சிறுகதை – கடைசி சாவு…… சோலச்சி
தூக்கணாங் குருவிகளின் மெல்லிசையில்தான் ராத்திரி தூக்கத்தையேதொடங்கும் வாகபுரம் கிராமம், அதிகாலையில் சேவல் கூவும் சத்தமும் தூக்கணாங்குருவிகளின் மெல்லிசையும் கேட்டுத்தான் அந்த கிராமம் எப்போதுமே கண்விழிக்கும். இயற்கை விவசாயத்தை மட்டுமே செய்து வந்த கிராமம் அது.
வாகபுரத்தின் வடபுறமும் தென் புறமும் முதன்மைச் சாலைகள் இருந்தன. அவைகிழக்கு மேற்காக இருந்தன. நகரத்திலிருந்து வரும் சாலைகள் வாகபுரத்துமுக்கத்தில்தான் இரண்டு சாலைகளாக பிரிந்து இருந்தன. சாலையில் செல்லும்வாகனங்களை இரண்டு பக்கமும் உள்ள வயல்களில் விளைந்திருக்கும்நெற்பயிர்கள் கையசைத்து வழியனுப்பி வைக்கும்.
வானம் பார்த்த பூமியான அந்த ஊர் புஞ்சைக் காட்டு நிலக்கடலைக்கு நகரத்துச்சந்தையில் எப்போதுமே தனி…. விலைதான். நிலக்கடலையை ஆயும் நாட்களில்அந்த ஊரோ.. திருவிழா போல் காட்சியளிக்கும். கூலிக்கு கடலை ஆய அந்தப்பகுதியைச் சுற்றி உள்ள அனைத்து ஊர் மக்களும் போட்டிப் போட்டுக்கொண்டுவருவார்கள்.
“ஆசப்பட்ட பொருளு இது. வருசம் பூராவாக்கும் ஆயப் போறாம்….”என்றுசொல்லிக்கொண்டே எல்லோரும் வந்து விடுவார்கள். கடலையை ஆய்ந்து ஆளுக்குஒரு குவியலாக குவித்து வைப்பார்கள். அவர்கள் ஆய்ந்த கூடையிலேயே அளந்துபத்து கூடைக்கு ஒரு கூடை கடலை கூலி என்ற கணக்கில் கூலி வழங்கப்படும்.
பல நேரங்களில் கடலை பயிரிட்டவர்களைவிட கூலிக்கு போனவர்கள் வீட்டில்தான்அதிக கடலை இருக்கும். ஏன்னா.. வீட்டுல உள்ளவங்கள்ல சின்னதுபெருசுனு யாரையுமே தட்டிக்கழிக்காம எல்லாருமே கூலிக்குபோவாங்க. அந்தக் கடலைக் கொல்லைகளில் நிழற்குடையாக இருப்பதேவரிசையாக வளர்ந்திருக்கும் துவரைச் செடிகள்தான்.
கடலையைப் பறிச்ச சில வாரங்களிலேயே தொவரையும்காச்சுபக்குவத்துக்கு வந்துரும். தொவர மார வெட்டி எடுத்துகளத்துலப் போட்டு அடிச்சு தொவரத் தனியா மாரு தனியா பிரிச்சுஎடுப்பாங்க. ஒருவருசம் போடுற தொவர ரெண்டு மூனு வருசத்துக்குகுழம்புக்கு வந்துரும். தெனமுமா…பருப்பு கொழம்பு வைக்கிறது.நல்ல நாளு பெரிய நாளுக்கு ஆவதேவைக்கினு பாத்துதானே பருப்புகொழம்பு வைப்பாங்க. மத்த நாளெல்லாம் புளிக்கொழம்பு,காரக்கொழம்பு, மீனு கருவாடு, கறிக்கொழம்புனு பொழப்பு ஓடிரும்.
