“கனகர் கிராமம்” … தொடர் நாவல் அங்கம் – 06 …….செங்கதிரோன்
கோகுலனின் தாயாரின் அறுபதாம்கட்டைச் சேனை அறுவடைக்குத் தயாரானது.
நாள் சம்பளத்திற்குக் கூலிக்கு அமர்த்தப்பட்ட ஆண், பெண் வேலையாட்கள் காலையிலேயேசேனைக்குள்ளே கூடினர். ஆண் தொழிலாளிகள் முள்ளுமண்வெட்டியைக் கச்சான் பாத்தியின்அடியில் பருப்புகளைப் பாதிக்காவண்ணம் பக்குவமாக ஊன்றிப் பதித்துக் கிண்டிப் பிடுங்கிஇலைகள் கீழும் பருப்புகள் மேலேயும் இருக்கத்தக்கதாக வெளியில் புரட்டிப்போடப் பெண்கள்அப்படிப் போடப்பட்ட கச்சான் செடிகளிலிருந்து இரண்டு கைகளாலும் பசுமாட்டின் மடியிலிருந்துபால்கறக்கும் லாவகத்தில் கச்சான் பருப்புகளை ஆய்ந்து வாய் அகன்ற பனையோலைப்பெட்டிகளிலே நிரப்பினார்கள்.
கோகுலனின் தாயார் வேலையாட்களுக்கு இடைக்கிடை தேனீர் போட்டுக் கொடுப்பதிலும்மத்தியானச் சாப்பாட்டைத் தயாரிப்பதிலும் அங்குமிங்கும் ஒடித்திரியக் கோகுலன் அறுவடைச்செயற்பாடுகளைத் தாயாரின் ஆலோசனைகளைக் கேட்டுக்கேட்டு மேற்பார்வை செய்து கொண்டுதிரிந்தான்.
கச்சான் பருப்புகள் நிரப்பப்பட்ட பனையோலைப் பெட்டிகளை உச்சந் தலையின் மேல்பாரம்தாங்கியாக வைக்கப்பட்ட சீலைச் ‘சும்மாட்டி’ன்மேல் தூக்கி வைத்துச் சில பெண்கள்தலையிலே காவி வந்து சேனையின் காவல் குடிலின் முன்னாள் உள்ள சமதரையில்விரிக்கப்பட்டிருந்த சணல் கயிற்றினால் பின்னப்பட்ட சாக்குகளை வெட்டிப் பிரித்துப் பொருத்தித்தைத்து உருவாக்கிய நீள அகலமான ‘படங்கு’ எனப்படும் விரிப்பில் கொட்டிப் பரப்பினார்கள்.
இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காய்ந்ததும் ஆண் வேலையாட்கள் இருவர்மரப்பலகையினால் செய்யப்பட்ட ‘புசல்’ முகத்தலளவைப் பெட்டியில் அளந்து சாக்கில் நிரப்பிசாக்கின் வாயைக் கோணி ஊசியும் சணல் கயிறும் கொண்டு தைத்து மூடிக்கட்டினர். ஒவ்வொருசாக்கும் அண்ணளவாக இரண்டரைப் புசல் கச்சானைக் கொள்ளும்.நல்ல விளைச்சல். கோகுலனின் தாயாரின் பிரயாசையும் உழைப்பும் கவனமான மேற்பார்வையும்கோகுலனின் இராக்காவலும் வீண்போகவில்லை. நல்ல பலனைத் தந்தது.
கச்சான் அரைவாசிச் சேனைக்குமேல் பிடுங்கியாகிவிட்டது. அப்போதே விளைச்சலைமதிப்பிடக்கூடிய மாதிரி இருந்தது. தொடர்ந்து மிகுதியும் பிடுங்கிமுடிய இன்னும் இரண்டொருநாள்கள் எடுக்கும் நிலையிலிருக்கும்போது ஒருநாள் பெட்டி பூட்டப்பட்ட உழவு இயந்திரத்தில்சாக்குகளுடனும் ‘புசல்’ அளவைப் பெட்டியுடனும் ஓரிரு வேலையாட்களுடனும் சேனைக்குள்நுழைந்தார் சாறனும் சேட்டும் வலைத்தொப்பியும் ‘ரிப்ரொப்’ பாக அணிந்த ஒருவர்.
வந்த மனிதரைச் சுட்டிக்காட்டித் தனது தாயாரிடம் “ஆரம்மா இவர்?” என்று கேட்டான் கோகுலன்.
“ஓம்! மனே! உன்னிட்டச் சொல்ல நேரம் கிடைக்கல்ல. காசு தட்டுப்பாடான நேரத்தில சேனபுடுங்கினதும் கச்சான் தாறனெண்டு மூணு மாதத்திக்கு முதல் முற்பணம் வாங்கின நான்.
அதுக்குரிய கச்சான ஏத்திட்டுப் போகத்தான் மெசினோடயும் ஆக்களோடயும் வந்திரிக்கார்.
பொத்துவிலூர்தான். அலியார் என்று பேர். பொத்துவில் ரவுணுக்குள்ள சில்லறக்கட வச்சிருக்கார்”என்றாள் கனகம்.
“என்ன விலைக்கு அம்மா கச்சான் கொண்டுபோக வந்திரிக்கார்?” என்று கேட்டான் கோகுலன்.
“இப்ப விக்கிற விலயப்பாக்கக் குறயத்தான் மனே. என்ன செய்யிற. அவசரத்துக்கு முற்பணம்வாங்கிறதால நமக்குக் கைநட்டம்தான்” என்றாள் கனகம்.
கோகுலன் அந்த இளவயதிலும் இப்படிச் சிந்தித்தான்.
