தீயடி அரவம் – சிறுகதை – 45….அண்டனூர் சுரா
குழந்தை பயத்தில் நடுங்கி கண்களை இறுக மூடிக்கொண்டு கேட்டது, “அம்மா சுடாதா?” தாய் தன் முந்தானையால் குழந்தையின் உடம்பை இறுகப் போர்த்தி மார்போடு இறுக அணைத்தாள்.தலை முடிகளைக் கோதிக்கொடுத்தாள். அம்மாவின் அரவணைப்பிலிருந்து மெல்ல எழுந்தது குழந்தை.போர்த்தியிருந்த சேலையை மெல்ல விலக்கி பிறந்த மேனியாக நின்றது.
“அம்மா, சுடாதா?”
திரும்பவும் அதேக் கேள்வி. எத்தனையோ முறை இந்தக் கேள்வியை அந்தக் குழந்தைகேட்டுவிட்டது. சுடாதா, சுடாதா என்று. குழந்தை கேள்வி கேட்கையில் காற்றுக்கு விலகிக்கொடுக்கும்கிளையைப் போல அவள் முகத்தை வேறொரு பக்கமாகத் திருப்பிக் கொண்டாள். நீரடித்து நீர் விலகும்.குழந்தை அடித்து தாய் விலகினாள்.
ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்கும் குழந்தையின் முகத்தை அவளால் பார்க்கமுடியவில்லை. அப்படியாகப் பார்க்க அவளுக்குத் திடமில்லை. குழந்தையின் மீதான பாசப் பிசுபிசுப்புமனதிற்குள் உப்பாக அறைப்பட்டது. தாய் எழுந்தாள். குழந்தையின் உச்சந்தலையில் கையை வைத்தாள்.தடவிக்கொடுத்தபடி சொன்னாள். “சுடாதடி தங்கம், சுடாது….”
குழந்தை, தாயின் வலதுகை ஆட்காட்டி விரலைப் பிடித்திருந்தது. தாயின் முகத்தை ஒரு கணம்நிமிர்ந்துப் பார்த்துக் கேட்டது. “ உன் விரலே சுடுது, நெருப்பு சுடாதுங்கிறே..”
நெருப்பு சுடுமோ இல்லையோ அவனது கேள்வி அவளைச் சுட்டது. குழந்தையின் முகம் பார்த்துகுனிந்தாள். அவளது முகவாய்க் கட்டைக்குக் கைகளைக் கொடுத்து உயர்த்தினாள். குழந்தையின் மூக்கைஅள்ளிக் கொஞ்சி முத்தம் கொடுத்தாள். அம்மா பொய் சொல்வேனா? நெருப்பு எல்லாரையும் சுடாதடிதங்கம். தங்கம் செய்றதே நெருப்பிலதான். நீ தங்கமடி. உன்னைச் சுடாது…..
அம்மா மார்பு காம்பிலிருந்து வரும் பால் சுடுகிறது. கண்களில் வழியும் கண்ணீர் சுடுகிறது.வியர்வை, மூச்சு, மூத்திரம்….அத்தனையும் சுடுகிறது. ஏன்ம்மா நெருப்பு மட்டும் சுடாது? குழந்தைகேள்விக்கொத்துகளை மனதிற்குள் கேட்டுக்கொண்டது.
தாய் இன்னொரு கணம் குழந்தையின் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள். குழந்தையைத் தூக்கி தன்மடியில் அமர்த்திக்கொண்டாள். குழந்தையின் பிறந்த மேனியின் உடல் தாயின் சேலை, பாவாடையைத்தாண்டி தொடைகளைத் தகித்தது. குழந்தை தாயின் பக்கமாகத் திரும்பி முகத்தைப் பார்த்தது.குழந்தையின் பார்வைக்குத் தாயின் முகம் தெரியவில்லை. கலங்கிப்போயிருந்த அவளது கண்கள்தான்தெரிந்தன.
இல்ல, சுடும். நீ பொய் சொல்றே. பாரு உன்னோட கண்ணு கலங்கிப்போயிருக்கு
தாய் குழந்தையின் முகத்திலிருந்து பார்வையை எடுத்து சுவற்றுப் பக்கமாகத் திரும்பிக்கொண்டு,மாராப்புச் சேலையை எடுத்துக் கண்களை ஒத்திக்கொண்டாள்.
