கட்டுரைகள்
ஆஸி. பேர்த் நகரில் – இந்தியப் பெருங்கடல் ஏழாவது மாநாடு: கடல்சார் விதிகளைக் கடைப்பிடிக்க உறுதி!
(கடல்சார் விதிகளைக் கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ள ஏழாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் கருப்பொருள் “நிலையான மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடலை நோக்கி” என்பதாகும் -Towards a Stable and Sustainable Indian Ocean)
ஏழாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (Seventh Indian Ocean Conference) 22 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், 16 நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் சில நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்தியப் பெருங்கடல் மாநாடு:
இந்தியப் பெருங்கடல் மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இந்தியப் பெருங்கடல் மாநாடு என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் முதன்மையான ஆலோசனைகளை நடத்தும் மன்றமாகும்.
இம்முறை மாநாட்டின் கருப்பொருள் “நிலையான மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடலை நோக்கி”. (Towards a Stable and Sustainable Indian Ocean). மாநாட்டின் தொடக்க அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோருர் பங்கேற்றனர்.
இந்தியப் பெருங்கடல் நாடுகளின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்காக இந்தியாவின் அர்ப்பணிப்பு காத்திரமாக உள்ளது என்றும், இந்தியா அதன் அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற அணுகுமுறையின் கீழ் செயல்படுகிறது எனவும் இந்திய அரசால் தெரிவிக்கப்பட்டது.
சர்வதேச ஒழுங்கு, சட்டத்தின் ஆட்சி, நிலையான மற்றும் வெளிப்படையான உள்கட்டமைப்பு முதலீடு, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கொள்கைகள் இந்தோ-பசிபிக் பற்றிய பரந்த பார்வையையும் கொண்டுள்ளது என இந்தியா அதன் அண்டை நாடுகளுக்கு தெரிவித்துள்ளது.
இலங்கை – இந்திய இருதரப்பு கலந்துரையாடல்:
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் ஏழாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இருநாட்டு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தொடர்ந்து வலுப்படுத்த இதன்போது இருவரும் அவதானம் செலுத்தினர். இந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதிக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் தீர்மானமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜெய்சங்கருடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்பானது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான இலங்கையின் முயற்சி மற்றும் அதன் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எங்கள் நீல எதிர்காலம் என, இந்தியப் பெருங்கடல் பகுதி எவ்வாறு அதன் உறுப்பு நாடுகள் இணைந்து பகிரப்பட்ட கடல் வளங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்ற தலைப்பில் இலங்கை ஜனாதிபதி பிரதான உரையையும் மாநாட்டில் நிகழ்த்தியிருந்தார்.
இந்தோ-பசிபிக் பாதுகாப்பில் இந்தியாவின் நிலை:
இந்தோ-பசிபிக் மீதான பாதுகாப்பு குறித்து இந்தியாவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் , ‘IORA’ வின் 22வது அமைச்சரவைக் சபை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எதிர்வரும் காலத்தில் அவற்றுக்கு நடைமுறை வடிவம் கொடுக்க மீண்டும் இந்தியா முயற்சிக்கும் என கூறியுள்ளது.
இந்தியப் பெருங்கடல் ஒரு குறிப்பிடத்தக்க நீர்நிலை மட்டுமல்ல, ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் மூலோபாய வழித்தடமாகவும் உள்ளது. அதைச் சுற்றியுள்ள மற்றும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்தியப் பெருங்கடல் எல்லை நாடுகளின் 23-வது மாநாடு கடந்த அக்டோபர் 11, 2023இல் கொழும்பில் நடைபெற்றது. இந்திய பெருங்கடல்தான் ‘அரசியல்’ பதற்றம் குறைந்த பிராந்தியமாக இருந்து வருகிறது. ஆயினும்
இந்திய பெருங்கடலையும் சீனா விட்டு வைக்காமல் ‘வல்லாதிக்க’த்துடன் விரிவாக்கத்தை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.
தற்போது மாலத்தீவு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்களுக்கு அதிக வழியேற்படுத்தி இருக்கிறது.
இந்திய பெருங்கடலில் சீனா:
ஏற்கனவே இலங்கை, சீனாவின் காலனி நாடாக உருமாறிக் கொண்டிருக்கிறது. வங்கதேசத்திலும் சீனா அதீதமாய் கால்பதித்து நிற்கிறது. இப்பின்னணியில் இந்தியப் பெருங்கடல் எல்லை நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு (Indian Ocean Rim Association – IORA) கடந்த வருட 2023 அக்டோபரில் கொழும்பில் நடைபெற்றது.
இக்கூட்டமைப்பில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமோரோஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மலேசியா, மடகாஸ்கர், மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமன், சீஷெல்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், சோமாலியா, மாலஐதீவுகள் மற்றும் ஏமன் ஆகிய 23 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டமைப்பானது 1997-ல் உருவாக்கப்பட்டது. இதன் நட்பு சக்தி நாடுகளில் சீனாவும் ஒன்று. 1995-ம் தென்னாப்பிரிக்கா அதிபராக இருந்த நெல்சன் மண்டேலாவின் இந்திய பயணத்தின் போது இத்தகைய ஒரு கூட்டமைப்பு உருவாக்குவதற்கான முதல் முயற்சி தொடங்கப்பட்டது.
இந்திய பெருங்கடல் கூட்டமைப்பின் 23-வது மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது. இதில் 23 இந்திய பெருங்கடல் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பிராந்திய வளமும் பாதுகாப்பும்:
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடல்சார் சவால்களைச் சமாளிக்க பன்னாட்டு கூட்டு கட்டமைப்புகள் அவசியம் என இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அத்துடன் பருவநிலை மாற்றம், கடற்கொள்ளை, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் ஆழ்கடலில் வர்த்தக சுதந்திரம் போன்ற பொதுவான கடல்சார் சவால்களைத் திறம்படச் சமாளிக்க இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பன்னாட்டு கூட்டு தணிப்பு கட்டமைப்புகளை நிறுவுமாறு பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
பிராந்தியத்தின் வளத்தையும் பாதுகாப்பையும் குறைக்கும் சுய நலன்களைத் தவிர்ப்பதன் மூலம் பொதுவான கடல்சார் முன்னுரிமைகளை ஒத்துழைப்புடன் அணுக வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
1982 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சர்வதேச கடல்சார் சட்டங்களை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் விதி அடிப்படையிலான கடல்சார் ஒழுங்கு நம் அனைவருக்கும் முன்னுரிமையாகும். சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை கடைபிடிப்பது நமது கொள்கையாக இருக்க வேண்டும்.
நாம் அனைவரும் சட்டப்பூர்வமான கடல்சார் விதிகளைக் கடைப்பிடிக்க உறுதிபூண்டிருக்காமல் நமது பொதுவான பாதுகாப்பையும் செழிப்பையும் பாதுகாக்க முடியாது. ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், எந்தவொரு தனி நாடும் ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்வதற்கும் நியாயமான ஈடுபாட்டு விதிகள் முக்கியமானவை என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
காலநிலை மாற்றம் குறித்து, பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், நிலையான நடைமுறைகளுக்கு மாறவும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை கூட்டு தணிப்பு கட்டமைப்பில் உள்ளடக்க முடியும் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளார்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.