கதைகள்

“பிரளயக் காலத்தவன்” – சிறுகதை – 44- அண்டனூர் சுரா

“அய்யகோ, என் மகனை யாரேனும் காப்பாற்றுங்களேன்” வள்ளியம்மையின் கதறல்

தெருவெங்கும் சலனமித்திருந்தது. இப்பொழுதுதான் போர் மண்டலம் தாழ்ந்து பனியின்பெய்யொலி கேட்கத் தொடங்கியிருக்கிறது. அதற்குள் குறட்டையொலியினூடே ஓலமா?காதுகளைப் இறுகப் பொத்திக்கொண்டு சிலர் புரண்டுப் படுத்தார்கள். என்னவோ, யாரோவெனசிலர் எழுந்து சுக்கு நூறாய் தகர்ந்து, புகை அப்பிப்போயிருந்த சாளரம் வழியே எட்டிப்பார்த்தார்கள். யாழிவன் ஒருவன் மட்டும் அந்த ஓலக்குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்.அத்தெருவில் மனித அரவம் கேட்டு விழிப்பவன் அவன் மட்டும்தான்!

ஒரு குடிசைக்குள் விளக்கு ஒளிர்ந்தது. விளக்கு என்பது வெறும் விளக்கு அல்ல,மனிதன் வாழ்கிறான் என்பதற்கான அடையாளம். அக்குடிசைக்குள் அடிப்பட்ட கரடியின் ஓலம்ஒடுங்கி முணங்குவதைப் போன்ற கேவுதல் கேட்டது.

“தாயே…” சத்தம் கொடுத்தான் யாழிவன்.

கதவைத் திறந்தாள் வள்ளியம்மை. “யாழிவா, என் மகனைப் பாரேன்” என்றவள்சின்னாவைக் காட்டினாள். அவன் ஓலைப் பாயில் ஆசிரியப்பா போல கால் நீட்டிபடுத்திருந்தான். அவனின் மேற்வயிறு மூச்சு வாங்கியது. கணுக்காலிடத்தில் அவனது மறுகால்பின்னிக் கிடந்தது. கைகளில் ஒன்று துவண்டு, மற்றொன்று நீண்டுக் கிடந்தது. தலைக்குத்தலையணை. மார்பு வரைக்குமாக மூடியிருந்த கிழிந்தப் போர்வை. அவனது முகத்தில் ஒருபுத்தகம் கவிழ்ந்திருந்தது.

“ சின்னா…“

இன்னொரு முறை அழைத்தால் அவன் விழித்துக்கொள்வான். புதிய கவிஞர்களுக்குதூக்கம் ஏது? தூக்கத்திலும் அவர்கள் கவிதை அல்லவா எழுதுகிறார்கள்!. எத்தனை மணிக்குப்படுத்தானோ, படுத்தவுடன் தூங்கிவிடுகிற வயதா அவனுக்கு? இந்நிலத்தின் காலநிலையும்வானிலையும் தூங்குமளவிற்கா அமைதியைக் கொடுத்திருக்கிறது? தூங்குபவன் தூங்கட்டும்என மனதிற்குள் சொல்லிக்கொண்டவளாய் மகனின் முகம் பார்த்து அமர்ந்தாள் வள்ளியம்மை.

புத்தகத்தோடு தூங்கிப்போனவன் புத்தகத்தின் முகத்திலேயே விழிக்க வேண்டும்என்பதற்காக முகத்தைப் புத்தகத்தால் மூடியிருந்தான். அதன் பக்கங்கள் காற்றில்அளாவிக்கொண்டிருந்தன.

இரவு, வள்ளியம்மை பாதி தூக்கத்தில் விழித்து பார்க்கையில் அவன், பத்துப்பக்கங்களவிற்கே வாசித்திருந்தான். இப்பொழுது பார்க்கையில் புத்தகத்தின் பெரும்பகுதியைவாசித்துவிட்டது கவிழ்ந்திருந்த பக்கங்களில் தெரிந்தது. அவன் முயலைப் போலதலைவைத்து தூங்கினாலும் அவனது தூக்கம் பனிக்கரடியின் குளிர்கால தூக்கத்தைஒத்திருந்தது. கண்களின் தூக்கமல்ல அது. மூளையின் தூக்கம். வாசிப்பிலும் வாசித்தகளைப்பினால் வரும் தூக்கம். அவனை எழுப்பலாம், எழுந்தால் கண் விழிக்கும், அவன்காணும் கனவு விழிக்காது.

