நடுகைக்காரி! …. 65 …. ஏலையா க.முருகதாசன்.
கீரிமலைக் கடற்கரையிலை தனக்கும் அங்கு கடலிலை குளிக்க வந்த ஒரு பொம்பிளைக்குமிடையிலை வாக்குவாதம் முத்தி பெரும்பிரச்சினையான கதையை சொல்லத் தொடங்கி இடையிலை விட்ட கறுவல் செல்லத்துரை மாஸ்ரர,; தான் எங்கை கதையை நிற்பாட்டினது என்ற இடத்தை தனபாலசிங்கம் சொல்ல ஓ அங்கையா விட்டனான் அது சரி படிப்பைத் தவிர கோவணக் கதையென்டால் நல்லாய் ஞாபகம் வைச்சிருப்பாய் போல என ஒரு சிரிப்புச் சிரித்தவர் கீழ்ப்பகுதி நாடியை தடவிவிட்டபடியே எடுத்த ஆங்கிலப் புத்தகத்தின் பக்கத்தை விரிச்சு மேசையில் கவிழ்த்து வைச்;சுவிட்டு அது வேறொன்றுமில்லை என்ரை முதுகுப் பக்கத்திலை கொஞ்சம் அரிப்பு இருந்தது,வேர்க்குரு போட்டுத் தடிப்பாயும் இருந்தது.
ஏன்ரை வீட்டுக்கப் பக்கத்திலை இருந்த அயலட்டைச் சனம் சொல்லிசு;சுது மாஸ்ரர் கீரிமலைக் கடலிலை குளிச்சுப் பாருங்கோ,கடல் குளிப்புக்கு உந்தக் கடி நிற்கும் என்று.நானும் உப்புத் தண்ணியிலை குளிச்சா நல்லது என்று நினைச்சு கீரிமலைக் கடலிலை குளிக்கப் போனனான்.
கடலிலை கனநேரமாய்க் குளிச்சிட்டு வந்த நான் துவாயைக் கட்டியபடி என்ரை உள்ளாடையான கோவணத்தை அவிட்டு,அங்கை கட்டியிருந்த கயிற்றுக் கொடியிலை லேசாகச் சுற்றிப் காயப் போட்டிட்டுப் போய் லச்சமி ஆச்சியிடம் கச்சான் கடலை வாங்கி உடைசசுக்; கொறிச்சுக் கொண்டு கடலைப் பார்த்தபடி கேணிப்படியிலை இருந்தனான்.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது எல்லாரையும் கீழ்க்கண்ணால் பார்த்துக் கொண்டேதான் கதை சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் கீரிமலைக்குப் போன அன்று நல்ல வெயில்.நல்ல வெயில் என்றாலும் கொஞ்சம் காற்று வீசியதால் காற்று உடம்பிலை பட நல்லாய்த்தான் இருந்தது.
கடல் அலைகளையும் கடலிலை போற கட்டுமரங்களையும் தோணிகளையும் உன்னிப்பாக நான் பார்த்துக் கொண்டிருந்ததால் மணலுக்குள்ளை நடந்து எல்லாரையம் நான் கவனிக்கவில்லை.
கொடியிலை போட்ட கோவணம் இந்த வெயிலுக்கும் காற்றுக்கும் கெதியிலை காய்ஞ்சிடும் என்று நானும் கொடிப்பக்கம் பார்க்காமல் பேசாமலிருந்திட்டன்.
இதற்கிடையிலை என்ரை கவனத்தைக் கவருகிறமாதிரி ஒரு சோடி கடற்கரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தினம்.
அவை இரண்டு பேரும் புருசன் பெண்சாதியாயிருப்பினமோ அல்லாட்டி தாய்தகப்பனுக்குத் தெரியாமல் களவாக வந்த காதல் சோடியோ என்று எனக்குள்ளை நானே தீர்மானித்துக் கொண்டிருந்த நான் திருப்பிக் கொடியைப் பார்த்து நான் திடுக்கிடடு;ப் போனன்.
அங்கை என்ரை கோவணத்தைக் காணேலை.அது காத்திலை ஆடிக் கொண்டிருந்த இடத்திலை பாவாடை ஒன்று காத்திலை பட்டம் மாதிரி ஆடிக் கொண்டிருந்துது.