இதுவும் ஒருவகைச் ‘சுரண்டல்’ தான். சேனைப்பயிர்ச் செய்கைக்காரர்கள் காசுக்குக்கஸ்டப்படும்போது கச்சானுக்கு அறாவிலைபேசி முற்பணம் கொடுத்துப்போட்டுப் பின்னர்அறுவடைக் காலத்தில் சேனைக்கே வந்து சந்தைவிலையைவிடக் குறைந்தவிலைக்குக் கச்சான்வாங்கி ஏற்றிக் கொண்டு போவது.
பயிர்க்காலத்தில் பன்றிகள் வந்து கச்சான் பாத்திகளைக் கிண்டிக்கிளறி ஏற்படுத்தும்பாதிப்புக்களைவிட ஆபத்தானது இந்த உள்ளூர் வியாபாரிகளின் இப்படியான ‘சுரண்டல்’.கச்சான்சேனை செய்பவர்களுக்கும் அரசாங்கம் வங்கிகள் மூலம் குறைந்தவட்டியில் குறுகியகாலக்கடன்களை வழங்கினால் இப்படியான உள்ளூர் வியாபாரிகளின் சுரண்டல் நடைபெறச்சாத்தியமில்லை.
மட்டுமல்ல, அறுவடைக் காலத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசாங்கமேநியாயவிலைக்குக் கொள்வனவு செய்வதுபோலச் சேனைப் பயிர்ச்செய்கைக் காரர்களிடமிருந்தும்அரசாங்கம் கச்சானை நியாயவிலைக்குக் கொள்வனவு செய்யவும் ஏற்பாடுகள் வேண்டும்.
உழைப்பவனுக்கே இலாபமும் உரித்தாக வேண்டும்.
அன்றைய நாள் முழுவதும் இதுபற்றியே சிந்தித்தபடி இருந்தான் கோகுலன்.
இளவயதிலேயே இப்படியான முதிர்ச்சியான நல்ல சிந்தனைகள் அவனுள்ளே எழுவதற்குக்காரணமாயிருந்தது சிறுவயதிலிருந்தே அவனிடமிருந்த தீவிர வாசிப்புப் பழக்கம்தான். வாசிப்புஇளவயதிலேயே அவனது சிந்தனைத் தளத்தை விரிவுபடுத்தியிருந்தது. கோகுலன் ஐந்தாம்வகுப்புப் படிக்கும்போது அவனுக்கு நேரே மூத்த இரண்டு அக்காமார்களும் எஸ்.எஸ்.சி வகுப்புப்படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் படித்ததும் பொத்துவில் மெதடிஸ்த மிசன்பாடசாலையில்தான்.
அவர்களின் மேல்வகுப்புக்களுக்குப் பாடப் புத்தகங்களாகவிருந்த கவிமணிதேசிகவிநாயகப்பிள்ளையின் ‘மலரும்மாலையும்’ கவிதை நூல் – ‘பண்டைத்தமிழர் பண்பாடு’-‘கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலம்’ – ‘திருவிளையாடற்புராணவசனம்’ மற்றும்குடியியல், சரித்திரம், பூமிசாத்திரப் பாடப் புத்தகங்களையெல்லாம் பலதடவைகள் எடுத்துப்படித்திருக்கிறான். அவற்றைப் படிப்பது அவனுக்குப் பொழுதுபோக்குமாதிரி. அதிலிருந்துதான்அவனது வாசிப்புப் பழக்கம் ஆரம்பமாகிற்று. எந்தப் புத்தகத்தை எங்கு கண்டாலும் அதை எடுத்துவாசிக்கும் பழக்கம் சிறுவயதிலிருந்தே அவனிடம் ஒரு வியாதிபோல் தொற்றிக் கொண்டு விட்டது.
அதனால் அந்தப் பதினாறுவயதிலேயே நிறையப் புத்தகங்களை வாசித்திருந்தான்.
மறுநாள் காலை கோகுலன், தாயார் தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றித்தந்த காலைத் தேனீரைஇடது உள்ளங்கையிலுள்ள சீனியை நுனிநாக்கினால் நக்கிச் சுவைத்துப் பருகிக்கொண்டிருக்கும்போது பக்கத்துச் சேனைப் பூரணி அக்கா,
“பெரியம்மா! பெரியம்மா!” என்று அலறிப்புடைத்துக்கொண்டு கச்சான் சேனைக்குள்ளாலக்குடிலை நோக்கி ஓடிவருவதைக் கண்டு கோகுலன் தாயாருக்குக் காட்டினான்.“என்ன புள்ள! விடிஞ்சும் விடியாததுமா ஓடி வாறா. ஆருக்கும் பாம்புகீம்பு கடிச்சுப்போட்டா?”என்று வினாவினாள் கனகம்.
சேனைக்குள்ளே-வயலுக்குள்ளே-காட்டுக்குள்ளே திரியிற, குடியிருக்கிற ஆட்களுக்குப் பாம்புதீண்டுவது அடிக்கடி நிகழ்வதொன்று. அதுதான் கனகம் அப்படிக் கேட்டாள். பாம்புதீண்டியிருந்தால் கடிபட்டவரை உடனே திருக்கோவில் ஊரிலிருக்கும் “விஷக்கல்”லுக்குக்கொண்டுபோய்ச் சுகமாக்கிவிடுவார்கள். அப்படி யாருக்கும் பாம்பு தீண்டியிருந்தால் சுணங்காமல்திருக்கோவில் விஷக்கல்லுக்குக் கொண்டுபோகச் சொல்லிப் பூரணியிடம் சொல்லும்எண்ணத்துடனும்தான் கனகம் அப்படிக் கேட்டாள்.
“பாம்பு கடிச்சா விஷக்கல்லுக்குக் கொண்டு போய்ச் சுகமாக்கி உசிரக் காப்பாத்திப் போடலாம்.ஆன அடிச்சா என்ன செய்யிற பெரியம்மா?” என்றாள் பூரணி.“என்னபுள்ள சொல்லுறா? ஆருக்கு ஆன அடிச்ச?” அதிர்ச்சியுடன் கேட்டாள் கனகம்.