அடிச்சு எடுத்த தொவரம்பருப்பு அம்பூட்டு பக்குவமா காயவச்சுஅடுக்குப் பானைக்குள்ள பத்திரப்படுத்துனா காலாகாலத்துக்கும்வரும். பானையத் தொறந்தா வாசம் மூக்க இழுத்து பானைவாப்பாட்டுக்குள்ள கொண்டு போயி தினிச்சுரும். அந்தளவுக்குதொவரம்பரும்பு வாசம் இருக்கும். அதுல சமைக்கிறதுக்குத் தனியா…வெதைக்கித் தனியானு வச்சுருப்பாங்க.
அடிச்சு எடுத்த தொவரமாரு ஆட்டுப்பட்டிக்கு வேலியாவும்இருந்துச்சு. அவரக் குழிக்கு படலாவும் இருந்துச்சு.
இப்பேர்ப்பட்ட ஊரில் வக்கீல் செல்லையாவுக்கு மனைவியாக வாக்கப்பட்டாள் நிரோசா.
மாதங்கள் கடந்து வருடம் நான்கானது. இரண்டு பெண் குழந்தைகளுக்குதாயாகியிருந்தாள் நிரோசா. மூன்றாவது குழந்தை வயிற்றுக்குள்உதைத்துக்கொண்டிருந்தது.
வக்கீல் செல்லையா சொந்தமாக வெல்டிங் தொழில் செய்து வந்தார். வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் சுவர் விளம்பரம் செய்து அதன் மூலமாகவும் வருமானம்ஈட்டுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அந்த ஊரிலேயே முதன்முதலாகவைக்கப்பட்ட அறிவிப்பு பலகை வக்கீல் செல்லையா வைத்ததுதான்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த சிறிய குட்டையில்தான் ஆடுமாடுகளும் நாய்களும்எருமைகளும் நீந்துவதுமாக இருந்தன. அவ்வூர் மக்கள் அவசர காலத்திற்கு ஒதுங்கும்இடமாகவும் மாற்றி இருந்தனர். அதனால் கிழக்குப் புறகரை முழுவதும் யாரும் நடக்கமுடியாத அளவுக்கு நாத்தம் குடலைப் பொரட்டி எடுத்தது. அவசரத்துக்கு ஓடிவந்துகிழக்குப் பக்கமா உக்காந்தம்மா கழுவுனமானு இருக்கும்னு நெனச்சவங்களுக்கு அதுஏத்த இடமா இருந்தது. அதனால மூக்க மூக்க ச்சூ…ச்சூ…னு சுழிச்சாலும் அவுங்களுக்குஅந்த நாத்தம் பழகிப் போனதாவே இருந்துச்சு. அந்த ஊரின் குடிநீர் குளமாகவும்அந்தக் குளம்தான் இருந்தது.
இராத்திரியோடு ராத்திரியாக வயலுக்கு தண்ணீர் இறைக்கப் பயன்படும் உடைந்தஎறகாப்பெட்டியை செவ்வகமாக நறுக்கி அதன்மேல் வெள்ளை பெயிண்ட்டை அடித்துகறுப்புப் பெயிண்ட்டால்”இது குடிநீர் அசுத்தம் செய்யாதீர் “என்று எழுதி இரண்டுஆளுயர மரக்கம்புகளை ஊன்றி அதில் கட்டியபோது வக்கீல் செல்லையாவுக்கு வயதுபதினாறு.
பொழுது விடிந்தது. ஊர் முக்கத்தில் இருக்கும் கலப்புக் கடையில் இந்தப் பலகையைப்பற்றியே பேச்சு நடந்தது.
“என்னய்யா….இது… நமக்குத் தெரிஞ்சேதான் இத்தன நாளும் அந்தத்தண்ணியத்தான் குடிக்கிறோம். வெளிய தெருவ யாராச்சும் போனாலும்தண்ணியோடத்தண்ணியா ஒன்னுமண்ணா கலந்துருது. யாருக்கு என்ன நோக்காடுவந்துச்சு…”
“அட…போங்கப்பா… அந்தப் போர்ட பாத்ததுக்கப்புறம் தண்ணி குடிக்கவே மனசுவர மாட்டேங்கிது. இத்தன நாளா இதைய்யா… குடிச்சமுனு கொமட்டிக்கிட்டுவருதுப்பா….”
ஒருவழியாக அது வக்கீல் செல்லையாவின் வேலை என்பது தெரிய வந்தது.
