பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள்: இஸ்ரேலுக்கு தடை விதிக்கப்படுமா? – ஐங்கரன் விக்கினேஸ்வரா
(சர்வதேச அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளில் பகிஷ்கரிப்பும், புறக்கணிப்பும் தொடர்ந்து வருகிறது.
1980களில் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா பகிஷ்கரித்ததும், பின்னர் 1984இல் அமெரிக்காவில் நடந்த போட்டிகளை ரஷ்யா புறக்கணித்ததும் வரலாறு)
பிரான்சில் திட்டமிட்டபடி நடைபெறவிருக்கும் 33 ஆவது கோடைக்கால ஒலிம்பிக்ஸ் தொடருக்கான பாரிய அளவில் ஆயுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லண்டனுக்கு அடுத்தபடியாக, மூன்று முறை கோடைக்கால ஒலிம்பிக்ஸை நடத்தும் இரண்டாவது நகரமாக பாரிஸ் தற்போது திகழ்கிறது.
இந்த ஒலிம்பிக்கில் இஸ்ரேலுக்கு காசாவில் நிகழும் போரால் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறும் போட்டிகளில் இருந்து தடைசெய்யப்படலாம் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.
விளையாட்டில் அரசியல் தலையீடு தேவையற்றது எனக் கருதப்பட்டாலும், காலங்காலமாக சர்வதேச அரங்கில், முக்கியமாக ஒலிம்பிக் போட்டிகளில் பகிஷ்கரிப்பும், புறக்கணிப்பும் தொடர்ந்து வருகிறது.
1980களில் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா பகிஷ்கரித்ததும், பின்னர் 1984இல் அமெரிக்காவில் நடந்த போட்டிகளை ரஷ்யா புறக்கணித்ததும் வரலாறு.
இஸ்ரேலுக்கு தடை :
இன்னும் ஏழு மாதங்களில், 2024 ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் தொடங்கும் நிலையில், காசாவில் நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் இந்த உலகளாவிய விளையாட்டு நிகழ்வை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய நிச்சயமற்ற தன்மையை எழுந்துள்ளது.
இஸ்ரேலிய கொள்கைகள் மீதான நிலைப்பாட்டிற்கும் விமர்சனத்திற்கும் பெயர் பெற்ற அமெரிக்க இதழான ‘நேஷன்’ ஊடகத்தில் சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) இஸ்ரேலை ஒலிம்பிக்கில் இருந்து தடை செய்ய வேண்டுமா என்று கேள்வியை எழுப்பியுள்ளது.
அத்துடன் இஸ்ரேலும் ஐஓசியும் மோதல் போக்கில் உள்ளன என்றும் அது எச்சரித்தது. ஐஓசி (IOC ) ரஷ்யாவை எவ்வாறு உன்னிப்பாகப் பார்ப்பது போல, இஸ்ரேல் அரசுக்கு என்ன நடக்கலாம் என்பதனை எதிர் வரும் வாரங்களில் பார்க்கலாம்.
2024 ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்யா எப்படி தடை செய்யப்பட்டது பற்றி உலகம் அறிந்தாலும்,ஐஓசி சமீபத்தில் ரஷ்யாவை வரவிருக்கும் ஒலிம்பிக்கில் ஒரு நாடாக பங்கேற்க தடை விதித்ததுள்ளது. ஆயினும் சில ரஷ்ய விளையாட்டு வீரர்கள் நடுநிலைக் கொடியின் கீழ் போட்டியிடலாம், அவர்கள் வெற்றி பெற்றால், பதக்க விழாவின் போது அவர்களின் தேசிய கீதம் இசைக்கப்படாது எனவும் தெரிவித்தது.