நான் பதைபதைப்புடன் கொடியடிக்கு போகேக்கிலை உள்ளாடை கொடியிலையிருந்து அவிண்டு காத்திலை எங்கையேன் பறந்திட்டுதோ.பறந்தால் அது இல்லாமல் என்ணெண்டு வேட்டியை கட்டுவுது கன யோசனை என்னை ஆக்கிரமித்து நின்றது
அதைக் கட்டினால்தான் வேட்டியைக் கட்டேக்கிலை இடுப்பிலை ஒரு இறுக்கமிருக்கும்,அதைவிடப் பெரிய பிரச்சினை என்ணெண்டால் நான் மோட்டச் சைக்கிளிலைதான் போனனான் .மோட்டச் சைக்கிளிலை இருந்து ஓடுவதற்கு அதைக் கட்டினால்தான் பிடிப்பாய் இருக்க முடியும் என்ற கன யோசனைகளுடன் கோவணத்தைக் காயவிட்ட கொடியடிக்குப் போன நான் சுற்றும் முற்றும் பார்த்தபடி மெதுவாகப் பாவாடையைத் தூக்கிப் பார்த்தன் அங்கை என்ரை கோவணம் கிடந்ததைக் கண்டன்.
நான் பாவாடையைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு பொம்பிளை நான் நிக்கிற இடத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தா.அப்ப எனக்கு விளங்கிவிட்டுது பாவாடை அவாவின்ரைதானென்று.அதுமட்டுமல்லாமல் என்ன பாவாடையைத் தூக்கிப் பாக்கிறியள் என்று கேட்டா அவா அப்பிடிக் நாக்கூசாமல் கேட்டது எனக்குப் பிடிக்கவே இல்லை.
கோபத்தை அடக்கிக் கொண்டு, அவாவிட்டை உங்கடையோ இது என்று பாவாடையைக் காட்டிக் கேட்க ஓம் என்பது போல மேலையும் கீழையும் தலையாட்டினாள்.
நான் வஞ்சகமில்லாமல் நல்ல தமிழிலை பாவாடையைத் தூக்குங்கோ கோவணத்தை அவிழ்க்க என்று அந்தப் பொம்பிளையைப் பார்த்துச் சொல்ல,அந்தப் பொம்பிளை நெருப்பிலை கால் வைச்ச மாதிரி துள்ளியடிச்சு நான் வம்பாய்க் கதைக்கிறன் என்று நினைச்சுக் கொண்டு ,என்ன இரட்டை அர்த்த்திலை கதைக்கிறியள் உப்பிடிக் கதைக்கிறது நல்லது இல்லை,இது கீரிமலை என்று என்னை பயமுறுத்துவது போல கதைக்க,இப்ப நான் என்ன இரட்டை அர்த்தத்திலை கதைச்சனான்,என்ரை கோவணத்துக்கு மேலே நீங்களேன் உங்கடை பாவாடையைப் போட்டனீங்கள்.
போடேக்கிலை தெரியேலையே என்ரை கோவணம் கொடியியை காயுதெண்டு.பாவாடைக்குப் பாவாடைதான் பெயர் கோவணத்துக்கு கோவணந்தான் பெயர்.அதுவும் நல்ல தமிழ்ப் பெயர்.உங்களிட்டை பிழையை வைச்சுக் கொண்டு என்னோடை கொழுவப் பார்க்கிறியள் என்று நான் சொல்ல,காளியாடடம் சன்னதம் கொண்ட அநதப் பொம்பிளை ;பிறகும் இரட்டை அர்த்தத்திலை கூச்சநாச்சமில்லாமல் கதைக்கிறியள் என்று சொல்ல,வெயில் வெக்கை ஒரு பக்கம் உப்புத்தண்ணிக் காற்று ஒரு பக்கம் எனக்கு விசரைக் கிளப்ப சண்டை பிடிக்கிறதைத்தான் கொழுவுறதெண்டு ஊருக்குள்ளை சொல்றவை, எனக்கு உண்மையிலை விளங்கேலை நீங்கள் என்ன கற்பனையிலை கதைக்கிறியள் என்று நான் சொல்ல, நானும் அந்தப் பொம்பிளையும் பிடுங்குப்படுகிறதை யன்னல் வழியாகக் கண்ட வாட்சர்
சின்னத்துரை எங்களுக்கு கிட்ட வந்து உங்களுக்குள்ளை என்ன பிரச்சினை ஏன் இரண்டு பேரும் சண்டை பிடிக்கிறியள் என்று கேட்க நான் விலாவாரியாக வெளிப்படையாகச் சொன்னால்தானே வாட்சகருக்கு ஆரிலை பிழை என்று தெரியவரும் என்று நினைச்சுக் கொண்டு, நான் அவருக்கு விளக்கமாக நான் கடலிலை தோய்ஞ்சிட்டு துவாயைக் கட்டிக் கொண்டு என்ரை கோவணத்தை அவிட்டு இந்தக் கொடியிலை காயப் போட்டனான் இந்தக் காற்றுக்கு கோவணம் காற்றிலை பறந்து போய் கடலிலை விழுந்திடும் என்றதற்காக கோவணத்தை கொடியிலை கட்டி விட்டனான்.
