கதைகள்

நடுகைக்காரி! …. 64 ….. ஏலையா க.முருகதாசன்.

புஸ்பகலா, மங்களேஸ்வரியை இழுக்காத குறையாக கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் இருவருமாக வாங்கில் உட்காருகின்றனர்.

புஸ்பகலாவின் முகத்திலிருந்த படபடப்பையும் அவளின் அவசரத்தையம் கண்ட மங்களேஸ்வரி என்ன என்பது போல தனது புருவத்தை உயர்த்திக் கேட்கிறாள்.

ஏன்டி நீ ஒரு மாதிரி இருக்கிறாய்,எதற்காக என்னை இப்படி அவசரம்: அவசரமாக இழுத்துக் கொண்டு வந்தனி என்று கேட்க,பொறு சொல்றன் என்று சொன்ன புஸ்பகலா இருமுறை மூச்சை இழுத்து விட்டிட்டு அம்மாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டுது.

நான் ஞானத்தை வருத்தம் பார்க்கப் போறதை உன்னை வருத்தம் பார்க்கப் போறதாகப் பொய் சொல்லி அம்மாட்டை கொர்லிக்ஸை வாங்கிக் கொண்டு போய் ஞானத்தின் வீட்டுக்குப்: போனேனல்லோ அதை அம்மா நம்பவில்லையோ என்று சந்தேகமாக இருக்குது என்று படபடப்புடன் சொல்ல அப்படி அம்மா நம்பாததற்கு கொம்மாவின் பேச்சில் ஏதாவது அறிகுறி தெரிஞ்சுதா என்று மங்களேஸ்வரி கேட்க,தெரிஞ்சுது என்ரை மச்சாள்காரி காதல் பிரச்சினையால் பிள்ளைத்தாச்சியாகி பிறகு யாழ்தேவி ரயிலில் அடிபட்டு தற்கொலை செய்ததை சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கிறார்.

நான் ஞானம் வீட்டுக்குப் போனதை எப்படியாவது அறிஞ்சிடுவாவோ எனப் பயமாயிருக்குதடி,அறிஞ்சா என்ன நடக்குமோ என்று நினைச்சாலே நெஞ்சைக் கலக்குது,ஞானத்தின்ரை வீட்டுக்குப் போன இடத்திலை எனக்குப் பீரியட் வந்திட்டுது அதை அம்மாவுக்குச் சொல்ல அம்மா கூர்மையாக என்னைப் பார்த்தா என்று சொன்னவளை இடைமறிச்ச மங்களேஸ்வரி அப்ப ஊரிலை சொல்ற மாதிரி அது சரியாகதானிருக்குது என்று இழுக்க எதையடி ஊரிலை சொல்றவை,ஒரு பொடியனை ஒருத்தி விரும்பிக் கொண்டிருக்கிற போது அந்த விருப்பத்தை இரண்டு பேருமே வெளிப்படையாக தெரிவிக்காமல் இருக்கேக்கை ஒருவரை பார்க்கிற போதோ கதைக்கிற போதே அந்த விருப்பத்தின் சாயல் அவை கதைக்கிற போது அவையின்ரை குரலிலேயே தெரியுமாம் இந்த நேரத்திலை அந்தப் பொடியன் அவளை ஆசையோடை கூர்மையாப் பார்த்தால் அந்தப் பிள்ளைக்கு பீரியட் வருமாம் அது மாதிரி உனக்கு ஞானத்தின்ரை வீட்டுக்குப் போன போது வந்திருக்குது அதற்கு காரணம் நீங்கள் இரண்டு பேரும் ஒருத்தரில் ஒருத்தர் ஆசைப்படுறியள் என்றது தெரியுது என்று மங்களேஸ்வரி சொல்லி முடிக்க,நானும் இப்பிடிக் கேள்விப்பட்டனான் அம்மா வீட்டிலையிருந்து தன்ரை சினேகிதியோடு ஒரு நாள் விறாந்தையிலிருந்து நீ சொன்ன மாதிரிக் கதைச்சதை அறைக்குள்ளையிருந்து நான் கேட்டனான் என்று சொன்ன புஸ்பகலா இப்ப அது பிரச்சினையில்லை நீயும் உன்ரை கொம்மாவும் எனக்காகப் பொய் சொல்ல வேணும்.

