“கனகர் கிராமம்” …. தொடர் நாவல் …. அங்கம்-15 … செங்கதிரோன்.
குறிப்பு : கூமுனை (குமண) கிராமம் 1990 அசாதாரண சூழ்நிலையில் அரச அனுசரணையுடன் ‘தெகியத்த கண்டிய’ (அம்பாறை மாவட்டம்) எனும் குடியேற்றக் கிராமத்திற்கு இடம் பெயர்ந்து விட்டது –நாவலாசிரியர்.
கூமுனைக் கிராமம் சென்று ஊர் மக்களிடம் விளாம்பழங்களையும் தேனையும் வாங்கிக் கைகளில் காவிக் கொண்டு விளாம்பழ வாசம் வழிநெடுக நாசியைத் துளைக்க கோகுலன், கதிரவேல், பெரியவர் சாமித்தம்பி மூவரும் தங்கள் யாத்திரை அணி தங்கியிருக்கும் ‘கவிலித்த’ அம்மன் கோயிலடிக்கு நடந்து வந்து கொண்டிருக்கும்போது கூமுனை ஊர் மக்களைப் பற்றியே பேசிக் கொண்டு வந்தார்கள்.
கதிரவேல் கோகுலனிடம், “பிறதர்! அவங்க கட்டியிருந்த சாறங்கட்டப் பாத்தீங்களா?” என்றான்.
“ஓம்! அதுக்கென்ன. முழங்காலுக்குக் கொஞ்சம் கீழ தொங்கிற மாதிரி கட்டயாக உடுத்திரிந்தாங்க” என்றான் கோகுலன்.
“நான் அதச் சொல்லல்ல. இடுப்பில ஒரு சைட்ல கொஞ்சம் உப்பின மாதிரி பை போல சுப்பம் வச்சிக் கட்டினத கவனிக்கலயா? என்றான் கதிரவேல்.
“ஓம்” என்றான் கோகுலன்.
“சாறன இடுப்பில சேத்துக் கட்டக்கொள்ள அதிர தொங்கல இழுத்துப் பை போல ஆக்கிச் ‘சுப்பம்’ வச்சுக் கட்டுவாங்க. ஏனெண்டா வெளியில எங்கயும் பயணம் போக்கொள்ளயும் காட்டுக்குள்ள போக்கொள்ளயும் அதுக்குள்ள வெத்தில, பாக்கு, சுண்ணாம்பு, பாக்கு வெட்டி, வில்லுக் கத்தி, நெருப்புப் பெட்டி, விஷக்கல்லு, வேற.. விஷமிறக்கி வேர் எண்டு தேவயான சாமான்கள அந்தச் சுப்பத்துக்குள்ள வச்சுத்தான் கொண்டு போவாங்க” என்றான் கதிரவேல்.
“ஓம்! நம்மட ஊரிலயும் சில ஆக்கள் இப்படித்தானே” என்றான் சாதாரணமாகக் கோகுலன். பின் கதையை மாற்றி,
“கதிர்காமத்துக்கு போற வழியில காட்டுக்குள்ள நாமளும் போய் விளாம்பழம் புறக்கலாம்தானே” என்று கதிரவேலிடம் கேட்டான்.
“புறக்கலாம்தான். ஆனா ஆக்கள் அவ்வளவாப் போறல்ல. தெரியாத ஆக்கள் போனா காட்டுக்குள்ள சில வேள வழி தப்பிரும். அப்படி வழிதப்பி காணாமப் போய்த் திரும்பி வராதாக்களும் இரிக்காங்க. விளாம்பழம் தின்றத்துக்கென்று ஆனைகளும் வரும். அதுவும் ஆபத்து. அதனால பழக்கம் இல்லாத ஆக்கள் போறல்ல” என்றான் கதிரவேல்.
