கட்டுரைகள்

பேனாப் போராளி கானமயில்நாதன் : தமிழ் மக்களின் குரலாக ஒலித்தவர்.. துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளர்.. – ஐங்கரன் விக்கினேஸ்வரா

(போர்க்கால நெருக்கடியிலும் தமிழ்ப் பத்திரிகை உலகை கம்பீரமாகத் துணிச்சலுடன் வழி நடாத்தியவர் ம.வ.கானமயில்நாதன். பேனாப் போராளியான மறைந்த கானமயில்நாதன், தமிழ் மக்களின் குரலாக என்றும் ஒலித்தவர். யாழில் துணிச்சல் மிக்க பத்திரிகையாளரான ம.வ.கானமயில்நாதன் 22/11/2023 ஈராண்டு நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது.)

தனது வாழ்நாள் முழுவதையும் பத்திரிகைக்காக அர்பணித்தது மாத்திரமன்றி ஈழத்துப் பத்திரிகை ஜாம்பவான்கள் என்று குறிப்பிடத்தக்க தினகரன் பத்திரிகை ஆசிரியர் சிவகுருநாதன், தினபதி பத்திரிகை ஆசிரியர் சிவநாயகம், வீரகேசரியின் ஆசிரியர் எஸ்.கோபாலரட்ணம், ஆகியோரின் வரிசையில் வடக்கில் தன்னையும் தடம் பதித்தவரே உதயன் கானமயில்நாதன் !

துணிச்சலுடன் வழி நடாத்திய பத்திரிகையாளர் :

போர்க்கால நெருக்கடியிலும் தமிழ்ப் பத்திரிகை உலகை கம்பீரமாகத் துணிச்சலுடன் வழி நடாத்தியவர் ம.வ.கானமயில்நாதன்.

ஊடகவியலாளர்கள் மக்களின் குரலாக இருக்க வேண்டும். செய்தியை உண்மைத் தன்மையுடன் சொல்லி,  தமிழிற்கும், தமிழர்களுக்கும் பத்திரிகைத் துறையில் இவர் செய்த சேவை மிக்க அளப்பரியது.

ஈழத்துப் பத்திரிகை உலகைத் துணிச்சலுடன் தூக்கி நிறுத்தியவர் கானமயில்நாதன். ஈழ ஊடகத் துறையின் அடையாளமாகவும், மூத்த ஆளுமையாகவும் விளங்கிய மூத்த ஊடகவியலாளரும், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ம.வ.கானமயில்நாதன் 22.11.2021 அன்று நல்லூரில் தனது 79 ஆவது வயதில் காலமானார்.

எதையும் சாதிக்க முடியும் என்று ஊடகத்துறைக்கு வரும் இளையோர்களுக்கு வழிகாட்டியாக, தமிழ் ஊடக வரலாற்றின் ஒரு பெரு ஆலமரமாக கானமயில்நாதன் பெருவிருட்சமாக விளங்கினார்.

என்றும் ஊடக இளைஞனே !

 

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ம.வ.கானமயில்நாதன் 1942 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி பிறந்தார். ஊடகவியலாளருக்கு இருக்க வேண்டிய இளஇரத்தம் அவரது உடலிலே என்றும் ஓடிக் கொண்டிருந்தது. அவர் ஓய்வுபெற்ற நிலையிலும் ஊடகப் பணியைத் தொடர்ந்த இளைஞன் என்றால் மிகையல்ல.

1962ஆம் ஆண்டு ஊடகத்துறையில் காலடி எடுத்து வைத்தது முதல் 56 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் தடம்பதித்தார். 1962ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தொடங்கியது இவரது ஊடகத் துறை வாழ்வு. அதன்பின்னர் 1965ஆம் ஆண்டு தினபதி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இணைந்து பின்னர் பிரதம உதவி ஆசிரியராக உயர்ந்தார். 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் நடக்கும் வரை கொழும்பில் தினபதியிலேயே பணியாற்றினார்.

1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் திரும்பிய இவர், பின்னர் வீரகேசரியில் பணியாற்றினார். அதன்பின், நவம்பர் 1985ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது. பிரதம ஆசிரியராகப் பெறுபேற்று நீண்டகாலமாக பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார்.

