கட்டுரைகள்

பலூச் மக்கள் மீது பாகிஸ்தான் அடக்குமுறை : சர்வதேசமயமாகும் பலூசிஸ்தான் போராட்டம் : – ஐங்கரன் விக்கினேஸ்வரா

பாகிஸ்தானில் பலூச் மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி தேரா காஜி கான் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்த வாரத்தில் (டிசம்பர் 17-19)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் மாகாணமாக உள்ள பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாகிஸ்தான் நாடு ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமலும் இருந்து வருகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டுக்கு மற்றொரு நெருக்கடியாக இனப்படுகொலை செய்யப்படுவதாகக் கூறி, பலூச் மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பலூசிஸ்தான் தனிநாட்டு கோரிக்கை :

1947ல் பாகிஸ்தான் மத அடிப்படையில் இந்தியாவை பிரிந்து ஒரு தனி நாடாக உருவானது. ஆனால் உண்மையில் அது வங்காளம், பஞ்சாப், சிந்தி, பலூச்சி, பக்தூன் என ஐந்து தேசிய தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. மொழி அடிப்படையில் கிழக்கு வங்காளம் போராடி 1971ல் வங்காள தேசமாக மலர்ந்தது.

இராணுவ ஆட்சி, மக்களாட்சி என எதுவாயிருந்தாலும் பாகிஸ்தானில் கோலோச்சுவது பஞ்சாபி முஸ்லீம்களும் சிந்தி முஸ்லீம்களுமே. இவர்கள் பலூச்சிகளையும் பக்தூனியர்களையும் (பத்தானியர்கள்) நீண்ட காலமாக ஒடுக்கி வருகின்றனர். அதனை எதிர்த்துப் பாகிஸ்தானில் அவ்விரு இனங்களும் விடுதலை கோரிப் போராடி வருகின்றன.

பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்கள் போராட்டங்கள் அப்பகுதியில் மட்டுமல்லாமல் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன.

பலூசிஸ்தான் வரலாறு :

பிரிட்டீஷிடம் இருந்து 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி பலூசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெற்றது. இதையடுத்த 1947, டிச.16-ஆம் தேதி அப்பகுதியை பாகிஸ்தானுடன் இணைப்பது தொடர்பாக பொது மற்றும் மேல்சபை ஆகியவற்றில் தீர்மானம் முன்மொழியப் பட்டது.

ஆனால், இதனை இரு சபைகளும் நிராகரித்தன. இந்நிலையில், பலூசிஸ்தான் மீது பாகிஸ்தான் படையெடுப்பு நடத்தியது. காலத் பகுதி கான் மற்றும் அவரது குடும்பத்தினரை சிறை வைத்தது. அப்பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது. எனவே 1948-ஆம் ஆண்டு முதல் அப்பகுதி பாகிஸ்தானின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

தற்போதய நிலவரம்:

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசுகடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் பலூச் போராளிகள் பலர் காணாமல் போவதாகவும், அரசே பயங்கரவாத அமைப்பு போல தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் பலூச் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பலூசிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பலூச் ஒற்றுமைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பலூச் மக்கள் கடத்தப்படுவது, கொல்லப்படுவது, போலி விசாரணைகள் மூலம் கொலை செய்வது என பலூச் இனப்படுகொலையில் பாகிஸ்தான் அரசு ஈடுபடுவதாகவும், இதனை பலூச் தேசம் ஒருபோதும் ஏற்காது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பலரும் தங்கள் கைகளில் காணாமல் போன தங்கள் குடும்பத்தவர்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பலூச் ஒற்றுமை ஆட்சிக் கவுன்சில் உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

தேரா காஜிகானில் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆனால், இதில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கில் போலீசார் நகரின் நான்கு வழிகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் மக்களுக்கு தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அந்த கவுன்சலின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை உத்தரவு அடக்குமுறை:

இதனிடையே, தேரா காஜி கானில் டிசம்பர் 19ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்திருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். பலூச் மக்களை கொல்வதை பாகிஸ்தான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அரச பயங்கரவாதம் தொடருவதை அனுமதிக்க முடியாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவிற்கும் தலைவலி ?

பாகிஸ்தானில் பலூச் மக்களின் எதிர்ப்பு போராட்டங்களை கண்டு பாகிஸ்தான் இராணுவம் அச்சதில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சீனாவிற்கும் தலைவலி அதிகரித்துள்ளது. ஏனென்றால், சீனா பலூசிஸ்தானில் லட்சக்கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த பகுதி சீன புறநகராக மாறி உள்ளது என்றே கூறலாம். இந்த பிராந்தியத்தில் இயற்கை வளங்கள் நிறைந்திருக்கின்றன, இங்கிருந்து தாதுக்களை பிரித்தெடுத்து,  பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை வளமாக்கி வருகின்றனர். இதனால், பலூச் மக்கள் நெடுங்காலமாகவே பாகிஸ்தான் அரசை எதிர்த்து வருகின்றனர்.

சீனாவிற்கு நிலங்களை தாரை வார்க்கும் பாகிஸ்தான் அரசின் செயலை எதிர்க்கும் பலூசிஸ்தானில் உள்ள மக்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ கடத்தப்படுகின்றனர்.   பின்னர் அவர்களின் சடலங்கள் தான் கிடைக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆயினும்பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போராளிகள் பாகிஸ்தான் இராணுவத்தை தாக்கி பதிலடி கொடுத்து வருகின்றனர் என்றும் அறியப்படுகிறது.

பலூச்சிஸ்தான் விடுதலையை கோரும் ‘பலூசிஸ்தான் விடுதலை இராணுவம்’ எப்போதும் சீனா -பாகிஸ்தான் பொருளாதார திட்டமான CPEC  திட்டதை எதிர்த்து வருகிறது.

சீனாவின் நட்புக்கரம் :

இப்போது பாகிஸ்தானிற்கு பலூச்சிஸ்தான் பாரிய  பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாகப் பிரிக்கக் கோரும் இவர்களின் போராட்டத்தை நசுக்குவதில், சீனாவும் நட்புக்கரம் நீட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

பலூசிஸ்தானின் மோதல்களைத் தீர்க்க அரசியல் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழி என்றும், பலூசிஸ்தானின் முக்கிய பிரச்சினைகள் அரசியல் மற்றும் பொருளாதாரம், பரஸ்பர புரிதல், சமரசம் மற்றும் பலூச்சின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பொய்யான வாக்குறுதிகள் நிலைமையை மேலும் மோசமாக்கும். பாகிஸ்தான் அரசு ஸ்திரத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் விரும்பினால் மக்களின் கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

– ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.