சிங்கள அரச ஒடுக்குமுறையும்… சிறிலங்காவின் சுதந்திர தினமும்! …. நவீனன்.
பிரித்தானியரிடம் இருந்து 1948 பெப்ரவரி நான்கில் கிடைத்த இலங்கையின் சுதந்திரம் தமக்கான சுதந்திரம் என்று தமிழர்களால் உணரப்படாமல் தள்ளிப்போனமைக்கான முக்கிய காரணமாக ஆட்சியாளர்களின் விரோத இனத்துவேசம் அமைகின்றது.
ஆட்சியாளர்களின் விரோதமும் இனத்துவேசவமும்:
பிரித்தானியர் சுதந்திரத்தை வழங்கும் போது இலங்கையின் அனைத்து இனத்தவர்களுக்குமே வழங்கினராயினும் துரதிர்ஸ்டவசமாக இலங்கையின் சுதந்திரம் பெளத்த சிங்களவர்களுக்காக போனது காலத்துயரமே.
இந்நிலைமையானது நாட்டின் சுதந்திரம் என்பது இலங்கையில் வாழும் ஒரு பகுதியினருக்கு என்றாயிற்று.
பிரித்தானியர் இலங்கைக்கு வழங்கிய சுதந்திரத்தை தமதாக்கியவர்கள் நாடும் தங்களுடையது, ஆட்சியும் தமக்கானது என்று முடிவு செய்து, அதை நிலை நிறுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை சிங்கள அரசுகள் மேற்கொண்டது. அதன் ஒரு அம்சமாக தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டதுடன், தமிழர்களைக் காலத்திற்குக் காலம் வஞ்சித்துத் தண்டிக்க வேண்டும் எனவும் பேரினவாதிகளால் அடிமைப் படுத்தப்பட்டனர்.
இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வட கிழக்கு, மலையகம் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்ற உணர்வலைகளுக்கு சிங்கள அரசுகளால் உள்ளாக்கப் பட்டனர்.
கறைபடிந்த இனக் கலவரங்கள்:
சிறிலங்காவின் வரலாற்றில் கறைபடிந்த வடுக்களைப் பதிவாக்கிக் கொண்ட இனக் கலவரங்களையும், இனப்படுகொலைகளையும்
உருவாக்கிய சிங்கள அரசுகளின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் அனுஸ்டிக்க வேண்டும் என பேரினவாதம் கட்டாயப்படுத்துவதை கண்டிக்காமல், உலகம் கண்மூடிக் கொண்டிருப்பது கவலைக்குரியதே.
சிறிலங்காவின் சுதந்திரதினம் என்பது சிங்களவர்களிற்கானது என்று ஆக்கப்பட்டபோது நாட்டின் சுதந்திர தினம் சிறுபான்மைத் தமிழ் மக்களிற்கு வேதனைக்குரிய நாளாகிப் போனது. சுதந்திர தினத்தைப் புறக்கணிப்பதே ஒரேவழி என்று தமிழ் மக்கள் நீண்ட காலமாகவே முடிவு செய்து கடைப்பிடிக்கின்றனர்.
தமிழர்க்கான சுதந்திரத்தை தர மறுத்துவிட்டு சுதந்திரதினத்தைக் கொண்டாடுங்கள் என்றால் அது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? பிரித்தானிய காலணியாதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பெப்ரவரி நான்காம் தினமே முன்னைய இலங்கையின் (Ceylon ) சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்பட்டது யாவறும் அறிந்ததே.
சிறிலங்காவின் சுதந்திரம் சிங்களவர்களிற்கானது !
ஆயினும் இன்றைய சிறிலங்காவில் (Sri Lanka) சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைத்த 75 வருடங்கள் ஆகினாலும், சிறுபான்மையின தமிழர் இரண்டாம் தர பிரஜைகளாக அல்லது ஏதிலிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே வரலாற்று உண்மையாகும்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கான தேசிய எழுச்சி பிரித்தானிய காலணியாதிக்கவாதிகளுக்கு எதிராக அகிம்சை வழியிலும், ஆயுதப் போராட்ட வடிவத்திலும் பரந்துபட்ட மக்களை இணைத்து நடாத்தப்பட்ட போராட்டமாகும். இந்தியாவின் போராட்டத்தின் பக்க விளைவுகள் இலங்கையிலும் பிரதிபலித்ததாய் இருந்தது என்பதே சாட்சியமாகும்.
