எழுத்தும் வாழ்க்கையும்! …. ( இரண்டாம் பாகம் ) …. அங்கம் – 94 …. முருகபூபதி.
மெல்பன் தமிழ் மூத்த பிரஜைகள் ஒன்றுகூடலில் “ பூமராங் “ மின்னிதழ் அச்சு வடிவில் அறிமுகம் !
முருகபூபதி.
சில வருடங்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து நண்பர் ஈ.கே. ராஜகோபால் எனக்கு தாம் வெளியிடும் புதினம் பத்திரிகையை தபாலில் அனுப்பிக்கொண்டிருந்தார்.
இந்தப்பத்திரிகையிலும் நான் சிறிது காலம் தொடர்ந்து எழுதினேன். அதில் முக்கியமான ஒரு தொடரையும் சில வாரங்கள் எழுதியிருந்தேன்.
இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1993 மேமாதம் 01 ஆம் திகதி, ஒரு தற்கொலை குண்டுதாரியினால் அன்றைய மேதின ஊர்வலத்தில் கொல்லப்பட்ட ரணசிங்க பிரேமதாச குறித்தும் ( அவரது அரசியல் வாழ்வும் பணியும் பற்றியது ) ஒரு தொடரை எழுதினேன்.
அன்றொரு நாள் தபாலில் வந்த புதினம் இதழில் வெளியாகியிருந்த ஒரு சிறிய விளம்பரம் எனது கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.
அந்த விளம்பரம் இவ்வாறு அமைந்திருந்தது:
“ எண்பது வயதுடைய ஒரு அம்மாவுடன் காலை 8-00 மணியிலிருந்து மாலை 5-00 மணி வரையில் பேசிக்கொண்டிருப்பதற்கு ஒரு பெண் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். “
வயது செல்லச்செல்ல, முதுமை வந்துவிடும். முதுமைக் காலத்தில் உடல் உபாதைகளும் கூடிவிடும். உணவில் , உறக்கத்தில், பயணங்களில், நாளாந்த வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய காலம் இந்த முதுமைப்பருவம்.
வீட்டிலே வைத்து பராமரிக்க முடியாத முதியவர்களை காப்பகங்களில் அனுமதிக்கின்றார்கள். நான் வதியும் அவுஸ்திரேலியாவில் ஏராளமான முதியோர் காப்பகங்கள் இயங்குகின்றன.
சிலவற்றில் எனது நண்பர்களும் பணியாற்றுகின்றனர். அவர்களிடமிருந்தும் எனக்கு பல சுவரசியமான கதைகள் கிடைத்து வருகின்றன.
நினைவு மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் மிகுந்த வருத்தம் தரக்கூடியது.
தங்கள் முதிய பெற்றோர்களை காப்பகங்களில் அனுமதித்துவிட்டு, நாளாந்தம், வாராந்தம், அல்லது மாதாந்தம் சென்று பார்க்கும் அவர்களின் பிள்ளைகள் சொல்லும் கதைகளையும், காப்பகங்களிலிருக்கும் முதியவர்கள் சொல்லும் கதைகளையும் கேட்டு வருகின்றேன்.
நானும் முதியோர் காப்பகம் செல்லவேண்டிய காலம் வரும்போது, எவ்வாறு நான் என்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதை கற்றுத்தேர்வதற்கும் அந்தக்கதைகள் பெரிதும் உதவும் எனக்கருதுகின்றேன்.
சமகாலத்தில் வாட்ஸ் அப் பாவனைக்கு வந்தபின்னர், நானும் ஒரு உபாதைக்கு ஆளாகியிருக்கின்றேன். சில முதியவர்கள் அடிக்கடி நேரம் காலம் தெரியாமல் எனது வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு தங்கள் விடயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.
அவர்களுக்கு நடு இரவில் உறக்கம் கலையும்போதுதான் எனது நினைவு அவர்களுக்கு வருகிறது போலும். அப்போது நான் ஏதாவது செய்துகொண்டிருப்பேன்.
கைத் தொலைபேசியை உரத்த தொனியில் இயக்கவைத்துவிட்டு, அவர்கள் சொல்லும் கதைகளை கேட்டவாறே எனது பணிகளைத் தொடருவேன். அல்லது எழுதிக்கொண்டிருப்பேன்.