ஏன்ம்மா அழுறே? தாயின் முகவாயை அள்ளியபடி கேட்டது.
தாய் தலைப்புச் சேலையில் கண்களில் பூத்துத் தள்ளிய கண்பூழை, அழுகையில் ஒழுகும் நாசிச்சளி, வாயின் இரு புற விளிம்புகளில் பூக்கும் வெண்பூத்த எச்சிலை ஒத்தி எடுத்தவளாய் சொன்னாள்,அம்மா கண்ணிலத் தூசி விழுந்திருச்சா, அதான்,..இதைச் சொல்கையில் அவளது உதடுகள்துணுக்கிற்றன.
இல்ல, நீ பொய் சொல்ற
தாய் சிரித்தாள். செயற்கையான சிரிப்பு. அழும் முகங்கள் சிரிப்பை அமங்கலமாக காட்டுகின்றன.சிரிப்பு என்பது முகம் பூப்பது. இவளோ உதடுகளைச் சுழித்தாள்.
குழந்தை தாயின் கண்களைப் பார்த்தது. கண்களில் துயரோட்டம் மெல்லிழையாக ஓடிக்கிடந்தது.சற்றுமுன் சுழித்த உதடுகளை மேலும் ஒரு சுழிப்பு சுழித்து, ‘அம்மா சிரிக்கிறேன் பார்’ என்றுசொல்வதைப் போல உதடுகளை விரித்தாள். குழந்தை உதடுகளைப் பார்க்கவில்லை. தாயின் கண்களைப்பார்த்தது.
குழந்தைக்கு நான்கு வயதுதான். ஆனால் கேட்கின்ற கேள்வியில் தலைமுறை முதிர்ச்சி இருந்தது.அக்குழந்தையை அள்ளுவதா, கொஞ்சுவதா, இல்லை ஒரே அதட்டில் அதட்டி அதன் பிஞ்சு மனதைப்பொசுக்குவதா…தாய்க்குத் தெரியவில்லை.
தாய், தன் மூத்த மகளை எழுப்பினாள். அவள் எட்டாம் வகுப்பு படிக்கிறவள். பள்ளிக்கூடம்போவதற்காகவே பிறந்தவள் போல படிப்பில் படுசுட்டி. சொற்களின் உள்ளார்ந்த ஈரத்தைக் கவனிப்பவள்.கேள்விக்குப் பதில் சொல்கிறவளில்லை. கேள்வியின் காம்பாக இருக்கும் தொனிக்குப் பதில்சொல்கிறவள்.
தாய் மகளிடம் கேட்டாள். என்னடி, என் கண்ணு சிவந்தா இருக்கு?”
மூத்தவள் எழுந்திருக்கவில்லை. தாயின் முகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் பதில் சொன்னாள்,இல்லேம்மா..
பார்த்தீயா உன் அக்காவே சொல்றாள். நான் அழலடி தங்கம்…
குழந்தை சொன்னது, இல்ல, நீ அழுதே. நான் பார்த்தேன்
அடுத்து தாய் மகனை எழுப்பினாள். அவன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான். நீ சொல்லுடா,அம்மாவோட கண்ணு கலங்கியா இருக்கு?
அவன் எப்பொழுதும் அக்காள் கட்சி. அக்காள் என்ன சொல்கிறாளோ அதை அப்படியே சொல்கிறவன். இல்லேம்மா
தாய் குழந்தை பக்கமாகத் திரும்பினாள். “ இப்ப சொல்லடி தங்கம், நான் அழுகிறேனா?”
குழந்தை அக்காள், அண்ணன் இருவரையும் ஒரு கணம் பார்த்துவிட்டுச் சொன்னது.ஆமாம்,அழுறேதான். கண்ணு பாரு சிவந்திருக்கு…
அக்கா குழந்தையைத் தூக்கி நெற்றியில் முத்தம் கொடுத்தாள். அம்மாவோட கண்ணு அழுதுசிவக்கலைடி. கண்ணுவலியால சிவந்திருக்கு
குழந்தை அக்காவின் இடுப்பில் நன்றாக உட்கார்ந்துகொண்டு தோள்ப்பட்டையை இறுகப்பிடித்துகொண்டது. அதன் நாசியில் நூல் போல சளி ஒழுகிக்கொண்டிருந்தது. அதை தன் இரண்டுவிரல்களால் அள்ளி தன் பாவாடையில் துடைத்துகொண்டாள். தன் வெளிப்பாவாடையை எடுத்துகுழந்தையின் முகத்தைத் துடைத்து அதன் கன்னத்தில் ‘பசக்’கென ஒரு முத்தம் கொடுத்தாள்.