“அதென்னத்துக் கேட்டயள் பெரியம்மா. ராவு நல்லம்மாக்காட சேனைக்குள்ள ஆன வந்து அவவஅடிச்சுக் கொண்டு போட்டாம். விதானையிட்ட அறிவிக்க ஆக்கள் பொத்துவிலுக்குப்போயிருக்காங்களாம்” என்று ஓடிவந்த ஓட்டத்தில் இளைக்க இளைக்க எடுத்துச் சொன்னாள்,பூரணி.
“என்னெண்டு புள்ள நடந்ததாம்?” கனகம் கவலையுடன் கேட்டாள்.
“நல்லாம்மாக்காட புருஷன் காச்சலெண்டு ரெண்டு நாளா பொத்துவில் ஆஸ்பத்திரியில“வாட்”டிலயாம் பெரியம்மா. அவ தனியத்தான் இரிந்திருக்கா. குடிலுக்கு முன்னால தீனாப்போட்டிருந்த நெருப்பு ராவு பேய்ஞ்ச தூத்தல் மழைக்கு நூந்து போய்த்தாம். நல்லம்மாக்காவும் இதுதெரியாமக் கண்ணயந்திட்டாவாம். பொத்துவில் ஆஸ்பத்திரிக்குப் போன நல்லம்மாக்காடபுருஷனுக்கு இப்ப காச்சல் எப்படி எண்டு கேக்கிறதுக்குக் காலம்பற அவட பக்கத்துச் சேனசீனியர் போனப்பதான் குடில் வாசலடியில நல்லம்மாக்கா செத்துக் கிடந்ததக் கண்டிரிக்கார். ஆனவந்துபோன கால்தடத்தப் பாத்துத்தான் கண்டுபுடிச்சவங்களாம்” என்று தனக்குக் கிடைத்ததகவல்களை ஒப்புவித்தாள் பூரணி.
“தீனாப் போட்ட நெருப்பு நூராமப் பத்தியிருந்தா ஆன வந்திரிக்காது புள்ள. நெருப்பக் கண்டாஎட்டப் போயிரிக்கும். என்ன செய்யிற அவட காலம். புருஷன் இல்லாத நேரம்பாத்துமழத்தூத்தலும் வந்திரிக்கு. பாவம் நல்லம்மா. புள்ளகுட்டியில்லாததுகள். புருஷன் கணபதியும்தனிச்சுப் போனான். அவனும் பாவம். காலம் வந்தா சாவ ஆரு புள்ள தடுக்கேலும். நமக்கும்என்னென்ன எழுதியிரிக்கோ” என்று சிறிது நேரம் அமைதிகாத்த கனகம்.
“எதுக்கும் எப்பவாம் சவம் எடுக்கிறண்டு அறிஞ்சி ஒருக்கா எனக்கும் சொல்லு புள்ள” என்றுகூறிமுடித்துவிட்டுக் குடிலுக்குள் சென்று சீனிப்போத்தலுடன் வெளியில்வந்து “நிண்டுதேத்தண்ணி குடிச்சித்துப்போ புள்ள” என்று புறப்படபோன பூரணியைத் தடுத்து நிறுத்திவிட்டுக்குசினியை நோக்கி அடியெடுத்தாள்.
இவையெல்லாவற்றையும் குடிலுக்குள் விரித்துப் போடப்பட்டிருந்த சாக்குக்கட்டிலில்அமர்ந்தவாறே காதில் வாங்கிக்கொண்டும் கவனித்துக்கொண்டும் காலைத் தேனீரைப் பருகிமுடித்த கோகுலன் சேனைப்பயிர்ச் செய்கைக்காரர்களுக்குக் காட்டு விலங்குகளால் வரக்கூடியபாதிப்புக்களையும் உயிராபத்துக்களைக் குறித்தும் பெரிதும் கவலைப்பட்டான். தனதுதாயாரையும் நினைத்து அவளுக்கு ஒரு ஆபத்தும் வந்துவிடக்கூடாதே என்றும் கடவுளைமனதிற்குள் மன்றாடினான்.
பன்றிக்குக் காவல் காக்கலாம். சத்தம் போட்டுத் துரத்தினால் ஓடிவிடும். யானைக்கு எப்படிக்காவல் காக்கமுடியும். சேனைப் பயிர்ச்செய்கைப் பிரதேசம் முழுவதையும் சுற்றி “யானைவேலி”அமைத்து அறுக்கை செய்வதுதான் இதற்குத் தீர்வு. அதனை அரசாங்கம் தானே செய்துகொடுக்கவேண்டும் என்றும் கோகுலன் சிந்தித்தான்.
மேலும், பூரணி அக்கா காலையில் அம்மாவை நோக்கி ஓடிவருகிறபோது ‘ஆருக்கும் பாம்புகீம்புகடிச்சுப்போட்டா?’ என்று தனது தாயார் முதலில் கேட்டது அவன் ஞாபகத்திற்கு வந்தது. பாம்புதீண்டிய ஆட்களைத் திருக்கோவிலுள்ள ‘விஷக்கல்’லுக்குக் கொண்டு போவது பற்றிக் கோகுலன்கேள்விப்பட்டுள்ளான். ஆனால், அது பற்றிய விபரங்களொன்றும் அவனுக்குத் தெரியாது. அதுபற்றிய விபரங்களையும் விளக்கத்தையும் தனது தாயாரிடம் கேட்டறிந்துகொள்ளவேண்டுமென்றும் எண்ணிக் கொண்டான்.
