‘கனகர் கிராமம் ‘ …. தொடர் நாவல் …. அங்கம் -12 …. செங்கதிரோன்.
உகந்தைமலை உச்சியில் படுக்கைபோட்டு உறங்கிய கோகுலன் . கதிரவேல் இருவரும் அதிகாலையில் கண்விழித்ததும் மீண்டும் ‘ சன்னாசிமலை ‘ க் கதை ஆரம்பமாயிற்று .
தான் பல தடவைகள் சன்னாசிமலையில் ஏறிப்பார்த்திருப்பதாகவும் அங்கு அரசமாளிகை இருந்ததற்கான அத்திபாரத் தடயங்களும் இடிபாடுகளும் இருப்பதாகவும் அதேபோல் மலையடிவாரத்துச் சுற்றுப்புறங்களையும் தான் சுற்றிப் பார்த்ததாகவும் அப்பகுதிகளிலும் கட்டிட இடிபாடுகள் காணப்படுவதாகவும் இங்கேயெல்லாம் ‘ புதையல் ‘ கள் தோண்டியெடுக்கப் பட்ட தடயங்கள் இருப்பதாகவும் இவையெல்லாவற்றையும் தான் நேரில் கண்டதாகவும் கூறி ஆடகவுந்தரியின் அரண்மனை இங்குதான் இருந்திருக்க வேண்டுமென்று தான் நம்புவதாகவும் முடித்தான் .
அத்துடன் ‘ சன்னாசிமலை ‘ க் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இருவரும் தத்தம் படுக்கைவிரிப்புகளைச் சுருட்டியெடுத்துக் கொண்டு மலையுச்சியிலிருந்து இறங்கிக் கீழே மடம் சென்று அங்கு தயாராயிருந்த காலைத்தேனீரைப் பருகிவிட்டுக் காலைக் கடன்களை முடித்துவர என்று கடற்கரைப்பக்கம் விரைந்தார்கள் .
கடற்கரை கோயிலிலிருந்து ஒரு நூறுயார் தூரத்திற்குள்தான் இருக்கும் . கோயில் மூன்றலிலிருந்து ஒற்றையடிப் பாதையொன்று கடற்கரையை நோக்கிக் கோடு கீறினாற்போல நீண்டு கிடந்தது , பாதையின் இருமருங்கிலும் பற்றைக் காடுகள் அடர்ந்து வளர்ந்து அப்பாதையில் பயணிப்பவர்களுக்குச் சாமரம் வீசிக்கொண்டிருந்தன . கோயிலின் சுற்றுப்புறக் காடுகளிலும் மயில்களும் மான்களும் நடமாடின . காய்ந்த சருகுகளின் மேலால் ஆங்காங்கே உடும்புகள் சரசரவென்று ஊர்ந்தன . முயல்களும் ஒன்றிரண்டு பற்றை மறைவுகளிலிருந்து துள்ளிப் பாய்ந்து ஓடின . கடல் இரையும் சத்தத்திற்குப் போட்டியாகப் பல்வகைப் பறவையினங்களும் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன , காலை இளங்காற்றும் காட்டுப்புறக் காட்சிகளும் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தந்தன . கடற்கரையோரம் மணற்பாங்கான மேட்டுப்பகுதிகளில் வெள்ளை மற்றும் ஊதாநிறப் பூக்களுடன் பட்டிப்பூச்செடிகளும் – பச்சைப் பசேலென்ற அடம்பன் கொடிகளும் – உடல் சிலிர்த்த முள்ளம்பன்றிகள் மணலுக்குள் தலைகளைப் புதைத்தது போல ‘ இராவணன் மீசை ‘ தாவரக் கொடிகளும் அப்பிக் கிடந்தன . இராவணன் மீசைக் கொடிகளிலிருந்து கழன்ற அதன் பூக்கள் முள்பந்துகளாக மணலில் உருண்டு திரிந்தன . கடலோரம் சிறுநண்டுகள் மணல்மீது படம் வரைந்து விளையாடின . கடலலைகள் வந்து அப்படங்களை அழித்து விளையாடின .