“நமக்கு குடிக்கிறதுக்குனு ஊரணி ஏதாச்சும் இருக்கா. ஊருக்குனு இருக்குறது ஒருஊரணிதான். அதுக்குள்ளயே கழுவிக்கிறோம். அப்பறம் அதையே குடிச்சும்தொலைக்கிறோம். அதுல கெடக்குற தண்ணியெல்லாமே ஒன்னுதான். இதுலயேதண்ணித்தொறனு தனியா பேரு வச்சு அதுல மோந்து வந்து குடிக்கிறோம்.. அங்ககழுவுனா இங்கிட்டு வராதா. இனிமே இந்தக் கொளத்துல எந்த அசிங்கமும் வராமபாத்துக்கனும். அந்தப் பையன் நல்லா இருக்கனும்ய்யா, சொல்லிக்கொண்டேகலப்புக்கடையில் இட்டலியைச் சாப்பிட்டார் பழனியப்பன்.
அங்கிருந்தவர்கள், நீங்க சொல்றது அத்தனையும் உண்மைண்ணே, என்றுஆமோதித்தனர்.
ஆயில் மோட்டார் மூலமாக ஊரணியிலிருந்த தண்ணீர் முழுவதையும்வெளியேற்றினர். ஊரே ஒன்னு சேர்ந்து ஊரணியை தூர்வாரினர். கரையைச் சுற்றிலும்முள்ளை வெட்டிவந்து வேலியாக அடைத்தனர். ஒரு பக்கம் மட்டும் போகவரபாதைக்கு இதம்விட்டு மூங்கில் பட்டையால் கதவும் செய்து கட்டினர். அவசரம்ஆத்தரம்னாலும் ஊருக்கு வெளியேதான் ஒதுங்கனும். ஊரணிப்பக்கம் யாரும்ஒதுங்கக்கூடாதுனு ஊர் கட்டுப்பாடு அரங்கேறியது.
வைகாசி வெய்யிலில் காய்ந்து கொடும்பசியில் கிடந்த ஊரணிக்கு ஐப்பசிமழையால் வயிறு நிறைந்தது. நீண்ட நாளுக்குப் பிறகு சுகாதாரமான தண்ணீரைக்குடிப்பதாக எல்லோரும் உணர்ந்தனர். இப்போது எல்லோரது கண்முன்னாலும் வக்கீல்செல்லையாதான் வந்து போனான்.
வக்கீல் செல்லையாவின் குணத்தைக் கேள்விப்பட்டுத்தான், தன்னை பெண் கேட்டுவந்தபோது மறுக்காமல் ஒத்துக்கொண்டாள் நிரோசா.
“என்னோட வளர்ப்புயா. ஒத்த மாப்புளதான் வந்துச்சு தட்டிக்கழிக்காமஒத்துக்கிருச்சுயா ஏம்..புள்ள..”; என்று பார்ப்பவர்களிடம் பெருமை பேசி வந்தார்நிரோசாவின் அப்பா.
நிரோசாவை திருமணம் செய்தபிறகு வெல்டிங் தொழிலில் வக்கில் செல்லையாவுக்குநல்ல வருமானம் கிடைத்து வந்தது. வெல்டிங் பட்டறையானது வாகபுரம் முக்கத்தில்இருந்தது. வீட்டுக்கு வரும்போது நிரோசாவுக்கு பூவும் குழந்தைகளுக்கு தீனியும்வாங்கிவருவதற்கு வக்கீல் செல்லையா ஒருநாளும் மறந்ததில்லை.
நிரோசா மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டு இருந்தபோதுதான்முதன்மைச் சாலைகள் பிரியும் அந்த முக்கத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. அந்தக்கடையின் வரவால் வாகபுரத்து முக்கமே ஆண்கள் கூட்டத்தால் அலை மோதியது.
