கட்டுரைகள்

சர்வதேச சட்டம் காசாவில் மீறல்: இஸ்ரேலுடன் முரண்படும் அமெரிக்காவும் மேற்குலகும்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

( அமெரிக்கா, ஐரோப்பிய இராஜாங்க அதிகாரிகள், இஸ்ரேல்-காசா போரில் தங்கள் சொந்த அரசாங்கங்களின் கொள்கைகள் “சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள்” என்று எச்சரிக்கும் “அட்லாண்டிக் அறிக்கை”யில் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்)
நீண்ட காலமாக அமெரிக்காவுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு அமெரிக்காவும் இணை பிரியாத அல்லது பிரிய முடியாத பந்தம் இருந்து வருகிறது.
மத்தியக் கிழக்கில் அமெரிக்காவுக்கு உறுதுணையான, நம்பகமான பங்காளியாக இஸ்ரேல் இருப்பதில் அரபு நாடுகளுக்கு பாரிய ஆட்சேபணை எதுவும் இல்லை என்றே புலப்படுகிறது. ஆனாலும் தன்னை அங்கீகரிக்காத அரேபிய நாடுகளுடனும் அமெரிக்கா நட்புறவு பாராட்டுவதைத் தடுக்க இஸ்ரேல் முயலவில்லை என்பதும் உண்மையே.
பனிப்போர் காலத்தில் மத்திய கிழக்கில் நிகழ்ந்த சில மாற்றங்களால் காலப்போக்கில் அமெரிக்கா இஸ்ரேலைத் தாங்கி நிற்பது பாரியளவில் அதிகரித்தது. இதற்கு
அமெரிக்காவில் அந்நாட்டு வாழ் யூதச் சமூகமும் முக்கியக் காரணம்.
அமெரிக்க நாடாளுமன்றம் இது குறித்து விவாதித்துள்ளதும் அதற்குப் பின்னால் அமெரிக்க வாழ் யூதச் சமூகத்தின் செல்வாக்கு இருப்பதும் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க கைப்பிள்ளையான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையானது முன்னெப்போதும் இல்லாத வகையில் காசாவில் உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு அழிவை ஏற்படுத்தியிருந்தாலும், ஹமாஸை அகற்றுவதற்கோ அல்லது நீண்ட காலத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசியல் தீர்விற்காகவோ செயல்படக்கூடிய உத்தி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
இஸ்ரேல் மூலோபாய பின்னடைவு:
தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள், இஸ்ரேலிய நடவடிக்கைக்கு பின்னால் ஒரு மூலோபாய பின்னடைவு உள்ளது என்று புரிந்து கொள்கிறார்கள். ஆயினும் இத்தகைய விமர்சனங்களை இஸ்ரேலிய அரசும், அதிகாரிகள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் சர்வதேச சட்டத்திற்கு இப்போர் உட்பட்டது என்று கூறியுள்ளது. போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்யும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து செயல்படுகிறது என்றும் கூறியுள்ளது.
அட்லாண்டிக் அறிக்கை:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பணியாற்றும் 800 க்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள், இஸ்ரேல்-காசா போரில் தங்கள் சொந்த அரசாங்கங்களின் கொள்கைகள் “சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள்” என்று எச்சரிக்கும் “அட்லாண்டிக் அறிக்கை”யில் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த அட்லாண்டிக் அறிக்கையில், இந்த நூற்றாண்டின் மிக மோசமான மனித பேரழிவுகளில் ஒன்றிற்கு உடந்தையாக இருக்கும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளது. இஸ்ரேலின் சில முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகளின் அரசாங்கங்களுக்குள் கணிசமான அளவிலான கருத்து வேறுபாடுகளின் சமீபத்திய அறிகுறி இதுவாகும்.
இவ் அட்லாண்டிக் அறிக்கையில் கையொப்பமிட்ட ஒருவர், 25 ஆண்டுகளுக்கும் மேலான தேசிய பாதுகாப்பு அனுபவமுள்ள அமெரிக்க அரசாங்க அதிகாரியாவார். தங்கள் கவலைகளை தொடர்ந்து இஸ்ரேல் நிராகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
சர்வதேச சட்ட மீறல்கள்:
அத்துடன் இந்த அறிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட  ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல அரசு ஊழியர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளில் எல்லைகள் இல்லை என்று கூறுகிறது.
