இலக்கியச்சோலை

உலக வானொலி தினம்: வன்னி போர்க்கள தவபாலனின் இறுதிக் குரல்!! … நவீனன்.

உலக வானொலி தினத்தை நினைவூட்டி மகிழும் இன்றைய பெப்ரவரி 13 நாளில், வன்னி மண்ணில் இறுதி வரை ஒலித்த, காற்றோடு கலந்த தி.தவபாலன் குரலை எவரும் இலகுவில் மறந்து விடமுடியாது.
உலக வானொலி தினம் (World Radio Day) பெப்ரவரி 13 ஆம் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெஸ்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கு இடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓர்மத்துடன் உறுமிய குரல்:
ஓர்மத்துடன் உறுமிய ஈழப்போராட்டக் குரலாக விளங்கிய தி.தவபாலன் வானலைகளில் ஆற்றிய பங்கினை இந்நாளில் நினைவு கூர்வது பொருத்தமானதாகும்.
வன்னிப் போரின் இறுதியில்
பணியாற்றிய ஊடகர்களின் அசாத்திய திறமைகளை தாண்டி தவபாலன் ஆற்றிய பணியினை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளும் அளவிற்கு அவரது சிறப்பு முக்கியம் பெறுகின்றது. போர்க் கால வன்னியில் அதிகப்படியான இடங்களில் வானொலியை பயன்படுத்திதான் மக்கள் தகவல்களை அறிந்து கொண்டனர்.
ஈழத்தில் செய்தி தாள்களுக்குப் பிறகு மக்களை இசை மற்றும் செய்திகளால் ஒன்றிணைத்தது வானொலிதான். இன்னும் பலரது மனதை கொள்ளைகொள்வது வானொலி என்றால் அதை மறுக்க முடியாது. 1990களில் ஈழத்தில் மின்சாரம் கூட இல்லாத இடங்களில் நேயர்களை அரவணைத்துச் செல்லும் வானொலிக்கான சிறப்பை உணர்த்தும் உலக வானொலி தினம் இன்றாகும்.
தலைமுறைகளைக் கடந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து பொக்கிஷமாக வானொலி திகழ்கிறது. அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான இன்று உலக வானொலி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த 21ம் நூற்றாண்டில் உலகமே நம் கைக்குள் வந்துவிட்டது. நாம் விரும்பிய செய்தி அல்லது மனநிலைக்கு ஏற்றப் பாடல்களை சில வினாடிகளில் கேட்டு விடுகிறோம்.
ஆயினும் உலகின் போர்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் பல்வேறு அசாத்திய திறமையான பதிவுகள் வெளிவரத் தவறுவதில்லை. தமிழர்களின் விடுதலைப் போராட்டக் களத்துடன் சேர்ந்து பயணித்து வீழ்ந்த அல்லது காணமல் போன ஊடகர்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக தி.தவபாலன் விளங்குகின்றார்.
தி.தவபாலனை (இறைவன்) போர்க்காலத்தில் வன்னியில் வாழ்ந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர். அதேபோல வன்னிக்கு வெளியிலும் உறுமும் வானொலியைக் கேட்டவர்கள் அனைவருக்கும் தெரிந்தவர். செய்திவீச்சு, நாளிதழ் நாளி நிகழ்ச்சிகளாலும் நன்கு அறியப்பட்டவர். அவரை போர்க்கால ஊடகவியலாளராக அறியப்பட்டாலும் அவரை வன்னியின் குரலாக தனித்துவமானவராகப் பார்க்கப்படுகிறார்.
உண்மையில் செய்தி என்பதைத் தாண்டி அறிவியலில் மிகச்சிறந்த மதிநுட்பம் மிகுந்தவராகவே அவர் விளங்கினார். விண்வெளி சார்ந்த அறிவியல் தேடலில் மிகுந்த ஆர்வம் மிக்கவராக விளங்கினார்.
புகழ்பெற்ற எழுத்தாளரும் கண்டுபிடிப்பாளருமான ஆர்தர் சி.கிளார்க்குடன் கடிதம் மூலம் தொடர்பிலிருந்தார். பதின்ம வயதிலிருந்தே ஆதர் சி.கிளார்க்குடன் அவருடைய உறவு நிலை இருந்தது.
ஒரு விடயம் சார்ந்து தேடுகின்ற போது,
அதனை மேலோட்டமாகப் பார்ப்பது போலவே அவருடைய நடவடிக்கை இருக்கும். ஆனால் மிக ஆழமான மற்றும் மிகத் துரிதமான வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.
ஒரு விடயம் சார்ந்து பேசுகின்றபோது அது பற்றிய நிறைந்த தேடல் அவரிடம் இருந்தது.
ஈழ விடுதலைப் போராட்டம் 2009 மேயில் மௌனிக்கப்பட்டவுடன் போராட்டத்தின் பின்னான சொல்லப்படாத பல செய்திகள் வரலாற்றில் இருந்து மறைந்துவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் பெருமளவில் ஏற்பட்டே வருகின்றன. ஆயினும் காலவோட்டத்தில் உண்மைகள் அழியா வண்ணம் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
ஆவணக் காப்பக செயற்பாட்டளர்:
இத்தகைய ஆவணக் காப்பக (Documentation unit) செயற்பாட்டளர்களின் முன்னோடியாக தவபாலன் விளங்கினார். கோரமான போர்க்காலத்திலேயே போர் சார்ந்த ஏராளம் ஒளிப்படங்கள் மட்டுமல்ல இயற்கை காட்சிகளையும் மிகுந்த கலை இரசனையோடு வெளிப்படுத்தும் வல்லமை தி.தவபாலனிடம் இருந்தது.
குறிப்பாக முட்கம்பி வேலிக்குள்ளால் யாழ். நூலகம், முட்கம்பி வேலிக்குள் சிறுவன் ஒருவர் வெளியே பார்க்கும் படம் பலருக்கு இன்னமும் நினைவிருக்கலாம். இவ்வாறு ஏராளம் புகைப்படங்களை தி.தவபாலன் பதிவாக்கியிருந்தார்.
அத்துடன் ஈழ புகைப்படக் கலைஞர்களில் முதன் முதலில் தனிநபராக இணையத்தளம் வைத்திருந்தவர் தவபாலன் தான். “ஈழவிசன்” என்கிற பெயரில் அந்த இணையம் செயற்பட்டதும் பலர் அறிவர்.
நீண்ட காலமாக வன்னியின் வானோசையாக ஒலித்த குரல் 2009ஆம்ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் தொடர்ந்தும் ஒலிபரப்பினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது. ஒலிவாங்கியின் ஊடாக துப்பாக்கி வேட்டொலிச் சத்தங்கள் வானொலிகளில் கேட்கின்றன. துப்பாக்கிச் சன்னங்கள் ஒலிபரப்பு சாதனங்களைத் துளையிடுகின்றன.
தொடர்ந்தும் பணிசெய்யமுடியாத நெருக்கடியில் வானொலிச் சாதனங்கள் ஆவணங்கள் அனைத்தும் தீ மூட்டி அழிக்கப்பட்டதுடன் வன்னியின் வானோலிக் குரல் முற்றுப்பெறுகிறது.
வன்னியில் இறுதிக்கட்ட போரில் மக்களுக்கான குரலாக விளங்கிய வானொலியின் இறுதிக்கணம் வரையில் உழைத்து, களத்தில்
இறுதிவரை பணியாற்றிய தி.தவபாலனனும் (இறைவன்) இறுதி நாட்களில் காணாமல் போனார்கள் என்பதே இறுதியான தகவலாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.