கதைகள்

சுட்டுத் தின்னு…… சோலச்சி – சிறுகதை

ஒல்லியான உடம்பு. உருண்டை வடிவான முகம். சூம்பிப்போன வலது கால்.சாய்த்து சாய்த்து நடக்கும் அறிவழகனுக்கு நான் , விஜயகுமார், சக்திவேல், சேவுகன்,இளங்கோ, அகஸ்டின் ஆறுபேரும் ஆரம்பத்திலிருந்து இணை பிரியாத நண்பர்கள்.

பின்னாளில்தான் பெருமாள் எங்களுடன் வந்து சேர்ந்தான்.அறிவழகனை சூப்பி காலு என்று சிலர் அழைப்பதுண்டு. அவன் கோபப்படாமல்வாங்க சார் கொஞ்சம் என் காலப் புடுச்சு உருவி விட்டா நாங்களும் ஒங்கள மாதிரிநடப்போம்லஎன்பான். எதிரே இருப்பவர்களிடம் எந்தப் பதிலும் வராமல் நகர்ந்துபோய்விடுவார்கள். அவன் கோபப்பட்டு நாங்கள் ஒருநாளும் பார்த்ததில்லை. ஆசிரியர்வகுப்புக்கு வராத நேரத்தில் எங்களின் அரட்டைக் கச்சேரி அரங்கேற்றம் தவறாமல்நடக்கும்.

ஓட்டுக் கொட்டகையில்தான் எங்கள் வகுப்பறை இருந்தது. ஆறாம் வகுப்பு, ஏழாம்வகுப்பு ஏ,பி என்று இரண்டு வகுப்புகளும் எட்டாம் வகுப்பு மட்டும் ஒரே வகுப்பாகஇருந்தது. எங்கள் வகுப்பில் மொத்தம் நூற்று பதினெட்டு பேர் படித்தனர். ஆசிரியர்பற்றாக்குறை மற்றும் கூடுதல் வகுப்பறை இல்லாததை காரணம் காட்டி  ஒரேவகுப்பாக நடந்தது. வகுப்பறைக்கு சுற்றுச் சுவராக குண்டு கருங்கல்லைக் கொண்டுஇடுப்பளவுக்கு சுவர் எழுப்பியிருந்தார்கள். தென்னம் மட்டை கொண்டு பின்னியகீற்றுகளால் ஒவ்வொரு வகுப்பும் தடுக்கப்பட்டு இருந்தன. மண் தரையில் அனைத்துவகுப்புகளும் இயங்கின. ஒன்பதாம் வகுப்புக்கும் பத்தாம் வகுப்புக்கும்தான் சிமெண்ட்தரையில் வகுப்பு நடந்தது.

ஆசிரியர் யாரும் வராத நேரங்களில் வகுப்புக்குள் கிச்சு கிச்சு தாம்பலம்விளையாட்டில் பலரும் மூழ்கி இருப்போம். சிலர் கைகளை விரித்துக்கொண்டு அம்மாகுத்து அய்யா குத்து பிடிச்சுக்க குத்து விளையாட்டு விளையாடுவர். சிலர் தடுப்புச்சுவராக இருக்கும் தென்னம் மட்டையில் ஓட்டை போட்டு பக்கத்து வகுப்பறையைஎட்டிப் பார்த்துக்கொண்டும் இருப்பார்கள். அந்தப் பக்கம் உள்ள மாணவர்கள்பாடத்தைக் கவனிக்காமல் ஓட்டையை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பார்கள்.

ஆசிரியர் யாரும் பார்த்துவிட்டால் செம்மையாக அடி விழும். அதற்காக பெரியஓட்டைகளைப் போடாமல் கட்டைவிரல் அளவுக்கு ஓட்டை போட்டு பார்க்கவேண்டும் என்று அறிவழகன் சொன்னதிலிருந்து யாரும் எங்கள் வகுப்பில் அடிவாங்கியதே இல்லை.

பெண்கள் தலை முடியில் கட்டும் ரப்பர் பேண்ட்டில் ஈக்காங் குச்சியை வைத்து வில்போல இழுத்து ஏழாம் வகுப்பில் இருக்கும் முருகனை நோக்கி தட்டியின் ஓட்டைவழியே அறிவழகன் விட்டபோது குறுக்கே வந்த மீனாட்சி டீச்சர் காலில் பட்டது.

கோபம் தலைக்கேறி விறுவிறுனு எங்கள் வகுப்புக்குள் வந்துவிட்டார். அதற்குள் ரப்பர்பேண்டை மண்ணுக்குள் புதைத்தான் அறிவழகன். எதுவும் நடக்காதது போல்படித்துக் கொண்டிருந்தோம்.

