ஆழிப் பேரலை சுனாமியில் அழிந்த ‘ஆச்சே’ பிராந்திய அமைதி தீர்வு ! – ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை ஏற்றுக் கொண்ட அச்சே தேச வரலாறு, விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது )
பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி ,பின்னர் ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை 2005 ஏற்றுக் கொண்டது.
ஆச்சே தேசத்தின் விடுதலைக்கான போராட்டம் 1990களின் இறுதியிலும் 2000 இன் ஆரம்ப காலப்பகுதியிலும் மிகத் தீவிரம் அடைந்திருந்தது. ஆயினும் 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் அழிவுகள் ஆச்சேனியர்களையும் இந்தோனேசியர்களையும் சமாதானத்தை நோக்கி சிந்திக்க வைத்தது.
அச்சே மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்து போராடினர். தற்போது இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் உள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன.
கொடிய போரினால் சிந்திய குருதிகளுக்கும், சிதைவடைந்த தேசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்த வழிகோலியது என்பது உண்மையே.
சுதந்திர ஆச்சே இயக்கம் ;
1976 மற்றும் 2005 க்கு இடையில் சுதந்திர ஆச்சே இயக்கம் -Free Aceh Movement – அல்லது “GAM” – Gerakan Aceh Merdeka ஆச்சே மாகாணத்தை சுதந்திரமாக மாற்றும் குறிக்கோளுடன் போராடியது. 2003இல் இந்தோனேசியாவின் ஒரு பாரிய இராணுவ தாக்குதல் நடவடிக்கையும், பின்னர் 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்தியதாக அறிவித்தது. அதன்பின் ஹெல்சிங்கி அமைதி உடன்படிக்கையைக் கொண்டு வந்ததன் மூலம் ஆயுத போராட்டம் முழுமையாக முடிவுற்றது.
ஆச்சே மாநிலம் இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளுக்கு இடையே கலாச்சார, மத வேறுபாடு உள்ளது. பெரும்பாலான இந்தோனேசியாவில் நடைமுறையில் உள்ள இஸ்லாத்தின் மிகவும் பழமைவாத வடிவமானது ஆச்சேவிலும் பரவலாக நடைமுறையில் உள்ளது. முன்னால் அதிபர் சுஹார்டோவின் 1965-1998 ஆட்சியில் பரந்த தேசியவாத கொள்கைகள் குறிப்பாக ஆச்சேவில் பிரபலமடையவில்லை. அங்கு ஒருங்கிணைக்கப்பட்ட ‘இந்தோனேசிய கலாச்சாரத்தை’ ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கையால் பலர் வெறுப்படைந்தனர்.
லிபிய கடாபியின் ஆதரவு :
1985 இல், ஆச்சே இயக்கத்திற்கு லிபிய ஆதரவு கிடைக்கப் பெற்றது. ஏகாதிபத்தியம், இனவாதம், சியோனிசம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான தேசியவாத போராட்டங்களை ஆதரிக்கும் கேணல் கடாபியின் உதவிகளை இவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். லிபியா பின்னர் ஆச்சே இயக்கத்துக்கு தொடர்ந்து நிதியளித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் ஆச்சே இயக்கம்ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கும், மிகவும் தேவையான இராணுவப் பயிற்சியைப் பெறக்கூடிய ஒரு சரணாலயமாக லிபியா விளங்கியது.
1986 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் லிபியாவால் பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை
சுமார் 1,000 முதல் 2,000 பேர் இருந்ததாகக் கூறினர். அதே சமயம் இந்தோனேசிய இராணுவத்தின் அறிக்கையில் படி 600 முதல் 800 வரை இருப்பதாகக் கூறினர்.
சுஹார்டோவின் வீழ்ச்சி
1999 ஆம் ஆண்டில், ஜாவாவில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் சுஹார்டோவின் வீழ்ச்சியால் ஒரு பலமற்ற மத்திய அரசாங்கம் சுதந்திர ஆச்சே இயக்கத்திற்கு ஒரு நன்மையை அளித்தது எனலாம். 1999 இல் துருப்புக்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், மோசமான பாதுகாப்பு நிலைமையால் மேலும் வீரர்களை மீண்டும் களத்தில் இறக்க வழிவகுத்தது. ஜனாதிபதி மேகாவதி சுகர்னோபுத்ரியின் பதவிக் காலத்தில் 2001-2004துருப்புக்களின் எண்ணிக்கை 15,000 ஆக உயர்ந்ததாக நம்பப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு இந்தோனேசிய அரசாங்கத்திற்கும் ஆச்சே இயக்கத்துக்கும் இடையிலான முதல் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த செயல்முறையானது மனிதாபிமான உரையாடல் மையம் என்ற ஒரு தனியார் இராஜதந்திர அமைப்பால் தொடங்கப்பட்டது, இது 2003 வரை இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுக்களை நடாத்த எளிதாக்கியது.