அது என்னெண்டால் எண்டைக்காவது ஒரு நாள் உன்னை என்ரை அம்மா சந்திக்க நேர்ந்தால் அப்ப நான் உன்னை வருத்தம் பார்க்க வந்தது பற்றிக்

கேட்பாவல்லோ நீ ஓம் வருத்தம் பார்க்க வந்தவா என்று சொல்ல வேணும்,எனக்குப் பீரியட் வந்தது பற்றிக் கேட்டால் ஒம் அது உண்மை என்று சொல்லி உன்ரை அம்மாதான் எல்லா ஒழுங்கும் செய்துவிட்டவா என்றும் பொய் சொல்ல வை என்று புஸ்பகலா,வகுப்புத் தொடங்க முந்தி எல்லாவற்றையும் சொல்லி முடிக்க வேணும் என்பதற்காக அவசரம் அவசரமாகச் சொல்லி முடிக்கிறாள் புஸ்பகலா.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட மங்களேஸ்வரி என்னடி இது இப்ப நீ முந்திமாதிரி இல்லை தலைகீழாய் மாறிவிட்டாய்,முந்தி நீ பொய்: சொல்ல மாட்டாய் பொய் சொல்ற ஆட்களைப்: பிடிக்காது,இப்ப பொய் மட்டுந்தான் சொல்றாய்,எங்களையும் பொய் சொல்லச் சொல்கிறாய்,போகிற போக்கைப் பார்த்தால் நீ காதல் பைத்தியமாகிவிடுவாய் போலிருக்குது என்று மங்களேஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறிச்ச புஸ்பகலா நீயும் காதலிச்சால்தான் அதன் உயிர்த்தன்மை என்ணெண்டு புரியும்,ஞானம் எனக்காக எதையும் செய்யக்கூடியவன் அதனால்தான் என்னைப் பார்க்காமல் தன்னால் இருக்க முடியாது என்றெண்ணியவன் காய்ச்சலோடு வகுப்புக்கு வந்தவன் என்கிறாள்.

நீலலோஜினிக்கு ஞானத்தின் மேல் விருப்பமிருந்தது அவளுக்கு அவனே லோவர்பிறப் எஸ்.எஸ்.சி வகுப்பில் தலையில் றோஜாப்பூ வைச்சுவிட்டவன் அதை ஞானம் விளையாட்டாகத்தான் செய்தான்.ஆனால் நீலலோஜினி அதை அவன் தன்னைக் காதலிப்பதாக எடுத்துக் கொண்டாள்.

றோஜாப்பூவைத் தனது தலையில் வைத்ததை வகுப்பில் அப்போதிருந்த சில மாணவர்களும் மாணவிகளுந்தான் அதைக் கவனித்தவர்கள்.

மாவிட்டபுரத்தில் தனது வீட்டிலிருந்து றோஜாப்பூக்களை பாலசுப்பிரமணியம் கொண்டு வந்து ஞானத்திடம் கொடுக்க அதில் நல்லதை எடுத்து அவள் தலையில் பின்னல் ஆரம்பிக்கும் இடத்தில் செருகிவிடுவான்.முதல்நாள் செருகிய போது நீலலோஜினி பதட்டமடைந்தாள் ஞானத்தைப் பார்த்து கோபப்படவுமில்லை எதுவும் சொல்லவுமில்லை.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவன் றோஜாப்பூவைச் செருகிவிடவே அதை அவள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

சில நாட்களில் பாலசுப்பிரமணியம் றோஜாப்பூக்கள் கொண்டு வர மாட்டான்.அந்த நாட்களில் நீலலோஜினி கவலையடையத் தொடங்கினாள்.

அவளுக்கு வலது பக்கத்தில் சுவரோடிருந்த வாங்கிலிருந்த ஞானத்தை அவள் ஏக்கத்தோடு பார்ப்பாள்.அவளின் கீழ் சொண்டின் வலது பக்கத்தில் ஒரு மச்சம் இருந்தது,அது அவளின் அழகுக்கு மெருகேற்றியது.அவளும் றோஜாப்பூ நிறத்திலேயே இருந்தாள்.

வகுப்பு காலையில் தொடங்குவதற்கு முன்பாகவே நீலலோஜினியின் தலையில் பூ வைக்கும் காட்சி நடைபெறும்.அவளும்; அதனை விரும்பியதால் மெல்ல மெல்ல அவளும் வகுப்புக்கு நேரத்தோடு வரத் தொடங்கினாள்.