யாருடைய கிளாசு இப்ப. பக்கத்துல பாடம் நடத்த முடியுதா. யாருடா அவன் அம்புவிட்டது. இந்த மொகரதான் ஊமக்குசும்பு வேல எல்லாம் பாக்கும் எந்திரி என்றுசொல்லிக்கொண்டே அறிவழகனை நோக்கி வந்தார் மீனாட்சி டீச்சர். நா இல்லங்க டீச்சர். இவன்தான் என்று என்னை மாட்டிவிட்டான் ரவி நல்லவனு நெனச்சா. அவன் கூட சேர்ந்து நீயும் கெட்டுப் போயிட்டியா.

மொளச்சு மூனு எல விடலா வில்லு விடுறீகளோபார்வையை என் பக்கம்திருப்பினார். அதற்குள் ஏழாம் வகுப்பு பி பிரிவு மாணவர்கள் சத்தமாக பேசிக்கொண்டுஇருந்தனர்.வாய மூடித் தொலைங்ககையில் வைத்திருந்த மூங்கில் குச்சியால்தென்னண் தட்டியை ஓங்கி அடித்தார். மாணவர்கள் அமைதியாகினர்.

அடுத்த அடி என் மேல் விழ தயாரானபோது டீச்சர் விஜயகுமார்தான் அம்பு விட்டான்என்று சொல்லிக்கொண்டே மாணவிகள் பக்கம் ஓடினேன்.

டீச்சர் நா இல்ல. சக்திவேல்தான் அம்பு விட்டான் என்று அவன் சொல்ல டீச்சர்இளங்கோதான் அம்புவிட்டான்டீச்சர் அகஸ்டின்தான் அம்பு விட்டான் என்றுஒருவரை ஒருவர் மாற்றி சொல்ல “எல்லாருமே அராத்துகதான்” என்றுமுனுமுனுத்துக்கொண்டேஎல்லோரும் முட்டி போடு. யாராவது கத்துனா பேர எழுதிக்கொண்டுவாவகுப்பு தலைவன் முத்துக்குமாரிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார் மீனாட்சிடீச்சர்.

“பேர எழுதிருவியா நீ…..ம்..,.நாக்கைத் துருத்திக் காட்டிய அறிவழகனிடம் இல்லைஎன்பது போல தலையாட்டினான். அப்போது என்னடா மீனாட்சி அம்மா வந்துட்டுப்போறாங்க. கொஞ்ச நேரம் லேட்டாச்சுனா கத்தி ஊரக் கூப்புட்டுருவீங்களே.

சித்தாம்பலத்து குரங்குக கூட சத்தமில்லாம ஆலமரத்துல திரியுதுக. அதுக பண்றசேட்டைய பூராம் பண்ணிட்டு ஒன்னுந்தெரியாத மாறி திருதிருனு முழிக்கிறது.

முழியப்பாரு….. அந்த ஏழு பேரும் எந்திருச்சு முன்னாடி வரிசைக்கு வாசொல்லிக்கொண்டே கணக்கு ஆசிரியர் அய்யனார் வகுப்பறையின் நடுவில் வந்தார்.

எங்களுக்கோ உள்ளூர நடுக்கம் ஏற்பட்டது. பக்கத்து வரிசையில் இருந்த மஞ்சுளா கீழ்உதட்டைக் கடித்து தலையை ஆட்டி கிண்டல் செய்தாள். அவளருகே உட்கார்ந்திருந்தஅழகுராணியோ அவளது தொடையை தட்டி நக்கல் பண்ணாம சும்மா இருடிஎன்றாள்.

எங்களை யாராவது எதும் சொல்லிவிட்டால் அழகுராணிக்கு கோபம் வந்துவிடும்.எங்களோடு எப்போதும் ப்ரியமாக இருப்பாள். என்னோடு சேர்ந்து படிப்பதைமகிழ்ச்சியாக கருதுவாள்.

மாப்ள ஒன்னோட ஆளு பரவாயில்லைடா. அந்தப் புள்ளதான்டா ஓவரா பண்ணுதுஎன்று முறைத்தான் அறிவழகன். அவனது கோபம் நீண்ட நாள்நீடிக்கவில்லை.  மஞ்சுளாவும் எங்களோடு நண்பராக சேர்ந்து கொண்டாள்.மஞ்சுளா எங்களோடு சேரந்தது முத்துக்குமாருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.

சேட்டை பண்ணித் திரியுற அந்தப் பயலுக கூட சேர்ந்து பழகுறதுக்கு ஒங்கஅம்மாகிட்ட சொல்றேன் பாரு. அதுக்கு முன்னாடி ஒங்க அண்ணன் பத்தாவதுபடிக்குதுல்ல. அவருக்கிட்ட சொல்றேன்.. முத்துக்குமாரின் மிரட்டலுக்கு மஞ்சுளாபணியவில்லை. “சொன்னா..சொல்லிக்க. சொக்கன் மாறி பீத்திக்க…”என்று நக்கலடித்தாள். அவள் எப்போதும் போல் எங்களோடு அன்பாகவேபழகினாள்.