வாகபுரத்து ஆண்களின் எண்ணிக்கையை விட அடுத்த ஊர்களிலிருந்து வந்து போகும்ஆண்களின் எண்ணிக்கை பலமடங்காக இருந்தது. இங்கு கடை வருவதற்கு முன்னர்,பீர் பிராந்தி எது வாங்க வேண்டுமானாலும் இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்நகரத்துக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது. அக்கம்பக்கத்து ஊரில் கடமை உணர்ச்சிகொண்ட கட்டிளங்காளைகளுக்கு இந்தக் கடை பேரின்பத்தை வாரி வழங்கியது.
சாராயம் குடிப்பதற்காகவே வாகபுரத்தின் கடலை கொல்லைக்காடுகளைவீட்டு மனைகளுக்காக ரியல்எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரிடம் சொற்ப பணத்துக்குபலரும் விற்றனர். வீட்டில் உள்ள பெண்கள் கடலைக் கொல்லைக்காடுகளை விற்கக்கூடாது என எவ்வளவோ தடுத்தும் ஒருபயனும் இல்லை. சண்டைச்சச்சரவுமட்டுமே மிஞ்சியது. சனநாயகக் கடமையாற்றத் துடிக்கும் அந்த ஆண்களோடுமல்லுக்கட்டி வெல்ல முடியவில்லை. கொல்லைக்காடுகளை ஒட்டு மொத்தமாக வாங்கிமனைகளாக பிரித்தனர்.
“அடேங்கப்பா…. வாகபுரத்து முக்கத்துக்கு சாராயக்கடை வந்ததும்போதும் ஊரேமாறிருச்சுய்யா. எப்ப பாத்தாலும் திருவிழாக்கடை மாறியேதான் இருக்கு. இவ்வளவுசீக்கிரத்துலயே ஊரு வளர்ந்துருச்சே….” என சிலரின் மனசுக்குள் எண்ண ஓட்டம்ஓடியது.
“சாராயத்தக் குடிக்க மனுசனுங்க கூட்டம்கூட்டமா வர்றானுங்க. குடிச்சுஅழியுறதுக்கும். குடும்பம் வளருறதுக்கும் என்ன சம்பந்தம்…” இப்படியும் சிலர்எண்ணிக்கொண்டனர்.
“இன்னமே வர்ற காலத்துல வீடு கட்ட எடமே கெடைக்காதாம்..” என்றுசொல்லிக்கொண்டே தான் விற்ற நிலத்திலேயே நான்கு மனைகளுக்கு பணம்கட்டினாள் சாரதா.
பலரையும் அரவணைத்துக்கொண்ட அந்த டாஸ்மாக் வக்கீல் செல்லையாவையும்விட்டு வைக்கவில்லை. பலரும் குடிக்கும் அந்த திரவியத்தை தொட்டுநக்கியாவது பார்த்துவிட வேண்டும் என்பது அவரது ஆசை. அந்தருசி எப்படி இருக்குமுனே உணராம செத்துப்போயிட்டாவாழ்ந்ததுக்கே அருத்தம்பொருத்தம் இல்ல… என்று நாக்கைச் சுழட்டிஎச்சில் விழுங்கினான். எச்சிலை விழுங்கியவன் அதையும் விழுங்கதுணிந்தான்.
மாதம் ஒருமுறை என்று மறைமுகமாக குடித்துவந்த வக்கீல் செல்லையா நாளடைவில்மற்றவருக்கும் வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு பெரும்குடிகாரனாகவேமாறிப்போனார்.
மூன்றாவதாய் நிரோஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோதும் டாஸ்மாக் கடைவாசலில் இருக்கும் ஆலமரத்து அடியில் குடித்துவிட்டு மல்லாக்க கிடந்தார் வக்கீல்செல்லையா. பிறந்த குழந்தையை நான்கைந்து நாள் கழித்துதான் பார்த்தார்.மூன்றாவது குழந்தை பிறந்ததும் நிரோசா குடும்பக் கட்டுப்பாடும் செய்துகொண்டாள்.
