கட்டுரைகள்
நிகழ்நிலைக் காப்புச் சட்ட மூலமும்.. தமிழ் மக்களின் கருத்து சுதந்திரமும்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(இலங்கையில் ஊடக சுதந்தித்திற்கு அச்சுறுத்தலாக, நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் (online safety bill) ஆனது தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகும். இதுவே மனித உரிமைகளுக்கு பெரும் அழுத்தங் கொடுப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது)
இலங்கையில் ஊடக அச்சுறுத்தல் :
நீண்ட காலமாக இலங்கையில் உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு “ஊடகச் சுதந்திரம்” மறுக்கப்பட்டுள்ளதோடு, கொலை அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் இருந்துள்ளன.
இலங்கையைப் பொருத்தவரை சுதந்திரமாக செய்திகள் சேகரிப்பதற்கோ, சம்பவ இடங்களுக்கு சென்று உண்மை நிலவரத்தை ஆய்வு செய்யவோ, பாதிக்கப் பட்ட மக்களிடம் உண்மைகளை கேட்டறியவோ முடியாத நிலையே இன்னமும் இருக்கின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கைச் செய்தி்களின் நம்பகத்தன்மை எவ்வாறானதாக இருக்கும்? உண்மை நிலைப்பாடுகளை மக்களுக்கு அறியத்தர முற்படும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அத்துடன் பல ஊடகவியலாளர்கள் கொலைச் செய்யப்பட்டும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை பலருக்கும் தெரியாததாகும்.
இதனால் பல ஊடகவியலாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறிச் சென்றனர். அத்துடன் லசந்த விக்கிரமதுங்க போன்ற பிரபல்ய ஊடகர்களும் கொலை செய்யப்பட்டதும் அறிந்ததே.
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் :
இலங்கை பாராளுமன்றில் ஜனவரி 24இல் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாட்டின் மனித உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளுக்கு பெரும் அழுத்தமாக, கருத்துச் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும் பயன்படுத்தக்கூடிய அரசாங்கத்தின் இந்தச் சட்டம் புதிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
தமிழ் மக்களின் ஊடகச் சுதந்திரம் :
போர்க்காலத்தில் தமிழ் மக்களின் எந்தக் கருத்துக்களும் நிலைப்பாடுகளும் வெளியுலகம் அறியமுடியாதவாறு ஒரு ஊடக முடக்கம் இலங்கையில் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இது உண்மைகளை அறிவிக்கும் ஊடகங்களின் ஊடகச் சுதந்திரம் அற்ற நிலையாகும்.
குறிப்பாக இலங்கையில் தமிழர்களால் நடாத்தப்படும் ஊடகங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி வந்தது. அத்துடன் ஊடகவியலாளர்கள் கைது, காணாமல் போதல், கொலை செய்யப்படல் போன்றவை தொடர்ந்தன.
சர்வதேச மட்டத்தில் பிரசித்திப் பெற்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சாதாரண மக்களின் கருத்துச் சுதந்திரம் பாரிய அச்சுறுத்ல்களில் தொடர்ந்தது.
மனித உரிமையும்-கருத்துச் சுதந்திரமும்:
எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று.
கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது.
பேச்சு, எழுத்து, இசை, நாடகம், ஓவியம், நிகழ்த்தல், பல்லூடகம், அலங்காரம், நம்பிக்கைகள், இணையம் என பல்வேறு வடிவங்களிலும் கட்டுப்பாடுகளின்றி கருத்துக்களை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, பகிர ஆகியவற்றுக்கான சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும்.
பேச்சுச் சுதந்திரம் என்னும் தொடர் பல சமயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது, வாய்ப்பேச்சை மட்டும் குறிப்பது அல்ல. கருத்து வெளிப்பாடு வேறு பல வழிகளிலும் இடம்பெற முடியும்.
இலங்கையில் புதிய சட்டமூலம்:
இவ்வருட ஜனவரி 24 அன்று, இலங்கை பாராளுமன்றம் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நிறைவேற்ற வாக்களித்தது. குறித்த சட்டம், “தடைசெய்யப்பட்ட அறிக்கைகள்” என்றால் என்ன என்பதைத் தீர்மானிப்பது மற்றும் அத்தகைய உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு இணைய சேவை வழங்குநர்களுக்கு பரிந்துரைகளை வழங்குவது மற்றும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களுக்கான அணுகலை முடக்குவது உள்ளிட்ட பரந்த அதிகாரங்களை ‘ஆன்லைன் பாதுகாப்பு ஆணையத்திற்கு’ வழங்குகிறது.