மஞ்சுளாவும் அழகுராணியும் அரசுக் குடியிருப்பில்தான் தங்கி இருந்தார்கள்.அவர்கள் அப்பா அருகிலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில்தான்பணியாற்றுகிறார்கள். நாங்கள் படிக்கும்போது அரசுக் குடியிருப்பு பிள்ளைகள்தான்நவநாகரிகமாக வருவார்கள். அவர்களைப் பார்த்தாலே  இவர்கள் அப்பாஅரசுப்பணியாளராக இருக்கிறார் என்பது தெரிந்துவிடும்.

நாங்கள் படிக்கும் காலத்தில் அரசுக்குடியிருப்பில் உள்ளவர்கள் வீட்டில்மட்டும்தான் தொலைக்காட்சி இருந்தது.  எங்கள் ஊரில் பஞ்சாயத்து தொலைக்காட்சிமட்டுமே இருந்தது. பொதிகை அலைவரிசை மட்டுமே வரும். அந்தஅலைவரிசையில் வெள்ளிக்கிழமை இரவு ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியும்ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ஏதாவது ஒரு தமிழ்படமும் ஓடும். அதைப்பார்க்க ஊரே திரண்டு நிற்கும். அந்த வாரம் முழுவதும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியும்ஞாயிற்றுக்கிழமை பார்த்த படத்தைப் பற்றியுமே பேசிக்கொண்டு இருப்போம்.

எப்போதாவது மதிய நேரத்தில் மஞ்சுளா வீட்டுக்குச் செல்வோம். அவள் வீட்டில்ஓனிடா டீவி இருந்தது. அதை அவள் எங்களுக்காக போட்டுக் காட்டுவாள். வெறும்இந்திதான் ஓடிக் கொண்டிருக்கும்.  கொஞ்ச நேரம் அதை வெறிக்க பார்த்துக்கொண்டிருப்போம்.

“மாப்ள என்னடா இவனுக தாத்பூத்துனு பேசுறானுக. ஒரு வெங்காயமும் புரியல”அறிவழகனின் பேச்சைக் கேட்டு மஞ்சுளாவும் அழகுராணியும் பலநேரம்வாய்விட்டுச் சிரித்ததுண்டு. மஞ்சுளாவும் அழகுராணியும் மத்தியானம்சாப்டுறதுக்கு வீட்டுக்குத்தான் போவார்கள். சாப்டுட்டு வரும்போது எங்களுக்காகஇருவருமே ஏதாவது தீனி கொண்டு வருவார்கள்.

நான் என் நண்பர்களுக்காக பல நேரங்களில் ஈச்சக்காய், காரைப்பழம், பாஞ்சாம்பழம்,  தொரட்டிப் பழம் பறித்துக் கொண்டு செல்வேன். சிலநேரம் பனங்கிழங்கும்கொண்டு போவேன். நான் எது கொடுத்தாலும் அழகுராணி விரும்பித் தின்பாள்.

அவளும் பதிலுக்கு ஆரஞ்சுப் பழம், ஆப்பிள் பழம் கொண்டு வந்து கொடுப்பாள்.இந்தப் பழத்தெல்லாம் எங்கப்பா கண்ணுலயே காட்டுனது இல்லடா.

இந்தப் புள்ளைக அப்பா ஆப்பிசருங்கவும் வெளிநாட்டு பழமாவாங்கித் தர்றாங்கடா….” அறிவழகன் சொன்னான். “டேய்..ஆனாம்பழம் ஈச்சம்பழம், நவ்வாப்பழமுனு இந்தப்பழத்த விட்டா…இதுமாறி பழத்த நாங்களும் பாத்தது கூட இல்லடா…” நான்சொன்னதும் “அந்தப் புள்ளைக நம்மல காட்டுப்பயலுகனுநெனச்சுக்கும்டா… பேசாம காக்கா கடி கடிச்சு திங்கிறதப்பாருங்கடா..” என்று அதட்டினான் சேவுகன். நாங்கள் எல்லோரும் சேர்ந்துதின்போம்.

நாங்கள் வேகவேகமாக திங்கிறதைப் பார்த்ததும் “காங்காதவன்கஞ்சியக் கண்டானாம் அத ஊத்தி ஊத்தி குடிச்சானாம்” எங்க அம்மாசொன்னது நினைவுக்கு வந்ததும் சிரித்துக்கொண்டென்.

“திங்கிம்போது அப்புடி என்னத்தடா கண்டே…ஈ….னு இளிக்கிற..”அறிவழகன் சொன்னதும் எல்லோருமே சிரித்தனர்.

பள்ளிக்கூடத்து வாசலில் காளியம்மாள் கிழவி சாக்கு விரித்து கடை போட்டிருப்பாள்.

