“கனகர் கிராமம்”….அங்கம்-10 – செங்கதிரோன்
1960 களின் முற்பகுதியில் சம்மாந்துறை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் பாலமுனைபகுதிகளிலிருந்து முஸ்லிம் வியாபாரிகள் கூடார வண்டில்களிலே நிறையச் சாமான்கள்ஏற்றிக்கொண்டு வரிசையாகப் பொத்துவிலுக்குவந்து, பொத்துவிலுக்கூடாக பொத்துவில் -மொனராகல பிரதான வீதியில் ‘முப்பனை’ நோக்கிச் செல்வர். மொனராகலயை அந்நாட்களில்”முப்பனை” என்றுதான் அழைப்பார்கள்.
முப்பனைக்குப் போகும்போது இங்கு மலிவானதாயும்முப்பனைப் பகுதியில் அதிகவிலைக்கு விற்கக்கூடியமாதிரி கேள்வி கூடுதலாகவுமுள்ளபொருட்களை எடுத்துச்சென்று அங்கு விற்றுவிட்டுத் திரும்பும் பயணத்தில் முப்பனைப்பகுதியிலும்முப்பனையிலிருந்து பொத்துவிலுக்குத் திரும்பும் வழியிலும் மலிவாகக் கிடைக்கும் பொருட்களைக்குறைந்த விலைக்கு வாங்கிக்கொண்டுவந்து அவற்றைப் பொத்துவிலிலும் இங்குவேறிடங்களிலும் கூடிய விலைக்கு விற்றுக்காசாக்கும் இலாபகரமான வியாபாரமே இக் கூடாரவண்டில் பயணத்தின் நோக்கம். இந்தக் கூடார வண்டில்களை முஸ்லிம் பிரதேசங்களில்‘கூட்டுவண்டி’ என அழைப்பர். கூட்டாகச்செல்வதால் இப்பெயர் வந்ததோ தெரியவில்லை.
முப்பனை சென்று திரும்பிவரும்போது பொத்துவில் 'ரவுண்'னில் அப்போது உயர்ந்து விரிந்துகிளை பரப்பி நின்ற பெரிய ஆல மரத்தடியில் வண்டில்களை அவிழ்த்து இராத்தங்கல் போட்டுத்தங்கி மறுநாள் பகல் கொண்டு வந்த சாமான்களைச் சந்தைபோல் பரப்பி விற்று – பகல் வெட்டவெளியிலேயே சமைத்துச் சாப்பிட்டு – மாடுகளுக்கும் தவிடு, வைக்கோல், புண்ணாக்குத்தீனியும்போட்டு நீண்டதூரம் பயணம்செய்யும் வாய்பேசாத அச்சீவன்களுக்கும் ஓய்வளித்துப்பின்னேரமாகத்தான் தத்தம் ஊர்களுக்குத் திரும்புவர். இரவுப் பயணத்தின்போது வண்டிலின்கீழ்ப்பகுதியில் எரியும் ‘அரிக்கன் லாம்பு” தொங்கவிடப்பட்டிருக்கும்.
பயணத்தின்போது அதுபக்கவாட்டில் ஆடி அசையும். முப்பனை சென்று திரும்பும் கூடார வண்டிலின் கூரையின் இருபக்கவாட்டிலும் பலாப்பழங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் அவை இறக்கப்பட்டுப்பொத்துவிலில் விற்கப்படும். பொத்துவில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகஅந்தக்காலத்திலிருந்தே விளங்கி வந்தது.
ஏழெட்டுக் கூடார வண்டில்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அணி வகுத்துச்செல்வதுநத்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து செல்வதைப்போலிருக்கும். கூடார வண்டில்வியாபாரிகள் இரவுவேளைகளில் பயணிக்கும்போது நாட்டுப்புறக்”கவி’ களைக் கவிக்குப்பதில்கவி, பதில்கவிக்கு இன்னொரு பதில்கவி எனத்தொடர்ந்து ஆள்மாறி ஆள்மாறிக்குரலெடுத்துப் பாடிக்கொண்டே பயணிப்பர். இக்கவிகள் இப்பயணத்திற்கு ஓர் இலக்கியப்பரிமாணத்தை அளிப்பன. ஏடறியா இந்த நாட்டுபுறக்கவிகள் கேட்பதற்கு இனிமையானவைமட்டுமல்ல ஆழமான அர்த்தங்களுமுள்ளவை.
1960 களின் இறுதிப்பகுதியில் இந்தக் கூடார வண்டில் வியாபாரப் பயணம் அருகிப்போய்விட்டிருந்தது. கூடார வண்டில்கால நினைவுகளில் தோய்ந்திருந்த கோகுலனிடம் “என்ன‘பிறதர்’. கடுமையா யோசிக்கிறீங்க” என்று கதிரவேல் கேட்டபோதுதான் கோகுலன் தன்னைச்சுதாகரித்துக்கொண்டு “ஒண்டுமில்ல” என்றான்.