‘ஐஓசி’ மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை கவனிக்கத் தயாராக உள்ளது. ஆனால் விளையாட்டு வீர்ர்களுக்கு எதிரான குற்றங்களை அது கருதவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இருப்பினும், கடந்த தசாப்தத்தில் இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீனிய கால்பந்து வீரர்களைக் கொன்றபோதும், பாலஸ்தீனத்தின் கால்பந்து மைதானங்களில் குண்டுவீசித் தாக்கியபோதும் ஃபிஃபா (FIFA) கவலைப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இஸ்ரேல் மேற்குக் கரை அல்லது காசாவில் நிலத்தை முழுவதுமாக இணைத்துக் கொள்ளத் தொடங்கினால், ரஷ்யாவைப் போலவே இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களையும் நடுநிலையாளர்களாகப் போட்டியிடச் சொல்ல ஐஓசி அழுத்தம் கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
பாலஸ்தீனம் மீது ஆக்கிரமிப்பு :
மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான செயலின்மைக்காக, “நடுநிலை” என்ற சொல்லை ஐஓசி அடிக்கடி பயன்படுத்துவதை பலரும் விமர்சித்துள்ளனர்.
ஐஓசி பாலஸ்தீனியர்களை ஒரு அந்நிய மக்களைப் போல நடத்துகிறது. ஒலிம்பிக் குடும்பத்தின் முழு உறுப்பினராக பாலஸதீனம் இல்லாவிடுனும், அவர்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தேவை. உக்ரைன் மற்றும் பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பாளர்கள் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
அயர்லாந்தின் சர்வதேச விளையாட்டு நிறுவன Insaka-Ireland இன் உறுப்பினரான Ken McCue, கூறுகையில் அயர்லாந்தில் உள்ள சில விளையாட்டு வீரர்கள் இஸ்ரேலை ஒலிம்பிக்கில் இருந்து தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து வருகின்றனர். ஐஓசி அதை ரஷ்யாவிடம் செய்து அதைச் செய்தது. ஏன் அவர்களால் அதை இஸ்ரேலுக்கு செய்ய முடியாது என வினவுகின்றனர்.
ஜெர்மனி முயுனிச் ஒலிம்பிக்ஸ் பணய விவகாரம்:
1972 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முயுனிச் (Munich) நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை Black September என்ற பாலஸ்தீனிய இயக்கதைச் சேர்ந்தவர்கள் பணயமாக பிடித்து பின்னர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய உளவு நிறுவனம் ஒலிம்பிக் வீரர்களைக் கொன்ற 11 பாலஸ்தீன தீவிரவாதிகளை உலகம் முழுவதும் சுமார் 20 ஆண்டுகள் தேடி வேட்டையாடிக் கொன்றது. முயுனிச் சம்பவத்தையும் அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகளை இஸ்ரேல் இராணுவம் வேட்டையாடுவதையும் மையமாக வைத்து ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ”முயுனிச்” என்ற பெயரில் திரைப்படம் எடுத்து 2005 ஆம் ஆண்டு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
நூறு ஆண்டுகளின் பின் களைகட்டும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ்:
2024 ஜூலை 26 அன்று ஒலிம்பிக்ஸிற்கான தொடக்க விழாவை, பாரிஸ் நகரில் உள்ள செய்ன் நதிக்கரையில் சுமார் மூன்று மணி நேரம் நடத்துவதற்காகத் திட்டமிட்டுள்ளனர்.
ஒலிம்பிக்ஸின் நூற்றாண்டு விழாவாக இதைக் கொண்டாடும் வகையில், தொடக்க விழாவில் நூறு படகுகள், விளையாட்டு வீரர்களை ஏற்றிக்கொண்டு பாண்ட் டி ஆஸ்டர்லிட்ஸில் தொடங்கி ஈபிள் கோபுரம் வரை அழைத்துச் செல்லவுள்ளது. இப்போட்டி 26 ஜூலை 2024அன்று தொடங்கி 11 ஆகஸ்டு 2024 வரை நடைபெறும். பாரிஸின் முக்கியச் சுற்றுலா தளங்களான வெர்செய்ல்ஸ் அரண்மனை, ஈபிள் கோபுர மைதானம் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.