ஒன்னுக்குப் பெல் அடிக்கும் போதும் மத்தியானம் சாப்பாட்டு நேரத்திலும்மாணவர்கள் கூட்டம் அந்தக் கடையில் அலைமோதும்.நம்பிக்கையானவர்களுக்கு மட்டுமே கடனாக பழங்களைக் கொடுப்பாள்.

மாங்காய், கொய்யாப் பழம், இலந்தைப் பழம், நாவல்பழம் என சீசனுக்குஏற்றார்போல் கிடைப்பதை விற்பாள். அழுகிய பழங்களை கூட சீவி விட்டு இங்கபாரு எப்புடி லட்டு மாறி இருக்குனு ஆசை காட்டி விற்றுவிடுவாள். நாங்களும்நாவல்பழம், இலந்தைப்பழம் பறித்து வந்து பள்ளிக்கூடத்திற்குள் விற்போம். அந்தக்காசில் பேனா, பென்சில், ரப்பர் வாங்கியது போக மீதி காசுக்குசாலையோரமாய் இருக்கும் அக்கா பெட்டிக்கடையில் தேன் மிட்டாய் வாங்கிசாப்பிடுவோம்.

காளியம்மாள் கிழவி எங்கள் வகுப்பறைக்குள் வந்து சண்முகத்தின் புத்தகப் பையைதூக்கிக்கொண்டு சென்றுவிட்டாள். அவன் எவ்வளவோ கெஞ்சியும் அவள் தருவதாகஇல்லை.

கடனுக்கு கொய்யாப்பழம் வாங்கி வழுப்புவழுப்புனு தின்னியல்ல. மூனு ரூவாகாசக் கொடுத்துப்புட்டு பையை வாங்கிக்க. ஏழெட்டு நாளா காசு தர்றேனுடிமிக்கியா கொடுக்குற கத்திக்கொண்டே புத்தகப் பையுடன் சென்றாள்.

குழந்தைவேலு ஆசிரியர் காளியம்மாளிடம் ஏதோ பேசிய பிறகுதான் புத்தகப்பையை கொடுத்தாள். அன்றிலிருந்து சண்முகத்தை அழுவப்பழம்னுதான் நாங்கள்கூப்பிடுவோம். அவன் எப்போது பார்த்தாலும் எங்களை முறைத்துக்கொண்டேதிரிவான். அவனை வம்பிழுப்பது அறிவழகன்தான்.

அறிவழகனின் கால் சூம்பி இருப்பதால் எந்த ஆசிரியரும் அவனை அடிக்கமாட்டார்கள்.  அறிவழகனை யாராவது வேணுமுனே மாட்டிவிட்டால் போதும்சார் என்னய சூப்பி காலு சூப்பிக் காலுனு கிண்டல் பண்றான் சார் என்றுசொல்லிக்கொண்டே அழுவதுபோல் கண்களை தேய்க்கஆரம்பித்துவிடுவான்.

ஏன்டா அவனோட ஊனத்த நக்கல் பண்றியாஎன்று செம்மையாக அடி விழும்.அதற்குப் பயந்துகொண்டு பலரும் அறிவழகனிடம் எதிர்த்துப் பேச மாட்டார்கள். எங்களுக்கு கூடுதல் பலமே அறிவழகன்தான்.

குழந்தைவேலு ஆசிரியர்தான் எங்களுக்கு சமூகவியல் ஆசிரியர். படிக்கவில்லைஎன்றால் அடி நிமித்து எடுத்து விடுவார். அவள் சைக்கிளில்தான் வருவார். நாங்கள்எங்கள் வகுப்பிலிருந்து காலையில் பள்ளி நுழைவாயிலை வெறிக்கப்பார்த்துக்கொண்டு இருப்போம். அறிவழகன் பத்து பைசாவை வைத்து பூவா தலையாபோட்டுப் பார்ப்பான். தலை விழுந்தால் அவர் இன்று வரமாட்டார் என்பது எங்கள்நம்பிக்கை. அதேபோல் மூன்று அணில்களை யாராவது தொடர்ந்து பார்த்துவிட்டால்குழந்தைவேலு ஆசிரியர் லீவு போட வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.

மூன்று அணிலைப் பார்த்தாகவும் அதனால் குழந்தைவேலு ஆசிரியர் இன்று லீவுபோட்டு விடுவார் என்று தீர்க்கமாக சொன்னான் அறிவழகன். அவன் சொன்னதுபோல் காலையில் பிரார்த்தனை நிகழ்வுக்கு அவர் வராதது கண்டு மகிழ்ச்சிஅடைந்தோம். அன்று மூன்றாவது பாடவேளை சமூகவியல் பாடம். யாருமேஎதிர்பார்க்காத வகையில் வகுப்புக்குள் நுழைந்துவிட்டார். வகுப்பு அமைதியானது.