பெரியதம்பிப்போடியாரின் மனைவி கோகுலனின் தாயாரிடம் “வெளிக்கிடுவம் மச்சாள்!’’ என்றுசொன்னதைத்தொடர்ந்து கனகமும் ‘ஓம் மச்சாள் வெளிக்கிடுவம்’’ என்று சொல்லி‘அரோகரா”ப்போட மற்றவர்களும் ‘அரோகரா”ச் சொல்ல உழவு இயந்திரப் பெட்டியும் அதற்குப்பின்னால் கூடார வண்டிலும் உகந்தையை நோக்கி ஊரத்தொடங்கின.
கோகுலனின் இளையக்கா தனது ஆறுமாதப் பெண்குழந்தையைத் தனது மடியில்தலையணையை அணைத்துப் பக்குவமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொண்டாள்.
கோகுலன் அவவுக்குப் பக்கத்திலேயே அமர்ந்து குழந்தைக்கு வெயில்படாதபடி அவர்களதுதலைக்கு மேலாகக் குடையொன்றை விரித்துப் பிடித்துக்கொண்டான். கதிரவேல் உழவுஇயந்திரப் பெட்டியில் கோகுலனுக்குப் பக்கத்திலேயே இடம் பிடித்துக்கொண்டான். கோகுலனின்தாயாரும் பெரியதம்பிப்போடியாரின் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் பேச்சுத்துணையாகஅருகருகே அமர்ந்து கொண்டனர்.
கதிரவேலின் அக்கா வள்ளியம்மா தனது தாயாருக்கருகில்அமர்ந்து கொண்டாள். பொத்துவில் ஆலயடிப்பிள்ளையார் கோயிலடியிலிருந்து பயணம்ஆரம்பிக்கும்போது நாங்களும் உகந்தைவரை வருகிறோம் என்று சொல்லி ஏறி அமர்ந்தஏனையவர்களும் அவர்களுக்கு வசதியாக உழவு இயந்திரப் பெட்டியில் இடம்பிடித்து அமர்ந்துகொண்டனர்.
பாணமைச் சந்தியிலிருந்து உகந்தைக்குச் செல்லும் வீதியில் சந்தியிலிருந்து சிறிது தூரத்திலேவலதுபக்கத்தில் வீதியை ஒட்டினாற்போல பிள்ளையார் கோவில் ஒன்று உண்டு. அவ் வழியில்செல்லும் அனைவரும் பிள்ளையார் கோவிலில் கற்பூரம் கொளுத்திக் கும்பிட்டுத் தேங்காய்உடைத்துச் செல்வர். அந்த வழக்கத்தைக் கோகுலனின் தாயாரின் யாத்திரைக் குழுவினரும்கடைப்பிடித்துப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பாணமைச் சந்தியிலிருந்து ஒரு கட்டைத் (மைல்) தூரத்தில் வீதி வளைந்து உகந்தை ‘யால’சரணாலயத்தின் நுழைவாயிலை நோக்கிய திசையில் திரும்புகிறது. அந்த வளைவின் வலப்புறத்தில் வீதியை அண்மித்ததாகக் கோயிலொன்று தென்பட்டது. அக்கோயிலைச் சுட்டிக்காட்டிக்கோகுலன் கதிரவேலிடம் “அது என்ன கோயில்” என்று கேட்டான்.
“அதுதான் பாணம பத்தினி அம்மன் கோவில்” என்று பதில் கூறிய கதிரவேல் அக்கோவில் பற்றித்தனக்குத் தெரிந்த விபரங்கள் அனைத்தையும் கேளாமலே கூறி வைத்தான்.
கண்ணகி அம்மன் கோவில்தான் அது. பாணமையில் அது பத்தினி அம்மன் கோவில் என்றுதான்அழைக்கப்படுகிறது. பாணமை தமிழ் சிங்களக் கலப்புள்ள ஒரு கிராமம். கண்ணகி அம்மன்வழிபாடு சிங்களவர்களிடையே “பத்தினி தெய்யோ” ஆக உள்ளது ‘பத்தினி தெய்யோ’ தான்‘பத்தினி அம்மன்’பத்தினி அம்மனும் (கண்ணகியும்) கோவலனும் சேர்ந்தாற் போலக் கோயில் கொண்டுள்ள இடம்பாணமை மட்டுமே. இலங்கையிலோ அன்றி இந்தியாவிலோ இவ்வாறு இருவரும் வீற்றிருக்கும்கோவில்கள் எதுவுமே இல்லை.