குடியே முதன்மைத் தொழிலாக மாறிப்போன வக்கீல் செல்லையா வெல்டிங்பட்டறைக்கு மூடுவிழா கொண்டாடினார். நிரோசா எவ்வளவோ கெஞ்சியும் அவர்எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
“கொப்பன்வூட்டு சொத்தையா விக்கிறேன். என்னோட ஒழமையில வந்ததுடி.எவனும் எனக்கு சும்மா குடுக்கல. என்னம்மோ நீ பெரிய கலைக்கிட்டரு மாறிகேள்வி கேக்குறா. நானே வக்கீல் மாறி பேசுறதுனாலதான் ஊருப்பயலுகபூராபேரும் வக்கீலுனு சொல்றானுக. எவன்கிட்டயாவது போய் செல்லையாவதெரியுமானு கேளு. ஒரு பயலுக்கும் தெரியாது. ஆனா… வக்கீல் செல்லையானாசுத்துப்பட்டு ஊருநாட்டுக்கே தெரியும்டி. நீ என்னடானா ஏங்கிட்டயே கிராசுகேள்வி கேக்குற. இப்புடி பேசுனேனு வையி நீ கொண்டுவந்தஅத்தனையவும் தூக்கிட்டு ஒப்பன்வூட்டுக்கு ஒடிப்போயிரு… நிரோஷாவின்தலைமுடியை இறுகப்பிடித்து ஒரு ஆட்டுஆட்டி கீழே தள்ளினார்.
அவரிடம் இதுபோன்ற பேச்சுகளை அடிக்கடி கேட்க ஆரம்பித்தது மட்டுமல்லாமல்அடியையும் மிதியையும் சேர்த்து வாங்க ஆரம்பித்தாள் நிரோஷா.
தன் பெற்றோர் உதவியுடன், குடியை நிறுத்த நாட்டு மருந்து கொடுக்கும்காரைக்குடியில் இருக்கும் நாட்டு வைத்தியசாலைக்கு அவரை அழைத்துச்சென்றபோது மூத்திரம் வருது என்று சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் தப்பிஒடிவந்துவிட்டார்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தாவது கடையை மூடிவிடலாம் என்றுநினைத்து மனு எழுதி பெண்கள் சிலரிடம் கையெழுத்து கேட்டாள் நிரோசா.
“நமக்கெதுக்குடி வம்பு. அந்த ஆம்பளைங்க எங்கிட்டோ குடிச்சு தொலஞ்சுட்டுநம்ம உசுர எடுக்காம இருந்தா சரி. அதவிட்டுட்டு மனுகினு கொடுத்து அப்புறமாநம்ம வீட்டு ஆம்பளைககிட்ட எவடி வாங்குப்படுறது…, சாரதா சொல்லும்போதே”இப்ப ஏ..வீட்ல ஏம்புட்டு ஆம்பளயா ஒழச்சு கொட்டுறாரு விடுடி…..”என தன்பங்குக்குச் சொன்னாள் காந்திமதி.
நிரோசா மட்டுமே துணிச்சலோடு மனு கொடுத்தும் பயனில்லாமல் போனது.
நாளுக்கு நாள் வாகபுர முக்கத்தில் குடிமகன்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. சாலையோரத்தில் நான்கைந்து அசைவ தள்ளுவண்டி கடைகளும் முளைக்கத்தொடங்கியிருந்தன.
புருசனின் பிக்கல்புடுங்கல் அதிகமானது. செத்துப்போய்விடலாம் என்று வீட்டு மூலையில் படுத்து அழுதுபுலம்பினாள். கண்ணீரை துடைத்துவிடுவதற்கு தனது கைகளும்குழந்தைகளும் மட்டுமே துணையாய் நின்றனர். ஊரறியகல்யாணம்காச்சி பண்ணி வந்தேன். ஒருத்தனுக்கு முந்தானையவிரிச்சு மூனுபுள்ளைய பெத்துருக்கேன். அவனோட வாழ்ந்த வாழ்க்ககெட்டகனவா தொலஞ்சு போகட்டும். புள்ளைகளுக்காக வாழ்ந்தேதீரனும்னு தீர்க்கமாக எண்ணினாள். ஏதேதோ யோசனையில்மூழ்கினாள். முடங்கிக்கிடந்தவள் தலை முடியை அள்ளிமுடிந்துமுகத்தைக் கழுவினாள். பிள்ளைகள் மூனுபேரும் இவளின்முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று பேரையும்அணைத்து கக்கத்தில் வைத்துக் கொண்டாள். வக்கீல் செல்லையாவைகைகழுவிவிட்டு பிள்ளைகளுக்காக பிழைப்புக்கான வழியைத் தேடினாள் நிரோசா.
