கதைகள்

திருப்பள்ளி எழுச்சி!..சிறுகதை -சங்கர சுப்பிரமணியன்.

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம். அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம். கவிஞர் வாலி எழுதிய பாடல் எத்தகைய பொருள் புதைந்தாக இருக்கிறது என்று எண்ணினேன். ஆனால் அன்று ஏதோ ஒரு சுபதினமாம். வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன் என்று பாடியபடி வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள் வானதி.

வள்ளிக் கணவன் பேரைச்சொல்லி கூந்திலில் பூ முடித்தேன் என்று ஏனோ சம்பந்தா சம்பந்தமின்றி பாடிக் கொண்டே கோலமிட்டாள். சரியாகத்தானே பாடுகிறாள் அபிஷ்டாட்டம் பினாத்துறானே என்று சடகோப மாமா மனதில் நினைப்பது எனக்கு புரிகிறது. ஆனால் வானதி குளித்து முடித்து தலைமுடியின் ஈரம்போக துண்டை சுற்றியிருப்பதை அறியும் அளவுக்கு அவருக்கு ஞானக்கண் இல்லயடி குதம்பாய் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

“அடியே வானதி நாழியாறது எம்மா நேரம் கோலத்திலேயே குடி கொண்டிருப்பாய்?” என்று கேட்டபடி அடுக்களையில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தபடியே மகளை விரட்டிக் கொண்டிருந்தாள் ஜானகி.

“வந்தடறன்மா. பண்டிகை நாளும் இதுமா ஒரு நல்லகோலத்த ஒழுங்கா போட விடமாட்டியே” என்று தன் பாட்டினூடே தாய்க்கு பதிலளித்தாள் வானதி.

“சரி சரி சீக்கிரமா கோலத்த முடிச்சுட்டு கோதண்டராமன எழுப்பு. அந்த கம்ப்யூட்டரில் அப்படி என்னதான் இருக்கோ ராத்திரி பன்னிரண்டுமணி வரை அதோடு ஐக்கியமாயிடுறான். நல்ல நாளில் கூட சீக்கிரமா எழுறதில்லை” என்று அம்மா தன் அங்கீகாரத்தை நிலை நாட்டிக் கொண்டிருந்தாள்.

ஆமாம். அன்று பண்டிகை நாள். அதாவது அன்று ஒரு சுபதினம். வழக்கத்துக்கு மாறாக கோழிகூவுமுன் எழுந்து ஏற்படுத்திய ரகளையால் எதிர் வீட்டுச் சுவரில் குந்தியிருந்த கோழியே குழம்பி கூவலாமா வேண்டாமா என்று குழம்பிப் போயிருந்தது.

போதாக்குறைக்கு வானதியின் அப்பா வைத்தியநாதன் அவர் பங்குக்கு திருப்பள்ளி எழுச்சி பாடலை கைபோனில் கதறவிட அடுத்தவீட்டு அம்புஜத்தின் இரண்டு வயது குழந்தை திடீரென ஒலித்த குரலால் விழித்து அதுவும் திருப்பள்ளி எழுச்சிக்கு சுதி சேர்த்தது.

அம்மாவின் கட்டளையை சிரமேலேற்ற வானதி கோலத்தை முடித்த கையோடு தம்பியின் அறைக்கு சென்று கோதண்டா கோதண்டா என்று கூவ ஏற்கனவே விழித்திருந்த கோதண்டராமன் போர்த்தியிருந்த போர்வைக்குள்ளிருந்தவாறே,

“வானு நீங்கள்ளாம் பண்ற ரகளையில நான் ஏற்கனவே விழிச்சுட்டன். நீ வேற கோதண்டா கோதண்டான்னு தண்டமா ஏலம் விடாத” என்றான்.

