“செண்டை” …. சிறுகதை – 51 … அண்டனூர் சுரா.
பெரமனின் வேட்டியைப் பிடித்து இழுத்தான் சுகன். நாலு முழ வேட்டி. நான்கைந்து இடத்தில் கிழிந்து உருட்டித் திரட்டி தைத்திருந்தார். இன்னும் கொஞ்சம் விசையாக இழுத்தால் கிழிந்த இடத்தில் திரும்பவும் கிழியும். தைத்த மூட்டு விலகும். கைகளைக் கொஞ்சம் நிறுத்தி தலையைக் கொஞ்சம் பணித்து பேரனைப் பார்த்து, “ என்னடா கற்கண்டு…?” என்றார். பேரனை அவர் விளிப்பது அப்படித்தான். கற்கண்டு, சக்கர, ஐயரு,..இப்படி.
பேரனின் கண்கள் தாத்தாவிடமிருந்து விலகி கோவிலுக்குள் நிலைக்குத்தி நின்றது. “அங்கப் பாரு தத்தா,…”
பெரமன் பேரன் காட்டிய திசையைப் பார்த்தார். அய்யனார் கோவிலின் கோபுரம், கொடி, மரம், பூ, பத்தி, சூடம், ஐயர் ஐயங்கார்கள், குடை, சிலை, ஆண்கள், பெண்கள், வரிசை, கூட்டம், நிறை, நிரல்….
“அவங்களப் பாரு தத்தா…” அவனது ஆட்காட்டி விரல் காட்டிய திசையைத் திரும்பவும் காட்டியது. பெரமன் பார்த்த திசையையே ஆழ்ந்து பார்த்தார். பின்னால் வந்தவர்கள் அவர்களைக் கடந்து கோவிலின் உட்கூ்டாரத்திற்குள் நுழைந்திருந்தார்கள்.
“நீயும் குப்பன் தத்தா மட்டுமேன் இய்னேயே தேங்கிட்டீங்க…” சுகன் கேட்டுவிட்டு தாத்தாவின் வேட்டியைக் கசக்கி இழுத்தவாறு அவரது கண்களைத் துழாவிப் பார்த்தான். தாத்தா மண்டிக்கிடந்த கொச, கொசத்தத் தாடியை ஒரு கையால் சொறிந்துவிட்டுக்கொண்டார்.
“ வா தத்தா, அது வர்ரைக்கும் போவ்வ்வம்…..”
சுகனின் ஒரு கையில் ஐஸ் இருந்தது. ஐஸ்குச்சியின் அடிமுனையைப் பிடித்திருந்தான். ஐஸ் பூத்து வியர்த்து உருகி விரல்கள் வழியே வழிந்து மூட்டு கை வழியே சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது.
“ ஐயரு…”
“ தத்தா…”
“ ஐஸ் கேட்டே. தாத்தா வாங்கிக் கொடுத்தேன். தின்னாம அங்கெஇங்கெனு பராக்குப் பார்க்கே…”
சுகன் தன் தாத்தாவின் முகத்திலிருந்து பார்வையை எடுத்து அவன் கையிலிருந்த ஐஸைப் பார்த்தான். ஐஸ்ஸின் விளிம்பு குலைந்து உருகி சொட்டிற்று. அதைப் பார்த்தவன் தன் நாக்கையும் ரோஜா இதழ் போன்ற சிவந்த உதடுகளையும் ஒரு சேர சப்புக்கொட்டி, ஐஸை வாய்க்கு நேராகத் தூக்கி உருகி, ஒழுகி கீழே வடிந்து விடுவதைப் போலிருந்த அந்த ஒரு துளியை நாக்கால் வாங்கியவன், வாயை ஆ..வெனத் திறந்து ஐஸை வாய்க்குள்ளாகத் திணித்து சப்பி, குச்சியை வெளியே எடுக்கையில் அவனது கன்னமும் உதடுகளும் முகவாயும் குளிர்ச்சியால் கோணி நெளிந்து சப்புக்கொட்டின.