வக்கீல் செல்லையாவுக்கு டாஸ்மாக் அருகில் இருக்கும் ஆலமரம்வீடாகவும் சாராயம் சாமியாகவும் மாறிப்போயிருந்தது. வருமானத்துக்குவழியில்லாமல் கையாலாகாதவராய் அங்கேயே கிடந்தார். வெயில் காலங்களில்ஆலமரத்திலும் மழைக்காலங்களில் பேருந்து நிழற்குடையிலும் தங்கஆரம்பித்தார். அத்தி பூத்தது போல் என்றாவது வீட்டுக்குப் போய் வந்தார். அதுவும்நிரோசாவிடம் அதிகபட்சம் இருபது ரூபாய் வாங்குவதற்காக செல்வார்.
வக்கீல் செல்லையா வீட்டுக்கு வரும்போதெல்லாம்”கட்டியபாவத்துக்கு இந்த பாவத்தையும் செஞ்சுத்தான் ஆகனும்…” என்றுசொல்லிக்கொண்டே வீட்டுத் திண்ணையில் பணத்தை வைக்க அவர்எடுத்துக்கொண்டு போய்விடுவார்.
வெல்டிங் பட்டறையை மொத்தமாய் விற்றுவிட்டு வெறும் ஆளாய்கிடந்த வக்கீல் செல்லையா குடிப்பதற்காக வருவோர் போவோரிடம்கையேந்தவும் தயாரானார். சிலர் கோபத்தில் காரித்துப்பினாலும் சிரிச்சுக்கிட்டேமீண்டும் கையேந்தி விடுவார். சிலர் தனது கோபத்தை வக்கீல்செல்லையாவிடம்தான் காட்டுவார்கள். ஓசியில் யாரும் கொடுக்கவில்லை என்றால்குடித்துப்போட்ட பாட்டில்களிலிருந்து ஒவ்வொரு சொட்டாக வடித்து காலி பாட்டில்ஒன்றில் சேமித்து குடித்தார்.
அப்படி ஒருநாள், கீழே கிடக்கும் பாட்டில்களை மொத்தமாகபொறுக்கி வந்து குக்கிக்கொண்டு ஒவ்வொரு சொட்டாக வடித்தார்.
குழந்தைகளின் பால்சங்கு அளவுக்கு சேகரித்துக்கொண்டுஇருந்தபோது பக்கத்திலேயே தெருநாய்கள் லொள்….லொள்…வவ்…வவ்… என சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சண்டையிடுவதுகூட தெரியாமல் பாட்டில்களில் ஒளிந்து கிடக்கும் ஒவ்வொருசொட்டையும் சேகரிப்பதிலேயே தீவிரம் காட்டினார். சண்டை முற்றிஒன்றோடொன்று கடித்துக்கொண்டு நாலாபக்கமும் சிதறி ஓடின.
சிதறி ஓடிய நாயொன்று சேகரித்த பாட்டிலில் தடுமாறி குப்புறவிழுந்து ஓடியது. பதறிப் போனார் வக்கீல் செல்லையா.
“இதுனால நானு செத்தாலும் பரவாயில்ல. பொழுது விடிஞ்சுச்சோஇல்லோயோனு இல்ல.. அப்பவுலருந்து ஒவ்வொரு சொட்டா வடிச்சுஎடுத்துக்கிட்டு இருக்கேன்… கொப்பந்தன்னான.. ஒங்களுக்கு இருக்ககொழுப்பு…..” என கத்திக்கொண்டே கையில் கல்லைஎடுத்துக்கொண்டு நாயை விரட்டிக்கொண்டே ஓடினார். உயிரைப்பறிகொடுத்த நிலைக்கு தள்ளப்பட்டு துவண்டு போனார்.