உதயன் பிரதம ஆசிரியர்:

தனது ஊடகப் பயணத்தினை வீரகேசரி ஆசிரியர் பீடத்தில் ஆரம்பித்து, தினபதி பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய போது தினபதி பத்திரிகை இடைநிறுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் பத்திரிகை ஒன்றை நடாத்த வேண்டிய தேவை எழுந்தபோது 1985 ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை உருவாக்கப்பட்டு அன்றிலிருந்து தொடர்ச்சியாகப் பத்திரிகைத் துறையில் பிரதம ஆசிரியராக தனது ஊடகப் பணியில் அசைக்க முடியாத முத்திரையைப் பதித்தார்.

உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக அவர் பணியாற்றிய போது எதிர்கொண்ட ஆபத்துக்கள் சவால்கள் எண்ணிலடங்காதவை. ஆனால் அவற்றுக்கு எல்லாம் அஞ்சாது, தொடர்ந்தும் ஊடகப் பணியை முன்னெடுத்தார்.

36 வருடங்கள் பிரதம ஆசிரியராக:

பலதரப்பட்ட அரசியல் அனுபவ அறிவுடைய அவர், தமிழ் மக்களின் குரலாக மக்களுக்காகப் பேசுகின்ற நல்ல மனம் படைத்தவர். ஆகவே அவர் யாழ்.குடாநாட்டின் மிக மூத்த யாவரும் பெருமைப்படக் கூடிய ஒரு ஊடகவியலாளராக மிளிர்ந்தார்.

உதயன் பத்திரிகை 1985ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது முதல் தனது வாழ்வின் இறுதிக்காலம் வரையிலான 36 வருடங்கள் பிரதம ஆசிரியராக கடமையாற்றியுள்ளமை ஒரு வரலாற்றுப் பதிவே. இறுதியாக காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்திலும் பங்களித்தார். சிறந்த வழிகாட்டியாகவும் பண்பாளனாகவும் தன்னை நிலைநிறுத்திய பத்திரிகை ஆசான் இவர்.

சத்தமற்ற ஊடகவியலாளராக :

ஈழ விடுதலைப்போராட்டத்தின் சத்தமற்ற ஊடகவியலாளர்கள் ஒன்றாக இருந்து, மறைந்த மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் தமிழ் மக்கள் மீதான அரச அடக்குமுறையை வெளியுலகத்துக்கு வெளிப்படுத்தியவர்.

உதயன் பத்திரிகை மீது, பேரினவாத அரசுகள் கொடுஞ்சினம் கொண்டிருந்து, உதயனின் குரலை நகக்கி விடவேண்டும் என்று அந்த அரசுகள் கங்கணம் கட்டிச் செயற்பட்ட காலம். உதயன் பத்திரிகைமீது எண்ணிலடங்காத தாக்குத்தல்கள், உயிர் பறிப்புக்கள் நிகழ்ந்தன.

ம.வ.கானமயில்நாதன் மீது யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்தியில் வைத்து, இராணுவ வாகனத்தால் திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தப்பட்டது. அதில் அவர் காயங்களுடன் தப்பியபோதும், அன்றுமுதல் கோல் ஊன்றி நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆயினும் வடக்கில் இருந்து வெளியான தமிழ் மக்களின் குரலை கொடுங்கோலர்களால் நசுக்க முடியவில்லை. ஊடக பரப்பில் உரிமை கோரப்படாத மரணங்களும் காணாமல் ஆக்கப் படுதல்களும் அச்சுறுத்தல்களும் நிரம்பி வழிந்த மண்ணில் சோரம்போகாது தனது ஊடகப்பணியை உதயன் நாளிதழில் அதன் பிரதம ஆசிரியராக இருந்து ஆற்றியவர் ம.வ.கானமயில்நாதன்.

கொலைவாளின் கீழாக ஊடகப் பணி :

2005இன் பிற்பகுதியில் துப்பாக்கிதாரர்களது கொலைக் கரங்களில் இருந்து தப்பிக்க அவர் வருடக்கணக்கில் தனது அலுவலகத்தில் முடங்கிக் கிடந்தே, நாள்தோறும் உதயன் நாளிதழை வெளிக்கொணர்ந்தார்.

ம.வ.கானமயில்நாதனை அச்சுறுத்தல்களால் அடிபணிய வைக்கலாமென்று பலரும் எதிர் பார்த்தபோதும் தனது ஒற்றை பேனாவின் முனையை நம்பி கொலைவாளின் கீழாக ஊடகப் பணியாற்றியவர்.

தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்ட பரப்பில் ஊடக பங்களிப்பு பற்றிய வரலாற்றுப் பதி்வுகளில் என்றுமே விலக்கப்பட முடியாத சக்திகளுள் ஒருவராக அவர் இருந்து வந்திருந்தார்.

தமிழ் மக்களின் குரலாக :

மறைந்த கான மயில்நாதன் நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றிய மிக சொற்ப அளவிலான மூத்த ஊடகவியலாளர்களுல் அவரும் ஒருவர்.

ஊடகவியலாளர்கள் மக்களின் குரலாக இருக்க வேண்டும். செய்தியை உண்மைத் தன்மையுடன் சொல்லவேண்டும். எதிலும் கேள்வி கேளுங்கள். எதற்காகவும் விட்டுக்கொடுப்புகளை செய்யாதீர்கள். ஊடகத்துறைக்கு வரும் இளையோர்கள் இதை மனதில் எப்போதும் வைத்திருங்கள்.

சாதிக்க முடியும். என்று வழிகாட்டிய தமிழ் ஊடகம் வரலாற்றின் ஒரு பெரு ஆலமரம் சரிந்து ஓராண்டு உருண்டோடி விட்டது.

ம.வ.கானமயில்நாதனின் பாசறையில் வளர்ந்த பல ஊடகவியலாளர்கள் இன்றும் உலகின் பல திசைகளிலும் தேமதுரத் தமிழை வையகமெங்கும் காத்து வருகிறார்கள்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உதயன் பத்திரிகை குரல் கொடுத்ததால் கடும் நெருக்கடிகளை நீண்டகாலமாக எதிர்கொண்டது. தமிழ் மக்களின் குரலாக, சத்திய நேர்மையுடன் கானமயில்நாதனின் பேனா உண்மைகளை வரிகளாக்கி வரலாற்றில் ஆவணமாக்கி உள்ளார்.

பிரான்ஸின் தலைநகரி்ல் விருது:

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் தன்னார்வ அமைப்பின் விருது வழங்கும் விழாவில், நெருக்கடியான கால கட்டத்தில் தாயகத்தில் இருந்து ஊடகப்பணியாற்றியதை கௌரவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் தமிழ் மக்களின் குரலாக, சத்திய நேர்மையுடன் கானமயில்நாதனின் ஊடகத்துறையில் தேசியம் சார்ந்த நெருக்கடியான சூழலில் அர்ப்பணிப்புடன் கடமை யாற்றியமைக்காக 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி யாழ்.ஊடக அமையத்தால் அவர் வாழும்போதே கௌரவிக்கப்பட்டார்.

ஈழத்துப் பத்திரிகை வரலாற்றிலேயே தொடர்ச்சியாக ஆசிரியராகவிருந்து நெருக்கடியான போர்ச் சூழலிலும், ஊடக அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனது இலக்கில் சிறிதும் தடம் மாறாது பயணித்துக்கொண்டிருந்த மூத்த ஊடகவியலாளர் ம.வ.கானமயில்நாதன் ஊடகப் பரப்பிலுள்ள இளையோருக்கு ஓர் எடுத்துக்காட்டு எனலாம்.

இளையோருக்கு ஓர் எடுத்துக்காட்டு:

‘எமது மக்களுக்கான குரலாக நாங்கள் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் எமது செயற்பாடுகள் அன்றும் – இன்றும் அமைந்தன. அதற்காகப் பலவற்றை இழந்தபோதும், ஆயினும் முன்நோக்கியே சென்றோம்’. இது உதயன் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் கூறிய வார்த்தைகளாகும்.

‘நாம் கடந்து வந்த பாதையில் சுமந்த வலிகளின் ஊடாகப் புரிந்துகொள்ள முடியும். ஊடகமாக மக்களுக்கான தகவல்களைச் சரிவர வழங்கி, எம் மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகின்றோம். அதனில் மிகுந்த நிறைவும் இருக்கின்றது’ என்று 2015ஆம் ஆண்டு வழங்கிய பேட்டி ஒன்றில் பூரிப்புடன் தெரிவித்திருந்தார்.

தன் வாழ்வின் பெரும் காலத்தை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்த ஊடகப் பெருந்தகை ம.வ.கானமயில்நாதன் மக்களுக்கான குரலாக ஒலித்த அந்தப் பேனாப் போராளி இன்று இல்லை. தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பது என்ற கொள்கையின்படி, சமூகத்தின் காவலனாக தனது பணிகளைச் செய்ததில் முதன்மை ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் ஆற்றிய பங்கு அளப்பரியது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.