாக நடத்திய நிகழ்வுகளிலும் இதே தலைப்பில் உரையாற்றிப்பெற்ற அனுபவம் இருந்தமையால், கனடா , ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்திற்காக உரைநிகழ்த்துவது சிரமமாக இருக்கவில்லை.
முன்னைய உரைகளில் மேலும் செம்மைப்படுத்தவேண்டிய, இணைக்கவேண்டிய புதிய தகவல்கள் இருந்தமையால், கவனம் செலத்தவேண்டியிருந்தது.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியம் என்ற தலைப்பினை அவர்கள் தந்தபோது, நான் வதியும் இந்தக்கண்டத்தை சுற்றியிருக்கும் மாபெரும் பசுபிக் சமுத்திரத்திலே தள்ளிவிட்டதுபோன்ற உணர்வினையே பெற்றேன்.
உரையை வெறுமனே, தகவல் குறிப்பாக சொல்லி முடிப்பதா, இங்கு வாழ்ந்து மறைந்த படைப்பிலக்கியவாதிகள், தமிழ் அறிஞர்கள், கலைஞர்களின் பங்களிப்புகளையும் சொல்வதா? சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகளின் வரவுகளை குறிப்பிடுவதா, இந்தக்கண்டத்தில் வெளியான பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இலக்கியமும் பேசும் சமூக வானொலிகள் பற்றியும் நினைவுபடுத்துவதா..? முதலான சில கேள்விகள் மனதில் எழுந்தன.
எனது உரையை எழுதிக்கொண்டிருந்தபோது திடீரென கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை எமது பிரதேசத்தில் கடும் சூறாவளி வீசியதையடுத்து, மின்சாரம் தடைப்பட்டது. நாம் வாழும் பிரதேசம் மட்டுமன்றி மேலும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து இந்த நாட்டுக்கு வந்து, இடம்பெயர்ந்து வேறு இடம் செல்ல நேர்ந்தது!
இயற்கையுடன் போராட முடியுமா..? இயற்கையின் சீற்றத்தை மக்களால் தடுத்துவிட முடியாது. அது தானாகவே தனது சீற்றத்தை தணிக்கவேண்டும். அதுவரையில் நாம் எமக்கு நேர்ந்த இழப்புகளுக்கு மத்தியில், பொறுமை காக்கவேண்டும்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால், என்ன நடக்கும்..? என்பதை அனுபவித்தவர்கள் நன்கு அறிவார்கள்.
எனது மடிக்கணினியை தூக்கிக்கொண்டு, அலைந்தேன். இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் சலிப்பு ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்புகள் சில வந்தன.
“ இன்று காதலர் தினம்..? (Valentin’s Day) மனைவியை வாழ்த்தினீர்களா..? “
“ இருட்டுக்குள் மெழுகுவர்த்தியை கொளுத்திவைத்துக்கொண்டு வாழ்த்தியிருக்கின்றேன் , “ எனச்சொன்னேன்.
அதன்பிறகுதான் எங்கள் பிரதேசத்தில் என்ன நடந்திருக்கிறது ? என்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது!
மின்சாரம் இல்லாத அந்த நாட்களில் எனது நண்பர் எச். எச். விக்கிரமசிங்காவின் மூத்த புதல்வி மருத்துவர் கௌஸல்யா துஷ்மண் வீட்டில் (Traralgon) நானும் மனைவியும் தங்கியிருந்தோம்.
கௌஸல்யா எனக்கு ஒரு பெறாமகள்.
“ அங்கிள், எதற்கும் யோசிக்க வேண்டாம். கனடா தமிழ்ச்சங்கத்தின் நிகழ்ச்சியில் நீங்கள் பேசத்தக்கதாக மேசை எல்லாம் ஒழுங்கு செய்து தருகின்றேன் “ எனச்சொல்லி, தங்கள் வீட்டில் சில மாற்றங்களையும் செய்தார்.
தினமும் அங்கிருந்து, எனது வீட்டுக்கு வந்து மின்சாரம் வந்துவிட்டதா? எனப்பார்ப்பதும் மற்றும் ஒரு வேலையாகியது.
எதிர்பார்த்தவாறு கடந்த 16 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மின்சார இணைப்பு கிடைத்தது. வந்த மின்சாரம் மீண்டும் திரும்பிச்சென்றுவிடக்கூடாது என்று பிரார்த்தித்தேன்.
கனடா நிகழ்ச்சியிலும் திட்டமிட்டவாறு இணைந்துகொண்டேன்.
பேராசிரியர் நா. சுப்பிரமணிய ஐயர் என்னை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.
இவரை, 1976 ஆம் ஆண்டு முதல் நன்கறிவேன். யாழ். பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க. கைலாசபதி இரண்டு நாட்கள் நடத்திய நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்த போதுதான் இவரது அறிமுகம் கிடைத்தது. வீரகேசரி பிரசுரங்கள் வரிசையில் வெளியான நாவல் குறித்தெல்லாம் அந்நாட்களில் விரிவான பதிவுகளை எழுதியிருப்பவர். ஈழத்து தமிழ் நாவல்கள் தொடர்பாகவும் திறனாய்வு
செய்திருப்பவர். தமிழ் இலக்கிய விமர்சனத்துறையில் இவரும் ஒரு பொக்கிஷம் !