அவர் கையில்  மாதத்தேர்வு எழுதிய தேர்வுத்தாள்கள் இருந்தன. எத்தன மார்க்குனுதெரியலயே. மாட்டுனோம்… செத்தோம் என்று ஒவ்வொருவரும்எண்ணிக்கொண்டோம்.

தேர்வு எழுதிய தாளை பெயரைப் படித்து மதிப்பெண்ணையும் சொல்லிஒவ்வொருவரையும் அழைத்தார். வாங்கிக்கொண்டு அவரவர் இடத்தில்உட்கார்ந்தோம். எங்கள் நண்பர்களில் மஞ்சுளா பெயரை மட்டும் கூப்பிடவேஇல்லை.  எங்களுக்குப் பயமாக இருந்து.

இங்கேரு வெளிச்ச எந்திரி. எலிக்குட்டி மாதிரி இருந்துக்கிட்டு சொல் பேச்சுக்கேட்க மாட்டியா. அப்படியே பொட்ட மனப்பாடம் பண்ணி எழுதிருக்கேஎன்றுசொல்லிக்கொண்டே மூங்கில் குச்சியால் கைகளை நீட்டச் சொல்லி அடித்துவிட்டார்.

எங்கள் கண்களும் சிவந்து போனது. அதன் பிறகு மஞ்சுளா யாரிடமும் அடிவாங்கியதே இல்லை. அவளும் சொந்தமாக எழுத கற்றுக் கொண்டாள். விஜயகுமார்மட்டுமே அவ்வப்போது அடி வாங்கினான். எங்கள் நண்பர்களில் வேறு யாரும் அடிவாங்குவதே இல்லை.

மத்தியானம் பள்ளியில் சோறு வாங்கிக் கொண்டு அருகிலுள்ள சித்தாம்பலம்ஊரணிக்குத்தான் சாப்பிடப் போவோம். ஊரணியில் தட்டைத் தூக்கிப்போட்டுவிளையாடியதற்காக காவல்காரர் குட்டைக் கருப்பையா பெருமாளின் தட்டினைப்பிடிங்கிக் கொண்டார். அவன் தேமித்தேமி அழுதுகொண்டிருந்தான். மற்றமாணவர்கள் குட்டைக் கருப்பையாவிற்குப் பயந்து கொண்டு ஓட்டம் பிடித்தார்கள்.

அவர் மூன்றடி உயரம்தான் இருப்பார். வயது நாற்பத்தைந்து இருக்கும்.மாமா…மாமா நா பஞ்சாயத்து தலைவரம்மா வீட்ல வேல பாக்குறவரு மயன்தான்மாமா. இவன் எங்க கிளாசுதான் மாமா. விட்ரு மாமா. இனிமேலு இப்புடிபண்ண மாட்டான்..” என்று கெஞ்சினேன்.

ஓ….ஓ அந்த மச்சான் மயனா நீ. அதான் மொகச்சாட அப்புடியே இருக்கு.அவன்கிட்ட சொல்லி வையி மாப்ள. ஒழுங்கா சாப்டுட்டு தண்ணிய கொமக்காமகழுவிட்டு போகனும்என்றார்.

அன்றிலிருந்து பெருமாளும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். நாங்கள்சித்தாம்பலத்துக்கு செல்லும் போதெல்லாம் மாமா நல்லாருக்கீங்களா என்றால்போதும் எங்களை காவல்காரர் ஒன்றும் சொல்ல மாட்டார்.

“மாப்ள காசுருந்தா அமுலு கடையில ஒரு போயலப் பொட்டலம் வாங்கித் தர்றதுஎன்பார். எப்போதாவது இலந்தைப் பழம் விற்ற காசில் புகையிலைப் பொட்டலம்ஒன்று வாங்கிக் கொடுப்போம். அப்புடியே எங்க மச்சான் கொணம்ய்யா ஒனக்கு.அப்பாவ கேட்டதா சொல்லு மாப்ளே என்று புகையிலையை அள்ளி வாயில் போட்டுஅதக்கிக் கொண்டேதண்ணிய ஒழப்பாம சீக்கிரம் போங்கடாஎன்று மற்றவர்களைப்பார்த்து கத்துவார்.

பொய்யாக இருக்குமோ என்று யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குபொய் சொல்லுவதில் கெட்டிக்காரன் அறிவழகன். அவன் சொல்லுவது எல்லாமேஉண்மை போலவே இருக்கும்.

“அந்தமான்னு எப்புடித் தெரியுமா பேரு வந்துச்சு. எங்க ஊரு கோணக்குண்டிசுப்பையா அந்தமான் போயிருந்தப்போ.. அந்த ஊர வெறும் தீவுனுதான்சொன்னாங்களாம். அப்போ அவரு.. காட்டுக்குள்ள கக்கா பேழப் போகும் போது ஒருமான் துள்ளி ஓடுச்சாம். அதப் பாத்ததும் “அதோ அந்தமான்..” அப்புடினு கூச்சல்போட்டு கத்துனாராம். அதுலருந்துதான் அந்தத் தீவுக்கு அந்தமான்னு பேரவச்சுட்டாங்கனு சொன்னபோது மஞ்சுளாவும் அழகுராணியும் விழுந்து விழுந்துசிரித்துக் கொண்டிருந்தனர்.