இன்னும் சிலரோ, தாங்கள் தமது முகநூலில் எழுதிய குறிப்புகள் பற்றியும் அதற்கு வந்த எதிர்வினைகள் பற்றியும் சொல்லி சலிப்பேற்படுத்துவார்கள்.
இன்னும் சிலர், தங்களுக்கு இந்தச் சமூகம் சரியான அங்கீகாரத்தை தரவில்லை என்று புலம்புவார்கள்.
சிலர் தாங்கள் அரசியலிலும் கலை, இலக்கியத்திலும் சமூகத்திலும் வெட்டி வீழ்த்திய வீரப்பிரதாபங்களை சொல்வர்கள்.
சிலர் தங்கள் முகநூல் குறிப்புகளுக்கு எத்தனை “லைக் “வந்திருக்கிறது எனச்சொல்லி பெருமிதம் அடைவார்கள்.
இந்தக்காட்சிகளை தொடர்ந்து அவதானித்து வரும் எனது மனையாளுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டு வரும்.
எனக்கு ஒருவிடயம் மாத்திரம் புரிந்தது. அதாவது வயது செல்லச்செல்ல, முதுமை வரும்போது, யாருடனாவது ஏதாவது
பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்ற பழக்கம் வழக்கத்திற்கு வந்துவிடுகிறது .
அத்தகைய ஒரு பலவீனமான நிலைக்கு என்னை தள்ளிக்கொள்ளாமல், ஏதாவது உருப்படியான வேலைகளை செய்து கொண்டிருக்கவேண்டும் என்று என்னை நானே தாயார்படுத்திக்கொண்டிருக்கின்றேன்.
தொடர்ந்து வாசித்தால் நீண்ட ஆயுள் இருக்கும் என்று ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். தினமும் ஐந்து சிறுகதைள் வாசித்தவாறு, முடிந்த வரையில் பல ஊடகங்களையும் தினமும் படித்தவாறு, வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் எழுதியவாறு, தங்கள் படைப்புகளை பார்த்து எழுத்துப்பிழை திருத்தி, செம்மைப்படுத்தித்தருமாறு கேட்கும் அன்பர்களின் எழுத்துக்களை சரி பார்த்து அனுப்புவதோடு, நான் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலான அமைப்புகளின் பணிகளிலும் என்னை முழுமையாக ஈடுபடுத்தியவாறு, ஊடகங்களுக்கு எழுதிக்கொண்டும் எனது வீட்டில் காய்கறித்தோட்டத்தை பராமரித்தவாறு, மனைவியுடன் உள்ளுர் பயணங்களும் மேற்கொண்டு, பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடியவாறு தினமும் இரவில் ஒரு திரைப்படத்தையும் பார்த்துக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் என்னிடம், “ இதற்கெல்லாம் உமக்கு எப்படி நேரம் கிடைக்கிறது..? “ என்று கேட்கும் நண்பர்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டுதான் இந்தத் தொடரையும் வாராந்தம் எழுதி வருகின்றேன்.
காலையிலும் மாலையிலும் எனது இரத்த அழுத்தம் எந்த நிலையிலிருக்கிறது என்பதை ஒரு கருவியின் மூலம் பார்த்து பதிவுசெய்து வைப்பதும் எனது மனையாள்தான். இந்த மேலதிக வேலையை எனக்குத் தந்திருப்பவர் எனது மருத்துவர்.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் நடைப்பயிற்சி அவசியம். உணவிலும் அவதானம் தேவை.
இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் ஏன் இந்தக்கதைகள் எல்லாம் வருகிறது..? என்று இதனை வாசிக்கும் வாசகர்கள் யோசிக்கக்கூடும்.
கடந்த 10 ஆம் திகதி , மெல்பன் தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பினர், தங்களது மாதாந்த ஒன்றுகூடலுக்கு என்னையும் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நடப்பாண்டு தலைவர் எழுத்தாளர் , ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினத்தையும் அழைத்திருந்தனர்.
மெல்பன் Glen Waverly என்ற இடத்தில் இந்த ஒன்றுகூடல் நடந்தது. இந்த மூத்தோர் அமைப்பில் எமது சங்கத்தின் வெளியீடான பூமாரங் மின்னிதழை நாம் இருவரும் அறிமுகப்படுத்தினோம்.
