கட்டுரைகள்

ஈழத்தில் களைகட்டும் ஜல்லிக்கட்டும், மாட்டுவண்டிச் சவாரியும்! … ஐங்கரன் விக்கினேஸ்வரா.

தைப்பொங்கல் என்றாலே தமிழ் மக்களின் வாழ்வில் விழாக்கோலம் தோன்றிடும் பண்டிகைக் காலமாக அமைந்திடும். தமிழ் மக்களின் வாழ்வில் புது விடியலாக பிறக்கும் தைப் பொங்கல் நாட்களிலேயே , தமிழரின் வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு தமிழகத்திலும், மாட்டு வண்டிச் சவாரி ஈழத்திலும் செழிமையாக காலங்காலமாக நடாத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டும் – மாட்டு வண்டிச் சவாரியும் :
ஈழத்தில் தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரியம் மிக்க விளையாட்டுக்களில் ஒன்றாக மாட்டு வண்டிச் சவாரி விளங்குகின்றது. அது ஆரம்ப காலம் தொடக்கம் தற்காலம் வரையில் சிறந்ததொரு வீர விளையாட்டாகவும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பிப் இரசிக்கப்படும் விளையாட்டாகவும் காணப்படுகின்றது.
அதனைப் போலவே தமிழ் நாட்டில் ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் பொங்கல் நாட்களில் சிறப்புடன் காலங்காலமாக நடாத்தப்படுகிறது.
தமிழ் இலக்கியத்தில் ஜல்லிக்கட்டு :
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் பல உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. இவ்விளையாட்டு, முல்லை நில மக்களின் திருமணத்துடன் தொடர்புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்ததாகவும் அறியப்படுகிறது.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழ் நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டின் “சொர்க்க பூமியாக ” இன்னும் திகழ்ந்து வருகிறது.
முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இவ்விளையாட்டு இன்றும் ஆர்வமாக நிகழ்த்தப்படுகிறது.
சிந்துவெளி நாகரிக சான்று :
கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்தியத் தலைநகர் புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன.
சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெற்றுள்ள ‘ஜல்லிக்கட்டு’ என்பது தமிழர்களின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று. 2000ஆண்டுகள் முன்பாகவே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று தமிழ் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.
குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர்.
இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உண்டு. அவ்வகையில் தமிழ்நாட்டில்
ஜல்லிக்கட்டு என்பது ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. ஜல்லிக்கட்டு என்பது பொங்கல் தினத்தன்று நடைபெறக்கூடியது. இது சிறந்த விளைச்சலை கொடுத்ததற்காக இயற்கைக்கு நன்றி கூறும் திருவிழா ஆகும்.
இயற்கைக்கு நன்றி கூறும் திருவிழா :
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.
அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.
 
தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளம்:
ஜல்லிக்கட்டு விழாவின் பின்னர் பல கோயில்களில் இதனை அடுத்து திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழகத்தின் சமயம் மற்றும் இறை நம்பிக்கை சார்ந்த நிகழ்வும் கூட. ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமும் கூட.
அதனால்தான் ஒவ்வொரு முறையும் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள நேரடியாக ஜல்லிக்கட்டை காண வருகிறார்கள். ஜல்லிக்கட்டு தொடர்பான ஏராளமான சுடுமண் சிற்பங்கள் உள்ளிட்டவையும் தொல்பொருள் ஆய்வுகளில் கிடைத்திருக்கிறது.
சங்க காலத்து தமிழ் இலக்கியங்களான தொல்காப்பியம், கலித்தொகை உள்ளிட்டவற்றில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டின் முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை காணலாம்.
பல பல்கலைக்கழக ஆய்வுகளும், தமிழ்நாடு மாநிலத்தின் கலாச்சார அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதை நிரூபித்துள்ளது. புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ரோமீலா தாபர், தனது புத்தகத்தில் ஒரு இனத்தின் கலாச்சார தொடர்புகள் குறித்து தெளிவாக வரையறுத்துள்ளார். அவை அத்தனையும் தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டுக்கு பொருந்தி செல்கிறது.

ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும் :

ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களிடத்தில் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது.
சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது.
அம்மை போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.
ஐரோப்பிய நாடுகளில் காளைப்போர் :
 
ஸ்பெயின், போர்த்துக்கல் மேற்குலக நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.
தமிழர்களின் வரலாற்றுப் பெருமையை எடுத்துரைக்கும் ஜல்லிக்கட்டு,
காலப் பழைமையால் பல்வேறு மாற்றங்களுடனும், சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்பட்டாலும் இது தொன்மையானது என்பதிலும், மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதிலும் ஐயமில்லை. தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான ஏறுதழுவுதல் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்.
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், பழந்தமிழ் வீர விளையாட்டுக்களையும், தமிழ் பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாப்பது தாயக மக்களின் கடமை மாத்திரமன்றி, புலம்பெயர் தமிழர்களின் பெருங்கடமையும் காலத்தின் கட்டாயமுமாகும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.