….”ம்” …. சிறுகதை – 48 …. அண்டனூர் சுரா.
“ வணக்கங்கய்யா……… ”
“… ம்…ம் ”
சுந்தரி சொன்ன வணக்கத்திற்கு அதிகாரி நீலகண்டர் சொன்ன ‘ ம்….ம்….’ சுந்தரியின் செவிப்பறைக்குள் எண்ணும்மையாக ஒலித்தது. ஒலிக்க மட்டுமா செய்தது, சுயமரியாதையை ‘டர்…..’ என்று ஒரு கிழி கிழிக்கவும் செய்தது.
‘எண்ணும்மை’ சுந்தரி பள்ளியில் படித்த காலத்தில் பிடித்த இலக்கணமாக இருந்ததோ இல்லையோ அவளுக்குப் புரிந்த இலக்கணம் அது. பகுபத உறுப்பிலக்கணம், வியங்கோள் வினைமுற்று, ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம், வினையெச்சம்,…போன்ற இலக்கணங்கள் பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பொதுத்தேர்வு எழுதிய அடுத்த வினாடியே மறந்துபோக ‘எண்ணும்மை’ மூளையின் தாழ்வாரத்தில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது.
வயலு‘ம்’ வாழ்வு‘ம்’ , அல்லு‘ம்’ பகலு‘ம்’ , வெற்றியு‘ம்’ தோல்வியு‘ம்‘…..இப்படியாக இரண்டு முறை ‘ம்’ வந்தால் அதற்கு எண்ணும்மை என்று பெயர். “என்னங்கடி, நான் நடத்துறது புரியுதா?” கேட்டிருந்தார் தமிழாசிரியர் விஜயலெட்சுமி.
“ புரிகிறது அம்மா”
“ என்னங்கடி புரியுது?”
“ இரண்டு முறை ‘ம்’ வந்தால் எண்ணும்மை.” சுந்தரி இதைச் சொன்னதும் தமிழாசிரியர் விஜயலெட்சுமி அவளது கையைப் பிடித்து குலுக்குக் குலுக்கென குலுக்கியெடுத்துவிட்டார். இதுபோதாதென்று மாணவிகளின் பலத்த கைதட்டல் வேறு. அவளது மனதிற்குள் இரண்டாம் வேற்றுமைத்தொகை ‘ஐ’ ஏறி உட்கார்ந்துகொண்டது. இதற்கும் பிறகும் எண்ணும்மை மறந்துபோக அவள் என்ன பிரணவ மந்திரத்தை மறந்த பிரம்மனா?
எண்ணும்மையும் முற்றும்மையும் ஒரு கரு இரட்டையர்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய தமிழ் இலக்கணங்கள். ஒரு ‘ம்’ வந்தால் முற்றுமை. உதாரணம் வணக்கம். இரண்டு முறை ‘ம்’ வந்தால் எண்ணுமை. நீயும் நானும், அவளும் இவனும், வயலும் வாழ்வும் இப்படி.
“வணக்கம்”
தமிழ்ச்சொற்களில் மரியாதைக்குரிய சொல் அது. என்னதான் குட் மார்னிங், ஈவினிங், நைட்…என்று சொன்னாலும் ‘வணக்கம்’ என்கிற சொல்லிருக்கிற உயிரும் பசையும் மற்ற மொழிகளில் வருமா என்ன?
‘வணக்கம் முக்கிய செய்திகள்’ அகில இந்திய வானொலியில் உங்கள் நமது தொலைக்காட்சி செய்திகளில் சொல்லிக் கேட்கும்போது சொல்கிறவர்கள் மீது எவ்வளவு மரியாதை வருகிறது. அந்த வணக்கம் என்கிற சொல்லுடன் அய்யா என்கிற பிரதிப் பெயர்ச்சொல்லையும் சேர்த்து அழகாக, பவ்வியமாக ஒரு கடைநிலை ஊழியருக்கு இருந்தாக வேண்டிய பணிவுடன் சொல்லிருந்தாள் சுந்தரி.
“ வணக்கம் அய்யா”
நீலகண்டர் அவளுக்குப் பதில் ‘வணக்கம்’ வைத்திருக்க வேண்டும். அதையும் சிரித்து சொல்லிருக்க வேண்டும் அது என்னதாம் “….ம்…ம்…” யாசகனுக்குப் பிச்சைப் போடுவதைப் போல. அவளுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது. பெருமூச்சு தொண்டையை அடைத்து ‘ ஃ ’ என்றது.