பேரனின் உதடுகள் ஐஸ் குளிரால் நடுங்குகையில் அவரது உடம்பும் நடுங்கியது. ஒரு கையால் பேரனின் தலையைத் தடவிக் கொடுத்தபடி முடியைக் கோதிவிட்டார். அவரது கை விடாது பறையை இசைத்தது.
ஐஸ் துண்டாக உடைந்து தொண்டைக்குள் நுழைகையில் பற்கள் கட்டி, கண்களை இறுக மூடி, உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டவனின் பார்வைக் குவியம் கோவிலின் உட்கூடாரத்தில் இருந்தது.
சுகன் தாத்தாவின் வேட்டியை இன்னும் சற்று இறுகப் பிடித்தான். மடித்துக் கட்டாத அவரது வேட்டி கணுக்காலுக்கும் சற்றே கொஞ்சம் மேலே ஏறியிருந்தது.
“ ஏன் தத்தா?”
“ என்ன, ஏன் தாத்தா?”
“ அவங்கப் பாருங்க, அதுவரைக்கும் போய்ட்டாங்க. நீயும் குப்பன் தத்தாவும் இய்னேயே நின்னிட்டீங்க…” அவனது கண்கள் ‘படக் படக்’ எனத் துடித்தன. பற்கள் சிரித்தன.
பெரமன் ‘இம்..’ என்றவாறு இடது கையின் வேகத்தைக் குறைத்து வலது கையை முடுக்கினார்.
“வாங்கத் தத்தா, அங்கே வரைக்கும் போவம்…” என்றவனாகப் பெரமனின் வேட்டியை இழுத்தவாறு முன்னே ஓரடி, ஈரடி எடுத்து வைத்து நடந்ததும் வேட்டி உருவிக்கொண்டு பேரனின் கையோடு வந்தது. பெரமன் சட்டென சுதாகரித்துக் கொண்டவராய் இரு கைகளையும் நிறுத்தி, இரண்டு குச்சிகளையும் காது மடல்களில் சொருகிக் கொண்டு வேட்டியை இலாவகமாகப் பிடித்து உடலின் முன் பகுதியை வேட்டியால் மறைத்து இடுப்பில் சுற்றிக் கொண்டார். குப்பன் வயிறு குலுங்க சிரித்தவராய் சிரிப்பிற்கேற்ப பறையை இசைத்தவராய் பறையொலியைக் கூட்டி இறக்கி அடித்துக் கொண்டிருந்தார்.
“ தந்த்திணாண் தந்த்திணாண் தந்தத் தந்த்திணாண்”
பெரமன் உடம்பை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி வளைத்து கூனிக்குறுகி வேட்டியை இடுப்பில் சுற்றுகையில் பறை அடித்துக்கொண்டிருந்த குப்பனின் கைகள் அவரையும் அறியாமல் நின்றன.
குப்பனுக்குப் பெரமன் மீது கோபம் வந்தது. நாசியும் உதடுகளும் ஒரு சேர விடைத்தன. “சொன்னேன் கேட்டீயா நீயி. இவன் வேணாம், வீட்லயே விட்டுட்டு வானேன். கேட்டுத் தொலைச்சாத் தானே?”
குப்பன் போட்ட சத்தத்தில் அர்ச்சனைக்காக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் திரும்பி இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தை டப்பாவைப் போலச் சுழித்தார்கள்.
“புள்ள ஆசப்பட்டான். வர்றேன்னான். மலேசியாவில பொறந்தவன், வளர்ந்தவன், அங்கேயே பள்ளிக்கொடம் படிக்கிறவன். நம்ம ஊரு திருவிழாவப் பத்தித் தெரிஞ்சிக்கிறட்டுமேனு கூட்டி வந்தேன். வந்த எடத்தில இவன் வேட்டிய உருவுவானா கண்டே. இம்…” என்றவர் தாடையும் வயிறும் குலுங்குமாறு சிரித்து பேரனின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளி அள்ளிக் கொஞ்சிக்கொண்டார்.