ஞானம் அவளின் தலையில் றோஜாப்பூவை வைத்த முதல் நாள் முதல் வகுப்பான சைவபாடம் எடுத்த தர்மேஸ்வரி நீலலோஜினியைப் பார்த்து என்ன

தலையிலை பூ வைச்சக் கொண்டு வந்திருக்கிறாய் புதுப்பழக்கமாயிருக்குது என்று கேட்க பதறிப் nபுhன நீலலோஜினி இது எங்கடை வீட்டிலை பூத்திருந்தது அம்மா புடுங்கி வைச்சுவிட்டவா என்று சொல்லிச் சமாளிக்கிறாள்.

லோவர் பிறப் எஸ்எஸ்சி,அப்பர்பிறப் எஸ்எஸ்சியிலும் ஞானத்தோடு ஒன்றாகப் படித்து இப்ப எஸ்எஸ்சியிலும் ஒன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறாள் நீலலோஜினி.

இந்த இரண்டு வகுப்பிலும் பாலசுப்பிரமணியம் ஒன்றாகப் படிக்கவில்லை.ஒரு நாள் நீலலோஜினி ஞானத்திடம்,பைப்படியில் எதிர்ப்பக்கத்தில் நின்று தண்ணீர் குடிப்பது போல பாவனை காட்டியபடி உண்மையைச் சொல்லுங்கள் என்னிலை உங்களுக்கு விருப்பமிருக்குதா என்று கேட்க,அவள் கேட்ட வேகத்திலேயே விருப்பமிருக்குது ஆனால் அது காதல் அல்ல என்கிறான்.

நீலலோஜினியால் அவனுடைய பதிலின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.ஞானத்தின் போக்கு மற்றைய மாணவர்களைவிட வித்தியாசமானதாகவே இருக்கும்.நீலலோஜினியைப் போலவே அருந்ததியும் ஞானத்தில் ஒரு கண் வைத்திருந்தாள்.

வகுப்பு மாணவர்களே ஞானத்தை புரிந்து கொள்ள முடியவில்லையே என தமக்குள் பேசிக் கொள்வார்கள்.அழகியான நீலலோஜினியை காதலிக்காதவன் புஸ்பகலாவை எப்படிக் காதலிக்கிறான் என்பது எல்லாருக்கும் வியப்பாகவே இருந்தது.ஆனால் புஸ்பகலாவும் ஒருவித அழகிதான்.

நீலலோஜினிக்கு ஞானந்தான் ஒவ்வொரு நாளும் றோஜாப்பூ வைச்சவன் என்பது மெல்ல மெல்ல சுந்தரராஜன் ரீச்சரின் காதில் விழுந்த போது ஸ்ராப்றூமிலிருந்து யன்னலுக்கூடாக எட்டிப் பார்த்து நீலலோஜினியைக் கண்டதும் அவளை அருகில் கூப்பிட்டு உனக்கு ஆர் தலையிலை பூ வைச்சுவிடுறது என்று கேட்க அவளும் அம்மாதான் என்று பதட்டமில்லாமல் சொல்ல அப்ப இப்ப ஏன் அம்மா வைச்சுவிடுறதில்லை என்று கேட்க மரம் பட்டுப் போச்சுது என்று பதில் சொல்கிறாள்.

அவள் பொய் சொல்கிறாள் என்று தெரிஞ்சும் சுந்தரராஜன் ரீச்சரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவர் ஸ்ராப் றூமிலிருந்தவர்களைப் பார்த்து இப்பத்த ஸ்ருடண்ட் பொய்யை உண்மைமாதிரிச் சொல்வதில் படு கெட்டிக்காரர்கள் என அங்கலாய்க்கிறார்.

புஸ்பகலாவை ஞானம் காதலிப்பது நீலலோஜினிக்கு பிடிக்கவே இல்லை.புஸ்பகலாவின் மீது அவள் பொறமைப்படவும் செய்தாள்.