ஆதி காலத்தில் இப்போது பத்தினி அம்மன் வீற்றிருக்கும் இடத்திலும் கோவலன் கோயில்கொண்ட இடத்திலும் இரண்டு பெரிய புளிய மரங்கள் இருந்தன. இன்றும் உள்ளன. அந்தப் புளியமரங்கங்களிரண்டையும் இணைத்ததாக உயரத்தில் ‘பரண்’ அமைத்து அதிலேயே இருதெய்வங்களையும் வைத்துக் கும்பிட்டு வந்தனர். பின்னர் கதிரவேலின் அம்மப்பா வன்னிய சிங்கம்போடியாரும் ஊர் மக்கள் சிலரும் சேர்ந்துதான் கல்லிலாலான கோயில் கட்டினார்கள்.
பாணமை தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரு இனத்தவர்களும் ஒருங்கே வாழும் கிராமம்.இவ்விரு சமூகத்தினரும் அங்கே ஒருங்கே வாழ்வது மட்டுமல்ல அவர்கள் திருமண உறவுமூலம்தொடர்புபட்டவர்களாய் இரத்த உறவுடையவர்களாகவும் இருந்துவருகிறார்கள். பத்தினித் தெய்வவழிபாடு சிங்கள, தமிழ் மக்களைப் பிணைக்கும் பண்பாட்டு அம்சமாக உள்ளது. “கொம்புமுறி”விளையாட்டின் சிறப்பான வடிவம் பாணமைப் பத்தினி அம்மன் கோயிலிலே இருக்கிறது.
பாணமைக்குத் தெற்கே மேட்டு நிலமொன்றிலே அருகருகே இரு கோயில்கள் உள்ளன. ஒன்றுகண்ணகிக்குரியது. ‘பத்தினி அம்மன் கோயில்’ என்று அழைக்கப்படுகின்றது. மற்றதுகோவலனுக்குரியது. ‘களுபண்டார’ கோவில் என அழைக்கப்படுகிறது. இக்கோவில்களில்தமிழரான பூசகர் ஒருவரும் சிங்களவரான ‘கப்புரால’ (கப்புகனார்) ஒருவரும் பூசை செய்கின்றனர்.
நாட்டார் கதைகளில் இவ்விரு தெய்வங்களும் கணவன் மனைவி உறவுடையவர்கள் எனக்கூறப்படுகின்றது. இத் தெய்வங்களின் உறவைக் இக்கோயிலில் வருடாவருடம் நிகழும்‘கொம்புமுறி’ விளையாட்டுச் சடங்கு வெளிப்படுத்துகிறது.
வருடாவருடம் ஆவணிமாதம் வளர்பிறையன்று கோயில் கதவுதிறந்து பூரணைவரைக்கும்பதினைந்து நாள்கள் உற்சவங்கள் நடந்து தீர்த்தத்துடன் நிறைவுறும். மொத்தம் பதினைந்துநாள்களில் முதல் ஐந்து நாள்களும் ஊரில் திருமணமாகாத இளந்தாரிப்பொடியன்கள் பங்கு பெறும்‘கொம்பு முறி’ விளையாட்டும் மீதிப் பத்து நாள்களும் கல்யாணம் முடித்த பெரியவர்கள் பங்குகொள்ளும் ‘கொம்புமுறி” விளையாட்டும் நடைபெறும். இக் கொம்புமுறி விளையாட்டு இரவுவேளையிலேயே நடைபெறும். கொம்பு முறி விளையாட்டின்போது பெண்கள் கலந்து கொள்வதுபாரம்பரியமாகத் தவிர்க்கபட்டதொன்றாகும்.
ஆனால், கடைசி நாளன்று பகலில் நடைபெறும் ‘ கொம்பு முறி’ நிகழ்வில் ஆண்கள் பெண்கள்அனைவரும் கலந்து கொள்வர். கொம்புமுறி விளையாட்டைப் பெண்களும்அறிந்துகொள்வதற்காகவே இந்த ஏற்பாடு.
கடைசிநாளைக் ‘காணிக்கை நாள்’ என்று அழைப்பர். காணிக்கை நாளன்று பாணமைஊர்மக்கள் மட்டுமல்ல பொத்துவில் – லகுகல மற்றும் கோமாரி போன்ற வெளியூர்களிலிருந்தும்இனமத பேதங்கள் எதுவுமில்லாமல் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள்,பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்று எல்லோரும் பூசைப்பெட்டிகளுடன் வந்துகாணிக்கை செலுத்திப் பத்தினி அம்மனைத் தரிசித்துச் செல்வர். பொத்துவிலிருந்துபூசைப்பெட்டிகளுடன் நடந்து வருபவர்களும் உண்டு.
வருடாந்த உற்சவம் மற்றும் கொம்பு முறி விளையாட்டுக்காலங்களில் இச் சடங்குகளில் ஈடுபடும்ஆண்கள் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்வர். இக்காலத்தில் விரதம் இருப்பார்கள். மச்சம்உண்ணமாட்டார்கள். பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை பிரசவம் – பூப் பெய்தல்- மாதவிடாய் போன்ற காரணங்களால்‘துடக்கு’ எய்தியவர்கள் உற்சவ காலத்திற்கு முன்பே ஊரைவிட்டு வெளியேறி வெளியூர் சென்றுதங்கித் துடக்குக் காலம் முடிந்த பின்னர்தான் ஊருக்கு வருவார்கள். உற்சவ காலத்தில் ஊரில்இருந்து துடக்குப்பட்டவர்கள் ஊரின் முன்னால் வராமல் கொல்லைப்புற வீதிவழியேவெளியேறிச் சென்று அவர்களும் துடக்குக் காலம் முடிந்த பின்னர்தான் ஊருக்குத் திரும்புவார்கள்.
உற்சவகாலத்தில் ‘மச்சமாமிசம்’ எதுவும் ஊருக்குள்ளே அனுமதிக்கப்படமாட்டாது. வெளியூர் மீன்வியாபாரிகள்கூட ஊருக்குள் நுழைய முடியாது. இந்த விடயங்களில் ஊர்க்கட்டுப்பாடுகள் மிகவும்கடுமையானவை. ஊர்மக்கள் இக்கட்டுப்பாடுகளைப் பயபக்தியுடன் கடைப்பிடிப்பார்கள்.
அந்தக்காலத்தில் ‘தீட்டு’ க்குரிய பெண்கள் ஊரைவிட்டு வெளியேறி அயல் கிராமங்களுக்குப்போய்விடவேண்டும் அல்லது அருகேயுள்ள காட்டில்போய்த்தங்கவேண்டும் காட்டில் அதற்கெனகுடிசைகள் அமைக்கப்படுமாம். இக்குடில் சிங்களத்தில் ‘குடிலிகே’ எனப்படும்.
கொம்புமுறி விளையாட்டை நடத்துவதற்கென்று முக்கியஸ்தர்கள் உள்ளனர். கோவிலின் ‘நிலமே’ என்ற அதிகாரம் படைத்தவர் இருப்பார். இவரைத் தமிழிலே ‘வண்ணக்கர்’ என்பர்.
பழைய காலத்தில் சிங்களத்தில் இவர் ‘பெத்மரலா’ என அழைக்கப்பட்டார். மற்றவர் ‘ கப்புரால’என்பவர் தமிழில் கப்புகனார், மற்றவர் ‘வட்டாண்டி’ – இம்மூன்று முக்கியஸ்தர்களும் ‘உட’ பிரிவுஎன அழைக்கபடும் கோவலன் (களு பண்டார) பக்கத்திற்கும் ‘யட’ பிரிவு என அழைக்கப்படும்கண்ணகி (பத்தினி) பக்கத்திற்கும் என மொத்தம் ஆறுபேர் இருப்பர். ‘ நிலமே’ க்கள் ஒவ்வொருபிரிவுக்கும் தலைமை வகிப்பர். கப்புகனார்களே (கப்புரால) கோவிலின் பூசகர்கள். வட்டாண்டிகள்என்போர் கோவில் வளவுக்குள் நடைபெறும் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவர்கள்.
இறுதிநாள் இரவு பத்தினி அம்மனை ஊருக்குள்ளாலே வீடுவீடாக ஊர்வலத்தில்ஏந்திவருவார்கள். ஒவ்வொரு வீடும் தென்னங்குருத்து – பாளை – பூக்களால் சோடனைசெய்யப்பட்டுக் கும்பம் மற்றும் மடைகள் வைக்கப்பட்டும் பலகாரம் போன்ற சிற்றுண்டிகள்செய்தும் ஊர்வலத்தில் வரவோர்களை உபசரித்து உவகையோடு உறவு கொண்டாடி மகிழும்.
ஊரை ஒன்றாக இணைக்கும் ஒரு நிகழ்வாக இது விளங்கி வருகின்றது. ஊர்வலத்தில்கோலாட்டம் – கும்மி போன்ற நடனங்களும் இடம்பெறும்.
விடிய விடிய ஊருக்குள்ளே வீடு வீடாகப் பத்தினி அம்மன் ஊர்வலத்தில் உலா வந்து விடிந்ததும்கோயிலுக்குத் திரும்பி அங்கு பூசையெல்லாம் முடிந்து பாணமைக் கடற்கரைக்குச் சென்று தீர்த்தம்ஆடிச்செல்வார். தீர்த்த ஊர்வலத்தில் பாற்காவடி- முள்ளுக்காவடி – அலகு பாய்ச்சியவர்கள் -கைகளிலும் தலையிலும் ‘தீச்சட்டி’ ஏந்தி வருபவர்களென்று நேர்த்திக்கடன்களைநிறைவேற்றுபவர்களால் ஆலயம் நிரம்பி வழியும். பக்தர்களின் கைகளில் பச்சை வேப்பம்கொத்துக்களும் மணம் வீசும்.