கோவில் வளாகம் ஒரே இரைச்சலும் ஓங்காரமுமாக இருந்தது. ஒலிபெருக்கியின் இரைச்சல் பாம், பாம்…ஊடே ஐஸ் பெட்டியைத் திறந்து மூடி அடிக்கும் சத்தம், “டிங்க், டின்க் டிங்க்…” பஞ்சு மிட்டாய் மணி; முழம் ப்பூ முப்பது ரூவே, அர்ச்சனத் தட்டு நாப்பது ரூவே, தள்ளி நின்னுங்கப்பூ, யாரது நெறிக்கிறது, தள்ளி நின்னு வேடிக்கப் பார்த்தாலென்ன, டப், டுப் பலூன் உடைபடும் சத்தம், “கிண்ண், கிண்ண்” கிலுகிலுப்பை, “ச்சர்ப்” பலூன் கைகளில் உராயும் சத்தம்,…
இதுதவிர காவல் துறையினரின் முக்கிய அறிவிப்புகள். கைக்குழந்தைகள் பத்திரம், நகை நட்டுகள் பத்திரம், திருடர்கள் ஜாக்கிரதை,…என்று எத்தனையோ சத்தத்திற்கிடையில், “தம், தமதம், தடதம், தம்தம்” பேரரவம் பேரொலியாக முழங்கிக் கொண்டிருந்தது.
“ வாங்க தத்தா…”
“ எங்கெ?”
“ அதொ அங்கெ…”
பேரனின் நச்சரிப்பிற்காக பெரமன் நான்கு தப்படிகள் எடுத்து வைத்தார். அவரோடு சேர்ந்து சற்றே எரிச்சலோடு குப்பனும் எடுத்து வைத்தார்.
“ இன்னும் வா தத்தா…” தாத்தாவின் வேட்டியை இழுத்த இழுப்பில் மறுபடியும் வேட்டி இடுப்பிலிருந்து அவிழ்வதைப் போலிருந்தது. கையில் வைத்திருந்த குச்சியால் வேட்டியை
இழுத்துக்கொண்டிருந்த பேரனின் கையில் ஓர் அடி வைத்தார். வேட்டியிலிருந்து கையை எடுத்த அவன் மறுகையால் அடிப்பட்ட இடத்தைத் தடவி விட்டபடி தாத்தாவை ஏறிட்டுப் பார்த்தவனின் கொடும்பும் நாசியும் ஒரு சேர விம்பின.
“ வேண்டானு சொன்னே. கேட்காம அழைச்சிக்கிட்டு வந்திட்டு ஏன்டா புள்ளய அடிக்கிறெ…” குப்பன் பெரமனை அதட்டினார். பேரனை அடித்த அவருடைய முகம் சட்டென பதத்துப் போனது. குச்சியை இடுப்பில் சொருகிக்கொண்டு பேரனின் முதுகைத் தடவிக் கொடுத்தபடி அவனது கன்னத்தை வருடினார். அவனுடைய விம்மிய உதடுகள் உடைப்பெடுத்தது.
“ தம், தமதம், தடதம், தம்தம்” ஒலிப்பின் பேரொலி கோவில் அரவத்தில் கரைந்து வெளியில் மிதந்தது.
சுகனின் கேள்விமேல் கேள்வி கேட்கும் வாய்க்கு பெரமன் ஒரு குச்சி மிட்டாய் வாங்கிக் கொடுத்திருந்தார். இதுக்கு மேலும் அவன் ஒன்றும் கேட்கக் கூடாது என்பதற்காகவே அவ்வளவு பெரிய மிட்டாயை வாங்கிக் கொடுத்திருந்தார். அவன் மிட்டாயை இரண்டொரு சப்பு சப்பிவிட்டு வழக்கமான நச்சரிப்பில் இறங்கினான்.
“ தத்தா, அவங்க மாதிரிதானே நீயும் அடிக்கே?”
