மைசூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து தன்னைமெல்ல விடுவித்துக்கொண்டு தமிழக எல்லையை நோக்கி வந்துகொண்டிருந்தேன். சர்க்கஸ்கூடார இரும்பு வளைய நெருப்புப் பந்தலுக்குள் வித்தைக்காரர் ஒருவர் தாவிக்குதித்துநுழைந்து மறுபக்கம் வெளிவருவதைப் போலதான் எனது தமிழ்நாடு நோக்கிய வருகைஇருந்துகொண்டிருந்தது. நான் இயக்கிக்கொண்டிருந்த லாரியின் எந்திரத்தை விடவும் கர்நாடகசாலைகள் கொதித்துக் கொண்டிருந்தன. சாலைகளெங்கும் தீப்பிழம்புகள். திடீர் திடீரெனவெடிக்கும் தீப்பிடிப்புகள். பற்றல்கள், பரவல்கள். சாலைகளில் கன்னட எழுத்துகளைப் போலவளைந்து நெளிந்து எரிகிறது நெருப்பு. தமிழ் எழுத்துகளாகப் பார்த்துப் பற்றுகிறது.
நான் மண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்து பாண்டவபுரா, மத்தூர் எல்லையோரத்தில்வந்துகொண்டிருந்தேன். லாரியில் டீசலின் இருப்பு சன்னமாகக் குறைந்துகொண்டு வந்தது.எங்கேயும் நிறுத்தாமல் லாரியை வேகமாக இயக்கினால் ஓசூர் சென்றடையலாம்.அவ்வளவிற்கே லாரியில் டீசல் இருந்தது. இருக்கின்ற டீசலை வைத்துக்கொண்டுஎப்படியேனும் தமிழகத்திற்குள் நுழைந்து விட்டால் போதும். லாரியை ஒதுக்குப் புறமாகநிறுத்திவிட்டுப் பசியாறலாம். ஒரு தூக்கம் தூங்கி விழிக்கலாம், குளிக்கலாம். லாரிக்கு டீசல்நிரப்பிக் கொள்ளலாம்.
சாலைகளில் பச்சை துண்டுகளைத் தோளில் கிடத்திக்கொண்டு ஆங்காங்கே கன்னடவிவசாயிகள் போராடிக்கொண்டிருந்தார்கள். தலையில் துண்டுகளை இறுகக்கட்டி, கையில்தடியுடன் இளைஞர்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். தமிழகச் சிலைகளைப் போலகாவல்துறையினர் ஆங்காங்கே துப்பாக்கியுடன் நின்றுகொண்டு போராட்டக்காரர்களின் வாக்குசிந்தாமல் சிதறாமல் இருக்க ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு வாரத்திற்கு முந்தைய கலவரம் அளவிற்கு அன்றைய தினப் போராட்டம்,கல்லெறி, கடையடைப்புகள் இல்லையென்றாலும் புயலுக்குப் பிந்தைய அமைதியுடன் கூடியபோராட்டமாக அன்றைய நாள் போராட்டம் இருந்தது. சாலைகளில் பெண்களின்நடமாட்டமில்லை. சாலையோர வீடுகளில் ஆளரவமில்லை. மரங்களில் காக்கைக் குருவிகள்இல்லை. நாய்கள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுகொண்டு தொண்டைத்தண்ணீர் வற்ற கன்னட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாகக் குரைத்துகொண்டிருந்தன.
ஒன்றிரண்டு லாரிகள் இயங்கத் தொடங்கியிருந்தன. அத்தனையும் கர்நாடக பதிவெண்கொண்ட லாரிகள். கர்நாடக அரசுப் பேருந்துகள், சிற்றுந்துகள், சரக்குந்துகள், இரு சக்கரவாகனங்கள் சாலைகளை உராய்க்கத் தொடங்கியிருந்தன. வாகனங்களில் பெரிய அளவில்பயணிகள் இல்லை. இரு சக்கரப் பயணிகள் தலையில் கட்டாயத் தலைக்கவசம்அணிந்திருந்தார்கள். எந்த வாகனமும் முக்கிய நிறுத்தத்தில் நின்று செல்லவில்லை. பயணியர்நிழற்குடையில் அவ்வளவாகப் பயணிகள் இல்லை. நாய், பசு, காளைகள் சுவரொட்டிகளைக்கிழித்து தின்றுகொண்டு நிழலுக்குப் படுத்திருந்தன. நிறைய எடிஎம் இயந்திரங்கள் சாத்திக்கிடந்தன. பெட்ரோல் பங்குகள் மூடியிருந்தன.