அனேகமாகப் பாணமைச் சந்திக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவிலில் வைத்தே பக்தர்களுக்கு‘அலகு’ பாய்ச்சப்படும். அங்கிருந்து பக்தர்கள் பத்தினி அம்மன் ஆலயத்திற்கு நடந்தே செல்வர்.
வருடாந்த உற்சவம் இல்லாத மற்றக்காலங்களில் வெள்ளிக்கிழமைகள் தோறும் ஆலயத்தில் பூசைநடைபெறும்.
மேலும், பாணமைப்பற்றுப் பிரதேசத்தில் காட்டுக்குள்ளே ‘நாவுல்ல’ என்ற இடத்தில்அமைந்துள்ள மலையிலுள்ள குகைக்குள் வெண்கலச் சிலம்பு- அம்மானைக்காய் – இருமுனைகளிலும் வெள்ளிப்பூண்போட்ட கருங்காலிக்கோல் போன்ற பொருட்கள் இருந்ததாகவும்பத்தினி அம்மன் ஆலயத் திருவிழாக்களில் “தெய்வம்” ஆடுபவர்கள் இக் கருங்காலிக்கோலைக்கையில் வைத்துக் கொண்டுதான் ஆடினார்களென்றும், அதேபோன்று ‘றதல்ல’எனுமிடத்தில் கொம்புமுறி விளையாட்டில் கொம்புகளை வைத்துப் பொருத்திக்கட்டும்‘செவ்வாய்க்குற்றி’ இருந்ததாகவும் ஊர்மக்கள் இவ்விடங்களுக்குச் சென்று பொங்கல் பொங்கிவழிபட்டு வந்ததாகவும் கதைகள் உண்டு. இந்த இடங்களுக்கும் பாணமைப் பத்தினி அம்மனுக்கும்தொடர்புகள் இருந்திருக்கக் கூடும்.
இவ்வளவு விபரங்களையும் ஒரே மூச்சில் கதிரவேல் கோகுலனிடம் சொல்லிமுடித்தான்.
கோகுலன் :இந்த விபரமெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான்.”எங்கட அம்மப்பா வன்னியசிங்கம் போடியார்தான் எனக்கு எல்லாம் சொன்னவர். இப்பயும்கேட்டாப் பழய கதயெல்லாம் கனக்கச் சொல்லுவார்’’ என்றான் கதிரவேல்.
“வேறென்னகதயெல்லாம் சொன்னவர். அவருக்கு இப்ப எத்தின வயசிருக்கும்?’’ என்று கதிரவேலைக்கிண்டினான் கோகுலன்.
கதிரவேலிடம் கதை கேட்பது சுவாரஸ்யம் மட்டுமல்ல பழையதகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என்பது கோகுலனுக்குப் புரிந்தது.
“அப்பச்சிக்கு இப்ப தொண்ணூறு வயசிரிக்கும். இப்பயும் இளந்தாரி போலத்தான் இரிக்கார்.
விடியச்சாமத்தில எழும்பி வயலுக்கு நடந்து போய்த்தான் வாறவர். கண்ணாடி போடாமல்‘பேப்பர்’ வாசிப்பாரு. கூடுதலாக இங்கிலிஸ் பேப்பர், “டெய்லி நியூஸ்”தான் வாசிப்பார். அவர்பாணமயில குடியிருக்க வரக்கொள்ள ஐந்தாறு குடும்பந்தானாம் இருந்த. புறகு பாணமைக்குப்பக்கத்திலிருக்கிற மீயாங்கொட, கூமுனை போன்ற இடங்களில இரிந்த சனங்களும் தூரத்திலகாரதீவு-கல்லாறு-மட்டக்களப்பு நாவற்குடா-கதிர்காமம் போன்ற இடங்களில இரிந்தும் சனங்கள்இஞ்ச வந்து குடியேறித்தான் சனம் பெருகினதாம்’’ என்றான் கதிரவேல்.
கதிரவேலிடம் கதை கொடுத்தால் அவனின் அம்மப்பா அவனிடம் சொன்ன விடயங்களின் மூலம்பல அரிய வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என எண்ணிய கோகுலன்அவற்றை ஆறுதலாகக் கதிர்காமம் போகும் வழியில் இராத்தங்கல் போடும்போது கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான்.
பாணமைப்பற்றுக் கிராம சபைப் பிரதேசத்தில் ‘லகுகல’ யிலும் பத்தினி அம்மன்கோயிலொன்றுண்டு என்ற தகவலையும் கதிரவேல் சொல்லி வைத்தான். அப்போதுகோகுலனுக்குச் சிந்தனை இவ்வாறு ஓடியது.