அதற்காகவே மூத்தோர் அமைப்பில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் சகோதரி சாந்தி சந்திரகுமார் எம்மை அழைத்திருந்தார்.
இவரை , இவரது பத்துவயது பருவம் முதல் நன்கு அறிவேன்.
எங்கள் நீர்கொழும்பூரில் இயங்கும் இந்து இளைஞர் மன்றத்தில், சாந்தியின் மூத்த அண்ணன் பொறியியலாளர் மகேஸ்வரனும் அங்கம் வகித்தவர்.
இவருடைய வீடு, நீர்கொழும்பு லூவிஸ் பிளேஸில் கடற்கரையோரமாக அமைந்திருந்தது.
அமர்தலிங்கம், கோவை மகேசன், கவிஞர் காசி. ஆனந்தன், பேரின்பாயகம் முதலான தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அந்த இல்லத்திற்கு வந்து சென்று அரசியல் பேசியவர்கள்.
காலம் என்னையும் மகேஸ்வரனையும் அவரது குடும்ப அங்கத்தவர்களையும் அவுஸ்திரேலியாவில் மீண்டும் இணைத்தது.
சாந்தி சந்திரகுமார் கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் தன்னார்வத் தொண்டர். எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்திலும் இணைந்திருந்தவர். இவர் மூலமாக நாம் பராமரித்த கிழக்கிலங்கை மாணவியின் குடும்பத்தினரை தனது சொந்த சகோதரங்களாக இன்று வரையில் கவனித்துவருகிறார்.
இலங்கை செல்லும்போதெல்லாம், அந்தக்குடும்பத்தினரை தனது இருப்பிடத்திற்கு அழைத்து சுற்றுலாக்களும் மேற்கொண்டுவரும் மனிதநேய செயற்பாட்டாளர்.
மெல்பன் மூத்த பிரஜைகள் அமைப்பிலும் இணைந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். இந்த அமைப்பிலிருப்பவர்கள் மாதாந்தம் ஒன்று கூடி, தியானம், தேகப்பயிற்சி முதலான நிகழ்வுகளுடன் சமூகப்பணிகளையும் தொடருகின்றனர்.
இங்கிருக்கும் இரட்சணிய சேனை (The Salvation Army) அமைப்பிற்கு உலர் உணவுப்பொருட்களை சேகரித்தும் வழங்கி வரும் தமிழ் மூத்த பிரஜைகள் மத்தியில், நாம் எமது சங்கத்தினால் மின்னிதழாக வெளியிட்ட பூமாரங் முதலாவது இதழை பல பிரதிகள் அச்சிட்டு, வருகை தந்திருந்த அனைவருக்கும் விநியோகித்தனர்.
இந்நிகழ்வில் நானும் நண்பர் கிறிஸ்டி நல்லரெத்தினமும் அவர்களுக்கு ஒரு புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தினோம்.
டிஜிட்டல் முறையில் ஓவியங்கள் வரைவது எவ்வாறு, சிறுகதை, கவிதை, நாவல் கட்டுரை எவ்வாறு எழுதுவது ? முதலான பயிற்சி வகுப்புகளையும் தமிழ் மூத்த பிரஜைகள் ஆரம்பிக்கவேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம்.
இந்த வகுப்புகளில் மூத்தவர்களும் இளையோரும் ஒன்றுகூடத்தக்கதாக வகுப்புகளை ஆரம்பிப்பதுதான் எமது அடுத்த கட்டத் திட்டம்.
இதில் இங்கிருக்கும் எழுத்தாளர்களையும் அழைத்து பயிற்சிகளை வழங்கும் அதே சமயம், ஓவியத்துறையில் ஆர்வம் கொண்டிருப்பவர்களுக்கும் புதிய பாதையை திறந்துவிடலாம் என நம்புகின்றோம்.
இவ்வாறு ஏதேனும் உருப்படியான சேவைகளில் முதியவர்கள் தம்மை ஈடுபடுத்திக்கொண்டால், “ பேச்சுத்துணைக்கு யாராவது கிடைக்கமாட்டார்களா..? “ என்ற ஏக்கம் குறைந்துவிடும்.
( தொடரும் )