கவிதைகள்
” நீயுமா நண்பா”?…. கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.
எல்லோரும் சூழ்ந்து குத்தியபோதும்
கலங்காது நின்றவனோ
குத்தியவன் நண்பன் என்றதும்
கலங்கிவிட்டான்
நீயுமா என்று நண்பன் பெயர் சொல்லி
முடிக்குமுன்னே மண்ணில் சரிந்தான்
அன்று குத்திய நண்பனோ
துரோகியானாலும் அதிலொரு
நேர்மையிருந்ததை கண்டான்
அவனோ முகத்தை காட்டினான்
நீயோ இன்று வெவ்வேறு விதமாக
முகமூடி மாட்டியபடி வருகிறாயே
நீ முகமூடியை மாற்றியபோதும்
உன்னை இனம் கண்டேன் நண்பா
முகமூடிக்குள் உன் கண்கள் தெரிகிறதே
பல ஆண்டுகள் பழகிய பார்வையின்
ஆழம் புரிகிறதே
நினைத்துப்பார் நண்பா
ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கியதுதான்
நம் தொடர்பு
நீ அன்று கரத்தை நீட்டினாய்
நீட்டிய கரத்தை நான் பற்றினேன்
நீட்டிய கரத்தை பற்றியவன்
பற்றிய கரத்துக்கு என்றும்
பாதகமேதும் செய்யவில்லை
என்பதையும் நீ நன்கறிவாய்
ஆயிரம் பேர் இன்று உன்னை
சூழ்ந்திருக்கலாம்
ஆலோசனை கூற பலர் இருக்கலாம்
நான் உனக்கு இன்று
தேவையற்றும் போயிருக்கலாம்
ஆனால் பழசை நினைத்துப் பார்
பலவும் புரியும் நண்பா
தப்பொன்றும் செய்யாததற்கா
நீயும் என் குரல்வளையில் கத்தியை இறக்குகிறாய்
செய்ததற்கு கூலி கொடுத்தாயிற்றே
அதனால் ஒன்றும் பாதகமில்லையென
கத்தியை இறக்குகிறாயோ
கூலி கொடுத்து விட்டோம் என்பதால்
உணவளித்த கையை வெட்டி எறிய
எப்படி நண்பா முடிகிறது
இறுதியாக ஒன்று கூறுகிறேன்
செய்த பணிக்கு கூலி கொடுத்தாய்
நீ கூலி கொடுப்பாயென எதிர்பார்த்து
நான் பணி புரியவில்லை
நீ கூலி கொடுக்காது போனாலும்
நான் பணிபுரிந்திருப்பேன்
ஏனென்றால் இது ஒன்றும்
கூலிக்காக செய்த பணியல்ல
என்பதையும் நீ நன்கறிவாய்
செய்ததற்கு கூலி கொடுத்தாலும்
அதை கூலியாக எண்ணமாட்டேன்
என்ன கொடுத்தோமென சிறிதளவும்
எண்ணிப் பாராதோர் மத்தியிலே
சோறிட்டதை சுட்டிக்காட்டுகிறாயே
இதுதான் உனது பண்பா நண்பா
வெட்கி நான் தலை குணிகிறேன்
செஞ்சோற்றுக் கடன் தீர்த்திடவே
சினம் தவிர்த்து அமைதி காப்பேன்!
-சங்கர சுப்பிரமணியன்.