கதைகள்

“கனகர் கிராமம்”…அங்கம்-08—-செங்கதிரோன்

கோகுலன் உரிய தினத்தில் அத்தான் நடேசன் அறிவுறுத்தியவாறு வந்தாறுமூலையிலிருந்துமட்டக்களப்பு வந்து பயணப் பெட்டியுடன் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் காத்திருந்தான்.

அத்தான் நடேசன் அம்பாறையிலிருந்து வந்து சேர்ந்ததும் அவர்களது கொழும்பு நோக்கிய இரவுநேரப் புகையிரதப் பயணம் தொடங்கிற்று.

கோகுலனுக்கு இது இரண்டாவது புகையிரதப் பயணம். முதலாவது அனுபவம் அவன்ஏழாம்வகுப்புப் படிக்கும்போது தன் தாயாருடன் யாழ்ப்பாணம் நல்லூர்க் கோயில் திருவிழாவுக்குச்செல்வதற்காகக் கொழும்பு செல்லும் இதே புகையிரதத்தில் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டுச்சென்று இடையில் மாகோச் சந்தியில் இறங்கிக் காத்திருந்து பின் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்செல்லும் ‘யாழ்தேவி’ வண்டியில் மாறிப் பயணித்து மறுநாள் காலையில் யாழ்ப்பாணம்சென்றடைந்த இரவுப் பயணம் அது. அப்பயணம் கோகுலனின் நினைவுப் பேழையிலிருந்துவெளியேவந்தது.

மனிதமனம் ஒரு பாரிய கடல்போன்றது. கடலில் ஒன்றன் பின் ஒன்றாக எண்ணற்ற நீரலைகள்எழுவதும் மடிவதும்போல மனக்கடலிலும் ஒன்றன் பின் ஒன்றாக எண்ணற்ற நினைவலைகள்எழுவதும் மடிவதும் எப்போதுமே எல்லோருக்குமே இயல்பாக நடைபெறுவதொன்றுதான்.கடலுக்குக் கரைகள் இருக்கும். ஆனால் மனதிற்குக் கரைகள் இல்லை. மனம் என்பது ஒருஎல்லைகளற்ற வெளிபோன்றது.

நேர்முகப்பரீட்சைக்குச் செல்வதற்காகக் கொழும்புக்குப் புகையிரதப் பயணம் மேற்கொண்டிருந்தகோகுலனுக்கும் அவனது மனக்கடலில் நினைவலைகள் எழுவது இயல்பாகவே நடந்தது.

அதனால்தான் அவனது முதலாவது புகைவண்டிப் பயணமும் அப்பயணத்துடன் தொடர்புடையவிடயங்களும் இரண்டாவது புகையிரதப்பயணம் மேற்கொண்டிருந்த இப்போதுநினைவலைகளாக எழுந்தன.

பொத்துவிலில் வட்டிவெளியிலுள்ள கோகுலனின் வீட்டிற்கு எதிர்ப்புறத்தில் வசித்த கோகுலனின்தாயாருக்கு உறவுமுறையில் தங்கையான புஞ்சித்தனாவும், கோகுலன் ‘லீலாக்கா’ என அழைக்கும்அவருடைய ஒரே மகள் லீலாவும் அப்போது யாழ்ப்பாணம் கச்சேரியடியில் வாடகை வீடொன்றில்குடியிருந்தனர். லீலாக்கா தீப்பெட்டித் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போதைய நிகழ்வொன்று கோகுலனின் நினைவில் நிழற்படமாய் ஒடிற்று.

நல்லூர்க் கோயில் திருவிழாவுக்குப் போய்வந்து ஒருநாள் எல்லோரும் வீட்டில் இரவு உறங்கிக்கொண்டிருந்தார்கள். கோகுலன் சுவர் ஓரமாகப் போடப்பட்ட கட்டிலொன்றில் தனியேபடுத்திருந்தான். அவனது தாயாரும் புஞ்சித்தனாவும் அதே அறையில் கீழே நிலத்தில் பாயில்படுத்திருந்தார்கள். நடுநிசி. எல்லோரும் நல்ல உறக்கம்.