ஆங்கிலேயர்களின் பிரித்தானிய நவ காலணித்துவ சுரண்டல் முறமைக்கு தம்மை மாற்றிக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் போது இலங்கையையும் விட்டு வெளியேறினர்.
உண்மையில் இலங்கை தனது சுதந்திரத்திற்காக இந்தியா அளவிற்கு போராடவில்லை. இலங்கையின் சுதந்திரத்திற்காக தமிழ் மக்களின் பங்களிப்பும் தியாகங்களும் அளப்பரியதாகும்.
சிங்கள அரசால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினம்:
இதுவே இன்று வரை சுதந்திர தினம் சிறுபான்மை வட கிழக்கு, மலையக தமிழ் மக்களால் கொண்டாடப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஆண்டாண்டு காலமாக சிங்கள அரசால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின தமிழ் மக்கள் தமது சம உரிமைகளை கோரி அகிம்சை, ஆயுதப்போராட்டம் என்று பல்வேறு வழிகளில் போராடி வந்தனர்.
தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்து கொள்ளாத இலங்கை ஆளும் வர்க்கம் இவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஆயுத ரீதியில் ஒடுக்க முற்பட்டதன் விளைவு தமிழீழ ஆயுத போராட்டமாக வீரியம் அடைந்து, இருபது ஆண்டு காலம் தமிழீழ அரசின் நிர்வாகத் திறமையை முழு உலகிற்கே புலப்பட்டது.
சிறிலங்காவின் சுதந்திரம் என்பது தமிழரை ஒடுக்கும் ஒரு அரசின் கொண்டாட்டத்தினமே ஒழிய சிறுபான்மையின தமிழரின் கொண்டாட்டத்தினம் அல்ல என்ற உணர்வலைகளை மேலும் மேலும் அதிகரிக்க செய்தமை சிங்கள அரசின் கொடூர ஆட்சியே காரணமாகும்.
சிங்கள அரச ஒடுக்குமுறை :
இதனாலேயே சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழர் தாயகம் எங்கும் நீண்ட காலமாக பகிஷ்கரிக்கப்படும் ஒரு தினமாகவும் பரிணாமம் அடைந்துள்ளது. சிறிலங்காவில் தமிழர் உரிமை மறுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்வலை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாக தாயகம் எங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. சிங்களவர்களின் சுதந்திர தினத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்களும், பேரணிகளும் தமிழர் தாயகம் எங்கும் காலங்காலமாக முன்னெடுக்கப் பட்டுவந்துள்ளது.
போர் மௌனித்த 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும், சிங்கள பேரினவாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் இன்னமும் தொடர்கின்றது. ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதற்கு சிறிலங்கா அரசின் இனத்துவேச ஆட்சியே காரணியாகின்றது.
தமிழர் தாயகப்பகுதிகளில் பௌத்த மயமாக்கல் :
ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் 2009இல் மௌனித்த பின்னரும் தமிழர் தாயகப்பகுதிகளில் பொது மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என்பன இன்று வரை புதிய புதிய வடிவங்களில் தொடர்கிறது. போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் இன்று வரை நீக்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
தமிழரின் இனப் படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு இதுவரை எவ்வித பொறுப்பும் கூறவில்லை. தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் தொடர்ந்து சிங்கள அரசு ஏமாற்றி வருகிறது. இதனாலேயே பெப்ரவரி 4 ஆம் திகதியை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக தான் அனுஸ்டித்து வருகிறார்கள்.
இறுதிப் போரில் அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இன்னமும் தேடி வருடக்கணக்காக போராடி வருகிறார்கள். தமிழ் அரசியல் கைதிகள் பதினைந்து வருடங்களுக்கு மேலாக தமது விடுதலையை எதிர்பார்த்து சிறையில் வாடுகிறார்கள். தமது பூர்வீக நிலங்களை பறிகொடுத்துவிட்டு இன்றுவரை தமிழ் மக்கள் வீதியில் போராடி வருகிறார்கள். எதையுமே பொருட் படுத்தாது சிறிலங்கா அரசு சர்வதேசத்தை மிக சாணக்கியமாக ஏமாற்றி வருகிறது.
தொடரும் சிங்கள குடியேற்றங்கள் :
இதேவேளை தமிழர் பகுதிகளில் தமிழருக்கு அனுமதிவழங்காமல் சிங்கள குடியேற்றங்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள். தமது உரிமைகளுக்காக போராடும் மக்கள் கைதுசெய்யப்பட்டு கொடூரமாக அச்சுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு தமிழர் தாயக்கதில் தமிழ் மக்களின் இருப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் சிறிலங்காவின் சுதந்திர நாளை
தமிழ் மக்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமது எதிர்ப்பை சிங்கள அரசுக்கும் தெரிவிப்பதுடன் சர்வதேசத்துக்கு தமிழ் மக்களின் உண்மை நிலையை உரத்துக்கூறி வருகின்றனர்.
தமிழர்கள் தமது உரிமைகளை விடடுக்கொடுக்காமல், தமது இருப்பை உறுதி செய்வதற்கு தாயக மண்ணில் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலைக்கு சிங்கள அரசு தள்ளியுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, தமிழ் கட்சி பேதங்களை கடந்து சகல தரப்பினரின் ஒத்துழைப்புடன் சிங்கள அரசிற்கு எதிர்ப்பை காட்ட வேண்டும்.
கட்டாயப்படுத்தப்பட்டு திணிக்கப்பட்ட சுதந்திர தினம்:
2010இன் பின்னர் தமிழர் தாயகம் எங்கும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது சுதந்திர தின நாளில் சகலரும் சிங்கக் கொடியை ஏற்றவேண்டும் என்று படைத்தரப்பு கண்டிப்பாக உத்தரவிட்டது. வர்த்தக நிலையங்கள், ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் என எங்கும் தேசியக்கொடி கட்டப்பட வேண்டும் என அரசின் இராணுவத்தால் கட்டாயப்படுத்தப்பட்டது.
இதுவிடயத்தில் தயக்கம் காட்டுவோர் மீது படையினர் மேற்கொண்ட அடாவடித்தனங்கள் கொஞ்சமல்ல.
சுதந்திர தினம் என்பது ஒவ்வொருவரும் மனம், மெய், மொழிகளால் நினைந்து ஆத்மார்த்தமாக அனுஸ்டிப்பதாகும். சுதந்திர தினத்தை அனுஸ்டிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது மகிந்தவின் ஆட்சியில் நடந்த மிக மோசமான கொடூர சம்பவமாகும்.
தமிழ் மக்களின் வரலாற்றுக் கடமை்:
கடந்த பல ஆண்டுகளாக சுதந்திர தினத்தை வெற்றி விழாவாக சிங்களவர்கள் நாங்கள் கொண்டாடுகிறோம், நீங்களும் தேசியக் கொடியைத் தூக்கிப்பிடிக்க வேண்டும் என்றால் இனமானம் உள்ள எந்தத் தமிழனும் செய்யப் போவது இல்லை.
தமிழ் இனத்தை அழித்துவிட்டு அந்த அழிப்பை, சிங்கள அரசுகள் வெற்றித் திருநாளாகக் கொண்டாட, அதற்கு சிங்கக் கொடியைத் தூக்கிப்பிடிப்பது என்பது எவ்வகையிலும் சாத்தியமாற்றதாகும்.
தமிழர் தாயகம் எங்கும் பெப்ரவரி 4 ஆம் திகதி, சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து தமிழ் மக்கள் எழுச்சி பயணத்தில் ஒன்றுகூட வேண்டிய வரலாற்றுக் கடமை அனைவருக்கும் உள்ளது.