கட்டுரைகள்
இம்ரான் கான்: அதிரடியான கிரிக்கெட் வீரர் ! அரசியல் விளையாட்டில் ஏன் ஆட்டமிழந்தார் ?… ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(இம்ரான் கான் இளமைப் பருவத்தில் பல பெண்களுடன் உறவு நிலையினைக் கொண்டிருந்தமையால் பிளேபாய் என்று அறியப்பட்டார். அப்போது ஏராளமான தோழிகள் இருந்தனர். பலர் வெளியில் தெரியாவண்ணம் இருந்தனர்)
ஒரு வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக வலம் வந்து பல நாட்டு வீரர்களை தனது ஆட்டத்தால் கதிகலங்க வைத்த பாகிஸ்தான் வீரர் தான் இம்ரான் கான். இன்று தனது சொந்த நாட்டில் அரசியல் விளையாட்டில் ஆட்டம் இழந்து உள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரமதரான இம்ரான் கான், ஆளும் தரப்பிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மிகப் பெரியளவில் போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர்.
யாரும் எதிர்பாராத வகையில் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஊழல் வழக்கு ஒன்றில் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டார்.
ஆயினும் பாகிஸ்தானில் அதிகரிக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் இம்ரான் கானுக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
இம்ரான் கான் ஆதரவு அலை:
1996இல் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியைத் தொடங்கிய இம்ரான் கான் 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்தார். கிரிக்கெட் உலகில் வீரனாகவும், பாகிஸ்தானில் அவர் பெரும் நட்சத்திரமாக இருந்த போதிலும், அரசியலில் ஒரு ஆசனத்தை வெல்லவே அவர் 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது.
2011 தேர்தல் முதல் இம்ரான் கானுக்கு ஆதரவான அலை வீசத் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள படித்த இளைஞர்கள் இம்ரான் கானை ஆதரிக்கத் தொடங்கினர். பாகிஸ்தானை வலிமையான தேசமாக மாற்றுவதே தனது நோக்கம் என்று முழங்கினார்.
ஆக்ஸ்போர்டில் படித்த இம்ரான் கான் நியாசி (Imran Ahmed Khan Niazi – 5/10/1952) என முழு பெயர் கொண்ட இம்ரான் கானை 1980 -90 கால கட்டத்தில் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது.
கிரிக்கெட் வாழ்க்கை:
கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், பிரைன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ் போல் அந்த காலத்திலேயே கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்கியவர். சுமார் இருபது ஆண்டுகாலம் அதாவது 1971 முதல் 1992 வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடிய இம்ரான் கான் அந்த கால கட்டத்தில் ஒரு தலை சிறந்த வீரர்.
1992 இல் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை பெற்றுத் தந்த இம்ரான் கான் 2018 தேர்தலில் களமிறங்கினார். அனைவராலும் மதிக்கப்படும் ஊழலற்ற, வளமான தேசத்தைக் கட்டியெழுப்பப் போவதாகக் கூறி அவர் தேர்தலை எதிர்கொண்டார். இருப்பினும், அவரால் அதை முழுமையாகச் செய்ய முடியவில்லை.
1971 ஆம் ஆண்டில் எட்ஜ்பஸ்டனில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், அதன் பிறகு கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்தார். 1982 முதல் 1992 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த அவர், 1992 பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். கிரிக்கெட் களத்தில் இவர் சீறும் சிங்கமாக வலம் வந்தவர்.
18வது வயதில் பாகிஸ்தான் தேசிய அணியில் இடம்பெற்று முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். ஒரு கதாநாயகனுக்கான தோற்றம் அனல் பறக்கும் வேகப்பந்துவீச்சு, பேட்டிங்கில் அதிரடி என திகழ்ந்த இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களையும் தாண்டி உலகத்தையும் கவர்ந்தார். 1982ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் பொறுப்பேற்ற பிறகு பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது.
அரசியலில் 17 ஆண்டு காத்திருப்பு:
1992ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும், பாகிஸ்தானின் தனிப்பெரும் நட்சத்திரமாக உயர்ந்த இம்ரான் கான், 1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹரீக் இன்சாஃப் என்ற கட்சியை தொடங்கினார். பாகிஸ்தான் அரசியல் களத்தில் இம்ரான் கான் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த போது முதல் தேர்தலில் அவரும், அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் தான் இம்ரான் கான் எம்பியாக தேர்வானார்.
இளமைப்பருவ பிளேபாய்:
பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் உள்ள ஒரு வசதியான குடும்பத்தில் சிவில் இன்ஜினியரின் மகனாக 1952இல் பிறந்தவர் இம்ரான் கான். செல்வம் காரணமாக அவருக்கு அப்போது சிறப்பான படிப்பு கிடைத்தது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பட்டம் பெற்றார். கிரிகெட்டில் திறமை காட்டிய இம்ரான் கான், 1970களில் லண்டனில் பிளேபாயாக உருவெடுத்தார்
இவர் தனது இளமைப் பருவ வாழ்க்கையில் பல பெண்களுடன் உறவு நிலையினைக் கொண்டிருந்தார். இவர் பிளேபாய் என்று அறியப்பட்டார். இவரது இளமைப்பருவ வாழ்க்கையில் இவருக்கு ஏராளமான தோழிகள் இருந்தனர்.பலர் வெளியில் தெரியாவண்ணம் இருந்தனர்.