எனக்குத் தெரியாது என்ரை அதுக்கு மேலை இவா தன்ரை பாவாடையைப் போட்டது.கோவணத்தைக் காணேலை என்று தேடிப் பார்க்கேக்கை அவாவின்ரை பாவாடைக்கு கீழை கோவணம் இருக்கிறதைக் கண்ட நான் பாவாடையைத் தூக்குங்கோ கோவணத்தை அவி;ழ்க்க என்று நான் வஞ்சகமில்லாமல் நல்ல தமிழிலை சொல்ல நான் வம்பாய்க் கதைக்கிறணெண்டு என்னைப் பிழை காரானாக்கிச் சண்டைக்கு வருகிறா.நீங்களே சொல்லுங்கள் அவாவின்ரை பாவாடையை நான் தூக்கிறது நாகரீகமில்லா பழக்கமெண்டு அவாவின்ரை பகாவாடையை அவாவையே தூக்கச் சொன்னன் இது பிழையா? இதிலை என்ன பிழையிருக்குது.
நான் உடுவிலிலை இருந்து அங்கை இங்கை சொறியாக் கிடக்குதெண்டு உப்புத் தண்ணியிலை குளிப்பமென்டு இங்கை வந்தால் இஞ்சை பெரிய பிரச்சினையாய்ப் போச்சுது.கூடாத பெயர் எடுக்க வேண்டிக் கிடக்குது.
அது சரி வாட்சர் பொம்மபிளையளுக்கு பொம்பிளைக் கேணி இருக்கு அங்கை கயிற்றுக் கொடியம்: இருக்குந்தானே அங்கை இவா தன்ரை உடுப்பைக் காய விடலாந்தானே என்று நான் சொல்ல,அந்தப் பொம்பிளை நான் என்ரை நனைஞ்ச உடுப்புக்களை பிழிஞ்சு ஓலைப் பையிலை போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கேக்கிலை இந்தக் கொடி சும்மா கிடக்குதுதானே நல்ல வெயிலும் எறிக்கிறதைக் கண்டிட்டு என்ரை நனைஞ்ச உடுபபுக்களை காய விட்டனான்.
இவற்றை அது கொடியிலை கிடந்து தூங்கிறதை நான் காணேலை என்று அந்தப் பொம்பிளை சொல்ல,கொடியிலை உடுப்பைப் போடேக்கிலை பலபேர் வந்து போற இடத்திலை கொடியிலை ஏதாவது கிடக்குதா என்று பார்க்க வேணும் அதை விட்டிட்டு என்னைப் பிழையான ஆளாய் நினைச்சு சண்டைக்கு வாறா,வாட்சர் இவா இன்னொன்றும் சொன்னவா இது கீரிமலை தெரியுமோ என்று நான் சொல்ல வாட்சருக்கு உண்மையிலை கோபம் வந்திட்டுது.