பூரணி தேனீரைக் குடித்துவிட்டுச் சென்றதும் கனகம் காலைச்சாப்பாட்டைத் தயார் செய்வதில்ஈடுபட்டிருந்தாள். கோதுமை மாவைத் தண்ணீர் ஊற்றிப் பச்சைக்கொச்சிக்காய், சின்னவெங்காயம் எல்லாம் சின்னத்துண்டுகளாய் அரிந்து போட்டுத் தேங்காய்ப்பூவும் சிறிதளவு இட்டுநன்றாகப் பசையாகப் பிசைந்து தோடம்பழம் அளவுக்குச் சிறுசிறு உருண்டைகளாக்கி வைத்தாள்,அதனைப் பின்பு தட்டி முழுப் பப்படப் பொரியல் அளவுக்கு வட்டவடிவமாகத் தட்டையாக்கிஅடுப்பில் மண்சட்டியை வைத்து அதனடியில் இட்டு ‘ரொட்டி’ சுடுவதற்காக. ‘ரொட்டி’சுடுவதற்கான பூர்வாங்க வேலைகளையெல்லாம் தனது தாயார் தொடங்குவதைக் கண்டகோகுலன் சற்றுச்தொலைவில் கடற்கரையை நோக்கி அண்மித்ததாக இருந்த சேனைக்குள் ஒருபள்ளத்தில் பதித்திருந்த மரக் ‘கொட்டு’க் கிணற்றடிக்குப் போய்க் குளித்துவிட்டு வரஆயத்தமானான்.
“மனே குளிச்சிட்டுச் சுணங்காம வா. ‘ரொட்டி’ சுடப்போறன். ‘ரொட்டி’ சுடச்சுடச்சாப்பிட்டாத்தான் ருசி” என்றாள் கனகம். கோகுலன் தாயாரின் சேனையிலிருந்து கொட்டுக்கிணற்றடிக்குச் செல்லும் ஒற்றையடிப்பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.
கோகுலன் குளிக்கப்போன மரக் ‘கொட்டுக்’ கிணற்றடிக்கு பக்கத்துப்பக்கத்துச் சேனைகளில்இருந்து குளிப்பதற்கும் முகம் கழுவிச் செல்வதற்கும் குடிக்கத் தண்ணீர் எடுப்பதற்கென்றும் பலர்வந்திருந்தார்கள்.
மரக் ‘கொட்டு’க் கிணறு எல்லோரும் நின்று ஒரே நேரத்தில் தண்ணீர் அள்ள முடியாதபடி வாய்சிறியதாக இருந்தது. அதனால் நெருக்கடியைக் குறைக்க ஒருவர் பின் ஒருவராகத்தான் அலுவலைமுடிக்க முடிந்தது. அதனால் நேரமும் எடுத்தது.
விட்டம் கூடிய சீமெந்துக் கிணறு என்றால் பெரிதாக இருக்கும். கயிறு கட்டிய வாளியைக்கொண்டுவந்தால் சுற்றிவரப் பலபேர் நின்று தண்ணீர் அள்ளலாம் எனவும் யோசித்தான்.
ஒரு பொதுவான இடத்தில் சேனைப்பயிர்ச் செய்கைக்காரர் எல்லோருக்கும்பயன்படக்கூடியமாதிரி ஆறு அடி விட்டத்தில் ஒரு பொதுக்கிணற்றை அரசாங்கம் நிர்மாணித்துக்கொடுத்தால் எவ்வளவு நல்லது என்றும் யோசித்தான்.
கிணற்றடியில்வைத்து மற்றவர்கள் தமக்குள்ளே கதைக்கத் தான் காதுகொடுத்துக்கேட்ட விடயமும்அவனுக்கு விசனத்தையளித்தது.
அது என்னவென்றால், பொத்துவில் – மொனராகல பிரதான வீதியில் இரண்டாம் கட்டையில்அமைந்துள்ள ‘தாமரைக்குளம்’; சேனைக்குள்ள வைத்து ஒரு ஆளுக்கு இரவு புடையன் பாம்புகடித்துக் கடிபட்டவரை இரண்டு மூன்றுபேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு பிரதான வீதிக்குக்கொணர்ந்து இரவோடிரவாக ஆளை மாட்டுவண்டிலொன்றில் ஏற்றிப் பொத்துவிலுக்கு‘மாத்தயாவ’ ரிட்டக் கொண்டு போயிருக்கிறார்கள் என்ற செய்திதான் அது.
பொத்துவில் மட்டக்களப்பு பிரதான வீதியில் ‘அறுபதாம்கட்டை’ச் சேனை அமைந்திருந்த மாதிரிபொத்துவில் – மொனராகல பிரதான வீதியின் இரண்டாம்கட்டையில் (மைலில்) வலப்புறத்தில்உள்ள ‘தாமரைக்குளம்’ எனும் சிறிய நீர்ப்பாசனக்குளத்தின் ‘வால்கட்டு’ப் பகுதியிலிருந்துஆரம்பித்துக் ‘கள்ளியாப்பத்தை’ எனப்படும் வயல்வெளிப் பக்கமாகப் பரந்து விரிந்து கிடந்தது‘தாமரைக்குளம்’; சேனை.
சிலவேளைகளில் இரவு நேரத்தில் ‘டோர்ச் லைட்’ கையிலிருந்தாலும்கூட சேனைக்குள்ளாலநடந்துதிரியும் தனது தாயாரை நினைந்தான். நல்லம்மாக்காவை யானை அடித்துச் சாகடித்தசெய்தியைக் கேட்டுக் கவலையடைந்துள்ள தனது தாயாரிடம் தான் கேள்விப்பட்ட தாமரைக்குளச்சேனையில் ஒருவருக்குப் பாம்புகடித்த செய்தியையும் சொல்லி மேலும் அவவின் மனதைஅங்கலாய்க்க வைக்கக்கூடாதென்றும் தீர்மானித்தான். ‘மாத்தயாவரை’க் கோகுலனுக்கு நன்குதெரியும். கோகுலனுடைய இளையக்காவின் கணவருக்கு உறவுமுறையில் பெரியப்பா. நெருங்கியஉறவினர். புஞ்சிமாத்தயா என்பதுதான் அவரது பெயர். ‘மாத்தயாவர்’ என்று பொத்துவிலில்மரியாதையாக அழைப்பார்கள். உகந்தை முருகன் கோயில் வண்ணக்கரும் அவர்தான்.
பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்யும் திறமையும் அவருக்கு இருந்தது. தலை மயிரைப்பின்னுக்குவாரித் தேசிக்காய் அளவில் சிறு ‘கொண்டை’ முடிந்திருப்பார்.
கோகுலன் குளித்துவிட்டுக் குடிலுக்கு வரும்போது குசினிப்பக்கமிருந்து ‘ரொட்டி’ சுடும் வாசம்மூக்கைத் துளைத்தது. வந்ததும் வராததுமாக வலதுகை மோதிரவிரலையும் பெருவிரலையும்பரதநாட்டியத்திற்கு அபிநயம் பிடிப்பதுபோல நுனிகளை ஒன்றாய்ச் சேர்த்துப்பிடித்து இருவிரல்களையும் குடிலுக்குள் கொழுவியிருந்த திருநீற்றுக் குடுவைக்குள் விட்டுச் சிறிது திருநீற்றைக்கிள்ளி நெற்றியிலே சாத்திச் சாமி கும்பிட்டுவிட்டு, குளிக்கப்போகும்போது மடித்துச் சாத்திவைத்தசாக்குக்கட்டிலை மீண்டும் விரித்து அதில் அமர்ந்தான்.
அலுமினியம் பீங்கானில் கனகம் ‘ரொட்டி’யைக் கொணர்ந்து அவன் அருகில் சாக்குக்கட்டிலில்வைத்தாள். தொட்டுச் சாப்பிடுவதற்குச் சிறிதளவு தேங்காய்ப்பூவுடன் சின்னவெங்காயமும்காய்ஞ்சகொச்சிக்காயும் சேர்த்து மாப்போல இடித்தெடுத்துத் தேசிக்காய்ப்புளியும் அளவாகஇட்டுப் பிசைந்து செய்த ‘சுள்’ளென்று உறைக்கும் சம்பலும் வந்தது. கோகுலன் ‘ரொட்டி’யைச்சம்பலுடன் ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே தாயாரிடம் திருக்கோவில் ஊரிலுள்ள விஷக்கல்பற்றிய விபரத்தையும் விளக்கத்தையும் தனக்குச் சொல்லும்படி கேட்டான்.திருக்கோவில் விஷக்கல் பற்றிய விபரங்களைக் கோகுலன் தன் தாயாரிடம் கேட்டதும், அவனதுதாயார் கனகம்,
“பாம்பெண்டா படையும் நடங்கும் மனே” என்று பழமொழியொன்றைச் சொல்லி விளக்கத்தைக்கூறத்தொடங்கினாள்.
பாம்பு ஒருவருக்குத் தீண்டிவிட்டால் அவரைச் சற்றும் தாமதியாமல் பாம்புக்கடி வைத்தியரிடம் கொண்டு செல்ல வேண்டும். பாம்பு தீண்டிய செய்தியைக் கொண்டுவரும் ஆளை-தூதனைக் கண்ட மாத்திரத்திலும், அவன் கூறும் முதல் வாக்கியத்தைக் கொண்டும், தூதன் வந்து செய்தி சொல்லும்போது தாம் இருந்த நிலையைக் கொண்டும், செய்தி சொல்லும் நேரத்தைக் கொண்டும் பாரம்பரியப் பாம்புக்கடி வைத்தியர்கள் தீண்டியது விஷப்பாம்புதானா, பாம்பு தீண்டியவருக்கு எந்தளவு விஷம் ஏறியுள்ளது, அக்கடி மரணத்தைத் தரவுள்ள-சிகிச்சை செய்யமுடியாத – காப்பாற்றமுடியாத ‘காலக்கடி’ யா என்றெல்லாம் அறியும் அறிவும் திறமையும் படைத்தவர்களாம். இவ்விடயத்தை எல்லாம் பார்த்துத்தானாம் பாம்பு தீண்டிய நோயாளியைச் சிகிச்சைக்காகப் பாரமெடுப்பார்களாம். சிகிச்சையளித்தாலும் காப்பாற்ற முடியாது என்று தீர்மானித்தால் நோயாளியை வீட்டுக்குக்கொண்டு செல்லும்படி திருப்பி விட்டுவிடுவார்களாம்.
செய்தி கொண்டுவரும் தூதன் எந்தத் திசையிலிருந்து குரல் கொடுக்கிறான், எப்படிக்குரல் கொடுக்கிறான் என்பதை வைத்தும் தீர்மானங்களை எடுப்பார்களாம். கடிவாயைப் பார்த்து என்ன சாதிப்பாம்பு தீண்டியிருக்கிறது என்றும் சொல்வார்கள். நோயாளியின் உடல்மொழியை – அறிகுறியை வைத்தும் கண்டு பிடிப்பார்களாம்.
விஷப்பாம்புகளில் நாகசாதி, புடையன்சாதி, வழலைச்சாதி, சுருட்டைச்சாதி என்றெல்லாம் உண்டு. தீண்டிய பாம்பின் வகையைப் பொறுத்து வெவ்வேறு உடல் அறிகுறிகளும் பாம்பின் வகைக்கேற்ற வெவ்வேறு சிகிச்சை முறைகளும் உண்டாம்.
சில சாதி நாகபாம்புகள் செல்லும் இடங்களில் புனுகுவாசம் – காய்ச்சிய பாலின் வாசம் – தாளம்பூ வாசம் வீசும்.
பாம்புக்குப் பற்கள் முப்பத்திரண்டு. மேல்வாயிலும் கீழ்வாயிலும் முன்புறமாகப் பக்கத்திற்கொன்றாக நான்கு நச்சுப்பற்கள் நீண்டு உள்வளைந்திருக்கும். இந்நான்கு நச்சுப்பற்களும் காளி, காளாஸ்திரி, நீலி, நீலிகண்டி எனப்படும்.
பாம்பு தீண்டும்போது இந்த நான்கு பற்களும் ஒருமித்துப் பதியாது. தீண்டும் வேகம், தீண்டும்போது பாம்பின் வாய் பொருந்திய இடம் என்பவற்றைப் பொறுத்து பதியும் பல்லின் எண்ணிக்கைகள் வேறுபடும். பதியும் பற்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே தீண்டப்பட்டவரின் உடலில் ஏறும் விஷத்தின் அளவு வேறுபடும்.
ஒருபல் பதிந்தால் பாம்பின் விஷமானது தோலையும், இருபற்கள் பதிந்தால் தசையையும், மூன்றுபற்கள் பதிந்தால் நரம்பு மண்டலத்தையும், நான்குபற்களும் பதிந்தால் இவையெல்லாவற்றையும் தாக்கும். பாம்பு தீண்டியவருக்கு மிளகைச் சாப்பிடக் கொடுத்தால் உறைக்காது. பாம்பு தீண்டினால் தீண்டப்பட்டவரை வைத்தியரிடம் கொண்டுசெல்லுமுன் முதலுதவிச் சிகிச்சைகளாக கடிவாயின் மேற்பகுதிக்கு விஷம் ஏறும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கடிவாய்க்குச் சற்று மேலேயுள்ள உடற்பகுதியில் இறுக்கிக் கட்டுதல் – கடிவாயைக் கீறி விஷ இரத்தத்தை வெளியேற்றல். – வாயில் புண் இல்லாதவர்களைக் கொண்டு கடிவாயிலிருந்து விஷ இரத்தத்தை உறிஞ்சி எடுத்து வெளியே துப்புதல், – நோயாளியைக் கூடுமானவரை படுக்கவைத்தல், – வேப்பெண்ணெய், பசுநெய், எலுமிச்சம்புளி, மனித மூத்திரம் என்பவற்றில் எதையாவது உட்கொள்ளக் கொடுத்தல் என்பவைகள் உள்ளன.
மேற்கூறப்பெற்ற விபரங்களடங்கியதாக பாம்புக்கடி – அதற்குரிய வைத்தியம் பற்றியெல்லாம் ஒரு ‘வாகடம்’ மே வாசித்து முடித்தாள் கனகம்.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசவநாதம் எழுதிய புத்தகமொன்றில் பாம்பு தீண்டியவர்களுக்கு வாழைத்தண்டுச் சாறைப் பருக்க வேண்டும் என்று எப்போ ஒருநாள் வாசித்ததும் கோகுலனின் ஞாபகத்திற்கு வந்துபோனது.
தாயார் சொன்னவிடயங்களையெல்லாம் எந்தக் குறுக்கீடுகளுமின்றி அமைதியாகக் கேட்ட கோகுலன், “அம்மா! திருக்கோயில் விஷக்கல்லைப் பற்றிச் சொல்லல்லயே!” என்றான்.
“சொல்லாம உடுவனா மனே! அதத்தானே நீ முதல்ல கேட்ட. இனி அதத்தான் சொல்லப்போறன்” என்ற கனகம் தனது விளக்கத்தைத் தொடர்ந்தாள்.
திருக்கோவில், பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் பொத்துவிலிருந்து வடக்கே 20 கட்டைத் (மைல்) தூரத்திலுள்ளது. பிரதான வீதியிலிருந்து வலதுபுறம் கடற்கரையை நோக்கித் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் வீதி பிரியும் சந்தியிலிருந்து சுமார் 30 யார் தூரத்தில் வீதியின் வலது புறத்தில் நடப்பட்ட விஷம் அகற்றும் லிங்கவடிவிலான கல் உள்ளது. வீதியின் எதிரே மறுபுறத்தில் சிறுநாகதம்பிரான் ஆலயமும் உள்ளது. விஷக் கல்லின் உயரம் நில மட்டத்திலிருந்து ஒரு அடி இருக்கும்.
பல வருடங்களுக்கும் முன்னர் “ஜெயின் மௌலானா” எனும் இஸ்லாமிய மதப்பெரியார் ஒருவரினால் நடப்பட்ட கல் இதுவென்றே ஊர்மக்களால் வழிவழியாகப் பேசப்பட்டு வருகிறது. அவரது பூர்வீகம் பொத்துவில் என்றும் பேசப்படுகிறது.
ஆனால், 1940 ஆம் ஆண்டு வாக்கிலிருந்து திருக்கோவிலைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலேயே பரம்பரையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அதனை மிகவும் பயபக்தியுடன்தான் செய்துவருகின்றனர். நாகதம்பிரான் கோயிலுக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் பூசை நடத்தி வழிபாடியியற்றுகின்றனர். விஷக்கல்லையும் அவ்வப்போது பாலாபிஷேகம் செய்து பன்னீரால் கழுவிக் சாம்பிராணிப்புகை மற்றும் கற்பூரதீபம் காட்டிப் பராமரித்து வருகின்றனர். இந்தப் பரம்பரையின் முதல் ஆள் சின்னத்தம்பி என்று சொல்லுகிறார்கள். இவர் இப்போது விஷக்கல்லைப் பராமரித்து வருகின்ற திருக்கோயிலைச் சேர்ந்த பூபாலபிள்ளைக்குப் பெரியப்பா உறவுமுறை.