தேசிய பாதுகாப்பு, பொது சுகாதாரம் அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அல்லது பல்வேறு வர்க்க மக்களிடையே தவறான விருப்பம் மற்றும் விரோத உணர்வுகளை ஊக்குவிக்கும் ‘தவறான அறிக்கையைத் தொடர்பு கொள்வதற்கான’ தடையும் இந்தச் சட்டத்தில் அடங்கும்.
இந்த சட்டமூலம் பல ஆர்வலர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மனித உரிமைகள் உயர் ஆணையரின் (OHCHR) ஐ.நா அலுவலகத்தால் விமர்சிக்கப்பட்டது. அவர்கள் இந்த சட்டமூலம் ‘கருத்துச் சுதந்திரத்தின் மீது பாரிய விளைவை ஏற்படுத்தும்’ என்றும் கூறியுள்ளனர்.
அரசாங்கம் உடனடியாக அதை திரும்பப் பெற்று, நாட்டில் உள்ள அனைவரின் மனித உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதை உறுதி செய்ய வேண்டும். சட்டத்தின் பல பகுதிகள் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை.
இலங்கை ஊடக நெருக்கடி:
அத்துடன் இணையத்தில் கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமைகளை அனுபவிப்பதை கட்டுப்படுத்தும் பரந்த விதிகள் உட்பட, மேலும் தெளிவற்ற வார்த்தைகள், ‘தடைசெய்யப்பட்ட அறிக்கைகள்’ போன்ற அகநிலை குற்றங்கள் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
சக்திவாய்ந்த ‘ஆன்லைன் பாதுகாப்பு ஆணையம்’. கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமைகள் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையால் (ICCPR) உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளின் தாக்கம் ஆகியவற்றின் போது மக்கள் தங்கள் கவலைகளைப் பற்றிக் கூறும்போது, இந்தச் சட்டம் அதிகாரிகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் மற்றும் குடிமை இடத்தை மேலும் கட்டுப்படுத்தவும், விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை ஒடுக்கவும் பயன்படுத்தப்படும்.
கடந்த கால தேர்தல்களில், எதிர்ப்புக்களை முறியடித்த நீண்ட வரலாற்றைக் கொண்ட, இலங்கை அதிகாரிகள், தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், பின்னரும் மனித உரிமைகளுக்கு உத்திரவாதமளித்து மரியாதை செய்வதன் மூலம் தமது சர்வதேச மனித உரிமைக் கடமைகள் மற்றும் கடப்பாடுகளை நிலைநாட்டுவதற்கான அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.
அனைத்துலக சட்டமும் உறுதிப்படும் :
கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை பல்வேறு மனித உரிமைக் ஆவணங்கள் ஊடாக அனைத்துலகச் சட்டடங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்யின் 19 ஆவது பிரிவும், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கையின் 10 ஆவது பிரிவும் இத்தகைய ஆவணங்களுள் அடங்கும்.
எனினும் பல நாடுகளில் இது
முறையாக நிறைவேற்றப்படுவதில்லை.
இந்த 19வது பிரிவில், அனைவரும் எந்தவித இடையூறும் இல்லாமல் சொந்த கருத்துக்களை தெரிவிக்க உரிமை கொண்டவர்கள். அத்துடன் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. தகவலையும் எண்ணக் கருக்களையும் தேட, அறிய, கற்பிக்க உரிமை உண்டு. எழுத்து, கலை, ஊடகம் என எந்த வடிவம் ஊடாகவாயினும் இந்த உரிமை உண்டு.
மேற்குறிப்பிட்ட உரிமைகள் கடமைகளையும் பொறுப்புக்களையும் கொண்டுள்ளது. அதனால் சட்டம் பின்வரும் நோக்கங்களுக்காக சில எல்லைகளை வரையறை செய்யலாம். பிறரின் உரிமைகளை, மதிப்பை கவனத்தில் கொண்டு, தேசிய பாதுகாப்பு, ஒழுக்கம், நலம், அறம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட சட்டம் அமைய வேண்டும்.
எவ்வகையிலும் நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் ஆனது தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகும். மனித உரிமைகளுக்கு பெரும் அழுத்தங் கொடுப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.