நான் என் லாரியை எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கிக்கொண்டிருந்தேன். என்இதயம் ‘திடும், திடும்..’ என இடித்தது. மனதிற்குள் ‘திக்,திக்…’ என்றது. சாலைகளில்இளைஞர்கள் கையில் தடியுடன் நடமாடினார்கள். நடனமாடினார்கன். மேல் நோக்கி எரியும்தணலைப் போலத் தாவினார்கள். குதித்தார்கள். அவர்கள் அத்தனை பேர் தலையிலும் ஒருஉருமாக்கட்டு கட்டி, துண்டு வாலைப் போல ஒரு பக்கமாகத் தொங்கிக்கிடந்தது. ஒரு படத்தில்கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் தலையில் கட்டிக்கொண்டு நடித்த வகைத் துண்டு அது.
ஒருவன் நாக்கைத் துரத்திக்கொண்டு கற்களை அள்ளி விட்டெறிந்தான்.இன்னொருத்தன் கண்களை உருட்டித் திரட்டி முழித்தான். இன்னொருவன் நாக்கை இறுகமடித்து ஒரு கடி கடித்தான். அத்தனை பேர் கைகளிலும் ஆயுதமிருந்தது. தடி, பிரம்பு, கட்டை,இரும்புக்கம்பிகள் இருந்தன. ஒருவன் தொடையில் அடித்துகொண்டான். இன்னொருத்தன்கையில் வைத்திருந்த தடியை ஒரு சுற்றுச்சுற்றி எறிந்தான். தமிழன் கடைகளுக்குள்,குடியிருப்பிற்குள், வாகன நிறுத்தத்திற்குள் மிகச் சரியாய் போய் விழுந்தது அத்தடி. கையைஇறுக மூடிக் காதினை ஒட்டித் தலைக்கு மேல் உயர்த்திக் கத்தினான்.
“நம்ம காவிரி. நமகே ஸ்வந்தா
ஒந்து தொட்டு நீரு கூடா தமிழ்நாடுகே கொடல்லா”
வேட்டை நாய் குரைப்பதைப்போல ஒருவன் குரைத்தான். அவன் பின்னே மற்றவர்கள்குரைத்தார்கள். “நம்ம காவேரி நமகே ஸ்வந்தா, ஒந்து தொட்டு நீரு கூடா தமிழ்நாடுகேகொடல்லா.”
ஒவ்வொரு குரைப்பிலும் திறந்திருந்த கடைகள், மெடிக்கல், ஆஸ்பத்திரிகள் இறுகச்சாத்திக்கொண்டன. சாலைகளில் நெருப்பு ‘பக்..’கென்றுப் பிடித்து, வட்டம் கட்டி எரிந்தது.ஒருவன் கையில் தமிழகத்தின் வரைபடம் இருந்தது. இன்னொருத்தன் கையில் உருவப்பொம்மை இருந்தது. ஒருவன் அதைக் கொளுத்தினான். இன்னொருத்தன் கால்களால் அதைமிதித்தான். இன்னொருத்தன் தடியால் அடித்தான்.
“கொடல்லா, கொடல்லா
காவிரி நீர்ன கொடல்லா…
புடுபடா புடுபடா
தமிழன புடுபடா”
கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு உரிய ஆறாயிரம் கனஅடி நீரை உடனே திறந்துவிட வேண்டும், என்கிற உத்தரவை உச்சநீதி மன்றம் பிறப்பித்த நாள் அது. அப்படியொருஉத்தரவை பிறப்பிக்கையில் நான் எனது லாரியை கர்நாடக மாநிலத்தின் மையம் மத்தூர்பகுதியையொட்டி இயக்கிக்கொண்டிருந்தேன். மத்தூர் கடைத்தெருக்கள் வெறிச்சோடியிருந்தது.கலவரக்காரர்கள் கையில் பெரும் தடியுடன் சாலைக்கு வந்தார்கள்.