இப்பொழுது வெள்ளைக்காரன் ஆட்சி இல்லையே என்று கலங்கினாள். அவர்கள் இருந்திருந்தால் ‘…ம்’ சொல்லியிருக்க முடியுமா? துரைமார்கள் விட்டிருப்பார்களா? ‘ம்’ என்றால் சிறைவாசம் என்கிற சட்டத்தின் கீழ்
கைது செய்து அந்தமான் சிறையில் செக்கு இழுக்க வைத்திருப்பார்கள்.
சுந்தரி அந்த அலுவலகத்தில் துப்புரவு ஊழியர். தொகுப்பு ஊதியம். மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய். முதலில் அலுவலகத்திற்கு வருவது அவள்தான். ஒரு கூடை அதற்குள் ஒரு தூர்வை. கைவீசம்மா, கைவீசு….என்று நடந்து வருபவள். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் அத்தனையும் தூரிகையால் செய்து முடிப்பவள்.
மக்கும் குப்பை, மக்காக் குப்பை என்று பிரிப்பதில் தொடங்கிக் கீழே கிடக்கும் தபால்களையெடுத்து மேசையின் மீது வைப்பது வரை அவள் வேலை காலையிலேயே தொடங்கிவிடும். அதுமட்டுமா ஒட்டடை அடிப்பது, கழிப்பறைத் தொட்டியைத் தண்ணீரால் நிரப்புவது, அலுவலர்களுக்குத் தேநீர் வாங்கிவந்து கொடுப்பது, அதிகாரிகள் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி அடுக்கிவைப்பது என அம்மாடி இவ்ளோ வேலை ஓடியாடி செய்றீயே, கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ள கூடாதா, என்று பார்க்கிறவர்கள் இரக்கப்படுமளவிற்கு வேலைகளை வரிந்துகட்டிக்கொண்டு செய்து முடிக்கும் இயந்திரப் பெண் அவள்.
நீலகண்டர் அறையில் மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது. பழைய காலத்து மின்விசிறி. ‘கிரீச், கிரீச்’ என்று இரட்டைக் கிளவியில் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. இடையிடையே ஆந்தையின் முனங்கலைப் போல ‘…ம், ..ம்’ சத்தம் வேறு.
‘ம்…’ சத்தத்தைக் கேட்கையில் அவளால் கூட்டிப் பெருக்க முடியவில்லை. மனதிற்குள் ஓர் அசூசை. தாழ்வு மனப்பான்மையும் அவமானமும் கலந்த உணர்வு அவளை இறுக்கியது. முழங்கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்தவள் அறைகளைச் சுற்றும்முற்றும் பார்த்தாள். சுவரில் இந்திய தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. புகைப்படத்திற்குப் பின்னால் சிட்டுக்குருவிகள், சிலந்தி, கறையான்கள் இல்லறமே நல்லறமென குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன. ஒரு புகைப்படத்திற்கும் கீழே உண்மையும் உழைப்பும் தனி மனிதனின் அடையாளம் என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது. உண்மையும் உழைப்பும் என்பதைப் படிக்கையில் மறுபடியும் அவளுக்குள் ‘…ம்,…ம்’ எண்ணும்மை மண்டைக்குள் ஏறி உட்கார்ந்துகொண்டு மலைபடுகடாம் வாசித்தது. அவளால் அதற்கு மேல் கூட்டிப் பெருக்க முடியவில்லை. மாவு பிசைவதைப் போல மனதிற்குள் ஒருவிதமான பிசைவு.
சுந்தரிக்கு ஐயவினா எழுந்தது. நீலகண்டர் நான் வைக்கும் வணக்கத்திற்கு மட்டும்தான் ‘..ம்…ம் ’ சொல்கிறாரா, இல்லை இந்த அலுவலகத்தில் பணியாற்றும் எல்லா அலுவலருக்கும் அந்தப் புளித்துப்போன மரியாதைதானா, இதைப் பார்த்துவிட முனைந்தாள். முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு அதையும் பார்த்துவிட இறங்கினாள்.
நீலகண்டர் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு கால்களை மெல்ல ஆட்டிக்கொண்டு கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். சித்ரா அலுவலகத்திற்குள் நுழைந்தார். உச்சிவகிட்டில் பெரிய குங்குமப்பொட்டு வைத்திருந்தார். அ1 எழுத்தர் அவர். அவர் தலைமை அறைக்குள் நுழைந்து அதிகாரி நீலகண்டரைப் பார்த்து சொன்னார். ‘‘வணக்கம் ஐயா”
நீலகண்டர் கோப்பிலிருந்து பார்வையை எடுத்து நிமிர்ந்து பார்த்தார். உயிர்நெடில் அளவிற்கு உதட்டைச் சுழித்து, “வணக்கம் சித்ரா” என்றார். சித்ராவுக்கு அவர் வைத்த வணக்கம் சுந்தரியின் மண்டைக்குள் ‘கிண்ண்’ என்றிருந்தது.