எழுத்தாளர் அகில் சாம்பசிவம், அவரது Tamil Authors வலைத்தளம் ஊடாகவே எனக்கு முதலில் அறிமுகமானவர்.
கடந்த ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல்விருது விழாவுக்குச்சென்றிருந்தபோது இவர்கள் இருவரையும் சந்தித்தேன். இருவரும் தொடர்ந்தும் என்னுடன் மின்னஞ்சலில் தொடர்பிலிருப்பவர்கள்.
அவுஸ்திரேலியாவில் மறைந்துவிட்ட தமிழ் அறிஞர்கள், கலை, இலக்கியவாதிகளின் படங்களையும் , இங்கு வெளியான பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் அவுஸ்திரேலியா சிறப்பிதழ்களையும் மெய்நிகரில் காட்சிப்படுத்தினார்கள்.
அதனை வடிவமைப்பதற்காக தனது நேரத்தைச் செலவிட்ட அருமை நண்பர் – எழுத்தாளர் – ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினத்திற்கும் எனது நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் உரையாற்றவேண்டியிருந்தமையால், இதர துறைகளில் ஈடுபட்ட பேராசிரியர்கள் கா. இந்திரபாலா, கலாநிதி முருகர் குணசிங்கம், அரசரட்ணம், கலாநிதி அமீர் அலி ஆகியோர் பற்றி எனது உரையில் நான் கவனம் செலுத்தவில்லை.
44 பக்கங்களில் எழுதப்பட்டிருந்த எனது உரையை விரிவஞ்சி முழுமையாக சமர்ப்பிக்கவும் முடியவில்லை. எனது உரையையடுத்து, புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – புகலிட இலக்கியம் தொடர்பாகவும், பல்கலைக்கழகங்களில் மாணவர்களினால் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேடுகள் குறித்தும் ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தன.
இந்த மெய்நிகர் அரங்கில் அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள், கலை , இலக்கியவாதிகள், தேர்ந்த வாசகர்கள் பலரும் இணைந்துகொண்டிருந்தால், அவர்களது கருத்துக்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க முடியும்.
ஆனால், தாமரைச்செல்வி, நடேசன் ஆகியோர் மாத்திரமே அவுஸ்திரேலியா கண்டத்திலிருந்து இணைந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
எழுத்தாளர்கள் தேவகி கருணாகரன், ஆழியாள் மதுபாஷினி ஆகியோர் பார்வையாளர்களாகவே இறுதிவரையில் அவதானித்துவிட்டுச்சென்றனர். தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த முனைவர் ப. செந்தில் முருகன், கனடாவிலிருந்து க. சண்முகலிங்கம், கனடா மூர்த்தி, த. சிவபாலு, டாக்டர் லம்போதரன் ஆகியோரும் பயனுள்ள கருத்துக்களைத் தெரிவித்தனர்.
புனைகதை, கவிதை, நாவல், நாடகம், புனைவு சாராத பத்தி எழுத்து, பயண இலக்கியம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாட்டுக்கூத்து, ஊடகம், இணையம் ஆகியவற்றில் எம்மவரின் பங்களிப்புகள் குறித்தும் உள்ளடக்கியே எனது உரையை தயாரித்திருந்தேன்.
கனடா, ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் இனிவரும் காலங்களில், ஐரோப்பிய தமிழ் இலக்கியம், கனடா தமிழ் இலக்கியம், நியூசிலாந்து தமிழ் இலக்கியம், அமெரிக்கா தமிழ் இலக்கியம் முதலான தலைப்புகளிலும் கருத்துரைகளை ஒழுங்கு செய்யவிருப்பதனால், எனது உரையை ஏற்பாட்டாளர்கள் முதற் புள்ளியாக தொடக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு நாட்டுக்கு நாடு வைக்கப்படும் புள்ளிகள், பதியப்பெறும்போது புகலிட தமிழ் இலக்கியத்தின் முழுமை பெற்ற கோலம் உருவாகலாம்.
அதற்கான உழைப்பும், தேடலும்தான் அவசியமானது.
எனது உரையின் இறுதியில் இவ்வாறு குறிப்பிட்டேன்:
“ இனிவரும் காலத்தில், அவுஸ்திரேலியாவில் கவிதை இலக்கியம், சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம், கட்டுரை இலக்கியம், புனைவுசாராத பத்தி எழுத்துகள், பயண இலக்கியம், நாடகம், கூத்து தொடர்பான இலக்கியங்கள் பற்றி தனித்தனியாக ஆராயும் பட்சத்தில், இவற்றை எழுதியவர்களின் படைப்பூக்கத்தையும் படைப்பாளுமைகளையும் தெரிந்துகொள்ள முடியும். “
இந்நிகழ்ச்சியில் இணைந்துகொள்ளத்தவறிய அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள், மற்றும் கலை, இலக்கியவாதிகள், பல்கலைக்கழக பிரவேச பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள், இவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் தேர்ந்த வாசகர்களுக்காக, விரைவில் எனது உரையின் முழுவடிவத்தையும் மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைப்பேன்.
அவர்களுக்கு அதனைப் படிக்க நேரம் இருக்குமா..? என்பதுதான் தெரியவில்லை.
( தொடரும் ) letchumananm@gmail.com
eswarinathan@hotmsil.co.uk
சிறப்பான தங்களுடைய இலக்கிய உரையை
வாழ்த்த வார்த்தைகளில்லை .திருமலை பாலா இலண்டன்.