வரலாற்றில் உன்னரசுகிரி நாடு என்பது பாணமையிலிருந்து தெற்கே மாணிக்க கங்கைவரைக்கும் மேற்கில் லகுகலயையும் உள்ளடக்கிய பகுதி என்பதை மனம் கொள்ளும்போதுபாணமைப்பற்றுக் கிராம சபைக்குள் பாணமையோடு லகுகலையும் இணைக்கப்பட்டதாகபாணமைப்பற்றுக் கிராம சபை உருவாக்கப்பட்டது இந்த வரலாற்றின் அடிப்படையிலா? என்றகேள்வி கோகுலனின் மனதில் துளிர் விட்டது. பாணமையைப்போல் லகுகலையிலும் பத்தினிஅம்மன் கோவில் ஒன்றுண்டு எனக் கதிரவேல் கூறியதும் இக் கேள்வி எழக் காரணமாயிற்று.
லகுகல, பொத்துவில் – மொனராகல வீதியில் பொத்துவிலுக்கு மேற்கே பத்துமைல் தூரத்தில்அமைந்துள்ளது. பாணமையிலிருந்து நேரே லகுகல செல்வதற்கு வீதி இல்லை.
பொத்துவிலினூடாகத்தான் போக்குவரத்துச் செய்ய வேண்டும். இந்த விடயமும் கோகுலனின்சிந்தனைச் சுவரில் பட்டுத் தெறிந்தது.
பொத்துவில் பிரதேசத்திலமைந்த கொட்டுக்கல், குண்டுமடு,பொத்துவில் நகர், பாக்கியவத்தை, வட்டி வெளி , செங்காமம் , தாமரைக்குளம் , கள்ளியாப்பத்தை,இன்ஸ்பெக்ரர் ஏத்தம் , ஊறணி, கோமாரி, சங்கமன்கண்டி போன்ற தமிழர்கள் வதியும்,ஊர்ப்பகுதிகள் முஸ்லிம்கள் வதியும் பொத்துவில் முஸ்லீம் பெரும்பான்மைக் கிராம சபைக்குள்ளேஅமையாது பாணமைப்பற்றுக் கிராமசபைக்குள் அமைந்ததை இந்த வரலாறுநியாயப்படுத்துவதாகக் கோகுலன் உணர்ந்தான்.
கதிரவேலிடம் கதைகேட்டுக்கொண்டு வந்ததில் கோகுலனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.கதிர்காம யாத்திரையில் கதிரவேலும் இணைந்து கொண்டது நல்லதாகவும் பயனுள்ளதாகவும்போயிற்று என்றெண்ணிக் களிப்புற்றான்.
ஓரிடத்தில் உழவு இயந்திரம் நிறுத்தப்பட்டது. வலது புறத்தில் ஒரு மலையும் மலையின்அடிவாரத்தில் வீதியோரமாகச் சிறு கோயிலும் இருந்தன. இதுதான் ‘சன்னாசிமலை’ என்றான்கதிரவேல். அது பிள்ளையார்கோயில். எல்லோரும் இறங்கிக் கற்பூரம் கொளுத்திக் கும்பிட்டனர்.
கோகுலனும் கதிரவேலும் இறங்கிக் கும்பிட்டபின் உழவு இயந்திரப் பெட்டியில் ஏறி ஓரத்தில்அமர்ந்து கொண்டனர். பாணமையிலிருந்து சன்னாசிமலை வரை உழவு இயந்திரப் பெட்டியின்நடுவில் அமர்ந்து பயணித்த இருவரும் இப்போது இடம்மாறிப் பெட்டியின் ஓரத்தில் அமர்வதற்குக்காரணமும் இருந்தது.
பாணமையிலிருந்து சன்னாசிமலை வரைக்குமான பயணத்தில் கதிரவேலுடன் பாணமைப்பத்தினி அம்மன் ஆலயம் பற்றிக் கதைத்துக் கொண்டு வந்ததாலும் பெட்டியின் நடுவில் அமர்ந்துவந்ததாலும் வழியில் தென்பட்ட மான் கூட்டங்களையோ மயில்களையோ வேறு பறவைமிருகங்களையோ வடிவாகப் பார்க்க முடியவில்லை. சன்னாசிமலை பாணமையிலிருந்துஏழுகட்டைத் (மைல்) தூரம். சன்னாசிமலையிலிருந்து உகந்தையும் ஆறுகட்டைத் தூரம்.சன்னாசிமலையைப் பாணமைக்கும் உகந்தைக்கும் நடுவில் எனலாம்.
சன்னாசிமலையையடைந்ததும் உகந்தைப்பயணத்தின் அரைவாசித்தூரம் முடிந்துவிட்டது. மிகுதிஅரைவாசியுள்ளது. அந்த அரைவாசிப்பயணத்தின்போது கதையைக்குறைத்து இயற்கையைரசிக்க வேண்டுமென்று கோகுலன் எண்ணியதாலேயே சன்னாசிமலையடியில் இறங்கிஏறும்போது உழவு இயந்திரப் பெட்டியின் ஓரத்தில் இருவரும் அமர்ந்து கொண்டனர்.