அக்கா கீரிமலை உங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டிலை உள்ள சிங்களவர் தமிழர் என எல்லாருக்கும் சொந்தம்.நீங்களக்கா இப்பிடிக் கதைச்சால் இவர் போய் தன்னுடைய ஊரிலை உள்ளவைக்குச் சொல்ல கீரிமலைக்காரரைப் பற்றி என்னை நினைப்பினம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது இஞ்சை எச் எஸ் சி படிக்கிற வைரவப்பிள்ளை என்ற மாணவன் வருவதைக் கண்டதும் அவன் என்னை மாஸ்ரர் என்று கூப்பிடப் போறானே என்று பதட்டமடைந்தன்.நல்ல வேளை அந்தப் பொம்பிளை வைரவப்பிள்ளை எனக்கு கிட்ட வரமுந்திப் போயிட்டுது.
கீரிமலையில் தனக்கும் ஒரு பொம்பிளைக்கும் எற்பட்ட பிரச்சினையைச் சொல்லிக் கொண்டிருந்த கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் தான் சொல்வதை இடையில் நிறுத்தவிட்டு வைரப்பிள்ளையைக் கண்டதும் தான் ஏன் பதட்டமடைந்தனான் என்று மாணவர் மாணவி;களைப் பார்த்துக் கேட்க எல்லோருமே மௌனம் காத்தனர்.
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட ஆவலாக கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மாணவ மாணவிகள் சேர் தங்களையே கேள்வி கேட்கிறாரே என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஞானம் சேர் நீங்கள் ஏன் வைரவப்பிள்ளையைக் கண்டு பதட்டமடைந்தனீங்களென்றால் வைரவப்பிள்ளை உங்களைச் சேர் என்ன இந்தப் பக்கம் என்று கேட்க வாட்சர் உங்களைப் பார்த்து நீங்கள் மாஸ்ரரா என்று கேட்டு எந்தப் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிறியள் என்று கேட்க நீங்கள் மகாஜனாக் கொலிஜ் என்று சொல்ல உங்களோடை பிரச்சினைப்பட்ட அந்தப் பொம்பிளை ஓ மகாஜனாவிலை மாஸ்ரா, நீங்கள் மாஸ்ரராக இருந்து அதுவும் மகாஜனாவிலை மாஸ்ரராக இருந்து கொண்டு சிலேடையாகக் கதைக்கிறியள் என்று சொல்ல இந்தக் கோவணக் கதை கீரிமலை தாண்டி தெல்லிப்பழை மகாஜனாவுக்குப் போய் பிரின்சிப்பலின் காதுவரையும் எட்டிவிடுமே என்று பயந்திட்டியள்.சேர் அதுதானே காரணம் என்று அவன் சொல்ல, பார்த்தியளே இதுதான் புத்திசாலிப் பொடியங்களுக்குன அழகு என்று கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் ஞானத்தைப் பாராட்டுகிறார்.
ஞானமும் கோவணம் என்று சொன்னதைக் கேட்ட புஸ்பகலா கிளுக்கென்று சிரித்துவிட்டாள்.
நீலலோஜினிக்கு இப்படி ஞானத்தின் மீது உரிமைகாட்டி புஸ்பகலா சிரித்தது பிடிக்கவே இல்லை.
நான் சொன்ன கதையை இஞ்சையே மறந்திடனும்.ஆட்களுக்குச் சொல்லித்திரிய வேண்டாம் இனிப் படிப்பம் என்று மேசையில் கவிழ்த்து வைச்ச புத்தகத்தை எடுத்து படிப்பிக்கத் தொடங்குகிறார் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்.
மாணவர்களும் மாணவிகளும் வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள தனபாலசிங்கம் சேர் நாங்கள் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன் என்கிறான்.
ஆனால் கறுவல் செல்லத்துரை மாஸ்ரருக்குத் தெரியும் பொடியங்கள் லேசுப்பட்டவங்கள் அல்ல என்று,அம்பனைச் சந்தியிலை இருக்கிற சீனியம்மான் கடையிலை இண்டைக்கு பின்னேரமே கதை பரவிவிடும் என்று தெரியும்.
அதே நேரம் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் சொன்ன கதை முழுவதையம் பக்கத்து வகுப்பில் சமயபாடம் படிப்பித்துக் கொண்டிருந்த தர்மேஸ்வரி ஆசிரியை கேட்டுக் கொண்டுதானிருந்தார் என்பது கறுவல் செல்லத்துரை மாஸ்ரரக்குத் தெரியாது.
(தொடரும்)