“என்ன தாயே, கூடாக் கனவு எதுவும் கண்டாயா?” வள்ளியம்மையின் அருகில் அமர்ந்தயாழிவன் கேட்டான். அவனது கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல் தூங்கிய மகனைப்பார்த்தபடியிருந்தாள். அவளுக்கு மகனை வாரியள்ளி அணைக்க வேண்டும் போலிருந்தது.தூங்கும் பிள்ளையை எந்த தாய்தான் கொஞ்சுவாள்? கடற்கரை அலையைப் போல இமைக்கரையில் நுரை. தன் கண் முன்னே இராணுவத்தின் துவக்குக்கு கணவனை இழந்து, “அப்பா…”எனக் கட்டியணைத்த மூத்த மகனையும் இழந்து, எஞ்சியது இவன் ஒருவன்தான். இவனையும்யாரிடமும் காவு கொடுத்துவிடுவேனோ, என்கிற பயம் அவளை மென்றது. கையை இறுக மூடிமடிக்குள் வைத்துக்கொண்டாள்.

“ என்ன கனவு கண்டாய் தாயே?”

“ அதிகாலை கனவு பலிக்குமாமே, தம்பி…”

“கனவு என்பது நினைவிலும் மனதிலும் வருவது. நினைவு நடந்ததை திரும்பவும்நடப்பதாகக் காட்டும். மனது நடக்க இருப்பதை நடப்பதாகக் காட்டும். இரண்டில் எதை நீகண்டாய்?”

“என் வீட்டுக்குள் ஓர் ஆண் சிங்கம் குட்டிப்போட்டது. புதைக்குழிக்குள் அடக்கம்செய்யப்பட்ட பிணங்கள் மண் பிழந்து எட்டிப் பார்த்தன. நூலாம்படை மொய்த்த ஓர்அரங்கமிருக்கிறது. அதற்குள் கவியரங்கம் நடக்கிறது. நரிகள் கையில் கவிதையுடன்உட்கார்ந்திருக்கின்றன. ஒரு மான் கவிதை வாசிக்கிறது. ஒரு ஓநாய் அந்த மானைக் கடித்துக்குதறுகிறது. யானைகள் கனைக்கின்றன. புலிகள் பிளிறுகின்றன. அரங்கம் கெலிப்பதும்,சிரிப்பதும் துள்ளிக்குதிப்பதுமாக இருக்கிறது. மான்கள் தெறித்து நாலாபுறமும் ஓடுகின்றன.ஒரு சிங்கம் பூச்சி மருந்து அடித்து கவிபாடிய ஒரு மானைக் கொல்கிறது…”

யாழிவன், கனவைக் கேட்டு திகைத்து அத்தாயின் முகத்தைத் தழுவுவதைப் போலபார்த்தான். குடை விரிப்பாக அவனது புருவங்கள் ஏறி விரிந்தன. “என்ன கனவோ, யாருக்கானகனவோ…”

யாழிவன் வேட்டியைச் சுருட்டி கொடங்கைக்குள் வைத்துக்கொண்டு ஒரு கையைத்தாங்கி கால்கள் மடக்கி உட்கார்ந்தான். “ தாயே, கொஞ்ச நாட்களாகவே உன் மகனின் போக்குச்சரியில்லை. எந்நேரம் பார்த்தாலும் அவன் புத்தகமும் கையுமாக இருக்கிறான். ஜெயோஎன்கிற கவிஞனின் நூலை மட்டும் தேடிப் பிடித்து வாசிக்கிறான். கண்களை மூடிக்கொண்டுஎன்னென்னவோ எழுதுகிறான், எழுதியதைக் கிழித்தும் கசக்கியும் எறிகிறான். எறிந்ததைதிரும்பவும் எடுத்து விரித்து சுருக்கமில்லாமல் நீவி மடித்து சட்டைப்பைக்குள் வைக்கிறான்.கள்ளிக்காட்டிற்குள் பேசித் திரிகிறான். காட்டாமணக்கு புதருக்குள் நடக்கிறான். ஊமத்தம்காயைப் பறித்து அதிலொரு குச்சியைச் சொருகி முகத்திற்கு நேராக நீட்டி மேடைபேச்சாளனைப் போல பேசுகிறான். அவனது பேச்சை அவனே கைகொட்டி ரசிக்கிறான். அவன்தன்னை கவிஞனாகவும், புலவனாகவும் நினைக்கிறான் போலும் தாயே…”

“ஆமாம் தம்பி, கண்டவர்கள் என் மகனைப் பற்றி அப்படித்தான் சொல்கிறார்கள்…”அவள் முந்தானையைக் கசக்கி கண்களில் ஒற்றி தவித்தாள்.

