கவிதைகள்
பாராட்டும் குற்றச்சாட்டும்! … கவிதை … கல்லாறு சதீஷ்.
நீயும் நானும் ஒன்றல்ல!
நீ வேறு; நான் வேறு. நான் உன்னை ஒரு போதும் குற்றம் சாட்டியதில்லை. முடிந்தால் அவ்வப்போது பாராட்டி மட்டுமே செல்வேன். ஏனென்றால்; பாராட்டு உன்னைக் காயப்படுத்தாது. எங்கோ இருக்கும் ஒரு ஆத்மா பாராட்டுக்கேட்டுப் பரவசம் மட்டுமே அடையும். இதை எழுதக்கூட எனக்குப் பிடிக்கவில்லை ஒரு வேளை இது கூட ஒரு குற்றச்சாட்டாகிவிடுமோ என்று பயம் கொள்கிறேன். இதை உனக்கானதாக நீ எடுத்துக்கொள்ளாதே ஏனென்றால் இது கூட உன்னைக் காயப்படுத்தக் கூடாது. இது கவிதையோ ஒரு மன உணர்வின் எச்சமோ எனப் புரிந்தால் தங்களுக்கு நன்றி. நீ எழும்பியதிலிருந்து பேசும் வார்த்தையிலும் எழுதும் கவிதையிலும் விடும் மூச்சிலும் ஏன் தான் நொடிக்கு நொடி பிறரின் குறையையே உனது பாடுபொருளாக்குகிறாய்? எப்போதும் ஏன் எரிந்து விழுகிறாய்? கோபம் மனநோயின் ஒரு வடிவம் தெரியுமா? அமைதி ஆரோக்கியத்தின் பரிசு புரியுமா? உனது புரிதலில் தவறு நீ கேட்டதன் தவறு விசாரிதல் எனும் நீதியின்மையின் தவறு உன் அறிவே தவறாக இருக்க உன்னால் மட்டும் எப்படி எந்த நேரமும் பிறரைக் குறை காண முடிகிறது? அது உன் அறியாமையின் தவறு. என்றாவது ஒரு நாள் யாரேனும் ஒருவரின் நற்செயலை நீ பாராட்டியதுண்டா? முகநூலில் உனது ஒரு சிறுபதிவு வேண்டாம் பிறந்த நாளைக்கொண்டாடும் ஒரு மழலைக்காவது நீ வாழ்த்துச் சொன்னதுண்டா? இது கூட வேண்டாம் மரணித்துப்போன உனது நண்பனுக்காவது ஒரு அஞ்சலி செலுத்தியதுண்டா? தேடிப் பார்த்தேன் எதிலும் இல்லை ஆனால், தினந்தோறும் மானுடத்தைத் தாக்கி நீ போடும் பதிவுகள் நீ ஆற்றும் உரைகள் அர்ததம் அற்றே போகிறது. எப்படித் தெரியுமா உனக்கான அஞ்சலி செலுத்தும் போது நீ எப்படி அர்த்தம் இழக்கிறாயோ அப்படியே, உனது இன்றைய அனைத்தும் அர்த்தம் அற்றே போகிறது. அதனால் சொல்கிறேன் குற்றம் சாட்டும் நீயும் பாராட்டும் நானும் வேறு வேறு.-கல்லாறு சதீஷ்- 27.01.2024 (இது யாருக்குமான குற்றச்சாட்டல்ல எனது கவிதை நூலுக்காக எழுதப்பட்ட கவிதை)
மிகவும் அருமயான கவிதை. ஒவ்வொரு வரியிலும் உணர்வு கொப்பளிக்கிறது. சிலர் படைப்புக்களில் உயிர் இருப்பதில்லலை. பக்கங்களை நிரப்பும் பாங்கு மட்டும் தெரிகிறது. நானும் நீயும் ஒன்றல்ல. நான் வேறு. நீ வேறு. என்ன அற்புதமான புரிதல். உண்மையை உணர்த்தும் உன்னதமான வரிகள். பாராட்டுக்கள்.
அன்புடன்,
சங்கர சுப்பிரமணியன்.
மிக்க நன்றி ஐயா,
படித்தேன்
பார்த்தேன் என்று செல்லாமல்
தங்கள் உணர்வைப் பகிர்ந்து
மகிழச் செய்த தங்களை
மனதார வாழ்த்துகிறேன்.
என்றும் அன்புடன்
-கல்லாறு சதீஷ்-
இனிய பாஸ்கர்;
எப்போதும் சமூக முன்னேற்றம்,சிறந்த சமூக சேவகர்களுக்கான விருதுகள் என்று இயங்கும் தாங்கள் எனக்கும் விருது தந்து கெளரவித்ததை நான் மறவேன்.
இன்று எனது கவிதையைப் பிரசுரித்து அங்கீகரித்த தங்களை என் நெஞ்சுக்குள் புதைத்துக்கொள்கிறேன்.
மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
எங்கள் இனிய யாழ். பாஸ்கர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதற்கு வானமே எல்லை. உழகத்தமிழரை ஒன்றாய் கண்டு உறவுக்கு பாலம் அமைப்பவரை மனதில் கொலுவிருத்தலாம். அவரது தமிழ்ப் பணிக்கு ஏனையோரைப் போன்று சிறந்த அறிவாளியாக இருந்து சிறப்பு சேர்க்காவிடினும்
எனது சிற்றறிவுக்கு எட்டிய மட்டில்
நன்றியறிதலுடனாகவாவது இருப்பேன்.
அன்புடன்,
சங்கர சுப்பிரமணியன்.