இதனை பிரித்தானிய செய்தித்தாளான தி டைம்ஸ் இவர்களை ‘மர்மமான அழகிகள்’ என்று அழைத்தது. சீனத் அமான், எம்மா சார்ஜென்ட், சூசி முர்ரே-பிலிப்சன், சீதா வைட், சாரா கிராலி,ஸ்டீபனி பீச்சம், கோல்டி ஹான், கிறிஸ்டியன் பேக்கர், சுசன்னா கான்ஸ்டன்டைன், மேரி ஹெல்வின், கரோலின் கெல்லட், லிசா காம்ப்பெல்,அனஸ்தேசியா குக், ஹன்னா மேரி ரோத்ஸ்சைல்ட், ஜெர்ரி ஹால் மற்றும் லுலு பிளாக்கர் ஆகியோர் இதில் இடம்பெற்றிருந்தனர்.
திருமண வாழ்க்கை :
இங்கிலாந்தைச் சேர்ந்த யூதரான ஜெமீமா கோல்டுஸ்மித் என்பவரை மதம் மாற்றி, 1995இல் திருமணம் செய்து கொண்டார் இம்ரான் கான். இதனால் சுலைமான், காசிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் ஒன்பது வருட மணவாழ்வு மணமிறிவில் முடிந்தது.
இதன்பிறகு பி.பி.சி.யில் பணியாற்றிய பிரித்தானிய – பாகிஸ்தானிய வம்சாவளியில் பிறந்த ரேஹம் கான் என்பவரை இரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமனம் ஒரு ஆண்டுக்குள்ளேயே மணமுறிவில் முடிந்தது. பின்னர் 2008 பெப்ரவரியில் தனது ஆன்மிக குரு என்று அதுவரை கூறிக் கொண்டிருந்த புஷ்ரா மணிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பெரும் பின்னடைவு :
2007ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் முஷாரப்பால் இம்ரான் கான் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரது அரசியலுக்கு பல தடைகள் உருவாக்கப்பட்டன. தடைகளைத் தாண்டி புதிய பாகிஸ்தானைப் படைப்பேன் என்றார் இம்ரான்.
2013 பொதுத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இம்ரானின் வளர்ச்சியை தடுக்க அவருக்கு எதிராக அரசியல் அரங்கில் காய்கள் நகர்த்தப்பட்டன.
இம்ரான் கானின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து இம்ரான் தனது மதகுருவையே மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது இம்ரான் கானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் பிரதமர் :
பின்னர் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தால் தனது பதவியை இழக்க, ஆளும் கட்சி மீது மக்களிடையே அதிருப்தி எழந்தது அதை அறுவடை செய்யும் முயற்சிகளில் இறங்கினார் இம்ரான்.
ஊழலில்லா பாகிஸ்தான் என்ற முழக்கத்தோடு தேர்தலில் களமிறங்கிய இம்ரான் கானை மக்களும் ஏற்றுக் கொண்டனர். ஏறத்தாழ தனிப்பெரும்பான்மையுடன் பாகிஸ்தானின் 19வது பிரதமராக இம்ரான் கான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இம்ரானின் தவறான அரசியல் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொளைகளால் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதாகவும், விலைவாசி கிடுகிடுவென உயர்ந்தது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர் என்ற அஸ்திரத்தை எதிர்க் கட்சிகள் கையில் எடுத்தன.
இதனை தடுப்பதற்காக எவ்வித முயற்சிகளையும் செய்யாத இம்ரான்கான் மீது இது தொடர்பாக குற்றம் சாட்டி எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோரினர்
களத்தில் உறுதி்:
சொந்த கட்சி எம்.பிக்களும் எதிராக திரும்பியதால் இம்ரானின் நிலைமை கேள்விக்குரியானது. பாகிஸ்தான் வரலாற்றி எந்த பிரதமரும் முழுமையாக ஆட்சியில் இருந்தது இல்லை என்ற வரலாறு மீண்டும் திரும்புமா என கூறப்பட்ட நிலையில், ‘ கடைசி பந்து வரை அடித்து ஆடுவேன்’ என உறுதியாக நின்றார் இம்ரான் கான்.
உலக அளவில் எதிர்பார்ப்பு :
சட்டசபை கலைக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக , இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்தார். இதனால் பதவியை இழந்தார் இம்ரான் கான். கிரிக்கெட்டைப் போல் அரசியல் அடித்து ஆடுவாரா இம்ரான் கான் என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்தது.
மீண்டும் வரும் இம்ரான் கான்:
சில ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானின் அதிவலுவுள்ள தலைவராக இருந்த இம்ரான் கான், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆட்சியை இழக்க நேரிட்டது. இப்போது சிறையில் உள்ள அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் அவர் ஆட்சியை கைப்பற்றுவாரா என்பது சந்தேகமே !