“ ஐயா எப்படி இருக்கீங்க. வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“ ஒரு கவலையுமில்ல. எல்லாரும் நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க. உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்?”
“ நல்லா இருக்கார் ஐயா’’
சித்ரா விடைபெற்றுக் கொண்டார். அடுத்து ரகுராமன். அவர் அ2 எழுத்தர். அவர் பின்புற முடியை சீப்பால்
ஒடுக்கிக்கொண்டு முன் வழுக்கையைக் கைக்குட்டையால் துடைத்தவாறு நீலகண்டர் அறைக்குள் நுழைந்து, “வணக்கங்கய்யா” என்றார்.
“ வணக்கம் ரகுராமன்”
நீலகண்டரின் தலை அதற்கும்மேல் நிமிரவில்லை. ஒற்றைச்சுழி எழுத்தைப் போலக் குனிந்துகொண்டது.
“ அய்யா நாளைக்கு ஒரு நாள் விடுப்பு வேணும்”
“ ஏன் ரகுராமன்?”
“ பையன் வெளிநாடு போறான். வழியனுப்பி வைக்கணும்.”
உயர் அதிகாரிகளுக்கென்று ஒரு முகமிருக்கிறது. அந்த முகத்தைக் காட்டியவாறு சொன்னார்.
“உங்க விடுப்பை நீங்க எடுக்குறீங்க. எடுத்துக்கிருங்க.”
“ நன்றிங்க அய்யா….” என்றவாறு ரகுராமன் விடைபெற்றார்.
சுந்தரிக்கு அழுகை வந்தது. நான் போனவாரம் ஒரு நாள் விடுப்பு கேட்டேன். இப்படி அனுசரணையாக பதில் சொல்லவில்லையே. ஒரு நாள் விடுப்புக் கொடுக்க எத்தனை கேள்விகள் கேட்டார். அவ்வளவு கேள்விகளையும் கேட்டு கடைசியில் குற்றியலுகரத்தில் பதில் சொன்னார் ‘கிடையாது’ என்று. அதை நினைக்க அவளது மனதிற்குள் கண்ணகி வைத்த மதுரைத்தீ தகதவென்று எரிந்தது.
அடுத்ததாக உதவி அதிகாரி கிருஷ்ணன் வந்தார். அவர் வரும்பொழுதே அலைபேசியில் உள்ளூர் அரசியல் பேசிக்கொண்டு வந்தார். அறைக்குள் நுழைந்ததும் அலைபேசியை அணைத்து தலைமை நீலகண்டர் முன்பு பவ்வியமாக நின்று “வணக்கங்கய்யா” என்றார்.
“ வணக்கம் கிருஷ்ணன்”
மணிரத்தினம் திரைப்பட வசனம் அளவிற்கு அந்த உரையாடல் இருந்தது. அவ்வளவேதான்! கிருஷ்ணன் அதற்கும் மேல் அந்த இடத்தில் நிற்கவில்லை. அவரது இடத்திற்குச் சென்று ஒவ்வொரு அலுவலரையும் பெயர்சொல்லி அழைத்து வணக்கம் வைத்தார். “சித்ராம்மா வணக்கம்”
“ வணக்கங்கண்ணா”
“ ரகுராமன் அய்யா வணக்கம்”
“ வணக்கமய்யா ”
“…….”
“ சுந்தரி…..”
தனக்கும் அப்படியான வணக்கம் கிடைக்கப்போகிறது என்கிற ஆசையுடன் வேகமாகத் திரும்பினாள்.
“நேத்தைக்கு என் அறையைப் பெருக்கியது யாரு?” பாம்பு தலையைத் தூக்கி கேட்பதைப் போல அதைக் கேட்டிருந்தார். அவள் வணக்கம் எதிர்பார்த்து அது கிடைக்காத ஏமாற்றத்தில் நின்றாள். எல்லோருக்கும் வைத்த வணக்கம் எனக்கேன் இல்லாமல் போனது. யோசனை அவளை அரித்தது.
“ சுந்தரி உன்னைத்தான் கேட்கேன்??”
சுந்தரி திடுக்கிட்டவளாய் இயல்பு நிலைக்கு வந்தாள்.