பாடம் தொடங்கும் முன் தன்னிலையைச் சொல்லி,தான் தாய் தகப்பனிடம் பிடிபடாமலிருக்க வேண்டுமென்பதற்காக மங்களேஸ்வரியிடம் எல்லாத்தையும் விரைவாகச் சொன்னவள் வேகமாக ஞானத்தின் பக்கம் திரும்பி அவனின் கழுத்தில் தனது புறங்கையை வைச்சுப் பார்த்தவள் உங்களுக்கு காய்ச்சல் இன்னும் விடவில்லை கொலிஜ்யுக்கு வராமல் விட்டிருக்கலாமே என்று சொல்லிக் கொண்டே நீலலோஜினியைப் பார்க்கிறாள்,நீலலோஜினி புஸ்பகலாவைச் சுட்டெரிப்பது போலப் பார்க்கிறாள்.

வகுப்புக்கள் ஒரு செருமலுடன் நுழைந்த கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் எல்லாப் பிள்ளைகளையும் ஒரு நோட்டம் விட்டிட்டு என்ன ஞானம் காய்ச்சல் சுகமா என்று கேட்டவர் உன்ரை பிரண்ட்ஸ் ஒருத்தரும் உன்னை வருத்தம் பார்க்க வரேலையா என்றவுடன் காய்ச்சல் சுகம் சேர் ஒருத்தரும் என்னைப் பார்க்க வரேலை,தனபாலசிங்கம் எங்கடை வீட்டிலையிருந்து இரண்டு வீடு தள்ளியிருப்பவன் போகேக்கை வரேக்கை வந்திட்டுப் போறவன் என்று ஞானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சேர் அவற்றை முகத்தைப் பாருங்கள் அவருக்கு இன்னும் காய்ச்சல் மாறவில்லை அதோடை வந்திருக்கிறார் என்று தன்னை மறந்து புஸ்பகலா சொல்ல அது சரி அவனுக்குக் காய்ச்சல் மாறேல்லை என்று உனக்க என்ணெண்டு தெரியும் என்று செல்லத்துரை மாஸ்ரர் கேட்க எல்லாம் அவற்றை முகத்தைப் பார்க்கத் தெரியுது சேர் என்று புஸ்பகலா சொல்ல இவ்வளவு அக்கறை உள்ள நீ அவனைப் போய் பார்த்திருக்கலாமே என்று செல்லத்தரை மாஸ்ரர் சொல்ல ஆகா பிடிபடப் போகிறாய் என்று மங்களேஸ்வரி வாய்க்குள்ளை முணுமுணுக்க வாயை மூடிக் கொண்டிரு என்று பல்லை நெருமிச் சொன்ன புஸ்பகலா வீட்டிலை விடாயினம் சேர் என்று சொல்ல,நீ சொல்றதை நம்பச் சொன்னால் நம்புறன் என்று சொல்ல வாயைக் குடுத்து பிடிபடக்கூடாதென்ற புஸ்பகலா அமைதியாகிறாள்.

ஞானத்திற்கு பக்கத்திலிருந்த தனபாலசிங்கம் என்ன உன்ரை ஆள் முழுப்பூசனிக்காய்த் தோட்டத்தையே சோத்துக்குள்ளை மறைக்கிறாள் என்று சொல்ல தனபால் அவனோடை என்ன குசுகுசுக்கிறாய் என்று மாஸ்ரர் கேட்க,முந்தநாள் கீரிமலைக் கதையைச் தொடங்கிப் போட்டு இடையிலை விட்டிட்டுப் போயிட்டியள் அதைப்பற்றித்தான் கதைச்சனான் என்ற அவன் இழுக்க நான் எங்கை விட்டனான் என்று தனபாலசிங்கத்தை கேட்க சேர் நீங்கள் கடலிலை குளிச்சிட்டு வந்து பெரிய துவாயை கட்டிக் கொண்டு கோவணத்தை அவிட்டு புளிஞ்சு கொடியிலை போட்டது வரை சொன்னனீங்கள் என்று சொல்ல எல்லா மாணவர்களும் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் தங்களுடைய இரண்டு சொண்டுகளையும் இறுக்கிக் கொள்ள மாணவிகள் கையால் வாயைப் பொத்தி சிரிப்பை அடக்குகிறார்கள்.

எதுவுமே தெரியாத மாதிரி ஓ அந்த இடத்திலையா விட்டனான் என்று கதையைச் சொல்லத் தொடங்குகிறார் செல்லத்துரை மாஸ்ரர்

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.