சுனாமியில் அழிந்த இரு தேசங்களின் சுதந்திர கனவு ! – ஐங்கரன் விக்கினேஸ்வரா
இயேசு பாலன் பிறப்பை தேவாலையங்கள் எங்கும் மங்களம் பொங்கும் நிகழ்வுகள், பூஜைகள் நடந்து கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்த நேரம். அந்த நேரம் தான் இந்தனோசியா கடலடியில் ஏற்பட்ட பூமித் தட்டுக்களின் உரசல் பூமிப்பந்தையே உலுக்கி இந்து மகா சமுத்திர நீரையே விழுங்கிக் கொள்கிறது.
அதிகாலை 2004.12.26 அன்று ஈழத்து நேரம் அதிகாலை 6.28 மணியளவில் விழுங்கிய நீரை பூமித்தகடுகள் துப்பிவிட மேலெழுந்த நீர் பெரும் அலைகளாகி சுனாமி என்ற சொல்லை ஈழ தேசத்துக்கு அறிமுகப்படுத்துகிறது.
2004 மார்கழி மாத இரவு தனது இருட்டைத் தொலைத்து சூரிய ஒளியால் ஒளிரத் தொடங்கிய அதிகாலை நேரம். பல ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எம் வாழ்வுக்கு ஒளி காட்ட பாலன் பிறந்துவிட்டான் என்று எம் ஊர்கள் மட்டுமல்ல உலகமே மகிழ்வில் திளைத்துக் கொண்டிருந்த வேளையில்ஈழ தேசத்தை போலவே, பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி ,பின்னர் ஆழிப் பேரலையின் பாரிய அழிவினை இதே காலகட்டத்தில் எதிர் கொள்கிறது.
ஈழத்தில் கரையோர மக்கள் காலை 9.00 -9.15 ஈழத்து நேரப்படி நத்தார் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் கடற்கரை நீர் உள் இழுக்கப்படுவதை கண்டு என்ன என்று அறிய முன் கடலில் பாரிய அலை ஒன்று கரை நோக்கி வருவதை கண்டு திகைத்து நின்றார்கள்.
தமிழர் தேச கட்டுமான சிதைவு:
நீண்ட காலமாக விடுதலைக்காக போராடிய தமிழ் மக்கள் “தேசம்” எனும் கட்டுமானத்துக்குள் வந்த காலகட்டமே 2003-2005 ஆகும். விடுதலையை மூச்சாக கொண்டு போராடிய தமிழர் தேசம் பின்னர் ஆழிப் பேரலையின் பாரிய அழிவினை இக்காலகட்டத்தில் எதிர் கொள்கிறது.
ஈழத்தின் கீழ்நில கடற்கரைப் பகுதிகள் யாவும் சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு பாரிய சேதம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 30000 மக்கள் இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்து, பல ஆயிரம் மக்கள் காயமடைந்து, பல கோடி உடமைகளை இழந்து போன அந்த நொடி இன்றும் இரத்தவாடையோடு நகர்கிறது.
தமிழ் இனத்தை மட்டுமல்லாது பல்லின மக்களையும் ஏதுமற்ற ஏதிலிகளாக்கிய சுனாமி சிறிய இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தாக்கி விட்டு சென்ற போது மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். கடல் அலையால் தூக்கி எறியப்பட்டவர்கள் கையில் கிடைத்தவற்றை பிடித்து கொண்டு தம்மை காத்து கொண்டார்கள். பனை தென்னை என்றும் மரங்களின் கொப்புகளிலும் பிடித்துக்கொண்டு காத்து கொண்டவர்கள் பயங்கர காயங்களாலும் பாதிக்கப்பட்டார்கள்.
சுனாமியில் அழிந்த ஆச்சே தேசம் :
பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி ,பின்னர் ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை 2005 ஏற்றுக் கொண்டது.
ஆச்சே தேசத்தின் விடுதலைக்கான போராட்டம் 1990களின் இறுதியிலும் 2000 இன் ஆரம்ப காலப்பகுதியிலும் மிகத் தீவிரம் அடைந்திருந்தது. ஆயினும் 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவுகள் ஆச்சேனியர்களையும் இந்தோனேசியர்களையும் சமாதானத்தை நோக்கி சிந்திக்க வைத்தது.
அச்சே மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்து போராடினர். தற்போது இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் உள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன.
அச்சே சுனாமி பேரழிவு :
ஆச்சே இயக்க அறிக்கைகளின் மூலம், 2003-2005 அரசாங்கத் தாக்குதலின் போது அதன் இயக்க வலிமையில் 50% இழந்தது என ஒப்புக்கொண்டது. 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஆச்சே மாகாணத்தை தாக்கியபோதும் கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
டிசம்பர் 2004 இல் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிக்குப் பிறகு, ஆச்சே இயக்கம் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்தது, சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் மோதலைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
சுனாமிக்குப் பிறகு, இந்தோனேசிய அரசாங்கம் ஆச்சே பகுதியை சர்வதேச நிவாரண முயற்சிகளுக்குத் திறந்தது. சுனாமியின் பின்னர் இவ் மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. முந்தைய சமாதான முயற்சிகள் பலவும் தோல்வியடைந்தன, ஆனால் சுனாமியின் பின் இரு தரப்பும் மோதலில் இராணுவ ரீதியாக வெற்றிபெற இயலாமை மற்றும், குறிப்பாக, இந்தோனேசியாவில் அமைதியைப் பாதுகாக்க ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோவின் விருப்பம் உட்பட பல காரணங்களால், ஒரு சமாதான உடன்படிக்கை எட்டப்பட்டது. இதன்மூலம் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தின் விளைவுடன் ஆச்சேயில் 30 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.
சமாதானப் பேச்சுவார்த்தை :
29 வருட போருக்குப் பிறகு 2005. சுஹார்டோவிற்குப் பிந்தைய இந்தோனேசியா மற்றும் தாராளவாத-ஜனநாயக சீர்திருத்த காலம் ஆகும். அத்துடன் இந்தோனேசிய இராணுவத்தில் பதவி மாற்றங்கள் சமாதானப் பேச்சுக்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க உதவியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோ மற்றும் துணைத் தலைவர் ஜூசுஃப் கல்லா ஆகியோரின் அமைதி தீர்வுக்கான பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கவை.
அதே நேரத்தில், ஆச்சே இயக்க தலைமை தனக்கு கிடைக்கக்கூடிய விருப்பங்களை மறுபரிசீலனை செய்தது, மேலும் இந்தோனேசிய இராணுவம் கிளர்ச்சி இயக்கத்தை கணிசமான அழுத்தத்திற்கு உட்படுத்தியது, இது ஆச்சே இயக்கம் முழு சுதந்திரம் இல்லாத முடிவை ஏற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தியது.
விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் அச்சே மக்களின் போராட்டம் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது. கொடிய போரினால் சிந்திய குருதிகளுக்கும், சிதைவடைந்த தேசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்த வழிகோலியது என்பது உண்மையே.
ஈழ தேசத்தை போலவே, பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடியது. ஆழிப் பேரலையின் பாரிய அழிவினை இந்த இரு தேசங்களின் சுதந்திரக் கனவு பேரலைகளில் மூழ்கிப்போனமை வரலாற்றுத் துயராகும்.