என் லாரிக்கு முன்னால், பின்னால் நான்கு லாரிகள் இயங்கிக்கொண்டிருந்தன.அத்தனையும் தமிழ்நாடு பதிவெண் கொண்ட லாரிகள். தமிழக வாகனங்களாகப் பார்த்துஉருட்டுக் கட்டைகளை நீட்டித் தேக்கினார்கள். நிறுத்தாத வாகனத்தின் மீது பெட்ரோல்குண்டுகளை எறிந்தார்கள். ஓட்டுநரை விரட்டிப் பிடித்து அடித்தார்கள். ஆடைகளைக் கலைந்துநிர்வாணம் ஆக்கினார்கள்.
நான் இயக்கிக்கொண்டிருந்த லாரியை ஒரு கலவரக் கும்பல் ஆயுதங்களை நீட்டிநிறுத்தினார்கள். நான்கு வழிச் சாலையில் ஒதுக்குப் புறமாகப் பார்த்து என் லாரியைஓரங்கட்டினேன். லாரியைச் சுற்றிலும் ஒரு பெரிய கும்பல் சூழ்ந்துகொண்டார்கள். ஒருவன்முன் சக்கரத்தில் கால் வைத்து ஏறி, திறப்பு வழியே தலையை நுழைத்து என் லாரியின்சாவியைப் பறித்தான். இன்னொருத்தன் என் சட்டையைப் பிடித்து வெளியே இழுத்து. “கிளகேஇலி…” என்றான். நான் லாரியின் கதவுகளைத் திறந்துகொண்டு அவர்களைக் கும்பிட்டபடிஇறங்கினேன்.
கன்னட இளைஞர்கள் சாலைகளில் நடனமாடினார்கள். டயர்களைக் கொளுத்திகோஷமிட்டார்கள். நான் அவர்களைக் கும்பிட்டபடி சுற்றும்முற்றும் பார்த்தேன். என் லாரிக்குமுன், பின் இயங்கிய லாரிகள் எரிந்துகொண்டிருந்தன. ஒரு லாரி முன்பக்கத்திலிருந்துபின்னோக்கியும், மற்றொன்று மேற்பகுதியும் எரிந்துகொண்டிருந்தன. இன்னொரு லாரி ஏற்றிவந்திருந்த பொதிகளை எரிய விட்டுக்கொண்டிருந்தது. ஒரு லாரியின் டயர், வெடிக்கும் சத்தம்கேட்டது. இன்னொரு லாரியின் டயரில் காற்று பெரிய சத்தத்துடன்வெளியேறிக்கொண்டிருந்தது. ஒரு லாரியில் ஆடைகள் இருந்திருக்க வேண்டும். அது எரிந்துபொசுங்கும் வாடை நாசியைத் துளைத்தது. ஒன்றில் மருந்து வகைகளும் இன்னொன்றில்அரிசிகளும் எரிந்து கருகிக்கொண்டிருந்தன.
என் லாரியைச் சுற்றியிருந்த கலவரக்காரர்களுடன் மேலும் நான்கைந்துவெறியாட்டக்காரர்கள் கலந்திருந்தார்கள். அவர்களின் அத்தனை பேர் கைகளிலும் தடிகள்இருந்தன. லாரியைச் சூழ்ந்திருந்த அத்தனை பேரும் லாரியின் பெயரைப் பார்த்தார்கள்.லாரியின் நெற்றியில் காவிரி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. ஒருவர் லாரியின்தலையில் ஏறினான். ஆங்கிலத்தில் எழுதியிருந்த காவிரியின் பெயரைத் தார்க்கொண்டுஅழித்தான். அதன் மீது கன்னடத்தில் என்னவோ எழுதினான். அவன் காவிரி என்றுதான்எழுதியிருக்க வேண்டும்.
இன்னொருத்தன் லாரியின் பக்கக் கூடுகளில் எழுதப்பட்டிருந்த காவிரி மணல் ஆர்டரின்பேரில் கிடைக்கும், என்கிற வாசகத்தைப் பார்த்தான். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு,இந்தியில் அவ்வாசகம் எழுதப்பட்டிருந்தது. அதில் தமிழில் எழுதியிருந்த வாசகத்தின் மீதுதார்ப் பூசினான்.
ஒன்றிரண்டு பேர் லாரியின் கண்ணாடியில் மலையாளி ஐயப்பனும், தெலுங்குவெங்கடேஸ்வரரும் ஒட்டியிருந்ததைப் பார்த்தார்கள். லாரியின் பதிவெண்ணைப் பார்த்தார்கள்.த.நா 29 எல். 2694 என இருந்தது.
ஒருவன் கையில் வைத்திருந்த தடியால் பதிவெண் எழுதியிருந்த பலகையைஅடித்தான். பதிவெண் பலகை ஒரே அடியில் நெட்டுக் கழண்டு தெறித்து நொறுங்கியது.
“நீனு யாவ் ஸ்தலா?” அவனது கேள்வியில் கோபம் தெறித்தது.
எனக்கு கன்னடம் அவ்வளவாகப் பேச வராது என்றாலும் அவர்கள் பேசுவதைப்புரிந்துகொள்ளுமளவிற்குக் கன்னடம் தெரிந்திருந்தது. நான் தயக்கத்துடன் சொன்னேன்.
ஓசூர் ”
“ நின்னன்ன நோடிதரே ஆதரா கானுஸ்தாயில்லா?”
“ சத்தியமாக நான் ஓசூர்தான்”
ஓசூரில் தமிழர்கள், கன்னடர்கள் இருவரும் சம விகிதத்தில் கலந்து இருக்கிறார்கள்என்பதால் நான் அப்படியாகச் சொல்லிருந்தேன்.
“ லாரியல்லி ஏன் இதே?”
“ காவிரி மணலு”
“ காவிரி மருலல்லவா அது?”
“ ஆம், காவேரி மணலுதான்”
“ நீனு எல்லிந்தா பர்தாயிதியா?”
“ திருச்சியிலிருந்து”
ஒருவன் மாக்கென்று லாரியில் ஏறினான். மூடியிருந்த போர்வையை எடுத்து மணலைஅள்ளினான். பிசைந்து, நுகர்ந்து பார்த்தான். நுனி நாக்கால் சுவைத்துப் பார்த்தான்.
“காவேரி மருலல்லவா அது?” ஒருவன் தடியை நீட்டிக் கேட்டான். லாரியில் ஏறிநின்றிருந்தவன், “அவ்து, நம்ம காவிரி மருலு” என்றான். மணலை அள்ளிச் சுற்றிநின்றவர்களிடம் கொடுத்தான். அத்தனை பேரும் அதை வாங்கி உற்றுப் பார்த்தார்கள். நுனிநாக்கால் சுவைத்தார்கள். ஒருவன் என் சட்டையைப் பிடித்திருந்த பிடியை விலக்கிக்கொண்டுகேட்டான்.
“ மருலு எல்லிந்தா ஹோகுபவுது?”
“ மைசூர்”
என்னை நெருங்கியிருந்தவன் அந்தக் கும்பலுக்குத் தலைவனாக இருக்க வேண்டும்.அவன் சூழ்ந்து நின்ற கும்பலைப் பார்த்து சொன்னான், “ ஈ லாரியன மாத்ரா பிடு”
அத்தனை பேரும் அவனது உத்தரவிற்குக் கட்டுப்பட்டு விலகி நின்றார்கள். ஒருவன்என் கையில் சாவியைக் கொடுத்தான். இன்னொருத்தன் என் சட்டைப் பைக்குள் கையைநுழைத்து பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துகொண்டான்.
நான் லாரியில் ஏறி சாவியைக் கொடுத்து இயக்கினேன். அவர்களை ஒரு முறைகையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேன். ஒருவன் சொன்னான். “ ஆயித்து நீனு ஹோகுபவுது”
இன்னொருத்தன், “ ஜாக்கிரதையாகி ஹோகு” என்றான்.
“இம், நான் பத்திரமாகப் போயிடுறேன்.” என்ற நான் அவர்களிடமிருந்துவிடுவித்துகொண்டு மெல்ல நகர்ந்தேன். லாரியை வேகமாக விரட்டினேன். எனக்கு உயிர்போய் உயிர் வந்தது. என் லாரி புதியது. வங்கிக் கடனில் வாங்கியது. லாரியை எடுத்துஇன்னும் ஆறு மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை. சாலைகளில் எரித்துகொண்டிருந்த ஐந்துலாரிகளிடமிருந்தும் மெல்ல விலகி மூன்று மணி நேரத்திற்குள் மைசூரைத் தொட்டிருந்தேன்.
அன்றைய தின கலவரம் போல இன்றைய நாள் கலவரம் இல்லையென்றாலும்ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆங்காங்கே நின்றிருந்தார்கள். ஒன்றிரண்டு கடைகளைத் தவிர மற்றகடைகள் அறைந்து சாத்தப்பட்டிருந்தன.
நான் மைசூரிலிருந்து மாண்டியா மாவட்டத்தைத் தாண்டி தமிழ்நாட்டை நோக்கிவந்துகொண்டிருந்தேன். முதல் திறப்பு தண்ணீர் திறந்துவிடுகையில் எழுந்து அடங்கியபோராட்டம், மறுவாரத்தில் இரண்டாம் தவணை தண்ணீர் திறக்கையில் தலையெடுத்தது.சாலைகளில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் இல்லை . ஆனாலும் “நம்ம காவேரி நமகேஸ்வந்தா….” கோஷங்கள் பெரிய அளவில் கேட்டுக்கொண்டிருந்தன.
நான் லாரியின் போக்கை நான்குவழிச் சாலையிலிருந்து இருவழிச் சாலைக்குமாற்றினேன். இரு வழிச் சாலைகளில் அவ்வளவாக ஆர்ப்பாட்டமில்லை. காடும், புதரும்அடர்ந்த ஒரு மறைவிடத்தில் லாரியை நிறுத்தினேன். லாரியிலிருந்த கருவிகளைக் கொண்டுதமிழ்ப் பதிவெண் கொண்ட பலகையைக் கழட்டி அதற்குப் பதிலாக கன்னட பதிவெண்கொண்ட ஒரு போலி பதிவெண் பலகையைப் பொருத்தினேன். காவல்துறையினர்சந்தேகப்படாதபடி அப்பதிவெண் பலகையை லாரியின் முன், பின் பக்கங்களில் தொங்கவிட்டேன்.
என் லாரியை நோக்கிக் கை ஆயுதங்களுடன் பத்துப் பதினைந்து இளைஞர்கள்வந்துகொண்டிருந்தார்கள். நான் வேகமாக லாரியில் ஏறி உட்கார்ந்துகொண்டு ஸ்டேரிங்க்அருகாமையிலிருந்த அலைபேசியை எடுத்து மனைவிக்கு அழைப்பு விடுத்தேன். அழைப்புபோய்க்கொண்டிருந்தது.
ஆயுதங்களுடன் கூடிய கும்பல் என் லாரியைச் சுற்றி நின்றார்கள். பதிவு எண்ணைப்பார்த்தார்கள். அதில் எழுதியிருந்த எழுத்தின் வடிவத்தைப் பார்த்தார்கள். எனக்குத் ‘திக், திக்’என்றிருந்தது. நான் அவர்களைப் பார்த்தும் பார்க்காமல் அலைபேசியைக் காதினில்வைத்துக்கொண்டேன்.
அவர்கள் தடியை என் முகத்திற்கு நேராக நீட்டி, எதையோ கேட்கும் தருணத்தில்மறுமுனையில் என் மனைவி, “ஹலோ, எங்கேங்க இருக்கீங்க?” என்று கேட்டாள்.
நான் அவளது கேள்விக்குப் பதில் சொல்ல வேணும். அவளுக்குத் தமிழ் மொழியைத்தவிர வேறொன்றும் தெரியாது. தமிழ் மொழியில் அவளுக்கு நான் பதில்சொல்லிகொண்டிருந்தால் கலவரக்காரர்களுக்கு நானும் என் லாரியும் இரையாகிவிடுவோம்.மைசூர் செல்கையில் லாரியைத் தேக்கி என்னிடம் பேசிய கன்னடக் குரல்கள் என் அவசரத்தேவைக்கு நினைவுக்கு வந்தன. நான் என் மனைவியிடம் அரைகுறை கன்னடத்தில் பேசத்தொடங்கினேன்.
“என்னங்க, எங்கே இருக்கீங்க. கர்நாடகத்தில பஸ், லாரியயெல்லாம்கொளுத்துறாங்களாமே?”
. நான் சொன்னேன், “ நம்ம காவிரி நமகே ஸ்வந்தா”
லாரியைச் சுற்றி நின்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துகொண்டார்கள்.
“ சாப்பிட்டீங்களா?”
“ நின்ன ஹெசரேனு”
“ என்ன சொல்றீங்கனே புரியலங்க?”
“ நீனு எல்லிந்தா பர்தாயிதியா”
“ பாதுகாப்பா இருக்கீங்களா?”
“ ஒந்து தொட்டு நீரு கூடா தமிழ்நாடுகே கொடல்லா”
“ எப்பங்க வீட்டுக்கு வருவீங்க?”
“நின்ன அவசரமாகி ஹோகக்காகல்லா”
என்னைப் பற்றிய விசாரிப்பில் மனைவியின் தவிப்பு தெரிந்தது. நான் பேசுவது எனக்கேபுரியாத பொழுது அவளுக்குப் புரியுமா என்ன? அவள் என்னுடனான தொடர்பைத்துண்டித்துக்கொண்டாள். ஆனாலும் நான் தொடர்ந்து பேசியவனாக இருந்தேன்.
என் லாரியைச் சுற்றி நின்றவர்கள் என்னையும் லாரியையும் ஒரு பார்வைபார்த்துவிட்டு கற்களை அள்ளி நாலாபுறமும் விட்டெறிந்து கொண்டு நடக்கலானார்கள்.அவர்கள் தூரத்தில் மறைந்ததும் நான் அலைபேசியைச் சட்டைப் பைக்குள் திணித்துக்கொண்டுலாரியை வேகமாக இயக்கி இருவழிச்சாலை வழியில் பெங்களூரு ஓசூர் நான்குவழிச்சாலையைப் பிடித்தேன்.
சாலையில் தமிழ்ப் பதிவெண் கொண்ட வாகனங்களை எங்கேயும்பார்க்கமுடியவில்லை. அத்தனையும் கன்னட பதிவெண் வாகனங்களாகத் தெரிந்தன. காக்கைக்குஞ்சுகளுடன் குயில்குஞ்சு கலப்பதைப் போல நான் கர்நாடக பதிவெண் கொண்டவாகனங்களுடன் என் லாரியைக் கலந்து இயக்கினேன்.
சாலைகளில் கடைகள் இல்லை. சாப்பிடலாமெனப் பார்த்தால் சாலை ஓரத்தில்ஹோட்டல்கள் இல்லை. நட்சத்திர விடுதிகள் மட்டும் திறந்திருந்தன. அதன் வாசலில்துப்பாக்கியுடன் ஒன்றிரண்டு காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். எனக்குப் பசி. தாகம்.லாரியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு பசியாறச் செல்லப் பயமாக இருந்தது. பசியைத் தணிக்கஎச்சிலை விழுங்கிக்கொண்டு சிறுநீரை லாரிக்குள் கழித்துக்கொண்டேன்.