“ தாயே, உன் மகன் இளம்பிள்ளை. ஒரே பிள்ளை, தந்தையில்லா பிள்ளை வேறு.இங்கே ஆயுதப் போர் ஓய்ந்தும் வாய்ப் போர் ஓயவில்லை. இனி ஆகாத காலம்மக்களுக்கில்லையாம். கவிஞர்களுக்குத்தானாம்…”

“ என்னய்யா சொல்கிறீர்?”

“ஆமாம் தாயே, கவிஞர்களைக் கொன்று கவிஞன் வாழும் காலமிது. பிடிக்காதகவிஞர்களை வசைபாடி கழிக்கிறார்கள். சாதியைத் தேடிப் பிடித்து வருத்துக் கொட்டுகிறார்கள்.தன்னை விடவும் ஒருவன் மெச்சும்படியான ஒரு கவிதை எழுதிவிட்டால் அவனது சுதியும்கதியும் அவ்வளவேதான். இப்பொழுதெல்லாம் யாரும் கவிதையில் எழுத்து பிழைபார்ப்பதில்லை. பிறப்பையும் குடும்ப வகுப்பையுமே பார்க்கிறார்கள். எழுத்துக்கொண்டுஎழுத்தைக் கொல்கிறார்கள்.…”

“ இப்படியெல்லாமா நடக்கிறது..?”

“ இளங்கவி, வளர்கவி, முதுகவி என்கிற பாகுபாடெல்லாம் இங்கு கிடையாது. எழுதிப்பழகும் எவனும் முதல் கவிதையிலேயே வள்ளுவனை மிஞ்சிவிட வேண்டும்.ஷேக்ஸ்பியரைத் தாண்டிவிட வேண்டும். வெல்ஸின் கற்பனை என்ன கற்பனை? என்கற்பனையைப் பாரென சொல்லில் காட்ட வேண்டும். அந்த கற்பனை அவர்களது கற்பனைக்குஎட்டுவதாக இருக்க வேண்டும்…”

“ இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்..?”

“நானே ஒரு கவிஞன்தான். காலாவதியான கவிஞன். தேய்ப்பிறையைஈழப்பெண்ணென்று வர்ணனை செய்துவிட்டேன். நிலவை களங்கப்படுத்திவிட்டேனென என்குடும்பப் படத்தைத் தேடி எடுத்து, ஆபாசமாகக் கழுவி ஊற்றிவிட்டார்கள். என் பெற்றோரைக்கொன்றொழிக்கையில் பனித் தூக்கத்திலிருந்தவர்களெல்லாம், மொழியைக் கொல்கிறான்,இவன் பாதகனென்று சாபத் திறி திறித்தார்கள். என் உயிர் என் கவிதையை விடவும்மேலானது என்று கவிதை எழுதுவதிலிருந்து விலகிக் கொண்டேன். நானொன்று சொல்கிறேன்,கேட்பாயா தாயே?”

“சொல்லுடா யாழி. நீ என் வயிற்றில் பிறக்கவில்லையானாலும் நீயும் என்பிள்ளைதான். சொல்லும்…”

“ கடந்த வாரம் வீதியில் ஒரு முதுப்பெருங்கவிஞன் செத்துக் கிடந்திருக்கிறான்.அவனை எடுத்து பிரேத பரிசோதனை செய்திருக்கிறார்கள். மூளை இருந்திருக்கிறது.இதயமில்லை…”

“ அய்யகோ, அப்படியென்றால் அவர் இதயமில்லாதவரா?”