பேரனின் தொடர்ச்சியான கேள்விகள் அவருக்கு எரிச்சலை மூட்டியது. முகத்தில் கோபமூட்டம். நாசி பெருமூச்செடுத்தது. இப்பொழுது பதிலை அவர் தன் வாயினால் சொல்லவில்லை. கறுப்பும் செம்பழும்பு நிறமுமான பறையை எடுத்து விலாவிற்கும் சற்றுமேலே அணைத்து வைத்துக்கொண்டு அக்குள், முழமடக்கு கைகளால் அதை இலாவகமாகப் பிடித்துக்கொண்டு பேரனின் கேள்விக்குத் தகுந்தவாறு தலையை ஆட்டி, நெற்றியைச் சுழித்து, விழியை உருட்டித் திரட்டி, ஏற்றி இறக்கி பறையினாலேயே பதிலைச் சொன்னார்.
“ த்தண் த்தண், தணதண, த்தண்…”
தாத்தா என்ன சொல்கிறார் என சுகனுக்கு ஓரளவு புரிந்தது. அவர் இசைக்கும் பறை சுதியை விடவும் அவர் ஏற்றி இறக்கும் விழியும் நெற்றிச் சுழியும் கேள்வியொற்றிய பதிலைக் கொடுத்தது.
“ அவங்க கையிலிருக்கிற அதே ரெட்டக் குச்சிதானே தத்தா உன் கைய்லயும் இருக்கு…”
“ த்தண், த்தண், தணதண த்தண்…”
“ அவங்க மாதிரிதானே நீயும் குச்சியப் பிடிச்சிருக்கே…”
“ த்தண்,த்தண், தணதண த்தண்ன்…”
“ பின்னே ஏன் நீ இய்னேயே நின்னிட்டே…”
பெரமனின் பறை பதத்து சப், சப்…என்றது.
சுகன் கேள்வி கேட்பதை நிறுத்தி தாத்தாவின் பறையையும் உள்ளே கோவிலுக்குள் இசைத்த இசையையும் ஒரு சேரக் கேட்டான். தாத்தா அடிப்பது “ த்தண், த்தண்…”, அவர்கள் அடிப்பது “ த்தம்,த்தம்…” இரண்டையும் ஒருசேர உள்வாங்கினான்.
“தத்தா, கோயிலுக்கு வந்திருக்கிறவங்க எல்லாம் சட்டெயெல்லாம் போட்டுருக்காங்க, நான் கூட போட்டிருக்கேன். நீயும் குப்பன் தத்தா மட்டுந்தே போடல…” என்றவன் கேலி செய்வதைப் போல சிரித்தான்.
“ த்தண்தணத்தன்…”
“ ஏன் தத்தா போடல…?”
“ த்தண்ணினான்…” அவரது இமைகள் ஏறி இறங்கி கோவிலின் உட்கூடாரத்தைச் சுட்டிக் காட்டின.
“ஆம, அவங்களுந்தே போடல…”
“ த்தண்ணினான் த்தண்ணினான்..”
“ சட்டப் போடாமத்தான் இதெ அடிக்கணுமா…?”
“ த்தண் தண் தண்…”
“ இல்லனா சாமி கோபிச்சுகுமா…?”
“ த்தண் தண் தண்…”
பெரமனின் அடியுடன் சேர்ந்து அவரது கால்கள் இசைக்குச் சுதிசேர்க்கும் விதமாக ஆடத்தொடங்கின. கால்களை முன்னே, பின்னே எடுத்து வைத்து குனிந்து நிமிர்ந்து இடுப்புப் பகுதியை அப்படியும் இப்படியுமாக எடுத்துவைத்து அடித்து ஆடினார்.
தாத்தாவின் ஆட்டத்தைப் பார்த்து அவன் வாய் உடைய சிரித்தான். அவன் சிரித்த சிரிப்பில் சற்றுமுன் தின்றிருந்த ஐஸ்மிட்டாய்களின் சாயம் அவனது வாயில் வெளிரிய சிவப்பாய் இருந்தது.