“ஆமண்டா அம்மா எழுப்பச் சொன்னாங்கன்னு ஆசையா வந்த எழுப்பபுனா நீ இதையும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ. தண்டமாம் தண்டம். பேர் வச்சவங்கள போய்க கேளு” என்று சொல்லியபடி சட்டென்று கதவை சாத்தி விட்டுச் சென்றாள்.

சிறது நேரம் சென்றது. அடுக்களைக்கு வந்த வைத்திய நாதன் மனைவியிடம் என்ன உன்மகன் குளிக்க போறானா இல்லயா? இல்ல நான் போகட்டுமா? அவன் பாத்ரூமுக்குள்ள போனா பாதிநாள் போய்விடும் என்றார்.

அதற்கு ஜானகி எல்லோரும் என்கிட்டயே வாங்க. அவன் உங்களுக்கும் மகன்தானே அத அவன்கிட்டய கேட்கப்படாதா என்றாள்.

கணவன் மனைவிக்குள் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே என்ன இங்க புது பஞ்சாயத்து என்றபடியே கோதண்டராமன் அங்கு வந்து சேர்ந்தான்.

இல்லடா, உன்னை எழுப்பச்சொல்லி வானதிக்கிட்ட சொன்னன். இப்ப அப்பா வந்து யார் முதலில் குளிக்கப் போறதுன்னு கேட்கிறார் என்றாள் ஜானகி.

அம்மா நீங்க என்ன எழுப்பச் சொல்லியிருக்கவே வேண்டாம். நீங்க பாடவிட்டிருக்கும் திருப்பள்ளி எழுச்சியே கடைக்கோடி வீட்டில் காசநோயால் சிரமப்பட்டு அதிகாலயில் கண்ணயர்ந்திருக்கும் கந்தசாமி மாமாவையே எழுப்பி விட்டிருக்கும். நான் எழுந்திருக்க மாட்டேனா அம்மா என்றான்.

ஆமாண்டா திருப்பள்ளியெழுச்சி பாடலைப் போட்டால் அதுக்கெல்லாம் ஒரு நக்கல் நையாண்டி என்று சொன்ன தாயிடம் இதுக்கெல்லாம் அலுத்துக்காதம்மா. இப்பல்லாம் கடவளை எழுப்ப திருப்பள்ளி எழுச்சி பாடும் முன்னே கடவுளே

மனிதர்களுக்கு வந்து திருப்பள்ளி எழுச்சி செய்து எழுப்பி விடுகிறார் அம்மா என்றான்.

“என்னடா குதர்க்கமா பேசுற!” என்றாள் அம்மா

“குதர்க்கமும் இல்ல ஒன்னும் இல்ல உண்மையைத்தான் சொல்றன்”

“அப்படி என்னடா உண்மை?”

“இதோ பார் உண்மை” என்று கைபேசியில் வாட்ஸ்அப்பை காட்டினான்.

அதில் காலை ஐந்து மணிக்கு முருகக் கடவுள் காலை வணக்கம் கூறி எழுப்பியிருந்தார். ஐந்நு ஐந்துக்கு விநாயகப் பெருமான் காலை வணக்கம் கூறி நித்திரை கொள்ளவிடாமல் தடுத்தார். தொடர்ந்து ஐந்துபத்துக்கு இலட்சுமிதேவி ஐந்து பதினைந்துக்கு சிவபெருமான் என்று ஒருவர்மாற்றி ஒருவராக காலைவணக்கம் கூறி எழுப்பி விட்டார்கள் அம்மா என்று இயல்பாகச் சொன்னான்.

ஜானகிக்கு பதில் சொல்ல முடியவில்லை. இதைத்தான் கலிகாலம் என்பதா? உண்மையில் கலி முத்தித்தான் போச்சு. இந்த வாட்ஸ்அப் வந்தாலும் வந்தது கடவுளெல்லாம் சேவர்களாக வந்து காலைவணக்கம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் என்றவள் நமோ

நாராயணா என்றபடி குக்கர் விசில் சத்தம் எழுப்ப அடுக்களைக்குள் நுழைந்தாள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.