ஆர்ஜென்டினா அதிபர் தேர்தலில் வலதுசாரி வெற்றி : போக்லாந்து தீவுகள் முறுகல் நிலை முடிவுறுமா ? – ஐங்கரன் விக்கினேஸ்வரா
(அதிகாரப்பூர்வ தகவல்படி ஜேவியர் மிலி 56 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தனது வெற்றியை ஆர்ஜென்டினா நாட்டின் புதிய அதிபர் துள்ளல் ஆட்டம் போட்டு கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது)
ஆர்ஜென்டினாவின் (Argentina) புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேவியர் மிலி (Javier Milei) தனது வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. ஜேவியர் மிலி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆர்ஜென்டினாவில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜென்டினா அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜேவியர் மிலே 55.8% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஆர்ஜென்டினாவில் முன்னைய அதிபர் ஆல்பெர்டோ பெர்னாண்டஸின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அங்கு அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று போட்டி கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதியும், 2வது சுற்று போட்டி நவம்பர் 19இல் நடந்து முடிந்தன.
தற்போதைய ஆட்சியில் பொருளாதாரத் துறை அமைச்சராக இருக்கும் செர்ஜியோ மாசா ரினீயூவல் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து சுதந்திர கட்சியின் சார்பில் ஜேவியர் மிலே களம் இறங்கினார்.
தீவிர வலதுசாரி ஆதரவாளரான ஜேவியர் அரசு துறைகளின் எண்ணிக்கையைக் குறைத்து பணவீக்கத்தை கட்டுப் படுத்துவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஜேவியர் மிலே 55.8% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பொருளாதார அமைச்சரான செர்ஜியோ 44.2% வாக்குகள் மட்டுமே பெற்றார். ஜேவியரின் வெற்றி, ஆர்ஜென்டினா 1983-ம் ஆண்டு ஜனநாயக நாடாக மாறிய பிறகு, நடத்தப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளையும் மீறிய மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
குத்தாட்டம் போட்டு கொண்டாடிய அதிபர்!
ஆர்ஜென்டினாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேவியர் மிலி தனது வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்ஜென்டினா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வலதுசாரி லிபர்டி கட்சியை சேர்ந்த ஜேவியர் மிலி வெற்றி பெற்று நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜேவியர் மிலி தனது தேர்தல் வாக்குறுதியில் இரண்டு முக்கிய உறுதியை வழங்கி இருந்தார். அதில் முதலாவது ஆர்ஜென்டினா இனி டொலர் தேசம், மற்றொன்று மத்திய வங்கி நீக்கம் என்பதாகும்.
ஆர்ஜென்டினாவின் தற்போதைய பணவீக்கம் 142 சதவீதமாக இருக்கும் நிலையில், ஆர்ஜென்டினாவின் பீசோ நாணயத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கி விட்டு அமெரிக்க டொலரை அதிகாரப்பூர்வ பணமாக ஜேவியர் மிலி அறிவிக்கயுள்ளார்.
இவை ஆர்ஜென்டினாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும் ஆர்ஜென்டினாவை டொலர் தேசமாக மாற்ற அந்த நாட்டின் மத்திய வங்கியை மூடுவதாகவும் ஜேவியர் மிலி தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்காவில் 2வது பெரிய நாடு:
ஆர்ஜென்டினா தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். ஸப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது.
உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் 15 நாடுகள் குழு (சி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.
இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதார வளமுள்ள நாடு. மனித வளர்ச்சி அடிப்படையில் (HDP) மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது. இலத்தின் அமெரிக்காவில், ஆர்ஜென்டினா ஐந்தாவது பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், மிகக்கூடிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. ஆர்ஜென்டினா ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்ஜென்டினாவுக்கு உள்ளன என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
போக்லாந்து தீவு முறுகல் நிலை:
சர்ச்சைக்குரிய போக்லாந்து தீவுகளைச் (Falkland Islands) சுற்றிலும் பிரித்தானியா இராணுவ மயமாக்குதலில் ஈடுபட்டுள்ளது பற்றி ஐக்கிய நாடுகளில் தாம் முறையிடவிருப்பதாக ஆர்ஜென்டினா முன்பு முறையிட்டுள்ளது.
1982 ஆம் ஆண்டு போக்லாந்து போரின் பின்னர்,ஆர்ஜென்டீனாவுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் போக்லாந்து தீவுகள் தொடர்பாக அண்மைக் காலத்தில் முறுகல் நிலை உருவாகியுள்ளது.