“ அவங்கள விட நீ நல்லாவே ஆடுற தத்தா…?”
“ த்தண்ணினான், த்தண்ணினான், தண்…”
அவன் ‘அய்ய்..’ என்றவாறு அகலச் சிரித்தான். “ அவங்கள மாதிரியேதான் நீயும் ஓங்கி ஓங்கி அடிக்கே…”
“ த்தண்…த்தண்,..தந்திணான்….”
கோவிலில் திடல் மக்கள் தலைகளால் நிறைந்திருந்தது. ஒரு பக்கம் மக்கள் வரவும் இன்னொரு பக்கம் கரைவதுமாக இருந்தார்கள். இளசுகள், இளைஞிகள், கல்யாண ஜோடிகள், வயதுப் பெண்கள்,..எனத் திட்டுத் திட்டாக, முடிச்சு முடிச்சாக, நெறிக்கவும், தள்ளவும் இருந்தார்கள்.
பெரமன் கால்களிடத்தில் வைக்கோல் கிடந்தது. அதைக் கால்களால் உந்தித் தள்ளி ஒன்றுசேர்த்தார். ஆங்காங்கே விரவிக் கிடந்த காகிதத் துண்டுகளை எடுத்து கிழித்து வைக்கோலுக்குள் திணித்து நெருப்பு மூட்டினார். தீ பறையின் விளிம்பைப் போல செந்தீயாக எரிந்தது. இரு பக்க காது மடலிடத்தில் சொருகியிருந்த குச்சிகளில் ஒன்றையெடுத்து பறையை இடது கையில் பிடித்துக் கொண்டு பறையின் விளிம்பைக் குச்சியால் தட்டி காய்ச்சினார்.
“ சப், சப்…” என்ற பறை இளஞ்சூட்டில் “த்தண்ண், த்தண்ண்…” என்றது.
சுகனுக்குத் தாத்தாவின் செய்கை வேடிக்கையாகத் தெரிந்தது.
பெரமன், குப்பன் இருவரும் பறையைத் திரும்பவும் கை வழியே தோளில் மாட்டிக் கொண்டு விட்ட இடத்திலிருந்து சுதியைப் பிடித்தார்கள். இத்தனை நேரம் ஒலித்ததைப் போல அப்பறையொலி இருந்திருக்கவில்லை. சற்று கனமாகவும், “கண்ண் கண்ண்” என்றும் ஒலித்தது. கோவிலுக்குள்ளாக ஒலித்த “தம்,தம்” குன்றி “தண், தண்” தலையெடுத்தது.
தலையைச் சிலுப்பிக்கொண்டான் சுகன். அவனுக்குள் ஆங்காரக் குஸ்தி. கைகளைத் தட்டிக் கொண்டான்.
இப்பொழுது சுகனுக்கு ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை. தாத்தாவின் முகத்தை மட்டுமே பார்த்தான். அவரது முகம் உக்கிரம் கொண்டது. அவன் தாத்தாவின் வேட்டியை விரல்களால் பிடித்தபடி, தாத்தா கொட்டும் பறையின் பின்பக்கத்தைப் பார்த்தான். அடித்த அடியில் பறை உதறி அதிர்ந்தது.
பறையின் இசைக்கேற்ப அவனது கால்களும் கைகளும் தலையும் தாளமிட்டாடின. அவனையும் அறியாமல் ஆட்டமெடுக்கும் கால்களை நிறுத்த பெரமன் ஒரு அதட்டு அதட்டினார். திடுக்கென ஆட்டத்தை நிறுத்திய அவன் தாத்தாவை நிமிர்ந்துப் பார்த்தான்.
அவனைக் கண்களால் தணித்து தன்னையொட்டி நிற்கச் சொல்லிப் பணித்தார். அவனது கால்கள் ஒரு புள்ளியில் நிலைக்குத்தி நின்றதும் பழையபடி அவன் கேள்விகள் கேட்டான்.