மூன்று மணி நேரத்திற்குள் என் லாரி ஓசூர் எல்லையைத் தொட்டிருந்தது. கர்நாடகம் -தமிழ்நாடு சந்திக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் கன்னட லாரிகள்நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அதற்கும் பக்கத்தில் அரசுப் பேருந்துகள் நின்று பயணிகளைஇறக்கிவிட்டுக்கொண்டிருந்தன. கர்நாடக பேருந்திலிருந்து இறங்கிய பயணிகள் பெட்டி,பைகளுடன் நடந்து இரு மாநில எல்லையைக் கடந்து அங்கே தயாராக நிறுத்தியிருந்ததமிழகப் பேருந்தில் ஏறிப் பயணம் செய்தார்கள்.
இரு மாநில எல்லைகள் சந்திக்கும் இடம் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை கோடுவரையப்பட்டிருக்கும் அட்டாரி – வாகா எல்லையைப் போலிருந்தது. கம்பீரமாக நின்ற நுழைவுவாயிலுக்கும் கீழே போலீஸ்காரர்கள் குழுமி நின்றுகொண்டிருந்தார்கள். காவலர்கள்சந்தேகப்படும் பயணிகளுடன் ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்டுப் பயணிகளைஅனுப்பிக்கொண்டிருந்தார்கள். இரு சக்கர வாகனங்கள் ஆர்சி புக், லைசன்ஸ்களைஉறுதிப்படுத்திக்கொண்டு தமிழக எல்லைக்குள் அனுமதித்தார்கள்.
நான் லாரியிலிருந்து வேகமாக இறங்கி கர்நாடக பதிவெண் பலகையைக் கழட்டிவிட்டெறிந்துவிட்டு என் லாரிக்குரிய பதிவெண் பலகையைப் பொருத்தினேன். ஒன்றிரண்டுலாரி ஓட்டுநர்கள் என்னை வெறிக்கப் பார்த்தார்கள். அதில் ஒருவர் நான் செய்வதைப் பார்த்துசிரித்தார். அவரைப் பார்த்து பதிலுக்கு ஒரு சிரிப்பு சிரித்துவைத்துவிட்டு என் ஆர்சி புக்கைஎடுத்துக்கொண்டு எல்லைக் காவலர்களிடம் ஓடினேன். காவலர்களில் ஒன்றிரண்டு பேர்இரண்டு மூன்று மொழிகள் பேசக்கூடியவராக இருந்தார்கள்.
“ சார் வணக்கம். நான் தமிழ்நாடு எல்லைக்குள்ளே போகணும் சார்” பரிதவிக்கக்கேட்டேன்.
காவல்த் துறையினர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்கள். ஒருவர் தமிழ் நன்றாகப்பேசினார். அவரது பேச்சில் கொஞ்சம் கன்னடம் கலந்திருந்தது. நான் சொன்னேன். “ என்னோடலாரி அங்கே நிற்குது சார். எனக்குப் பயமா இருக்கு சார். ப்ளீஸ்சார், என்ன தமிழ்நாட்டுக்குள்ளஅனுப்பி வையுங்க சார்.” அவரிடம் கெஞ்சி மன்றாடினேன்.
“ நின்ன அவசரகாகி ஹோகக்காகல்லா”
“ சார், அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார். நான் அவசரமாக தமிழ்நாட்டுக்குள்ளேபோகணும் சார்”
“ ஆர்சி புக் கன்னு தோர்சு?”
“ இந்தா இருக்குது சார்”
“ இன்சூரன்ஸ்?”
“ லைசன்ஸ்?’’
‘ எப்சி?’
ஒவ்வொன்றாகக் காட்டினேன்.
“ நின்ன ஹெசரேனு?”
“ முத்தன் சார். எம்.முத்தன்..”
ஒரு காவலர் லைசன்ஸில் இருக்கிற என் புகைப்படத்தையும் என்னையும் ஒரு முறைஆழ்ந்து பார்த்தார். பிறகு “லாரியை எடுத்துக்கிட்டு வா ” என்றார். நான் ஓடிச்சென்று லாரியைஅவர்களின் முன் நிறுத்தினேன். வண்டியில் முன், பின் தொங்கிக்கொண்டிருந்த பதிவெண்பலகையைப் பார்த்தார். கையில் வைத்திருந்த ஆர்சிபுக், இன்சூரன்ஸ், லைசன்ஸ், எப்சியுடன்என் லாரியை ஒப்பிட்டுப் பார்த்தார். “ ஆயித்து நீனு ஹோக்பவுது” என்றார்.