இப்போர் பல்லாயிரக்கணக்கான குடிமக்கள் இறப்புகளுக்கு வழிவகுத்தது. மற்றும் உதவிகளை வேண்டுமென்றே தடுப்பது, ஆயிரக்கணக்கான குடிமக்களை பட்டினி மற்றும் மெதுவாக இறக்கும் அபாயத்தில் வைத்துள்ளது என இந்த அட்லாண்டிக் அறிக்கை கூறுகிறது.
மேற்கத்திய அரசாங்கங்களின் கொள்கைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனச் சுத்திகரிப்பு அல்லது இனப்படுகொலை ஆகியவற்றிற்கு பங்களிக்கும் அபாயம் உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
அரபு அமெரிக்க வாக்கு இழப்பு:
அல்ஜீரியா மற்றும் சிரியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் ஃபோர்டு கூற்றின்படி, கடந்த 40 ஆண்டுகளில் வெளியுறவுக் கொள்கையைப் பார்த்த எனது அனுபவத்தில் இது தனித்துவமானது. இஸ்ரேலுக்கான ஜோ பைடனின் ஆதரவு அரபு அமெரிக்கர்களிடையே அவரின் வாக்குகளை இழந்துவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
ஈராக் படையெடுப்பிற்கு வழிவகுத்த தவறான உளவுத்துறை 2003 இல் அமெரிக்க நிர்வாகத்திற்குள் இருந்த கவலைகளுடன் அவர் அதை ஒப்பிட்டுள்ளார். ஆனால் இந்த முறை பல அதிகாரிகள் அமைதியாக இருக்க விரும்பவில்லை என்றும்,
காசா போரின் சிக்கல்கள் மிகவும் தீவிரமானவை மற்றும் தாக்கங்கள் மிகவும் தீவிரமானவை, அவை பகிரங்கமாக சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
மேலும் பாலஸ்தீனியர்களின் மரணங்களை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், மற்றும் இஸ்ரேலின் சொந்த பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை சீர்குலைவை சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் கடுமையான இராணுவ நடவடிக்கை:
இஸ்ரேலின் தற்போதய இராணுவ நடவடிக்கைகள் 9/11 முதல் பெற்ற அனைத்து முக்கியமான பயங்கரவாத எதிர்ப்பு நிபுணத்துவத்தையும் புறக்கணித்து விட்டது. இராணுவ நடவடிக்கை ஹமாஸை தோற்கடிக்கும் இஸ்ரேலின் இலக்குக்கு பங்களிக்கவில்லை, அதற்கு பதிலாக ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பை பலப்படுத்தியுள்ளது.
இனப்படுகொலைச் செயல்களைத் தடுக்க இஸ்ரேல் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவால் தொடரப்பட்ட வழக்கில் ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது.
இதேவேளை இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம், காஸாவில் சண்டையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர கோரியுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவும் இஸ்ரேலை வேண்டியுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும்போக்கு:
பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸ் மீதான முழு இராணுவ அழுத்தம் மட்டுமே பணயக் கைதிகளை மேலும் விடுவிக்கும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் நீண்ட போரின் பின்னர் ஹமாஸின் கட்டளை மையங்கள், ஆயுத தளங்கள் மற்றும் பணயக் கைதிகளை வைத்திருப்பதற்கான வசதிகள் உட்பட ஹமாஸ் குழுவால் பயன்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க நிலத்தடி உள்கட்டமைப்பை இஸ்ரேல் அழித்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.
ஆயினும் வேண்டுமென்றே சிவிலியன்களை குறிவைப்பதாக கூறப்படும் கூற்றை இஸ்ரேல் பலமுறை நிராகரித்துள்ளது. ஹமாஸ் சிவிலியன் உள்கட்டமைப்புகளிலும் அதைச் சுற்றியும் மறைந்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
2007ல் இருந்து ஹமாஸால் ஆளப்பட்டு இஸ்ரேல் மற்றும் எகிப்தால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, போர் தொடங்கியதில் இருந்து, 27,750க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 65,000 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 9,000 பேர் ஹமாஸ் போராளிகள் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அந்த எண்ணிக்கைக்கான ஆதாரங்களை வழங்கவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.