அக்காள் எப்பொழுது முத்தம் கொடுத்தாலும் குழந்தை பதிலுக்கு அதே அளவு முத்தத்தை வட்டியும்முதலுமாகச் சேர்த்து கொடுக்கும். அன்றைய தினம் குழந்தை பதிலுக்கு முத்தம் கொடுக்கவில்லை.அக்காவின் கண்களைப் பார்த்தவாறு இடுப்பில் வெறுமென உட்கார்ந்திருந்தது.
“அக்காவிற்கு முத்தம்?”
“நான் தரமாட்டேன்”
” ஏன்?”
“நா ஒன்னு கேட்பேன். சொன்னா முத்தம் தருவேன்..”
” இம், கேளு….”
குழந்தை, தாய் இருக்கிற பக்கம் திரும்பிப் பார்த்தது. அவள் படியில் அமர்ந்து சுவரில் சாய்ந்துவிட்டத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். தாய்க்குக் கேட்டுவிடாதபடி குழந்தை அக்காவின் காதிற்குள்கேட்டது.”அக்கா, நெருப்பு சுடும்தானே?'”
அக்காள், முகத்தைச் சட்டென வேறொரு பக்கமாகத் திருப்பிக்கொண்டாள். அவளது கண்களில்நீர்ச்சுனை பொங்கியது. உதடுகள் கத்தரித்த இறகுகள் போல துடித்தன. இமைகள் படக்,படக்கெனவேகமாக அடித்துகொண்டன. அவள் ஒரு பதிலும் சொல்லாமல் நின்றாள்.
” நான் கண்டுபிடிச்சிட்டேன். சுடுந்தே, அம்மாவும் நீயும் பொய் சொல்றீங்க.” குழந்தை காணாதஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல சொன்னது.
அக்காக்காரிக்குப் பேச்சு வருவேனா என்றது. பேச வாய்த் திறந்தால் வார்த்தைக்குப் பதில் அழுகைஉதடுகளில் முட்டியது. குழந்தை, அக்காளின் கண்களைப் பார்த்தது. அவளது கண்கள் குளத்தில் எறிந்தகல்லாக கலங்கியிருந்தன. அக்காள் உடம்பைக் குலுக்கி சிணுங்கினால் போதும். குழந்தை உடைந்துஅழுதுவிடும். அப்படியாக அழுதால் அவ்வளவேதான்! ஒரு வார கற்பிப்பு, திட்டமிடல் அத்தனையும் வீண்என்றாகிவிடும்.
” அக்கா, உன் கண்ணு ஏன் கலங்குது?”
அவள் கண்களை குழந்தையிடம் காட்டினாள். “கண்ணுல தூசி விழுந்திருச்சு. அக்காவுக்குஊதிவிடு”
குழந்தை தன் கைகளால் அக்காளின் கழுத்தை இறுகச் சுற்றிக்கொண்டு கண்களைப் பார்த்து‘ப்பூ…ப்பூ…’ என்றது. குழந்தையின் வாயிலிருந்து காற்று தெறிப்பதற்குப் பதிலாக எச்சில் தெறித்தது.அச்செய்கை அவளுக்குச் சிரிப்பை வர வைத்தது. அவள் சிரித்தாள். அக்காளின் சிரிப்பைப் பார்த்துக்குழந்தை சிரித்தது. அவர்களைப் பார்த்து தாய் சிரித்தாள். தாயைப் பார்த்து மகன் சிரித்தான்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்கள் சிரித்திருந்தார்கள். சிரித்து முடிக்கையில் அக்காளின்கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் தெறித்தது. அவளது கண்ணீரைப் பார்த்தாள் தாய். மகளின் கண்ணீர்அவளைக் கோபமூட்டியது. “; என்னடி, குழந்தை மாதிரி நீயும்..”