நான் அவர்களுக்கு ஒரு தமிழ் வணக்கம் வைத்துவிட்டு லாரியை எடுத்துக்கொண்டுகர்நாடக எல்லையிலிருந்து மெல்ல விடுபட்டு இரு மாநில வரைவுக்கோட்டினைக் கடந்துதமிழக எல்லைக்குள் நுழைந்தேன். எனக்கு “அப்பாடா!” என்றிருந்தது. நிம்மதியில் பெருமூச்சுவிட்டேன்.
சாலைகளின் இருபுறமும் கர்நாடக எல்லைக்குள் நுழைய வேண்டிய தமிழகவாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு பக்கம் லாரிகள், இன்னொரு பக்கம் சிற்றுந்துவாகனங்கள். இன்னொரு பக்கம் இரு சக்கர வாகனங்கள்.
நான் ஒரு தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்தைப் பின்தொடர்ந்தேன். ஒக்கேனக்கல்எல்லையைக் கடந்து கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மாவட்ட மலை பகுதிகளின் ஊடேநுழைந்தேன். அரை மைல் தூரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் இருக்குமிடத்தை நோக்கிலாரியை விரட்டினேன். பெட்ரோல் பங்க் இருக்கும் கால் கிலோ மீட்டருக்கு முன்பாகவே லாரிமூச்சடைத்து நின்று விட்டது. அதற்கு மேல் ஓர் அங்குலம் லாரி நகர்வதாக இல்லை.லாரியை அதே இடத்தில் நிறுத்தினேன். கதவைத் திறந்துகொண்டு கீழே குதித்தேன்.என்னைத் தமிழ்நாட்டிற்குள் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்த என் லாரிக்கு ஒரு முத்தம்கொடுத்தேன். லாரியில் ஏதேனும் சேதாரம் எதுவும் இருக்கிறதா, என்று பார்த்தேன். பதிவெண்பலகையைத் தவிர மற்ற இடத்தில் ஒரு கீறலும் இருந்திருக்கவில்லை.
லாரியில் பத்து லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய கேன் இருந்தது. அதைஎடுத்துகொண்டு பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினேன். டீசல்வாங்கிக்கொண்டு திரும்பினேன். என் சட்டைப் பைக்குளிலிருந்த அலைபேசி அலறியது.எடுத்துப் பார்த்தேன். அழைப்பில் என் மனைவி இருந்தாள். அலைபேசியைக் காதினில்வைத்தேன். மனைவி பதட்டத்துடன் பேசினாள்.
“என்னங்க, கர்நாடகாவிலதானே இருக்கீங்க. அங்கேயே இருங்க. இப்போதைக்குதமிழ்நாட்டுக்குள்ள வர வேணாம். சேலம், தர்மபுரி ஏரியாவில ஒரே சாதிக் கலவரம். ஒருதலைவரோட சிலையை யாரோ சேதப்படுத்திட்டாங்களாம். ஒரு பிரிவினர் வருகிற, போகிறவாகனங்களை நிறுத்தி அடிச்சு நொறுக்குறாங்க. லாரிகளைக் கொளுத்துறாங்க. இப்போதைக்குநீங்க கர்நாடக மாநிலத்துக்குள்ளே இருக்கிறதுதான் உங்களுக்கும் நம்ம லாரிக்கும் நல்லது.என்னங்க?”
நான் அழைப்பை வேகமாகத் துண்டித்துச் சட்டைப் பைக்குள் திணித்துகொண்டுலாரியை ஒரு கணம் எட்டிப் பார்தேன். என் லாரி எரிந்துகொண்டிருந்தது.
நாட்டின் நிலையை விவரிக்கும் கதை. தெளிந்த நீரோடைபோன்ற நடையழகு. அருமை பாராட்டுகளும் வாழ்த்துகளும்.