கோகுலனும் கதிரவேலும் கடற்கரைப்பக்கம் சென்று காலைக்கடன்களை முடித்துவந்து பின் மீண்டும் மலைமீது ஏறி அங்கிருந்த சுனை ‘ களில் நீர் அள்ளிக் குளித்து உடை மாற்றிக் கொண்டு கீழிறங்கி மரத்தடிக்கு வந்துசேர அங்கு மற்றெல்லோரும் தமது அலுவல்களை – யெல்லாம் முடித்துக்கொண்டு புறப்படத் தயாராயிருந்தார்கள் .
கோயிலுக்குச் சென்று கற்பூரம் கொளுத்தித் தேங்காய் உடைத்துக் கும்பிட்டுக் கதிர்காமம் நோக்கிய நடைப்பயணம் ஆரம்பமாகிற்று . உழவு இயந்திரம் உகந்தையோடு பொத்துவிலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது . கூடாரமாட்டுவண்டில் மட்டும் நடைப்பயணத்தில் இணைந்து கொண்டது .
உகந்தை முருகன் கோயில் வளாகத்திற்கு வெளியே சற்று இப்பால் ‘ யால ‘ சரணாலயத்தின் ஒருபக்க நுழைவாயில் இருந்தது . நுழைவாயிலில் இலங்கை வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அலுவலகமொன்றும் சோதனைச்சாவடியும் ஒன்றோடொன்று இணைந்ததாக அமைக்கப் பெற்றிருந்தன . காடுகளையும் காட்டு உயிரினங்களையும் காப்பது இத் திணைக்களத்தின் பிரதான பணி .
கதிர்காம யாத்திரை தொடங்கியதும் ‘ யால ‘ சரணாலயத்துள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பெற்று காட்டுப்பாதை பக்தர்களுக்குத் திறந்துவிடப்படும் . வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் சிற்றூழியர்களும் கதிர்காம யாத்திரிகர்களுக்குத் தேவையான உதவி ஒத்தாசைகளையும் வழங்குவர் .
கோகுலனின் தாயாரின் கதிர்காம யாத்திரை அணி ‘ அரோகரா ‘ ஒலியெழுப்பிய வண்ணம் ‘ யால ‘ சரணாலயத்தின் உகந்தைச் சோதனைச் சாவடிக்கூடாகக் காட்டுப்பகுதிக்குள் பக்திப் பரவசத்துடன் நுழைந்தது . ‘ வாகூரவெட்டை நோக்கிய பயணம் அது .
உகந்தை முருகனைக் கந்தபுராணத்துடனும் இராமாயண இதிகாசத்துடனும் தொடர்புபடுத்தும் தொன்மங்கள் நிலவுகின்றன .
கந்தபுராண காலத்தில் பத்மசூரனை வதம் செய்வதற்காக முருகன் தனது பரிவாரங்களுடன் திருச்செந்தூர் வழியாக இலங்கையின் வடபகுதியில் செல்வச்சந்நிதியை அடைந்ததாகவும் -பின் அங்கிருந்து கிழக்குக் கரையூடாக வெருகல் , சித்தாண்டி , கண்டபாணந்துறை ( திருக்கோவில் ) , சங்குமன்கண்டி ( சங்கமன்கண்டி ) ஆகிய இடங்களைக் கடந்து உகந்தை மலையைச் சேர்ந்ததாகவும் – உகந்தை மலையில் தனது பரிவாரங்களுடன் ஓய்வெடுத்துப் பின்னர் கதிர்காமம் சென்றடைந்து மாணிக்ககங்கைக் கரையில் பாசறை அமைத்து அங்கிருந்துகொண்டு பத்மசூரனுடன் போர்புரிந்து அவனை வெற்றிகொண்டதாகவும் – பின்னர் வீரபாகு முதலிய வீரர்களுடன் உகந்தைமலையை மீண்டும் வந்தடைந்து இளைப்பாறியபின் திருச்செந்தூர் திரும்பியதாகவும் நிலவும் ஒரு தொன்மம் .
இதன் தொடர்ச்சியாக , முருகன் திருப்பரங்குன்றத்தில் வாழ்ந்த காலத்தில் இந்திரன் மகளான தெய்வயானையை மணம்புரிந்து இனிதாக வாழ்ந்துவரும்போது இலங்கையில் செல்லக் கதிர்காமம் பகுதியை ‘ நம்பிராஜன் ‘ எனும் திராவிட இனத்தைச் சேர்ந்த வேடுவக் குறுநில மன்னன் ஆட்சிபுரிந்ததாகவும் – நம்பிராஜனின் வளர்ப்புமகளான வள்ளியின் பேரழகை நாரதர் மூலம் அறிந்து வள்ளியைத் திருமணம்புரிய விரும்பிச் செல்லக்கதிர்காமத்திற்கு வந்து வள்ளியைச் சந்தித்துக் காதலித்து அவளைத் தோணி மூலமாக கடல்வழி உகந்தைமலைக்குக் கவர்ந்துவந்து அவர்களிருவரும் கணவன் மனைவியாகக் களித்திருந்த இடமே உகந்தை மலை என்ற தொன்மமும் உண்டு , முருகன் வள்ளியைக்கவர்ந்து வந்ததோணி பாறைவடிவில் உகந்தைக் கடலருகே இன்றும் உள்ளதாக அடியார்களால் நம்பப்படுகிறது .
முருகனது ஆணையை ஏற்ற வேலானது சூரனைக்கொன்று வெற்றியுடன் உக்கிரமாகப் பயணிக்கும் வழியில் எதிர்ப்பட்ட வாகூரமலையை இரு கூறுகளாகப் பிளந்து கடலில் மூழ்கியபோது மூன்று கதிர்களைச் சிந்திச்சென்றது என்றும் – வேலின் உருவம் கொண்ட அம் மூன்று கதிர்களும் முறையே உகந்தை மலையின் உச்சியிலும் , திருக்கோவிலில் ஒரு வெண்நாவல் மரத்தின் மீதும் , மண்டூரில் தில்லைமரத்தின்மீதும் தங்கினவென்றும் அவ்விடங்களில் வாழ்ந்த வேடுவர்கள் வியப்புடன் நோக்கிக் கொத்துப்பந்தர்களால் கோயில் அமைத்து வழிபட்டனரென்றும் தொன்மங்கள் உண்டு .
கந்தபுராணத்துடன் தொடர்புபட்ட தொன்மங்கள் இவ்வாறிருக்க , இராமாயண இதிகாசத்துடன் தொடர்புபடுத்திய தொன்மங்கள் பின்வருமாறு உள்ளன .
இராவணன் இலங்கையை ஆட்சிபுரிந்த காலத்தில் தென்னிலங்காபுரி ‘ அரசுக்குட்பட்ட பகுதியாக உகந்தைமலைப் பிரதேசம் இருந்ததென்றும் சிவபக்தியில் சிறந்தவனான இராவணன் உகந்தைமலையில் பெரிய சிவாலயமொன்றை நிறுவினானென்றும் இராவணனின் காலத்தில் உகந்தைமலையானது சிவாலயமாகவே விளங்கிற்றென்றும் கூறப்படுகிறது .
ஆனால் , தொல்லியல்ரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் நோக்குமிடத்து . உகந்தைப் பிரதேசத்தில் பெருங்கற்காலத்தில் ( கி.மு1000-2000 ) வாழ்ந்த மக்கள் கூட்டத்தினரான நாகர் , இயக்கர் குடியினரிடையே தோற்றம் பெற்று நிலவிவந்த ‘ வேல் ‘ வழிபாட்டின் தொடர்ச்சியாகவே உகந்தை முருகன் நிலைகொண்டிருக்க வேண்டும் . கி.மு 7 ஆம் , 6 ஆம் நூற்றாண்டுகளில் உகந்தைப் பிரதேசத்தில் ‘ வேல் ‘ வழிபாடு சிறப்புற்றிருந்தது. இதே காலத்தில்
கதிர்காமப் பிரதேசத்திலும் ‘ கதிரமலை ‘ யில் ‘ வேல் ‘ வழிபாடு நிலவியிருக்கிறது .
கி.பி. 16 ஆம் நூற்றாண்டுவரை உகந்தைமலைப் பிரதேசத்தில் நிலையான நாகரிகம் நிலவிவந்தது . கி.பி 1594 இல் மலேரியா நோய் ஏற்பட்டதாலேயே ‘ யால ‘ என அழைக்கப்பெற்ற இப்பிரதேசத்திலிருந்து மக்கள் முற்றாக வெளியேறியுள்ளனர்.அதன் பின்னர் உகந்தைமலைப் பிரதேசமும் அதன் சுற்றுப் புறங்களும் காடடர்ந்த பகுதிகளாக மாறின .