தாயின் வார்த்தைகள் சுடும் சொற்களாக இருந்தன. தாயை வெறிக்கப் பார்த்தாள். தம்பியைப்பார்த்தாள். குழந்தையைப் பார்த்தாள். நெஞ்சு உடைப்பெடுத்து அழுதாள்.
“; அழுது நீ என்னடி சொல்லவாறே. நேத்தைக்கு வரை சரிண்ணே. இப்ப கொடம் கொடமாவடிக்கிறே…”தாய் கோபக்கொதிப்பில் கேட்டாள்.
மகள் சொன்னாள், ” வேண்டாம்ம்மா ”
தாய்க்கு நாசி விடைக்க கோபம் வந்தது. பெற்ற பிள்ளை என்று கூட பார்க்காமல் கேட்டாள். “அப்பஅவன்கூட படுக்கிறேங்கிறீயா?”
அவளது கேள்வியில் ஒரு சொல் அமிலமாகக் கொதித்தது. சுடும் சொல் அல்ல, கொதிக்கும் சொல்அது. மகள் பாவம்! தாய் கேட்ட கேள்வியில் அவள் உடைந்து நொறுங்கிப் போயிருந்தாள். கேள்விகாதுக்குள் செரித்தால்தான் நெஞ்சிலிருந்து பதில் வரும். தாய்க்கேட்ட கேள்வி மகளின் காதிற்குள்எதுக்களித்தது.
தாயின் சொற்கள் அவளை உயிரோடு பொசுக்கியிருந்தன. கண்களில் பூத்த கண்ணீர் சலனத்தில்தீய்ந்து கண்ணீராக கன்னத்தில் வழிந்தது. அவளால் அழ முடியவில்லை. தன் தலையில் விழுந்த தீர்க்கரேகையை நினைத்து நொந்து குழைந்து வடிந்துகொண்டிருந்தாள். தான் நிற்கிறேனா,உட்கார்ந்திருக்கிறேனா, நான் எங்கே இருக்கிறேன், யார் கூட இருக்கிறேன், என்ன நடந்தது, யாதுநடக்கிறது, எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.
” என்னடி நான் கேட்கேன். ஒரு சத்தத்தையும் காணோம்”
“சரிம்மா”
” என்னடி சரி”
துக்கமுடைந்த குரலில் சொன்னாள்,”முடிச்சிக்கலாம்.”
தாய் ஓடிவந்தாள். மகளை மார்போடு அணைத்தாள். மகளின் காதுகளுக்கு இரு கைகளையும்கொடுத்து முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். மகளின் முகம் காம்பிலிருந்து சற்றுமுன் அறுந்த பூவைப்போன்றிருந்தது. நெற்றியில், கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். இறுக அணைத்தாள். அவளுக்குள்தாய்ச்சுனை பெருக்கெடுத்தது.
மகள் எப்படியோ தயாராகிவிட்டாள். மகன், குழந்தை இரண்டு பேரை மட்டும் அவள் தயார்செய்யவேண்டியிருந்தது. மகன் குறித்து ஒரு கவலையுமில்லை. தாய் சொல் தட்டாத பிள்ளை. நூலைப் போலசேலை. குழந்தை பற்றிய கவலைதான் அவள் முன் கந்து வட்டியைப் போல கால் கடுக்க நின்றது.குழந்தையை அவள் தயார்ச் செய்ய வேண்டியிருந்தது. ஒரு வாரத்திற்கும் முன்பு திரௌபதிஅம்மன் தீமிதி திருவிழாவுக்கு போய் வந்த நினைவு வந்தது. அந்தத் திருவிழா குறித்து கேட்டாள். “நீபார்த்தேதானே. திரௌபதி தீமிதி திருவிழாவுல பலரும் நெருப்புல நடந்தத. நெருப்பு சுட்டால் அதிலேயாரும் நடக்க முடியுமா?”
குழந்தை ஆமோதிப்பதைப் போல தலையாட்டியது.
அடுத்து அவள் இராமாயணத்திற்குத் தாவினாள். அவள் கதையில் அனுமன் இலங்கைக்குப்பறந்தான். சீதையைப் பார்த்தான். இராவண படை ஆட்கள் அனுமன் வாலில் தீமூட்டி விட்டார்கள்.
குழந்தையைத் தூங்க வைக்க வழக்கமாக அவள் சொல்லும் கதை அந்நேரத்திற்கு அவளுக்குக்கைக்கொடுத்தது.