“ அவங்களுக்கு எவ்ளோ தத்தா சம்பளம்…?”
தாத்தா இவ்வளவு எனச் சொல்லத் தெரியாதவராய், அடிக்கும் குச்சியை உயரத் தூக்கி “அவ்ளோ“ எனச் சொல்லும்படியாகச் சைகையால் காட்டி “தண்ண் தண்ண்..” என்று பறையைக் கொட்டினார்.
“ ஓ, அவ்ளோ கொடுப்பாங்களா…?”
“ தண்ண் தண்ண்…”
“ அப்ப உனக்கு,..?”
பறை ‘சொத், சொத்..’ என்றது. சுகனின் உதடுகள் பிதுங்கி முகம் வெளிர்த்து வியர்த்தது.
“ அம்புட்டேதான் தருவாங்களா?”
“ தண்ண், தண்ண்…”
“ அவங்களுக்கு மட்டும் அவ்ளோ, உனக்கு மட்டுயேன் இவ்ளோதான்….”
அவனது இந்தக் கேள்வி அவருக்குக் கோபத்தை மூட்டியது. அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றார். அடி பறையின் மையத்தில் “ தர்ந்தணம், தர்ந்தணம்…” என்பதாக விழுந்தது.
“ அப்ப, வா தத்தா, சாமிக்கிட்ட போயி சொல்லுவோம்…”
“ தந்திணந்தண்…”
“ அவங்க கேட்கிற மாதிரியே உனக்கும் நிறையக் கேட்போம்…”
“ குர்ணம், குர்ணம்…” இசையுடன் சேர்ந்து அவரது தலையும் ஒரு பக்கமாக சாய்ந்து சரிந்து சாய்ந்தாடியது.
“ கோயிலுக்குள்ளாகப் போவக் கூடாதா….”
அடித்த அடிகளில் பெரமனின் கைகள் கடுத்தன. அவரது மொத்த உடம்பும் வியர்வையால் நனைந்து பிசுபிசுத்தன. பறையை நீட்டி, இழுத்து, மடக்கி ஒரு புள்ளியில் “தண்ன், தண்ன், தண்ன்…” என நிறுத்தினார். கோவில் இத்தனை நேரமில்லாத பேரமைதியில் தவிழ்ந்தது.. கோவிலுக்குள்ளாக இத்தனை நேரம் ஒலித்துக் கொண்டிருந்த இசை பறைக்கு முன்பே நின்று விட்டது தெரிந்தது.
“ ஏன் தத்தா இதோட கோயிலுக்குள்ளப் போகக் கூடாது?”
“ போகக் கூடாதுப்பா…”
“ அவங்க போயிருக்காங்க…”
“ இம், போயிருக்காங்க…”
“ அவங்க மாதிரிதானே நீயும் வேட்டிக் கட்டிருக்கே. ரெட்டக் குச்சி வச்சிருக்கே. சட்டை போடாம இருக்கே. அவங்க உள்ளே, நீ வெளியே. ஏன் தத்தா…?”
பெரமன் கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருந்த பேரனைக் குனிந்து அள்ளி, முத்தம் கொடுத்து மார்போடு அணைத்தபடி சொன்னார் “ஏன்னா, அவங்க அடிக்கிறது கேரளத்து செண்டை”.
“ நம்மளது…?”
“ தமிழன் பறை…”
அண்டனூர் சுரா
அவர்களுக்கு வணக்கம்.
அன்னிய மோகம் தமிழ்
நாட்டிற்குள் வந்து
செல்வது பழக்க தோசம்.
செண்டை மேளம் ஒன்றும்
தமிழன் இசைப்பது இல்லை. தமிழன் இசை
எதற்கு இசைக்கப்படுகிறதோ
அது தானாகவே வெளிப்படும்.உடலில்
ஒருவகை உணர்ச்சிப்
பரவும்.
செண்டை மேளம் ஒரு
மாயை.
பேராசிரியர் கருப்பையா