பொறந்த ஊரில் சொகுசாக வாழ்ந்தவள்.. புகுந்த ஊரில்பிள்ளைகளுக்காக வேலங்குடிப்பட்டி கல்குவாரிக்கு வேலைக்குப் போகஆரம்பித்தாள் நிரோசா. வீட்டை மறந்த வக்கீல் செல்லையா ஆலமரமே கதியென்றுகிடந்தார். நிரோசாவும் தன் வேதனைகளை மனசுக்குள் பூட்டிக்கொண்டுபிள்ளைகளை மட்டும் கவனிக்க ஆரம்பித்தாள்.
வக்கீல் செல்லையா மேல் இரக்கப்பட்டு யாராவது நிரோசாவிடம் சொன்னால்,ஏதோ கதை கேட்பது போல் கேட்டு விட்டு “யாரோட மூத்தரம் எதுல போகுது எதுக்குபோவுதுனு பாக்குறதா ஏம்புட்டு வேல. புள்ளைகள கர சேக்க நா..படுற பாடுபத்தாதாக்கும்….” சொல்லிவிட்டு தனது வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவாள்.
“ஒன்னோட அண்ணந்தம்பிகதான் நல்ல வசதியா வாழுறாகள்ள. அவுக கூட போயிஇருந்தா ஒனக்கும் ஓம்புள்ளையளுக்கும் கஞ்சி தண்ணி ஊத்தமாட்டேனாசொல்லிருவாக. எதுக்குடி இப்புடி செரமப்படுற…”தன்னோடு வேலைபார்க்கும் காந்திமதி சொன்னபோது “எரந்து குடுச்சாலும் இங்க குடிப்பேனே தவிரஏம்புட்டு பொறந்தவனுகளுக்கு கேலியவும் கேவலத்தயும் கொடுக்க மாட்டேன்,குரல்தாழ்ந்து சொன்னாள் நிரோசா.
கல்குவாரியில் “இங்கேரு நிரோசா… இந்த எள வயசுல எதுக்கு கல்லுக்காட்டுல வந்துவெந்து சாகுற. இந்த குவாரி தூசி கூட ஒனக்கு மட்டும் புட்டமாஅடிச்சுவிட்டுருக்கமாறியே அழகா ஒம்புட்டு மொகத்த வச்சுருக்குது. மொகம்கொஞ்சூண்டு வாட்டமா இருந்தாலும் மத்ததுயெல்லாம் இன்னும் சோடபோகாமத்தான் இருக்கு. என்னயமாறி ஆளுகள கவனிச்சுக்கிட்டா வாரத்துல ஒருநாகூலிய சேத்து கொடுப்போம்ல,என்று சோலை சொன்னதுதான் தாமதம்….
“இந்த ஓலப்பாம்பதான் அன்னக்கி ஒருத்தி வீதில வச்சு வெலக்கமாத்தாலயேஅடிச்சா. இன்னும் சாகாம ஏங்கிட்டதான் அடி வாங்கி சாவேனு அலையிது. என்னக்கிசாகப் போகுதோ தெரியல”நிரோசா கொதித்ததும் விருட்டென திரும்பி நடையைக்கட்டினார் சோலை.
“ஓம்புட்டு நெலம அறிஞ்சுதானடி அந்த ஆம்பள சொன்னுச்சு. வளஞ்சு நெழிஞ்சுபோகலனா எப்புடிடி மூனு புள்ளைகள காப்பாத்த போற. ஒலகத்துல எவடிஒருத்தனுக்கே முந்தானிய விரிச்சுருக்கா. உள்ள போயி பாத்தாதான்டி அவளுகயோக்கித என்னனு தெரியும். ஆத்து மணல எண்ணுனாலும் எண்ணலாமேதவிர அர்ச்சுணன் மனைவிகள எண்ண முடியாதுனு காலங்காலமாபொழக்கத்துல இருக்குடி. கும்புடுற சாமிக்கே கணக்குவழக்கு இல்ல.சாதாரண ஆம்பளைக வச்சுக்கிறதுல என்னத்தடி தப்ப கண்டு புடுச்ச.அந்த ஆம்பள மனசு புருஞ்சுக்காம சுருக்குனு சுட்டுப்புட்ட……”என்றுநியாயப்படுத்தினாள் மாரியம்மாள்.
“ஒடம்ப வித்துதான் ஏம்புட்டு புள்ளைகள காப்பத்தனுங்கிற நெலம வந்துச்சுனா.புள்ளைகளுக்கும் கொஞ்சம் வாங்கி ஊத்திட்டு நானும் நாண்டுக்கிட்டு செத்துப்போயிருவேன். மானத்தோட வாழ நெறய வழி இருக்குக்கா. நா சின்னப்பன் மக.என்னய லேசா நெனச்சுறாத….”கண்கள் சிவக்க பேசிய நிரோசாவால் அதிர்ந்துபோனாள் மாரியம்மாள்.
ஆலமரத்தடியில் வக்கீல் செல்லையா செத்துக் கிடப்பதாக ஒருவர் சொன்னதைக்கேட்டு, மூன்று குழந்தைகளுடன் விக்குவிக்கு என நடந்தே வந்து சேர்ந்தாள்நிரோசா. ஓசி சாராயமும் எச்சி சாராயமும் குடித்து குடித்து சோறு தண்ணி இல்லாமல்உடல் வற்றி மெலிந்து போய் கிடந்த வக்கீல் செல்லையாவை உற்றுப் பார்த்தாள்.
“செத்தது சரி. அப்பாடா… இனிமே ஓசி சரக்கு கேட்டு நம்மல தொல்ல பண்ணமாட்டான்….”
“தூங்குறானுதானய்யா நெனச்சோம்… தூக்கத்துலயே போயிட்டானோ…”
“எப்புடி தெரியுமா வாழ்ந்தான். எல்லாம் கெரகம்ய்யா. பாவம்ய்யா அந்தப் புள்ள….”அங்கு நின்றவர்கள் பேசிக்கொண்டனர்.
நிரோசா, வக்கீல் செல்லையாவை தரதரவென இழுத்து வந்து கடை முன்னால்போட்டு அமர்ந்தாள். “ஏம்மா பொணத்த அங்கிட்டு தூக்கிட்டு போறியா இல்லபோலீசுக்கு போனப் போட்டு சொல்லவா…”கடை ஊழியர் சண்டையிட தனதுகண்களை உருட்டி விழித்தாள்.
“முடிஞ்சா போன் போட்டுக்க..” என்று பதில் சொல்வது போல் இருந்ததுஅவளின் பார்வை. தனது கையில் பெரிய கம்பு ஒன்றையும் வைத்திருந்தாள். காளிகோயிலில் உள்ள சிலை போல் அவள் தன் பிள்ளைகளுடன் அசையாதுஅமர்ந்திருந்தாள்.
கூட்டம் கூடியது. சற்று நேரத்தில் ஐந்தாறு காவலர்கள் ஜீப்பிலிருந்து இறங்கிபிணத்தை அப்புறப்படுத்த நினைத்தபோது உரக்க கத்தினாள்.
“இந்த மனுசனோட சாவுதான் கடைசி சாவா இருக்கனும். இந்தக் கடைய இழுத்துமூடுற வரைக்கிம். நா இந்த எடத்தவிட்டு நகரவே மாட்டேன். தொந்தரவு பண்ணநெனச்சீக இதே எடத்துல அத்தன பேரும் மண்ணெண்ணெய ஊத்திக்கிட்டுசெத்துருவோம்….” என்று அவள் கத்தினாள். டாஸ்மாக் கடை முன்புநிரோஷா காவலர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள்என்பதை கேள்விப்பட்டு வாகபுரத்து பெண்களோடு பக்கத்து ஊர் பெண்களும்சாலையில் அமர்ந்து சாராயக்கடைக்கு எதிராக மறியலில் ஈடுபட்டனர். அவர்களதுகைகளில் விலக்கமாறும் மண்ணெண்ணெயும் தீப்பெட்டியும் இருந்தது.
—*—
[ சோலச்சி solachysolachy@gmail.com ]
வாகபுரம் வார்த்தை உச்சரிப்பிலேயே அந்த கிராமத்தை மனதில் காட்சியாக கட்டி இழுத்து வந்துவிடுகிறது.