“ இன்னொன்றையும் சொல்கிறேன்…”

“ சொல்லுமப்பா…”

“ சமீபகால கவிஞர்களில் யாரெல்லாம் சிறப்பாக கவிதை எழுதுகிறார்கள் எனக்கேட்டுவிட்டால் போதும். அவர்களுக்குத் தெரிந்த, உறவின, பிறக்கப் போகிற குழந்தைகளின்பெயர்களை பட்டியலில் அடுக்குவார்கள். அவன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தால்இவனெல்லாம் ஒரு கவிஞனா எனத் தூற்றிவிடுவார்கள்…”

“ தம்பி! இந்த இலக்கிய உலகத்தை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது”

“ தாயே, உன் மகனை ஈழப்போருக்குத் தலைமைத் தாங்க சொல். அவனைத்தளபதியாக்கி அவனது அணியில் என்னை நான் இணைத்துக்கொள்கிறேன். ஆனால்,கவிஞனாக மட்டும் ஆக்கிவிடாதே. கவிஞர்களைக் கொல்வதற்கென்றே கருவியொன்றுகண்டுபிடித்திருக்கிறார்கள். பூச்சிமருந்தின் விலை வேறு குறைந்திருக்கிறது…”

இன்று, மார்ச் 15.

இந்நாளுக்காகத்தான் அவன் இத்தனை நாட்கள் காத்திருந்தான். யாரை அவன், இந்தகவிவுலகத்தின் ஆசானாக நினைத்துக்கொண்டிருந்தானோ, அவரைக் கவிதைப் பாடப்போகிறநாள் இன்று. அவனுக்கு இது முதல் மேடை, முதல் கவிதை. முதல் அமர்வு,

புத்தம் புதிய உரூபாய்த் தாளினைக் கசங்காமல், மடங்காமல் வைத்திருப்பதைப் போலஜெயோ பற்றி அவன் எழுதிய கவிதையைக் கையில் வைத்திருந்தான். வசந்தக்காலம் -சூரியனின் வெட்கையையும் துடைக்கும்படியான இளந்தென்றல் – ஒரு பேரழகியின் நிரை -தேன் தடவிய உதடுகளின் கனிரசம் – இத்தனையும் ஒன்றுகலந்த இன்பமலையை விடவும்உயர்தரமான மயக்கும் கவிஞனை நான் காட்டட்டுமா, அவர்தான் என் ஜெயோ. எழுதியகவிதையை ஒன்றுக்குப் பலமுறை வாசித்து மனனம் செய்துகொண்டான்.

“ மகனே சின்னா, எங்கேயடா கிளம்பிவிட்டாய்..?” கேட்டாள் வள்ளியம்மை.

“ கவியரங்கத்தில் கவிபாட..”

“ வேண்டாம் மகனே, பொல்லாத சொப்பணமொன்று நான் கண்டேனடா…”

சின்னா சிரித்தான். “ தாயே, உன் மனதில் நிறைய நிறைவேறாத ஆசைகள்இருக்கின்றன. ஆகையால்தான் நிறைய கனவுகள் காண்கிறாய்..”

“விடிகாலை கனவு பலிக்குமேயடா, இந்நேரத்தில் கண்ட கண்ணகியின் கனவு பலித்தது.

சீசரின் மனைவி கல்பூர்னியாவின் கனவு பலித்தது…”

“ தாயே, எப்பொழுது நீ நல்ல கனவு காண்பது, நான் கவிபாடி ஜெயோவிற்கு நிகராகஆசனத்தில் அமர்வது. நான் சகுனங்களில் நம்பிக்கை இல்லாதவன்…”

“ போர் வேறு திரும்பவும் மூழ இருக்கிறதாம்..”

“ போர் எங்கே தாயே முடிந்தது, திரும்பவும் மூழ…”

“விடலைச் சேவலின் கூவுதல் போல உன் பேச்சு இருக்கிறதேயடா?”

“ கவிபாட கிளம்புகின்ற எனக்கு சீர் கொடுக்கலாம், அணிகள் நீட்டலாம். தாயே நீமுரண் அல்லவா நீட்டுகிறாய்?”

“ மகனே, இன்று ஒரு நாள் என் பேச்சை நீ கேட்கத்தான் வேணும்…”

“ என் பேச்சைக் கேட்க நூறு பேர் அரங்கில் எனக்காகக் காத்திருக்க, உன் பேச்சை நான்கேட்க இது நேரமும் அன்று, காலமும் அன்று..”

“ மகனே, எனக்கு மிஞ்சிய ஒரே பிள்ளை நீ…”

“ தாயே, உன் உயரத்தை மிஞ்சிய தனயன் நான். கவியரங்கத்திற்கு என்னை வாழ்த்திவழியனுப்பி வை, தாயே…”

“ வாடா மகனே..” அனுப்பி வைத்தாள் வள்ளியம்மை.

