அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-92 ஏமாறாதே! ஏமாற்றாதே! ………. தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்
அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள்நம்பிக்கைக்குரியனவாக இல்லை. அடுத்த வருடத்திற்குள் அரசியல் தீர்வு காண்பேன் என்றுகடந்த வருடம் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கூறியமைக்கமைய இந்தவருடம் தீர்வு தொடர்பில் எந்த முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இதுவரை இடம்பெறவில்லை. அரசு விரைவாகத் தீர்வு காணாவிட்டால் நாம் சர்வதேசத்தின் உதவியுடன் தீர்வைவென்றெடுக்கும் செயற்பாடுகளில் களமிறங்குவோம் என்று இந்தத் தருணத்தில் கூறி வைக்கவிரும்புகிறேன்
இதுதான் இம்முறை இரா சம்பந்தன் தமிழ் மக்களுக்குத் தந்திருக்கின்ற தீபாவளி ஸ்பெஷல்அத்துடன்,அரசியல் தீர்வு விடயத்தில் எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லைஎன்பதையும் கூறி வைக்க விரும்புகிறேன். புதிய அரசமைப்பு கட்டாயம் உருவாக்கப்படவேண்டும். அதனூடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். (காலை முரசு12.11.2023)தற்போதைய ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார். அவர் நம்பிக்கைக்குரியவராக இல்லை என்பது இரா.சம்பந்தனின் முடிவு. அவர் கூறியிருப்பதுபோல புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வுகாணப்பட வேண்டுமெனில் அதனை எவ்வாறு சர்வதேசத்தின் உதவியுடன் வென்றெடுக்கப்போகிறார்?
ஏற்கெனவே, தமிழர் தரப்பினால் தம்பட்டம் அடிக்கப்பட்ட சர்வதேச போர் குற்ற விசாரணைபொறுப்பு கூறல்;மீளநிகழாமைமற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண விவகாரம்எல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாகவேபோயிருக்கிறது. இந்தச் சீத்துவத்தில் சர்வதேசத்தின் உதவியுடன் புதிய அரசமைப்பொன்றைஅதுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பொன்றை (சமஷ்டி)ஏற்படுத்தக் களம் இறங்குவோம் என்று சம்பந்தன் கூறியிருப்பது தமிழ் மக்களை முட்டாளாகக்கருதிய ஒருஏமாற்று அரசியல்நாடகம் ஆகும். அதற்குள்ளேஎந்தவித விட்டுக் கொடுப்புக்கும்இடமில்லை என்ற வீரவசனம் வேறு.
தமிழர்களுடைய அரசியலையும் அவர்களுடைய அரசியல் தலைமைகளையும் எடுத்துக்கொண்டால், சேர் பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் சேர் பொன். அருணாசலம் சகோதரர்கள்காலத்தில் -ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்-டொனமூர்ஆணைக்குழு ஏமாற்றிவிட்டதுஎன்றார்கள்.
பின் ஜி ஜி பொன்னம்பலம் வந்து சோல்பரிஆணைக்குழு ஏமாற்றி விட்டது என்றார். சுதந்திரஇலங்கையில் ஜி ஜி பொன்னம்பலம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார் என்று கூறித் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்து அரசியலை முன்னெடுத்த எஸ் ஜே வி செல்வநாயகம் காலத்துக்குக் காலம்முதலில் டி எஸ் சேனநாயக ஏமாற்றிவிட்டார்-டட்லி சேனநாயக்க ஏமாற்றிவிட்டார்-கொத்தலாவலஏமாற்றிவிட்டார்-எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க ஏமாற்றிவிட்டார்-மீண்டும் டட்லிசேனநாயக்க ஏமாற்றிவிட்டார்-ஈற்றில் 1972 குடியரசு அரசியலமைப்போடு சிறிமாவோபண்டாரநாயக்காவும் ஏமாற்றிவிட்டார் என்றார்.
இப்படி எல்லோரும் ஏமாற்றியதாலும், எல்லோரிடமும் ஏமாந்ததாலும் அவர் அரசியல்பொதுவெளியில் ஆரம்பத்தில் முன்வைத்தசமஸ்டியைக் கைவிட்டுத் தனி நாட்டுத்தீர்மானத்தைத் தந்துவிட்டுக் கண்ணை மூடினார்.
அதன் பின்பு வந்த அமிர்தலிங்கம் ஜே ஆர் ஜெயவர்த்தன (மாவட்ட அபிவிருத்திச் சபை மூலமும்1978 நிறைவேற்று ஜனாதிபதி முறை அரசியலமைப்பு மூலமும்) ஏமாற்றிவிட்டதாகச்சொன்னார். இந்தியாவிடம் (பிரதமர் இந்திரா காந்தியிடம்) அதைச் சொல்லித்தான்முறையிட்டார். அதன் இறுதி விளைவுதான் பின்னாளில் ஏற்பட்ட 1987 இந்திய இலங்கைசமாதான ஒப்பந்தம்.
அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளும் அகிம்சைப் போராட்டங்களும் ஜனநாயக வழியிலானஅரசியல் செயற்பாடுகளும் பாராளுமன்ற அரசியலும் சரிப்பட்டு வராது என்ற அனுபவத்தின்அடிப்படையிலேயே தமிழ் இளைஞர்களால்- தமிழீழத் தனிநாட்டை அமைப்பதற்கான ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவருடைய சரி பிழைகளுக்குமப்பால்தனித்து நின்று இறுதிவரை தமிழீழத் தனிநாட்டு விவகாரத்தையிட்டு எந்தச் சமரசத்திற்கும்செல்லாமல் விட்டுக் கொடுக்காது ஆயுதப் போராட்டத்தை ஏக தலைமை தாங்கி நடாத்தி அவரும்ஈற்றில் முதலில் இந்தியா ஏமாற்றி விட்டது என்றார். பின்னர் எந்த இலங்கை ஜனாதிபதியை நம்பிஇந்தியாவை எதிர்த்தாரோ அந்த ஜனாதிபதியான பிரேமதாசவும் ஏமாற்றி விட்டதாகக்கூறித்தான் 1990 இல் அடுத்த கட்ட ஈழப்போரையும் ஆரம்பித்திருந்தார். அந்தப் போரின் இறுதிவிளைவு 2009இல் முள்ளிவாய்க்காலில் எப்படிப் போய் முடிந்ததென்பது அனைவருக்கும்தெரியும்.
மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல ஆயுதமேந்திய பிரபாகரன்கூடபிரேமதாசவிடம் மட்டுமல்ல சந்திரிகாவிடமும்-ரணில் விக்கிரமசிங்க விடமும்-மஹிந்தராஜபக்ஷவிடமும் ஏமாந்ததாகவே தமிழ் அரசியல் பொது வெளியில் கருத்துக்கள்முன்வைக்கப்படுகின்றன. தமிழீழத்தைப் பெற்றுத்தருவார் எனப் பிரபாகரனை நம்பியதமிழர்களும் இறுதியில் ஏமாந்து போனார்கள். இடையில் மத்தியஸ்தம் வகிக்க வந்தநோர்வேயும் ஏமாற்றி இறுதி யுத்தத்தில் இந்தியா மட்டுமல்ல ஏனைய சர்வதேச நாடுகளும் தமிழ்மக்களை ஏமாற்றிவிட்டதாகவே பெரும்பான்மையான தமிழ் ஊடகங்கள் எழுதித் தள்ளுகின்றன.
2001 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவரான இரா சம்பந்தன் புலிகள் இருக்கும்போதே சந்திரிகாவிடமும் ஏமாந்து-பின்னர்மகிந்த ராஜபக்சவிடமும் ஏமாந்து-மைத்திரிபால சிறிசேனவிடமும் ஏமாந்து இப்போது ரணில்விக்கிரமசிங்கவிடமும் ஏமாந்து போயுள்ளார். இடையில் தமிழ் அரசியல் தலைமைகள் டிபிவிஜயதுங்கவிடமும் கோட்டபாய ராஜபக்ஷவிடமும் ஏமாந்த கதைகள் ஒன்றும் வெளிவரவில்லை.
இவர்கள் இருவரும் எதுவும் தருவதாகச் சொல்லாதபடியால் இவர்களும் ஏமாற்றவில்லைஅதனால் இரா. சம்பந்தனும் ஏமாறவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
2012ல் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஏமாற்றிவிட்டதாகவும் இரா. சம்பந்தன்புலம்பினார். பின் 2015 இலும் கிழக்கு மாகாண சபை விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் இரண்டாவது தடவையாகவும் ஏமாந்தது.
இந்த அரசியல் சங்கிலித் தொடரைப் பார்த்தால் தாங்கள் ஏமாறுவதும் பின்னர் தாம் ஏமாந்துவிட்டோம் என்று கூறித் தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியல் தலைமைகள்தான் காலம் முழுவதும்காணப்பட்டு வந்துள்ளன. கடந்த சுமார் நூறு ஆண்டுகள் காலமாகத் தமிழர்களுடைய அரசியல்தலைமைகள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது தங்களின் ஏமாளி மற்றும் அரசியல்கோமாளித்தனங்களால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கான காரணங்களைத் தமிழர்களுடைய அரசியல் பொதுவெளியில் காய்தல்உவத்தலின்றிக் கட்சி அரசியலுக்கும்-தேர்தல் அரசியலுக்கும் அப்பால் ;நடுநிலை; நின்று அறிவுபூர்வமாக ஆராய்ந்து தெளிவடைந்தால் மட்டுமே தமிழ் மக்கள் எதிர்காலத்தில் செல்ல வேண்டியசரியான அரசியல் திசையை அறியலாம். இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடத் தற்போதுள்ளஅரசியல் தலைவர்கள் எவருமே முன்வரமாட்டார்கள். அவர்களுடைய ஒரே எதிர்பார்ப்பும்கனவும் கதிரைகள்மட்டுமே. தமிழ் மக்கள் தாமாகவே இத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபட்டுஎதிர்காலத்தில் செல்ல வேண்டிய அரசியல் திசையைத் தீர்மானிக்க வேண்டும். இல்லாவிட்டால்தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றவர்களிடம் ஏமாறுவதும் அதைச் சொல்லித் தமிழ் மக்களைஏமாற்றுவதும் முடிவிலியாகவே தொடரும்.
ஒருவர் தொடர்ந்து ஏமாறுகிறார் அல்லது ஏமாற்றப்படுகிறாரென்றால் ஏமாறுகிறவரின் தவறாஅல்லது ஏமாற்றுபவர்களின் தவறா? இதுவே தமிழ் மக்கள் இப்போது சிந்திக்க வேண்டியவிடயமாகும்.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எல்லா சிங்கள அரசியல் தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை தெட்டத் தெளிவாகத் தெரிகின்றது. அப்படியாயின் தமிழர்களின் தீர்வுக்கு ஒரு மாற்றுநடவடிக்கை தேவை என்பதும் உணரப்படுகின்றது. இது என்ன அதை யார் கொடுக்கப் போகின்றார்கள் ்அல்லது முன்னெடுக்கப் போகின்றார்கள் என்பது கேள்விக்குறி. எனது இந்தக் கேள்விக்கு யாரிடமாவது நல்ல பதில் உண்டா? இருந்தால் அதைப்பற்றி இங்கு குறிப்பிட முடியுமா?