தாயாரிடமிருந்து இந்த விபரங்களைக் கேட்ட கோகுலன் இடை மறித்து “அம்மா! இந்த ஆக்களையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“சின்னத்தம்பிய எனக்குத் தெரியாமனே! பூபாலப்பிள்ளய எண்டா எனக்குத் தெரியும். விஷக்கல்லுப் பூபாலபிள்ள எண்டுதான் அவரச் சொல்லிற. கொட்டான் ஆள். சின்னத் தாடி வச்சிருப்பார்” கனகம் பதில்கூறிவிட்டு மேலும் விபரங்களைத் தொடர்ந்தாள்.
பாம்பு தீண்டியவரைச் சிகிச்சைக்காக விஷக்கல்லுக்குக் கொண்டு போகும்போது அத்தர், பன்னீர், ஊதுபத்திகள், சாம்பிராணி, பசுப்பால் போன்ற பொருட்களையும் உடன் எடுத்துச் செல்லவேண்டும். விஷக்கல் வைத்தியம் செய்பவர் முதலில் கற்பூரம் கொளுத்திக் கும்பிட்டு நோயாளியின் உடம்பில் ஏறியிருக்கும் விஷம் இறங்க வேண்டுமென்று தெய்வத்தை வேண்டுவார். பின் கடிவாயைக் கூரான போத்தல் ஓடு அல்லது கூரான வேறு ஏதாவதால் சற்று ஆழமாக்கீறி இரத்தம் வரச்செய்து கடிவாயை விஷக்கல்லில் பொருத்தி அமர்த்திப்பிடிக்க கல்லும் கடிவாயை இழுத்துப் பிடிக்கும். கல் விஷம் முழுவதையும் உறிஞ்சி முடித்ததும் கடிவாயைத் தானாகவே விடும். சிகிச்சையின்போது சிலவேளைகளில் நோயாளியை ஒருவர் அல்லது இருவர் பிடித்துக் கொள்வர்.
விஷக்கல்லுச் சிகிச்சை முடிந்ததும் நோயாளியை அருகிலுள்ள கிணற்றில் முழுகவார்த்து மூலிகை மருந்துக்களையும் அருந்தக் கொடுப்பர். சிகிச்சை முடிந்தபின் விஷக்கல்லைப் பாலாபிஷேகம் செய்து பன்னீரால் கழுவி ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி புகைகள் காட்டி மீண்டுமொரு சிகிச்சைக்கு அதனை ஆயத்தம் செய்வர்.
திருக்கோயில் “விஷக்கல்” குறித்த இவ்வளவு விபரங்களையும் தனது தாயார் மூலம் அறிந்து கொண்ட கோகுலன், “பாம்பு கடிச்ச எல்லாரயும் திருக்கோவில் விஷக்கல்லுக்குத்தான் கொண்டு வருவாங்களா அம்மா” என்று கேட்டான்.
கோகுலன் இக்கேள்வியைக் கேட்டதற்கான காரணமும் இருந்தது. அவன் அன்று காலை கிணற்றடியில் கேட்ட கதைகளின்படி தாமரைக்குளத்துச் சேனையில் வைத்துப் புடையன் பாம்பு கடித்த ஆளைத் திருக்கோவில் விஷக்கல்லுக்குக் கொண்டுபோகாமல் பொத்துவிலுள்ள மாத்தயாவரிட்டதானே கொண்டு போனார்கள் என்பதை மனதில் வைத்துத் தான் இக்கேள்வியைக் கேட்டான்.
“இல்லமனே! விஷக்கல்லுக்குக் கொண்டுவராம வெளிப்பரிசாரியார்மாரிட்டயும் கொண்டுப்போய்க் காட்டிச் சுகமாகியும் இரிக்கி. காரதீவில அந்தநாக்களில பாம்புக்கடி வைத்தியத்துக்குக் கயிலாயபிள்ளப் பரிசாரியார் பேர்போனவர் எண்டு கதைப்பாங்க. தம்பிலுவிலில பாலாச்சி எண்ட பொம்பிளயும் பாம்புக்கடிக்கு வைத்தியம் பாத்தெண்டு கேள்விப் பட்டிருக்கன். தம்பிலுவிலில சரணமுத்துப் பரிசாரியாரும் விஷக்கடி வைத்தியத்திற்குப் பேர்போனவர். இப்ப அவர்ர மகன் கதிரமல வாத்தியார் தகப்பனத் தொட்டு பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்து வாறார். பொத்துவிலில சந்திராக்காட அப்பா மாத்தயாவர உனக்குத் தெரியுந்தானே. அத்தாண்ட அப்பாக்கு அண்ணன்முறதானே அவர். நமக்குச் சொந்தம். அவரும் பாம்புக் கடிக்கு வைத்தியம் பாப்பவர்தான்” என்று கோகுலனின் கேள்விக்கு விளக்கமாகப் பதிலளித்தாள் கனகம்.
கோகுலன் இந்த வயதிலேயே எல்லாவிடயங்களையும் எவ்வளவு கவனமாகக் கேட்டு அறிந்து கொள்ளுகிறான் என்றெண்ணிய கனகம் பெருமிதமடைந்தாள். கேள்வி அறிவும் முக்கியமானதுதானே என்று நினைத்துக் கொண்டாள். கோகுலனின் ஆர்வத்தைக் கண்ட கனகம் மேலும் சில தகவல்களையும் கூறிவைத்தாள்.
‘விஷக்கல்’ லைப் ‘பாம்புக்கல்’ லென்றும் அழைப்பார்கள். விஷத்தை இறக்கக்கூடிய சிறுசிறு பாம்புக்கற்களையும் மருந்து வேர்களையும் அப்பிரதேசத்தில் வாழ்ந்த குறவர்களிடமிருந்தும் வாங்கிக்கொள்ளலாம். அப்போது திருக்கோவில் பிரதேசத்தில் ‘றூபஸ்குளம்’ மற்றும் ‘அலிகம்பை’ ஆகிய இடங்களில் குறவர் சமூகம் கூட்டமாக வசித்து வந்தது.