சின்னா நடந்தான். அவனது மனம் முழுவதும் ஜெயோவாக இருந்தார். ஜெயோவைப்பாடப் போகிற உந்துதலில் அவனது மனம் இளம்மானெனத் துள்ளியது. அரும்பு மீசையில்இயைபு, தளை முளைத்தது. அதோ! கவிபாடும் சீரரங்கம். இலக்கணத்தால் வடிக்கப்பட்டஇலக்கியம் போல அத்தனை கச்சிதம்.

ஒற்றை அரங்கம். ஒரு வாசல். ஒரே கதவு. ஒரேயொரு மேடை. அரங்கத்திற்குவெளியே, ஒவ்வொரு பக்கமாக ஒதுங்கி மிதக்கும் பாசியைப் போல கவிஞர்கள். சின்னா, ஒருகவிதையின் கடைசி வரியையும் நெருங்கிவிட்டவனைப் போல வாயிலை நெருங்கினான்.அரங்கத்திற்குள் நுழைந்தான்.

ஒரு கை அவனைத் தடுத்தது. “அடேய், நில். நீ யார்?”

“நான் கவிஞன், இளங்கவிஞன், முதல் முறையாக கவிபாடப் போகும் பிஞ்சுக்கவிஞன்”

“ எங்கே போகிறாய்?”

“ கவிஞன் எங்கே போவான், கவிதைப் பாடத்தான், அரங்கத்திற்கு…”

“ உன் பெயரென்ன…?”

“ சின்னா..”

“ சின்னாவா! அவன் நீதானா?” அவனை ஒரு கை தடுத்தது. மறு கை அவனதுகண்களை மறைத்தது. அவனை இழுக்க, தள்ள,… அந்த இடத்தில் ஒரே களேபரம். நான்கைந்துபேர் அவனை அரங்கத்திற்குள் நுழையவிடாமல் மறித்து அடித்து கீழே சாய்த்தார்கள்.

“ நான் கவிஞன். புலவன். கவிபாடி. என்னை விட்டுவிடுங்கள்…” கூக்குரலெடுத்துக்கத்தினான். தன் வயதையொத்த கவிஞரிடம் கைக்குலுக்கிப் பேசிக்கொண்டிருந்த ஜெயோகதறும் குரல் கேட்டு சின்னாவின் பக்கமாகத் திரும்பினார்.

“ஜெயோ , ஜெயோ..” உரக்கக் கத்தினான் சின்னா. உதவி, உதவி என்பதைத்தான் அவன்அப்படியாகக் கத்தினான்.ஜெயோ அவனைப் பார்த்தார். அவர் பார்த்ததும் அவனைப் பிடித்திருந்த கைகளின்இறுக்கம் தளர்ந்தன. கண்களைப் பொத்திய கைகள் விலகின. சின்னா கண்களைத் தேய்த்துக்கொண்டு பார்த்தான். அவனால் நம்ப முடியவில்லை. இன்று அவன் யாரைப் புகழ்ந்து கவிபாடவந்திருக்கிறானோ, யாரை அவன் ஞானகுருவாக ஏற்றிருக்கிறானோ அவர் அவன் முன்னேநின்றுகொண்டிருந்தார். அவனது உதடுகள் ஜெயோ, ஜெயோ,.. என்றவாறு துடித்தன.

தன் ஆதர்ச கவிஞரைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் சின்னா பேரானந்தம் கொண்டான்.அவனது கண்கள் அவரை நோக்கித் தாவின. “நான் சின்னா. கவிஞன். உன் எழுத்தை மட்டுமேவாசிக்கிறவன்.”

ஜெயோ அவனைக் கூர்ந்து பார்த்து, “சின்னாவா, கவிதையைப் பிழையாக எழுதிமொழியைக் கொல்லும் கவிஞன் நீதானா? யாரங்கே, இவனைப் பூச்சிமருந்தால்கொன்றொழியுங்கள்..” என்றார்.

சின்னா திடுக்கிட்டான். ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்த காலம் முடிந்துவிட்டது.இனி இது கவிஞர்களைக் கொன்றொழிக்கும் காலம், என்பதை அவன் முதன்முறையாகஉணர்ந்தான். இதை அவன் உணர்கையில் அவனுக்குள் அவனையும் அறியாமல் ஒரு பிரளயக்கவிதை தினவெடுத்தது.

Loading

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.