‘சன்னாசிமலை’ பற்றியும் கதிரவேலிடம் கேட்டறியக் கோகுலன் அவாக் கொண்டிருந்தபோதிலும்,அன்றிரவு உகந்தை முருகன் ஆலயத்தில் தங்கியிருக்கும்போது அதனைக் கதிரவேலிடம்கேட்டறிந்து கொள்ளலாம்தானே என எண்ணிக் கொண்டதால் அந்த அவாவை அடக்கிக்கொண்டான்.
உகந்தை நோக்கிய தொடர் பயணத்தின்போது மான்களையும் மயில்களையும் தனியாகவும்கூட்டமாகவும் மிகக் கிட்டிய தூரத்திலே கண்டு களிக்கக் கூடியதாகவிருந்தது. காட்டுச் செடிகள்உயிர்பெற்று அசைவதுபோலப் பச்சை மயில்கள் உலாவந்தன. யானைகளும் இரண்டொருஇடங்களில் கிட்டிய தூரத்திலே தெரிந்தன. தொலைதூரத்திலே தெரிந்த சிறுமலைக் குன்றுகள்யானைகளாகத் தோற்றம் காட்டி மயக்கம் ஊட்டின. உகந்தை செல்லும் பாதை சில இடங்களில்இருமருங்கும் அடர்ந்த காடாகவும் சில இடங்களில் வெட்ட வெளியாகவும் இருந்தன. ஓரிருஇடங்களில் நரிகளும் கீரிப்பிள்ளைகளும் பாதையைக் குறுக்கறுத்துப் பாய்ந்து ஓடின. குருவிகள்கீச்சிடும் ஓசையும் பலவகைப்பறவைகள் கத்தும் ஓசையும் ‘சில்’ வண்டுகளின் ரீங்காரமும்மயில்களின் அகவலோசையும் குயில்களின் ‘கூக்கூ’ ஓசையும் என எல்லா ஓசைகளும் இணைந்துகாட்டுக்குள்ளே இசைக்கச்சேரியொன்று நடக்கிறதோ என எண்ணும்படியாக இருந்தது.
காட்டுக்கோழிகளும் சில இடங்களில் உழவு இயந்திரத்தின் சத்தம் கேட்டு வேகமாக ஓடிக்காட்டுக்குள்ளே மறைந்தன. காட்டு மாடுகள் தலைநிமிர்த்திப்பார்த்தபோது அவற்றின் பார்வையும்வளைந்த கொம்புகளும் பயத்தை ஊட்டின. ஆனால், தலைநிமிர்த்திப் பார்த்த அம்மாடுகள் பின்தலையைக் குனிந்து வாலையும் ஆட்டிக்கொண்டு தன்பாட்டில் தன் வேலையுண்டு என்பதுபோல்அப்பால் நகர்ந்தன. குரங்களுக்குக் குறைவில்லாமல் இருந்தன. சில இடங்களில் மந்திக்குரங்குகளும் சில இடங்களில் சிறு குரங்குகளும் (சிறுமன் குரங்குகளும்) மரத்திற்கு மரம்கிளைதாவிப்பாய்ந்து விளையாடின. வயிற்றிலே குட்டிகளையும் சில தாய்க்குரங்குகள் காவிச்சென்றன. பாதையோரங்களில் நின்றிருந்த வீரமரங்களில் பழங்கள் சிவப்புப் புள்ளிகளாகத்தென்பட்டன. அதேபோல் பழுத்திருந்த பால மரங்களில் மஞ்சள் புள்ளிகளாகப் பழங்கள்தெரிந்தன. நாவல் மரங்களும் நின்று குளிரூட்டிக்கொண்டிருந்தன. மருக்கால மற்றும் காரைமுட்பற்றைகளுக்கிடையே சூரைப்பற்றைகளும் கிளாமரங்களும்கூடப் பழுத்துக்கிடந்தன.
அவற்றைப்பறித்துத் தின்ன வாயூறினாலும் பயணம் தாமதப்படுமென்பதாலும் பொழுதுபட்டுஇருட்டுப்படமுதல் உகந்தையைச் சென்றடைய வேண்டுமென்பதாலும் கோகுலன் ஆசையைஅடக்கிக் கொண்டான். முற்றிய உருண்டு திரண்ட நீளமான வரிக்கன் பலாக்காய்களைத்தரையிலே உருட்டிவிட்ட மாதிரிக் கறுத்த நிறக் காட்டுப்பன்றிகள் சில இடங்களில் தமதுபரிவாரங்கள் பின் தொடரப் பாய்ந்து ஓடின. நன்கு முதிர்ந்த முதிரை மரங்கள் நீண்டு வளர்ந்துஉயரத்தில் குடை விரித்தாற்போல் கிளைபரப்பி நின்றன. ‘கிறவல்’ பாதையும் இடைக்கிடைமணல்பாதையும் மேடும் பள்ளமும் குண்டும் குழியுமாக இருந்ததால் உழவு இயந்திரமும்அதற்கேற்றாற்போல குலுங்கிக் குலுங்கியும் பக்கவாட்டில் சரிந்து சரிந்தும் கோயில்களிலே‘தெய்வம்’ வந்து ஆடுபவன் மாதிரி ஆடிச்சென்றது. மழைநீர் வார்ந்து ஓடிய தடங்களில் பள்ளமும்குண்டு குழிகளும் பாதையில் ஏற்பட்டிருந்தன. ஆயினும், இயற்கைக் கோலங்களும்காட்டுவழிப்பயணத்தின் காட்சிகளும் உள்ளத்தை உவகையூட்டியதால் உடல் அலுப்புத்தெரியவில்லை.