“ நான்தான்க..”
“ இந்த அறையைக் கூட்டுறப்ப கீழே மஞ்சளுறை எதுவும் கிடந்ததா?”
“ இல்லைங்களே ஐயா”
“ எதற்கும் இனி பார்த்துக் கூட்டு ”
அவரது கட்டளை வாக்கியம் எனது முகத்தில் ‘சப்’ என்று அறைந்தது. பதிலுக்கு அவள் வியங்கோள் வினைமுற்றில் பதில் சொன்னாள், “ சரிங்க.”
கிருஷ்ணன் அவருடைய மேசைக்குச் சென்று தினக்காட்டி ஏட்டைக் கிழித்து மேசைக்கும் கீழிருந்த
குப்பைத் தொட்டிக்குள் எறிந்தார். தன் கைக்குட்டையால் நாற்காலியைத் துடைத்து கோப்புகளை அடுக்கினார்.
“ அய்யா…..” என்றவாறு அவரது அறைக்குள் நுழைந்தாள் சுந்தரி.
“ ம்” என்றவாறு கிருஷ்ணன் மெல்ல நிமிர்ந்தார்.
“ வணக்கம் ”
“ ம், ம்.”
அலுவலகக் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கும் எனக்கும் இந்த வணக்கத்திற்கும் ரொம்ப தூரமோ? மனம் சமாதானமடையாமல் மயக்கத்தில் கிறங்கியது. வணக்கத்தின் மீதான ஏக்கம் அவளை வதைத்தது. அவள் மீது யாரோ ஏறி உட்கார்ந்துக்கொண்டு கைக்கொட்டி கேலியாகச் சிரிப்பதைப் போல உணர்ந்தாள்.
“வ,ண,க்,க,ம்…..” இந்த ஐந்து எழுத்து மரியாதைக்குக் கிடைக்கும் பதில் மரியாதையைப் பாருங்கள். ‘ம்…ம்..’ அதுவும் நான் உச்சரித்ததிலிருந்து கடைசி எழுத்தை உருவி பிச்சையாக போடுவதைப் போல. கறையான் அரிப்பதை விடவும் சுயமரியாதை அவளை அரித்தது.
இந்த அலுவலகத்தில் எல்லாரையும் போல நானும் ஓர் ஊழியர்தானே. கடைநிலை ஊழியராக இருந்திட்டுப் போகிறேன். வணக்கம் சொன்னால் பதிலுக்கு வணக்கம்தானே சொல்ல வேண்டும். அது என்னதாம் ‘ம்…ம்..?’ அவளுக்குள் எழுந்த கேள்வி பூதாகரமாக எழுந்து தலைக்குள் புகைமூட்டம் கட்டியது. சேலையின் முந்தானையை எடுத்து விட்டுக்கொண்டாள். முகத்தைக் கழுவி முகப்பூச்சு பூசிக்கொண்டாள். கணுக்காலுக்கும் மேல் தூக்கிக் கட்டியிருந்த சேலையை இறக்கிவிட்டுக்கொண்டு நீலகண்டர் முன்னே ‘ஒன்று’ போல நிமிர்ந்து நின்றாள்.
“ அய்யா வணக்கம்” கும்பிட்டுப் பழகிய அவளது கைகள் சக ஊழியர்களைப் போலக் கையை நீட்டி மடக்கி நெற்றியில் வைத்தபடி இதைச் சொன்னாள்.
நீலகண்டர் அவளை நிமிர்ந்து பார்த்து மெதுவாக உதட்டைச் சுழித்தார். அவ்வளவேதான்!
அவள் விடுவதாக இல்லை. இன்னும் சற்றே நிமிர்ந்து விடைத்து நின்றவளாய் சொன்னாள், “ அய்யா வணக்கம்.”
நீலகண்டர் பார்த்துக்கொண்டிருந்த கோப்புகளை மூடினார். மேசையிலிருந்த எடைகல்லைச் சுற்றிவிட்டவராய் “என்ன சுந்தரி என்றைக்குமில்லாம சும்மா சும்மா வணக்கம் சொல்றே. செலவுக்குப் பணமெதுவும் வேணுமா?” என்று கேட்டார்.
“ அதெல்லாம் இல்லைங்கய்யா”
“ நாளைக்கு விடுப்பு வேணுமா?”
“ வேண்டாங்கய்யா”
“ பின்னே?”