நித்திரைக்கண்ணில் கோகுலனுக்கு ஏதோ மயிருள்ள பொருளொன்று தன் உடம்பில் ஊர்ந்துசெல்வது போன்றதொரு உணர்வு. கனவு காண்பது போலவும் இருந்தது. என்னவென்றுதெரியவும்மாட்டாது. ஆனால், அவன் உடம்பை அசைக்கவில்லை. சிறிது நேரத்தால் கட்டிலைவிட்டு இறங்கித் தரையில் படுத்திருந்த தன் தாயாரைத் தட்டி எழுப்பி இருட்டிலேயே நடந்ததைச்சொன்னான். உடனே அவனது தாயார் பக்கத்தில் படுத்திருந்த புஞ்சித்தனாவை எழுப்ப அவஎழும்பி ‘லைற்’றைப் போட்டார்.

கட்டில் பக்கம் பார்த்தபோது கட்டிலில் கிடந்த தலையணையில் கோகுலன் முகம் வைத்துப்படுத்தஇடத்திற்கே நேரே வட்டமாகக் கறுப்பாகக் காலில் மயிர்கள் உள்ள ஜந்து ஒன்று சுவரில் அப்பிப்பிடித்துக் கொண்டிருந்தது. அதன் பருமன் உள்ளங்கை அளவு இருக்கும்.

அதைக்கண்ட புஞ்சித்தனா தலையிலே கையை வைத்து ‘ஐயோ! மகனே! நல்லகாலம் நீஅசையாமல் படுத்தது. அசைந்திருந்தா அது உன்னக் கடித்திருக்கும்’ என்றவ,‘அத ஒன்றும் செய்யாதீங்க. பாய்ஞ்சு கடிக்கக்கூடியது. அதுக்கொரு சாமான் இரிக்கு. எடுத்திட்டுவாறன்’ என்று சொல்லிவிட்டு வெளியில்சென்று கை ஈக்கில்கட்டொன்றை எடுத்துக்கொண்டுவந்தா. வந்து ஈக்கில் கட்டை அகலமாக ‘ஏ’ வடிவில் விசிறிபோல் விரித்துப் பிடித்துக் கொண்டுபலமாக ஓங்கி அதனை அடித்தார். அது கால்களைச் சுருக்கிக் கொண்டு சுவரிலிருந்து கட்டிலில்விழுந்து செத்துப்போனது.

அதனை அடித்துப் போட்டுத்தான் புஞ்சித்தனா கோகுலனின் தாயாரைப் பார்த்து வாய்திறந்தா.

‘அக்கா, இதுதான் புலிமுகச்சிலந்தி. கடிச்சாப் பொல்லாத விஷம். கையக் காலச் சுருட்டிப்போடும்.நல்ல காலம் தம்பி தப்பின. இதுக்கு ஆறுகால் இரிக்கும். பொட்டுப்பூச்சிக்கு எட்டுக்கால். இதவச்சுத்தான் வித்தியாசத்தக் கண்டு பிடிக்கணும்’ என்று பெரியதொரு விளக்கம் தந்தா. அதுதான்அவனுக்கும் அவனது தாயாருக்கும் புலிமுகச் சிலந்தியைக் கண்ட முதல் அனுபவம். இந்தநினைவுடன் புகையிரத வண்டியின் ஆசனத்தில் சாய்ந்தவாறே கோகுலனும் நித்திரையாகிப்போனான்.

புகையிரதம் மறுநாள் அதிகாலை கொழும்புக் கோட்டைப் புகையிர நிலையத்தை வந்தடைந்தது.

நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியதுபோல புகையிரதப் பெட்டிகளிலிருந்து இறங்கிமேடையில் பயணிகள் வழிந்தார்கள். அவர்களுடன் முட்டிமோதி நெருங்கியடித்துக் கொண்டுபுகையிரத நிலையத்திலிருந்த மேம்பாலத்தில் பாதுகாப்பாக ஏறி இறங்கி வெளியே வந்தகோகுலனும் அத்தான் நடேசனும் ‘பஸ்’ சைப் பிடித்து கொள்ளுப்பிட்டியில் ‘இந்தோ – சிலோன்கபே’ சிற்றுண்டிச்சாலையின் முன்வந்து இறங்கினர். சிற்றுண்டிச்சாலையில் ‘ரீ’ குடித்துவிட்டு‘இந்தோ – சிலோன் கபே’க்குப் பக்கத்தாலேயே கடற்கரைப்பக்கமாகச் செல்லும்ஒழுங்கையொன்றால் சென்று அத்தான் நடேசனின் நண்பனான அமிர்தானந்தா வசிக்கும்அறையை அடைந்து அங்கு காலைக்கடன்களை முடித்துக் குளித்து உடைமாற்றிக் கொண்டுமீண்டும் ‘இந்தோ – சிலோன் கபே’ வந்து காலை உணவாகத் தோசையும் சாம்பாரும் தேங்காய்ச்சட்னியும் உழுந்துவடையும் சாப்பிட்டுவிட்டுப் ‘பஸ்’ ஏறி நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளநீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமைப் பணிமனையை வந்தடைந்தனர். அது ‘புல்லர்ஸ்’வீதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி நிலையத்திற்கு எதிரே வீதியின்மறுபக்கத்தில் அமைந்திருந்த நான்குமாடிக் கட்டிடத்தில் அமைந்திருந்தது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வாசலில் நின்று கோகுலனின் அத்தான் நடேசனின்நண்பரொருவர் அவர்களுக்கு முகமன்கூறி உள்ளே அழைத்துச் சென்றார். அவர்களை வாசலில்வரவேற்று அழைத்துச் சென்றவர் தான் முன்பு நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தலைமையகத்தில்பணிபுரியும்போது ஒன்றாகப் பணிபுரிந்த நண்பர் வயிரவநாதன் என்று அத்தான் நடேசன்அவர்பற்றிக் கூறிக் கோகுலனை அவருக்கு யாரென்று அறிமுகம் செய்து வைத்தார்.

நேர்முகப்பரீட்சை நடைபெறும் நான்காம் மாடிக்கு மின்னுயர்த்தி மூலம் மூவரும் சென்றனர்.

கோகுலன் மின்னுயர்த்தியில் சென்ற முதல் அனுபவம் அதுதான். கோகுலன் கறுப்புநிறநீளக்காற்சட்டையும் மெல்லிய நீலநிற நீளக்கைச் ‘சேர்ட்’ டும் ‘ரிப்ரொப்’பாக அணிந்து கழுத்தில்கடும் நீலநிற ‘ரை’யும் கட்டியிருந்தான்.

மண்டபத்தில் நேர்முகப்பரீட்சைக்கு வந்த பலர் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகளில்அமர்ந்தும் சிலர் நின்றுகொண்டும் இருந்தார்கள். தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும்தமக்குள்ளே பேசியபடியும் சிலர் இருந்தனர். கோகுலனுக்கு அங்கு நின்றிருந்த எவரையும் முன்பு

தெரிந்திருக்கவில்லையென்பதால் அமைதியாகச் சென்று காலியாக இருந்த ஒரு ஆசனத்தில்அமர்ந்து கொண்டான். முதலாவது விண்ணப்பம். முதலாவது நேர்முகப்பரீட்சை புகைவண்டிப்பயணத்தைத் தவிர மற்ற எல்லாமே அவனுக்கு முதலாவது அனுபவம்தான். புகைவண்டிப் பயணம்மட்டுமே அவனுக்கு இரண்டாவது அனுபவம். அத்தான் நடேசன் அவனுடன் கூடஇருந்ததுஅவனுக்குச் சற்றுத் தைரியத்தைக் கொடுத்திருந்தது.

கோகுலனின் பெயர் அழைக்கப்பட்டதும் எழுந்து அறைக்குள்ளே சென்றான். அறைக்குள்ளேநுழைந்ததும் அத்தான் நடேசன் முதல்நாள் இரவு பயணிக்கும்போது தனக்குப் புகையிரதவண்டிக்குள் வைத்துச் சொன்ன அறிவுரைகளை அவசரமாக அசைபோட்டுக் கொண்டான்.

நேர்முகப்பரீட்சை மேசையில் மூன்று அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அவர்களின் நடுநாயகமாகஅமர்ந்திருந்தவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் பிரதிப்பணிப்பாளரும், சிரேஸ்டபொறியியலாளருமான ஆறுமுகம் என்று அத்தான் நடேசன் கோகுலனுக்கு முதலே சொல்லிவைத்தார். அவர் தமிழர் என்பதால் கோகுலனின் மனதில் சொல்லாமல் கொள்ளாமல் தைரியம்தானாகவந்து ஒட்டிக்கொண்டது. அத்தான் நடேசன் முன்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தின்தலைமைப்பணிமனையில் கொழும்பில் கடமையாற்றியிருந்தார் என்பதால் அவருக்குக்கொழும்பில் இடங்கள் தெரிந்திருந்தது மட்டுமல்ல அறிமுகமானவர்களும் தெரிந்தவர்களும் பலர்இருந்தார்கள். நேர்முகப்பரீட்சைக்குக் கோகுலனின் பெயரைக் கூப்பிட்டபோது அத்தான் நடேசன்கோகுலனின் அருகில் வந்து அவனிடம் காதுக்குள் ‘தைரியமா உள்ளே போ’ என்று சொல்லியும்அனுப்பி வைத்திருந்தார்.

‘இரிக்கேசன் லேர்னர்ஸ்’ க்குரிய இருவருடகாலப்பயிற்சிநெறி ஆங்கிலமொழிமூலமேநடைபெறவுள்ளதால் நேர்முகப்பரீட்சையின்போது கேட்கப்படும் கேள்விகள் ஆங்கிலத்திலேயேகேட்கப்படுமென்றும் அவற்றிற்கு ஆங்கிலத்திலேயே பதிலளிக்க வேண்டும் என்றும் அத்தான்நடேசன் ஏற்கெனவே அவனிடம் கூறியிருந்தார்.

கோகுலன் மட்டக்களப்பு மாவட்டத்திலே பிரபல்யமான பாடசாலைகளிலொன்றானவந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலப்பாடம்படித்திருந்தாலும் அதற்கு முன்னர் பொத்துவில் மெதடிஸ்தமிசன் பாடசாலையில்ஆரம்பக்கல்வியை ஐந்தாம் ஆண்டுவரை பயின்றகாலத்திலும் சின்னத்தம்பி எனும் ஆங்கிலஆசிரியரிடம் ஆங்கிலப்பாடம் கற்றிருந்தாலும் மட்டுமல்ல க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில்ஆங்கிலமொழியில் திறமைச்சித்தி பெற்றிருந்தாலும் ஆங்கிலத்தில் உரையாடுவது அந்தவயதில்கோகுலனுக்கு அவ்வளவு பரிச்சயமாக இருக்கவில்லை. இருந்தாலும் சமாளிக்கலாம் என்றதன்னம்பிக்கையை அத்தான் நடேசன் அவனுக்கு ஊட்டிவிட்டிருந்தார்.

அறைக்குள்ளே நுழைந்த கோகுலன் நேர்முகப்பரீட்சை மேசையில் அமர்ந்திருந்த அதிகாரிகள்மூவரையும் விளித்துக்‘குட் மோனிங் சேர்’ (காலை வணக்கம் ஐயா) சொன்னான்.

அவர்கள் அனைவரும் பதிலுக்குக் ‘குட் மோனிங்’ சொல்லிச் ‘சிற் டவுண்’ (உட்காரவும்) என்றுமுன்னே போடப்பட்டிருந்த கதிரையைக் காட்டினார்கள்.

‘தாங்ஸ்’ (நன்றி) சொல்லி அமர்ந்தான்.

வரிசையில் இடப்புறமிருந்த முதலாவர்,‘சோ யுவர் சேர்டிபிக்கேற்ஸ்’ (உமது சான்றிதழ்களைக் காட்டவும்) என்றார்.

கோகுலன் தன் கையிலிருந்த சான்றிதழ்கள் அடங்கிய கோப்பினைப் பவ்வியமாக அவரிடம்நீட்டினான்.

கோப்பினில் இருந்த ஆவணங்கள் ஒவ்வொன்றையும் மாறிமாறி மூவரும் பரிசீலித்தனர்.

கோகுலன் எந்தச் சலனங்களையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகஅமர்ந்திருந்தான்.

சான்றிதழ்களைப் பரிசீலித்து முடிந்ததும் கோப்பினை மூடிக் கோகுலனிடம் நீட்டியவாறு,‘வட் இஸ் யுவர் நேற்றிவ் டிஸ்றிக்ற்’ (உமது சொந்த மாவட்டம் எது) என நடுவிலிருந்தவர்கேட்டார்.

கோப்பினைக் கையில் வாங்கியவாறே கோகுலன் ‘அம்பாறை டிஸ்றிக்ற்’ (அம்பாறை மாவட்டம்)என்றான்.

‘பை விச் மொன்சூன் யுவர் டிஸ்டிக்ற் கெற்ஸ் ரெயின்’ – (உங்கள் மாவட்டம் எந்தப்பருவப்பெயர்ச்சிக் காற்றினால் மழையைப் பெற்றுக்கொள்கிறது) என்ற கேள்வி அடுத்ததாகக்கேட்கப்பட்டது.

உடனே கோகுலன் ‘நோர்த் ஈஸ்ற் மொன்சூன்’ (வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று) என்றுபதிலளித்தான். கோகுலனின் பதிலால் அம்மூவரும் முகம் மலர்ந்தார்கள்.

அடுத்த கேள்வி,

‘கான் யூ ரெல் த நேம்ஸ் ஒவ் ரூ ஒர் த்ரீ மேஜ இரிக்கேசன் ராங்ஸ் இன் யுவர் டிஸ்டிக்ற்?’ (உமதுமாவட்டத்திலுள்ள பாரிய நீர்ப்பாசனக்குளங்களின் இரண்டு அல்லது மூன்று பெயர்களைக் கூறமுடியுமா?) என்பதாகும்.

‘யேஸ் சேர்!… சேனநாயக்கா சமுத்ர, றூபஸ் ராங்க் அன்ட் ரொட்டை ராங்’ (ஆம்! ஐயா,

சேனநாயக்கா சமுத்திரம், றூபஸ்குளம் மற்றும் ரொட்டைக்குளம்)கோகுலனின் பதிலைக்கேட்டு மூவருமே ஏககாலத்தில் ‘வெரிகுட்’ (மிகவும் நல்லது) என்றார்கள்.

கோகுலனுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது. ‘தாங்ஸ் சேர்’ (நன்றிகள் ஐயா)என்றான்.

பின் மூவரும் தமக்குள்ளே மெதுவாக ஆங்கிலத்தில் குசுகுசுத்தார்கள். பின் நடுநாயகமாகவீற்றிருந்தவர் கோகுலனைப் பார்த்து,‘யு ஆர் ஒன்லி செவன்ரீன் இயர்ஸ் ஓல்ட் நவ்’ (உமக்கு இப்போது பதினேழு வயதுதானே ஆகிறது)என்று கேள்விக்குறியுடனான தொனியில் கூறினார்.

கோகுலனுக்கு அர்த்தம் புரிந்தது.

எந்த அரச நியமனங்களும் பதினெட்டு வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கே வழங்கப்படும்.அதுவே நடைமுறையிலுள்ள விதி. 13.12.1950 இல் பிறந்த அவனுக்கு நேர்முகப்பரீட்சை நடக்கும்தினமான 04.04.1968 அன்று 17 வயது முடிந்து சுமார் மூன்றரை மாதங்கள் தான் கழிந்திருந்தன.

கோகுலன்,

‘சேர் ஐ கொம்பிளிற் மை எயிற்றீன் இயர்ஸ் ஒவ் ஏஜ் இன் கம்மிங் டிசம்பர்’ (எதிர்வரும் டிசம்பர்மாதம் எனது பதினெட்டு வயதைப் பூர்த்தி செய்கிறேன்).என்று பட்டென்று சமயோசிதமாகப் பதில் சொன்னான்.

கோகுலனின் பதிலைக்கேட்டு ஒருவரையொருவர் பார்த்து மெல்லிதாகப் புன்னகைத்துக் கொண்டமூவரும் மீண்டும் தமக்குள்ளே ஆங்கிலத்தில் குசுகுசுத்தார்கள்.

பின் நடுநாயகமாக அமர்ந்திருந்தவர் கோகுலனைப் பார்த்து, ‘யு கான் கோ’ (நீர் போகலாம்)என்றார். கோகுலன் எழுந்துநின்று மரியாதை செய்யும் வகையில் தலையைக் குனிந்து மூவரையும்விளித்து நன்றி கூறிவிட்டு அறைக்கு வெளியே வந்தான்.

வெளியே தனக்காகக் காத்துநின்ற அத்தான் நடேசனிடம் நடந்தவைகளையெல்லாம்ஒன்றுவிடாமல் ஒப்புவித்தான்.

கோகுலனும் அத்தான் நடேசனும் அன்றிரவே மட்டக்களப்பு திரும்புவதற்காகக் கொழும்புக்கோட்டை ரயில் நிலையத்தில் வண்டி எடுத்தார்கள். வண்டி அடுத்தநாள் அதிகாலைமட்டக்களப்பை நெருங்கியது. வழியில் கோகுலன் வந்தாறுமூலை கல்லூரிக்குச் செல்வதற்காகஏறாவூர் புகையிரத நிலையத்தில் இறங்கிக் கொண்டான். அத்தான் நடேசன் தொடர்ந்துமட்டக்களப்புக்குப் பயணித்து அங்கிருந்து ‘பஸ்’சில் அம்பாறை புறப்பட்டார்.

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலேயே அம்பாறைக்குச் செல்வதற்கான ‘பஸ்’ நின்றிருந்தது.

விடுதிவந்த சேர்ந்த கோகுலன் தனது நண்பர்களுடன் தனது முதலாவது கொழும்புப் பயணம்மற்றும் நேர்முகப்பரீட்சை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டான்.

தான் முன்பொருதடவை தமது அக்காமார்களுடன், அவர்கள் பொத்துவில் மெதடிஸ்தமிசன்பாடசாலையிலிருந்து மாணவர்கள் கல்விச்சுற்றுலா சென்றசமயம் தானும் அவர்களுடன் சேர்ந்துசென்றபோது இங்கினியாகல எனும் இடத்தில் அமைந்துள்ள ‘சேனநாயக்கா சமுத்திரம்’ எனஅழைக்கப்படும் பாரிய நீர்த்தேக்கத்தைப் பார்வையிட்ட அனுபவமும், தான் வந்தாறுமூலைக்கும்பொத்துவிலுக்கும் இடையில் அடிக்கடி பயணம் மேற்கொண்டதால் அக்கரைப்பற்று –பொத்துவில் பிரதான வீதியில் முறையே காஞ்சிரங்குடா மற்றும் றொட்டை எனும் இடங்களில்பாதையின் வலதுபுறத்தில் றூபஸ்குளம் மற்றும் றொட்டைக் குளங்களுக்குச் செல்லும்திசைகளைக் காட்டும் அம்புக்குறியிட்ட பெயர்ப்பலகைகளை அடிக்கடி பார்க்க நேர்ந்தமையும்,அவை நேர்முகப்பரீட்சையின்போது கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்க உதவியதைக் கூறிப்பெருமைப்பட்டான். நேர்முகப்பரீட்சையை அவன் எதிர்கொண்ட விதம் கோகுலனுக்குத்திருப்தியாகவே இருந்தது. அதனையும் தன் விடுதி நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தான். அவனதுமுதலாவது புகைவண்டிப் பயணம் மட்டுமல்ல இரண்டாவது புகைவண்டிப் பயணமும் –முதலாவது கொழும்புப் பயணமும் – முதலாவது நேர்முகப்பரீட்சை அனுபவமும்கூடமறக்கமுடியாதபடி அவனது மனதில் பதிந்துவிட்டிருந்தன.