2001 மற்றும் 2002 இல் நடந்த இந்தோனேசிய பாதுகாப்பு படையின் அடக்குமுறைகளால் பல ஆயிரம் பொதுமக்கள் இறந்தனர். இம்மோதல்களால் 15,000 பேர் வரை கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசிய ஆட்சியின் கீழ் சிறப்பு சுயாட்சியை ஏற்றுக்கொள்வதற்கு ஆச்சே இயக்கத்துக்கு இறுதி எச்சரிக்கையையும் அக்காலத்தில் விடுக்கப்பட்டது.
சுனாமி 2004 பேரழிவு :
ஆச்சே இயக்க அறிக்கைகளின் மூலம், 2003-2005 அரசாங்கத் தாக்குதலின் போது அதன் இயக்க வலிமையில் 50% இழந்தது என ஒப்புக்கொண்டது. 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு ஆச்சே மாகாணத்தை தாக்கியபோதும் கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.
டிசம்பர் 2004 இல் பேரழிவை ஏற்படுத்திய சுனாமிக்குப் பிறகு, ஆச்சே இயக்கம் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவித்தது, சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்கள் மோதலைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
சுனாமிக்குப் பிறகு, இந்தோனேசிய அரசாங்கம் ஆச்சே பகுதியை சர்வதேச நிவாரண முயற்சிகளுக்குத் திறந்தது. சுனாமியின் பின்னர் இவ் மோதல் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. முந்தைய சமாதான முயற்சிகள் பலவும் தோல்வியடைந்தன, ஆனால் சுனாமியின் பின் இரு தரப்பும் மோதலில் இராணுவ ரீதியாக வெற்றிபெற இயலாமை மற்றும், குறிப்பாக, இந்தோனேசியாவில் அமைதியைப் பாதுகாக்க ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோவின் விருப்பம் உட்பட பல காரணங்களால், ஒரு சமாதான உடன்படிக்கை எட்டப்பட்டது. இதன்மூலம் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பத்தின் விளைவுடன் ஆச்சேயில் 30 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது.
பின்லாந்து சமாதானப் பேச்சுவார்த்தை :
29 வருட போருக்குப் பிறகு 2005. சுஹார்டோவிற்குப் பிந்தைய இந்தோனேசியா மற்றும் தாராளவாத-ஜனநாயக சீர்திருத்த காலம் ஆகும். அத்துடன் இந்தோனேசிய இராணுவத்தில் பதவி மாற்றங்கள் சமாதானப் பேச்சுக்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்க உதவியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோ மற்றும் துணைத் தலைவர் ஜூசுஃப் கல்லா ஆகியோரின் அமைதி தீர்வுக்கான பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கவை.
அதே நேரத்தில், ஆச்சே இயக்க தலைமை தனக்கு கிடைக்கக்கூடிய விருப்பங்களை மறுபரிசீலனை செய்தது, மேலும் இந்தோனேசிய இராணுவம் கிளர்ச்சி இயக்கத்தை கணிசமான அழுத்தத்திற்கு உட்படுத்தியது, இது ஆச்சே இயக்கம் முழு சுதந்திரம் இல்லாத முடிவை ஏற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தியது.
முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அஹ்திசாரி தலைமையில், நெருக்கடி மேலாண்மை முன்முயற்சியால் சமாதானப் பேச்சுக்கள் எளிதாக்கப்பட்டன. இதன் விளைவாக அமைதி ஒப்பந்தம் 15 ஆகஸ்ட் 2005 அன்று கையொப்பமிடப்பட்டது. ஒப்பந்தத்தின் கீழ், இந்தோனேசியா குடியரசின் கீழ் ஆச்சே சிறப்பு சுயாட்சியைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
ஹெல்சின்கி புரிந்துணர்வு ஒப்பந்தம்:
ஹெல்சின்கி அமைதி புரிந்துணர்வு ஒப்பந்த முடிவுகளால் மோதலுக்கு அமைதியான தீர்வு கிடைத்ததாக அறிவித்தனர். இதன்படி ஆச்சேவுக்கு சிறப்பு சுயாட்சி வழங்கப்பட்டது. ஆச்சே இயக்கத்தின் நிராயுதபாணியாக்கமும், ஆச்சே இயக்கத்தின் சுதந்திரக் கோரிக்கையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அத்துடன் அவசியமற்ற இந்தோனேசிய துருப்புக்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின் அமைதிக்கான ஆச்சே கண்காணிப்பு பணியகத்தால் பிராந்திய தேர்தல்களும் நடாத்தப்பட்டது.
பல ஆண்டுகளாக விடுதலையை மூச்சாக கொண்டு போராடி ஆச்சே தேசம் , கொடிய போரினால் சிந்திய குருதிகளுக்கும், சிதைவடைந்த தேசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலை சுனாமியின் அழிவுகளும், ஆச்சே விடுதலைக்கான ஆயுத போராட்டத்தை நிறுத்த வழிகோலியது என்பது உண்மையே.
ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை ஏற்றுக் கொண்ட அச்சே தேச வரலாறு, விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது எனலாம்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா