மாவீரராகிய ஈழப்பெண் போராளி கவிஞர்களும் கவிதைகளும் : – ஐங்கரன் விக்கினேஸ்வரா
(பெண்விடுதலைக்காக எங்கள்ஈழப்பெண் கவிஞர்களின் படைப்புக்கள் தாயக மண்ணில் நீண்ட காலமாக ஓங்கி ஒலித்தது. எத்தனை காலம் சென்றாலும் இக் கவிஞைகளின் படைப்புகள் உயிர் வாழும். ஏன் எனில் அக்கவிதைகளின் மூச்சொலி இன்னமும் அடங்கவில்லை. என்றும் உயிர்ப்பாய் தாயக மண்ணில் வாழ்ந்து கொண்டே இருக்கும்)
புறநானூற்றை விஞ்சிய வீரம் படைத்த ஈழப்பெண் கவிஞர்களின் படைப்புக்கள் வரலாற்றின் பக்கங்களில் முழுமையாக பதியப்படாவிடினும் களமாடி, தியாகித்த மங்கையரை தமிழ் கூறும்
உலகம் ஒருபோதும் மறவாது. போர்க்கள இலக்கியத்தின் பெருமைக்கு சான்றாக அவர்களின் படைப்புகளே இலக்கிய சாட்சியங்களாக பகர்கின்றன.
அநீதி என்றால், அறம் தவறினால் அடங்காதே, அவனை எதிர்த்து போராடு என்பதை போதிப்பது தான் தமிழ் இலக்கியங்களின் அடிப்படை கோட்பாடாக அமைகிறது.தமிழ் மொழி எப்போதுமே பெண்களை உயர்த்தியே கொண்டாடுவதை காப்பியங்களிலும், காவியங்களிலும் காணலாம்.
பெண்களும் சங்க இலக்கியமும் :
இதற்கு மாறாக வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது, ஆணுக்கு கட்டுப்பட்டவள் போன்ற நெறி முறையில் மத ரீதியாகவும், இலக்கியங்கள் மூலமாகவும் சாட்சிப்படுத்தி உள்ளன.
உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்கு கீழே வைத்திருந்த கால கட்டத்தில் பெண்களை மேன்மை மிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகமும் தமிழ் இலக்கியமும் என்பது காப்பியங்கள் மூலம் மேலும் வலுப் பெறுகிறது.
சங்க கால இலக்கியங்களுக்கு ஒப்பாக, ஏன் அதனிலும் மேலாக
ஈழத்துப் பெண் போராளிக் கவிஞைகளின் படைப்புகள் தமிழரின் வீரத்தையும், வாழ்வியலையும் உலகிற்கு பறைசாற்றுகின்றன.
ஈழப்பெண் போராளி கவிஞர்கள் :
ஈழத்துப் பெண் போராளிக் கவிஞர்களில் பலராலும் அதிகம் அறியப்பட்ட, போர்க் களத்தில் அடையாளப் படுத்தப்பட்ட கவிஞைகளான அம்புலி, ஆதிலட்சுமி, கஸ்தூரி, வானதி, பாரதி, அலையிசை, மலைமகள், தூயவள், நாமகள், சூரியநிலா, சுதாமதி, தமிழவள் , காந்தா, ஜெயா, கலைமகள், கனிமொழி, ஞனமதி, புரட்சிகா, நகுலா, நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபிமார்க்கட், தயாமதி, சிரஞ்சீவி, கிருபா போன்றோரின் படைப்புகள் ஈழப்போரின் வீர வரலாற்றை, உயர் தியாகத்தை உலகிற்கு வெளிக்காட்டி உள்ளன.
அன்றைய சங்க இலக்கியங்களில் புலியை, யானையை விரட்டிய பெண்களின் வீரமும் போருக்குத் தன் கணவன், மகன் என ஒருவர் பின் ஒருவராக அனுப்பி வைத்த பெண்களின் வீரமும் விதந்து போற்றப்பட்டுள்ளன. அக்காலத்தில்
பெண்கள் போர்க்களத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டமை பற்றிய சான்றுகளும், நூல்களும் இல்லை என்றே கூறலாம்.
ஆயினும் போர் நிறைவுற்ற பின் போரில் புண்பட்ட வீரர்களை, கணவனை காத்து, காவல் செய்த பணிவிடை தரவுகளே உள்ளன.
ஆனால் ஈழத்துப் பெண் போராளிக் கவிஞர்கள் வாழ்வானது, குருதிக் களத்தில், எந்த நேரத்திலும் இறப்பு நேரிடலாம் என்ற சூழலிலும், அருகிருக்கும் களத்தோழி எப்போதும் களத்தில் வீழலாம் என்ற தியாக
உணர்வில் படைக்கபட்ட கவிதைகள் நிகழ்கால வாழ்வை பேசுகின்ற இலக்கியங்களாக உருப்பெற்றுள்ளன.
விடுதலை வேட்கைமிகு கவிஞர்கள்:
அதே வேளை யுத்தத்தின் பின்னர், பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்று உயிருக்குப் போராடும் நிலையிலும் தாம் வாழவேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டவர்களாகவும் தமது மனோதைரியத்தையும் விடுதலை வேட்கையையும் கைவிடாத வீர உணர்வும் தைரியமும் மிக்கவர்களாக தம்மை இனங்காட்டுவதோடு தமது சுயத்தையும் நம்பிக்கையையும் இழக்காதவர்களாக இப் பெண் போராளிக் கவிஞைகள் மிளிர்ந்துள்ளனர்.
இப் பெண் போராளிகளின் கவிதைகளில் தாம் எவருக்கும் அடங்கி, அடிமைப்பட்டுப் போகாத, இலக்கை அடைவதையே நோக்காகக் கொண்ட, தமது சுயத்தை இழக்காத தன்மையை அவதானிக்கலாம். அம்புலி எனும் பெண் போராளியின் கவிதை ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ தொகுப்பில் வெளியாகியுள்ளது. அதனில்
“எத்தனை களங்கள் கண்ட
என் கால்கள்
கனத்த கருவியை
தோளில் சுமந்து
தொலை தூரம் எதிரியை
விரட்டிய கரங்கள்…”
என இலக்கை அடையும் ஓர்மத்தை சிறப்பாய் விளக்கின.
ஆனால் தேவபாஷை என்று கூறிக் கொள்ளும் சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது.
அத்துடன் அன்றைய காலத்தில் சமஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது.
இதற்கு மாறாக கீழடி போன்ற தமிழ் இடங்களில் இருந்து கிடைத்த தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரைப் பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது என்பது அகழ்வராட்சிகளில் வெளிப்பட்டுள்ளது.
சங்ககால இலக்கியங்களை மிஞ்சும் வண்ணம் போராளிக் கவிஞர்கள் தமது வீரம் செறிந்த செயற்பாடுகளையும் போரியல் வாழ்வின் கோலங்களையும் பல்வேறு புதிய அனுபவங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
“கூவி வந்த எறிகணைக்காய்க்
குனிந்தோம்
அடுத்த செல் வந்து
அதிருமுன்னே விரைந்தோம்
மீண்டும் கையில்
எடுத்த ஆயுதத்துடன்
நடந்தோம்….”
என வீரமாய் ‘புரட்சிகா’ எனும் பெண் கவிஞை முழக்கமிடுகிறாள்.
பெண் போராளிகளின் கவிதைகளில் யுத்தகளத்தில் நேரடியாக பங்கு கொண்ட வீரப் பெண்களின் வல்லமையையும் போரிடும் திறமையையும் வீர உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றன. போராளிப் பெண்களின் போரியல் வாழ்வினை துல்லியமாகப் படம் பிடிக்கின்றன. போர்க்களத்தில் கப்டன் வானதி
“மழையில் நனைந்து
அடுத்த ஆடை மாற்றாது
பொஸிசனில் நின்றதை
பசி மறந்து தூக்கம் மறந்து
எதிரி எல்லையை மீறுவதெனில்
எம் உடல்கள் மேலாகத்தான் என
உறுதியோடு காவலிருந்ததை கூறுவாயா?
என அவர் கையாளும் உவமைகள் தாம் சார்ந்த சமூகத்தின் அனுபவத்திற்கு உட்பட்டவையாக அமைகின்றன.
வானதியின் படைப்புக்கள் தனித்துவம் மிக்கவையாக மிளிர்கின்றன.
சங்ககாலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான். உலக மொழிகளின் தாய் என்று கூறிக் கொள்ளும் கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் உண்டு. அப்படியாக
ஆண்டாண்டு காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடியது நம் தமிழ் இலக்கியமே என்பதில் ஐயமில்லை.
ஆனாலும் போர்க்கள கவிஞர்கள் தாம் எவருக்கும் அடங்கி, அடிமைப்பட்டுப் போகாத, இலக்கை அடைவதையே நோக்காகக் கொண்ட, தமது சுயத்தை இழக்காத தன்மையை அவதானிக்க முடிகின்றது. இப் பெண் போராளிகளின் கவிதைகளில்
“முன்னே போனவர் நினைவழுத்த
பரபரக்க அலைகளின் நடுவே
எதிரியைத் தேடி அவள்……
எதிரியின் எறிகணை
இடிபோல் விழுந்தும்
மனம் இடியாதிருந்து
இடியனோடுலவி
சீறும் அலைகளின்
சிநேகிதியானவள்…..”
என கனிமொழி ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை தொகுதியில் உரைத்துள்ளார்.
இவர்கள் தமது வீரம் செறிந்த செயற்பாடுகளையும் போரியல் வாழ்வின் கோலங்களையும் பல்வேறு புதிய அனுபவங்களையும் வெளிப்படுத்தியுள்ள தன்மையை ‘அம்புலி’ பின்வர விழிக்கிறார்.
“கண்ணுறக்கம் தவிர்த்த நடுநசி
எல்லை வேலியில்
நெருப்பேற்றுகிறது என் இதயம்
ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான
என் காவலிருப்பு…..”
இக் கவிதைகள் அனைத்தும் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் அடங்கிய தொகுப்பு “பெயரிடாத நட்சத்திரம்” எனும் நூலாக வெளிவந்துள்ளது. இத் தொகுப்பில் இருபத்தாறு பெண் போராளிக் கவிஞைகளின் எழுபது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
போராட்டகளத்தில் இணைந்து கொண்ட பெண்களின் மன உணர்வுகளையும் அவர்களது வலிமையையும் வீரம் செறிந்த துணிகர செயற்பாடுகளையும் பேசுகின்றது இத் தொகுப்பு.
பெண் கவிஞைகள் யாவரும் நேரடியாகவே போராட்டத்தில் இணைந்து கொண்ட பெண்கள் என்பதால் இவர்களது கவிதைகள் இதுவரை பெண்களால் பேசப்படாத பல்வேறு புலம் சார்ந்த விடயங்களைப் பேசுவதுடன் ஏனைய பெண் கவிஞைகளிலிருந்து வேறுபட்ட விதத்தில் தமது மொழியைக் கையாண்டுள்ளமையையும் காணலாம்.
பெண்ணும் பெண் சார்ந்த மொழியும்:
போராளிக் கவிஞைகளின் மொழியாடல்கள் முற்றிலும் வேறுபட்ட சொற்களையும் தொடர்களையும் படிமங்களையும் கொண்டவையாகவும் அமைகின்றன. இதனால் ஏனைய பெண் கவிஞைகளின் கவிதை மொழியிலிருந்து இக் கவிதைகள் வேறுபட்டவையாக அமைகின்றன. கலைமகள் எனும் போர்க் கவிஞை
“கந்தகச் சுமையைக் கட்டியணைத்தபடி
உன் தடம் பட்ட மண்ணெடுத்து
முத்தமிட்டு
இலக்கு நோக்கி தொடர்கிறது
என் பயணமும்…….” என்றும்
அவர்கள் கையாண்ட சொற்கள் தொடர்கள், உவமைகள் என்பன ஏனைய பெண் கவிஞைகளது கவிதைகளிலிருந்து வேறுபடுகின்ற தன்மையை காணலாம்.
“ஏராளம் எண்ணங்களைத் எழுத
எழுந்து வர முடியவில்லை
எல்லையில் என்
துப்பாக்கி எழுந்து நிற்பதால்
எழுந்து வர என்னால் முடியவில்லை..
என வானதி பாடிடும் கவிதையானது
இறப்பு நிச்சயம் என்பதும் தானிறந்தாலும் எதிர்காலத்தில் ஈழவிடுதலைக்கான உயிர்ப்பு
இக்கவிதைகளில் இழையோடி இருப்பதைக் காணலாம்.
“சீறும் துப்பாக்கியின் பின்னால் என்னுடன் சின்னபின்னப்பட்டுப் போகலாம்” எனக் கூறும் வானதி “அர்த்தமுள்ள என் மரணத்தின் பின் அங்கீகரிக்கப்பட்ட ஈழத்தில் நீங்கள் நிச்சயம் உலா வருவீர்கள் என உறுதியாய் கூறுகிறார் அவர்.
ஊர்ந்து போனகதை
ஊர்கலைத்த எதிரிகளை
உளவறிந்த கதை
அலையலையாய் நாம் புகுந்து
‘ஆட்டி’ அடித்த கதை என
ஆயிரம் கரு எமக்கு
கவிதை எழுத என கவிஞர் மலைமகள் விண் அதிர கூறுகிறார்.
“ஏறுநடையாய் வீறுடன் நடந்தேன்
விண்ணை முட்டிடும்
வேகம் கொண்டேன்
ஒரு நொடிப் பொழுதில்
நாடியடங்கி
கட்டிலே கதியென்று
கலங்கித்தவிக்கின்றேன்
சாகாத பிணமாக நானிங்கு நிலையானேன்
ஒரு சின்ன ரவையின் தழுவலால்
சலனமின்றிக் கிடக்கின்றேன்…
என்ற அம்புலியின் கவிதைகள் யாவரும் நேரடியாகவே போராட்டத்தில் இணைந்து கொண்ட பெண்கள் என்பதால் இவர்களது கவிதைகள் இதுவரை பெண்களால் பேசப்படாத பல்வேறு புலம் சார்ந்த விடயங்களைப் பேசுவதுடன் ஏனைய பெண் கவிஞைகளிலிருந்து வேறுபட்ட விதத்தில் தமது மொழியைக் கையாண்டுள்ளனர்.
இப்பெண்கவிஞைகள் பெண்களுக்காக வரையறுக்கப்பட்ட பல கலாசாரத் தடைகளை மீறி போர்க்களம் காணல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்ளல், உளவு பார்த்தல், பல்வேறுபட்ட நவீன இயந்திரங்களை இயக்குதல், அவற்றைப் பழுதுபார்த்தல், சிக்கலான விடயங்களைத் தீர ஆராய்தல், முடிவுகளை எடுத்தல், இரவுக் காவல்களிலும் பணியில் ஈடுபடுதல், எல்லைக்காவல், தீவிர உடற்பயிற்சி இரகசியங்களைப் பேணுதல், வரைபட வாசிப்பில் தேர்ச்சி எனப் பல புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறார்கள் என்பதை காணலாம்.
போரியல் வாழ்வு :
இப் பெண் கவிஞைகள் இயற்கையை அதன் அழகை நோக்கிய விதம் ஏனைய கவிஞர்களின் நோக்கிலிருந்து வேறுபட்டவையாக அமைகின்றன. பனை மரம், கடல், மழை போன்ற இயற்கையின் வர்ணனைகள் போரியல் வாழ்வுடன் தொடர்புபடுத்தி நோக்கப்படுகிறது.
தாய்மை, குழந்தைப்பேறு, பாலூட்டல், கருவறை, தொப்புள்கொடி, ஈன்றெடுத்தல் போன்ற பெண்மையுடன் தொடர்புடைய விடயங்கள் இவர்களது கவிதைகளில் ஆங்காங்கே வெளிப்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
கவிஞை அம்புலியின் கவிதைகளில் இவ் உணர்வுகள் அதிகம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
நான் எப்போதும் மரணிக்கவில்லை, வாழ்க்கை ஓர் இனிய பாடலாகட்டும், தேடியடைவாய் போன்ற கவிதைகளில் இதனைக் காணலாம்.
“ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாகத்
தாலாட்டவும்
என்னால் முடியும்
என்கிறார் கவி அம்புலி.
பெண்மை சார்ந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம்
“சிந்தனையின் வேர்விடலுக்காய்
என்னைப் பண்படுத்துக
அன்புப் பாலையே
எனக்கு முதலில் ஊட்டுங்கள்
வாழ்க்கை எனக்கோர்
இனிய பாடலாகட்டும்……” எனக் கூறும்
அம்புலி
“தணல் பூத்துக் கிடக்கின்றது
எனதுள்ளம்
துன்பத்துக்கும் துயரத்திற்கும் நடுவில்
உன்னை வாரியணைக்க முடியாத
தாயானேன் நான்…..”
என இப்பெண் போராளிகளின் கவிதைகள் போரினால் ஏற்பட்ட அவலங்களையும் இறப்புகளையும் பதிவு செய்துள்ளன.
மண்அணை, பதுங்குகுழி,செல்மழை, சிதைந்த கட்டடக் குவியலின் நடுவே அழிந்து போன ஊரின் வாழ்வு சுட்டிக்காட்டப்படுவதுடன், விழுப்புண்பட்டு மாண்டுபோன தோழிகள் பற்றியும் நினைவு கூறப்படுகின்றது.
போராளிப் பெண் கவிஞைகள் ஆணாதிக்கம், அநீதி, அடக்குமுறை, பெண்கள் மீதான பாலியல் வன் புணர்வு போன்றவற்றுக்கு எதிராகவும் சிறுவர் துஸ்பிரயோகம் அரச ஒடுக்குமுறை, இராணுவத்தின் கெடுபிடிகள் போன்றவற்றக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளதோடு ஐ.நா சபையையும் தங்கள் கவி வரிகளில் விமர்சித்துள்ளனர்.
போரிடும் பெண்களின் தீர்க்கமான குரலாக ஒலித்த ஈழப்பெண் கவிஞர்களின் படைப்புக்கள் எத்தனை காலம் சென்றாலும் உயிர் வாழும். ஏன் எனில் அக்கவிதைகளின் மூச்சொலி இன்னமும் அடங்கவில்லை. என்றும் உயிர்ப்பாய் தாயக மண்ணில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா