“பிரச்சாரப் பீரங்கி” …. சிறுகதை – 49 …. அண்டனூர் சுரா.
கட்சியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தினைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கின்ற கட்சியின் மாவட்டத் தலைவர் அவர்களே, முன்னிலை வகித்திருக்கின்ற தொண்டரணி செயலர் அவர்களே, இக்கூட்டத்தினை நெறிப்படுத்த கட்சியின் தலைமையிடத்திலிருந்து வந்திருக்கக்கூடிய மத்திய உறுப்பினர் அவர்களே, நன்றி நல்க இருக்கிற கட்சியின் பொருளர் அவர்களே, கட்சியின் ஒன்றிய செயலர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களே, கட்சிக்காக இன்னுயிரையும் கொடுக்கக் காத்திருக்கின்ற கட்சித் தொண்டர்களே, அனைவருக்கும் கட்சியின் மாவட்டச் செயலர் என்கிறவன் முறையில் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துகொள்கிறேன்.
நண்பர்களே, இது அவசரக்கூடுகை. தலைவரின் உணர்ச்சிப் பூர்வமான பொதுக்கூட்ட உரைக்குப் பிறகு கூடியிருக்கின்ற கூட்டம். நம்மையும் நம் கட்சியையும் இன்னும் அடுத்தடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல காரணமாக இருக்கிற கூட்டமும் கூட இது. நாம், நம் கட்சியை எவ்வாறு வளர்க்கிறோம் என்பதை நான் சொல்லிதான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. மாநிலத் தலைமை, மத்தியத் தலைமையுடன் நாம் கொண்டிருக்கக்கூடிய நெருக்கம் வேறெந்த மாவட்ட நிர்வாகிகளுக்கும் கிட்டிராத ஒன்று என்பதை உங்களுக்கு அறிய தருகிறேன். இது போதாது. மேலும் நம்மை நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்காக உங்களைத் தயார்படுத்தவே இந்த அவசரக் கூட்டம், கூடுகை எல்லாம்.
பத்து வருடங்களுக்கும் முன்பு, நம் மாவட்டத்தில், நம் கட்சியின் பலம் என்னவாக இருந்தது என்பது நாம் அனைவருக்கும் அறிந்ததே. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிட முடியும், அந்த அளவிலேயே இருந்தது. உங்களுக்குத் தெரியாத ஒன்றில்லை. மாவட்டச் செயற்குழு கூடினால் தலைவர், செயலர், பொருளர் இவர்களைத் தவிர யாரும் மறந்தும் கூட்டத்திற்கு வந்துவிட மாட்டார்கள். அப்படியே வந்தாலும் கட்சியோடு இணங்கியிருக்க மாட்டார்கள். இணங்கினாலும், கட்சி கொடுக்கும் வேலைகளை மனமுகந்து ஏற்றுக்கொள்ளவோ, செய்து முடிக்கவோ மாட்டார்கள். இதை நீங்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. உள்ளபடியே கட்சியின் நிலை அந்தளவிலேயே இருந்தது. ஆனால் இன்று? நம் பலம் நமக்கே வியப்பைத் தருகிறது. அந்த அளவிற்கு நம் கட்சி வளர்ந்திருக்கிறது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் கவனம் நம்மை நோக்கித் திருப்பியிருக்கிறது. தேர்தலில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக நாம் வளர்ந்திருக்கிறோம். நம்மை பிற கட்சிகள் கூட்டணிக்கு அழைப்புவிடும் அளவிற்குத் தவிர்க்க முடியாத சக்தியாக உயர்ந்து நிற்கிறோம். இத்தகைய பலம் பெற யார் காரணம், நமது கட்சியின் தலைவர்தான். அவரால்தான் நான் கட்சியின் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். நீங்கள்
பல்வேறு பொறுப்புகளுக்கு வந்திருக்கிறீர்கள். அதுமட்டுமா, உள்ளாட்சித் தேர்தலிலும், அதையடுத்து வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் ஒவ்வொருவரும் வேட்பாளராக அறிவிக்கப்படவிருக்கிறோம். அத்தேர்தலில் நம் பலத்தில் வெற்றி பெறவும் இருக்கிறோம். இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால் அமைச்சராக இருக்கிறோம்.
இதை நான் நீங்கள் கைக்கொட்டி ஆரவாரத்துடன் ஆமோதிக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. நம் பலம், நம் கட்சியின் பலம் அந்தளவுக்கு வளர்ந்தும் உயர்ந்துமிருக்கிறது என்பதைப் புரிய வைப்பதற்காகச் சொல்கிறேன். நமது கிராமத்தை, நமது தொகுதியினை, நமது மாநிலத்தை, நமது தேசத்தை ஆளும் தகுதி நம்மிடம் மட்டும்தான் இருக்கிறது என்பதை நினைவூட்டுவதற்காகச் சொல்கிறேன்.
நம் கட்சி, உலக கவனம் பெற்றிருக்கிறது என்பதை நான் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்து நாம் உலகளவில் கட்சிக்கட்ட இருக்கிறோம். அப்படியாகக் கட்டினால் உலகளவில் பெரிய கட்சி நம்முடைய கட்சிதான் என்பதை மனதில் குறித்துக்கொள்ள வேண்டுகிறேன். சர்வதேச தலைவர்கள் நம் கட்சியையும் கட்சித்தலைவரையும் தொடர்ந்து புகழ்ந்து வருகிறார்கள் என்பதை தினசரிகளில் தலைப்புச் செய்தியாகப் பார்த்து வருகிறோம். அதேநேரம் எதிர்க்கட்சிகள் நம் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் தரம் தாழ்ந்து பேசிவருகிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நம் தலைவர் நேற்றைக்கும் முந்தையத் தினம் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உணர்ச்சிப் பெருக்கெடுக்கப் பேசினார். அவரது உரை எல்லா தினசரிகளிலும் தொலைக்காட்சிகளிலும் முக்கிய செய்தியாக இடம் பிடித்தது. நம் தலைவரின் முகத்தில், இப்படியானதொரு உணர்ச்சியை இதற்கு முன்பு யாரும் பார்த்திருக்க முடியாது. அத்தனை கோபம், அத்தனை உணர்ச்சி அவரது முகத்தில். அவரது உரையை, அவரது வேண்டுகோளினை என்ன விலைக்கொடுத்தேனும் நிறைவேற்றிக் காட்டியாகவேண்டிய நிலையில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.
தலைவரின் உரையை அறியாதவரோ, அவரது மனநிலையைப் புரிந்துக்கொள்ளாதவரோ இல்லை நாம். தலைவர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார், எந்தளவு எதிர்பார்க்கிறார், என்பதைப் புரிந்துகொண்டு, அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றி, நம் கட்சியை வளர்த்தெடுத்து வருகிறோம். அவரைக் கொண்டாடிக் கொண்டாடியே கட்சியைப் பலப்படுத்தி வருகிறோம்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு தலைவர் அதுநாள் வரைக்குமில்லாமல் ஓர் அறிக்கை விட்டிருந்தார். உங்கள் அனைவருக்கும் ஞாபகம் இருக்கக்கூடும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு என்று சுற்றறிக்கை விட்டிருந்தார். இந்த வருடம் எனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாமென்று அறிக்கை விட்டிருந்தார். நாம் என்ன செய்தோம், அதுநாள் வரைக்கும் அவரது பிறந்த நாளினைக் கண்டுகொள்ளாது இருந்த நாம், அந்த வருடம் நமது மாவட்டமே குலுங்குமளவிற்கு ஜாம்,ஜாம்மென பிறந்தநாளைக் கொண்டாடி முடித்தோம்.
அவரது வயதினைக் குறிக்கும் விதமாக, கிலோ கணக்கில் கேக் வாங்கி, கட்சி அலுவலகத்தில் வைத்து ஒரு நாள் முழுமைக்கும் வெட்டு, வெட்டென வெட்டினோம். அதை நம்மால் மறக்க முடியுமா? கட்சிப் பத்திரிக்கை, வெகுஜனப் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள்
என்று அப்பிறந்தநாள் கொண்டாட்டம் முக்கிய செய்தியாக இடம் பிடித்தது. இதைப் பார்த்த நம் தலைவர் கட்சியின் தலைமையிடத்திற்கு அழைப்பு விடுத்தார். மாவட்ட எல்லையைத் தாண்டி வேறெங்கும் சென்றிடாத நாம், முதன்முறையாக விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அவரது பிறந்த நாளை மிகப்பெரிய அளவில் கொண்டாடியதற்காகக் கிடைத்த பரிசுதான், நான் மாவட்டச் செயலர், அண்ணனுக்குத் தலைவர் பதவி. தம்பிக்குப் பொருளர் பதவி.
என் பிறந்த நாளை கட்சித் தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம், என்கிற அவரது வேண்டுகோள் சுற்றறிக்கையைச் சட்டைச்செய்யாமல் அவரது மனக்கண் ஆசையை நிறைவேற்றும் விதமாகக் கொண்டாடியதால்தான் நமக்கு இத்தகையப் பதவிகள் கிடைத்தன என்பதை உங்களின் பலத்த கைத்தட்டலுக்கிடையில், தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நண்பர்களே, இந்நேரத்தில் இன்னொன்றையும் நினைவுகூர்கிறேன். தலைவர் நம்முடைய மாவட்டத்திற்கு வருகைத் தந்தார். மாநில மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு அவர் சுற்றறிக்கை விட்டிருந்தார். என்ன விட்டிருந்தார், எவ்வளவு எளிமையாக எனக்கு வரவேற்பு முடியுமோ அந்தளவு கொடுங்கள், என்று. தலைவரின் விருப்பம் என்ன அதுவா, அவரது ஆசைகளை நாம் அறியாதவர்களா? நாம் என்ன செய்தோம், ஒரு நாள் அவசரமாக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தினைக் கூட்டி, தீர்க்கமான முடிவொன்றை எடுத்தோம். இதே இடத்தில் நின்று நான், தலைவர் அனுப்பியச் சுற்றறிக்கையை வாசித்தேன். தலைவரின் வருகையை எப்படியெல்லாம் கொண்டாடலாமென உங்களிடம் கருத்துகள் கேட்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கருத்து சொல்லியிருந்தீர்கள். உங்கள் கருத்துகள் அத்தனையையும் உள்வாங்கி அவர் விட்டிருந்த சுற்றறிக்கையை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு, அவரது உள்மன ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவரது வருகையை அமர்களப்படுத்தினோம்.
மாவட்ட முழுவதும் பதாகை வைத்தோம். கேரளத்து செண்டை மேளம். வானவேடிக்கை, பறை என்ன, கரகம் என்ன, புரவி ஆட்டமென்ன. பணத்தை நாம் பணமாகவாப் பார்த்தோம். தண்ணீராக அல்லவா வாறி இறைத்தோம். விமான நிலையத்திலிருந்து கட்சி அலுவலகம் வரைக்கும் சிவப்பு கம்பளம் வரவேற்புக் கொடுத்தோம். ஆயிரம் பெண்களை இருபுறமும் நிறுத்தி, ஆலத்தி எடுக்க வைத்தோம். யானையால் மாலை அணிவித்தோம். நான் கூட பணமாலை அணிவித்தேன். நம் மாவட்டத் தலைவர் ஒரு படி மேலேபோய் இரண்டாயிரம் ரூபாயினலான மாலை அணிவித்தார். அவர் கேட்டுக்கொண்டது எளிமையான வரவேற்பு. ஆனால், நாம் செய்தது, மாவட்டமே குலுங்கும்படியான கொண்டாட்டம். இதனால் என்ன பயனென்று கேட்பீர்கள். நம் கட்சி வளர்ந்தது. நம் தலைவர் வளர்ந்தார். நாம் வளர்ந்தோம். நம் குடும்பங்கள் வளர்ந்தன. எப்படி வளர்ந்தன? தேர்தல் கட்சி செலவுக்கான நிதி நம் கைக்கு வந்தது. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம், யார் யாருக்கெல்லாம் சீட் கொடுக்கலாம், யார்க்கு எந்தத் தொகுதியை ஒதுக்கலாம், எங்கெங்கே, யாரையெல்லாம் வைத்து கட்சிக்கூட்டம் நடத்தலாம். பரப்புரைக்கு யாரையெல்லாம் அழைக்கலாம் என்கிற முடிவு எடுக்கிற வாய்ப்பு நமக்குக் கிடைத்தது.
அதுமட்டுமா, வருகிற உட்கட்சித் தேர்தலில் மாநில பொறுப்பாளர்கள் தேர்வு பட்டியலில் நான் உட்பட பலரும் இருப்பதற்கானக் காரணம், அந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம்தான். மற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் இன்னும் அதே
நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் நாம், நம் எதிர்பார்பையும் மீறி வளர்ந்து, உயர்ந்து நிற்கிறோம். இன்னும் நாம் வளர்வதற்கு, நம் தலைவர் இன்னொரு வாய்ப்பினைத் தந்திருக்கிறார். அதை உங்களின் பலத்தக் கைத்தட்டலுக்கிடையில் விளக்க விரும்புகிறேன்.
நேற்றைக்கும் முந்தைய தினம், நம் தலைவர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் உணர்ச்சிப் பூரிக்க உரையாற்றியிருக்கிறார். கோபம் கொப்பளிக்க, கண்களில் தனல் தெறிக்க, நாசி விடைக்க வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார். அவரது பேச்சில் கெஞ்சல் இருந்ததைக் கவனித்திருப்பீர்கள். அவரது பேச்சு வழக்கமானப் பேச்சாக இருந்திருக்கவில்லை. கட்சியின் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
தொண்டர்களே, இவ்வளவு நாட்கள் நம் தலைவர் விடும் ஒவ்வொரு அறிக்கையையும் உள்வாங்கி, அவர் மனம் மகிழும்படியாக நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். அதைப்போல இந்த வேண்டுகோளையும் நாம் நிறைவேற்றிக் கொடுத்தாக வேண்டும். நான் பேசி முடித்ததன் பிறகு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவராக எழுந்து, எப்படியெல்லாம் தலைவரின் வேண்டுகோளை நிறைவேற்றலாம் என்பதை அவரவர் கோணத்தில் கருத்துகள் தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். யாரும், யாருக்காகவும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டியதில்லை. கருத்து தெரிவிக்க இயலாது என்றோ, முடியாது என்றோ தட்டிக்கழிக்க வேண்டியதில்லை. அப்படியாகத் தட்டிக்கழிப்பது, நமக்கும், நம் கட்சிக்கும் உகந்ததாக இருக்காது. நமக்கு நம் தேசம் முக்கியம். தேசத்தை விடவும் கட்சியும், பதவியும் முக்கியம்.
தலைவர் பத்திரிக்கையாளர் மாநாட்டில் என்ன பேசினார் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். நீங்கள் பத்திரிக்கைகளில் படித்ததுதான். தொலைக்காட்சிகளில் கேட்டதுதான். அவர் கட்சித்தொண்டர்களை, கட்சி நிர்வாகிகளை, தேச நலவிரும்பிகளை, அபிமானிகளைப் பார்த்துக்கேட்டுக்கொண்டார். ஒரு முறை அல்ல. ஒரு முறைக்கு மூன்று முறை, கும்பிட்டு மன்றாடி, கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். “ நமது கட்சி வேகமாக வளர வேண்டுமென்றால், நமது தேசம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும், இருக்க வேண்டும், இருக்க வேண்டும்” என்று.
எதையெல்லாமோ நிறைவேற்ற முடிந்த நம்மால், இந்த விருப்பத்தை நிறைவேற்ற முடியாதா என்ன? தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். அதற்குத் தலைமையேற்கும் இடத்தில் நானிருக்கிறேன். ஆகவே, கட்சி அபிமானிகளாகிய நீங்கள், ஒவ்வொருவராக எழுந்து, உங்களால் முடியும்படியான கருத்துகளை நல்க வேண்டுமாய் கூறிக்கொண்டு, வாய்ப்பிற்கு நன்றி பாராட்டி அமர்கிறேன். நன்றி வணக்கம்!
அய்யா வணக்கம், நீங்க யாரையோ குறிப்பிட்டு நல்லா தெளிவாக விளக்க உரை கொடுத்து உள்ளீர்கள்
You
பிரச்சார பீரங்கி சிறுகதை எப்படி பதவியை அடைகிறார்கள் மற்றும் எப்படி மலிவான அரசியல் செய்கிறார்கள் என்று நகைச்சுவையாக கூறுகிறது.ஆனால் பணநஆயகம் எப்படி ஜனநாயக எண்ணங்களை வீழ்த்துகிறது என்றும் தனிநபர் துதி, ஆடம்பர அரசியல், போலி பிம்பங்கள் என அனைத்தையும் தோலுரிக்கும்.அருமை.இப்படிப்பட்ட அரசியல் சூழலில்தான் நாம் அறிவியல் கருத்துக்களையும் ஜனநாயக கருத்துக்களையும் மக்களுக்கான மாற்று அரசியலை முன்னெடுக்க போராடி வருகிறோம்.
புதுகை கண்ணம்மா
பிரச்சாரப் பீரங்கி சிறுகதை
Excellent satire
புத்த அகம் முத்துப்பாண்டி
புதுக்கோட்டை