இந்தக் குறவர் கூட்டத்திலுள்ள ஆண்கள் ஊருக்குள்ளே வந்து ‘குரங்கு’ ஆட்டுவதையும் – பிரம்பினால் செய்த வட்ட வடிவமான மூடியுள்ள பெட்டிகளில் விஷப்பற்களைக் கழற்றிய நல்லபாம்புகளை அடைத்து வந்து ‘மகுடி’ வாசித்துப் பாம்புகளை ஆட்டுவதையும் – காட்டிலே வேட்டை நாய்களைக் கொண்டு மறித்துப் பிடித்த உடும்புகளை வெட்டி உரித்தும், காட்டுப் பன்றிகளை நெருப்பில் பொசுக்கியும் இறைச்சியாக்கிக் கொண்டுவந்து விற்பதையும் – பெண்கள் சோடிகளாக வீடுகளுக்கு வந்து கைச்சாத்திரம் சொல்லிப் பிழைப்பதையும் கோகுலன் கண்டிருக்கிறான். ஆனாலும், அவர்களிடம் விஷக்கல் மற்றும் வேர் மருந்துகளும் வாங்க முடியும் என்பது தாயார் இப்போது சொல்லித்தான் தெரியவந்தது.
“திருக்கோவிலில விஷக்கல்லக் கொண்டுவந்து நாட்டினவர் ஜெயின் மௌலானா எண்ட முஸ்லீம் ஆள் எண்டு சொன்னிங்க. பொத்துவிலில வெள்ளிக்கிழமகளில சாறனும் நெஸனலும் உடுத்திட்டுத் தலையில ‘வலத்தொப்பி’யும் போட்டித்து ஒருவர் வாற எல்லா அம்மா. கதக்கயும் மாட்டார். வாயத்துறந்து ஒண்டும் கேக்கவும் மாட்டார். ஆனா அவரக்கண்டா எல்லா வீட்டிலயும் அவருக்குக் காசுக்காணிக்க போடுவாங்க. அவரயும் ஜெயின் மௌலானா எண்டுதானே சொல்ற. விஷக்கல்லக் கொண்டுவந்து திருக்கோவிலில நாட்டின ஜெயின் மௌலானாக்கும் பொத்துவிலில வெள்ளிக்கிழமகளில வீட்டுக்கு வீடு வந்து காணிக்க வேண்டிற்றுப்போற ஜெயின் மௌலானாவுக்கும் தொடர்பு இருக்காம்மா?” என்று கேட்டான் கோகுலன்.
“அது எனக்குச் சரியாத் தெரியா மனே! பொத்துவிலில வீட்ட வாற ஜெயின் மௌலானாவுக்குக் காணிக்க குடுத்தா பாம்புகீம்பு விஷப் பூச்சிகீச்சி ஒண்டும் வளவுக்குள்ள வரமாட்டா என்ற நம்பிக்க சனத்துக்கு இரிக்கி” என்றாள் கனகம்.
பாம்புக்கடி வைத்தியம் மற்றும் திருக்கோவில் ‘விஷக்கல்’ குறித்தும் இவ்வளவு விபரங்களையும் விளக்கங்களையும் தன் தாயார் தெரிந்து வைத்திருக்கிறாவே என்று மீண்டும் மீண்டும் எண்ணிக் கோகுலன் வியந்தான். தாயாரிடமிருந்து இவ்வளவு விடயங்களையும் அறியக்கிடைத்த அந்த நாள் மிகவும் பயனுள்ள நாள் என்றும் எண்ணிக் கொண்டான்.
கடந்த காலத்து நினைவுகளில் நீச்சலடித்துக் கொண்டிருந்த கோகுலன் நினைவுக் குளத்தில் இருந்து வெளியேறி அன்று தான் சிந்தித்த சேனைப்பயிர்ச் செய்கைக்காரர்களுக்கான தேவைகள் ஐம்பத்தியிரண்டு ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லையே என்றும் அவை ஒரு புறமிருக்க அவர்கள் முன்பு பயிர் செய்து பரம்பரையா வாழ்ந்து வந்த இடத்தில்தானும் மீளவந்து குடியேற அரசாங்கத் திணைக்களமே தடைபோடுகிறதே என்றும் ஆதங்கப்பட்டான். இந்தச் சண்டை வந்து சாதாரண சனத்திற்கு எவ்வளவு பாதிப்பு என்றும் கவலைப்பட்டான்.
கோகுலனின் மனைவி சுந்தரியின் “இந்தாங்க ரீ” என்ற குரல் கேட்டுத் திரும்பியவன் ‘ரீ’யைக் கைநீட்டி வாங்கி மடமடவென்று பருகினான். பருகிமுடிந்த பின் வெறும் ‘கப்’பை மனைவியிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்டு அவள் குசினிக்குள் நுழைந்தாள்.
பலாப்பழத்தின் ‘பிசின்’ கைவிரல்களில் ஒட்டிக்கொண்டது மாதிரி கனகர் கிராமத்தின் மீள்குடியேற்ற விவகாரம் அவனுடைய எண்ணத்திலிருந்து நீங்க மறுத்தது.
காலக்குதிரையில் மீண்டும் ஏறியிருந்து கடிவாளத்தைச் சுண்டினான்.
கடுகதியில் 1967 ஆம் ஆண்டை அடைந்த காலக்குதிரை திரும்பி அங்கிருந்து கோகுலனைக் காவிக்கொண்டு 1982 ஆம் ஆண்டை நோக்கித் துள்ளுநடை போட்டது.
(தொடரும் … அங்கம் 07)