அரிவழகன் சொன்ன சேதி.. பள்ளிக்கூடம் முழுவதும் பரவியது. அறிவழகன்சுந்தரப்பட்டியிலிருந்து நடந்து வந்து புல்வயலில் பஸ் ஏறித்தான் வயலோகத்திற்குவருவான். சிலநேரங்களில் பஸ்ஸை விட்டுவிட்டால் வயலோகத்திலிருந்து நடந்தேசெல்வான். அவன் ஊருக்கு அருகில்தான் எங்கள் ஊர் என்பதால் நானும் பலநேரம்அவனோடு நடந்தே செல்வேன்.

மறுநாள் காலையில் குழந்தைவேலு ஆசிரியர் “யார்டா அந்த கோணக்குண்டிசுப்பையா….” என்றபோது வகுப்பறையில் சிரிப்பொலி அதிர்ந்தது.

என் அருகில் உட்கார்ந்திருக்கும் பெருமாள் காலையிலிருந்தே சொறிந்து கொண்டுஇருந்தான். சொறிய சொறிய அவன் உடலெங்கும் தடிப்பு தடிப்பாக மாறியது. செவத்தஉடம்புக்கு அதுக்கும் உடலில் தடிப்புகள் சிவந்துபோய் இருந்தது.  அரிப்புநிற்கவேயில்லை. சொறிந்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் சொறிய இரத்தமேவந்துவிட்டது.  அவனைப் பார்க்கவே எங்களுக்கு பரிதாபமாக இருந்தது.

என்னத்தடா தின்னுத் தொலஞ்ச. இல்ல… அரிப்பூச்சி எதும் கடிச்சிருச்சாடாசொறிஞ்சு சொறிஞ்சு சொறிப்பெருமாளாவே மாறிட்ட..” அய்யனார் ஆசிரியர்கேட்டபோது மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.

அவனை அழைத்துக்கொண்டு நானும் அறிவழகனும் சக்திவேலும் மடத்துக்குச்சென்றோம். வயலோகத்தில் உள்ள ஒரே ஆஸ்பத்திரி அதுதான். பூஞ்செடிகளும்மரங்களும் சூழ்ந்து இருக்கும். அந்த இடத்திற்குள் நுழைந்தாலேகுளிர்ந்த காற்று வீசும். குளிர்ந்த காற்றும் கண்களை மயக்கும்மரங்களையும் பூக்களையும் பார்த்தாலே போதும் எப்பேர்பட்டநோயும் முக்கால்வாசி குணமாகிவிடும்.

டாக்டரம்மா அவனிடம் காலையில என்ன சாப்ட்ட…? எங்கஉட்கார்ந்திருந்த..? ராத்திரி நல்லா தூங்குனியா…? காலையிலவெளிய போனியா…? வெளிய போகும்போது முக்குனியா…? னுஏதேதோ கேட்டுக்கொண்டே தடிப்பு உள்ள இடங்களைதொட்டுத்தொட்டுப் பார்த்தார். பதில் சொல்லிக்கொண்டேசொறிந்தான். கண்கள் கலங்கினான்.

“ம்… இது ஒன்னுமில்ல. வலிக்காம ஒரு ஊசி போடுறேன்.சரியாய்டும். ஆமா இவனுக ஓங்கூட்டாளிகளா…? என்றுகேட்டுக்கொண்டே சிரஞ்சில் மருந்தை ஏத்தினார். எங்கள் பக்கமாய்அவனை திரும்பிக்கச் சொன்னார்கள். டவுசரை இடுப்புக்கு கீழேலேசாக கழட்டச் சொன்னார். டவுசரை கழட்டச் சொன்னதும்

பெருமாள் சிரித்துவிட்டான். அழுகையிலயும் சிரிப்பு வருதாடா…..ம்கெட்டிக்காரன்தான் என்று சொல்லிக்கொண்டே இடுப்பில் ஊசிகுத்தினார். என் கைகளைப் இறுகப் பிடித்துக்கொண்டே உஷ்…..ஆ….என கத்தினான். கண்ணீர் பொத்துக்கொண்டு வெளியேறியது.