கோகுலன் நேர்முகப்பரீட்சை முடிந்துவந்த சில நாட்களில் பாடசாலைக்கு விடுமுறைவிடப்பட்டது. தமிழ் – சிங்கள புதுவருட காலத்துக்கான விடுமுறை அது. விடுமுறைக்கு வீடுசென்றவன் தன் தாயாரிடம் நேர்முகப்பரீட்சைக்காக அத்தான் நடேசனுடன் கொழும்பு சென்றுவந்த எல்லா விபரங்களையும் அனுபவங்களையும் ஒன்றும் விடாமல் ஒப்புவித்தான். தனதுதங்கையின் மருமகன் – தனக்கும் மருமகனான நடேசனை நன்றியுடன் மனதில் எண்ணிப்பெருமிதம் கொண்டாள் கனகம்.

விடுமுறைக்காலம் முடிந்ததும் இரண்டாம் தவணை ஆரம்பமாகிக் கோகுலன் கல்லூரிக்குமீண்டான். விடுதியிலும் கல்லூரி வகுப்பறையிலும் வழமைபோல் காலம் கரைந்துகொண்டிருந்தது.

1968 யூன் மாதத்தில் ஒருநாள் தாயாரிடமிருந்து தபாலில் கடிதம் வந்திருந்தது. ஆவலோடுஉடைத்துப் படித்தான். அடுத்தமாதம் கதிர்காம உற்சவ காலத்தில் கதிர்காமத்திற்கு நடந்து செல்லஉத்தேசித்திருப்பதாகவும், யூலை மாதக் கடைசிக்கிழமை முழுவதும் ‘லீவில்’ நிற்கக்கூடியமாதிரிகல்லூரி அதிபரிடமும் விடுதிப் பொறுப்பாசிரியருடமும் அக்கடிதத்தைக் காட்டி விடுமுறையும்அனுமதியும் எடுத்துக்கொண்டு பொத்துவிலுக்கு வரும்படி அவனது தாயார் அக்கடிதத்தில்எழுதியிருந்தா. வழமையாகத் தனது இளையக்காவைக் கொண்டு கடிதம் எழுதும் தாயார்,

இக்கடிதத்தைத் தனது கைப்படவே எழுதியிருந்தார். அக்கடிதத்தைக் கோகுலன் இரண்டு மூன்றுதடவைகள் வாசித்து மகிழ்ந்தான். தனது தாயாரின் கையெழுத்துள்ள கடிதங்களை வாசித்துமகிழ்வதில் கோகுலனுக்கு அலாதிப் பிரியம்.

தனது தந்தை இறந்த 1962 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒவ்வொரு வருடமும் தனது தாயார்‘பஸ்’சில் கதிர்காமம் சென்று முருகனைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பதுகோகுலனுக்குத் தெரியும். ஆனால், இவ்வருடம் தாயார் கதிர்காமம் நடந்துபோக இருப்பதைஎண்ணியும் அதில் தானும் இணைந்துகொள்ள இருப்பதைக் குறித்தும் குதூகலித்தான்.

(தொடரும் …… அங்கம் 09)

நன்றி: அரங்கம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.