மெர்க்கசூர் என்ற தென்னமெரிக்க வணிக நிறுவனம் போக்லாந்து கொடியுடன் செல்லும் கப்பல்களை தமது துறைமுகங்களூடாக செல்வதற்கு தடை விதித்திருந்தது.
போக்லாந்து மக்கள் பிரித்தானியர்கள். அவர்களது எதிர்காலத்தை அவர்களே தீர்மானிப்பார்கள். போக்லாந்து மக்கள் விரும்பினாலொழிய அர்ஜெண்டீனாவுடன் எவ்விதப் பேச்சுக்களிலும் தாம் ஈடுபடப் போவதில்லை, என பிரித்தானியா கூறியிருந்தது.
பிரேசில், உருகுவாய் போன்ற நாடுகள் இது விடயத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன. ஏற்கனவே போக்லாந்து கப்பல்கள் தமது துறைமுகங்களுக்கு வர அவர்கள் தடை விதித்துள்ளனர். சிலியின் வெளியுறவுத்துறை அமைச்சரும் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
போக்லாந்து கருத்துக் கணிப்பு :
பிரித்தானியா 1833 ஆம் ஆண்டில் இருந்து போக்லாந்து தீவுகளைத் தம் வசம் வைத்திருக்கிறது. இத்தீவுகள் சுயாட்சி அரசைக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த பிராந்தியமாகும். 1982 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா இத்தீவுகளை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையே இரண்டு மாதங்களாக அறிவிக்கப்படாத போர் இடம்பெற்றது. இப்போரில் ஆர்ஜென்டீனாவின் தோல்வியுடன் தனது படைகளை அது பின்வாங்கிக் கொண்டது.
போக்லாந்து தீவு மக்கள் ஐக்கிய இராச்சியத்தின் நிருவாகத்தின் கீழ் தொடர்ந்திருப்பதற்குப் மிகப் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளார்கள்.
போக்லாந்து தீவில் 2013 இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 1,517 பேர் வாக்களித்திருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 90% ஆகும். மூவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்திருந்தனர். மொத்த மக்கள் தொகை 2,900 ஆகும். ஆர்ஜென்டீனா இத்தீவுகளுக்கு உரிமை கோரியதை அடுத்தே இக்கருத்துக் கணிப்பு இடம்பெற்றது.
கருத்துக் கணிப்பு முடிவுகளை வரவேற்றுள்ள பிரித்தானிய அரசு, அனைத்து நாடுகளும் போக்லாந்து மக்களின் முடிவை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.போக்லாந்து தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டுப் பிராந்தியமாக உள்ள தற்போதைய அரசியல் நிலை நீடிக்க வேண்டுமா? என இப்பொது வாக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப்பட்டது.
போக்லாந்து போர் தோல்வி:
1982 ஏப்ரல் 2 ஆம் நாள் ஆர்ஜென்டீனியப் படையினர் போக்லாந்து தீவுகளை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து பிரித்தானியாவின் கடற் படையினருடன் இரண்டு மாதங்கள் வரையில் இடம்பெற்ற சண்டையில் ஆர்ஜன்டீனா இறுதியில் சரணடைந்தது.
1982 போக்லாந்து தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே போர் இடம்பெற்றது. பிரித்தானியா போக்லாந்து தீவுகளை மட்டுமல்லாது, தெற்கு ஜோர்ஜியா உட்பட ஏனைய தெற்கு அத்திலாந்திக் பிராந்தியங்களையும் கைப்பற்றியது. இச்சண்டையில் 255 பிரித்தானியப் படையினரும், 650 ஆர்ஜென்டீனியப் படையினரும் கொல்லப்பட்டனர். மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
1767 ஆம் ஆண்டில் ஸ்ப்பானிய இராச்சியத்திடம் இருந்து போக்லாந்து தீவுகளைப் பெற்றதாகவும், 1833 ஆம் ஆண்டில் பிரித்தானியா இத்தீவுகளைக் கைப்பற்றியதாகவும் ஆர்ஜென்டீனா கூறி வருகிறது. ஆனாலும், இத்தீவுகளில் தமது குடியேற்றம் முன்னரே ஆரம்பித்து விட்டதாகவும், அதனை விட்டுத்தர முடியாது எனவும் பிரித்தானியா கூறுகிறது. தொடர்ந்து தமது குடியேற்றம் இடம்பெற்று வந்ததாகவும், 1833 முதல் தாம் இதனை நிருவகித்து வருவதாகவும் பிரித்தானியா கூறுகிறது.