அன்று மாலைக்கருக்கலில் உழவு இயந்திரம் உகந்தை முருகன் கோயிலைச் சென்றடைந்தது.உழவு இயந்திரம் வந்து சேர்ந்து சுமார் அரைமணித்தியாலயத்தின் பின்னர் கூடார மாட்டுவண்டிலும் வந்து தட்டியது.
உகந்தை மலையின் அடிவாரத்திற்குச் சற்று இப்பால் கோயிலுக்குப்பக்கத்தில் கோயில்வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த பெரிய ஆல விருட்சத்தின் கீழே யாத்திரைக்குழு ‘ வாடி’ யைப்போட்டது.
கோகுலனின் தாயாரையும் பாணமை பெரியதம்பிப்போடியாரின் மனைவியையும் கண்டமாத்திரத்தில் உகந்தை முருகன் கோயில் வண்ணக்கரான’ புஞ்சிமாத்தயா’ எனும் ‘மாத்தயாவர்’ஆலமரத்தடிக்கு வந்தார்.
எல்லோருக்கும் முகமன்கூறிய அவர் கோயிலுக்கு எதிரே கோயில் வளாகத்திற்கு வெளியேஇருந்த மடத்திற்குப் பெண்களையெல்லாம் அழைத்துச்சென்றார்.. ஆண்கள் ஆலமரத்தின் கீழேதங்கிக்கொண்டார்கள்.
கோயிலுக்கு முன்னே இருந்த இம்மடம் களிமண் சுவர்களினால் கட்டப் பெற்றுக் கூரைக்குக்கிடுகு வேயப்பட்டிருந்தது. நடுவில் இரண்டு சிறு அறைகளும் அதன் நாற்புறமும் சுற்றிவரஉயரமான திண்ணையும் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. திண்ணையில் குந்தியிருந்து கால்களைத்தொங்கவிடப்போடுமளவுக்குத் திண்ணையின் உயரமிருந்தது. இரண்டு அறைகளில் ஒன்றில்கோயில் சாமான்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. மற்ற அறையில் சமையல் வேலைகள்நடந்து கொண்டிருந்தன.
கோகுலனின் இளையக்கா தன் குழந்தையுடன் சுவரோரம் திண்ணையில் ஒரு மூலையில்இடம்பிடித்துக்கொண்டார்.
கோயில் வண்ணக்கர் மாத்தயாவர் கோகுலனின் அத்தானுக்குப் பெரியப்பா முறை, அவருடையதந்தையாரின் ஒன்றுவிட்ட அண்ணன். நெருங்கிய உறவினர். அதனால்தான் அவர் இவர்களைத்தேடிவந்து அழைத்துச்சென்று மடத்திலே தங்கவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இரவைக்குச் சமைக்க வேண்டாமென்றும் இராச்சாப்பாட்டைத் தான் மடத்திலே ஒழுங்குசெய்வதற்காகக் கூறிக் கோயில் வேலைகளைக் கவனிக்க விரைந்தார்.
இந்த மடம் மட்டக்களப்பில் வாழ்ந்த செல்வந்தரான மார்க்கண்டு முதலாளி என்பவரால்கோயிலுக்கு உபயமாகக் கட்டிக் கொடுக்கப்பட்டதாகும். இவரது குடும்பத்தினரேசங்கமன்கண்டிக் கோயிலையும் சிறிதுகாலம் பராமரித்தவர்கள்.
உகந்தை முருகன் கோயில் காட்டுக்குள்ளே மரங்கள் அடர்ந்த இயற்கைச்சூழலில்அமைந்திருந்தது.
கதிர்காம யாத்திரைக்காலம் என்பதால் கோயில் வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும்சுற்றுப்புறத்திலும் கதிர்காம யாத்திரிகர்கள் அங்குமிங்கும் குறுக்குமறுக்கும் திரும்பியதிசைகளிலெல்லாம் ‘தீர்த்தக்கரை’ போல் திரண்டிருந்தார்கள்
(தொடரும்……அங்கம் – 11)
நன்றி: அரங்கம்