“ வணக்கங்கய்யா”
“ …ம்…ம்…”
கயிறு அறுந்த வாளி ‘தொபுக்’கென்று கிணற்றுக்குள் விழுவதைப் போல விழுந்தாள். இதை அவள் இத்தோடு விடுவதாக இல்லை. இந்த ‘ம்’ வாங்குவதற்காகத்தான் நான் தினம்தினம் அவருக்கு வழியவந்து வணக்கம் சொல்கிறேனா? மாட்டேன். இதை நான் இத்துடன் விடப்போவதில்லை. கால்களால் நடந்தவள் தலையால் நடக்கலானாள். என்ன செய்யலாமென்று யோசித்தாள். அவளது மூளை பலவாறு சுரந்தது. அவளது கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டது. அவளுக்கு அவளே கைக்குலுக்கிக்கொண்டாள். ஓர் அறைக்குள் ஓடி ஒரு துண்டுச்சீட்டை எடுத்தாள். அவளுக்குத் தோன்றியதை ஆங்கிலத்தில் எழுதி தலைமை அலுவலர் நீலகண்டனிடம் நீட்டினாள்.
“ அய்யா, இதிலே என்ன எழுதியிருக்கிறதென வாசித்துச் சொல்ல முடியுங்களா?”
அவர் பார்த்துக்கொண்டிருந்த கோப்புகளிலிருந்து பார்வையையெடுத்து சுந்தரி கையில் வைத்திருந்த துண்டுகாகிதத்தை வாங்கி ஒரு முறை மனதிற்குள் வாசித்து அவளுக்குக் கேட்கும்படியாக படித்தார். “வணக்கம் சுந்தரி.”
அதைக் கேட்க அவளுக்கு இதமாக இருந்தது. மனதிற்குள் அளபெடையில் சிரித்தாள்.
“ என்னங்கய்யா?” உரக்கக் கேட்டாள்.
“ வணக்கம் சுந்தரி”
அவளுக்குள் துப்பாய தூஉம் மழை பெய்யத் தொடங்கியது.
அருமையான யோசனை. நல்ல கதை. நான் அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது சுத்தம் செய்பவருக்கு வணக்கம் செய்திருக்கிறேனா என்று யோசித்தேன். அவருக்காக நானே ஒவ்வொரு மேசையிலும் போய்க் காசு கேட்டு வாங்கிக் கொடுத்தது நினைவு வந்தது. பதில் வணக்கம் சொன்னதுடன் அவருக்காகக் கிட்டத்தட்டப் பிச்சை வாங்கியிருக்கேன் என்பது நிறைவைத் தந்தது.
அருமையான சிறுகதை.கடைநிலை ஊழியர் ஒருவர் தனது சுயமரியாதையை நிலைநாட்ட நினைப்பது மிகவும் நியாயமான சிந்தனை.அவரது சிந்தனையை சித்தரிக்கும் வகையில் தமிழ் இலக்கணம் மிகவும் எளிதாக புரியும் வண்ணம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் அண்டனஊர் சுராவிற்கு வாழ்த்துக்கள்.கடைநிலை ஊழியர் அதிலும் பெண்தானே என்று அலட்சியமாக வணக்கத்தை ஏற்றுக் கொண்டதாக “ம்” போடும் அந்த அதிகாரி போன்ற நபர்களை நானும் பல முறை எதிர் கொள்ள நேர்ந்துள்ளது.அந்த நேரத்தில் ஏற்படும் மனப்பஓரஆட்டத்தஐ மிகச் சிறப்பாக கதையில் பதிவு செய்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.உங்களிடம் மாணவியாக தமிழ் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று வருந்துகிறேன்.அருமை! வாழ்த்துக்கள்!
மிகவும் அருமை. வணக்கம் சொல்லுதல் என்பது உயர் பதவியில் உள்ளவர்களுக்கு அவருக்கு கீழே பணி புரியும் மற்றவர்கள் சொல்ல வேண்டிய ஒன்று என பெரும்பாலானோரின் பொது புத்தியில் பதிந்துள்ளது .வணக்கம் சொல்லுதல் என்பது ஒரு பண்பாடு. நாகரீகத்தின் வெளிப்பாடு. அதை சக மனிதர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொள்வதே சிறப்பு. இதில் உயர்வு தாழ்வு பேதம் பார்க்கத் தேவையில்லை.ஆனால் கற்றறிந்தவர்களே இதை உணராமல் இருப்பது வருத்தத்திற்குரியது. ஒரு சுயமரியாதை சார்ந்த கருத்தாகத்தை தமிழ் இலக்கணத்தின் ஊடே வெளிப்படுத்திய ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் .