இதைக் காதில் வாங்கிக் கொண்ட பெரியவர் சாமித்தம்பி “ஆனைக்கு விளாம்பழம் நல்ல விருப்பமான சாப்பாடு. விளாம்பழத்த தும்பிக்கையால தூக்கி வாயில வச்சி உறிஞ்ச விளாம்பழத்துக்குள்ள இரிக்கிற சதயெல்லாம் ஆனட தொண்டைக்குள்ளால போயிரும். ஆன திண்டுபோட்டு போட்ட விளாம்பழம் வெளியால பாக்க கோதோட நல்ல விளாம்பழம் போல தெரியும். உடச்சிப் பாத்தா உள்ளுக்க ஒண்டும் இரிக்காது. அதுதான் ஒண்டுமில்லாதத ஆன திண்ட விளாம்பழம் போல எண்டு சொல்லுவாங்க” என்று விளக்கமொன்றைக் கொடுத்தார்.
இந்த விளக்கத்தைக் கொடுத்த பெரியவர் சாமித்தம்பி, “தம்பிமாரே! ராவைக்கு கூமுனயில அம்மன் கோயிலடியிலதானே தங்கப் போறம். கதிர்காம யாத்திர வந்தாக்கள் விளாம்பழம் புறக்கப் போய் லெக்குத்தப்பி காணாமப் போன கதைகள் கனக்க இரிக்கி. அப்படி போன ஆக்கள ஆன திரத்தின கதைகளும் இரிக்கி. முதல் தரம் நான் கதிர்காம யாத்திர வரக்குள்ள என்னயும் ஒருதரம் அப்படி ஆன திரத்தின. நான் தந்திரமாத் தப்பித்தன். அந்தக் கதயளயெல்லாம் உங்களுக்கு சொல்லோணும். ராவைக்குப் படுக்கக்குள்ள அந்தக் கதயெல்லாம் விவரமா சொல்லுறன் தம்பிமாரே” என்றார்.
கோகுலனுக்கும் கதிரவேலுக்கும் அந்த கதைகளையெல்லாம் உடனே கேட்க வேண்டுமென்ற ஆவல் துளிர்விட்டது. இரவைக்குக் கேட்கலாம்தானே என்று ஆவலை அடக்கிக் கொண்டார்கள்.
பொழுது பட்டுப் போகும் வேளையில் மூவரும் ‘கவிலித்த’ அம்மன் கோவிலடியை அண்மித்தார்கள். பறவைக் கூட்டங்கள் தத்தம் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. சுற்றிலும் இருந்த காட்டில் வண்டுகளின் சத்தமும் தேனீக்களின் ரீங்காரமும் காதைத் துளைத்தன. மூவரும் ‘கவிலித்த’ அம்மன் கோவிலை அடையும் வேளை கூடார வண்டிலோட்டியும் அவனது உதவியாளரும் குமுக்கன் ஆற்றங்கரையில் நின்றிருந்த மருத
மரமொன்றில் வண்டில் மாடுகள் இரண்டையும் அளவான கயிற்றுத் துண்டுகளின் நுனிகளால் இணைத்து மறு நுனிகளை மாடுகளின் கழுத்தில் இணைத்து அவற்றை ஆற்றுநீரில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். நீரின் அடியிலிருந்து அள்ளி எடுத்த மணலை மாடுகளின் உடலில் தேய்த்துச் சுத்தம் செய்தும் அவற்றைக் குளிப்பாட்டினர். மாடுகளும் அடிக்கடி உடலைச் சிலிர்த்த வண்ணம் வாலையும் ஆட்டிக்கொண்டு குளிப்பின் சுகானுவத்தைச் சுகித்தன.
உகந்தையிலிருந்து ஆரம்பித்தே தங்குமிடங்களில் மாடுகளை வண்டிலின் நுகத்திலிருந்து விடுவித்து அவற்றிற்குப் பொத்துவிலிலிருந்து புறப்படும்போதே கொணர்ந்திருந்த வைக்கோல் கட்டுகளை அவிழ்த்துப் பிரித்துப் போட்டும் தவிடு, புண்ணாக்கு உணவுகளை நீரில் கரைத்து மாடுகளின் தலை முழுதாகப் போகக்கூடிய பெரியவாளிகளில் மாடுகளுக்கு வைத்தும் அவற்றிற்கு உணவளிப்பதிலும் ஓய்வெடுப்பதிலும் அவர்கள் ஊக்கமாகவே இருந்தார்கள். இப்போது குமுக்கன் ஆற்றங்கரையில் இராத் தங்கலைப் போட்டதால் மாடுகளைக் குளிப்பாட்டவும் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. ஆற்றில் குளித்துத் தமது நடைக் களைப்பை யாத்திரீகர்கள் போக்கிக் கொண்டதுபோல மாடுகளும் தமது களைப்பைக் குளிப்பாட்டலில் போக்கிக் கொண்டன.மாடுகளைக் குளிப்பாட்டி முடிந்ததும், இரவில் அவற்றைக் குளிர் தாக்காமல் இருப்பதற்காகவும் பூச்சி புழுக்கள் அவற்றைத் தீண்டும் வகையில் நெருங்காதிருப்பதற்காகவும் ஒதுக்குப் புறமாக ஓர் இடத்தில் காட்டுவிறகுகளைக் குவித்து ‘தீனா’ அமைத்து அவற்றின் அருகிலே நின்ற மரங்களின் அடியில் மாடுகளைக் கொண்டு போய்க் கட்டி வைத்தார்கள். அவை படுத்துக் கிடந்து அசைபோடத் தொடங்கின.
அன்று பகல் செய்த பொங்கலை இரவைக்கும் சேர்த்தே கோகுலனின் தாயாரும் கதிரவேலின் தாயாரும் பொங்கியிருந்தனர். இரவு உணவாக எல்லோருக்கும் மீதமிருந்த பொங்கலே பரிமாறப்பட்டது. விளாம்பழங்களை உடைத்துத் தேனும் விட்டுக் குழைத்து வேண்டிய மட்டும் பொங்கலுக்கு மேலால் சாப்பிட்டு வயிற்றை நிரப்பினார்கள்.
“மலச்சிக்கலுக்கு நல்ல சாமான் இது” என்றார் பெரியவர் சாமித்தம்பி. விளாம்பழக் குழையலைச் சுவைத்துக் கொண்டே இராத்தங்கல் வழமைபோல் ‘தீனா’ க்கள் சுற்றிவர எரிய குமுக்கன் ஆற்றங் கரையோரம் ‘கவிலித்த’ அம்மன் கோவில் முன்றலில் அமைந்தது.
கோகுலனும் கதிரவேலும் வழமைபோல் ஒட்டினாற்போல தமது படுக்கையை அருகருகே அமைத்துக் கொண்டார்கள். பெரியவர் சாமிதம்பி அவர்களும் சற்றுத் தள்ளி தனது ‘சயனமாளிகை’ யைத் தரையில் பாயொன்றை விரித்துத் தடித்த போர்வையொன்றிற்குள் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை முகம் மட்டும் வெளித்தெரியும் வண்ணம் முடங்கிக் கொண்டு அமைத்து, “நிலத்தில வாழிற உயிரினங்களில தம்பி! பெரியது ஆனதான்” என்ற பீடிகையுடன் கதை சொல்லத் தொடங்கினார்.
அன்றிரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்து கோகுலனும் கதிரவேலும் காது கொடுத்துக் கேட்கப் பெரியவர் சாமித்தம்பி கூறிய கதைகள் இதுதான்.
கதை1
ஒருமுறை காட்டுக்குள்ளே விளாம்பழம் பொறுக்கிவரவென்று போனவர் இருவர் வழிதப்பி மூன்று நாட்கள் காட்டுக்குள் திசை தெரியாது அங்குமிங்கும் பசி தாகத்துடன் அலைந்து திரிந்து கடைசியாகப் பொத்துவில் – மொனராகல வீதியை லகுகலக்கும் சியாம்பலாம்துவக்குமிடையில் நாலாவது நாள் பிரதான வீதியில் வந்து தட்டினார்களாம். நல்ல காலம் அவர்கள் காட்டு மிருகங்களிடம் அகப்படாதது. காட்டுக்குள்ளே
நுழைபவர்கள் வழி தப்பாமல் இருப்பதற்காகப் போகும் வழி நெடுகக் காட்டுச் செடிகளை முறித்துச் செல்லும் தடங்களில் இடைக்கிடை குழைகளைப் போட்டுச் செல்ல வேண்டுமாம். திரும்பி வரும் வழியை அவற்றை அடையாளமாக வைத்து அறிந்து கொள்ள முடியுமாம்.
கதை 2
காலையில் விளாம்பழம் பொறுக்கவென்று காட்டுக்குள்ளே போன ஒருவர் இரவாகியும் திரும்பவில்லையாம். மறுநாள் அவருடன் கூட வந்த ஆட்கள் ஒரு நாள் முழுக்கத் தேடியும் ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அடுத்த நாளும் காட்டுக்குள்ளே தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போது ஓரிடத்தில் சற்றுத் தூரத்தில் தலைக்கு மேலால் வானத்தில் ‘ஆக்காண்டி’ க் குருவியொன்று ஒலியெழுப்பிப் பறப்பதைக் கண்டிருக்கிறார்கள். ஆளொருவர் உள்ள இடத்தில்தானாம் ஆக்காண்டிக் குருவி ஒலியெழுப்பிப் பறக்குமாம். ‘ஆட்காட்டி'(ஆள்காட்டி) என்பதுதானாம் அதன் உண்மையான பெயர். அது ஆக்காண்டி என மருவிவிட்டதாம். ஆக்காண்டிக் குருவி பறந்த திசை நோக்கிச் சென்று பார்த்த போது காணாமல் போனவர் ஒரு மரத்தின் அடியில் மரத்தில் தலை வைத்துச் சாய்ந்த வண்ணம் களைத்துப்போய் அரை மயக்கத்தில் அமர்ந்திருந்தாராம். தேடிப் போனவர்கள் அவரைத் தூக்கி ஆள் மாறியாள் தோளில் தூக்கிப்போட்டுச் சுமந்து வந்துதான் ஊர்ப்குதிக்குள் சேர்த்தார்களாம். இப்படித்தான் இன்னொரு சந்தர்ப்பத்தில் காட்டுக்குள் காணாமல் போனவரைக் காகங்கள் காட்டிக்கொடுத்தனவாம். மனிதர்கள் நடமாடும் இடத்தில் காகங்களும் பறக்குமாம்.
இக் கதையைக் கேட்கும் போது சிறுவயதில் தனது அப்பம்மா (தந்தையின் தாயார்) சொல்லித் தந்து தான் பாடி மகிழ்ந்த “ஆக்காண்டி! ஆக்காண்டி! எங்கெங்கே முட்டை வைத்தாய்” என்ற நாட்டுப்புறப் பாடல் கோகுலனின் நினைவில் எழுந்து பின் கதை கேட்கும் ஆவலில் அந்நினைவுப்பட்டம் அறுந்தது.
கதை-3
காட்டுக்குள்ளே இறங்கி வழிதப்பி அலைந்து திரிந்த ஒருவரைக் காட்டுக்குள்ளே திடீரென்று தோன்றிய கிழவர் ஒருவர் கையைப் பிடித்து வந்து சரியான பாதையில் விட்டு விட்டு மறைந்து விட்டாராம். அக் கிழவர் முருகனாம். முருகக் கடவுள்தானாம் கிழவர் வேடத்தில் உதவ வந்தவர்.
கதை-4
இன்னொரு சந்தர்ப்பத்தில் காட்டுக்குள்ளே போய்க் காணாமல் போனவரை நாலைந்து நாட்களாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போனவர் திரும்பி வரவேயில்லை. காட்டு மிருகங்கள் ஏதும் கொன்று தின்றிருக்கும். சில வருடங்களுக்குப் பின்னர் காட்டுக்குள்ளே விளாம்பழம் பொறுக்கச் சென்றவர்களும்-தேன் எடுக்கச் சென்றவர்களும்-வேட்டைக்குச் சென்றவர்களும்
வேறு சில நோக்கங்களுக்காகச் சென்றவர்களும் சில இடங்களில் அடையாளம் தெரியாத சிதைந்த மனித எலும்புக் கூடுகளைக் கண்டிருக்கிறார்களாம். அந்த எலும்புக்கூடுகள் இப்படிக் காட்டுக்குள்ளே காணாமல் போனவர்களுடையதுதானாம். பெரியவர் சாமித்தம்பி கூறிய இக்கதைகளையெல்லாம் நன்கு காது கொடுத்துக் கேட்ட கோகுலனும் கதிரவேலும் ஏககாலத்தில் “உங்கள ஆன திரத்தின கதயச் சொல்லல்லயே!” என்றார்கள்.
“அந்தக் கதயக் கடசியாச் சொல்ல வச்சிரிக்கன்” என்று கூறி அவர்களின் ஆவலை மேலும் தூண்டினார் சாமித்தம்பி.
நேரம் இரவு பத்து பணியைத் தாண்டி விட்டிருந்தது. ‘கவிலித்த’ அம்மன் கோயிலடியில் கோகுலன், கதிரவேல், சாமித்தம்பி மூவரையும் தவிர ஏனையவர்கள் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். ‘தீனா’க்கள் மட்டும் உறங்காது தீ நாக்குகளை உமிழ்ந்து கொண்டிருந்தன. அவை தரும் சூட்டையும் தாண்டி குமுக்கன் ஆற்று நீரைத் தொட்டுத் தழுவி வந்த இரவுக் காற்றின் குளிர் உடலைத் தீண்டியது.
சாமித்தம்பி “தம்பிமாரே! தேத்தண்ணியொண்டு போட்டுக் குடிச்சா இந்நேரம் இந்தக் குளிருக்கு நல்லாரிக்கும் எலுவா?” என்றார்.
“சாமான்கள எடுத்துக் கொண்டு வந்தா நீங்க போடுவீங்களா பெரியசாமி” என்று கோகுலன் கேட்க அவரும் “ஓம்! கொண்டு வாங்களன். உங்களுக்கும் போட்டுத் தாறன். எல்லாரும் சேந்து குடிப்பம்” என்றார்.
கோகுலன் எழுந்து போய்க் கூடார வண்டிலில் வைக்கப்பட்டிருந்த சீனி, தேயிலை எல்லாம் எடுத்துக்கொண்டு தண்ணீர் சுட வைப்பதற்கான ஒரு பானையுடனும் குடிப்பதற்கான மூன்று தேநீர்க் கோப்பைகளுடனும் சிறு கரண்டியுடனும் திரும்பி வந்தான்.
பெரியவர் சாமித்தம்பி தன்னிடமிருந்த ‘டோர்ச் லைட்’ டை அடித்துக் கொண்டு பானையுடன் குமுக்கன் ஆற்றில் இறங்கித் தண்ணீர் அள்ளிவந்து எரிந்து கொண்டிருந்த தீனாவின் அருகில் அடுப்பை மூட்டித் தண்ணீரை அவரே சுட வைத்தார். மூவரும் தரையில் அமர்ந்தபடி சாமித்தம்பி தயாரித்த தேனீரை எரிந்துகொண்டிருந்த அடுப்பில் குளிர் காய்ந்தபடி பருகினார்கள்.
தேனீரைப் பருகி முடிந்ததும் விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்தார் சாமித்தம்பி.
(தொடரும்… அங்கம் 16)