“என்னடா இப்பதான் சிரிச்ச…. அதுக்குள்ள அழுகமூஞ்சியாயிட்ட….” சொல்லிக்கொண்டே டாக்டரம்மா பெருமாளின் தலையில்கைவைத்து ஜெபம் செய்தார். ஊசிபோட்டாதான் சரியாய்டும்னுசொன்னாங்க அப்பறம் எதுக்கு தலையில கையி வச்சு ஏதோமந்தரம் சொல்றாங்க. அவனே அரிப்பும் தாங்காம போட்டஊசியோட வலியும் தாங்காம அழுதுக்கிட்டு இருக்கானு அறிவழகன்என்னிடம் முனுமுனுத்தது டாக்டரம்மா காதிலும் விழுந்துவிட்டது.

“இவனொருத்தன் சும்மாருடா…” என கண்களை உருட்டிவிழித்துஅதட்டினான் சக்திவேல். டாக்டரம்மா எங்களைப் பார்த்துசிரித்துக்கொண்டே கர்த்தர் ஆசிர்வதிப்பார் என்றார். மூன்று மாத்திரைகளைஎன்னிடம் கொடுத்து மூனு வேளையும் போட்டுக்கச் சொல்லு என்றார். ஊசிமாத்திரைக்கு அவர் பணம் கேட்கவில்லை.  பள்ளிக்கூடத்து பசங்களுக்குகாசு வாங்க மாட்டாங்கனு அய்யனார் சொன்னது அப்போதுதான்நினைவுக்கு வந்தது. டாக்டரம்மா எங்களுக்கு கைநிறைய சாக்லேட்கொடுத்தார்.

“டேய் என்னடா….. ஊசி போட வந்தா டாக்டரம்மா இம்புட்டு சாக்லேட்தர்றாங்க. தெனமும் எவனுக்காவது முடியலன்னா நம்மலே கூட்டி வருவோமா..”என்றான் சக்திவேல்.

“ஆச தோச அப்பள வடையாம்.. தெனமும் நம்மலே வந்தம்னா நமக்கும் ஊசிபோட்டுவிட்டுருவாங்கடி…” என்று பயமுறுத்தினான் அறிவழகன்.

செம்மறி ஆட்டுக்கறி காலையில தின்னேன்டா. அதான்டா இப்புடி பண்ணுதுஎன்றான் பெருமாள்.

வகுப்புக்கு போனதும்சொறிப் பெருமாளு செம்புலி ஆட்டுக்கறி தின்னானாம்.அதான் அரிக்குதாம் என்று மஞ்சுளாவிடம் கத்தினான் சக்திவேல். பொம்பளப்புள்ளைங்க எல்லோரும் பெருமாளைப் பார்த்து சிரித்தனர். சில நாட்கள் பெருமாள்சக்திவேலுவிடம் பேசாமல் இருந்தான். அறிவழகன்தான் தேன் மிட்டாய் வாங்கிக்கொடுத்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தான்.

செம்மறி ஆட்டைப் பார்க்கும்போதெல்லாம் எங்களுக்கு பெருமாள்தான் நினைவுக்குவருவான். “டேய் அங்கேருடா சொறிப்பெருமாளு போறாரு. கும்புட்டுக்கங்கடா.புழுக்கைப் போடுவாரு என்று கிண்டல் செய்தால் போதும் சொறிக்கான்கல்லைஎடுத்து எறிந்துகொண்டே விரட்டி வருவான்.

“டேய்… வரும்போது மாந்தோப்புக்குள்ள ஒரு மரத்துல மாங்காய் சடப்புடுச்சுகெடக்குதுடா. வேலிய லேசா தொறந்து வச்சுட்டு வந்துருக்கேன். மத்தியானம் சாப்ட்டுபோவோமா என்றான் அறிவழகன். அகஸ்டினும் பெருமாளும் வரமறுத்துவிட்டார்கள். எங்கள் நண்பர்களில் இளங்கோதான் முரட்டுப்பயலாகஇருந்தான். மத்தியானம் சோறு வாங்கிக்கொண்டு மாங்காய் பிடுங்கச் சென்றோம்.

விசலூர் ஆளுகதான் காவக்காரங்க என்று அகஸ்டின் சொல்லியிருந்தான். இளங்கோவேலியை திறந்து கொண்டு உள்ளே சென்றான். அவசர அவசரமாய் நரம்புப் பையில்மாங்காயை பறித்துக் கொண்டு வந்து சேர்ந்தான். அவன் முகம் வேர்த்துப்போயிருந்தது. நாங்கள் சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தடியில் உட்கார்ந்துசோறு சாப்பிடுவது போல் ஆள் பார்த்துக் கொண்டோம். அவன் கொண்டு வந்தநரம்புப் பை பெரிதாக தெரிந்தது.  உள்ளே பார்த்தால் தேங்காய் நெத்து ஒன்றுஇருந்தது.