கதையைக் கேட்ட குழந்தை கேட்டது,”அம்மா, அனுமனுக்குச் சுடாதா?”
“அனுமன் உன்னைப் போல தங்கம். அதுக்குச் சுடாது”
” தங்கமுனா சுடாது. அப்படியா?”
“ஆமாமடி தங்கம்”
குழந்தை சிரித்தது. தங்கத்தை நெருப்பு சுடுவதில்லை குழந்தை நம்பியது. தாய் மூன்றுபிள்ளைகளையும் ஆரத்தழுவினாள். ஒருவரையொருவர் இறுக கட்டிப்பிடித்துகொண்டு தூங்கினார்கள்.
அன்றைய தினம் இரவு, அவளது கனவில் கணவன் வந்தான். அவன் கந்துவட்டியாரிடம்வட்டிக்குப் பணம் வாங்கி வட்டிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டவன். வட்டிக்குப் பணம்வாங்குகையில் நடந்தேறிய உரையாடல்கள் அவளது மண்டைக்குள் நூலாம்படையாகப் பின்னின.
“வட்டி நூத்துக்கு ஏழு ரூவா. பரவாயில்லையா?”கேட்டிருந்தார் கந்துவட்டிக்காரர்.
“கொடுங்க சாமி. அவசரம். பொஞ்சாதிக்கு ஆப்ரேசன்…” கைகளைப் பிசைந்திருந்தான் கணவன்.
” எவ்ளோ வேணும்?”
“பத்தாயிரம் ரூபா ”
“ஒன்னாம் தேதி வட்டி வந்தாகணும். வரலைன்னா வட்டி அசல்ல சேர்ந்திரும்”
” அப்படியெல்லாம் நடந்திடாதுங்க. தந்திடுவேன்” கெஞ்சும் முகத்தில் நின்றான்.
” வட்டி அசல்ல சேர்ந்திட்டா ஏழு வட்டி எட்டு வட்டியாயிடும்”
அவன் திடுக்கிட்டான். “என்ன சொல்றீங்க?”
“உனக்கு அதப்பத்தி என்ன கவல. நீதான் ஒன்னாம் தேதியே வட்டிக் கொடுத்திடுவீயே”
அவனது விழிகள் இமைகளுக்குள் செருகின.
“மறுமாசம் ரெண்டுக்கும் சேர்த்து வட்டி கட்டணும்”
” சரிங்க…”
” கொடுக்கலன்னா அந்த வட்டியும் அசல்ல சேர்ந்திரும்”
” கொடுத்திடுறேன்க…”
“அதையும் ஒன்னாந்தேதி கொடுத்திடணும். இல்லைன்னா, எட்டு வட்டி ஒன்பதாயிடும்…”
அவனுக்குக் கண்கள் கட்டின. என்ன செய்ய! பணத்தைப் பார்க்க முடியுமா?. வட்டியைப் பார்த்தால்மனைவியைக் கைகழுவ வேண்டிவரும்.
” கையெழுத்தப் போடு”
“பத்தாயிரம் தானே வாங்குறேன். அம்பதாயிரம் ரூபாய்னு எழுதிருக்கீங்க”
” நாளைக்குப் பின்னே நீ பிரச்சனைக்குப் போக மாட்டேனு என்ன இருக்கு?”
“ அதெல்லாம் மாட்டேங்க…”
“பிறகு இதப்பத்தி என்ன கவல. பணத்த வாங்கிக்கிட்டு போய் பொஞ்சாதிக்கு ஆக வேண்டியவைத்தியத்தப் பாரு”
அவரது கைகள் நடுங்கின.
“என்ன நடுக்கம்?”
“ஒன்னுமில்ல. எப்பவும் அப்படித்தான்”
கடன் வாங்கி ஆறு மாதங்கள் கடந்திருந்தன. மனைவி குணமடைந்தால் இருவரும் வேலைபார்த்து வட்டியையும் முதலையும் அடைத்துவிடலாம். மாத்திரை செலவுக்கே கடன் மேல் கடன் வாங்கவேண்டியிருக்கு. எப்படி வட்டியை அடைப்பது?