ஆனாலும்கூட உகந்தை மலையில் ‘ வேல் ‘ வழிபாடு தொடர்ந்து நிலவி வந்துள்ளது என்பதற்கு வெளியிடங்களிலிருந்து யாத்திரிகர்கள் காட்டுப்பகுதிகளினூடாகக் கால்நடையில் பயணித்து உகந்தை மலை வேலனை வழிபட்டடுள்ளனர் என்பது சான்றாகும் .
உகந்தைமலையின் மேற்பகுதியில் நடப்பட்டிருந்த மிகப்பழைமை வாய்ந்த வேலும் கிழக்குப் பகுதியிலமைந்த கற்சுனைகளும் மற்றும் வேறு தொல்லியல் எச்சங்களும் கூட இதற்குச் சான்றாக அமைகின்றன .
பத்தொன்பதாம் நுற்றாண்டின் தொடக்க காலத்திலேயே இலங்கையில் வன்னி உள்ளிட்ட வடமாகாணத்திலிருந்தும் கிழக்கு மகாணத்திலமைந்த திருமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்தும் கிழக்குக் கரையோரமாக வெருகல் – சித்தாண்டி – களுதாவளை – காரைதீவு – திருக்கோவில் – சங்கமன்கண்டி – பாணமை ஊடாகக் கால்நடையாகக் கதிர்காம யாத்திரை செல்லும் அடியார்களின் தொகை அதிகரிக்கத் தொடங்கிற்று . இந்த யாத்திரிகர்கள் உகந்தையில் ‘ இடைத்தங்கல் ‘ போட்டுக் கதிர்காம யாத்திரையைத் தொடரும் வழக்கம் வேரூன்றியது .
இதன் காரணமாகக் கதிர்காமம் செல்லும் முருகபக்தர்கள் உகந்தையிலும் முருகன் ஆலயமொன்றை நிறுவ எண்ணம் கொண்டனர் . இதன் பெறுபேறாக 1885 இல் மட்டக்களப்பிலும் திருக்கோவிலும் வசிப்பிடங்களை வைத்திருந்த ‘ மார்க்கண்டு முதலாளி ‘ என அழைக்கப்பட்ட செல்வந்தரால் சிறியதொரு ஆலயம் நிர்மாணிக்கப்பெற்று அழகிய வேலும் பிரதிஸ்டை செய்யப்பட்டது .
மார்க்கண்டு முதலாளியின் பூர்வீகம் இலங்கையின் வடமாகாணம் யாழ்ப்பாணம் ஆகும் . இவர்களுடைய சந்ததியினர் மிக நீண்டகாலமாக மட்டக்களப்பு ‘ சிங்களவாடி ‘ யில் வசித்து வந்தார்கள் . முன்னொரு காலத்தில் , இப்போது ‘ சிங்களவாடி ‘ என அழைக்கப்படும் இடத்தில் செங்கல்வெட்டும் தொழிலாளர்கள் வாடி அமைத்துத்தங்கித் தொழில்புரிந்ததாகவும் அதனால் ‘ செங்கல் வாடி ‘ என ஆரம்பத்தில் இருந்த
இவ்விடத்தின் பெயர் காலப்போக்கில் ‘ சிங்களவாடி ‘ என மருவிற்று எனக் கதையுண்டு .
மார்க்கண்டு முதலாளியின் சந்ததியை நோக்குமிடத்து , கனகலிங்கம் என்பவரின் மகன் வை த்தியலிங்கம் – வைத்தியலிங்கத்தின் மகன் மார்க்கண்டு ஆவார் . மார்க்கண்டுக்கு தியாகராஜா , சிவசம்பு , சோமசுந்தரம் , சுப்பிரமணியம் , மாணிக்கவாசகர் என மகன்கள் இருந்துள்ளனர் .
மார்க்கண்டு முதலாளிக்குத் தம்பிமுறையான சரவணமுத்து என்பவரின் மகனே மட்டக்களப்பி ல் ச.கு ( சானா கூனா ) என அறியப்பட்ட குமாரசாமி ஆவார் .
மார்க்கண்டு முதலாளிக்குத் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசங்கள் உட்படத் தற்போதைய அம்பாறை மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த பழைய மட்டக்களப்பு மாநிலம் எங்கும் நெல்வயல்களும் தென்னந்தோட்டங்களும் தரிசுநிலங்களும் கால்நடைப்பட்டிகளும் ஏராளமாயிருந்துள்ளன . திருக்கோவில் பகுதியில் ‘கோரக்களப்புத் ‘ தென்னந்தோட்டம் அவர்களுடையதே . கோரக்களப்புத் தென்னந் தோட்டத்தில் மார்க்கண்டு முதலாளி வசித்தும் இருக்கிறார் .
பிற்காலத்தில் இச்சொத்துகளையெல்லாம் திருக்கோவிலில் வசித்துவரும் திருமணம் முடியாது பிரமச்சாரியாகவே வாழ்ந்துவரும் திருக்கோவில் ஊரில் ‘ கண்ணன் முதலாளி ‘ என அழைக்கப்பட்டவரால்பராமரிக்கப்பட்டும் முகாமைத்துவம் செய்யப்பட்டும் வந்தன . ‘ கண்ணன் ‘ முதலாளி என அழைக்கப்பட்ட இவர் மார்க்கண்டு முதலாளியின் மூத்தமகனான தியாகராஜா -வின் மகனாவார் .
மார்க்கண்டு முதலாளியின் மூதாதையினர் வியாபார நோக்குடனேதான் தமது குடும்பத்துடன் மட்டக்களப்பு நோக்கி வந்தார்கள் . முக்கியமாகப்போயிலை சுருட்டு வியாபாரமே அவர்களது பிரதான நோக்கமாக இருந்துள்ளது . அந்தக் காலத்தில் கனகலிங்கம் சுருட்டு ‘ மிகவும் பிரபல்யமாக இருந்துள்ளது . அக்காலத்தில் மட்டக்களப்பு மாநில மக்கள் ஆண்கள் பெண்கள் அனைவருமே தற்காலத்தைவிட வெற்றிலைபாக்கு ‘ ப் போடும் பழக்கம் அதிகம் உடையவர்களாகக் காணப்பட்டுள்ளனர் .
மார்க்கண்டு முதலாளியின் மூதாதையினர் தமது விடாமுயற்சியினாலும் – வியாபார நு ணுக்கங்களாலும் – தமது அறிவுக் கூர்மையினாலும் – தந்திரோபாயங்களினாலும் சொத்துக்களைப் பெருக்கிச் செல்வந்தர்களாகிச்
சமூகத்தில் ‘ அந்தஸ்து ‘ உடையவர்களாக மாறினர் . ஒரு காலகட்டத்தில் மார்க்கண்டு முதலாளி இலங்கையிலேயே குறிப்பிட்ட செல்வந்தராகக் கருதப்பட்டுள்ளார் . ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பெரும் ‘ பஞ்சம் ஏற்பட்டபோது மார்க்கண்டு முதலாளி பட்டினியால் வாடிய மக்களுக்கு உணவு அளிக்கும் பரோபகாரியாகவும் திகழ்ந்திருக்கிறார் . கோயில் பணிகளிலும் ஈடுப்படுள்ளார் . சங்கமன்கண்டிக் கோயிலில் 1912 இலிருந்து தான் இறக்கும்வரை மார்க்கண்டு முதலாளி பூசைவழிபாடுகளும் தொண்டுகளும் புரிந்தமையும் அவரது இறப்புக்குப் பின்னர்கூட அவரது குடும்பத்தினர் தொடர்ந்து சிறிதுகாலம் இப்பூசைவழிபாடுகள் மற்றும் தொண்டுகளையும் மேற்கொண்டமையும் உகந்தையில் அதன் ஆரம்பக் கோயிலை நிர்மாணித்துக் கொடுத்தமையும் உகந்தையில் மடம் கட்டிக் கொடுத்தமையும் இவர் ஆற்றிய முக்கியமான கோயிற்பணிகளாகும் . திருக்கோவில் கோரக்களப்பு மங்கம்மாரியம்மன் கோயிலைஉருவாக்கிக் கொடுத்தவரும் இவரே .
பஞ்சகாலத்தில் இவர் புரிந்த மனிதாபிமான சேவைகளுக்காக அப்போதிருந்த ஆங்கிலேயஅ ரசு மார்க்கண்டு முதலாளிக்கு ஓ.பி.இ. ( Order of British Empire – OBE பட்டம் வழங்கிக் கௌரவித்தும் உள்ளது .
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உகந்தை முருகன் கோயிலின் முகாமைத்துவப் பொறுப்பு’ வண்ணக்கர் ஆன திசநாயக்க முதியான்சலாகே சந்தஹாமி குடும்பத்தின் வசமானது . இவருடைய மகன் சந்தஹாமி புஞ்சிமாத்தயா 1922 இல் உகந்தைக் கோயில் வண்ணக்கராகியுள்ளார் . புஞ்சிமாத்தயா வண்ணக்கராக வந்த பின்னர் பின்னாளில் ஆலய ‘ பரிபாலனசபை ‘ யொன்று ஏற்படுத்தப் பெற்று அதன் தலைவராக பொத்துவிலிலே தனவந்தராக விளங்குபவரும் சமூக மற்றும் ஆன்மீக சேவையாளருமான மயில்வாகனம் கனகரட்ணமும் அவருக்கு உதவியாளர்களாக பொத்துவிலைச்சேர்ந்த முத்தையாக் கிளாக்கர் என்பவரும் இராமையாக் காடியர் ‘ என அழைக்கப்படும் இராஜநாதன் என்பவரும் சேவையாற்றி வருகின்றனர் .
பொத்துவில் வட்டிவெளியில் வசிக்கும் முத்தையாக்கிளாக்கரின் பூர்வீகம் மட்டக்களப்பு ஆகும் . பொத்துவிலில் மணம் முடித்துப் பொத்துவில் வாசியாகவே மாறிவிட்டார் . பொத்துவில் ஆலையடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகத்தையும் முத்தையாக் கிளாக்கரே பார்த்து வருகிறாரென்பதும் கோகுலனுக்குத் தெரிந்தேயிருந்தது .
இளவயதிலிருந்தே தீவிர வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொண்ட கோகுலன் மாணவப் பருவத்தில் பொத்துவிலில் பத்திரிகைகள் படிப்பதற்கு
இரண்டு இடங்களைத் தேடியும் நாடியும் போவதுண்டு . ஒன்று பொத்துவில் நகர்ப்பகுதியில் ‘முப்பனை ‘ சென்றுவரும் கூடார வண்டில்கள் இளைப்பாறும் பாரிய ஆலவிருட்சத்திற்குப் பக்கத்தில் அமைந்த வேலுப்பிள்ளை என்பவரின் ‘பாபர் சலூன் ‘ . வேலுப்பிள்ளையின் பாபர் சலூனுக்குப் போனால் அங்கு வெளிவிறாந்தையில் போடப்பட்டிருக்கும் வாங்குகளிலமர்ந்து அங்கு வாங்கிப் போடப்பட்டிருக்கும் வீர கேசரி ‘ மற்றும் ‘ தினகரன் ‘ பத்திரிக்கைகளை ‘ ஓசி ‘ யில் படித்துவிட்டு வரலாம் . அதுபோல் முத்தையாக் கிளாக்கரின் வீட்டுக்குப் போனால் உயர்ந்த திண்ணையைக் கொண்டிருந்த அவரது வீட்டில் சிலவேளைகளில் திண்ணையில் அமர்ந்தும் சில வேளைகளில் நாற்காலியில் இருந்தும் அங்கு வாங்கிப் போட்டிருக்கும் பத்திரிகைகளை அவரது அனுமதியைப் பெற்று வாசித்துவிட்டு வரலாம் . ஒழுங்காக மடித்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகைகளை எடுத்து விரித்துப் படித்த பின்பு அது இருந்த மாதிரியே மடித்து இருந்த இடத்திலே முன்பு இருந்த மாதிரியே வைத்துவிட்டு வரவேண்டும் . இராஜநாதன் இந்தியவம்சாவளியைச் சேர்ந்தவராகவே அறியப்பட்டிருந்தார் . நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றவென்று பொத்துவில் பிரதேசத்திற்கு வந்த அவர் கோமாரியில் மணம் முடித்தார் . இவரது குடும்பம் ஆரம்பகாலத்தில் முத்தையாக் கிளாக்கரின் வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்ததும் கோகுலனுக்குத் தெரியும் . பொத்துவில் பிரதேசத்திலுள்ள நீர்ப் பாசனக் குளமான றொட்டைக்குளம் பராமரிப்பு இவரின் பொறுப்பிலேயே இருந்தது . பொத்துவிலில் இவரை ‘இராமையாக் காடியர் ‘ என்றுதான் அழைப்பார்கள். இராஜநாதன் எனும் இயற்பெயர் கொண்ட இவரின் இன்னொரு பெயர் இராமையா என்பது .
நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நீர்பாசனக்குளங்களின் மேற்பார்வையாராக – கண் காணிப்பாளராக இக்குளங்களின் பராமரிப்புக்குப் பொறுப்பாகவுள்ள உத்தியோகத்தரைக் ‘ காடியர் ‘ என்றுதான் அழைப்பர் . கோகுலன் அறிந்தவரை இராமையாக் காடியருக்கு முன்னம் றொட்டைக் குளத்திற்குப் பொறுப்பாகக் காரைதீவைச் சேர்ந்த ‘ சுந்தரக் காடியர் ‘ என்பவர் பணிபுரிந்தார் . கோகுலனுக்கு உறவினர் மட்டுமல்லாமல் கோகுலனின் தந்தையும் சுந்தரக்காடியரும் உறவு முறைகளுக்கும் அப்பால் நெருங்கிய கூட்டாளிகளாகவும் விளங்கினர் . இருவருமே நன்கு ‘ தண்ணி ‘ போடுவார்கள் . சுந்தரக்காடியர் அடிக்கடி கோகுலன் வீட்டிற்கு வந்து அவனது தந்தையுடன் ‘ முசுப்பாத்தி ‘ போட்டு விருந்துண்டும் சில வேளைகளில் தங்கியும் போவார் . எட்டில தப்பில இவர்களுடன் கதிரவேலின் தந்தை பெரி யதம்பிப் போடியாரும் இணைந்து கொள்வதும் உண்டு . சுந்தரக்காடியரின் தொண்டைக் குழிக்குள் ‘ அது ‘ போய்விட்டால் ‘ இங்கிலிஸ் ‘ தூள்பறக்கும் . ‘
மகன் மகன் ‘ என்று நூறு தடவைகள் கூப்பிடுவார் . அவரது பேச்சில் சற்றுக் ‘ கொன்னை யுமிருக்கும் . அக் ‘ கொன்னை ‘ ப் பேச்சு கேட்கச் சுவாரஸியமாக இருக்கும் . அவரது கதைகளைக் கேட்டால் சிரித்துக் கொட்டவேண்டியதுதான் .
கோகுலனின் தாயாரின் யாத்திரை அணியை வரவேற்று உகந்தையில் மடத்தில் தங்கவைத்து அவர்களுக்கு இராச்சாப்பாடும் ஏற்பாடு செய்த உகந்தைக் கோயில் வண்ணக்கரும் – கோகுலனின் இளையக்காவின் கணவருக்கு உறவு முறையில் பெரியப்பாவும் – பொத்துவிலில் விஷக்கடி வைத்தியத்திற்குப் பேர் போனவருமான ஊரில் ‘ மாத்தயாவர் ‘ என மரியாதையாக அழைக்கப்படுபவருமான ‘ புஞ்சிமாத்தயா ‘ அவர்கள் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலா க உகந்தை முருகன் கோயில் ‘ வண்ணக்கர் ஆக இருந்து வருகிறார் .
முதல் நாளிரவு உகந்தை மலையுச்சியில் உறங்கும்போது ஆதியோடு அந்தமாகத் தமக்குள்ளே அலசி ஆராய்ந்த தகவல்களையும் நினைவுகளையும் இவ்வாறு மீண்டும் மீட்டுப்பார்த்தபடியும் அவ்வப்போது தத்தம் தாய்மாருடன் தகவல்களைச் சரிபார்த்துக் கொண்டும்தான் கோகுலனும் கதிரவேலும் உகந்தையிலிருந்து வாகூரவெட்டை நோக்கிய பயணத்தை மேற்கொண்டிருந்தனர் .
( தொடரும்——- அங்கம் 13 )