என்னையும் விஜயகுமாரையும் கடைக்குச் சென்று பொட்டுக்கடலையும் சர்க்கரையும்வாங்கிவரச் சொன்னான் அறிவழகன். எதற்கு என்று காரணம் தெரியவில்லை.  எதற்குஇது…? என்று கேட்டால் வாயில் விரலைச் சப்பிக் காட்டுவான். அது கேவலமாகஇருக்கும் என்பதால் மறுப்பு சொல்லாமல் வாங்கி வந்தோம். நாங்கள் வருவதற்குள்தேங்காய் மேல் கல்லைத் தூக்கிப்போட்டு நார் உறித்து வைத்திருந்தான் சேவுகன்.

தேங்காய் குடுமியை பிச்சு எறிந்துவிட்டு சிறிய குச்சியால் ஓட்டை போட்டான்அறிவழகன். அதற்குள் சர்க்கரையையும் பொட்டுக்கடலையையும் அள்ளிப்போட்டான் இளங்கோ. சித்தாம்பலம் ஊரணிக்கு தென்புறம் சுடுகாடு என்பதால்மத்தியான நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். அங்கு நெருப்பு மூட்டி தேங்காயைசுட்டோம். தேங்காய் ஓட்டை எடுத்துவிட்டு பைக்குள் போட்டு வகுப்புக்கு கொண்டுவந்தோம். சுட்ட தேங்காயை அறிவழகன்தான் பங்கு வைத்தான். மஞ்சுளாவும்அழகுராணியும் விரும்பித் தின்றார்கள். சுட்டத் (திருடுன)   தேங்காய சுட்டுத் தின்னாசுவையாக இருக்கும் என்றான் அறிவழகன். அதுக்கு சுட்டுத்தான் (திருடித்தான்)திங்கனுமா என்றான் சேவுகன். மொத்தத்துல தேங்காய இப்புடி நெருப்புலசுட்டுத்தின்னா தித்திப்பா இருக்குமுடா போதுமா என்று சொல்லிக்கொண்டேமாங்காயை ஆளுக்கு இரண்டாக பங்கு வைத்தான் அறிவழகன்.

ஒருநாள் வீட்டிலிருந்த தேங்காயை யாருக்கும் தெரியாமல் சுட்டுத் தின்றுவிட்டு என்அம்மாவிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். “தேங்காய சுட்டுத் திங்கிறதுஎப்படினுதான் வாத்தியாரு பாடம் சொல்லித்தர்றாரோ. பள்ளிக்கொடத்துக்கு வந்துஎன்ன சங்கதினு நானே கேட்குறேன்” என் அம்மா சொன்னபோதுகதிகலங்கிவிட்டேன். நல்லவேளை அவர் பள்ளிக்கூடம் பக்கம் வரவே இல்லை.ஆனால் பக்கத்துவீட்டு பசங்க என் நண்பர்களிடம் சொல்லிவிட்டார்கள். என்னடாரவி….. எங்கள விட்டுட்டு சுட்டுத் தின்னிகளோ… அதான் செமத்தியா விழுந்துருக்குஎன்று கிண்டல் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.

எட்டாம் வகுப்புக்குப் பிறகு நான் வேறு பள்ளிக்கூடத்திற்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கவந்துவிட்டேன். என் நண்பர்கள் எனக்கு வாரவாரம் கடிதம் எழுதினார்கள். நானும்கடிதம் எழுதினேன். புல்வயலில் உலகநாயகி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாநடத்தினார்கள். அங்கு சென்று அன்னதானத்திலும் சாப்பிட்டுவிட்டு என்அப்பாவோடு சீமைக்கருவை மரத்து நிழலில் உட்கார்ந்திருந்தேன். எங்களோடு படித்தவீரையா என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தான். அவனிடம் என் நண்பர்களைப்பற்றி விசாரித்தேன். புதுக்கோட்டையில் காலாண்டு லீவுல பஞ்சர் கடையில்அறிவழகன் வேலை பார்த்ததாகவும் சைக்கிளில் குரங்குபெடல் போட்டு ஓட்டிச்செல்லும்போது போயல (புகையிலை)  கம்பெனிக்காரனோட சரக்கு வண்டி மோதிஅதே இடத்தில் செத்துவிட்டதாக சொன்னான். என் கைகள் வெடவெடத்துப்போனது. இருதயம் வேகமாக படபடத்தது. அணை உடைத்துக்கொண்டு வெள்ளம்கரைபுரண்டோடியதைப் போல அழுதேன். என் கைகளை என் அப்பா இறுகப்பிடித்துக் கொண்டார். தேமித்தேமி அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

காலையில் பள்ளிக்கூடம் செல்லும்போது புகையிலைக் கம்பெனியின் வண்டி ஒன்றுசாலையைக் கடந்து சென்றது. அந்த வண்டியை வழி மறித்து தீ வைத்து கொளுத்தவேண்டும் போலிருந்தது.  ஆனால் வண்டியின் ஓட்டுநர் முகத்தில் அறிவழகன் சிரித்துக்கொண்டு பயணித்தான்.

Loading

One Comment

  1. பள்ளி காலத்துக்கு போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.