கொடுத்த கடனை வசூலிக்க ஒருவன் வந்தான். வீட்டிலிருந்த தட்டுமுட்டு சாமான்களை விற்றுவட்டியைக் கொடுத்தாள். பணத்தை வட்டியில் வரவு வைத்துகொண்டான். மறுமாதம் வேறொருத்தன்வந்தான். அவன் முன்பு வெறுங்கையைப் பிசைய வேண்டியிருந்தது. அடுத்த நாள் அவன் பெயரைச்சொல்லிக்கொண்டு இன்னொருத்தன் வந்தான். வட்டிக்கு – வட்டிக்கு – வட்டி பணமே அடையவில்லை.பணத்துக்கு என்ன சொல்றீங்க…என்றவன் அவளது மகளை இரையைப் போல பார்த்தான்.
மறுவாரம் வக்கீல் நோட்டீஸ் வந்தது. ஐம்பதாயிரம் கடன். கூடவே வட்டி. ஒரு பக்கம் வக்கீல்,இன்னொரு பக்கம் குண்டர்கள், அர்த்தராத்திரியில் வீட்டின் கதவைத் தட்டினார்கள்.
ஊரும் தெருவும் சிரித்தது. அவர்களுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது. ஒரு நாள் இரவுகணவன் வாசலில் நின்றிருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு பிணமாகிப் போனான். கந்துவட்டிக்காரர்கள்
துக்கத்திற்கு வந்தார்கள். பிணத்தின் மீது ஒரு மாலையைச் சாத்திவிட்டு, மனைவியைப் பார்த்து “உன்புருசன் உனக்காக வாங்கிய கடனை நீயாவது அடை ” என்று சொல்லிச் சென்றார்கள்.
கணவன் செத்து எத்தனையோ நாட்களாகிவிட்டன. ஒரு நாளும் கனவில் வராதவன் அன்றையதினம் வந்து தன்கூடவே வந்துவிடுமாறு அழைப்பு விடுத்தான். கணவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில்அவள் திடுக்கென விழித்தாள். விழித்தப் பிறகுதான் அவளுக்குத் தெரியவந்தது, கண்டது கனவென்று.அவளது உடலும் கண்களும் வியர்த்தன. அதற்கும் மேல் அவளால் கண்களை மூட முடியவில்லை.கண்களை மூடினால் ஒருவர் மாறி ஒருவரென வீட்டிற்கு வரும் கந்துவட்டிக்காரர்களின் முகங்களாகத்தெரிந்தன.
ஒருநாள் அவள், பிள்ளைகளை அழைத்துகொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றாள். மற்றொருநாள் தாலுகா அலுவலகம் சென்றாள். இன்னொரு நாள் கலெக்டர் அலுவலகம் சென்றாள்.அவளது பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அவள் கொடுத்த மனு உரிய இடத்தைச்சென்றடையவில்லை.
மறுவாரம், மறுமாதம். மனுநாள், ஜமாபந்தி…..
“உனக்கு வேற வேலையே இல்லையா! வெளியே போம்மா”
அதன்பிறகு கடன் வசூலிக்க வந்தவர்கள் ரவுடிகளாக இருந்தார்கள். மகளை வழியில் மறித்துகடனைக் கேட்டார்கள். இதையெல்லாம் மனதிற்குள் அசைபோடுகையில் அவளது தூக்கத்தின் தமனிஅறுந்தது. அவளுக்குப் படபடப்பு வந்தது. எழுந்து உட்கார்ந்தவள் சுவரில் சாய்ந்து கண்களை மூடிஅகக்கண் வழியே அவளைச் சுற்றியிருந்த கடன்மலையைப் பார்த்தாள். கடன் புற்றைப் போலவளர்ந்துகொண்டிருந்தது.
மறுநாளுக்கான பொழுது விடிந்திருந்தது.
அவள் பிள்ளைகளை வேகமாகக் கிளப்பினாள். “ அம்மா நெருப்பு சுடுமா?” எப்பொழுதும் கேட்கும்கேள்வியை அன்றைய தினம் குழந்தை கேட்கவில்லை.
அவளது மடியில் கடைசியாக கைப்பட எழுதி கலெக்டரைப் பார்த்து கொடுக்கவேண்டிய மனு.தோளில் நான்கு வயது குழந்தை. ஒரு கையில் மகன். மற்றொரு கையில் மகள். மகளின் கையில்மண்ணெண்ணெய் கேன். அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.